பீகார் போன்ற பல வட மாநிலங்களில் ஆதிக்க சாதிகள் தங்கள் நலன் பொருட்டு இன்றைக்கும் பல படைகளை வைத்துள்ளன. அப்படியானவற்றுள் ஒன்றுதான் ரன்வீர் சேனா.
1967-இல் “உழுபவனுக்கே நிலம் சொந்தம்! உழைப்பவருக்கே அதிகாரம்!” என்று உயர்ந்த இலட்சியத்தோடு நக்சல்பாரி இயக்கம் வெடித்தெழுந்தது. மேற்கு வங்கத்தில் உருவான இது, நாடு முழுவதும் பரவியபோது பெரும் நிலவுடைமைப் பண்ணையார்கள் ஆடிப்போயினர். மக்களின் விடுதலை இயக்கமான நக்சல்பாரியை எதிர்கொள்ள பீகாரிலிருந்த நிலவுடைமையாளர்களான இராசப்புத்திரர்கள், பார்ப்பனர்கள் மற்றும் ஆதிக்க சாதி சக்திகள் இணைந்து 1979-இல் உருவாக்கியதுதான் கவுர் சேனா எனும் ஆதிக்கசாதிப் படை. இதுபோல பல படைகளை சேர்த்து 1997-இல் முகியாஜி எனும் ப்ரேமேஸ்வர் சிங் உருவாக்கியதுதான் ரன்வீர் சேனா.
ரன்வீர் சேனா 1997-இல் பீகாரின் இலட்சுமண்பூர் பகுதியில் 58 தலித்துகளை படுகொலை செய்ததும்; பின்னர் பதானி டோரா கிராமத்தில் தலித் மற்றும் இஸ்லாமியர் 21 பேரை படுகொலை செய்ததும் உலகே அறியும்.
இவைகளை சாதி வெறியால் படுகொலைகள் செய்யும் மூடர் கூட்டமாக சுருக்கி விடக்கூடாது. உலகு தெரியாத பாமரர்கள் உருவாக்கியதில்லை இப்படைகள். செல்வந்தர்கள், பண்ணையார்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் விளையாடத் தெரிந்தவர்கள்தான் இப்படைகளின் மூலகர்த்தாக்கள். தேர்தல் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பவர்களாகவும் இச்சக்திகளே உள்ளன. அதனால் அதிகாரத்தின் பங்காளிகளாகவும் உள்ளனர்.
தேர்தல் காலத்தில் இவர்களைத்தான் அரசியல் கட்சிகள் அணுகுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் அணுகுவதால் இப்படைகளுக்கு பேரம் பேசவும், கூடுதல் இலாபம் அடையவும் வாய்ப்பிருக்கிறது.
இவர்கள் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளவும், தொழில் போட்டி மற்றும் சொத்து தகராறுகளை தீர்த்து வைக்கவும், அதற்காக கொலைகளை செய்யவும் ஆளும்வர்க்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.
தமிழ்நாட்டில் ரன்வீர் சேனைகள் இல்லையா?
1968 டிசம்பர் 25 கீழத்தஞ்சையில் நடந்த வெண்மணிப் படுகொலையை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். அது கோபாலகிருஷ்ண நாயுடு என்பவன் தன்னிடமிருந்த ரன்வீர் சேனா மாதிரியான சாதியாதிக்கப் படையைக் கொண்டு செய்ததுதான்.
கோபாலகிருஷ்ண நாயுடுவுக்குப் பிறகு யாருமே சாதிப்படைகளை வைத்துக் கொள்ளவில்லையா? வைத்திருக்கிறார்கள். எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர், யாதவர், நாடார் என ஒவ்வொரு சாதியிலும் அவைகளின் ஆதிக்கத்திற்கான பல்வேறு படைக்குழுக்கள் உள்ளன. தினந்தோறும் அவைகள் கொலை நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென்றாலும் தேவையையொட்டி கொலைகளை செய்யாமலும் இல்லை.
