பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் தோரங்கலா கிராமத்தில் ஏப்ரல் நான்காம் தேதி 1965ஆம் ஆண்டு பிறந்து, பதினேழு வருடங்களுக்கு பின் மோகன் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சுக்விந்தர் கௌர். திருமணத்திற்குப் பிறகு, தன் கணவர் நடத்தி வந்த தையற் கடையில் ஆடை தைக்கும் வேலையை செய்து கொண்டிருந்தார் சுக்விந்தர் கௌர். சிறு தொழில் சொற்ப வருமானம் என்று சென்று கொண்டிருந்த தையல் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால், கதார் சென்று வேலை செய்யலாம் என முடிவெடுத்தார் மோகன் சிங். ஐந்து வருடங்கள் வேலை செய்து விட்டு, தன் தாய் நாடு திரும்பிய மோகன் சிங்கிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது, தன் மனைவியான சுக்விந்தர் கௌர் இப்பொழுது அனைவராலும் ராதே மா என்று அழைக்கப்படும் ஆன்மீகவாதி என்பதே. ஆனால் இன்று, அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றஞ் சாட்டப்பட்டிருக்கிறார்.

Radhe Maa“நான் தூய்மையானவள் மற்றும் பக்தி நிறந்தவள், நான் குற்றமற்றவள் என்பதை நிரூபித்துக் காண்பிப்பேன்”, என்று அமைதியாகப் பேசும் அந்த அப்பாவிப் பெண்ணின் பெயரையா துஷ்பிரயோகம் செய்ய முனைகிறீர் என்று என் மீது நீங்கள் கோபம் கொள்ளலாம். ஒரு வேளை நீங்கள் அவரின் பக்தராக இருந்திருந்தால் திரிசூலம் ஏந்திவரும் துர்கா தேவியின் அவதாரம் அவள், அவளுக்கு விரோதமாய்ப் பேசும் முன் யோசித்துப் பேசுங்கள் என்று என்னிடம் சொற்போர் நிகழ்த்த தயாராகலாம். ஆனால் குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு இந்திப் பாடல்களின் தாளத்திற்கு ஏற்ப நடனம் ஆடிய ராதே மாவி வீடியோ காட்சியைப் பார்த்திருந்தால் நீங்கள் என்னுடன் சொற்போர் நிகழ்த்துவதை தவிர்ப்பீர்கள் அல்லது நான் உங்களைக் கூப்பிடுவதற்கு முன்பே இடத்தை காலி செய்வீர்கள் என்றே நினைக்கின்றேன்.

இறைவன் அற்புதம் நிகழ்த்திய கதைகளை, நாம் குழந்தைப் பருவத்திலிருந்து கேட்டு வளர்கின்றோம். அதில் சில கதைகள் நமக்கு கிளர்ச்சியூட்டுகின்றன, சில கதைகள் நம்மை பரவசப் படுத்துகின்றன. மேலும் சில கதைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆனால் இக் கதைகள் எல்லாம் ஏன் நமது காலத்திலும் நிகழவில்லை என்று வருத்தம் கொள்கிறோம். இக்கதைகளின் புரிதல் பற்றியோ அல்லது இக் கதையில் கூறப்படும் அற்புதங்கள் ஏன் இப்பொழுது நிகழவில்லை என்பது பற்றியோ நாம் சிந்திப்பதில்லை. இதன் காரணமாகவே ராதே மா, நித்யானந்தா போன்ற அற்புதம் நிகழ்த்தும் மீட்பர்கள் உருவெடுக்கிறார்கள்.

