தொடர்புடைய படைப்புகள்

தமிழ்நாட்டில் சமூக உணர்வோடு போராடுகிற சில வழக்குரைஞர்களை கொலைகாரர்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் நீதிபதிகளே சித்தரிக்கும்போக்கு வேதனையளிக்கிறது. ஓர் உண்மையை எல்லோரும் மறந்திருக்க முடியாது. சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை கடுமையான தாக்குதல் நடத்தியது. வழக்குரைஞர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடி ஒளிந்தனர். அவர்கள் ஒளிந்த இடம் நீதிபதிகளின் அறையாகவும் இருந்தது. அங்கு அந்நேரத்தில் நீதிபதிகளுமிருந்தார்கள். காவலரின் தடிகள் நீதிபதிகளை நோக்கிப் பாய்ந்தது. உயிருக்குப் பயந்து ஒளிய வந்த வழக்குரைஞர்கள் நீதிபதிகளைக் காப்பாற்றத் துணிந்தார்கள். தடியடிகளை தாங்கள் பெற்றுக்கொண்டு நீதிபதிகளுக்கு கவசமானார்கள்.

high court chennaiஇதுதான் தமிழக முற்போக்கு வழக்குரைஞர்களின் பாத்திரம். காவல்துறையின் கொடுந்தாக்குதலிலிருந்து நீதிபதிகளைக் காத்த வழக்குரைஞர்களையா நீதிபதிகள் கொலைக்காரர்களாக சித்தரிக்கிறார்கள்?

வழக்குரைஞர்கள் குடும்பத்தோடு போராடுவது குற்றமா? நமது அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து நமக்கு எல்லோருக்கும் மட்டமான கருத்துதானிருக்கும். அங்கே முஷாரஃப் ஆட்சியிலிருக்கும்போது நீதிமன்றத்திற்கும், ஆட்சிமன்றத்திற்கும் இடையே கடுமையான மோதல் உருவானது. முஷாரஃப் தனது சர்வாதிகாரத்தின்மூலம் தலைமை நீதிபதியை பதவியிறக்கம் செய்தார். அந்த நாட்டின் வழக்குரைஞர்கள் வீதியிலிறங்கினர். அவர்களோடு சனநாயக சக்திகள் அனைவரும் கைகோர்த்தனர். வழக்குரைஞர்களின் குடும்பங்களும் களத்தில் நின்றனர். விளைவு முஷாரஃப் விரட்டப்பட்டார். நீதிபதி மீண்டும் பணியிலமர்த்தப்பட்டார். சனநாயகம் காப்பாற்றப்பட்டது.

அங்கு சனநாயகம் காப்பாற்றப்பட்டதற்கு வழக்கறிஞர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் பங்கு உண்டு. சென்னையில் குடும்பத்தோடு வந்து மிரட்டுவதாக சொல்லப்படுகிறதே அப்படி குடும்பமாக வந்த கணவனும், மனைவியும் வழக்குரைர்கள்தான். தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டுமெனத் தொடர்ந்துப் போராடிவரும் தோழர்கள் பகத்சிங்கும், பாரதியும்தான் அவர்கள்.

"எல்லோரும் வீட்டுக்குள்ளேயே போராட வேண்டும். யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது!"

என்ன மனநிலை இது? சாலை மறியல் கூடாது. வேலைநிறுத்தம் கூடாது. முற்றுகை கூடாது. அப்புறம் எப்படித்தான் போராடுவது? எடுத்தவுடனேயே யாரும் இந்த வடிவங்களை கையில் எடுப்பதில்லை என்பதை எல்லோரும் மறைக்கிறார்கள்.

தமிழை தமிழ்நாட்டில் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென இந்த வழக்குரைஞர்கள் யாரும் கையில் கத்தியோடு நீதிபதிகள் முன்னால் பாயவில்லை. அவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் போராடுகிறார்கள். கருத்தரங்கம், கோரிக்கைப் பிரச்சாரம் என்று தொடங்கிய போராட்டம், 2013-இல் சாகும்வரை உண்ணாவிரதமென வலுத்தது. உண்மையாய் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்திய இவர்களில் சிலர் இன்னும் தீராத உடல் பிரச்சினைகளை சுமந்து திரிகிறார்கள்.

