மழை வெள்ளம் தனது கோர முகத்தைக் காண்பித்த பின்னர், பலரின் உரையாடல் என்பது "எப்படியோ கூவம் சுத்தமாயிருச்சுப்பா" என்பது தான்...
பாவம், ஏனோ அந்த கூவ சுத்திகரிப்பு சுழற்சிப் பணியில்,கூவம் ஓரத்தில் வசிக்கும் நாதியற்ற ஜீவன்களும் அடங்கும் என்பதை சட்டென இவர்களுக்குத் தோன்றாமல் போயிற்று...
இன்று மழை ஓய்ந்து சற்று அவதானிப்பு கிடைத்தவுடன் அரசியல் தலைவர்கள் "இனி கூவம் ஓரத்தில் ஆக்கிரமிப்பு செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என அறிக்கை விடத் தொடங்கிவிட்டனர். ஏதோ… கூவ நாற்றத்தில் வாழ்வதை அந்த மக்கள் தன்முனைப்புடன் தேர்ந்தெடுத்தது போலவும்… ஆக அவர்கள் அனுபவிக்கும் தேவைக்கு அதிகமான சுகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது போலவும் இந்தக் கோரிக்கையே கோமாளித்தனமானது...
இனி அந்த மக்கள் கூவ நதிக்கரை ஓரத்தில் ஆக்கிரமிக்கக் கூடாது என்றால், அந்த மக்களின் பூர்வ நிலமான அண்ணா சாலையை, அண்ணா நகரை, இன்றைய சென்ட்ரலை, அந்த மக்களிடம் திரும்பக் கொடுப்பதே ஒரே தீர்வு.
ஆனால் , இனி அது சாத்தியமில்லை என்பது பதிலாக வருமாயின்... அந்த மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பதத்தைக் கொண்டு அடையாளப்படுத்துவதை நிறுத்துங்கள்...
அந்த மக்களின் நிலங்களை, இடங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ காலி செய்ய வைத்த, பிழைக்க வந்த வேற்று மாநில, மாவட்ட பிரஜைகளும்... பழைய மகாபலிபுரத்தை கதிகலங்க வைத்திருக்கும் நவீன மேற்தட்டு மக்களாக உள்ள தகவல் தொழில்நுட்பதுறையைச் சேர்ந்தோர்களும் தான் ஆக்கிரமிப்பாளர்களே ஒழிய, கூவ ஓரத்தில் இருக்கும் குப்பனும், சுப்பனும் இல்லை...
இப்போது மழை வெள்ளத்தின் அளவு கடந்து சென்றதால், பெரும் பகுதி பாதிக்கப்பட்டது... ஆனால் வருடா வருடம் கூவம் நதிக்கரையிலும், பக்கிங்காம் நதிக்கரையிலும் வசிக்கும் சென்னையின் பூர்வ குடி மக்களுக்கு மழைக் காலங்களில் எல்லாம் இன்றைய சென்னையின் நிலைமை தான்...
பாவம் அது எல்லாம் நமக்கு எப்படித் தெரியும்...நம்மைப் போன்று முதல் தர குடிமக்களா அவர்கள்??
ஏற்கனவே பொருளாதார வளர்ச்சி, நவீன மயமாக்கல் என்ற பெயரில் சென்னையின் பூர்வகுடி மக்களை துரத்தி அடித்து,,பெரும் பெரும் பாலங்கள் அடியில் இழைப்பாறச் செய்தது போதும்...
நீங்கள் நகரங்களில் வாழத் தகுதியற்றவர்கள் என, "சிங்களர்களின் மகாவம்சத்தில் வருவது போல, இளவரசனை காட்டினுள் துரத்தியது போல" , சென்னை மக்களை கண்ணகி நகரிலும்... செம்மஞ்சேரியிலும் அடைத்தது போதும்...
சென்னை நகர் பகுதியிலேயே இன்னும் ஏராளமான இடங்கள், வணிக நிறுவனங்களுக்காகவும், யார் குடிவரப் போகிறார்கள் என்றே தெரியாமல், கட்டட காண்ட்ராக்டர்களால் டிவியிலும், நாளிதழ்களிலும் விளம்பரப்படுத்தி தான் விற்க வேண்டும் என்ற சூழலிலும் பல கட்டிடங்கள் எழும்பவுள்ளன. ஆக இந்த மக்களுக்கு மட்டும் இடம் இல்லாமல் போகாது.
மேலும் குடிசை மாற்றுவாரியம் என்ற அரசாங்க கட்டுப்பாட்டுத் துறைக்கு, நகரினுள் இடம் ஏற்பாடு செய்வது என்பது ஒன்றும் கடினமான காரியம் இல்லை.
இன்னும் 4 பெரு வணிக வளாகம் கட்ட வேண்டும் என்று உயர்தட்டு மக்களின் வசதிக்கான கோரிக்கை வந்தால் , துள்ளிக் குதித்து வேலையை செய்ய முடியும் அரசாங்கத்தால், இது முடியாதா என்ன???
இல்லை இல்லை... நகரம் என்பது ஐடி'யில் வேலை செய்பவர்களுக்கும், நடுத்தட்டு, உயர்தட்டு மக்களுக்கும் தான், இவர்களுக்கு இல்லை என்றால்...
இந்த சென்னை அடுத்த பெரு வெள்ளத்தில் மூழ்கட்டும்...
- மனோஜ் குமார் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்)