தென் மாவட்டங்களில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 100 படுகொலைகள் நடந்திருப்பதாகவும்; அவைகளில் 25-க்கும் மேற்பட்ட படுகொலைகள் சாதியாதிக்கத்திற்கானப் படுகொலைகள் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் தமிழகச் செயலர் ஜி.இராமகிருஷ்ணன் கூறுகிறார்.
1996 முதல் 2012 வரை ஓர் ஆண்டுக்கு குறைந்தது 30 முதல் 35 வரையிலான சாதியாதிக்கப் படுகொலைகள் நடந்துள்ளதாக எவிடென்ஸ் கதிர் கூறுகிறார். 2012-இல் 56 தலித்துகள் கொல்லப்பட்டதாக அவர் விபரம் தருகிறார்.
சாதியாதிக்கத்திற்கு மட்டுமில்லை, தொழில் போட்டி, சொத்து தகராறு, அதிகார மோதல்கள் என நடக்கிற பெரும்பாலான படுகொலைகளுக்குப் பின்னாலும் சாதிய படைக்குழுக்களின் கரங்கள் இருக்கவே செய்கின்றன. இவர்கள் ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள். கொலை மற்றும் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள்.
அரசுக்கும், காவல்துறைக்கும் இச்சாதியப் படைக்குழுக்கள் பிரச்சினையில்லை. ஏனென்றால் இந்த ரன்வீர் சேனைகள் ஆளும்வர்க்கத்தின் படைகள். ஆனால் சமூக மாற்றத்திற்காகப் போராடுகிறவர்களுக்கும், மக்களுக்கும் இப்படைகள்தான் பிரச்சினை.
எல்லோருக்கும் தேர்தல் இலகுவானதல்ல!
“போராளிகள் தேர்தல் மூலம் வெற்றி பெற வேண்டியதுதானே? போராளிகளுக்கு சனநாயகத்தில் நம்பிக்கை கிடையாது! ஆதலால் அவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள், ஆயுதத்தை மட்டுமே நம்புகிறார்கள்” என கூசாமல் புழுகுகிறார்கள். தேர்தலை புனிதப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
இங்கு தேர்தலில் நிற்பதற்கு வெறும் டெபாசிட் மட்டுமே போதுமானதல்ல. ஆனால் அப்படி நம்பிக்கொண்டுதான் பலரும் தோற்றுக் கொண்டேயிருக்கிறார்கள்.
தேர்தலில் வெளிப்படையாகத் தெரிவது அரசியல் கட்சிகளின் போட்டிதான். ஆனால் அதன் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பது சாதிய படைக்குழுக்களேயாகும். தேர்தலில் நிற்கிற ஒவ்வொருவரும், அவர்களின் கட்சிகளும் முதலில் சரிக்கட்டுவது இப்படை குழுக்களைத்தான். இவர்களுக்கான பட்டுவாடா முடிந்த பிறகே மற்ற பணிகள் தொடங்கப்படுகின்றன.
வட மாநிலங்களில் இப்படைக்குழுக்கள் ஊர் மற்றும் பஞ்சாயத்துகளை கூட்டி இன்னாருக்குத்தான் ஓட்டு போட வேண்டுமென கட்டளையிடுகின்றன. தங்களின் ஆதிக்கத்திற்கு எதிராக வரும் கட்சிகளோடு ஆயுதம் கொண்டு மோதுகின்றன. தமிழ்நாட்டிலும் 1970 வரை, அதாவது கம்யூனிஸ்ட் கட்சிகள் செல்வாக்கு செலுத்தியதுவரை இப்படைக்குழுக்களின் தாக்குதல்கள் இல்லாமல் தேர்தல்கள் நடக்கவில்லை. இப்போதும் உள்ளாட்சித் தேர்தல்களில் வட மாநில கதைதான்.