நீதிபதிகளையும், அரசையும் திரும்பிப் பார்க்க வைக்க இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்தார்கள். அதன்பின்தான் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி தமிழில் வாதாட அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்தார். தமிழக சட்டசபையும் வழக்கம்போல் தீர்மானம் நிறைவேற்றியது.

பரிந்துரையும், தீர்மானமும் என்னவாயிற்று?

பரிந்துரைப்பதோடும், தீர்மானம் நிறைவேற்றுவதோடும் கடமை முடிந்துவிடுகிறதா? அப்படித்தான் சொல்கிறார் தற்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. விசயம் இப்போது மத்திய சட்ட அமைச்சகத்திடமும், உச்சநீதிமன்றம் வசமும் இருப்பதாக கூறுகிறார்.

இதன் பொருள் என்ன? என்னை தொந்தரவு செய்யாதீர்கள், அங்குபோய் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதுதானே! இது எப்படி சரி? கல்வியில் ஒரு பிரச்சினை என்றால் மாணவர்கள் ஆசிரியரிடம் சொல்வார்கள். ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் சொல்வார். தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரி மூலமும், அதிகாரி கல்வி அமைச்சகம் மூலமும் பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேண்டும். அதற்குதானே நிர்வாக அலகுகள்?

தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டிய கடமை இப்போது அதைப் பரிந்துரைத்த நீதிபதி மற்றும் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு ஆகியவற்றின் கைகளில்தானே உள்ளது? அதுகுறித்து உச்ச நீதிமன்றத்திலும், மத்திய சட்ட அமைச்சகத்திலும் என்ன செயல்முறைகள் நடந்து கொண்டிருக்கிறது? எவ்வளவு காலமாகும்? என்பது குறித்து முறையான தகவல் அளிக்க வேண்டியது இவர்களின் பொறுப்புதானே? அதை ஏன் செய்யவில்லை என்பதுதான் இப்போதையப் போராட்டம். அதை செய்யத் தவறிய உயர் நீதிமன்றத்தையும், தமிழக அரசையும் கண்டிப்பதும், போராடுவதும் நியாயமானதே.

நீதிபதிகள் மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கும் புனிதமானவர்களா? சனநாயகத்திற்கானவர்களா?

நீதிபதிகளிடம் எந்த கோரிக்கையும் வைக்கக்கூடாது என்றோ, கோரிக்கையின் பொருட்டு நீதிபதிகளை யாரும் சந்திக்கக்கூடாது என்றோ எந்த சட்டமும் இல்லை. ஒரு நீதிபதியின் கீழ்வரும் வழக்கில் வாதாடுகின்ற வழக்குரைஞர்கள் அந்த வழக்கு நடக்கும் காலகட்டத்தில் அந்த நீதிபதியை சந்திக்கக்கூடாது. அப்படியான சந்திப்புகள் அந்த வழக்கின் நடைமுறையில் நம்பகத்தன்மையை இழக்கச் செய்துவிடும் என்பதால் இது நடைமுறையாக உள்ளது.

அதேநேரத்தில் நீதிபதிகள் வழக்குரைஞர்களோடு நெருக்கமாக இருப்பதன் மூலமே சமூகத்தோடு நெருக்கமாக இருக்க முடியும் என்பதுதான் உண்மை. சனநாயகத்தின் ஆட்சியை நாம் சட்டத்தின் ஆட்சியென்றே கூறுகிறோம். ஏனென்றால், சமூக நடவடிக்கைகள் (பேச்சுரிமை, கல்வி - வேலைவாய்ப்புரிமை, போராட்ட உரிமை, உயிர்வாழும் உரிமையென) அனைத்தையும் ஒழுங்குப்படுத்துகிற ஆட்சியென்பது அதற்கான சட்டங்களின் மூலம்தான் ஒழுங்குப்படுத்துகிறது. அப்படியான சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகிறதா? நடைமுறைப் படுத்தப்படுகிற சட்டங்களில் மாற்றங்கள் தேவைப்படுகிறதா? என்பதையெல்லாம் கண்காணிக்கின்ற கடமை நீதிமன்றங்களுக்கே உள்ளது. இதில் நீதிமன்றம் என்பது நீதிபதிகள் மட்டுமல்ல. வழக்குரைஞர்களும் சேர்ந்துதான்.