அது ஒரு அழகிய கிராமம். பசுமையாக காட்சியளிக்கும் அக்கிராமம், மலை அடிவாரத்தில் அழகிய குடில்களுக்கு மத்தியில் தோன்றியதாக இருக்கலாம் அல்லது ஏக்கர் கணக்கில் பரவிய நிலப்பரப்பில் குடில்கள் அமைக்கப்பட்ட ஓய்விடங்களாக இருக்கலாம். சமீபமாக தோன்றிய அவ்வுலகிற்கு முதல் முறையாக நீங்கள் செல்கிறீர்கள். பல தன்னார்வலர்கள் தொண்டு புரிய, ஒரு மீட்பர் சற்று தாமதமாக அங்கே தோன்றுகிறார். பல பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் நாம், இரத்த உறவுகளால், நண்பர்களால், மருத்துவர்களால், ஜோதிடர்களால் கைவிடப்பட்டு இறுதியாக மீட்பரிடம் தஞ்சம் அடைந்திருப்போம். சாமானியர் தங்களது துயரத்திலிருந்து உடனடியாக விடுதலை பெற மீட்பரிடம் வந்தார்கள். அவர்களது துயரங்களை சற்றென்று நொடிப் பொழுதில் மீட்பர் குணப்படுத்தினார் என்று குழந்தைப் பருவத்தில் கேட்ட கதையை சோதித்துப் பார்க்க சரியான நேரம் இதுதான். நமது பகுத்தறிவிற்கு அறிந்தோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர் கூறியது புரிந்தோ நாம் அங்கு வந்திருப்போம்.

ஜெய் ராதே மாக்கீ ஜே! என்று கூச்சலிட்டுக் கொண்டு (அல்லது வேறு பெயராக கூட இருக்கலாம்) செல்லும் அக்கூட்டத்தினருடன் நாமும் இறைவனை தரிசிக்க ஆசிரமத்திற்குள் செல்கிறோம். அவர்களின் மூலமாக இறைவனை உணர்கிறோம். அல்லது உணர்ந்ததாக நம்ப வைக்கப்படுகிறோம். பின் அங்கிருந்து வெளியே வந்ததும் நாம் காணிக்கையாக கொடுத்த ஒரு லட்ச ரூபாய் பற்றி சிந்திக்கும் பொழுதுதான் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்கிறோம். இன்றைய தேதிகளில் மிகவும் லாபகரமாக இயங்கும் வர்த்தகம் இதுதான். இதற்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து வரிவிலக்கும் உண்டு.

அற்புதங்கள் நிகழ்த்தத் தேவையில்லை, சாட்சிகளை தயார் செய்தால் போதும். நீங்கள் இந்து மதத்தைச் சார்ந்த ஒரு மீட்பரை வழிபடச் சென்றால், அவரே பல வித்தைகளை நமக்கு செய்து காண்பித்து நம்மை குஷிப்படுத்துவார். நீங்கள் ஒரு கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த ஒரு மீட்பரை தரிசிக்கச் சென்றால், தன்னால் ஏற்பாடு செய்யப்பட்ட தன்னார்வலர்களை மேடை மீது ஏற்றி உங்களை குஷிப்படுத்துவார். எப்படியோ நம்மை குஷிப்படுத்துகிறார்களே என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். இது கொஞ்சம் விலையுயர்ந்த குஷிப்படுத்துதல். இதற்காக தாங்கள் செலவழிக்கும் பணமும், நேரமும் கொஞ்சம் அதிகம்தான். இங்கு சென்று பாதிப்புக்குள்ளான பலியாடுகள், “நான் அங்கு சென்ற நாள் முதல், வாழ்க்கை உச்சாணிக் கொம்பில் உயர்ந்துள்ளது, நீயும் சென்று வா” என்று குறைந்தது இரண்டு பலியாடுகளை அனுப்பத் தவறியதில்லை.

இந்த வர்த்தகத் துறைக்கு முதலீடு பெரியதாக தேவைப்படாது. புதுப்புது திட்டங்களை பக்தர்களை நம்பி தீட்டலாம். ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்யலாம். “அம்மாவின் கால்களைக் கழுவ வேண்டுமா, பதினைந்தாயிரம் செலவு ஆகும், அவ்வளவுதான். நீங்கள் அம்மாவின் கால்களைக் கழுவி அவரின் ஆசியைப் பெறலாம்” என்று ஆசிரமத்திலுள்ள ஒரு தன்னார்வலர் உங்களிடம் கூறும் பொழுது, “என்னது அவரது கால்களை நான் கழுவ, அவருக்கு பதினைந்தாயிரம் செலுத்த வேண்டுமா, என்ன விந்தை இது” என்ற கேள்வியை உங்கள் மனம் ஒரு போதும் எழுப்பாது. அது தான் அங்கு நிகழும் அற்புதம்.

