tn school 432ஐம்பதுகளில் தமிழ்வழிக் கல்வியின் முன்னேற்றம்

சென்னை மாகாணத்திற்கு உட்பட்டிருந்த பள்ளிகளில் தமிழ், தெலுங்கு போன்ற மாகாண மொழிவழியாகப் பயிற்றுவிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை 1948 முதல் 1950 வரையிலான காலப் பகுதிகளில் குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்குக் கூடியது.tn schools

15-6-1946 ஜூன் 15இல் ஆங்கிலம் இரண்டாவது மொழி, வட்டார மொழி முதல் மொழி என்கிற குறிப்பாணையை அரசு வெளியிட்டது. இதன் பலனாக, 1948இல் 626 பள்ளிகளில் 527 பள்ளிகளும், 1949இல் 693 பள்ளிகளும், 1950இல் 769 பள்ளிகளும் எஸ்.எஸ்.எல்.சி. வரை தாய்மொழியிலேயே கற்பித்தன. ஆங்கிலப் பாடம் ஆறாம் வகுப்பிலிருந்து நடத்தப்பட்டது.

தாய்மொழிவழிக் கல்வியின் நிலைபற்றி அறிய அரசு அமைத்த கமிட்டி (1956) தாய்மொழிவழிக் கல்விக்கு மாறியதில் எந்தச் சிரமமும் இல்லை. தாய்மொழிவழிக் கல்வி சோதனைக் கட்டத்தைத் தாண்டி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. மாணவர்களும் தங்கள் கருத்துக்களைத் தாய்மொழியில் திறம்படத் தெரிவிக்கின்றனர் என்று குறிக்கப்பட்டது.

1956இல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாறியது வெற்றி பெற்றது. முழுமையுற்றது. ஆனால், அதன்பின் காட்சிமாறியது. ஆங்கிலோ - இந்தியப் பள்ளிகள், மத்திய அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் பல்கிப் பெருகவே, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக ஆங்கிலம் முதன்மை பெறத்தொடங்கியது. அதன் பயனாக, 1968இல் அரசு அறிவித்த தமிழ் பயிற்றுமொழிக் கொள்கை பலத்த எதிர்ப்புக்கு ஆளானது. பயிற்றுமொழி அரசியலாக்கப்பட்டது.

இதற்கிடையில் 1960களில் கல்லூரிகளில் தமிழைப் பயிற்றுமொழியாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1960 - 61இல் கோவை அரசினர் கல்லூரியில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது. 1966 - 67இல் புதுமுக வகுப்பிலும் (எல்லாக் கல்லூரிகளிலும் ஒரு பிரிவு) 67 - 68 பி.எஸ்ஸி. வகுப்பிலும் சோதனை நடந்தது. இதற்கு முன்பே, 1948இல் இண்டர்மீடியட் வகுப்பில் திருச்சி நேஷனல் கல்லூரி, கோவை, சேலம் அரசினர் கல்லூரிகளில் தமிழ் பயிற்றுமொழியாக இருந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் ஏறத்தாழ இதே காலகட்டத்தில் அறிவியல் பாடங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மாநாட்டுத் தீர்மானம்

இதன் பிறகு 1950, மே மாதம் கோவை நகரில் பைந்தமிழ் மாநாடு நடைபெற்றதில் தமிழ்நாட்டில் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக அமைந்திருப்பது அவசியமாகையால் அதை அனுசரித்து பாடத் திட்டத்தை அமைக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திய தீர்மானத்தை அவினாசிலிங்கமும், கி.வா. ஜகந்நாதனும் முன்மொழிந்தனர் என்பதும் இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது.

1950இல் மாதவராவைக் கல்வியமைச்சராகக் கொண்டபோது பிறப்பிக்கப்பட்ட ஆணையிலும் 6 ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை இரண்டாவது மொழி ஆங்கிலம் கட்டாயம். மூன்றாம்மொழி இந்தி கட்டாயம். முதல் மொழியாக இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்று அது தமிழாக இருக்கலாம். இல்லாமலும் போகலாம் என்று கூறுகிறது. இதிலும் தமிழ் கட்டாயம் என்கிற நிலை உருவாகவில்லை. எவ்வாறு என்றால் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, குஜராத்தி, சமஸ்கிருதம், அரபி, பெர்சியன், பிரெஞ்சு, இலத்தீன், ஜெர்மன் ஆகிய மொழிகளுள் ஏதேனும் ஒன்றினைப் பியிற்சி மொழியாகக் கொள்ளலாம் என்று இவ்வறிக்கை கூறியது. இவ்வறிக்கை தமிழின்றி உயர்நிலைப் பள்ளி படிக்க வழி வகுத்தது.