இப்படியான சனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதற்கே நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் இணைந்த பல்வேறு குழுக்கள் அவசியப்படுகின்றன. சாதிவெறி, மதவெறி, லாபவெறி என அனைத்து சமூகவிரோத சக்திகளும் இந்தியாவை முழு சனநாயக நாடாக மாறவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் நீதிமன்றத்தின் கடமை விரிந்தளவில் செயல்பட வேண்டியதாக இருக்கிறது. இதுகுறித்து நீதிபதிகள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

நீதிபதிகள் தாமாக முன்வந்து சில வழக்குகளை நடத்தலாம். சமூகத்தை நிலைகுலைய வைக்கிற விசயங்களில் தலையிடலாம். நம் நாட்டில் அப்படிப் பல பிரச்சினைகள் தலைவிரித்தாடுகிறது. சாதி ஆணவக்கொலைகள், அளவில்லா ஊழல், அதிகார துஷ்பிரயோகம், மாநிலங்களுக்கிடையில் பல தகராறுகள், அண்டை நாடு நம் மீனவர்களை தாக்கிக் கொல்வது, இவையனைத்தும் அரசியல் லாபங்களுக்காக தொடர விடுவதென பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றில் நீதிமன்றம் தலையிட வேண்டிய தேவையுள்ளது. அப்படி தலையிடும்போது சனநாயகத்திற்கான வழக்குரைஞர்கள் நீதிபதிகளோடு இணைந்து நிற்பார்கள். இதுதான் நீதிமன்ற மாண்பைக் காப்பாற்றுவது என்பதாகும். இருவரும் சேர்ந்துதான் நீதிமன்ற மாண்பைக் காப்பாற்ற முடியும்.

அப்படி சேர்ந்து செயல்படுவதற்கான குழுக்கள் உருவாக வேண்டிய நிலையில் நீதிபதிகள் வழக்குரைஞர்களிடமிருந்து பாதுகாப்பு, அதுவும் சனநாயக கடமையாற்றும் வழக்குரைஞர்களிடமிருந்து பாதுகாப்பு கோருவது பொறுப்பற்றதாகும். சமூக நோக்கத்திற்காக போராடுவதை சட்டத்தின்பேரால் சமூகவிரோத நடவடிக்கையாக்கும் முயற்சியாகும்.

நீதிபதிகள் ஏன் போராட்டங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்? அவர்கள் மக்களின்மீது கடுமையான தாக்குதல்களை நடத்துகிற அரசின் அங்கமாக இருக்கிறார்கள். மொழிக்கொள்கை, தொழில்கொள்கை எல்லாவற்றிலும் அரசின் நடவடிக்கை சரியென்று ஒத்துப் போகிறார்கள். எந்த மாற்றமும் தேவையில்லையென நினைக்கிறார்கள். மாற்றத்தைக் கோரும் எல்லாவற்றையும் நசுக்க நினைக்கிறார்கள். அது வழக்குரைஞர்களாக இருந்தாலும் சரியென நினைக்கிறார்கள். நாங்கள்தான் நீதிமன்றம் என ஏகபோக உரிமை கொண்டாடுகிறார்கள். அந்த ஏகபோகத்தை நிலைநாட்ட மத்திய தொழில் பாதுகாப்புப்படை எனும் பங்காளியை அழைக்கிறார்கள்.