பேராசை பக்தர்கள் இருக்கும் வரை, இவ்வுலகில் இவர்களுக்கு அழிவில்லை. இயற்கைக்கு முரணானவைகளையும், உண்மைத் தன்மை இல்லாதவைகளையும், ஆங்கிலத்தில் “ப்ளாஸ்டிக்” என்று கூறுவர். ஆம் இவர்கள் ப்ளாஸ்டிக் போன்றவர்களே. இவர்கள் ப்ளாஸ்டிக் போல் அழிவற்றவர்களும் கூட. இன்னும் சற்று நுட்பமாக, இவர்களின் செயல் பாடுகளை ஒப்பீடளவில் பகுப்பாய்வு செய்வது மூலம் புரிந்து கொள்ளலாம் என்று நம்புகிறேன்.

டான் கொர்லான் தனது அறையில் அமர்ந்து கொண்டு தன்னிடம் வருபவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிக்கிறார். அவர்களது பிரச்சனைகளைத் தீர்த்து, அவர்கள் அனைவருக்கும் அவர்களால் நிராகரிக்க முடியாத ஓர் ஒப்பந்தத்தை அளிக்கிறார். பின் அவரால் மீட்கப்பட்டோர் அனைவரும் அவரை ஞானத் தந்தையாக ஏற்றுக் கொள்கிறார்கள். டான் கொர்லான் என்ற தனி மனிதனின் துதி பாடலைப் பாடுகிறார்கள். அவருக்காக தங்களின் வாழ்வை அர்ப்பணிக்கிறார்கள். கிட்டத் தட்ட இதே போன்றதொரு செயல்தான் என்றாலும், இங்கு ஆயர்கள் யாரும் எவருடைய பிரச்சனையையும் தீர்த்து வைப்பதில்லை.

நீங்கள் தெய்வ நம்பிக்கையற்றவர் என்றால் இது போன்ற இடங்களுக்குச் செல்வதை விரும்ப மாட்டீர்கள், பெரிதளவில் இவ்விடத்தை தவிர்த்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் தெய்வ நம்பிக்கையுள்ளவரா? அப்படியானால், நான் உங்களிடம் ஒரு கருத்தை முன் வைக்க விரும்புகிறேன்.

உங்களைப் பொருத்தமட்டில், இறைவன் இவ்வுலகைப் படைத்தார் என்பது ஏற்புடைய தோற்றப்பாடு. அவரது வல்லமையில் நீங்கள் எழுகிறீர்கள். உங்களது வாழ்வில் நிகழும் எல்லா நிகழ்வுக்கும் அவரே பொறுப்பாளர். தேவன், நம்மை இவ்வுலகில் படைத்ததற்கான நோக்கங்கள் என்னவாக இருந்திருக்கும். தேவன் இந்த அழகான உலகைப் படைத்தது, நாம் அனுபவிக்கத் தான். ஆனால் நாமோ! அதன் அழகை அனுபவிப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு மேடையாக ஏறி, "தாங்கள் தான் எங்களைப் படைத்தீர்கள். உங்களது ஆக்கங்கள் ஆயிரத்தில் நானும் ஒருவனே. ஆதலால் நான் என் வாழ்நாள் முழுவதும் உனக்கு நன்றி செலுத்தவும், உனது துதிப் பாடலைப் பாடித்திரியவும் செய்வேன். நீர்(தேவன்) வானத்தில் இருந்து என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம், 'நான் எனது நேரத்தை எவ்வளவு விரையம் செய்து விட்டேன், உன்னைப் படைத்து', என்று வேதனை கொள்ளச் செய்வேனாக" என்பது போல் நடந்து கொள்கிறோம்.

உண்மையில் இதற்காகத் தான் உன்னை அவர் படைத்தாரா, இது தான் உன் கடமை என்று கூறினாரா? தன் படைப்புகள் பற்றி தம்பட்டம் அடிக்க, தானே இன்னொரு படைப்பை உருவாக்கி அதனை இவ்வுலகில் உலா விடும் கடவுள், எவ்வளவு தாழ்வு மனப்பான்மையுள்ளவராக இருப்பார். ஒரு சாதாரண (நல்ல) மனிதர் கூட, நான்கு நபர்களுக்கு முன் தன்னைப் பற்றி பெருமையாக பேசுவதற்கு வெட்கப்படுவான். அப்படி இருக்கையில் இவ்வகையான காரியங்களை, கடவுளாகிய தேவன் விரும்புவாரா?. யாரை ஏமாற்றுகிறீர்கள், சென்னை அமிர்தாவில் சேர்ந்தேன், இப்பொழுது கை நிறைய சம்பாதிக்கிறேன் என்று விளம்பரம் செய்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

