பண்டைய சங்ககாலத் தமிழகத்தின் தத்துவார்த்த, அறிவியல், கலை சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” எனலாம். இந்தச் சிந்தனை மரபு 1000 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட நெடிய காலத்தைக் கொண்டதாகும். இந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு ‘பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனை’ என்கிற ஒரு உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருந்தது. அதில் சாங்கியம், உலகாயதம், பூதவாதம், எண்ணியம், சிறப்பியம், ஆசிவகம், நியாயவாதம் எனப் பலவிதமான மெய்யியல் சிந்தனைகள் இருந்தன. கடவுள் மறுப்பும், வைதீக எதிர்ப்பும் பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையில் உறுதியாக நிலை கொண்டிருந்தது. புத்தர் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் பூதவாதம் என்கிற பொருள்முதல்வாதக் கருத்துக்கள் நிலவின. அதனைப் படிப்பதற்காக வடஇந்தியத் தத்துவ அறிஞர்கள் தமிழகம் வந்தனர். சமற்கிருத நூற்சான்றுகளைக் கொண்டு உலகாயதம் தமிழகத்தில் மிகத் தொன்மையான காலத்திலிருந்து இருந்து வருவதாகத் தத்துவ அறிஞர் தட்சிண நாராயண சாஸ்திரி அவர்களும், பேராசிரியர் சக்கரவர்த்தி நயினார் அவர்களும் கூறியுள்ளனர்-(1). கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளாகச் சங்கம் மருவிய காலம் முடியும்வரை(கி.மு. 1000-கி.பி. 200), இந்தப் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள்தான் தமிழ்ச் சமூகத்தின் அடித்தளக் கருத்தியலாக இருந்தன.
முனைவர். கா.இராசன் அவர்கள் தான் எழுதிய ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ என்கிற நூலில் கி.மு. 1000 வாக்கில் தமிழகத்தின் தென் பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டிலும், வடபகுதியில் புதிய கற்காலப் பண்பாட்டிலும் வாழ்ந்த மக்கள் இருவரும் இணந்து ஒரு மிகப்பெரிய பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டனர் எனவும், அன்றே அவர்கள் ஒருவகையான வரிவடிவத்தைத் தமது கருத்துப்பரிமாற்றத்திற்குப் பயன் படுத்தினர் எனவும், இவர்களே ஒரே வகையான மொழி, வரிவடிவம் என்ற கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழ்ச் சமுதாயம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தவும், தமிழகத்தின் சங்ககால எழுச்சிக்கும் வித்திட்டவர்கள் எனவும் தமிழ் பிராமிக்கல்வெட்டுகள் அசோகன் காலத்திற்கு முற்பட்டவை என்பதில் எவ்வித ஐய்யப்பாடும் இல்லை எனவும் கூறுகிறார்-(2). இந்த மிகப்பெரிய பண்பாட்டுப் புரட்சியின் தொடர்ச்சியாக உருவாகியது தான் பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட ‘மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு’ எனலாம்.
தென்பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டைச் சேர்ந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வின் காலம் சுமார் கி.மு. 2000 என அறிவியல் ஆய்வு உறுதி செய்துள்ளது என்கிறார் முனைவர் அ. இராமசாமி அவர்கள்-(3). ஆகவே இப்பண்பாட்டுப்புரட்சி தென்பகுதியில் கி.மு. 1000க்கு முன்பே நடந்து பின் வடபகுதியோடு இணைந்து மேலும் வலிமை பெற்றிருக்கலாம். ஆதித்தநல்லூர் ஒரு தொழில் நகரமாக இருந்தது எனவும் அங்கு உயர் தொழில்நுட்பமிக்க உயர்தரமான இரும்பு எஃகும், பிற உலோகங்களும் தயார் செய்யப்பட்டன எனவும், வெண்கலப்பொருட்கள் தயாரிப்பில் அவர்கள் மிக உயர்ந்த தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர் எனவும் முனைவர் அ. இராமசாமி அவர்கள் குறிப்பிடுகிறார்-(4). இந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபின் காரணமாகவே மெய்யியல், இசை, வணிகம், தொழில்நுட்பம், வேளாண்மை போன்றவற்றில் பண்டையத் தமிழர்கள் மிக உயர்ந்த வளர்ச்சியை அடைந்தனர்.
