2019, நவம்பர் 9-ஆம் நாளில் உச்ச வழக்கு மன்றம் அயோத்தி பாபர் மசூதி வழக்கில் தன் தீர்ப்பை அளித்துவிட்டது. இது அய்ந்து நடுவர்களைக் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வால் வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பின் தன்மையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வ தற்கு முன் வழக்கின் தன்மை, அடிப்படை, வரலாற்றுப் பின்னணி போன்றவற்றைச் சற்று பார்த்துக் கொள்வோம்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் 450 ஆண்டுகளுக்கும் மேலாக பாபர் மசூதிக் கட்டடம் இருந்து வந்தது. அந்த மசூதி எழுப்பப்பட்ட இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்றும் இராமன் (மானுடனாகப் பிறந்தவன், மனிதன் என்ற அடிப்படையில் குறிக்கப் படுகிறான்) கோவில் இருந்ததாகவும், அது தகர்க்கப்பட்டு அதன் மீதுதான் மசூதி கட்டப்பட்டுள்ளதாகச் சொல்லியும் அந்த இடம் இந்துக்களுக்கே உரியதாகும் என உரிமை கோரி வழக்குத் தொடுக்கப்பட்டும் நிலுவையில் இருந்து வந்தது.
அந்நிலையில் இந்துத்துவப் பார்ப்பனியச் சங்பரிவார் கும்பல் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியது. இதைத் தொடர்ந்து வகுப்புவாதம், பயங்கரவாதம் தலைவிரித்து ஆடியது. அதில் 2000-க்கும் அதிகமான இசுலாமியர்கள் பழிவாங்கப்பட்டனர். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பாரதிய சனதாக் கட்சி, அதன் தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோசி உள்ளிட்டோர் துணை நின்றனர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். உலக வரலாற்றில் இந்த வன் கொடுமை அரங்கேறிய நாள் 6.12.1992, இக்கொடுஞ் செயல் நடைபெற்ற போது அதற்கு எதிரான எவ்வித எதிர்வினையும் மேற்கொள்ளாமல் பல்லாயிரக்கணக் கான பாதுகாப்புப் படையினர், காவல் துறையினர் வெறும் பார்வையாளர்களாக அதே இடத்தில் இருந்தனர்.
அன்றைய நரசிம்மராவ் தலைமையிலான இந்திய ஒன்றிய காங்கிரசு அரசும், உத்தரப்பிரதேச மாநில பா.ச.க.வின் கல்யாண் சிங்கின் தலைமையிலான அரசும் பட்டப்பகலில் ஒரு சிறுபான்மைச் சமயத்தின் வழிபாட்டு இடமான அந்த மசூதி இடிக்கப்பட்டுத் தரை மட்டமாக ஆக்கப்பட்டதிற்குப் பார்வையாளர்களாகத் தான் இருந்தனர் என்பதுதான் உலக வரலாற்றில், உச்சக்கட்ட வன்கொடுமை. இந்தக் கொடும் வன்முறை யில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டு அவையும் வழக்கு மன்றங்களில் நிலுவையில் இருந்து வருகின்றது. வரலாற்றில் உண்மையில் நிகழ்த்தப் பட்ட வெறிச் செயல்களுக்கு அடிப்படையாகச் சொல்லப் படுவது கடவுளின் அவதாரமான மனிதனான இராமன் என்பவனை அவன் தாய் மசூதி இருந்த இடத்தின் மய்யப் பகுதியில் பெற்றெடுத்தாள் என்ற மக்கள் நம்பிக்கை கொண்டதுதான்.
யார் அந்த இராமன்? வால்மீகி என்பவர் வடித்தெடுத்த காவிய (இதிகாச)மான இராமாயணத்தின் காவியத் தலைவன்தான் இவன். காவியம் (இதிகாசம்) என்றாலே உலகளவில் எல்லா மொழி இலக்கியங்களும் ஏற்றுக் கொண்டது போன்று, இதுவும் ஒரு கற்பனைக் கதை யாகும். அதாவது காவியம் என்றால் அதில் வரும் காவியத் தலைவன் மாந்தர்கள் இயற்கையான, இயல்பான தன்மையில் இன்றி இயற்கை மீறிய தன்மை உடையவர்களாகவும் அதில் வானிலே, தரைக்குள்ளே பயணம் இருப்பது போன்றும், பல உவமைகளைக் கொண்டதாகவும் போன்ற பல கூறுகளை உள்ளடக்கிய எல்லையில்லாத கற்பனை வளம் மிக்க கதையைக் கொண்டதாகவும், இயற்றப்பட வேண்டுமென்பது அதற் குரிய விதிகள்.