இப்போது ஆட்டம் போராடுகிற வழக்குரைஞர்களிடம் மட்டுமில்லை; சனநாயகம் வேண்டுகிற எல்லோரிடமும்தான். விரைவாய் முடிவெடுப்போம்!

- திருப்பூர் குணா

Comments

2 comments

2
SARATHI VP
WELL DONE!
natarajan
பார் கவுன்சில் உறுப்பினர்கள்
மற்றும் வழக்குரைஞர்களின் சிந்தனைக்கு
குறிப்பு : இன்று சென்னையில் பார் கவுன்சில் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி சில முக்கிய தீர்மானங்கள் எடுக்க இருக்கிறார்கள். அதை ஒட்டி, சென்னை வழக்குரைஞர்களும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களும் கீழ்க்கண்ட பிரசுரத்தை பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு விநியோகித்து கொண்டிருக்கிறார்கள். படியுங்கள். பரவலாக கொண்டு செல்லுங்கள்! நாம் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டிய தருணமிது!
*****
ஒரு அசாதாரணமான சூழல் தமிழக நீதித்துறையில் நிலவுகிறது. இதை பேசிச்சரி செய்யும் பொறுப்பில் உள்ள பார் கவுன்சில், அவ்வாறு செய்யாமல் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்துவது போல வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை என்று நீதிபதிகளின் ஆணையை அமல்படுத்தும் ஊழியர் போல நடந்து கொள்வது சரியா?
மதுரை வழக்குரைஞர் சங்கத் தலைவர் மற்றும் செயலருக்கு எதிரான ஒரு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. பயங்கரவாதக் குற்றம் இழைத்த குற்றவாளியாக இருந்தாலும் சட்டபூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றியே அவரைத் தண்டிக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் மேற்கூறிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னர் அனைத்து நீதிபதிகளின் கூட்டம் (Full Court Meeting) நடத்தப்பட்டிருக்கிறது. அங்கே இந்த வழக்கு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? இதை விடப் பெரிய நீதிமன்ற அவமதிப்பு வேறு உள்ளதா? இந்த முறைகேட்டை பார் கவுன்சில் ஆதரிக்கிறதா?
உயர் நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை அனைத்தும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் காவல்துறைக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எதிராக வழங்கப்பட்டவை. அவற்றை விசாரிப்பதற்கோ நடவடிக்கை எடுப்பதற்கோ உயர்நீதிமன்றம் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. போலீசும் அதிகாரிகளும் நீதிமன்ற உத்தரவுகளை அவமதிப்பதையும், அதன் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதையும் மிகவும் சகஜமாக எடுத்துக் கொள்ளும் நீதியரசர்கள், தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டவுடனே அவ்வாறு கூறியவர்களை தண்டிக்கும் பொருட்டு, அவர்களுக்கு எதிரான வழக்கை உடனே எடுத்து விசாரிக்கிறார்கள். இது அப்பட்டமான முறைகேடு இல்லையா?
மதுரை மாவட்ட வழக்குரைஞர் சங்கத் தலைவர் மற்றும் செயலருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மதுரையிலிருந்து வேண்டுமென்றே சென்னைக்கு மாற்றப்பட்டது. விசாரணைக்கு முதல்நாள் அது திரைமறைவு விசாரணை என்று திடீரென்று அறிவிக்கப்பட்டது. பிறகு திடீரென்று அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. 16 ஆம் தேதியன்று சீருடை அணிந்த மற்றும் அணியாத போலீசார் நீதிமன்றத் தாழ்வாரத்தை மறித்துக் கொண்டனர். குற்றம் சாட்டப்பட்டவருடைய வழக்குரைஞரான திரு.என்.ஜி.ஆர் பிரசாத் உள்ளிட்டோர் இதனைக் கடுமையாகச் சாடியிருக்கின்றனர். வழக்குரைஞரே அனுமதிக்கப்படாமல், குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடத்தப்பட்ட அந்த விசாரணை முறையான விசாரணைதான் என்று பார் கவுன்சில் கருதுகிறதா?