பண்டையத் தமிழ்ச் சமூகம்:
தமிழ்ச் சமூகம் பண்டைய காலத்திலிருந்து மெய்யியல், அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நட்டியம் ஆகியவற்றில் ஒரு புகழ்பெற்ற மரபைக் கொண்டிருந்தது. கி.மு. 1000 முதல் தமிழ்ச் சமூகம் ஒரு பெரும் பண்பாட்டுப் புரட்சியைத் தோற்றுவித்து பலவிதங்களிலும் தன்னை வளர்த்துக் கொண்டது. அவை வளர்வதற்கான சமூகச் சூழல் தமிழகத்தில் இருந்தது. கி.மு. 1000 முதல் அல்லது அதற்கு முன்பிருந்து நிறையச் சிறு சிறு நகர்மைய அரசுகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்தன. வாசனைத் திரவியங்களின் உலகத்தேவையும் அதன் வணிகமும், தமிழர்களைப் பெரும் கடலோடிகளாக மாற்றியமைத்தது. இவையெல்லாம் கி.மு. 1000 முதல் அல்லது அதற்கு முன்பிருந்து நடந்து வருகிறது எனினும் கி.மு. 7ஆம் நூற்றாண்டிலிருந்து இவை தொடர்ச்சியாகவும் உலகளாவிய அளவிலும் நடைபெற்றது எனலாம். தமிழகத்தில் தனித்தனி வேந்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கிளைஅரசர்கள், சிறுகுறு மன்னர்கள், வேளிர்கள் எனப் பலதரப்பட்ட அரசுகளின் கீழ் நிறைய சுதந்திரமான நகர்மைய அரசுகள் இருந்தன. அவை தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் சுதந்திரமான வணிக நகர்மைய அரசுகளாகவும் பரிணமித்தன. பொருள் உற்பத்தியும், தொழில் நுட்பமும் வணிகமும் பெருகி வளர்ந்து கொண்டிருந்தன. இந்தநிலை கி.மு. 1000 முதல் அல்லது அதற்கு முன்பிருந்து கி.மு. 3ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை எவ்வித இடையூரும் இன்றி நீடித்து வளர்ந்து வந்தது.
ஆதலால் இக்காலகட்டத்தில் மெய்யியல், அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நட்டியம் முதலியன தொடர்ந்து இடைவிடாமல் வளர்ந்து வந்தன. இக்காலத்தின் தொடக்கத்திலேயே, அதாவது கி.மு. 7ஆம் 8ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே மூலச்சிறப்புள்ள தமிழ் மெய்யியல் சிந்தனை ஒரு சிறப்பு வடிவத்தைப் (தொல்கபிலரின் சாங்கியம்) பெற்றுக்கொண்டது. கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து தனித்தனி நகர்மைய அரசுகளை ஒழித்து அவைகளை வேந்தர்கள் தங்கள் ஆட்சிப்பரப்பில் இணைத்துக் கொள்ளும் பேரரசுக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். இந்நிலை கி.மு. 50 வரை தொடர்ந்து நடந்து வந்தது. அதே கால கட்டத்தில் சிறிது சிறிதாகத் தங்களது குடும்ப உறுப்பினர்களின் கிளை அரசர்களின் அரசுகளையும் நீக்கும் போக்கு அதிகரித்து வந்தது. கி.மு. 50 வாக்கில் அவையும் உச்ச கட்டத்தை அடைந்து குடும்ப உறுப்பினர்களின் தனித்தனி அரசுகள் இல்லாதொழிந்தன.