ஆனால் பொதுத்தேர்தல்களில் நிலைமை மாறியிருக்கிறது. தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள மக்களை தாங்கள் ஆதரிக்கும் கட்சிகளின் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வதும்; பின்பு அக்கட்சிகளிடமிருந்து பணத்தை வாங்கி மக்களுக்கு விநியோகிப்பதும் என்று கடமையாற்றுகின்றன. சமூக மாற்றத்திற்கான கட்சிகள் பலமடையும்போது கண்டிப்பாக இப்படைக்குழுக்களின் மோதலை எதிர்கொண்டே ஆகவேண்டும். அதிகாரத்தின் கீழ்மட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் இப்படைக்குழுக்கள் சமூக மாற்றத்தை விரும்புவதேயில்லை.
ஆக சமூக மாற்றத்திற்கானவர்கள் தேர்தலில் நிற்பதாயினும் டெபாசிட் மட்டும் போதாது. ஆயுதங்களும் அவசியம்.
எதை வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்ய அழைக்கிறார்கள்?
சமீபத்தில் கோவை கருமத்தம்பட்டி அருகே 5 மாவோயிஸ்ட் போராளிகள் கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. உடனே ஊடகங்களில் அதிகாரவர்க்கத்தின் முக்கியப் பிரிவினார்களான (முன்னாள், இந்நாள்) ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் போராளிகளுக்கு உபதேசம் செய்யத் தொடங்கிவிட்டனர். “போராளிகள் தங்கள் நோக்கத்தை மக்களிடம் வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்ய முன்வர வேண்டும்!” என்று முழங்கித் தள்ளினார்.
பிரதமர் கூட சட்டீஸ்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் “இது அமைதிக்கான காலம்” என்று மாவோயிஸ்டுகளுக்கு அறைகூவல் விடுத்தார்.
மக்களிடம் பொய்யை மட்டுமே சொல்வது என்றிருக்கும் இவர்களை என்ன செய்வது? வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்வதென்றால்-
1 துண்டறிக்கைகள் விநியோகிப்பது.
2. சுவரொட்டிகள் ஓட்டுவது.
3. பதாகைகள் (பேனர்கள்) கட்டுவது.
4. வெளியீடுகள் கொண்டு வருவது.
5. பொதுக் கூட்டங்கள், வாயில் கூட்டங்கள், மாநாடுகள் நடத்துவது.
6. ஊர்வலம் நடத்துவது.
7. ஆர்ப்பாட்டம் நடத்துவது.
8. அரங்க்க் கூட்டங்கள் நடத்துவது..... இவையெல்லாம்தான் பிரச்சார வடிவங்கள்.
இவையனைத்தும் சமூக மாற்றம் குறித்துப் பேசுகிற இயக்கங்களுக்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா? நாம் அரசின் ஆதரவோடு செயற்படும் முற்போக்கு இயக்கங்கள் எனும் கள்ளக்குழந்தைகள் பற்றிப் பேசவில்லை.
2009 ஈழ இன அழிப்பு காலத்தையொட்டி தமிழ்நாட்டிலுள்ள சிறிய, பெரிய அச்சகங்கள் அனைத்திற்கும் காவல்துறை சார்பாக கடிதம் அனுப்பப்பட்டு, அதன்பிறகு அச்சகத்தார் அனைவரையும் கூட்டி காவல்துறை கூட்டம் நடத்தியது. “அ.தி.மு.க; தி.மு.க முதலான தேர்தல் கட்சிகள் தவிர்த்து, பெரியார் திராவிடர் கழகம் முதலான அனைத்து முற்போக்கு இயக்கங்களுக்கும் துண்டறிக்கையோ – சுவரொட்டியோ அச்சடிப்பதாக இருந்தால் அதிலுள்ள வாசகங்களை அருகாமையிலுள்ள காவல் நிலையங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலுள்ள கியூ போலீசார் ஒப்புதலளித்தப்பிறகே அச்சிட்டு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தீவிரவாதிகளுக்குத் துணை போனதாக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்” என்று அந்த கூட்டத்தில் கடுமையாக எச்சரிக்கப்பட்டது.