தலைக்கவசத் தீர்ப்பு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்காக அழைத்து, குற்றம் சாட்டப்பட்ட ஏ.கே.ராமசாமியிடம், 10 ஆம் தேதியன்று மதுரையில் நடந்த ஊழல் எதிர்ப்பு பேரணி பற்றி நீதிபதிகள் விசாரித்திருக்கிறார்கள். மற்றெல்லா வழக்குரைஞர்களும் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், ஒரு சில வழக்குரைஞர்கள் மட்டும் நீதிபதிகளால் உள்ளே அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த அவமதிப்பு வழக்கில் இம்பிளீட் செய்யவும், திரு.ஏ.கே.ராமசாமியை விசாரணை செய்யவும் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். 75 வயது முதியவரான திரு.ராமசாமியை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நிற்க வைத்தே விசாரித்திருக்கிறார்கள். வழக்குரைஞர்களை கிரிமினல்களை விடவும் கீழாக நடத்துகின்ற நீதிபதிகளின் இந்த நடவடிக்கைகள் குறித்து பார் கவுன்சில் ஒரு வார்த்தை கூடப் பேசாதது ஏன்?
நீதியரசர் கர்ணன், தலைமை நீதிபதிக்கு எதிராக தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணை அது. இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இல்லாத அந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருக்க வேண்டியது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நடத்தைதான். மாறாக வழக்கிற்கு எந்த வித தொடர்பும் இல்லாமல் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் தூற்றப்பட்டது குறித்து பார் கவுன்சில் அக்கறை கொள்ளாதது ஏன்?
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அச்சத்தோடுதான் நீதி வழங்கிக் கொண்டிருப்பதாக தத்து, டெல்லியிலிருந்து திடீரென்று அறிவிக்கிறாரே, இப்படி ஒரு சூழல் இருப்பதாக தலைமை நீதிபதி கவுல், இதுநாள்வரை பார் கவுன்சிலுக்கு ஏன் புகார் அனுப்பவில்லை? இந்த அபாண்டமான குற்றச்சாட்டு பற்றி பார் கவுன்சிலின் நிலை என்ன?
செப்டம்பர் 14 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு தானே முன்வந்து எடுத்துக்கொண்ட ரிட் மனுவில், ஒரு காவல்துறை உதவி ஆணையர் தெரிவித்துள்ள சில கருத்துகளையே, வழக்குரைஞர்கள் மீதான நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாகச் சித்தரித்துள்ளது. அம்பேத்கர் சிலையின் கீழ் அமர்ந்து அசைவ உணவு சாப்பிடுவது கூட வழக்குரைஞர்களின் குற்றமாக அதில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பான்மை தமிழ் மக்களுக்கு எதிரான சாதிய காழ்ப்புணர்ச்சியும், தீண்டாமை வெறியும் கொண்ட இக்கருத்தைக் கண்டித்து பார் கவுன்சில் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மவுனம் காப்பது ஏன்?
தற்போது தமிழ் வழக்காடு மொழி கோரிக்கைக்காக தலைமை நீதிபதியின் அறைக்குள் போராட்டம் நடத்திய வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருப்பதைப் போல, உதவி ஆணையர் பட்டியலிட்டுள்ள 14 குற்றச்சாட்டுகளுக்காகவும்
வழக்குரைஞர்களின் மீது வழக்கு பதிவு செய்திருக்கலாமே! அவ்வாறின்றி, ஒரு காவல்துறை உதவி ஆணையரின் கருத்துகளை அவருடைய கீழ்நிலைக் காவலர் வழி மொழிவது போல, உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு வழிமொழிவதும், இதே கண்ணோட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் சென்னை வழக்குரைஞர்களுக்கு எதிராக கருத்துரைக்கப்படுவதும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக பார் கவுன்சிலுக்குத் தெரியவில்லையா?