அதே தன்மையில்தான் வால்மீகி தன் இராமாயணக் காவியக் கதையையும் காவியத் தலைவன் மற்றும் மாந்தர்களையும் படைத்திருக்கிறார். இது எவ்வளவு கற்பனை மிகுந்தது என்பதற்கு இராமாயணம் துளசி தாசர், தமிழில் கம்பராமாயணம் போன்று 26 வகை யான இராமாயணக் கதைகளும், அதில் இடம்பெறும் காவிய மாந்தர்களுக்கிடையேயான உறவுகளும் கதை ஓட்டமும் அமைப்பும் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறு பட்டவையாகவும் (காட்டாக இராவணனுக்கு சீதை மகளாகவும், இராமனுக்குச் சீதை சகோதரியாகவும்) உள்ளன. மேலும் இராமாயணக் கதை உண்மையாக நிகழ்ந்தவை என்பவர்கள், அதன் காலம் பல இலக்கம் ஆண்டுகளுக்கு முன்னையது என்றும் சொல்வர். அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் மனித இனம் உருவாதல் அடிப்படையில் தற்போதுள்ள மனிதனின் தோற்றமே 50000-70000 ஆண்டுகளுக்கு முன்பு தான் உருப் பெற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மனித வரலாற்றுக்குள் வராத கற்பனைக்கும் எட்டாத தன்மை யுடையதுதான் இராமாயணக் கதை என்பது என்ற உறுதியான முடிவுக்கு வரலாம்.
இந்தப் பின்னணியில் மட்டுமின்றி, குறிப்பாக இராமன் பிறப்புப் பற்றியும் பல இராமாயணங்கள், பலவாறான கதைகளைக் கொண்டுள்ளன. அதாவது இராமன் கருவுற்றதே இயற்கையான மாந்தர்களிடை உறவு வழிப்பாற்பட்டது அன்று என்றும், கதைகள் உள்ளன. எனவே இராமன் என்பது நம்பிக்கை என்று சொல்லிக் கொள்ளக் கூடத் தக்க தகுதியற்ற ஒன்றாக உறுதி யாகக் கூறமுடியும், எனவே இதை முற்றிலும் வெறும் வெற்று நம்பிக்கை என்றுதான் கொள்ள வேண்டும்.
வரலாற்றுப் பதிவுகளிலிருந்து அயோத்தியில் கட்டப் பட்ட மசூதி முதலில் 1523-இல் லோடி மசூதி என்ற பெயரில்தான் கட்டப்பட்டதாகத் தெரிகின்றது. பின் லோடி தோல்வியுற்றதையடுத்து அது பாபர் மசூதி என்ற பெயரில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதே காலக்கட்டத்தில் வாழ்ந்த, துளசிதாசர் இராமாயணக் கதையை எழுதியவர். அவர் அயோத்தியில் மசூதி கட்டப்பட்ட இடத்தின் அருகில் அனுமன் கோவில் கட்டவேண்டுமென்று மொகலாய அரசனிட மிருந்து நிலத்தைப் பெற்று அனுமனுக்குக் கோவில் கட்டியுள்ளார். இராமாயணக் கதையெழுதிய அவரின் காவியத் தலைவன் இராமன் பிறந்த இடம் அந்த அயோத்தியிலுள்ளது என்ற எண்ணமோ கருத்தோ இல்லாதவராக இருந்ததால்தான் அங்கு அனுமன் கோவில் கட்ட முற்பட்டார் என்ற உறுதியான முடிவுக்கு வரவேண்டியுள்ளது. எனவே இராமன் அங்கு பிறந்தான், அங்கு இராமன் கோவில் கட்டப்பட்டிந்தது என்று சொல்வ தெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று தெளிவாகின்றது.
இந்த மசூதியில் 1849 முதல் இசுலாமியர்கள் இறை வழிபாடு மேற்கொண்டு வந்துள்ளனர். அதன் பின்னர்தான் 1859-இல் அந்த இடத்தில் இராமன் கோவில் இருந்ததாய் ஒரு புரளியைப் பரப்பி வந்துள்ளனர். அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தின் மய்யத்தில் தான், இராமன் பிறந்தான் என்று ஏன் சொல்லப் பட்டது? 1857-இல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான புரட்சியை ஒடுக்குவதற்கு சமூகங்களுக்கிடையே வேறு பாடுகளை ஏற்படுத்தி அவர்களைத் துண்டாடுவது என்ற நோக்கத்துடன் ஆங்கிலேய ஆட்சி ஒரு குழு மூலம் இந்த இராமன் பிறப்பு மசூதி உள்ள இடத்தில் தான் நடந்தது என்று பரப்பியது. அந்தக் குழுதான் பின்னாளில் இந்துத்துவப் பார்ப்பனியக் காவி வெறிக் கும்பலாக மாறியுள்ளது. இந்த அற்ப உணர்வை, வெறும் வெற்று நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைத்து அதன்வழி அவர்களை வெறியூட்டித் தங்கள் அரசியல் சமுதாயத்திற்காகப் பயன்படுத்துவதற்குக் கையில் எடுத்துக் கொண்டது.
இந்த இராட்டிர சுயம் சேவக் சங்கம். இப்பொழுது பாரதிய சனதாக் கட்சி, விசுவஇந்து பரிசத் என இந்த இந்து மதவெறிக் கூட்டம், இவர்களால் வெகுமக்களான இந்து மக்களாக உள்ள மக்களின் நலன்கள் மேம்பாட்டுக் காக உண்மையான எந்தத் திட்டங்களுமின்றி இது போன்று மதவெறியூட்டி அவர்களைப் பலிவாங்கு கின்றனர்.
