சென்னையில் பெய்த கனமழை சென்னைவாசிகளின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கின்றது. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் வெள்ளம் பாதித்து இருக்கின்றது என்றாலும் சென்னையில் ஏறக்குறைய 25% உள்ள குடிசைவாசிகளை வெகுவாக வெள்ளம் பாதித்து இருக்கின்றது. அடுக்குமாடி வீடுகளில் இருந்தவர்கள் மொட்டை மாடியில் போய் தஞ்சம் அடைந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள். அவர்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை என்பதைத் தவிர பொருளாதார இழப்பு, உயிர் இழப்பு என்பது மிகக் குறைவுதான். ஆனால் குடிசைகளிலும், ஓட்டுவீடுகளிலும் இருந்தவர்கள் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கின்றார்கள். இதுநாள் வரை கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து வைத்திருந்த தங்கள் பொருளாதாரம் முழுவதையும் இழந்திருக்கின்றார்கள். வீடின்றி, உணவு இன்றி, சுகாதாரமான குடிநீர் இன்றி, அவர்கள் படும் அவஸ்தையை சொற்களால் கூற இயலாது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சமூக ஆர்வலர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த உதவிகளை மனிதாபிமானத்தோடு செய்து வருகின்றார்கள். ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ வேண்டிய அரசு இழவு வீட்டிலும் பிடுங்கித்தின்னும் கீழ்த்தரமான வேலையைச் செய்துகொண்டு இருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிமாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருள்களில் ஜெயலலிதாவின் பாசிச உருவத்தை காட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகின்றார்கள். இல்லை என்றால் பொருட்களை அடித்து நொறுக்கி அ.தி.மு.க காலிகள் சூறையாடுவதாக சொல்கின்றார்கள். மேலும் சென்னைக்குக் கொண்டுவரப்படும் நிவாரணப் பொருட்கள் அ.தி.மு.க காலிகளால் வழியிலேயே மிரட்டி திருப்பி அனுப்பப் படுவதாகவும், சில இடங்களில் கொள்ளை அடிக்கப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. இப்படி ஒரு மானங்கெட்ட விளம்பரம் தேடிகளை நாம் எங்கும் பார்க்க முடியாது.
பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களை அமைச்சர் வளர்மதியின் அடியாட்கள் அடித்துப் பிடுங்கி சூறையாடி இருக்கின்றார்கள். மக்கள் உணவின்றி தவித்துக் கொண்டு இருக்கையில் ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்து அதிகார போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் இந்தப் பொறுக்கி அ.தி.மு.க அரசியல்வாதிகள் மக்களை கொன்றுபோட, துணிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றர்கள். இவர்களும் உதவமாட்டார்கள்; உதவ முன் வருபவர்களையும் விடமாட்டார்கள்.
ஆர்.கே.நகர் தொகுதிக்குச் சென்ற அமைச்சர்களை மக்கள் ஓட ஓட விரட்டியடித்துள்ளனர். மழை வெள்ளத்தால் மக்கள் வீடிழந்து, வாசல் இழந்து தவித்துக் கொண்டிருக்கையில், அமைச்சர் பெருமக்களோ பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக இருந்து கொண்டனர். ஊரே மரண ஓலத்தால் நிரம்பி வழிகையில், ஜெயலலிதா கடமைக்குச் சென்று மழை வெள்ளத்தை விமானம் மூலம் பார்வையிட்டு வந்ததைத் தவிர என்ன செய்தார் என்று யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை.
ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவிட்டு சென்னையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அம்போ என்று விட்டிருக்கின்றார். கொள்ளை அடிப்பதற்கும், அதற்கு திட்டம் தீட்டுவதற்குமே நேரம் போதாதபோது எங்கே மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவது.
சென்னை, கடலூர் மட்டும் அல்லாமல் பெரும்பாலான கடலோர மாவட்டங்கள் பெரும் சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. முறையான வடிகால் வசதி செய்யப்பட்டிருந்தால் பெரும் அளவிலான உயிர் இழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் தவிர்த்திருக்கலாம். ஏரிகள் ,குளங்கள், என அனைத்தும் அரசியல்வாதிகளாலும் அவர்களது அடியாட்களாலும் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளன. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மட்டும் ஏறக்குறைய 36 ஏரிகளும். 100 குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக சொல்கின்றார்கள். தியாகராய நகர், வள்ளுவர்கோட்டம் போன்றவை சில காலங்களுக்கு முன் ஏரிகளாக இருந்துள்ளன. இன்றோ பெரும் வணிகவளாகங்களால் நிரம்பி வழிகின்றன. இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களின் அனுமதி இன்றி நடந்திருக்க முடியாது. இன்று ஏற்பட்டிருக்கும் இவ்வளவு பெரிய உயிர் இழப்புகளுக்கும், பொருளாதார இழப்புகளுக்கும் நாம் இவர்களை மட்டுமே காரணமாக்க முடியும், மக்களை அல்ல.