இவ்விதமாகச் சிறு சிறு நகர்மைய அரசுகள், குடும்ப உறுப்பினர்களின் அரசுகள், கிளை அரசுகள், வேளீர்களின் சிற்றரசுகள், முல்லைநிலச் சீறூர், மருதநில மூதூர், குறிஞ்சிநில குறுநில மன்னர்கள், பிற சிறுகுறு ஆட்சியாளர்கள் என இவையாவும் இல்லாதொழிக்கப்பட்டன. கொங்குப் பகுதியிலும், தொண்டை மண்டலத்திலும், தமிழகத்தின் வட பகுதியிலும் இருந்த சிறுகுறு அரசுகளின் பெரும்பகுதி இல்லாதொழிந்தன. இந்த நிலையில்தான் சங்கம் மறுவிய காலம் வருகிறது. இந்தச் சிறு குறு நகர்மைய அரசுகளே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைக்கும் அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நட்டியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் காரணகர்த்தாக்களாக இருந்தன என்பதை மனதில் ஆழப் பதிய வைத்துக் கொள்வது மிகமிக முக்கியம்.
திரு. வி. கிரபிவின் அவர்கள் “உலகத்தைப்பற்றிய பொருள்முதல் வாதக்கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும், பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், கி.மு. இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்திலும் உருப்பெற்றது” என்கிறார்-(5). அக்காலகட்டத்தில் எகிப்திலும் பாபிலோனியாவிலும் நகர அரசுகள் தோன்றி வளர்ந்து உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை மாறிக்கொண்டிருந்தன. ஆதலால் நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை வளர்கிற போது பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்கிறது எனலாம். கிரேக்கத்தில், கிரேக்க நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி, அவை வணிக நகர அரசுகளாக வளர்ந்த போது பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்ந்தது. மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், இத்தாலியின் வெனிசு போன்ற நகரங்களில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சிதான் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது. ஆகவே சுதந்திரமான வணிகநகரங்கள் முற்போக்கான அறிவியல் கண்ணோட்டம் உடைய சிந்தனைகளின் வளர்ச்சிக்கான காரணிகளாக இருந்துள்ளன என்பதை வரலாறு பலவிதங்களிலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வணிக நகர அரசுகள் பேரரசுகளாக மாறும்பொழுது பொதுமக்களையும் அடிமைகளையும் கட்டுப்படுத்தி வைக்க பொருள் முதல்வாத மெய்யியலை அழித்து அவ்விடத்தில் கருத்துமுதல்வாத மெய்யியலைக் கைக் கொள்கின்றன. வட இந்தியாவில் 16 ஜனபதங்கள் எனப்படும் நகர்மைய அரசுகள் உருவாகி வணிகம் பெருகி வளர்ந்து கொண்டிருந்த பொழுதுதான் கி.மு. 7ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் பொருள்முதல்வாதச் சிந்தனையை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியது. அதன் விளைவாகவே பல்வேறு பொருள்முதல்வாதச் சிந்தனை பள்ளிகள் அங்கு வளர முடிந்தது. தமிழகத்தில் முன்பு கூறியவாறு கி.மு. 1000 முதல் கி.மு. முடிய 1000 வருடங்களாக நகர்மைய அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி அவை வணிக நகர அரசுகளாக வளர்ந்து கொண்டிருந்த சூழ்நிலை நிலவி வந்தது. அதனால்தான் சாங்கியம், போன்ற மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை மரபு தோன்றி வளர முடிந்தது. தமிழகத்தில் சாங்கியம் மட்டுமின்றி பூதவாதம், எண்ணியம், வைசேடிகம் எனப்படும் சிறப்பியம், ஆசிவகம், கடவுள் மறுப்புச் சிந்தனையான நாத்திகம் போன்ற பலவகையான பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் தோன்றி வளர்ந்தன. இந்தச் சிந்தனைகள்தான் இந்தியா முழுவதும் பரவின.
ஆகவே தமிழகத்தில் தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் மிக நீண்ட காலமாக இருந்து வந்த சுதந்திரமான பலவகைப்பட்ட வணிக நகர, நகர்மைய அரசுகள் தான் மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்ததற்கான அடிப்படைக் காரணம் ஆகும். தமிழகத்தில் இருந்த ஆட்சியாளனின் அரச அதிகாரம் பொதுமக்கள் சபைகளால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது என கி.மு. 4ஆம் நூற்றாண்டு கிரேக்கத் தூதுவரான மெகத்தனிசு அவர்கள் கூறுவதாகக் கூறுகிறார் நேரு அவர்கள்-(6). மெகத்தனிசுவின் கருத்தைக் கணக்கில் கொள்வதன் மூலம் தமிழகத்தின் பண்டைய அரசமைப்பை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். நகரங்களிலும், ஊர்களிலும் குடவோலை முறையில் நகர, ஊர்ச் சபைகளின் பிரதிநிதிகளையும், பல்வேறு துறைகளுக்கான வாரியப் பொறுப்பாளர்களையும் நியமிக்கத் தேர்தல்கள் நடைபெற்றன.
“கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்”-(7). என்கிறார் மருதன் இளநாகனார். “கயிற்றினால் பிணிக்கப்பட்ட குடத்துக்கண்ணே உள்ள ஆவண ஓலைகளை எடுத்துக்கொள்வதற்கு, அக்குடத்தின் மேலிட்ட இலாஞ்சினையை ஆய்வுசெய்தபின் அதனை நீக்கும் ஆவணமாக்களைபோல” என்பது இதன் பொருளாகும். இந்த ஆவணமாக்கள் என்பது அரசால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள் ஆவர். குழிசி ஓலை என்பதை ஓட்டுச்சீட்டு எனலாம். இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டாகும். ஆகவே சங்ககாலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரச் சபைகளும், ஊர்ச்சபைகளும், வாரியப் பொறுப்பாளர்களும் இருந்தனர் எனவும் அவர்கள் பலவிதங்களில் அரசனுடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்தினர் என்பதும் மேற்கண்ட அகத்தனிசின் கூற்று மூலமும், மருதன் இளநாகனார் தரும் தேர்தல் முறை மூலமும் உறுதிப்படுத்தப்படுகிறது.
ஆனால் இந்நிலை சங்கம் மருவிய காலத்தில் இல்லை. அது கி.மு. 1000 முதல் கி.மு. முதல் நூற்றாண்டுவரை இருந்த நிலை ஆகும். அரசனின் அதிகாரம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் இருந்தே எல்லையற்ற அதிகாரமாகச் சிறிது சிறிதாக மாறிக் கொண்டிருந்தது. கி.மு. முதல் நூற்றாண்டின் முடிவில் அது நிறைவு பெற்றது. அரசன் வரம்பற்ற அதிகாரம் கொண்டவனாக மாறிப்போனான். ஆனால் சங்கம் மறுவிய காலத்திலும் கிராமப்புர பேரூர்களிலும், சிற்றூர்களிலும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து இருந்திருப்பர். வாரியங்களும் இருந்திருக்கும். ஆனால் அவை அரசனின் அதிகாரத்தைக்கட்டுப்படுத்தும் அளவு அதிகாரம் கொண்டதாக இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஆதலால் இந்த “மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு” என்பது குறைந்த பட்சம் கிறித்துவுக்கு முன்பே 1000 வருடங்களுக்கும் மேலான ஒரு நீண்ட நெடிய மரபைக் கொண்டதாகும். இந்தக் காலம் குறித்தப் புரிதல் இல்லாவிடில் தவறான, குழபபமான முடிவுகளை நாம் வந்தடைய நேரிடும். இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கும் மேலான, மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபானது, பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையைத் தனது அடித்தளமாகக் கொண்டு தமிழ்ச் சமூகத்தில் 1000 வருடங்களுக்கு மேலாக மிகப்பெரும் செல்வாக்குடனும், புகழுடனும் இயங்கி வந்துள்ளது. அதன் காரணமாகவே பொருள்முதல்வாத மெய்யியல் பிரிவுகளில் ஒன்றான தொன்மையான எண்ணியம் என்கிற சாங்கியத்தைத் தோற்றுவித்த, கி.மு. 7ஆம் 8ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த தொல்கபிலர்(சுமார் கி.மு. 750), ஒரு தமிழராக இருந்துள்ளார். இவரது பிற்கால மாணவரான, புறம் 194ஆம் பாடலைப்பாடிய சாங்கியம் என்கிற எண்ணியத்தை இந்திய அளவில் ஒரு பெரும் சங்கமாக வளர்த்தெடுத்த, பௌத்த மரபில் பக்குடக் கச்சாயனா, பக்குடுக்கக் காச்சாயனா, கணியாரா என்றெல்லாம் அழைக்கப்படுகிற பக்குடுக்கை நன்கணியாரும் ஒரு தமிழராக இருந்துள்ளார்.
