அண்மையில் அனைத்து இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய தீர்ப்புகளில் ஒன்று ஓரினச் சேர்க்கை, வலியுறுத்தல் ஏதுமின்றி நடைபெறும் பட்சத்தில் தவறில்லை என்று 2.7.2009 தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்பின் மூலம் இந்தியா ஓரினச் சேர்க்கை மீதான தடையை நீக்கிய நாடுகளின் பட்டியலில் 127வது நாடாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு இயற்கைக்கு மாறான பாலுறவைத் தடை செய்யும் பிரிவாகும். இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டு இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது.

சட்டம்

377, இயற்கைக்கு மாறான குற்றங்கள் இயற்கையின் நியதிக்கு மீறி யாரொருவர் ஒரு ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ அல்லது விலங்குடனோ உடலுறவு கொண்டால் அந்த நபர் ஆயுள் தண்டனையோ அல்லது பத்தாண்டுகள் நீடிக்கக் கூடிய சிறைத் தண்டனையோ விதிக்கப்படுவதுடன் அவர் அபராதத் தொகை கட்டவும் விதிக்கப்படுவார்.

இதுதான் அந்த 377ஆவது பிரிவு. இப்போது நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறதென்றால் இந்தப் பிரிவின் படி ஓரினச் சேர்க்கை, சம்பந்தப்பட்டவர்கள் விருப்பத்துடன் நடைபெறும் பட்சத்தில் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட முடியாது. மிரட்டியோ, வற்புறுத்தலின் பேரிலோ நடைபெறும் உடலுறவுகள் அவை ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே, அதாவது இருபால் உறவாக இருந்தாலும் இந்தப் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

வழக்கின் வரலாறு

‘நாஜ் பவுண்டேசன் இந்தியா டிரஸ்ட்’ என்பது தில்லியில் இயங்கி வரும் ஒரு தொண்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் 2001இல் தில்லி நீதிமன்றத்தில் வயது வந்தவர்களிடையே விருப்பத்துடன் நடைபெறும் ஓரினச் சேர்க்கைக்கான தனிச் சட்டம் கோரிப் பொதுநல வழக்கொன்றை தொடுத்தது. தில்லி உயர் நீதிமன்றம் இதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது. அடுத்து அந்தத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றம் வழக்கை எடுத்துக் கொள்ளச் சொல்லி தில்லி உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து மற்றொரு தொண்டு நிறுவனமான 377க்கு எதிரான குரல் என்ற அமைப்பு இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது. வயது வந்தோருக்கிடையே இசைவுடன் நடைபெறும் ஓரினச் சேர்க்கையை 377 பிரிவின் கீழ் கொண்டு வரக் கூடாது, அந்தப் பிரிவின் பிடியிலிருந்து அவ்விதமான ஓரினச் சேர்க்கையை நீக்க வேண்டும் என்று அந்த அமைப்பு குரல் எழுப்பியது.

2008 மே மாதம் இந்த வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அப்போது மத்திய அரசின் சார்பில் இரண்டு துறைகளிலிருந்து முரண்பட்ட நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அதாவது அரசின் உள்துறை அமைச்சகம் அந்தப் பிரிவு அப்படியே நீடிக்க வேண்டும் எனவும், சுகாதாரத் துறை அந்தப் பிரிவின் கீழான தண்டனைகளுக்கெதிராகவும் தங்கள் கருத்துகளை முன்வைத்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த இரண்டு வாக்குமூலங்களையும் மத்திய அரசின் சார்பில் முன்வைத்தவர் ஒரே வழக்கறிஞர் -மோனிகா கார்க் என்பவர். எப்படி முரண்பாடுடைய இந்த இரண்டு வாக்குமூலங்களையும் நீங்கள் சமன் செய்கிறீர்கள்? என்று கேட்டார்கள் நீதிபதிகள். அதற்கு அந்த அரசாங்க வக்கீல் பரிதாபத்துக்குரிய ஒரு பதிலைச் சொன்னர் இந்த இரண்டு அமைச்சகங்களுக்கும் நான் ஒருவரே ஆஜராக முடியாது என்று அரசாங்கத்துக்கு எழுதியிருந்தேன். ஆனால் எனக்கு பதில் வரவில்லை. இவ்வாறு கூறிய அவர் அந்த நேரத்தில் தான் உள்துறை அமைச்சகத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி விட்டார். அதாவது இந்தியச் சூழலில் குறிப்பிட்ட சட்டப்பிரிவு அதன் பொருளில் அப்படியே நீடிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கருத்துத் தெரிவித்தது.

ஆனால் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு இயற்கைக்கு மாறாக உறவு கொள்பவர்களை 377 பிரிவின் கீழ் ஆயுள் தண்டனைக்குட்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. கடுமையான தண்டனையைச் சுட்டிக் காட்டி, இதனால் பாதுகாப்பு உறைகளை பயன்படுத்துவது மற்றும் பாலியல் அறிவு பற்றிய தகவல்கள் கூட அவர்கள் அறிய முடியாமல் போய் விடுகிறது என்றும் அது தெரிவித்தது.

