சில தினங்களுக்கு முன் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அவர்கள்  அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் கூட்டம் நடைபெற்றது. இதில் 4000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழக மக்கள் மத்தியில் நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்த சகாயம் அவர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிற்க வேண்டும் என மக்கள் விரும்புவது போன்ற ஒரு தோற்றத்தை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. இது பற்றி சகாயம் வாய் திறக்காமல் இருப்பதில் இருந்தே சகாயம் மக்களின் நாடியை தெரிந்துகொள்ள இப்படி ஒரு ஏற்பாட்டை செய்கின்றாரோ என எண்ணத் தோன்றுகின்றது.

 sagayam iasதனது 23 ஆண்டு கால அரசுப் பணியில் 24 முறை பணிமாற்றம் செய்யப்பட்டவர் என்பதில் இருந்தே அவரது நேர்மையைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த நேர்மை மட்டுமே, ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்ற அவரது கொள்கை மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்க முடியுமா? அவர் எந்த அரசு பதவி வகித்தாலும் அந்தத் துறையில் நடைபெற்ற ஊழலை வெளிக் கொணர்ந்தார், ஊழல்வாதிகளை தட்டிக் கேட்டார் என்பது மட்டுமே ஒரு அவர் ஒரு  சிறந்த அரசியல்வாதியாக வருவதற்கு அனைத்துத் தகுதியும் உடையவர் என்று நாம் அங்கீகரிக்கப் போதுமானதா? நிச்சயமாக இல்லை என்பதே உண்மை.

  அன்னா கசாரே  ஏன் எப்போதும் ஊழலைப் பற்றி மட்டுமே பேசுகின்றார், இந்திய சமூகத்தின் முக்கிய பிரச்சினையாக உள்ள சாதி, தீண்டாமை, உலகமயமாக்கல் போன்றவற்றை பற்றிய அவரது பார்வை என்ன என்று நாம் கேட்டபோது  அனைவரும் சண்டைக்கு வந்தார்கள். அவர் ஊழலைப் பற்றி பேசும்போது நீங்கள் ஏன் சாதியைப் பற்றியோ, தீண்டாமையைப் பற்றியோ, உலகமயமாக்கல் பற்றியோ அவர் பேசவில்லை என்று கேட்கின்றீர்கள். இட்லி கடையில் போய் ஏன் புரோட்டா இல்லை என்று கேட்டால் எப்படி, புரோட்டா வேண்டும் என்றால் நீங்கள் புரோட்டா கடையில்தானே போய் கேட்க வேண்டும் என்று கிண்டல் அடித்தார்கள். அதே போலத்தான் "சகாயம் பல்வேறு ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். அதனால் அவர் முதலமைச்சராக வந்தால் அரசுத்துறையில் நடைபெறும் அனைத்து வகையான ஊழல் முறைகேடுகளுக்கும் முடிவுகட்டி ஒரு நல்ல ஆட்சியைத் தருவார். எனவே நாங்கள் சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகின்றோம்" என்று சொல்கின்றார்கள்.

  கேட்பதற்கு  ஏதோ நியாயமான கேள்விபோலத் தோன்றும். ஆனால் இந்தக் கேள்விக்குள் ஒழிந்திருக்கும் அரசியல் அறியாமையைப் புரிந்து கொண்டால் நாமும் அப்படி கேள்வி கேட்பவர்களின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்வோம். அன்னா கசாரே ஏன் சாதி, தீண்டாமை, உலகமயமாக்கல் போன்றவற்றைப் பற்றி வாய்திறக்க மறுக்கின்றார் என நாம் கேட்டபோது, நம்மைப் பார்த்துச் சிரித்தவர்கள் அன்னாவின் அணியில் இருந்த அன்னா உட்பட பல பேர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்பதும், உலகவங்கியில் இருந்து மகசாசே விருது வாங்கியவர்கள் என்பதும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் என்.ஜி.ஓ க்களின் பின்புலம் கொண்டவர்கள் என்பதும் அம்பலமாகி நாடே சிரித்தது.

 ஒரு தமிழ் ஆசிரியர் தமிழைப் பற்றி மட்டுமே வகுப்பில் பேசுவார், அவர் ஓவியத்தைப் பற்றியோ, ஒரு நல்ல இசையைப் பற்றியோ வகுப்பில் பேசமாட்டார். ஒரு மருத்துவர் நோய்களின் தன்மை பற்றி மட்டுமே பேசுவார், அவர் அரசியல் பேசமாட்டார் என  நினைத்தால், எதிர்பார்த்தால் குற்றம் நம்முடைய அரசியல் புரிதலின்மைதான். அறிவு என்பது அனைத்தும் சேர்ந்ததுதான். அதைப் பிரித்து, பிரித்துப் பார்ப்பது என்பது பின்நவீனத்துவவாதிகளின் பார்வை. இன்று நம்முடைய நடுத்தர அறிவுஜீவிகள் பல பேர் இந்தப் பார்வையைத்தான் கொண்டிருக்கின்றார்கள்.

 சகாயத்திடம் இருக்கும் ஊழல் எதிர்ப்பு என்ற ஒன்றே போதும், அவர் அரசியலுக்கு வருவதற்குத் தகுதியானவர் என்று சொல்வதுகூட ஒரு பின்நவீனத்துவ பார்வைதான். இருப்பதிலேயே மலிவான, மட்டமான அரசியல் பார்வை இது. தன்னுடைய 23 ஆண்டு கால அரசுப் பணியில் ஊழலைத் தவிர மற்ற சமூகப் பிரச்சினைகளில் அவரது பார்வை எப்படி  இருந்தது எனப்  பார்க்க வேண்டும். ஊழலை எதிர்க்கும் சகாயம் அந்த ஊழலுக்கு அடிப்படையாக இருக்கும் உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றவற்றைப் பற்றியோ, அதை  இருகரம் கூப்பி வரவேற்கும் இந்த அரசைப் பற்றியோ  எப்போதாவது வாய் திறந்து இருக்கின்றாரா? அப்படி அவர் வாய் திறக்காத பட்சத்தில் அவர் அதை ஆதரிக்கின்றார் என நாம் ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? ஒரு வேளை அவர் அதை எதிர்த்திருந்தால் இந்நேரம் தன்னுடைய பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு அரசியல் களத்தில் குதித்திருப்பார்.

