கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழர்களின் மொழி, பண்பாடு, மரபுசார் அடையாளங்கள் போன்றவற்றை அழிப்பதென்றால் அவனவனுக்குச்சர்க்கரைப் பொங்கலாய்த் தித்திக்கிறது!அப்படிப்பட்டவர்களின் பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ளது பெடா இந்தியா (PETA India) எனும் அமைப்பு.

jallaikattu 311தமிழர் மரபு விளையாட்டான ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவலை இந்த ஆண்டும் நடத்தவிடக்கூடாது எனக் கொடி பிடித்துக் கிளம்பியுள்ள இந்த அமைப்பு, அதற்காகப் புகழ் பெற்ற நடிக-நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரிடமும் கையொப்பம் திரட்டி வருகிறது (இதுவரை கையொப்பமிட்ட பிரபலங்கள் சிலரின் பெயர்ப் பட்டியல் இங்கே. இவர்களில் சிலரை நீங்கள் தமிழ்த் திரைப்படங்களிலும் பார்த்திருக்கலாம்; உங்கள் விருப்பத்துக்குரிய கிரிக்கெட் வீரர்களும் இதில் இருக்கலாம்!). கையொப்பங்கள் திரட்டி முடிந்ததும் நடுவணரசுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்துடன் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். கேட்டால், இவர்கள் உயிரினங்களின் நலனுக்காகப் பாடுபடுபவர்களாம்! உண்மையாகவே அப்படித்தானா அல்லது இதில் வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்குமா என்பது அப்புறம். முதலில், தடையை நீட்டிக்க இவர்கள் கூறும் காரணங்களைக் கொஞ்சம் பாருங்களேன்!

“ஜல்லிக்கட்டுப்போட்டியின்போது காளை மாடுகள் மிகவும் கொடூரமான முறையில் உணர்வு இழக்கச் செய்யப்பட்டுத் துன்புறுத்தப்படுகின்றன. மேலும், வீரர்களால் காளை மாடுகள் துரத்திச் செல்லப்பட்டு உதை, குத்து, தரையில் தரதரவென இழுத்துச் செல்லுதல், கத்தியால் குத்துதல் எனப் பல்வேறு கொடூரங்களுக்கு உள்ளாகின்றன.

பொதுமக்கள், பார்வையாளர்கள் காயம் அடைதல் மற்றும் உயிரிழப்புக்கு உள்ளாகும் சூழலும் ஏற்படுகிறது. ஆகவே, விலங்குகள் நலன் மற்றும் மனிதப் பாதுகாப்புக் கருதி, காளைகளைப் பாதுகாக்க ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் உள்ளிட்ட காளை மாடுகள் சார்ந்த போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையைத் தொடர வேண்டும்”

இதைப் பார்க்கும்பொழுது எனக்குச் சிரிப்பதா கொதிப்பதா என்றே தெரியவில்லை! நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் ஏறு தழுவலில் இன்று வரை ‘கத்தி’ எனும் பொருள் பயன்படுத்தப்பட்டதாக யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா நண்பர்களே?

தவிர விளையாட்டின்பொழுது, கலந்து கொள்ளும் வீரர்கள்தாம் காளைகளால் உதைக்கப்பட்டதையும் குத்தப்பட்டதையும் இழுத்துச் செல்லப்பட்டதையும் நாம் பார்த்திருக்கிறோம். காளைகளை யாராவது அப்படியெல்லாம் செய்து பார்த்திருக்கிறோமா? கேள்வியாவது பட்டிருக்கிறோமா?

இந்த இரண்டு வரிகளிலிருந்தே தெரிகிறது, இந்த அமைப்பினர் ஏறு தழுவல் விளையாட்டைத் தொலைக்காட்சியில் கூடப் பார்த்தது கிடையாது என்பது. இப்படிப்பட்டவர்களின் விண்ணப்பத்தில் சிறிதும் சிந்திக்காமல் கையொப்பமிட்டிருக்கிறார்கள் இத்தனை பெரிய மனிதர்களும்! என்ன இருந்தாலும் தமிழர்கள் விளையாட்டுத்தானே! அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கச் சிந்திக்க வேண்டுமா என்ன?