1952, ஜுலை 25 வரவு செலவுத் திட்ட அறிக்கை விவாதத்தில் கலந்து கொண்ட முதல்வர் ராஜாஜி அரசாங்க நடவடிக்கை திருச்சி மாவட்டத்தில் பரிட்சார்த்தமாகத் தமிழில் நடத்தி வருவது உண்மைதான். ஆனால், அதை விரிவுபடுத்த விரும்பவில்லை என்று கூறினார். மற்றைய இடங்களில் ஆங்கிலத்தில் நடப்பது அறிந்து வி.ஆர்.கிருஷ்ண அய்யர் “ஆங்கிலேயர்களை விரட்டிய பின்பும் தொடர்ந்து அவர்கள் விட்டுச் சென்ற மொழியைப் பயன்படுத்துவது மிகவும் அவமானத்தைத் தரக்கூடிய ஒன்றாகும்” என்றார். இதைத் தொடர்ந்து கருத்திருமன் பேசியது: (4.12.52)

“ஆங்கிலப் பொதுப் பாஷையை வைத்துக் கொண்டு நாம் சுதந்திரப் போராட்டத்தைக் கூட்டாக நடத்த முடிந்தது... ஆகையினாலே, ஒருவரை ஒருவர் உணர்ந்து கொள்வதற்கு வசதியளித்த பொதுமொழி ஆங்கிலத்தை நாம் ஒழிக்க முயற்சி செய்யக்கூடாது” என்றார்.

கருத்திருமனுக்குப் பின் பேசிய டி.எம்.நாராயணசாமிப் பிள்ளை, “தமிழுக்கு எதிர்காலத்தில் ஓர் உயர்வையோ, மேம்பாட்டையோ, தரத்தையோ தரவேண்டுமானால் ஆங்கிலம் இருந்தே தீரவேண்டும்... ஆங்கிலத்தின் துணையில்லாமல் ஒருநாளும் தமிழ் குறைவின்றி மேன்மையடைய முடியாது” என்று கூறினார்.

“கல்லூரிகளும், பள்ளிகளிலும் ஆங்கிலமே தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமென்பதை ஆதரிக்கிறோம். இன்று மத்திய அரசில் ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. பதினைந்து ஆண்டுகள் கழித்து இந்தி புகுத்தப்பட வேண்டுமென்று சட்டம் இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி ஆட்சிமொழி ஆவதில் எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை” என்று ராஜா முத்தையா செட்டியார் பேசினார்.

இக்காலகட்டத்தில் இந்தியைக் கட்டாயமாக்க பள்ளிகளில் புகுத்த வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, சென்னை மாநிலத்தின் தீர்ப்பு வேறுவிதமாக இருந்தது. ஆங்கிலம் தொடர வேண்டுமென்ற ஆசையும், நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க இந்தியைக் கற்க வேண்டும் என்ற வற்புறுத்தலும், எங்கள் தாய்மொழி எழுச்சி பெற வேண்டும் என்ற எண்ணப் போக்கும் விடாது மோதிய காலகட்டம் இது.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு காமராசர் முதலமைச்சர் பதவி ஏற்றதும் தமிழுக்கு ஏற்றம் கொடுத்தார்.

சி.சுப்ரமணியம்-5ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம். காமராசரின் கல்வி அமைச்சரான சி.சுப்ரமணியம் ஆங்கிலத்தை 5ஆம் வகுப்பிலிருந்து மொழிப் பயிற்சிக்கான ஆணையைப் பிறப்பித்தார். எல்லாப் பள்ளிகளிலும் இந்தியைப் புகுத்தினார்.