சந்திராசுவாமி, ராதே மா, நித்தியானந்தா சுவாமி என்று எத்தனை சுவாமிகள் இந்தியாவைக் காப்பாற்ற... முற்றும் துறந்தவர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் இவர்கள், எப்பொழுதும் பொருள் மீதும், மண் மீதும், பொன் மீதும், பெண் மீதும் ஆசை கொண்ட வண்ணமிருக்கிறார்கள். சந்திராசுவாமி போன்ற முற்றும் துறந்த துறவிகள் மீது மீண்டும் மீண்டும் நிதி முறைகேடுகள் குறித்து வழக்குகள் பதிவு செய்ய பட்டிருக்கின்றன. சந்திராசுவாமி நிதியங்களை அவரது அரசியல் ஆதாயத்தைப் பொருத்து ஏற்றத் தாழ்வடைந்தது. 1996 ஆம் ஆண்டில், லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ஒரு லட்சம் டாலர்கள் பணத்தை, மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் அந்நியச் செலாவணி வரன்முறைச் சட்டத்தை மீண்டும் மீண்டும் மீறியதற்காக வழக்குகளை எதிர்கொண்டார். அவரது ஆசிரமத்தில் மீது வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் $11 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான, தொழிலதிபரான அட்னன் காசோகியின் அசல் வரைவுகள் பதுக்கி வைக்கப்படிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜீவ் காந்தியின் படுகொலையை விசாரிக்க இந்திய அரசால் அமைக்கப் பட்ட ஜெயின் கமிஷன் தலைவரான மிலாப் சந்த் ஜெயின் தனது ஜெயின் கமிஷன் அறிக்கையில், ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதில் சந்திராசுவாமியின் தொடர்பு இருப்பதாகக் கூறி ஒரு தொகுப்பை சமர்ப்பித்தார். ஆனால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு பதினேழு ஆண்டுகள் கழித்து இன்னும் அது தொடர்பாக, சந்திராசுவாமி கைது செய்யப்படவில்லை. ராஜீவ் காந்தி படுகொலையில் சந்திராசுவாமி நிதியுதவி சம்பந்தமாக முக்கிய பாத்திரம் வகித்தார் என்ற நோக்கில் விசாரணை செய்து வருவதாக அமலாக்கப் பிரிவு இன்னும் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் அந்நியச் செலாவணி வரன்முறைச்சட்டத்தை மீறியதற்காக ரூ 9 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டிருக்கின்றார், சந்திராசுவாமி. ஆனால் நித்தியானந்தா சுவாமி, சந்திராசுவாமி என இவர்களது சர்ச்சைகளை நாம் மறந்துவிட்டோம். இதே போல தான் ராதே மாவின் சர்சைகளையும் மறந்துவிடுவோம்.

உண்மையில் இவ்வகையான சர்ச்சைகள் இவர்களை புகழடையச் செய்கின்றன. இவ்வகையான சர்ச்சைகளுக்குப் பின்னர் அதிக நிதிகளைப் பெறுகிறார்கள், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் இவர்களை வந்தடைகிறார்கள், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறப்பட்டு, அவர்களை நம்பி வரும் பக்தர்களை மழுக்கமடையச் செய்கிறார்கள்.

இவர்களது குறி எல்லாம் பேராசை பக்தர்களுக்கு கொக்கி போடுவதே. பேராசை பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஆயர்களை எளிதாக தழைத்தோங்கச் செய்கிறார்கள். இவர்கள் டான் கொர்லானை விட மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களைப் பொருத்தமட்டில் தர்க்க அறிவு என்பது கொடிய நோய். அவ்வகையான நோய்கள் துளிர் விடாமல் இருக்கச் செய்யும் மருந்தாக பிரபலங்களைத் தேர்வு செய்கிறார்கள்.