நாஜ் பவுண்டேசன் தனது விண்ணப்பத்தில் பிரிவு 377 குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமையை மீறுவதாலும் பாலியல் உறவில் சட்ட விரோதமான உறவுகளை உருவாக்குவதாலும் அப்பிரிவு சட்டவிரோதமானது என அறிவிக்கும்படி கேட்டிருந்தது.

இந்தப் பிரிவு ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் மனிதரை இழிவுபடுத்துகிறது, தனக்கெதிரான பாகுபாட்டை அவரை மவுனமாக ஏற்றுக் கொள்ளச் சொல்கிறது. அவரால் தமது விருப்பத்தை வெளிக் கொணர முடியாது.

நவம்பர் 2008இல் இவ்வழக்கு மீதானd விசாரணை முடிந்தது. 2009 ஜஓன் 12இல் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, இந்தப் பிரிவு தேவையற்றது என்று ஒப்புக் கொண்டார். இதன் விளைவாக 2009 ஜஓலை 2 -ம் தேதி வரலாற்றுச் சிறப்பு மிக்க தனது தீர்ப்பில் தில்லி உயர்நீதிமன்றம் 150 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்த சட்டத்தை திருப்பிப் போட்டது. வயதுவந்த மனிதர்களிடையே நிகழ்கின்ற ஓரினச் சேர்க்கைகள் சட்டபூர்வமானவையே என அந்தத் தீர்ப்பு அறிவித்தது. இந்தப் பிரிவின் சாரமானது மனிதர்களின் அடிப்படை உரிமைக்கு விரோதமாகச் செல்கிறது என்றும் அந்தத் தீர்ப்பில் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தங்களது 105 பக்கத் தீர்ப்பில், நீதிபதிகள் அஜித் பிரகாசும். முரளிதரரும் இந்த பிரிவைத் திருத்தா விட்டால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 மீறப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14, ஒவ்வொரு குடிமகனு/ளும் சட்டத்தின் முன் வாழ்வதற்கான வாய்ப்புகளில் சம உரிமை படைத்திருக்கிறார்கள் என்றும் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்றும் சொல்கிறது. எனவே நமது சட்டம்    அனைவரையும் உள்ளிணைத்து சமமாக நடத்தச் சொல்கிறது. பாகுபடுத்துதல் என்பது இதற்கு எதிரானது ஆகும்.

இவ்வாறு தீர்ப்பளித்த நீதிமன்றம் இத்தீர்ப்பானது பாராளுமன்றம் இந்த சட்டத்தைத் திருத்தும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இப்போது பாராளுமன்றம் என்ன செய்யப் போகிறது என்பது கேள்வி. அதுவரை பொறுக்க முடியாமல் இத்தீர்ப்பை எதிர்த்து ஏகப்பட்ட மனுக்கள் நீதிமன்ற வாசலில்......! நீதிமன்றம் பாராளுமன்ற முடிவு வரும் வரை பொறுக்கக் கூடாதா என்று கேட்கிறது.

இப்படிப்பட்ட மாற்றமான தீர்ப்பு வருவதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். பியுசிஎல் அமைப்பினர் பாலினச் சிறுபான்மையினர் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் மீதான மனித உரிமை மீறல் குறித்து இரண்டு அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள். முன்னெப்போதும் இல்லா அளவில் அவர்கள் தங்களை ஒரு சமூகமாக ஒருங்கிணைத்து தங்கள் கோரிக்கைகள் வெளியிடத் துவங்கியிருக்கிறார்கள். ஊடகங்கள் குறிப்பாக எலெக்ட்ரானிக் ஊடகங்கள் தங்கள் பார்வையை மாற்றிக் கொண்டுள்ளதுடன் அவர்களை பல நிகழ்ச்சிகளில் முன்னிறுத்த துவங்கியிருக்கிறார்கள். தோழர் திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தில் ஒரு திருநங்கைக்கு பொறுப்பு கொடுத்திருக்கிறார். இந்த மாற்றம் என்பது பெரும்பாலும், திருநங்கைகள் என்றழைக்கப்படுகின்ற மூன்றாம் பாலினத்தவர் மத்தியில் பரவிக் கொண்டிருக்க, தற்சமயம் ஓரினச் சேர்க்கையாளர்களின் குரலும் வெளிவரத் துவங்கியிருக்கிறது. அன்றைய நாட்களில் அமைச்சர்களாக இருந்தவர்களில் அன்புமணி இராமதாசும், ஆஸ்கர் பெர்னான்டசும் இச் சட்டப் பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இப்போது அரசியல் கட்சிகளில் இடது சாரி இயக்கங்கள் இந்தத் தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்று பாராளுமன்றத்தில் இச்சட்ட திருத்தம் முன்மொழியப்படும் போது தாங்கள் ஆதரவளிப்போம் என அறிவித்துள்ளனர். காங்கிரசு எச்சரிக்கையுடன் மதில் மேல் நின்று கொண்டிருக்கிறது. அந்த உரிமை காங்கிரசுக்கு மட்டும்தானா? எங்களுக்கில்லையா, அவர்கள் பேசட்டும், அப்புறம்தான் நாங்கள் சொல்லுவோமாக்கும் என்கிறது பிஜேபி. இருந்தாலும் முரளி மனோகர் ஜோ´ துள்ளிக் குதித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்து விட்டார். சரத் யாதவ் இந்த சட்டத்தின் கீழ் யாரும் தண்டிக்கப்படவில்லையே, அப்புறம் என்ன? என்கிறார். இதற்கெல்லாம் பெயர் ‘கருத்துச்சொல்வதா’ என்பது நமக்குத் தெரியவில்லை.