இந்தித் திணிப்பு குறித்து ஆளுநர் உரையின்மீது (2.8.55) பி.அரங்கசாமி ரெட்டியார் பேசியதாவது: “சமீபத்தில் 2 வார காலமாகத் தென்னாட்டில் ஒரு புரட்சிகரமான செய்தி பரவி வந்தது. இந்தி மொழியை எதிர்ப்பதன் அறிகுறியாக 1.8.1955இல் தேசியக் கொடியை எரிப்பது எனத் திராவிடக் கழகத்தார் முடிவு செய்து ஒரு பெரிய கிளர்ச்சியைச் செய்து வந்தார்கள். 10, 15 நாட்கள் கிளர்ச்சி இருந்திருக்கிறது. இது பெருமைப்படக்கூடிய விஷயம் அல்ல. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் தமிழ்மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமானால், அதற்கு விரோதமான செயல்கள் இருக்கக் கூடாது. இப்பொழுது கார்டு, கவர் முதலியவைகளில் பூராவும் இந்தி மணியார்டர் பாரங்கள். பி.ஏ., படித்தவர்கள் கூட வாங்கிப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன... இந்தியைக் கட்டாயமாகப் போதித்து அதை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமென்ற ஏற்பாடு இல்லையென்று சொல்லுகிறார்களேயொழிய, தமிழ் ஆட்சிமொழி ஆக்குவதற்கு இப்போது எந்த விதி ஏற்பாடும் செய்யப்படவில்லை.”

இவ்வுரைக்கு அடுத்த நாள் (3.8.1955) ப.ஜீவானந்தம் பேசுகையில், “இந்த இராஜ்ஜியத்தின் ஆட்சிமொழி, இந்த இராஜ்ஜியத்தின் கல்லூரிகளில் இருக்க வேண்டிய போதனா மொழி. இதைப்பற்றி ஒரு வார்த்தைகூட கவர்னர் உரையில் குறிப்பிடாதது வருந்தத்தக்கது... கல்லூரிகளிலும் கூட ஆங்கிலம் இருந்த ஸ்தானத்தில் இந்தி போதனா மொழியாகத் திணிக்கக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. ஆகவேதான் உடனடியாக நமது இராஜ்ஜியக் கல்லூரிகளில் நம் நாட்டில் வழங்கும் தமிழ்மொழியைப் போதனா மொழியாக ஏற்படுத்த வேண்டும் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்” என்று உரையாற்றினார்.

இதனை ஒட்டி ப.ஜீவானந்தம் சட்ட சபையை விடுத்து பொது நிகழ்ச்சிகளிலும் இக்கருத்தை வலியுறுத்தினார்.

“தமிழ்நாட்டில் சென்னை சர்க்காரின் ஆட்சி மொழி தமிழ்மொழியாக இருக்க வேண்டும். சட்ட சபையில் தமிழ்மொழியே பேசவேண்டும். சர்க்கார் நிர்வாகம் அனைத்தும் போலீஸ் ஸ்டேசன் முதல் கச்சேரி வரை தமிழ் மொழியில் நடவடிக்கைகள் நடைபெற வேண்டும். நீதிமன்றங்களிலும் பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் விஞ்ஞானமும் தமிழ் மொழியிலேயே போதிக்கப்படவேண்டும். இது ‘ஸ்புட்னிக் காலம்’ என்பதை உணரவேண்டும். தமிழ் மொழியில் விஞ்ஞானத்தைப் பயிற்றுவிக்க முடியாது என்று சொல்லுகிறார்கள். முடியும் என்று சொல்கிறது கம்யூனிஸ்ட் கட்சி. ஸ்புட்னிக் ஆங்கிலத்தில் பயின்றவர்களால் கண்டுபிடிக்கப்பட்டதா? அவர்கள் தாய்மொழியின் மூலம் விஞ்ஞானத்தைப் பயின்று அல்லவா ஸ்புட்னிக்கைக் கண்டுபிடித்தார்கள்.

விஞ்ஞானத்தைத் தன் தாய் மொழியில் போதித்தால் இந்தக் கூட்டத்தில் உள்ள மாணவர்கள் வருங்காலத்தில் விஞ்ஞானிகளாக வரமாட்டார்கள் என்று கூரமுடியுமா?” என்று முழக்கமிட்டதும் இங்கு நினைவு கூரத்தக்கது (பொதுவுடைமை வளர்த்த தமிழ் சு.பொ.அகத்தியலிங்கம், பக்.21).