மேற்சொன்ன கூட்டம், மசூதி கட்டப்பட்டுள்ள இடம் இந்துக்களுக்கானது என வழக்கு மன்றங்களில் வழக்குத் தொடர்ந்தது. அதன் தொடர்ச்சியாக இராமன் பிறந்த இடம் என்பது மக்கள் நம்பிக்கை எனச் சொல்லி இராமர் கோவில் கட்டுவோம் என்று நச்சுப் பரப்புரை செய்து வந்தனர். இசுலாமியர்களும் வரலாறு அடிப்படையி லும் மசூதி கட்டப்பட்ட காலம் தொட்டு தங்கள் கட்டுப் பாட்டில் உள்ள இடம் என வாதிட்டு அந்த நிலத்தின் மீதான உரிமையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு எதிர் வழக்குகள் தொடுத்தனர். இவ்வழக்குகள் நிலுவை யிலிருந்ததின் ஊடே திடும் என, 1949-இல் சங் பரிவாரக் கூட்டம் இராமன் பொம்மையை மசூதியின் மய்யப் பகுதியில் வைத்துவிட்டது. இருப்பினும் அவர்கள் மசூதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் மசூதியின் வெளிப்பகுதியில் இராமன் வழிபாடு செய்து கொள்ள லாம் என வழக்கு மன்றங்களால் அனுமதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் அதன் அடிப்படையில் அந்த வழிபாட்டு இடத்திற்குள் நுழையக்கூடாது பூட்டுப் போட்டு மூடி வைக்கப்பட்டது.
அடுத்து நாட்டின் பல அரசியல் மாற்றங்களினால் முதன்மை அமைச்சர் இந்திராகாந்தி 1984 கொலை செய்யப்பட்டார். அவரை அடுத்து முதன்மை அமைச்ச ரான இராசிவ் காந்தி திடீரென 1986-இல் இராமன் கோவில் வழிபாட்டைத் தொடரும் வகையில் பூட்டப் பட்டிருந்ததை திறந்துவிட அனுமதித்தார்.
இந்த நிகழ்வை அடுத்து, பாரதிய சனதாக் கட்சி இதை, கையில் எடுத்துக்கொண்டு “இராமராஜ்யம் அமைப்போம்!” என இராஜ் யாத்திரையை, அதன் தலைவர் அத்வானி, பிற தலைவர்கள், இவர்களின் கூட்டாளிகளான பல இந்துமத அமைப்புகளைத் திரட்டிக் கொண்டு அயோத்தி நோக்கி மேற்கொண்டு, நாடு முழுதும் கலவரமான, அமைதியற்ற சூழலை ஏற்படுத்தும் வகை யில் சட்டம் ஒழுங்கை நிலைகுலையச் செய்தனர்.
நாடு முழுதுமிருந்து இந்த மக்களுக்கு இந்துமத வெறியூட்டி அவர்களை வன்முறைக் கும்பலாக்கினர். இராமன் கோவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாகவும், அதைத் தகர்த்துவிட்டு அங்கேயே இராமன் கோவில் கட்டுவோம் என்ற நச்சு உணர்வு அங்கு திரளாகக் கூட்டப்பட்டிருந்த வெறியூட்டப்பட்ட மக்களுக்கு ஊட்டப்பட்டது. அந்த வெறிபிடித்த கும்பல்- காவிக் கயவர் கூட்டம் எதிர்பார்த்தபடி, 450 ஆண்டு களுக்கும் மேலாக அங்கிருந்த பாபர் மசூதிதயைத் தகர்த்துத் தரைமட்டமாக்கினர். அதுதான் உலக வரலாற்றின் கருப்பு நாளான 6.12.1992. சட்டத்தின் ஆட்சி தவிடு பொடியானது.
பல்லாயிரக்கணக்கான ஒன்றிய அரசின் பாதுகாப்புப் படையினர், மாநில அரசின் ஆயிரக்கணக்கான காவ லர்கள் இன்னும் பல்வகையான பாதுகாப்புத் துறை களின் சீருடைக் காவல் புரிந்தவர்கள் ஆகியோர் மவுனம் காத்துப் பார்வையாளர்களாக இருக்க- உலகம், இந்திய ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவை எவ்விதப் பதைபதைப்பும் கொள்ளாமல் இருந்த நிலை யில், 450 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த பாபர் மசூதிக் கட்டடம் இந்த இந்துத்துவப் பார்ப்பனக் காவிக் கும்பல் சாதாரண மக்களையும் மதவெறியூட்டி பல்வகைக் கொலைக் கருவிகளான கம்பிகளையும், கடப்பாறைகளையும், சம்மட்டிகளையும் அவர்கள் கைகளில் எடுக்க வைத்து, பட்டப்பகலில் இடித்து உடைத்து நொறுக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கான எதிர்வினையைக் காரணம் காட்டி, இவ்வளவு கொடு மைக்கும் தொடர்ச்சியாக நாடெங்கிலும் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு ஆயிரத்திற்கும் மேலான இசுலாமிய மனித உயிர்கள் பலியிடப்பட்டன. இவையெல்லாம் உலக வரலாற்றின் இந்திய ஒன்றிய வரலாற்றின் கொடும் கருப்பு வடுக்கள்; மானுடத்தின் மேல் புண்ணான, அழிக்க முடியாத கரும்புள்ளிகள்.