இந்தத் தீர்ப்பினைக் கேட்டு முதலில் அலறுவது மதவாதிகள்தான். அனைத்து மதங்களும் ஒரே குரலில் இதனை எதிர்க்கின்றன. பெண்ணுக்கு அடிமை என்ற நிலையையாவது மதம் அளித்திருக்கிறது. ஆனால் மூன்றாம் பாலினருக்கு இடமே இல்லை அல்லது கோமாளிகளின் இடம். இவ்வாறு மதத்தால் மறுக்கப்பட்ட இடத்தை இன்று அவர்கள் பல்வேறு நிலைகளில் போராடிப் பெற்று வருகிறார்கள். மதமும் இலக்கியமும் கைகோர்த்துக் கொண்டுதான், ‘எதிர்பாலுறவும் அதன் அடிப்படையில் அமையும் குடும்ப அமைப்பும் மட்டுமே மனித இனம் வாழ்வதற்குரிய ஒரே வழி என்ற நம்பிக்கையை மனித மனதின் மரபணுக்களிலே விதைத்தன. அதனுடைய விளைவாக இந்த நம்பிக்கைக்கு மாறுபட்ட உறவுகளையும், மனிதர்களையும் மனித சமூகம் விலக்கி வைக்கிற அவலமும், அம்மனிதர்களைத் தண்டிக்கிற கொடுமையும் உருவாகி வளர்ந்தன. மூன்றாம் பாலினத்தவர் சிறுபான்மையினராக இருப்பதாலேயே அவர்களின் வாழ்க்கை உரிமைகளை மறுக்க மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? மேலும் ‘ஆண் தன்மை, ‘பெண் தன்மை’ மீதான  இறுக்கமான கருத்தமைவுகளை நாம் எதிர்த்தே ஆக வேண்டும். ஆண்மை’ என்ற மாயையை சமூகத்திலிருந்து ஒழிக்கவும் சமூகத்தின் தலைவன் ஆண் என்ற ஆதிக்க நிலையைத் தகர்க்கவும் இந்த ஆண் பெண் என்ற இரண்டு பாலினத்தவர்களுக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தவரின் இருத்தல் மிகப் பெரிய பங்காற்ற முடியும்.

மேலும் கற்பு, புனிதமான காதல், பிள்ளை பெறுதல் இவற்றுடன் தொடர்பில்லாத தளத்தில் இயங்கும் ஓரினச் சேர்க்கை இந்த ஆதிக்கக் கற்பிதங்களை தகர்த்தெறியும். மேலும் பிள்ளை பெற முடியாத இருவர் அமைத்துக் கொள்ளும் உறவில் அவர்கள் தத்தெடுத்து உருவாக்கும் குழந்தை வளர்ப்பில் இரத்த சொந்தத்தினால் உருவாகும் உடைமை உணர்வு தகர்ந்து போகும். இது போன்ற உறவுகள் வெளிப்படையாக அங்கீகரிக்கப்படும் போது அவர்கள் அனுபவங்களும் நமக்கு இலக்கியமாக்கப்பட்டு நம்முன் வைக்கப்பட வேண்டும். அதன் மூலமாகவே நாம் அவர்களை அறிந்து கொள்ள முடியும்.

மேலும் இது இயற்கைக்கு மாறானது என்கிறார்கள். அப்படி ஒன்று எப்படி இயற்கையாகத் தோன்ற முடியும்? உண்மையில் இது மதத்துக்கு விரோதமானதே தவிர இயற்கைக்கு விரோதமானது இல்லை. எய்ட்ஸ் பரவும் என்கிறார்கள். அது பற்றி நமக்கு போதுமான அறிவில்லை. ஆனால் சுகாதாரத் துறைதான் இந்த சட்டத் திருத்தத்தை ஆதரித்திருக்கிறது.

‘ஆண்மை’ என்ற பதம் பெண்களால் அழிக்கப்படும் வரை மனித இனம் விடுதலையடையாது என்றார் பெரியார். இதில் பெண்கள் என்பதுடன் மூன்றாம் பாலினத்தவரையும், எதிர்பால் ஈர்ப்பிலிருந்து விலகி நிற்போரையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Pin It