1953ஆம் ஆண்டு அன்றைய சென்னை ராஜதானியில் ஆந்திர மாகாணம் அமைப்பதற்கான மசோதாவின் மீது ம.பொ.சி பேசும் போதும் ஆட்சி மொழியைக் குறித்த அவசியம் வலியுறுத்தப்பட்டது.

“இந்தியாவுக்குக் கிடைத்த சுதந்திரம் சமுதாயத்தின் மேல்தளத்தில் இருப்பவர்களுக்கே பயன்படுகிறது. அடித்தளத்தில் இருப்பவர்கள் பயன்படுத்த முடியவில்லை. பொதுமக்கள் பேசுகின்ற மொழியை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி அமைய வேண்டுவது இன்றியமையாதது. அப்பொழுது தான் சமுதாயத்தின் அடித்தளத்தில் இருப்பவர்கள் மற்றவர்களோடு சமத்துவமாக வாழமுடியும்” என்று கூறினார்.

இங்கு நாம் நினைவில் நிறுத்த வேண்டியது 1953ஆம் ஆண்டிலே ஆந்திரமும் 1956இல் கருநாடகமும், கேரளமும், சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்தன என்பதாகும். ஆந்திரர்களும், கன்னடியர்களும், ஒரியா மொழி பேசுபவர்களும் தங்களுக்கென்ற தனி மாநிலமும், தங்கள் மொழி வழக்கில் வரவேண்டும் என்ற கோரிக்கைகள் கேட்ட வண்ணம் இருந்த நேரத்தில், தமிழர்கள் தங்களுக்கென தனியாக மாநிலமும், தங்களுடைய மொழியே பயன்படுத்தப்பட வேண்டுமென்ற வற்புறுத்தலும் இல்லாமலும் அமைதியாக இருந்தனர். இதன்பிறகு சில முக்கிய நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெற்றன.

 ஆளுநர் உரையின் மீது நடந்த விவாதத்திற்குப் பதிலளித்து நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் 1955, ஆகஸ்டு 5ஆம் நாள் பேசும்போது, “எங்களைப் பொறுத்த வரை வட்டார மொழிதான் பயிற்று மொழியாக இருக்க முடியும் என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துள்ளோம்,” என்றார். இதன் பிறகு அதே ஆண்டு செப்டம்பர் 29ஆம் நாள் ப.ஜீவானந்தம் பேசுகையில், “பிரதேச மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். நான் தமிழன். என்னுடைய மொழியே இந்த இராஜ்ஜியத்தில் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை... கல்விக் கூடங்களிலும், ஆட்சி மன்றத்திலும், நியாய மன்றத்திலும் நிருவாகத்துறையிலும், பிரதேச மொழியே விளங்க வேண்டும்... “கல்வியைப் பொறுத்த அளவில் பல படிகளிலும் தமிழ் மொழியே போதனா மொழியாக இருக்க வேண்டும்... சுயராஜ்ஜியம் கிடைத்த பிறகு ஆரம்பப் பாடசாலைகளில் நாம் தமிழையே போதனா மொழி ஆக்கிவிட்டோம். அதற்கு அடுத்தபடியாக உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழையே போதனா மொழி ஆக்கிவிட்டோம். தர்க்க ரீதியாகத் தொடர்ந்து தமிழையே கல்லூரிகளிலும் போதனா மொழியாக்குவதுதான் நியாயம்,” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய குமாரராஜா முத்தையா செட்டியார், “கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் ஆங்கிலமே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதை ஆதரிக்கிறேன். இன்று மத்திய அரசில் ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. பதினைந்து ஆண்டு முடிவில் இந்தி புகுத்தப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி ஆட்சி மொழி ஆவதில் எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை,” என்றார். இதனையே பி.ஜி.கருத்திருமனும் முழுமையாக ஆதரித்தார்.

