ஆப்கானிஸ்தானில் அந்த மண்ணின் மைந்தர்கள் தாலிபான்கள் சோவியத் யுனியனின் ஆக்கிரமிப்பை அகற்றி ஆட்சியில் அமர்கின்றனர். உடனே தீவிரவாதத்திற்கு எதிரான போர் என சொல்லி வடஅமெரிக்க கண்டத்தில் உள்ள அமெரிக்கா ஆசியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்கிறது.

american imperialismஇத்தனைக்கும் தன் பரம எதிரியான சோவியத் யுனியனின் ஆக்கிரமிப்பை அகற்ற முதன்முதலில் ஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு செயல்பட்டு வந்த உள்ளூர் சோவியத் எதிர்ப்பு முஸ்லீம் போராளிகளை ஒன்றினைத்து தாலிபான் என்ற ஒன்றுபட்ட அமைப்பை உருவாக்கி, அதற்கு பயிற்சி கொடுத்து, கொம்பு சீவி விட்டு, அதன் பலனாக சோவியத் ஆக்கிரமிப்பை அகற்றி அங்கு தாலிபான் ஆட்சி அமைய வழி செய்துவிட்டு மீண்டும் தங்களது வருமானத்திற்காக ஆப்கானிஸ்தான் அபின் வளத்தைக் கைப்பற்ற தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் வளர்த்த தாலிபான்களைக் கொன்று குவித்தது.

இந்த ஒரு நிகழ்வே போதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரட்டை முகத்தை புரிந்து கொள்ள… இவர்களே தங்கள் ஆதாயத்திற்காக தீவிரவாதிகளை வளர்ப்பார்களாம், மீண்டும் நாங்கள் நல்லவர்கள் என்று கூறி அவர்களை அழிப்பார்களாம்.

 1949ல் சிரியா சுதந்திர நாடானது. சிரியா எண்ணெய் வளம் மிக்க நாடு மற்றும் துறைமுகங்கள் மிகுந்த நாடு. அமெரிக்கா அப்போதுதான் மெல்ல மெல்ல தன் எண்ணெய் வளப் பசியை அதிகரித்துக் கொண்டிருந்தது.

சவுதி அரேபிய எண்ணெய்யை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல சிரியா துறைமுகங்கள் உதவும் என அமெரிக்க உளவு அமைப்பு பகுப்பாய்வு செய்து சொல்ல அங்குள்ள ராணுவ தளபதி ஹசினி அல் ஸைம்க்கு பதவி ஆசை காட்டி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை தூக்கி எறிந்து, ராணுவ தளபதியை ஆட்சியில் அமர்த்தி தனக்கு சாதகமாக சவுதி அரேபிய எண்ணெய்யை மத்திய தரைக்கடல் துறைமுகங்களுக்கு கொண்டு செல்ல ஏதுவாக டிரானஸ்-அரேபியன் பைப்லைன் திட்டத்திற்கு அனுமதி வாங்கிக் கொண்டது அமெரிக்க ஏகாதிபத்திய அரசு.

இந்த நிகழ்வின் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளவும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஆதாயத்திற்காக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியை தூக்கி எறிய தயங்காது என்பதை.

இதேபோலத்தான் இரானில் அங்கு உள்ள முகமது மொசாக் தலைமையில் அமைந்த அரசு , தன் நாட்டின் ஒட்டுமொத்த எண்ணெய் வளத்தையும் நாட்டுடமையாக்க முடிவெடுத்திருந்தது.

அப்படி நடந்தால் அங்கு இருந்த பிரிட்டனைச் சேர்ந்த பிரிட்டீஷ் பெட்ரோலியம் நிறுவனம் பெரும் இழப்பை சந்திக்கும் என பிரிட்டன் உளவு நிறுவனமான M16, அமெரிக்க அரசின் உதவியைக் கோர உருவானது Operation AJAX. இது ஒன்றும் ஐந்தாண்டு திட்டமல்ல. இது இரான் அரசை பதவியில் இருந்து விலக்கும் திட்டம். சி.ஐ.ஏ மற்றும் எம்16 இணைந்து இரானில் துரோகிகளை விலைக்கு வாங்கி அங்கு உள்ள இஸ்லாமிய மத அமைப்புகளை அரசுக்கு எதிராகத் திருப்பி, கலவரத்தை உண்டாக்கியது.

மேலும் தன் கையாளாக ஷா என்பவரை ஆட்சியில் அமர்த்தியது. அவர் ஆட்சியில் அரசியல் எதிரிகள் கொலைசெய்யப்பட்டனர். உள்ளூர் கம்யூனிஸ்ட்கள் ஒழிக்கப்பட்டனர். இரானிய எண்ணெய் வளம் பெருமளவில் கொள்ளையடிக்கப்பட்டது. இதுவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறைக்கு உதாரணம். இவை அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு உதாரணங்கள்.

லிபியாவில் கடாபியைக் கொல்லும் அதிகாரத்தை யார் இவர்களுக்கு கொடுத்தார்கள்? சர்வதேச நீதிமன்றம் தி ஹேக்கில் இல்லையா?அங்கு கொண்டுசென்றிருக்கலாமே?