ஏறு தழுவல் விளையாட்டைக் கண்ணால் கூடப் பார்க்காமல், ஸ்பெயின் நாட்டுக் காளை அடக்கும் போட்டி போலத்தான் இதுவும் இருக்கும் எனக் கண்ணை மூடிக் கொண்டு முடிவெடுத்து இவர்கள் இப்படி ஒரு கோரிக்கையை நடுவணரசு வரை கொண்டு செல்லத் துணிவதைப் பார்க்கும்பொழுது, கடந்த பொங்கலின்பொழுது மேனகா காந்தி உளறியது நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

“ஜல்லிக்கட்டு என்பது மேற்கத்திய பண்பாடு. அதில் மாடுகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் கொல்லப்படுகிறார்கள். பா.ஜ.க ஒருபோதும் இதை ஏற்றுக் கொள்ளாது” என்றார் மேனகா காந்தி அன்றைக்கு. ஒரு நாட்டின் நடுவண் அமைச்சரே இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்தால் அதை மற்றவர்கள் நம்பாமல் இருந்தால்தான் வியப்பு. இந்த நாட்டில் நடுவணரசின் அமைச்சர்கள் முதல் தனியார் அமைப்புகள் வரை தமிழர்கள் மீதும் தமிழர்களின் பண்பாடு, வரலாறு, மரபு போன்றவற்றின் மீதும் எந்தளவுக்கு அலட்சியமும் கீழ்த்தரமான பார்வையும் கொண்டிருக்கிறார்கள் என்பது இவற்றின் மூலம் மீண்டும் மீண்டும் உறுதியாகிறது.

இப்படிப்பட்டவர்களுக்கு ‘ஏறு தழுவல்’ என்றால் என்னவெனத் தெரியுமா? அதிலுள்ள ‘தழுவல்’ எனும் வார்த்தையின் பொருள்தான் புரியுமா?

காளையை அடக்குவதோ கொல்வதோ கொடுமைப்படுத்துவதோ இல்லை, அதைக் கட்டி ‘அணைப்பது’தான் இந்தப் போட்டியின் நோக்கமே என்பதை இவர்கள் அறிவார்களா?

பெற்ற பிள்ளைக்குக் கஞ்சி வார்த்துவிட்டுக் கடன் வாங்கியாவது காளைக்கு ஊட்டம் மிகுந்த உணவுகளைக் கொடுத்துப் போட்டிக்கு ஆயத்தப்படுத்தும் அன்புள்ளங்களை இவர்கள் சந்தித்திருப்பார்களா?

விளையாட்டுத் திடலை விட்டு ஓடிப் போன காளையை, பெற்ற பிள்ளையைத் தொலைத்தது போல் தேடி அலைபவர்களின் கதைகளை இவர்கள் கேட்டிருப்பார்களா?

இப்படி எதுவுமே தெரியாமல் புரியாமல், தெரிந்து கொள்ள ஆர்வமும் காட்டாமல், தமிழ் மரபையும் அது சார்ந்த அடையாளங்களையும் அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் இப்படிப்பட்ட வெறி பிடித்த அமைப்புகளைத் தடை செய்தால் என்ன?