இன்று சென்னையில் மட்டும் ஏறக்குறைய 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றார்கள். மாநிலத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக 555 என்று இருக்க, சென்னையில் மட்டும் 26 ஆயிரத்து 553 என்று இருக்கின்றது. இவர்களில் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. மீதமுள்ள அனைவரும் சென்னைக்குப் பிழைப்பு தேடி வந்தவர்கள் தான். படித்து முடித்துச் சொந்த மாவட்டத்தில் வேலை கிடைக்காமலும், விவசாயம் பொய்த்துப்போயும் சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள் தான் அதிகம்.
தமிழகத்தில் சென்னை, கோவையைத் தவிர பெரும்பாலான மாவட்டங்கள் குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இங்கு இருக்கும் மக்கள் தாம் பெரும்பாலும் சென்னைக்கு வேலை தேடி செல்கின்றனர். தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்படும் பெரும்பாலான தொழிற்சாலைகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே ஆரம்பிக்கப்படுகின்றன. இதனால் மாநிலத்தின் பிற மாவட்டத்தில் இருக்கும் மக்கள் தவிர்க்க இயலாமல் சென்னை நோக்கி தள்ளப்படுகின்றனர். அப்படி வருபவர் அனைவருக்கும் சென்னையில் தங்க எங்கே இடம் இருக்கின்றது. விளைவு ஏரி, குளங்கள் என அனைத்தும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. சாமானிய மக்களின் ஆக்கிரமிப்பு மட்டும் அல்லாமல் பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் முதலாளிகளும் பெரும் அளவிலான ஏரி, குளங்களை ஆக்கிரமித்து இருக்கின்றனர். அதற்கு அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் உடந்தையாக இருக்கின்றனர்.
பெரும்பாலான மாவட்டங்கள் எந்த விதமான தொழிற்வளர்ச்சியும் இல்லாமல் இருக்கும் போது மாநிலத்தின் தலைநகரில் மட்டும் அனைத்து தொழிற் சாலைகளுக்கும் அனுமதி அளிப்பதன் நோக்கம் என்ன? பெரிய அளவில் வேலைவாய்ப்பை வழங்கும் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளை எடுத்துக் கொள்ளுங்கள், போர்ட், நிசான், ஹூன்டாய், பிஎம் டபில்யு, ரொனால்ட், கொமாட்ஸ்யூ, ராயல் என்பில்டு, யமகா போன்ற அனைத்தும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் அமைந்திருக்கின்றன. அதனால் படித்த, படிக்காத மக்கள் அனைவரும் சென்னைக்குப் போனால் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நோக்கில் சென்னைக்குப் படையெடுக்கின்றனர். விளைவு ஒரு சதுர கிலோமீட்டருக்கு 26 ஆயிரத்து 553 பேர். உலகில் மிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில் சென்னை இடம் பிடித்துள்ளது.
தமிழகத்தை மாற்றி மாற்றி ஆட்சி செய்த தி.மு.க மற்றும் அ.தி.மு.க என இரண்டு கட்சிகளும் தான் இதற்கு பொறுப்பு. பன்னாட்டு முதலாளிகளின் ஏவல் நாய்களாக இருக்கும் இந்தக் கட்சிகள் தான் அனைத்து இழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். மாநிலத்தின் பிற மாவட்டங்களைப் புறக்கணித்துவிட்டு சென்னையை மட்டும் உப்ப வைத்ததன் விளைவுதான் இந்தப் பேரிழப்பு.
இப்படி ஒரு பேரழிவு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்துவிட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் இன்று இந்தப் பேரழிவையும் வைத்து அரசியல் செய்துகொண்டு இருக்கின்றார்கள். உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்கான விளம்பரம் தேடுவதிலேயே குறியாக இருக்கின்றார்கள். மாநில முதலைச்சரோ தன்னுடைய புகைப்படத்தை போடாத நிவாரணப் பொருள்களை அழித்தொழிக்க தன்னுடைய குண்டர்படை மூலம் ஆணையிடுகின்றார். நாட்டின் பிரதமரோ சென்னையின் சாலைவரை கீழே இறங்கி பாதிப்புகளைப் பார்த்ததாக போட்டோஷாப் செய்து தன்னுடைய படத்தை வெளியிடுகின்றார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களோ அநாதைகளாக ஒரு வேலை சோற்றுக்கு அல்லல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த நாசமாய்ப் போன அரசு அதிகார மமதையில் ஆடிக்கொண்டு இருக்கின்றது. இதை மக்கள் ஒழிக்கும் நாள் எந்நாளோ?
- செ.கார்கி