இந்த அதிகார அத்துமீறலை செய்து கொண்டேதான் வெளிப்படையானப் பிரச்சாரத்திற்கு அழைக்கிறார்கள்!
பொதுக் கூட்டம், ஊர்வலம், மாநாடு நடத்துவது குறித்து சிந்திக்கவே முடியாது. இயக்கங்கள் எந்த தேதியில் இவைகளை நடத்த விண்ணப்பித்திருக்குமோ அதற்கு முந்தைய நாள்வரை காவல்துறை ‘இன்று போய் நாளை வா’ என இழுத்தடிக்கும். பிறகு நிகழ்ச்சிக்கு முந்தைய நாளில் வெள்ளைக்காரன் காலத்து உதவாத சட்டப்பிரிவின்படி அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி கடிதம் கொடுக்கும்.
அதுநாள் வரை செய்த உழைப்பு, செலவு அனைத்தும் வீணடிக்கப்படும். மக்கள் இயக்கங்களுக்கு கார்ப்பரேட்டுகளா பண உதவி செய்கின்றன? மக்களிடம் சிறுக, சிறுக சேர்த்த செல்வத்தை வீணடித்து, இயக்கத்தவரை சோர்வுக்குள்ளாக்கி, மக்களிடம் நம்பிக்கை இழக்க வைக்கிற காவல்துறையின் இந்த கேடுகெட்ட செயலைத் தொடர்ந்துகொண்டே வெளிப்படையான பிரச்சாரத்தை உபதேசிக்கிறார்கள்!
வேறு வழியில்லாமல் அரங்க கூட்டங்களுக்கு முயற்சித்தால், கியூ பிரிவினர் சம்பந்தப்பட்ட மண்டபத்தாரை சந்தித்து மிரட்டுவார்கள். இந்த இயக்கத்தவர் தடை செய்யப்பட்டவர்கள் என கூசாமல் பொய் சொல்லுவர். அதன்பிறகு அந்த மண்டபத்தார் பதிவு செய்த இயக்கத்தவரை அழைத்து, நீங்கள் பொய் சொல்லி பதிவு செய்து விட்டீர்கள்! பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்! என மல்லுக்கு நிற்பார்கள். நிகழ்ச்சி முடங்கும், அல்லது ஒலிப்பெருக்கியிலிருந்து, மின் தடைகள் என்று பல்வேறு இடையூறுகளால் நாசமாய்ப் போகும்.
இப்போதெல்லாம் கூட்டம் நடத்துவதற்கே நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல்.
இன்னமும் முழுவதுமாக மறுக்கப்படாமல் இருப்பது ஆர்ப்பாட்டத்திற்கான உரிமைதான். ஆனால் அதுவும் வெயில் கொளுத்துகிற மதிய வேளையில், ஆள் நடமாட்டமே இல்லாத சுடுகாட்டைப் போன்ற இடத்தில் அனுமதிக்கப்படும். ஒலிப்பெருக்கி கட்டக்கூடாது; பதாகை வைக்கக்கூடாதென ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கூடுதலாக ஆர்ப்பாட்டத்தைச் சுற்றி தடுப்புகள் வைக்கப்படும். யாரும் ஆர்ப்பாட்டம் செய்கிறவர்களை பார்த்துவிடாதபடி காவல்துறையினர் சூழ்ந்து நிற்பர். ஒரு பீதியை உருவாக்குகிற காவல்துறையின் இந்த தந்திரத்தால் நிகழ்ச்சி சீர்கெடும்.
இவ்வளவு அசிங்கங்களையும் சட்டத்தின் பேரால் செய்துவிட்டு வெளிப்படையான பிரச்சாரத்திற்கு அழைப்பவர்களுக்கு வெட்கமாயில்லை?
- திருப்பூர் குணா