இதில் கொடுமை என்னவென்றால், இந்தக் காவிக் கயமைக் கும்பலின் இந்துத்துவ மதவெறி பொது மக்களையும் கொலைகாரர்களாக ஆக்கிவிட்டதே! இதே நிலைதான் குசராத்தில் கோத்திரா ரயில் எரிப்புக்கு எதிர்விளைவு எனக் கூறி, இதே இந்துத்துவ இந்துக் கொலை வெறிகொண்ட பார்ப்பனச் சங் பரிவாரக் கும்ப லால் பொதுமக்களும், பெண்களும் வெறியர்களாகத் தூண்டப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமியப் பெண்கள், கருவுற்ற பெண்மணிகள், சிறுவர்கள், கருப்பையிலிருந்த கருக்கள் என எல்லோரையும் படு கொலை செய்து, கொலைகாரக் கொடுங்கோலர்களாக மாற்றப்பட்டனர்.
மதத்தின் பெயரால், மத நம்பிக்கை என்பதின் பெயரால் மதவெறியூட்டப்பட்டு-வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு வரலாற்றுச் சின்னமான மசூதி இடிக்கப்பட்டு, பல ஆயிரம் இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்டு இந்தக் காவிக் கொலைகாரக் கும்பல் பெற்ற பயன் என்ன? வரலாற்றில் மாறாத வடுக்களை ஏற்படுத்திய தைத் தவிர.
ஆனால் அரும்பெரும் மக்கள் வளம் கொண்ட இந்த இந்து மக்களை 80-85 விழுக்காட்டளவில் கொண்ட இந்திய ஒன்றியம், குறிப்பாக இந்துத்து வக் கொலைகாரக் கும்பலின் பிடியிலுள்ள மாநிலங் களான உ.பி., ம.பி., பீகார், இராசசுத்தான்-ஏன் குசராத்தும் மக்கள் மேம்பாட்டுப் பல்வேறு குறி யீட்டளவில், உலகிலேயே ஆப்பிரிக்க நாடுகள் தவிர்த்து கடைநிலையிலேதான் இருக்கின்றன.
ஆனால் பெரியாரின் மக்கள் பற்றுக்கொண்ட சமூக நீதிக் கோட்பாடு கடைப்பிடிக்கப்படுவதால், தமிழ்நாட்டிலுள்ள 80-85 விழுக்காட்டு இந்துக் கள் எனப்படும் மக்கள் வாழ்க்கைத் தரத்தில் அய்ரோப்பிய வளர்ந்த நாடுகளுக்கிணையான மக்கள் மேம்பாட்டுக் குறியீட்டு அளவுகளை எட்டிப்பிடித்துக் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு போன்றவற்றில் ஒன்றிய மாநிலங்களிடையே ஒப்பீட்டளவில் உயர் நிலையில் உள்ளனர். இது மதத்தின் பேரால் கிட்டியவை அல்ல. மாறாக, மாறா மக்கள் பற்றும், மானுட மேன்மையையும் போற்றி அதற்காக வாழ்நாள் முழுதும் அர்ப் பணிப்புடனான கோட்பாட்டுடனும், கொள்கை யுடனும் கூடிய பெரியார் அவர்களின் தொடர் செயல்பாடுகளின் விளைவாகத்தான். பெரியார் மதத்தை, கடவுளைச் சாடினார். உண்மைதான் - வெகுமக்களான ஒடுக்கப்பட்ட இந்துக்களின் வாழ்வு மேம்பட. ஆனால் இந்துத்துவப் பார்ப்பனக் காவிக் கும்பல் மதவெறியூட்டி நாட்டையும் அவர்களின் இந்துமத மக்களையும் பிளவுபடுத்தி, இழிவு படுத்தி பெரும் திரளான ஒடுக்கப்பட்ட இந்து மக்களைக் குறிப்பாக இந்திய ஒன்றியத்தின் வடமாநிலங்களில் தாழ் இழிநிலையிலான வறுமைப் பிணியின் பிடியிலேயே வைத்துக் கொள்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றனர்.
இப்போது கட்டுரையின் தலைப்பிற்குள் வருவோம். அதாவது இந்திய ஒன்றிய நாட்டின் வெகுமக்களின் கடைசிப் புகலிடமாக கருதப்படக் கூடிய உச்ச வழக்கு மன்றத்தின் அய்ந்து நடுவர்கள் அடங்கிய அரசமைப்புச் சட்ட ஆயம் அயோத்தி-பாபர் மசூதி வழக்கில் வழங்கிய தீர்ப்பை ஆய்வோம் (இதற்கு முன்னதாக இந்த வழக்கில் அலகாபாத் உயர்வழக்கு மன்றம் அளித்த தீர்ப்பைப் பேசுபொருளாகக் கொள்ளவில்லை).
தீர்ப்பு : (அ.அ) : விவாதத்திற்கு உள்ளாயிருந்த பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் இராமன் கோவில் கட்டப்படுவதற்காக இந்திய ஒன்றிய அரசே ஒரு குழு அமைத்து அதன் மேற்பார்வையில் அந்தப் பணியைத் தொடரும் வகையில் அதனிடம் கையளித் திடப்பட வேண்டும்.