‘சிறப்பியம்’ என்கிற வைசேடிய கோட்பாட்டை ஆரம்பித்த கணாதர், உத்தேசவாதம் என்கிற சிதைவுக் கோட்பாட்டை உருவாக்கிய அசித கேச கம்பாளர் எனப்படும் நரிவெரூர்த்தலையார், நியாயவாதத்தை உருவாக்கிய கோதமனார், தற்செயல் கோட்பாட்டை உருவாக்கிய பூரண காயபர் போன்றவர்களும் தமிழர்களே ஆவர். இவர்கள் உருவாக்கிய கோட்பாடுகள் அனைத்தும் பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையை அடித்தளமாகக் கொண்ட மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபிலிருந்து உருவானவைகளேயாகும். சங்ககாலத்துக்குப் பிந்தைய (கி.மு.50), தமிழ்ச் சமூகச் சூழலால் பலவீனமடைந்த பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை, சங்கம் மருவிய காலத்துக்குப்பின்(கி.பி.250) பெரும் வீழ்ச்சிக்கு உள்ளானது. இருந்த போதிலும் அதன்பின் பௌத்தமரபில் தோன்றிய தமிழர்களான, தின்னாகர், தர்மகீர்த்தி, திக்நாகர், தருமபாலர், போதிதருமர் போன்றவர்களிடமும்கூட மூலச் சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபின் தாக்கம் முழுமையாக இருந்துள்ளது என்பதை மறந்துவிட முடியாது.
இந்தியத் தத்துவம்- பொருள்முதல்வாதம்:
“இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும்” என்கிற நூலை பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் எழுதியுள்ளார்கள். அதில், இந்தியத்தத்துவம் குறித்தும், பொருள்முதல்வாதமாகத் தோன்றிய கபிலரின் சாங்கியமும், கணாதரின் வைசேடிகமும் எப்படி ஆன்மீக வாதங்களாக மாற்றப்பட்டன என்பது குறித்தும் அவர் எழுதியுள்ளார். இந்தியத்தத்துவத்தில் ஆன்மீக வாதத்திற்கும் பொருள்முதல் வாதத்திற்கும் நடைபெற்ற கடுமையான போராட்டத்தில் பொருள்முதல்வாதம் தோற்றுப் பின் வாங்கியுள்ளது. இந்தியத் தத்துவங்கள் வைதீகத் தத்துவங்கள், அவைதிகத் தத்துவங்கள் என இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பூர்வ மீமாம்சம், வேதாந்தம், சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம் ஆகிய ஆறும் வைதீகத் தத்துவங்கள், உலகாய்தம், பௌத்தம், சமணம் ஆகிய மூன்றும் அவைதிகத் தத்துவங்கள் ஆகும். நம்முடைய தத்துவங்கள் வேதத்தைச் சார்ந்தோ அல்லது அதனை எதிர்த்தோ நிற்கின்றன. ஆனால் வேதத்தில் தத்துவம் என்பது மருந்தளவுக்கும் இல்லை-(8).
மீமாம்சம்:
யாக, யக்ஞங்களின் கூட்டுச் சடங்குகளை கர்ம காண்டம் என உபநிடதங்கள் தாழ்த்திக் கூறின. இதனைவிட பிரம்ம அறிவின் ஞானம் பெறுவதே உயர்ந்தது என அவை கூறின. யாக, யக்ஞங்கள் போன்ற கூட்டுச் சடங்குகளை, அசுவமேத யாகம், இராசசூயம் போன்ற ஆட்சியாளர்களுக்கான சடங்குகளைச் செய்து நல்ல ஊதியமும் செல்வமும் பெற்றுவந்த பூசாரிகளும் மந்திரவாதிகளும் இதனை எதிர்த்தனர். உபநிடதங்களின் பிரம்மத்தையும், ஆன்மாவையும், அவை பற்றிய புதிய அறிவையும் எதிர்த்து, வேதச்சடங்குகளை ஆதரித்த இவர்கள் மீமாம்சகர்கள் எனப்பட்டனர். வேதச் சடங்குகளை ஆதரித்த இவர்கள் முழுமுதல் கடவுட் கொள்கையை எதிர்த்ததால் இவர்கள் நாத்திகர்களாக ஆகிவிட்டார்கள். இவர்களின் தத்துவ நிறுவனர் அக்கபாதர் எனக் கருதப்படுகிறார்-(9).
