chennai flood 338

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வழக்கத்தைவிட 112 சதவீதம் கூடுதலாக இந்த ஆண்டு இரண்டொரு நாட்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் கொட்டோ, கொட்டென்று கொட்டி விட்டது. இதனால் தமிழகத்தின் தலைநகரான சென்னை, அதன் வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளத்தில் மிதந்தது.

கூவம், அடையாறு, பக்கிம்காம் கால்வாய் ஆகிய சாக்கடைகளின் ஓரத்தில் வாழ்ந்த பஞ்சை பராகரிகளை மட்டுமல்ல அண்ணாநகர், அடையாறு போன்ற மேட்டுக்குடிகள் வாழும் பகுதிகளையும் இந்த பெருவெள்ளம் விட்டுவைக்கவில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்ந்தவர்கள் அங்கேயே பலநாட்கள் முடங்கிக் கிடந்தனர்.

ஊரெல்லாம் தண்ணீர் என்றாலும் ஒரு வாய் குடிப்பதற்கு குடிநீர் கிடைக்கவில்லை. சாப்பிடக் கூட நேரம் ஒதுக்க முடியாது என்றுக்கூறிக் கொண்டு, பணமே அனைத்தும் என்றிருந்தோருக்கு ஒரு கவலம் சோறு கிடைக்காமல் தவித்து போனார்கள். ஒரு வாய் சோத்துக்கும், தண்ணீருக்கும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என ஏங்கித்தவித்தனர். சென்னை சிலநாட்கள் முற்றிலும் தனித்தீவானது. அனைத்து போக்குவரத்தும் தகவல் தொடர்பும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் உயிர் பிழைப்போமா என்ற சந்தேகத்தை சுமந்தனர். தமது குழந்தைகளை வைத்துக்கொண்டு அழுது புலம்புயது அனைவரது நெஞ்சத்தையும் கரைத்தது.

சென்னைக்கு அதிலும் மாநகரின் பெரும்பாலான பகுதிகளுக்கும், மக்களுக்கும் அதிலும் இளைய தலைமுறை தமது வாழ்நாளில் முதன்முறையாக சந்தித்த பெரும் துயரம் இது.

ஆனால் கடலூர் மாவட்ட மக்களோ இந்தத் துயரங்களை குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வழக்கமாக சந்திப்பவை, பழகிப்போனவை.

2004 சுனாமி பேரழிவை அடுத்து 2012 தானேப்புயல் இம்மாவட்டத்தை முற்றாக புரட்டிப்போட்டது. இந்த ஆண்டு பருவமழை மீண்டும் ஒரு பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த ஆண்டு தமிழகத்தில் கொட்டித்தீர்த்த வடகிழக்கு பருவமழையும், அதைத்தொடர்ந்து தமிழக வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்த தன்னார்வர்களின் நிவாரணப்பணிகளும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது!

தமிழ்கத்தில் எங்கு திரும்பினாலும் வெள்ள நிவாரண வாகனங்கள் ஆயிரக்கணக்கில் அணி வகுத்தன. பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்கள் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு பகுதியிலும், ஊரிலும் ஏராளமான இளைஞர்கள் ஆயிரக்கணக்கான மக்களை வெள்ளத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்தனர்.

இந்த நாட்டையே, உலகையே வியப்படையச் செய்த தன்னார்வலர்களின் வெள்ள நிவாரணப்பணிகள் வேறெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது நடந்ததற்கு என்னக்காரணம்?

இந்த நிவாரணப்பணிகள் எப்படிபட்ட விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இனி வரும்காலங்களில் இயற்கை பேரிடர்களின் போது இதேப் போன்று தன்னார்வலர்களின் தொண்டு தொடருமா?

தன்னார்வர்களின் சேவை நிவாரணம் அளிப்பது மட்டும்தானா? போன்ற எண்ணற்றக் கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. ஏனென்றால் வந்தபின் நிவாரணம் அளிப்பதைக்காட்டிலும் வரும் காப்பதே சாலச்சிறந்தது என்பதினால்.

சுனாமி, புயல், மழை, பெருவெள்ளம் ஆகியவை இயற்கை பேரிடர்கள். அவைகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியாதுதான். ஆனால் அவைகளில் இருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள முடியும். ஏனெனில் நாம் மனிதர்கள். மந்தைகள் இல்லை.

ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போதும் ஊடகங்களும், ஆட்சியாளர்களும் அவற்றை தடுப்பது பற்றியும், அதிலிருந்து காத்துக்கொள்வது பற்றியும் நமக்கு திகட்டும் அளவுக்கு பேசுகிறார்கள். இவை அனைத்தும் ஒன்றிரண்டு வாரஙகள் மட்டுமே நடக்கின்றன பின்னர் அதைப்பற்றி எவரும் திரும்பிப்பார்ப்பதில்லை.

பேசுபவர்களும் மறந்து போகிறார்கள், பாதிப்பிற்கு உள்ளானவர்களும் மறந்து போகிறார்கள். மீண்டும் ஒரு பேரழிவு நிகழும் போது சற்றும் குறையாத இழப்புகளை மீண்டும் சந்திக்கிறோம்.