பிரபலங்கள் ஆதரிக்கும் தயாரிப்புகளின் முதன்மை நுகர்வோர்களாக நாம் எப்பொழுதும் இருக்கின்றோம். அது உணவுப் பொருட்களோ, உடையோ, மதுபானமோ, மென்பானமோ, வாகனமோ, உள்ளாடையோ ஏன் ஆயர்களாகக் கூட இருக்கலாம். முன்னாள் பிரதமர் பி.வி நரசிம்மராவ், சந்திராசுவாமியின் தீவிர பக்தர் என்று தெரிந்ததும், அவர் (சந்திராசுவாமி) உலகப்புகழ் பெற்றார். நரசிம்மராவ் பிரதமர் ஆனதும் சந்திராசுவாமி தில்லியில் குதூப் கல்வி நிறுவனப் பகுதியில் விஷ்வ தர்மயாதன் சன்னதன் என அழைக்கப்படும் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். பின் நரசிம்மராவைத் தொடர்ந்து தொழிலதிபர்களான அட்னன் காசோகி மற்றும் 'டைனி' ரோலந்திற்கும், புரூனே சுல்தான், பஹ்ரைனின் ஷேக் ஏசா பின் சல்மான் அல் கலீபாவிற்கு மட்டுமல்லாமல், ஹாலிவுல் நடிகை எலிசபெத் டெய்லர் மற்றும் பிரித்தானிய பிரதமர் மார்கரெட் தாட்சருக்கும், சந்திராசுவாமி ஆன்மீக ஆலோசனை வழங்கினார். பிரபலங்கள், புத்திஜீவிகள் ஒரு பொருளைத் தேர்வு செய்கிறார்கள் என்றால், அது ஆகச் சிறந்ததாகத் தான் இருக்கும் என்று நாமும் உத்தேச முடிவிற்கு வந்து விடுகிறோம். அதனால் தான் நாம் எப்பொழுதும் போலிகளால் ஏமாற்றப்படுகிறோம்.

நான் ஓஷோ போன்ற அறிவை ஆட்படுத்தும் வல்லமையுள்ள அறிவுஜீவிகளைப் பற்றி கூற முனையவில்லை. அவரின் செக்ஸ் பற்றிய பிரக்ஞை நம்மை வேறு தளத்திற்கு இட்டுச் செல்பவை. நான் வினைய விரும்புவது எல்லாம், சாமியார்கள் (Godman) என்று தங்களை தாங்களே அழைத்துக் கொள்பவர்கள் குறித்து. சாமியார் என்ற பதம் நவீன இந்தியாவிற்கு அந்நியப்பட்ட சொல்லாடல் அல்ல. சாமியார் என்று இவர்களை அழைப்பது ஒருவகையில் இவர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இவர்கள் சாமி என்பவர் யார் என்று கேள்வியின் விடையாக தோன்றியவர்கள். இக்கேள்விக்கான விடை, இவர்களிடம் உள்ள தெய்வீக சக்தியால் வந்த எதிர்வினை அல்ல. மாறாக இவர்கள் பகுத்தறிவாளர்களின் பார்வையில், அபத்தங்கள் நிறைந்த ஒரு மதச் சிந்தனையாளர் எவ்வாறு இருப்பார் என்பதைப் பகடியாக சித்தரிக்கிறார்கள்.

ramdev modiஆன்மீகம், இந்தியாவில் நன்கு பாதுகாக்கப்படும் பாரம்பரியத்தின் முக்கிய பகுதியாக உள்ளது. அதனாலே இது போன்ற நெறி பிறழ்ந்த மோசடி சாமியார்கள் தங்களின் வியாபார சந்தையை கடை விரிக்கிறார்கள். இவர்களைப் போன்றோர்கள் நாம் ஆன்மீகத்தின் மீது வைத்திருக்கும் சிறிதளவிலான நம்பிக்கையின் மீது நிந்தையை விதைக்கிறார்கள். 2001 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து சாய் பாபாவை நியாயப்படுத்தி அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டவர்களில் முன்னாள் தலைமை நீதிபதிகளான PN பகவதி மற்றும் ரங்கநாத் மிஸ்ராவும், முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலும், அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயும் அடங்குவர். தான் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்படுவதை முன் கூட்டிய கணித்ததாகக் கூறி, அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரம்ம குமாரிகள் சபைக்கு சென்றுவந்தார் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல். 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அன்று மறைந்த பாபாவிடம் தான் கனவில் பேசியதாகவும், அவர் வருங்காலங்களில் உனக்கு பெரிய பொறுப்பு காத்திருக்கிறது என்று கூறினார் எனவும் கேமரா முன்பாக உளறிக் கொட்டினார். இப்படிப்பட்ட பிதற்றல் அரசியல்வாதிகள் இருக்கும் நாட்டில் மூட நம்பிக்கையை எவ்வாறு ஒழிப்பது. அதனால் தான் சோபன் சர்க்கார் போன்ற அறிவிலி சாதுக்கள் துளிர் விடுகிறார்கள்.