தெரியாமல்தான் கேட்கிறேன், தமிழ்நாட்டின் ஏறு தழுவலிலும், மாட்டு வண்டிப் பந்தயங்களிலும் மட்டும்தாம் வாயில்லா உயிர்கள் பயன்படுத்தப்படுகின்றனவா? உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா முதலானசில மாநிலங்களில் எருமைப் பந்தயம் நடத்தப்படுகிறது.(பார்க்க: Vaina, Uttar Pradesh, Buffalo Race in Kolhapur,Kambala) கேரளாவின் உட்பகுதியிலுள்ள நாட்டுப்புறங்களில் காளைச் சறுக்கல் எனும் விளையாட்டு ஆண்டுதோறும் நிகழ்த்தப்படுகிறது. மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், சென்னை என இந்தியாவின் பல இடங்களில் இன்றும் குதிரைப் பந்தயங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பயன்படுத்தப்படும் மாடுகள் குதிரைகள் எல்லாம் வாயில்லாத உயிரினங்கள் இல்லையா? இவை மட்டும் என்ன பேசும் திறன் படைத்தவையா? அல்லது, இந்த விளையாட்டுக்களிலெல்லாம் பொதுமக்களோ பார்வையாளர்களோ பாதிக்கப்படுவதில்லையா? இந்த விளையாட்டுக்களைப் பொறுத்த வரை மட்டும், அந்தந்த மாநிலங்களையே தடை செய்யச் சொல்லிக் கெஞ்சுவது, குறிப்பிட்ட சில நெறிமுறைகளோடு தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிப்பது என நீக்குப் போக்காக நடந்து கொள்ளும் இந்தியச் சட்டங்களும், ‘பெடா’ முதலான உயிரின நல அமைப்புகளும் தமிழ்நாட்டு விளையாட்டுக்களை மட்டும் ஒரேயடியாக முடக்கிப் போட ஆலாய்ப் பறப்பது ஏன்? தமிழர்களைப் பார்த்தால் மட்டும் இவர்களுக்கு இளித்தவாயர்களாகத் தெரிகிறதா?

அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை, இப்படிப் போகிறவன் வருகிறவன் எல்லாம் தமிழர் மரபுகளைப் பற்றி வாய்க்கு வந்தபடி பேசுகிறான் என்றால், அதற்குக் காரணம் நாம்தான்!

ஒவ்வொரு முறை யாராவது இப்படிப் பேசும்பொழுதும் அவர்களுக்கு ஆற அமர விளக்கமளிப்பது, எங்கோ உட்கார்ந்து கொண்டு அவர்கள் சொன்ன பொறுப்பற்ற கருத்துக்கு இங்கே உள்ள நம்மூர்ச் சாலைகளில் மறியல் செய்வது, கொடும்பாவி கொளுத்துவது என இப்படித்தான் நாம் பதில் (response) தருகிறோமே தவிர, சட்டப்படி நாம் இவற்றை எதிர்கொள்வதே இல்லை. அதனால்தான் தமிழர்கள் விதயத்தில் எல்லோரும் குளிர்விட்டுப் போய்த் திரிகிறார்கள்.

எனவே, இனியாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும்! இதோ, ஏறு தழுவல் பற்றி அனா, ஆவன்னா கூடத் தெரியாமல் அபாண்டமான பழிகளைச் சுமத்தி இருக்கும் பெடா அமைப்புக்கு எதிராக ‘குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றிப் பொய்யான கருத்துக்களைப் பரப்பி அவர்களையும் அவர்தம் பண்பாட்டையும் இழிவுபடுத்திய’ குற்றத்திற்காக உடனடியாய் வழக்குத் தொடுக்க வேண்டும்! சிந்திக்காமலே இவர்களின் விண்ணப்பத்தில் கையொப்பமிட்ட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கும் இது தொடர்பாகச் சட்டப்படி அழைப்பாணை (summon) அனுப்பப்படவேண்டும்! ஒருமுறையாவது இப்படிச் செய்தால்தான் தமிழர்கள் பற்றியும் தமிழர் பழக்கவழக்கங்கள் பற்றியும் போகிற போக்கில் பேச இனி யாரும் துணிய மாட்டார்கள். தமிழர் பிரச்சினைகளுக்காகப் போராடி வரும் அரசியல் கட்சிகள், தமிழுணர்வு இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் இப்பொழுதே இதற்கு ஆவன செய்ய வேண்டும்!

இல்லாவிட்டால், தமிழர்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்து யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசுகிற இந்தப் போக்கு மென்மேலும் பெருகவே செய்யும்!

உசாத்துணை: நன்றி விகடன்.

- இ.பு.ஞானப்பிரகாசன்