2004- ல் நிகழ்ந்த சுனாமி பேரழிவு நமது நாட்டிற்கு கடந்த பல நூற்றாண்டுகளில் நிகழ்ந்த முற்றிலும் புதிதான நிகழ்வாகும். இதற்கு முன்னர் தமிழகத்திலும் சரி இந்தியாவிலும் சரி பெரும்பான்மை மக்கள் சுனாமி என்ற கூட வார்த்தையை அறிந்தவர்களில்லை. அப்போது ஏற்பட்ட சுனாமியையும், அதனால் ஏற்பட்ட அழிவையும் நாம் தடுத்திருக்க முடியுமா?

முடியும் என்றுதான் பரிசீலினையின் போது கிடைத்த உண்மை நமக்கு சொன்னது. சுனாமி என்கிற ஆழிப்பேரலையை அதே இயற்கை அலையாத்தி காடுகள் மூலம் காலம்காலமாய் தடுத்துவந்தது. கடற்கரை எங்கும் வளர்ந்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மைக்காத்த இயற்கையின் அபார திறனும், சக்தியும் மிக்க அலையாத்திக்காடுகளை அழித்தது மனிதர்கள்தான்.

எனவே இனி எதிர்க்காலத்தில் ஆழிப்பேரலையின் அழிவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அலையாத்தி காடுகளை கடற்கரையெங்கும் வளர்க்க வேண்டும் என்றார்கள். பேசியதை பேசியவர்கள் மட்டுமல்ல, கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் மறந்து போனோம். இந்த அலையாத்திக் காடுகள் ஆழிப்பேரலையை மட்டுமல்ல பெரும் புயல்களின் அழிவிலிருந்தும் நம்மை காக்கக்கூடியவை.

இப்போது பொழிந்த பெருமழையிலிருந்தும், வெள்ளத்திலிருந்தும் கூட மனித சக்தியால் தற்காத்துக்கொள்ள முடியும். நம்மை இவற்றிலிருந்து நம்மை காக்கும் இயற்கை அரண்களாக திகழ்ந்த வடிகால்களை முற்றிலும் இல்லாமல் ஆக்கியது நாம்தான். யாரோ சிலர் செய்த தவறுகளுக்கு அனைவரின் மீது குற்றம் சொல்லலாமா? என்று மக்களை மிகவும் நேசிப்பதாக கருதிக்கொள்ளும் பலரும் பொங்கி எழுகிறார்கள்.

chennai flood relief

அனைவரும் குற்றம் செய்யவில்லை என்பது உண்மைதான். வெள்ள வடிகால்களை, வாய்க்கால்களை , ஏரிகளை, குளம் குட்டைகளை அதிகாரத்தில் உள்ளவர்களும், அவர்களோடு ஒட்டிக்கொண்டிருந்தவர்களுமே ஆக்கிரமித்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த ஆக்கிரமிப்புகள் நமக்கு தோண்டும் சவக்குழிகள் என்பதைக்கூட உணரமுடியாத அளவுக்கு சிக்கலான செயல்களா அல்லது நடவடிக்கைகளா? ஆக்கிரமிப்பாளர்களின் அநீதியான , அக்கிரமமான செயல்களை அன்று நாம் நமக்கென்ன என்றுதானே வேடிக்கை பார்த்தோம். ஒதுங்கிப்போனோம். நம்மால் அவர்களை தடுக்க முடியாது என்றுதானே கருதினோம். தட்டிக்கேட்டவர்களை பிழைக்கத்தெரியாதவன், விவரம் இல்லாதவன் என்றுதானே ஏளனம் செய்தோம். இதன் மூலம் இந்த குற்றச்செயல்களுக்கு ஒதுங்கி நின்று துணை செய்தோம்! குற்றம் செய்வது மட்டுமல்ல , அதற்கு துணை நிற்பதும் குற்றம் தானே? இக்கேள்வியை கேட்கும் மனிதர்களை நாம் ஏளனம் செய்யலாம். ஆனால் இயற்கை கேள்வி எதையும் கேட்கவில்லை. குற்றவாளைகள் என்று தண்டனைகளையே வழங்கிவிட்டது. இப்போது இயற்கையை என்னச் சொல்லி ஏளனம் செய்யப்போகிறோம்!

இவ்வளவு பெரிய இழப்புகளுக்கு பின்னரும் வேடிக்கை பார்க்கவும் , ஒதுங்கி நிற்கவும்தான் போகிறோமா? இயற்கை பேரிடர்கள் வரும்வரை காத்திருந்து, வந்தபின் நிவாரணம் அளிப்பதுதான் தன்னார்வலர்களின் தன்னிகரற்ற செயல்பாடா?

தென்னாப்பிரிக்காவில் உள்ள தேசிய வனவியில் உயிரியல் பூங்கா ஒன்றில் வழியெங்கும் அறிவிப்பு பலகை ஒன்றை கட்டி வைத்திருக்கிறார்கள் பூங்கா நிர்வாகிகள் சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு உணவளிக்காதீர்கள் என்பதுதான் அந்தச் செய்தி. ஆனால் இந்த அறிவிப்பை பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அலட்சியம் செய்தனர். குரங்குகளுக்கு உணவளித்தனர்.