தௌண்டியா கேரா தங்கப் புதையல் சோதனையை கேள்விபட்டிருப்பீர்கள். சோபன் சர்க்கார் என்ற சாதுவின் கனவில் ராஜா ராம் பக்சிங் அவர்களின் ஆவி தோன்றி, சோபன் சர்க்காரிடம் தன் கோட்டையின் கீழ் 1000 டன் மதிப்புள்ள தங்கம் இருப்பதாகக் கூறியுள்ளார். வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், ராஜா ராம் பக்சிங் அவர்களின் ஆவி இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி பெரிதும் கவலை கொண்டுள்ளதோடு, அவர் தனது கோட்டையில் புதைந்து இருக்கும் புதையலை இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள் என்று தெரிவித்தார் என்பதாகப் பேட்டியளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநில உன்னோ மாவட்டத்தில் சங்கரம்பூர் என்ற கிராமத்தில் ராஜா ராம் பக்சிங் கோட்டை உள்ளது. அதன் பழைய பெயர் தௌண்டியா கேரா, அதனால் தான் அதற்கு தௌண்டியா கேரா தங்கப் புதையல் சோதனை என்ற பெயர்பெற்றது. 2013ம் ஆண்டு சோபன் சர்க்கார் தனது 1000 டன் தங்கக் கனவை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திடம் தெரிவிக்காமல், மத்திய அமைச்சரான சரண் தாஸ் மகந்தை அணுகித் தெரிவித்தார். அதன் பிறகு சுரங்கத்துறை அமைச்சகம் மற்றும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஆகிய அமைப்புகளுக்குத் தகவல் அனுப்பப்பட்டு அவற்றின் ஒப்புதலுடன் 18ஆம் தேதி அக்டோபர் 2013ல் அகழாய்வுகள் தொடங்கப்பட்டன. சாது கனவு கண்டால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்பது இந்திய அறிவியல் சாசனத்தில் குறிப்புகள் இருக்கின்றது போலும். அதனால்தான் கனவை நம்பி அகழ்வாராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார்கள்.

சுமார் நான்காயிரம் கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் கனிமங்கள் இருப்பதாக நம்பி, பன்னிரண்டு சிறிய குழுக்களுடன் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழாய்வுகளை நடத்தத் தொடங்கியது. இந்திய ஊடகங்களின் கவனம் ஒரே நாளில் இக்கோட்டைக்கும், இப்பகுதிக்கும் கிடைத்தது. மேலும் அகழாய்வுகளைக் காணப் பல வெளிநாட்டு ஊடகங்கள் இங்கு குவிந்தனர். ஒருவேளை பணம் கிடைத்துவிட்டால் அரசியல்வாதிகளால் ஊழல் அரங்கேறாதா என்ன? அதனால் சில தன்னார்வலர்கள் இப்பணியை நீதிமன்றம் கண்காணிக்கக் கோரி ஒரு பொதுநல வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். உச்ச நீதி மன்றம் அனுமானத்திற்கு இடம் கொடுக்க இயலாது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.

ராஜாவின் வழித்தோன்றல் ஒருவரான நவ்சந்தி வீர் பிரதாப் சிங், தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினர். அகில இந்திய சத்திரிய மகாசபை ஒருபடி மேலே சென்று தோண்டி எடுக்கப்படும் சொத்துக்கள் அனைத்தும் ராம் பக்ஷ் சிங் அவர்களுக்கே சொந்தம் எனக் கூறியதோடு நில்லாமல், ராம் பக்ஷ் சிங் அவர்கள் சத்திரிய சமூகத்தைச் சார்ந்தவர், ஆதலால் தோண்டி எடுக்கப்படும் சொத்துக்கள் அனைத்தும் சத்திரிய மகாசபைக்கே என்றார்கள்.