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சாதி ரீதியாகச் செயல்படுவதாகவும், வளாகத்துக்குள் சாதி ஊர்வலம் போவதாகவும் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய் என்பது பார் கவுன்சிலுக்கு தெரியாதா? உண்மையில் நீதிமன்ற வளாகத்துக்குள் சாதி, மத சார்புகளைக் கொண்டு வருபவர்கள் நீதிபதிகள்தான். கடந்த 16 ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிபதிகள் தூண்டுதலின் பேரில்தான் சில வழக்குரைஞர்கள் சாதி ரீதியாக வந்து கலகம் செய்து மோதலை உருவாக்க முயன்றனர். அவர்களில் சிலர் கத்தியும் வைத்திருந்தனர். சென்னை, மதுரை வழக்குரைஞர்கள் இந்த ஆத்திரமூட்டலுக்கு பலியாகாமல் அமைதி காத்தனர் என்பதே உண்மை.
நீதிபதிகளின் ஊழலை எதிர்த்துப் பேரணி நடத்தியதன் காரணமாக, மதுரை வழக்குரைஞர் சங்கத்தை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பப் பட்டிருக்கிறது. தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பு நடத்துவதுதான் இதற்கு காரணம் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதை எந்தவொரு வழக்குரைஞரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பார் கவுன்சில் இதனை ஏற்றுக் கொள்கிறதா?
நீதித்துறை ஊழல் என்ற பிரச்சினை பார் கவுன்சிலின் அக்கறைக்கு உரியது இல்லையா? கிரானைட், தாதுமணல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், எந்த நீதிபதி வழங்கிய எந்தத் தீர்ப்பு முறைகேடானது என்று வழக்குரைஞர்கள் குறிப்பாக குற்றம் சாட்டி ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். கிரானைட் கொள்ளை தொடர்பான வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளையும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தனது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள்பட முன்னாள் நீதியரசர் சந்துரு, ஒரு நாளேட்டில் கட்டுரையே எழுதியிருக்கிறார். இருந்தும் இது குறித்து ஒரு உள்ளக விசாரணைக்கு தலைமை நீதிபதி உத்தரவிடவில்லை. இவை குறித்த பார் கவுன்சிலின் கருத்து என்ன?
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜு அவர்கள், தற்போதைய தலைமை நீதிபதி தத்துவுக்கு எதிராக ஆதாரபூர்வமாக ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருக்கிறார். தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் நேர்மையோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாத அவர், தமிழக வழக்குரைஞர்களின் மாண்பு குறித்து பழித்துப் பேசுவதை பார் கவுன்சில் ஏற்றுக் கொள்கிறதா?
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினரும் அதிமுக வழக்குரைஞர்களும் நடத்திய அவமதிப்புகள் எழுதி மாளாதவை. இது தொடர்பாக பார் கவுன்சில் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை விமரிசிப்பவர்கள் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்தார். இப்படி ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதையும், தலைவர் பதவியைத் தனது தொழிலை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்வதையும் கவுன்சில் ஆதரிக்கிறதா?
வழக்குரைஞர்களின் வாக்குகளைப் பெற்று பார் கவுன்சில் பதவியில் அமர்ந்திருக்கிறீர்கள். இதன் காரணமாக வழக்குரைஞர்களின் தவறுகளை நீங்கள் நியாயப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கு எதிராக நீதிபதிகள் கூறும் விசயங்களை அதிகபட்சம் போனால் தவறுகள் என்று மட்டுமே வரையறுக்க முடியும். ஆனால் நீதிபதிகள் செய்து கொண்டிருப்பது அதிகார துஷ்பிரயோகம். இன்று வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நீங்கள் கூடியிருக்கிறீர்கள்.வழக்குரைஞர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி விவாதிக்க எப்போதாவது நீங்கள் வழக்குரைஞர்களைக் கூட்டியதுண்டா? பார் கவுன்சில் என்பது வழக்குரைஞர்களின் பிரதிநிதியா, நீதிபதிகளின் டவாலியா?சிந்திப்பீர்.
வழக்குரைஞர்கள்,
சென்னை உயர்நீதிமன்றம்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.