இவ்வளவும் நம் கண்முன்னே நடந்த நிகழ்வுகள். ஆனால் இதுவரை எந்த போர்க்குற்ற வழக்கோ, பொருளாதாரத் தடைகளோ அமெரிக்காவுக்கு எதிராக விதிக்கப்படவில்லை. ஆனால் வட கொரியாவிலே தங்கள் அரசுக்கு எதிரான உளவாளிகளுக்கு அரசியல் சட்டப்படி தண்டனை வழங்கினால் அது ஏதோ பெரிய குற்றம் போல பேசும் இந்த சர்வதேச சமூகம்.

ஐக்கிய நாடுகள் சபை என்ற அமைப்பு உண்டு பேசாமல் அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபை என பெயர் மாற்றிக் கொள்ளலாம். இந்த அமைப்பு நடுநிலை என்ற வார்த்தையை மறந்துவிட்டது போல காலம்காலமாக அமெரிக்கா வழங்கும் எச்சில் காசுக்காக அமெரிக்காவின் காலை வருடிக் கொடுத்து வருகிறதை சர்வதேச சமூகம் அறியும். அமெரிக்கா கொண்ட வந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படும், ஆனால் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் விலக்கப்படும்.

உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு என்ற ஒரு நிறுவனம் உண்டு. அது அமெரிக்கா சொன்னால் அல்-கொய்தாவிற்கே கடன் வழங்கும். ஆனால் வறுமையில் வாடும், பண உதவி தேவைப்படும் கியுபா, லாவோஸ் போன்ற சோஷலிச நாடுகளுக்கு உதவாது. உதவினாலும் நாட்டையே அடகுவைக்கும் ஒப்பந்தங்களை விதிக்கும்.

இஸ்ரேல் அமெரிக்க ஆதரவு நாடு எனும் ஒரே காரணத்துக்காக காஸாவில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும்போது உலக நாடுகள் அனைத்தும் அந்தப் படுகொலை யுத்தத்தை கண்டுகொள்ளாமல் துணைநின்றன. ஆனால் ரஷ்யா தனது மக்களுக்கு ஒரு ஆபத்து எனும் போது தன் படையை அனுப்பி பாதுகாத்தால், ஏதோ பெரிய குற்றம் போல பொருளாதாரத் தடைகளை விதிப்பது என உலக நாடுகள் குரல் கொடுப்பது ஏன்? அப்படியெனில் ஏன் இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடை விதிக்க வில்லை?

உலகில் ஏற்பட்ட பல உள்நாட்டுப் போர்களுக்கும், யுத்தங்களுக்கும் முக்கிய காரணம் அமெரிக்கா என்பதை யாரும் மறுக்க முடியாது. சீனா அணு ஆயுதம் வைத்திருந்தால் ஏன் அமெரிக்காவிற்கு வலிக்கிறது? இரான், சிரியா அணு ஆயுதங்களை வைத்திருந்தாலோ, அல்லது ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவிற்கு என்ன பிரச்சினை? இந்தியா-பாக்கிஸ்தான் மோதிக்கொண்டால் அமெரிக்காவிற்கு என்ன கவலை?

இந்த கேள்விகளுக்கு அமெரிக்காவால் பதில் சொல்ல இயலாது.

இங்கும் ரஷ்யா , கியுபா, சீனா, வெனிசுலா, இரான், சிரியா போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி உண்டு. ஆனால் ஏகாதிபத்தியம் உருவாக்கி வைத்திருக்கும் ஏகாதிபத்திய அடிமை என்ற போர்வையை மறைத்து, நடைமுறையில் இருக்கும் சர்வதேச நிறுவனங்களின் அதிகாரத்தால் அந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிகள் சிக்கித் தவித்து வருகின்றன. நம்மால் என்ன செய்ய முடியும் என கேள்வி உங்களிடம் வரலாம்.

பதில்

  • முடிந்த வரை டாலரைப் புறக்கணியுங்கள்.
  • முடிந்த வரை அமெரிக்காவில் இருந்து உலகம் முழுவதும் செயல்படும் நிறுவனங்களின் பொருட்களைப் புறக்கணியுங்கள்.
  • முதலாளிகளின் சுரண்டலுக்கு எதிராக தைரியமாக போராட்டத்தில் இறங்குங்கள்.
  • முடிந்தவரை இங்கிருந்து சர்வதேசம் வரை செல்லுமளவுக்கு ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு எதிராக, அதன் குற்றங்களுக்கு தண்டனை வழங்குமாறு எழுதுங்கள்.
  • எந்தவகையிலும் நம் அரசானது ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு ஆதரவாக சுரண்டலில் ஈடுபடாதவாறு போராடுங்கள்.

நெஞ்சம் நிமிரட்டும், சுரண்டல் முடியட்டும். வருங்காலம் ஏகாதிபத்தியமில்லா சமதர்ம சமூகமாக இருக்கட்டும்.

- நேதாஜிதாசன்

Pin It