(ஆஆ) : இசுலாமியர்கள் வேறொரு இடத்தில் மசூதி கட்டிக் கொள்வதற்கேற்ப அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் அளிக்கப்பட வேண்டும். இந்த முடிவுக்கு வரு வதற்கு சொல்லப்படும் பொது நிலைபாடுகள் :
அ) வரலாற்றுத் தவறுகளைத் திருத்தியமைத்திட வழக்கு மன்றம் முனையாது.
ஆ) நம்பிக்கை என்ற ஒன்றின் அடிப்படையில் முடிவு எட்டப்படாது.
இ) நிலம் தொடர்பான ஆவணங்களின் அடிப்படை யாக இருக்கும்.
ஈ) சட்டத்தின் ஆட்சியே அடிப்படையாக அமையும்.
ஆனால் எந்தக் கருதுகோள்களின் அடிப்படையில் இம்முடிவுகள் எட்டப்பட்டது என, வழக்கு மன்றம் முன் வைத்தவை.
(அஅ) : வழக்கிலுள்ள நில எல்லைக்குள் இராமன் வழிபாடுகள் நடந்து வந்துள்ளன. மசூதிக்குள் வைக்கப் பட்ட இராமன் பொம்மை அகற்றப்படாமல் அங்கேயே இருந்துள்ளது. நெடுங்காலமாக இராமன் தாய் அவனை அந்த இடத்தில்தான் பெற்றெடுத்தாள் என்ற மக்கள் நம்பிக்கை, அதே நேரத்தில் இராமன் கோவில் மசூதிக் குக் கீழ் இருந்தது என்பதற்கு எந்த வரலாற்றுச் சான்றும் இல்லை. இராமன் கோவில் இருந்ததை இடித்துவிட்டு, அதன்மீது மசூதி கட்டப்பட்டதாக சொல்ல எந்த ஆதாரமும் அடிப்படையும் இல்லை. இந்நிலத்திற்கு உரிமை கோரு வதற்கு இந்துக்களிடம் எந்த ஆவணங்களோ, தரவு களோ இல்லை.
வழக்கு மன்றமே இந்த நிலத்திற்கு இந்துகள் உரிமை கோருவதற்கு எவ்வித வரலாற்றுச் சான்றுகள், நிலம் தொடர்பான ஆவணங்கள், தரவுகள் என உறுதியான (Solid) சான்றுகள் ஏதுமில்லை என்ற தெளிவான முடிவுக்கு வந்துள்ளது.
இருப்பினும், இராமனின் தாய் அவனை அந்த இடத்தில்தான் பெற்றெடுத்தாள் என்று நெடுங்காலமாக நிலவும் மக்களின் நம்பிக்கை ஒன்றுதான் இந்தத் தீர்ப்பை வழங்குவதற்கு அடிப்படையாக அமைந்துள்ள தாகத் தெரிகின்றது. அதே நேரத்தில் மேலே சொல்லப் பட்ட இரு காரணங்களும் நிலத்திற்கு உரிமை கோரத் தக்கவையாகக் கொள்ள முடியாது. இராமன் பொம்மை மசூதிக்குள் வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தவிர, அதை அணுக எவரும் மசூதிக்குள் அனுமதிக்கப்பட வில்லை என்பதால் அதை ஒரு காரணமாகக் கொள்ள முடியாது. அதேபோன்று மசூதிக்கு வெளியில் இராமன் வழிபாடு அனுமதிக்கப்பட்டதாலேயே மொத்த நிலப் பகுதிக்கும் உரிமை கோர அதுவும் அடிப்படையாகாது. எனவே நில உடைமை உரிமை வழங்கி அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு சட்டத்தின் ஆட்சியின் அடிப்படை யில் தரப்படவில்லை என்பது தெளிவு. அவ்வாறு சட்டப் படியாக அளிக்கப்படாத தீர்ப்பு வெறும் வெற்று நம்பிக் கையில் கட்டுரையின் தொடக்கத்தில் விளக்கப்பட்டுள் ளது. அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் அடிப்படையில் முரணானது, எதிரானது என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியுள்ளது.
இது உச்ச வழக்கு மன்றத்தால் வர லாற்றில் இழைக்கப்பட்ட பெரும் பிழையாகத்தான் அமைந்துவிட்டது. இந்த நீதி வரலாற்றுப் பிழையை அனுமதிப்பது கூடாது என்பது இது ஒரு கொடும் முன்காட்டாக அமைந்துவிடக்கூடும் என்பதுடன், இந்த வரலாற்றுப் பிழைகள் தொடருவதற்கு வழிகோலி வரும். எனவே இந்தத் தீர்ப்புக்குச் சீராய்வு வேண்டி வழக்குத் தொடர்ந்து வரலாற்று பிழை நீக்கப்பட வேண்டும். அவ்வாறு நிகழவில்லை எனில், வாய்ப் பிருப்பின் உச்ச வழக்கு மன்றமே தாமே முன்வந்து தீர்ப்பைத் திருத்தி வரலாற்று பிழை நீக்கிடல் வேண்டும். அல்லது இன்னும் அதிக நடுவர்களைக் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு மேல்முறையீடு செய்து இந்தத் தீர்ப்பு செல்லத்தக்கதல்ல என்றாக வேண்டும். இனி அயோத்தியில் 450 ஆண்டுகளுக்கும் மேலாக பாபர் மசூதி இருந்து வந்த 2.77 ஏக்கர் இடத்தை இசுலாமியர்களிடம் கையளிக்கப்படாததற்கு உச்ச வழக்காடு மன்றம் தம் தீர்ப்பில் சொல்லியுள்ள காரணங்களைக் காணலாம்.