இதன்பிறகு பி. ராமமூர்த்தி, “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டாமென்ற உணர்ச்சி மேலிட்டபோதே நம் நாட்டில் எந்தப் பிரதேசத்தை எடுத்துப் பார்த்தாலும் சரி, அந்தக் காலகட்டத்தில் மொழிப்பற்றும் கூடவே வளர்ந்து வந்திருக்கிறது... தமிழ்மொழி வளர்ச்சி அடைந்தபிறகு, அதைக்கொண்டு வரலாம் என்று சொல்வது எப்படி இருக்கிறது என்றால், நீந்திப் பழகியபிறகு தண்ணீரில் இறங்கினால் போதும் என்று சொல்வதுபோல் இருக்கிறது. நீந்திப் பழகிய பிறகு தண்ணீரில் இறங்க வேண்டும் என்று ஒருவன் இருந்தால், இவன் ஒருநாளும் நீந்தக் கற்றுக்கொள்ளப்போவதில்லை. அதைப்போல இருக்கிறது, தமிழ்மொழி வளர்ச்சி அடைந்தபிறகு அதைக் கொண்டுவரலாம் என்று சொல்வது... நம்முடைய இராஜ்ஜியத்தில் தமிழாகிய தேசிய மொழியே வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த மொழியில்தான் நம் நாட்டில் சகலவிதமான நடவடிக்கைகளும் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். போதனைகளும் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். போதனையையும் அதில்தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். தமிழ்மொழியில்தான் எல்லா நடவடிக்கைகளும் நடக்க வேண்டும் என்று அரசாங்கம் சொல்லிவிட்டால், அந்த மொழி வளர்ச்சி அடைய வசதி ஏற்பட்டுவிடும்... ஒரு மொழி வளர்ச்சி அடைய சந்தர்ப்பம் கொடுக்காமல் இருந்தால் அது எப்படி வளர்ச்சி அடைய முடியும்?” என்று உரையாற்றினார்.

அவர் மற்றோர் சமயம் பேசுகையில், “தமிழ் ஆட்சி மொழியாக அரசாங்கத் துறைகளில் தமிழில் போதிப்பது என்பதும் முக்கியமான பிரச்சனையாகும். நமது அரசாங்கம் தமிழ் மொழியில் ஆட்சி நடத்த வேண்டுமென்று ஏற்படும் போது போதனா முறையும் தமிழில் இருக்க வேண்டும்... பள்ளிகளில் ஆங்கிலம் பயின்றுவிட்டு, நிருவாகத்தில் வரும் போது, அது தமிழில் இருந்தால் வேலைசெய்ய முடியாமல் மிகப் பெரிய அளவில் திணறல் ஏற்படும். தமிழ் ஆட்சி மொழியாகி அது அமலில் சீக்கிரம் நடக்க வேண்டுமென்றால் இதற்குத் தகுந்தாற்போல், இன்றைக்குக் கல்விபோதனா முறையை மாற்றியமைக்க வேண்டுமென்று சொல்லிக் கொள்கிறேன்” என்று தமிழ்ப் பயிற்சிமொழி அவசியத்தை வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து எம். கல்யாணசுந்தரம் “ஆட்சிமொழி மசோதாவுடன் தமிழ்தான் நம் சர்வகலாசாலைகளில் போதனா மொழியாக இருக்க வேண்டும் என்ற பிரிவைச் சேர்த்திருந்தால்; நாம் எல்லாரும் இருகரங்களைக் கூப்பி இந்த மசோதாவை வரவேற்கக் கூடிய நிலையிலிருந்திருப்போம். காலக் கிரமத்தில் அதற்கு ஒரு சந்தர்ப்பம் வந்தே தீரும். அப்பொழுது ஓர் எதிர்ப்பும் இருக்க முடியாது” என்று முழக்கமிட்டார்.