நவம்பர் மாதம் பதினெட்டாம் தேதி வரை சுமார் 5.71 மீட்டர்கள் தோண்டிய பின், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் குழப்பத்திற்கு உள்ளானது. கனவில் கண்ட எதுவும் நேரில் காணப்படவில்லை. "என்னைப் பொருத்தவரையில், அறிவியல் எந்த யூகத்தையும் அனுமதிக்காது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் குழியைத் தோண்டுவதற்கு முன் சில தர்க்கரீதியான முடிவை எடுத்திருக்க வேண்டும்" என்றார் அப்துல் கலாம். கத்தாரின் ஊடகமான அல் ஜசீராவின் செய்தியாளர் ஒருவர் கூறுகையில் “இந்தியா பாம்பாட்டிகளின் தேசம் என்பதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கின்றோம். இந்த சம்பவத்திற்குப் பின் அதை நம்பத் தயாராக உள்ளோம்” என்று விந்தையை சுருக்கிக் கூறினார். ஏற்கனவே பட்டவர்த்தனமாக மூடநம்பிக்கையில் மூழ்கிய நாட்டில், பரிசுத்தவான்கள் என்று தங்களை அறிவித்துக்கொள்ளும் துறவிகளை தங்கத்தால் குளிப்பாட்ட முனைகிறார்கள் அரசியல்வாதிகள் என்று அனைவராலும் குற்றம் சுமத்தப்பட்ட பின்னரே தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.

ஆனால் சோபன் சர்க்கார் முயற்சியை கைவிடுவதாகயில்லை. அவர் இன்னொரு கனவும் கண்டார். உத்தரப் பிரதேசம் மாநிலம், பதேபூர் மாவட்டத்தில் உள்ள ஆதம்பூர் கிராமத்தில், பிரம்ம ஆசிரமத்தின் சிவன் சபுத்ரா அடியில் 2,500 டன்கள் தங்கம் மறைந்துள்ளது என்றார்.

இந்திய பகுத்தறிவு சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவரான நரேந்திர நாயக் மற்றும் சனல் எடமருகு போன்றோர் இத்தகைய சாமியார்களின் பாசாங்கை பலமுறை அம்பலப்படுத்தியுள்ளனர். இருப்பினும் இந்திய அரசாங்கம் எப்பொழுதும் இவர்களைப் போன்ற சாமியர்களுக்கு உதவிக் கரம் நீட்டத் தான் செய்கிறது. இவர்களில் பெரும்பான்மையினர் அரசியல் புரவலர்களாகக் காணப்படுகிறார்கள். சனல் எடமருகு போன்றோர் மதக் கட்டுக்கதைகளை மறுத்துரைப்பதில் எப்பொழுதும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மும்பையில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலைக்கு கீழே நீர் சொட்டத் தொடங்கிய போது, உள்ளூர்வாசிகள் அதை ஒரு அதிசயம் நிகழ்வதாக அறிவிக்க விரைந்தனர். சிலர் புனித நீரை சேகரிக்கத் தொடங்கினர். வேளாங்கண்ணி திருச்சபை அதனை ஒரு புனிதயாத்திரை தளமாக மேம்படுத்தத் தொடங்கியது. அங்கே சென்ற பகுத்தறிவாளர் சனல் எடமருகு இந்த நீர் ஒன்றும் புனித நீர் அல்ல, சிலையின் சுவருக்குப் பின்னால் உள்ள சரியாகப் பொருத்தப்படாத (கழிவு நீர்) வடிகால் குழாய்கள் அடைத்துவிட்டதன் காரணமாக வந்தது என்று நிரூபித்தார். கோபமடைந்த மத நம்பிக்கையாளர்கள், இறை நம்பிகையில் நிந்தையை விதைக்கிறார் என்று கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்யும் அளவிற்கு சென்றனர். நிச்சயமாக அவர் மத நம்பிக்கையை இழிவுபடுத்த முற்படவில்லை. புனித நீர் என்று நினைத்துக் கொண்டு கழிவு நீரை குடிக்கச் சென்ற மக்களை காப்பாற்ற முனைந்தார்.

இந்தியாவைப் பொருத்தமட்டில் மதத்தின் பெயரைக் கூறி நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். உங்களை எதிர்த்து எவரேனும் கேள்வி எழுப்பினால், மத நம்பிக்கைகளை இழிவு படுத்துகிறார் என்று கூறி இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 295(A) பிரிவின் கீழ் அவரை நீங்கள் சிறையில் அடைக்கலாம். இவ்வளவுதான் இந்தியா !

- பெலிக்ஸ் மேக்ஸிமஸ்