(ஆஆ):இந்த நிலத்திற்கு உரிமை கோர ஆவணச் சான்றுகள் ஏதும் தரப்படவில்லை : மசூதியும், மசூதி உள்ள இடமும் எந்த விதி இடையூறுமின்றி (இராமன் பொம்மை 1959-இல் மசூதிக்குள் வைக்கப்பட்டது அகற் றப்படவே இல்லை. மேலும் மசூதியின் சுற்றுவெளி யில் இராமனுக்கு வழிபாடு நடத்தப்பட்டு வந்துள்ளது) முழுமையாக இசுலாமியரின் அனுபவ உடைமை, உரிமை உடையதாக இல்லை. இதில் இசுலாமியரின் உரிமை குறித்துப் பேசும் போது பல்வேறு செய்திகள் சொல்லப்படுகிறது. மசூதி 1528-லிருந்து 450 ஆண்டு களாக இருந்து வருகின்றது.
மசூதியில் 1859-லிருந்து தொடர்ந்து இசுலாமிய வழிபாடு நடந்து வருகிறது. மசூதி இருந்த இடத்தின் கீழ் இந்து வழிபாடு தொடர்பான கோவிலோ, பொருள் களோ கிடைக்கப் பெறவில்லை என இந்திய ஒன்றியத் தொல்லியல் துறை தெளிவுபடுத்தியுள்ளது. மசூதி, அந்த இடத்தில் இந்த கோவில் இருந்து அதை இடித்துத் தள்ளி விட்டு, அதன்மீது கட்டப்படவில்லை என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மேலாகவும் தீர்ப்பு சொல்வது : மசூதிக்குள் இராமன் பொம்மையை வைத்தது சட்டத்திற்கெதிரான அடாவடிச் செயல். மசூதிக்கு வெளிப்புறத்தில் இருந்த இராமன் கோவில், மசூதி தொடர்பான வழக்குகள் வழக்கு மன்றத்தின் நிலுவையில் இருந்த போது பூட்டி வைக்கப்பட்டிருந்ததை திறந்து விடப்பட்டு அங்கு வழிபாடு அனுமதிக்கப்பட்டது சட்டப்படி தப்பு என்கிறது. இதற் கெல்லாம் மேலாக வழக்கு மன்றங்களில் கேள்விக் குள்ளான மசூதி, நிலம் தொடர்பான வழக்குகள் நிலு வையில் இருந்த போது சட்டத்திற்கு எதிராகச் சட்டத் தைத் தம் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையாக மசூதி 6.12.1992 அன்று மக்களால் தகர்க்கப்பட்டு இடிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என்றும் தீர்ப்பு பதிவு செய்கிறது.
இங்கு வியப்பிற்குரியது என்னவெனில், மசூதிக்குள் அத்துமீறி நுழைந்து இராமன் பொம்மை வைக்கப் பட்டது, மசூதி தகர்க்கப்பட்டு தரைமட்டமானதைக் கண்டித்த உச்ச வழக்கு மன்றம் தம் தீர்ப்பில் இந்த வன்முறை செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமை யாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்க வேண்டிய பொறுப்பிலிருந்து எப்படி விலக்கிக் கொண்டு விட்டது என்பது மிகவும் நெருடலாகக் கருதப்படுகின்றது.
இவை தொடர்பான வழக்குகள் தனியே வழக்கு மன்றங்களில் நிலுவையில் இருந்து வருகின்றது. இருப் பினும் வன்முறையில் ஈடுபட்டவர்களைப் போகிற போக்கில் குறிப்பிட்டுவிட்டுச் செல்வது எப்படி நியாய மாகும்? அந்த வழக்குகள் மீது தொடர்புடைய வழக்கு மன்றங்கள் நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் என்று நிறுவப்பட்டவர்களுக்குத் தண்டனை விதிப்பார்கள் என்பது இப்போது உச்ச வழக்கு மன்றம் தன் தீர்ப்பில் தன்னால் சொல்லப்பட்ட பல செய்திகளுக்குத் தன் முரண்பாட்டை வெளிப்படுத்திவிட்டு அவற்றிற்கு எதிரான நிலைபாட்டைக் கடைப்பிடித்து முடிவு எடுத்துள்ளதை விவரிக்க வேண்டும்.