கபிலரின் சாங்கியம்-வானமாமலை:
கடவுள் இல்லை என மறுக்கிற நவீன சமணமும், பௌத்தமும் ஆன்மீக வாதங்களே. பொருள்முதல்வாதமாகத் தோன்றிய சாங்கியமும், வைசேடிகமும் ஆன்மீக வாதங்களாக மாற்றப்பட்டுவிட்டன. பொருள் முதல் வாதமாக இருந்த சாங்கியத்தை ஆன்மீகவாதமாக மாற்ற முயன்ற ஈசுவர கிருட்டிணர் என்கிற தத்துவ ஆசிரியர், தாமே ஒரு நூலை எழுதி, பண்டைய காலத்தில் எழுதப்பட்ட நூலைத் தாம் கண்டெடுத்ததாகக் கூறி அதற்கு ஓர் உரையும் எழுதினார். அந்த நூலின் பெயர்தான் ‘சாங்கிய காரிகை’ ஆகும். 24 தாதுக்கள் சாங்கியத்தில் இருந்தன. 25ஆவது தாதுவாகப் புருடனைச் சேர்த்தனர். அந்த புருடனை சர்வ சக்தி வாய்ந்ததாக ஆக்கி சாங்கியத்தை ஆன்மீகவாதமாக ஒப்புக்கொள்ளச் செய்தனர்-(10). ஆனால் ஈசுவர கிருட்டிணர் எழுதிய ‘சாங்கிய காரிகை’ என்கிற அந்தப் பொய்யான நூல் குறித்து, “சாங்கியத்தின் கருத்தியல் போதனைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துகிறது என்பது உண்மையே” என்கிறார் மிருணாள் காந்தி காங்கோபாத்யாயா என்கிற தத்துவ ஆசிரியர் ஒருவர்(11). இப்படித்தான் பண்டைய நூல்கள் அழிக்கப்பட்டு, அதனிடத்தில் பொய்யான நூல்கள் உருவாகி, அவை அங்கீகாரமும் பெற்றன.
கணாதரின் வைசேடிகம்-வானமாமலை:
கணாதரின் வைசேடிகம் ஒரு பழமையான தத்துவம். கிரேக்கப் பொருள்முதல்வாதி கிராக்ளிடசு போல இவரும் அணுக்கொள்கையை விளக்கினார். காரணமின்றிக் காரியமில்லை என்பது இதன் அடிப்படைக் கொள்கை. நான்கு பூதங்களை வைசேடிகர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அவர்கள் ஆகாயத்தைப் பொருளெனக் கொள்வதில்லை. அணுக்கள் அழிவற்றவை. அவை படைக்கப்படுவதில்லை. இயல்பு, கூட்டு என்கிற இருவிதப்பண்புகள் அணுவிற்கு உள்ளன. இவ்விரு சக்திகளால் அணு கூடும்பொழுது உலகில் வேறுபட்ட குணங்களை உடைய பல்வேறு பொருட்கள் தோன்றுகின்றன. அணுக்களைத் தூண்டிச் சேர வைப்பது நிமித்த காரணம். அணுக்கள் சேருகிற போது உண்டாகிற ஓர் பண்புதான் அறிவுக்கூர்மை. நான்கு பூதங்கள் கூடிய ஒரு உடலின் பண்புதான் ஆன்மா. ஆன்மாவை உடலின் பண்பென விளக்கும்போது, பகுதிகள் கூடும்பொழுது புதிய பண்புகள் சேருகின்றன என வாதித்து அவ்வாறு கூடுவதற்கு நிமித்த காரணம் தேவையில்லை என கணாதர் சொல்லுகிறார். ஆனால் அந்த நிமித்த காரணத்தைக் காட்டி அணுவை இயக்கவைக்கும் சக்தி கடவுள் எனக்கூறி வைசேடிகத்தை பிற்காலத்தவர்கள் நியாய வைசேடிகமாக ஆக்கி, அதனை ஆன்மீகமாக மாற்றி விட்டார்கள் என்கிறார் வானமாமலை அவர்கள்-(12). தமிழ் மரபு ஐம்பூதங்களைக் கொண்டது. கணாதரின் ஐம்பூதம் நான்கு பூதங்களாக மாற்றப்பட்டு விட்டது எனலாம்.