இப்படியாக நடைபெற்ற நெடிய போராட்டப் பின்புலத்தில் 1956, டிசம்பர் 27 அன்று தமிழ் ஆட்சி மொழி மசோதாவினை சி.சுப்பிரமணியம் முன்மொழிந்தார். தமிழகத்தில் தமிழை ஆட்சி மொழியாக்கியதிலே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தி உண்டு. பிற்காலச் சோழர் ஆட்சி மறைந்த பின்னர் தமிழகத்தில் தோன்றிய நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்திலே தெலுங்கும் நவாபுகள் ஆட்சிக் காலத்திலே உருது - அரபி மொழிகளும் ஆட்சியிலே செல்வாக்குச் செலுத்தின. இரண்டாம் தரமான மொழியாகவே தமிழ் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆண்ட 200 ஆண்டு காலத்திலே ஆங்கிலம் ஒன்றே ஆட்சியில் துறைதோறும் ஆதிக்கம் செலுத்தியது. இப்படி பல நூறாண்டுக் காலம் ஆட்சித்துறையில் புறக்கணிக்கப்பட்டிருந்த தமிழ்மொழியானது தமிழகம் தனியரசு மாநிலமாக ஆன பின்னர்தான் திரும்பவும் ஆட்சி மொழியாக வரும் வாய்ப்பினை முதன் முதலாகப் பெற்றது. தமிழ் ஆட்சி மொழி மசோதாவை அமைச்சர் சி.சுப்பிரமணியம் பிரேரேபித்துத் தமிழில் பேசத் தொடங்கிய போது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆரவாரம் செய்து அதனை வரவேற்றனர் (ஏனென்றால் இதுவரை ஆங்கிலத்திலேயே சட்டமன்ற நடவடிக்கைகள் நடைபெற்றது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்). இதன் மீது நடைபெற்ற விவாதங்கள் உயிர்த் துடிப்புடன் உள்ளன. இதைப் பற்றி அமைச்சர் கூறுகையில் “ஐம்பது, அறுபது வருட முயற்சியின் பலன்” என்றார். இது குறித்து அவர் உரையாற்றும் போது “ஒரு பூ மலர்கிறது. அது மலர்கின்ற மலர்ச்சி நம் எல்லாருக்கும் மகிழ்வைக் கொடுக்கிறது. அம்மலர்ச்சி ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி அல்ல, செடி வளர்ந்து, அரும்பு விட்டு போதாகி அது மலர்கிறது. இது மலர்வதோடு நின்றுவிடுவதில்லை. அதில் காய் ஏற்பட்டு அது மக்களுக்கும் பயன்படுகிறது.

அதே மாதிரி தான் தமிழ் மலர்கிறது என்றால் அது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி அல்ல. நாட்டிலே இந்த ஐம்பது, அறுபது வருட காலமாக நடந்த நிகழ்ச்சியின் பலனாக இன்றைக்கு ஒரு செடியிலே ஒரு பூ மலர்கிறது” என்றார். (சு.பொ.அகத்தியலிங்கம், 2010:38)

விவாதத்தில் உரையாற்றிய ப. ஜீவானந்தம் “இன்று தமிழ் ஆட்கி மொழி ஆவது கல்லூரிகளில் தமிழ் போதனா மொழியாவதற்குள்ள ஒரு படியாகும். இந்த அபிப்பிராயத்தை நிதியமைச்சர் கலைச்சொற்கள் ஒப்படைப்பு விழாவில் வெளியிட்டார். தமிழ் அறிஞர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்துக் கலைச் சொற்களையும், பல்வேறு துறைகளில் உள்ள சொற்களையும் சேர்த்து ஓர் அகராதி வெளியிடவேண்டும். அவ்வாறு செய்வார்களாயின் எல்லாரும் ஒட்டிக் கொள்ளக்கூடிய தமிழை, அதிகாரப்பூர்வமான சொற்களைக் கொண்டு வந்து தமிழ் ஆட்சி மொழியாவதை நன்கு வளரச் செய்யலாம் என்றார்.

இவ்விவாதத்தில் கே.வினாயகம் அங்கம் வகித்தார். அவர் தமிழ் ஆட்சிமொழி மசோதாவை மனநிறைவுடன் வரவேற்றாரென்றாலும், ஆட்சிமொழியாக இருந்துவரும் ஆங்கிலத்தை அகற்றுவதற்கு ஒரு கால வரம்பு ஏற்படும் விதியை மசோதாவில் சேர்க்க வேண்டும் என்று ஒரு திருத்தம் கொடுத்தார். தமிழை ஆட்சி மொழியாக்கி முடிப்பதற்கான கால வரம்பை நிர்வாக ரீதியில் அரசே ஏற்படுத்தும் என்று சட்ட அமைச்சர் சி.சுப்பிரமணியம் உறுதி கூறினார். அதன் பின்னர் கே.வினாயகம் தமது திருத்தத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

இந்த விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் சி.சுப்பிரமணியம், “தமிழ்ச் சொற்களை எப்படி அமைக்க வேண்டும்? என்பதில் ஒருசில அபிப்பிராய பேதங்கள் காணப்பட்டன. இந்த அபிப்பிராய பேதங்களைக் கவனித்துக் கொண்டிருந்தால் நாம் முன்னேற்றம் அடைய முடியாது. ப. ஜீவானந்தம் அவர்கள் சொன்ன மாதிரி கரடுமுரடான கல்லை உருட்டிவிட்டால் அது எப்படி கடைசியில் நல்ல உருளைக் கல்லாக மாறிவிடுமோ அதுபோல பழக்க வழக்கத்தில் இது வந்துவிடும் என்று நினைக்கிறேன்,” என்று கூறினார்.