1) வரலாற்றுப் பிழைகளை நேர்படுத்துதல் வாக்கு மன்றங்களின் பொறுப்பல்ல என்கிறது. ஆனால் இந்த மசூதி வழக்கில் வரலாற்றுப் பிழை ஏதும் நடத்துவிட்ட தாக சொல்லப்படவே இல்லை. உண்மையில் வரலாற் றின்படி பாபர் மசூதி முறையாகத்தான் கட்டப்பட்டி ருந்தது எனக் காணமுடிகின்றது. ஆனால் அதன்படி பாபர் மசூதி இருந்த இடத்தை இசுலாமியர்களுக்கு உரிமையாக வழங்கியிருக்க வேண்டும். மாறாக உச்ச வழக்கு மன்ற வரலாற்றில் பிழை இழைத்து அவர் களுக்கு அதை வழங்கிடாமல் ஆணையிட்டுவிட்டது. மாறாக உரிமையற்றவர்களுக்கு அதை அளித்து பெரும் பிழையிழைத்துவிட நேர்ந்துவிட்டது.
2) அடுத்து உச்சவழக்கு மன்றம் வெறும் நம்பிக் கைகளை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்காது என்றும், சட்டத்தின் ஆட்சியை மட்டும் நிலைநிறுத்தும் படியான முடிவை எடுக்கும் என்றுரைத்துவிட்டு, மேற் சொன்ன தன் முரண்பாட்டு நிலையையே மேற் கொண்டு சமயப் பற்று, நம்பிக்கைக்கு அடிப்படையில் லாத வெற்று நம்பிக்கையான, முற்றிலும் கற்பனையான கதை மாந்தனான இராமனை அவன் தாய் மசூதியின் மய்யப் பகுதியில் பெற்றெடுத்தார் என்ற அடிப்படையிலேயே அந்த இடத்தில் இராமன் கோவில் கட்டிட இந்திய ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டுள் ளது இந்தத் தீர்ப்பு.
3) சட்டத்தின் ஆட்சி நிறுவப்படும் என்ற நிலைப் பாட்டைச் சொல்லிவிட்டு, அதன் அடிப்படையாக இருக்க வேண்டிய சில வரலாற்றுச் சான்று, இடத்திற்கான அனுபவ உரிமையைப் பெற்றிருந்த இசுலாமியர் களுக்கு அந்த நிலத்தை அளித்திட ஆணையிடாமல் எவ்விதச் சான்றும் ஆவண ஆதாரமற்ற எதிர்வழக் காளிக்குக் கொடுத்துவிட்டது இத்தீர்ப்பு.
4) இந்துத்துவப் பார்ப்பனியக் காவிக் கும்பல் இந்த நிலத்திற்கு உரிமை கோருவதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டவை, இராமன் இந்த இடத்தில் பிறந்தான்; இந்த இடத்தில்தான் இராமன் கோவில் இருந்தது; அந்த இராமன் கோவில் இடிக்கப்பட்டு அதன் மீதுதான் அந்த இடத்திலேயே மசூதி எழுப்பப்பட்டுள்ளது; இராமன் பிறப்புப் பற்றி பேசிவிட்டோம்; ஆனால், இராமன் கோவில் இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தொல்லியல் துறையே ஆய்வு தெரிவித்து விட்டது. பின் எங்கே இராமன் கோவில் இடிப்பு என்ற கேள்வி எழும்? அதற்குப் பின்னும் எப்படி இடிக்கப்பட்ட கோவில் மீதுதான் மசூதி எழுப்பப்பட்டது என்ற கேள்வி யே எழாது அல்லவா என முழுமையாகப் பொய்யு ரைத்து பொய்யுரிமை கோரிய இந்துக்களின் வழக்கு தானே தகர்ந்துவிடும் அல்லவா. எனவே மசூதி இருந்த இடம் இசுலாமியர்களுக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இவற்றிற்கெல்லாம் மேலாக கேள்விக்குள்ளான மசூதியுள்ள இடம் குறித்த வழக்குகள் வழக்கு மன்றத் தில் நிலுவையில் உள்ள நிலையில் சட்டத்தின் ஆட்சியின் படியான தீர்ப்புக்காகக் காத்திராமல், இந்துத்துவப் பார்ப்பனக் கும்பல் மக்களுக்கு மதவெறியூட்டி சட்டத்தைத் தம் கையில் எடுத்துக் கொண்டு பாபர் மசூதியைத் தகர்த்துத் தரைமட்டமாக்கிவிட்டனர். இதற்கு இசுலாமியர்கள் எதிர்வினையாற்றியதைக் காரணம் காட்டி, உத்திரப்பிர தேசத்திலும் நாட்டின் பிற்பகுதிகளிலும் இந்து பயங்கர வாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு ஆயிரத்துக்கும் அதிகமான இசுலாமிய மக்களைப் படுகொலை செய்துவிட்டனர். இப்படிச் சட்டத்தை தம் கையில் எடுத்துக்கொண்டு சட்டத் திற்கு எதிரான செயல்களையும், படுகொலைகளையும் செய்த கொலைக்காரக் கும்பலுக்கும் அவர்களுக்கு ஊக்க மளித்து வன்முறையைத் தூண்டிய தலைவர்களைக் கொண்ட அமைப்புகளின் கைகளில் இந்நிலம் கையளிக் கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இத்தீர்ப்பின் பின்னணியில் உள்ளவை :
இந்த நிலம் தொடர்பான சிக்கலுக்கான முடிவு, தீர்வு மேலும் தொடர்ச்சியான அமைதியற்ற சூழலை ஏற்படுத்திவிடக் கூடாத வகையில் தீர்ப்பு அமைத்திட வேண்டுமென அனைத்துத் தரப்பு மக்களாலும் தலை வர்களாலும் பொதுவெளியில் வேண்டப்பட்டது என் பதை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வெளியிடப்பட் டுள்ளது என்று எண்ணத் தோன்றுகின்றது.