விளைவு, குரங்குகள் காடுகளில் இயற்கையாக உணவு தேடுவதை விடுத்து சுற்றுலாப்பயணிகளை முற்றிலும் சார்ந்திருக்க தொடங்கின. ஆரம்பத்தில் அவர்கள் அளித்த உணவுகளை உண்டு வாழ்ந்த அவைகள், பிறகு அவர்களிடமிருந்து பிடுங்க ஆரம்பித்தன? மனிதர்களைப் போன்று வழிப்பறியில் இறங்கின. இதை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகளும் சுற்றுலாப்பயணிகளும் இன்றுவரை திணறிவருகிறார்கள்.

இப்போதைய மழையும் , பெருவெள்ளமும் இந்த அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியதற்கு காரணம் வடிகால் வாய்க்கால்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதும், இதை தடுக்க வேண்டிய அரசு அதை தடுக்காதது மட்டுமல்ல, அதுவே ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவராக மாறியதுமே காரணம் என்பதை மக்கள் உணர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புதிய ஆக்கிரமிப்புகள் நிகழ்வதை தடுத்து நிறுத்தவும், தன்னார்வலர்களின் வெள்ள நிவாரணப்பணிகள் ஏதேனும் உதவி செய்துள்ளனவா? நிச்சயம் இல்லை.

மாறாக திக்குத்தெரியாத , திட்டமிடப்படாத , முறைப்படுத்தப்படாத, திகட்டும் வகையிலான வெள்ள நிவாரணப்பணிகள் மக்களை தன்னலவாதிகளாகவும், பேராசைக்காரர்களாகவும், வழிப்பறியாளர்களாகவும் மாற்றிவிட்டுள்ளது. மொத்தத்தில் மக்களை முற்றிலும் நேர்மையற்றவர்களாக ஆக்கிவிட்டுள்ளது. இப்போது சொல்லுங்கள் குரங்குகளுக்கும் உணவளித்தவர்களுக்கும், தன்னார்வலர்களின் நிவாரணப்பணிகளுக்கும் என்ன வேறுபாடு என்று?

ஒவ்வொரு நகரப்பகுதியிலும், கிராமப்புறங்களிலும் வலிமையே நிவாரணப் பொருள்களை பெறுவதை தீர்மானித்தது. கட்சி, சாதி அடிப்படையிலான ஆள் பலமே நிவாரணப்பொருட்கள் பெருவதை தீர்மானித்தன.

ஒவ்வொரு இடத்திலும் வலிமையற்றவர்களிடம் முற்றிலும் நிவாரணப்பொருட்கள் எட்டவிடாமல் தடுக்கப்பட்டனர். இதை மீறிய தன்னார்வலர்கள் ஏச்சுக்கும், பேச்சுக்கும், தாக்குதலுக்கும் அவமானத்திற்குள்ளானார்கள். பல லாரி நிவாரணப்பொருட்களை வலிமையானவர்கள் முற்றாக கைப்பற்றி அவற்றை அரசுப்பள்ளிகளிலேயே சேமித்து வைத்து கொண்டதும் நிகழ்ந்துள்ளது.

நிவாரணப் பொருட்கள் குறிப்பாக, துணி மணிகள் தன்னார்வலர்களாலும், போலீசாலும் லாரியிலிருந்து மக்கள் கூட்டத்தில் வாரி இறைக்கப்பட்டது. இதை கைப்பற்ற முயற்சித்த மக்களின் அலைமோதல்கள், முட்டல் மோதல்கள் வெட்கி தலை குனியச்செய்யும் நிகழ்வுகளாகும். உணவு தேவைபடாவிட்டாலும் அதை வாங்கி தெருவில் கொட்டினார்கள். பயன்படுத்த முடியாவிட்டாலும் அதை வாங்குவது தனது உரிமை என நினைக்க தொடங்கிவிட்டார்கள். மொத்தத்தில் இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே ஏராளமான இலவச திட்டங்களால் மூழ்கடிக்கப்படும் மாநிலம் தமிழகம்தான். ஒவ்வொரு முறையும் ஆட்சியை கைப்பற்றும் கட்சிகள் ஒவ்வொன்றும் இலவசங்களை வாரி வழங்கி ஆட்சியை பிடிப்பதால் தேர்தல் என்றாலே புதிய இலவச திட்டங்கள் உறுதியாக கிடைக்கும் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

இந்த மனநிலை மொத்த சமூகத்தையும் ஆட்கொண்டுவிட்டது. இதுவே தன்னார்வர்களின் இலக்கற்ற அதீதமான வெள்ள நிவாரணப்பணிகளுக்கும் அடிப்படையாகும்.

இனிவரும் காலங்களிலாவது இலக்கற்ற நிவாரணப்பணிகளை தவிர்ப்போம்! வருமுன் காப்போம் என்ற உணர்வை தடுக்கும் மக்களை மந்தைகளாக மாற்றும் அனைத்து செயல்களையும் தவிர்ப்போம்!!

- சூறாவளி

Pin It