விவாதத்தை முடித்து வைத்து அமைச்சர் திரு.சி.சுப்பிரமணியம் பேசியது வருமாறு: “கனம் உதவி சபாநாயகர் அவர்களே! சட்ட சபையின் சார்பாக, தமிழ்மக்கள் சார்பாக இந்த மசோதாவைத் தமிழன்னையின் மலரடியில் சமர்ப்பிக்கிறேன். தமிழனாகப் பிறந்த பிறப்பின் பயனை இன்று பெற்றுவிட்டதாகவே கருதுகிறேன். இந்த மசோதாவை இங்குப் பிரேரேபித்து இதைச் சட்டமாக்குவதற்கு நான் கருவியாக அமைந்தது பற்றி உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.”

“அந்தப் பெருமை எனக்கு ஏற்பட்டது என்னுடைய தகுதியினால் அல்ல என்பதை உணர்கிறேன். ஏதோ நான் செய்த தவப்பயன் காரணமாக அந்தப் பெருமை எனக்குக் கிடைத்தது என்று கருதுகிறேன்.”

“தமிழிலே பெரும் பாண்டித்தியம் பெற்றவர்களெல்லாம் இருக்க; எனக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தது தனிப்பெருமை. அதைப் பற்றி உண்மையிலேயே எண்ணியெண்ணி மகிழ்கின்றேன்.” “இன்றைக்கு உயிர்நீத்த தமிழ்ப் பெரியார்களின் ஆவிகள் எல்லாம் இதனைப் பார்க்கச் சக்தி பெற்றிருக்குமானால் இன்று நமது சட்டசபையின் மேலிருந்து ஆரவாரம் செய்து கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அப்பேர்ப்பட்ட ஒரு நல்ல நிகழ்ச்சியிலே பங்கு எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. நம் எல்லோருக்கும் பெரு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஆகையால் பாரதியார் சொன்ன வாக்குடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன்.

“பாரதியார், ‘வாழிய செந்தமிழ்’ என்று சொன்னார். ‘வாழ்க நற்றமிழர்’ என்றும் சொன்னார். அந்த வாழ்வு ஏதோ பிரிந்த வாழ்வு என்று அவர் கருதவில்லை. வாழிய பாரத மணித்திருநாடு என்றும் சொன்னார். அப்பேர்ப்பட்ட வாழ்வு எங்கெங்கும் தங்க வேண்டும். வாழ்க தமிழ், வாழ்க தமிழ், வாழ்க தமிழ்” (பலத்த கைதட்டல்).

அவைக்குத் தலைமை வகித்த பி.பக்தவச்சலு நாயுடு வழக்கமாக ஆங்கிலத்தில் பேசுபவரென்றும் தமிழ் ஆட்சி மொழி மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தத் தொடங்கிய போது வழக்கத்திற்கு மாறாக, தமிழில் பேசினார். இந்த மாறுதலை அவையினர் ஆரவாரம் செய்து வரவேற்றனர். மசோதா எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டவுடன் ‘வாழ்க தமிழ்’ ‘வாழ்க தமிழ்’ என்ற வாழ்த்தொலி அவையின் மண்டபம் அதிர மும்முறை எழுந்தது. இது சட்டமன்ற மரபு காணாததாகும் (விடுதலைக்குப் பின் தமிழ் வளர்ந்த வரலாறு, ம.பொ.சி. பக்.72-73).

தமிழ் ஆட்சி மொழி மசோதா ஆளுநர் இசைவுடன் 1957, ஜனவரி 19 அன்று நிறைவேற்றப்பட்டு, ஜனவரி, 23 அன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது..

- டாக்டர். சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.

Pin It