பரபக்க உலகாய்தம்-வானமாமலை:
வானமாமலை அவர்கள் கபிலரின் சாங்கியத்தையும், கணாதரின் வைசேடிகத்தையும் தமிழர் தத்துவமாக அறிந்திருக்கவில்லை. இந்தியப் பொருள்முதல்வாதத்தைப் பற்றிப் பேசும் பொழுது இந்த இரண்டும் மிக முக்கியப் பொருள்முதல்வாதத் தத்துவங்களாக இருந்து ஆன்மீக வாதமாக மாற்றப்பட்டன என அவர் கூறுகிறார். பரபக்கம் என்பது எதிரியின் கூற்றாகச் சொல்லப்பட்டு அதற்கு விளக்கம் தரப்படும் ஒரு முறையாகும். அந்த விதத்தில் தமிழின் தத்துவ நூல்களான மணிமேகலை, நீலகேசி, சித்தியார்(கி.பி. 13ஆம் நூற்றாண்டு) ஆகியவற்றில் உள்ள பரபக்க உலகாயத விடயங்கள் குறித்து அவர் பேசுகிறார். மணிமேகலை(கி.பி. 6ஆம் நூற்றாண்டு) காலத்தில் அளவைவாதி, சைவவாதி, வேதவாதி, ஆசிவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி ஆகிய தத்துவவாதிகள் இருந்தனர். நீலகேசியார் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) காலத்தில் மூன்று பௌத்தப் பிரிவுகள் இருந்தன. அதுபோக சாங்கியம், வைசேடிகம், பூதவாதம் (உலகாய்தவாதம்) ஆகிய மூன்று பிரிவுகள் இருந்தன என்கிறார்-(13). சித்தியார் காலத்தில் இருந்த தத்துவங்கள் குறித்து அறிய இயலவில்லை. வானமாமலை அவர்கள் தனது நூலில் இந்த மூன்று தமிழ் நூல்களிலும் உள்ள பரபக்க உலகாயதம் குறித்து மிக விரிவாகப்பேசுகிறார்-(14).
ஆசிவகம்-வானமாமலை:
பரபக்க வாதங்களைக் கூறும் மணிமேகலை 4ஆவது தத்துவ வாதியாக ஆசிவகவாதியைப் பற்றிக் கூறுகிறாள். அவன் அணுக்கொள்கையை விளக்கி உயிரும் அணுவே எனக் கூறுகிறான் எனவும், ஆசிவகத்தை நீலகேசி புறச்சமயம் எனக் கூறி சமணத்தத்துவ நோக்கிலிருந்து விமர்சிப்பதால் இது சமணப்பிரிவாகக் கருதப்படலாயிற்று எனவும் ஆதலால் சைவ சிந்தாதிகள் இதனைத் தவறாக சமணத்தின் ஒரு பிரிவான சுவேதாம்பரச் சமணம் எனக் கூறுவர் எனவும் இதனுள் பல பூதவாதக் கூறுகள் உள்ளன எனவும் ஆயினும் முற்றிலும் இதனைப் பூதவாதமாகக் கருதுவதற்கில்லை எனவும் வானமாமலை கூறுகிறார்-(15). ஆசிவகத்தைப் பற்றி வானமாமலை அவர்களுக்கு முழுமையானத் தரவுகள் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. வட இந்திய மரபில் ஆசிவகம் குறித்துப் போதிய தரவுகள் இல்லை. மற்கலி கோசாலர், பூரணகாயபர், பக்குடுக்கை நன்கணியார் ஆகிய மூவரும் இணைந்து இதைத் தொடங்கியதாகக் கருதப்படுகிறது.
மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு-வானமாமலை:
தமிழகத்தில் சாங்கியம், வைசேடிகம் ஆகிய இரண்டும் கி.பி. 7ஆம் நூற்றாண்டுவரை தனிப் பொருள்முதல்வாதப் பிரிவாகவே இயங்கி வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. ஆனால் பிற்காலத்தில் வட இந்தியாவில் சாங்கியம், வைசேடிகம் ஆகிய இரண்டையும் ஆன்மீகமாக்கி வைதீகத்தின் ஒரு பிரிவாக மாற்றிவிட்டனர். இறுதியாக தமிழ் நாட்டு உலகாயதம் குறித்து மேலும் ஆராயப்பட வேண்டும் எனவும், மருத்துவ நூல்கள், சித்த நூல்கள், இரசவாத நூல்கள், வைணவ, துவைத நூல்களின் பரபக்கக் கூற்றுக்கள் முதலியனவற்றை ஆராயவேண்டும் எனவும் அதன் மூலம்தான் தமிழ் நாட்டில் நிலவிய அறிவியல் கொள்கைகளின் அடிப்படை நமக்கு விளங்கும் எனவும் வானமாமலை அவர்கள் முடித்துள்ளார்-(16). அதாவது தமிழகத் திற்கான தனித்துவமான பொருள்முதல்வாத அறிவியல் கொள்கைகள் அல்லது தத்துவார்த்தக் கொள்கைகள் இருந்துள்ளன என்பதை அவர் உறுதியாக நம்பினார் என்பதை அவரின் இறுதிக்கூற்று உறுதிப் படுத்துகிறது. அதனைத் தான் ‘மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு’ என நாம் கூறுகிறோம். அந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபிலிருந்து தோன்றியவைகள் தான் தொல்கபிலரின் சாங்கியம், கணாதரின் எண்ணியம் எனப்படும் வைசேடிகம் முதலியன ஆகும். ஆனால் நா.வானமாமலை அவர்களால் அவைகள் தமிழகத்தின் பொருள்முதல்வாதச் சிந்தனைகள்தான் என்பதை அன்று அறிய இயலவில்லை. “டாங்கே தொடங்கி நா.வா. வரை வைதீக மரபு சார்ந்த இந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் மனநிலை உடையவர்களாகவே இருந்துள்ளனர்” என்கிற பேராசிரியர் வீ. அரசு அவர்களின் கூற்றில் உள்ள உண்மை காரணமாக இருக்கலாம். பேராசிரியர் அரசு அவர்கள் கூறும் கண்ணோட்டம் உள்ள பலர் இன்றும் அறியாதுதான் உள்ளனர்.
- தொடரும்.
பார்வை:
1. பேராசிரியர் நா. வானமாமலை, ‘தமிழர் பண்பாடும் தத்துவமும்’ அலைகள் வெளியீட்டகம், ஜூலை-2008, பக்: 136,137.
2. முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 74, 75, 76.
3.அ. இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிகவரலாறு, டிசம்பர்-2013, பக்:62.
4. “ “ பக்: 52-64.
5.’இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’ இரசிய நூல், முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ பக்:43.
6.சவகர்லால் நேரு, உலகச் சரித்திரம், தமிழில் ஒ.வி. அளகேசன், முதல் பாகம், 2006, பக்: 153.
7.மருதன் இளநாகனார் அகநானூறு- 77ஆம் பாடல், வரி: 7, 8.
8.நா. வானமாமலை, இந்தியத்தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும், அலைகள் வெளியீட்டகம், 2009, பக்: 55-61.
9. “ “ பக்; 68-70.
10. “ “ பக்: 72-75.
11.இந்தியாவில் மெய்யியல், மிருணாள் காந்தி காங்கோபாத்யாயா, தமிழில் சா. ஜெயராஜ், NCBH, டிசம்பர்-2011, பக்: 68.
12.நா. வானமாமலை, இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும், அலைகள் வெளியீட்டகம், 2009, பக்:76-78.
13. “ “ பக்: 79-86.
14. “ “ பக்: 79-111.
15. “ “ பக்:168.
16. “ “ பக்:111.
- கணியன் பாலன், ஈரோடு