எந்தவித ஆதாரமும் இன்றி வெறும் பொய்ப்புரை களையே பரப்பி, எந்த வரன்முறைக்கும் உட்படாத வகையில் இராமன் பொம்மையைத் திருட்டுத்தனமாக பாபர் மசூதிக்குள் வைப்பது, அதைக் காரணம் காட்டி அதன் வெளிப்புறத்தில் இராமனை வழிபடுதல் என்று நாடகம் நிகழ்ச்சி. அதன் தொடர்ச்சியாய் வழக்குகள் வழக்கு மன்றத்தில் நிலுவையில் இருந்து வருவ தையும் பொருட்படுத்தாமல் வன்மமான திட்டம் தீட்டி இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்டம் போற்றிக் காத்து வருகிற மதச்சார்பற்ற மதநல்லிணக்கம் பேணப்பட்டு வரும் நாட்டில் அவற்றையெல்லாம் நொறுக்கித் தவிடு பொடியாக்குவது போல் எந்த அடிப்படை அறநெறிகளுக் கும் சட்டப்படியான நடவடிக்கைகள் எதற்கும் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக சட்டத்தைத் தம் கையில் எடுத்துக் கொண்டு மதவெறியை ஊட்டி சாதாரண பொது மக்களையும் வன்முறையில் ஈடுபடச் செய்து பட்டப்பகலில் 450 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த இசுலாமிய சமயத்தாரின் வழிபாட்டு மசூதியை இடித்து தரைமட்டமாக்கி நாட்டையே தலைகுனியச் செய்து அச்சத்தில் உறைய வைத்திவிட்டனர்.
இந்த வன்முறையாளர்கள், தீவிரவாதிகளாகக் கருதப்படும் நக்சலைட், மாவோயியக்கத்தார் என எந்த குழுவினரானாலும் அக்குழுவினர்கள்தான் சட்டத் தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டு தங்களை முன்னிறுத்தி விளைவுகளை எதிர்கொள்பவர்களைக் காட்டிலும் (சட்டமீறலை மேற்கொள்ளும் இவர்கள் சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்கள்) அப்பாவிப் பொது மக்களையும் மதவெறியூட்டி வன்முறையாளர் களாக மாற்றிச் சட்டத்தை நொறுக்கவும், அவர்களை யொத்த அப்பாவி மக்களைக் கொலைப் பலிவாங்கவும் செய்பவர்களாக உள்ளவர்கள் ஆவர். இவர்கள் மக்களி டையே அமைதியை விரும்பாதவர்கள். எப்போதும் அமைதி குலைந்த நிலையிலேயே அமெரிக்க ஒன்றியம் உலக நாடுகளிலெல்லாம் அமைதிக் குலைவை ஏற்படுத்திப் பதட்டத்தில் வைத்து அவர்களை எப்போதும் சுரண்ட லுக்கு ஆளாக்கி வருவது போன்று - நாட்டை வைத்து தங்கள் நலன் மட்டும் பேணுபவர்கள் ஆவர். எனவே இந்தத் தீர்ப்பு அவர்களை வன்முறை வழிகளிலிருந்து மீட்காது என்பது போல்தான் இப்போதும் இவர்கள் மதவெறிக் கருத்துகளை விதைத்து வருகின்றனர்.
மாறாக சமயப் பற்று, சமய நம்பிக்கை அடிப்படை யிலின்றி இந்தத் தீர்ப்பு சட்டத்தின் ஆட்சிப்படி அளிக்கப் பட்டு அதனால் ஏற்படும் எதிர்விளைவுகளை எதிர் கொண்டிருந்தால் இந்த மதவெறி வன்முறையாளர்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என நம்பிக்கை கொள்ளலாம். அப்பொழுதுதான் ‘வல்லான் வகுத்ததே வழி’ என்ற விலங்காண்டிக் காலவிதி முறியடிக்கப்படும்.
சமய நம்பிக்கை, சமய நல்லிணக்கச் சூழல் பாழா காதவாறும் சிதையாதவாறும் சமயங்களுக்கப்பாற்பட்டு அனைத்து மக்களிடையேயும் அமைதியைப் போற்றிப் பாதுகாக்கும் தன்மையில்தான் இருந்திடல் வேண்டும் என்ற புரிதலை, இந்திய ஒன்றியச் சமூகம் பெற்றிட வைப்பது அனைவரின் தலையாய கடமை, பொறுப்பு என்று உணர வேண்டும்; உணர்த்த வேண்டும். இதில் வழக்கு மன்றங்களின் பங்கு அளப்பரியது என்பதில் மாற்றுச் சிந்தனை இருக்க வாய்ப்பே இல்லை என்பதை மக்கள் பற்றுள்ள மன்ற நடுவர்கள் உள்ளிட்ட அனைத் துத் தளத்திலுமுள்ளோர் உணர்வர்.