 சகாயத்தைப் பொருத்தவரைச் சட்டத்தின்படியே அரசுத் துறையில் நடக்கும் ஊழல்களுக்குத் தீர்வு காண முடியும் என நம்புபவர். அதன் மூலம் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் ஊழலற்றதாக மாற்றியமைக்க நினைப்பவர். சுடுகாட்டில் படுத்துத் தூங்கும் நிலைக்கு இந்த அரசு அவரை தள்ளியபோதும் இந்த அரசு கட்டமைப்புக்கு எதிராக வாய் பேசாதவர். அவர் அரசு பதவியில் இருந்த இந்த 23 ஆண்டுகளில் தமிழகத்தில் பல சாதிக் கலவரங்களும், சாதி ஆணவக் கொலைகளும், மிகப்பெரிய அளவிற்கு அரசியல்வாதிகளின் ஊழல்களும் நடைபெற்று இருக்கின்றன. சகாயம் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர் எனில் இது போன்ற பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் இதுபோன்ற பிரச்சினைகள் நடைபெறும்போது அதற்கு மெளன சாட்சியாகவே இருந்தார்!.

  நமக்குச் சகாயத்தின் நேர்மைமீது ஒரு துளி சந்தேகமும் இல்லை. நிச்சயம் அழுகி நாறிக் கொண்டிருக்கும் இந்த அரசுக் கட்டமைப்பில் சகாயம் போன்றவர்கள் ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்று பிரகடனப்படுத்துவது பாராட்டுக்குரியதுதான். ஆனால் பிரச்சினை வெறும் ஊழல் மட்டும் அல்ல; அதைத் தாண்டி பிரமாண்டமானது. அது உலகமயமாக்கலாக, தனியார்மயமாக்கலாக, தாராளமயமாக்கலாக வியாபித்து நீள்கின்றது. சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் அரசியல் அறிவு சகாயத்திற்குக் கிடையாது என்பதுதான் நாம் முன்வைக்கும் குற்றச்சாட்டு. அப்படி முன்வைத்தாலும் அது நீதிமன்றங்களுக்குள் நம்மை அடைத்து வைக்கும் தீர்வாகத்தான் இருக்கும்.

 இப்போது நமக்குத் தேவை அரசியலில் புனிதர்கள் அல்ல; அரசியலில் புரட்சியாளர்கள். இப்போது மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்பது அழுகி நாறிப்போன இந்த அரசுக் கட்டமைப்பை  அப்படியே தக்க வைத்துக்கொண்டு அதற்குள் தீர்வை தேடச் சொல்லித் தரும் நேர்மை விரும்பிகள் அல்ல; இந்த அரசுக் கட்டமைப்பை மாற்றும் நெஞ்சுரம் படைத்த மனிதர்கள். கேஜ்ரிவாலைப்போல எந்தச் சித்தாந்தத்திற்கும் தாலி கட்டிக் கொள்ளாத, சில்லரை சீர்திருத்தங்கள் செய்து மக்களின் கோபத்தை தனிக்கும் என்.ஜி.ஒ வழிபட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்த விரும்பும் முதலாளித்துவ அறிவுஜீவிகள் நமக்குத் தேவையில்லை.

 ஆனால் சகாயம் போன்றவர்கள் இன்று மக்களால் விரும்பப்படுவதற்குக் காரணம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பதுதான். பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் இந்தக் கட்டமைப்பிற்குள்ளேயே மிக எளிமையான வழியில் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றம் இப்போது அவர்கள் அனுபவித்து வரும் முதலாளித்துவ மகிழ்ச்சிகளுக்கு வேட்டு வைக்காததாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதைச் செய்யவல்ல ஒருவராகவே  அவர்கள் சகாயத்தைப் பார்க்கின்றார்கள்.

 கடைசியாக, நமக்குத் தெரிந்த தோழர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது கேட்டேன் “தோழர், நாட்டில் இவ்வளவு சாதிக் கலவரங்கள் நடைபெறுகின்றதே, சாதி ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றதே , மதவெறியர்கள்  தமக்கு எதிரானவர்களை எல்லாம் கொல்கின்றார்களே, மக்கள் தினம் பட்டினியால் சாகின்றார்களே இதற்குத் தீர்வே கிடையாதா” என்று. அதற்கு அவர் சொன்னார் “எல்லாம் புரட்சி நடந்து முடிந்தால் சரியாகிவிடும்.  அதுவரை இது எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கும் நம்மால் வேடிக்கை பார்ப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது என்று”. அப்போதுதான் நினைத்தேன் ஏன் மக்கள் புரட்சியாளர்களைப் பார்த்து பயந்து ஓடுகின்றார்கள் என்று. இது போன்றவர்களை நம்பித்தான் இன்று பல புரட்சிகர கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளது. அதனால் மக்கள் சகாயத்தை நோக்கி மட்டும் அல்ல ரஜினி, விஜய் என யாரைத் தேடிப் போனாலும் நாம் ஆச்சரியப்பட முடியாது!

- செ.கார்கி

Pin It