இந்திரா காந்தி 1975இல் நெருக்கடி நிலையை அறிவித்து விட்டு, சனநாயக உரிமைகளை நசுக்கினார். நரேந்திர மோடியின் ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.

சனநாயக உரிமை-மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான கவிஞர் வரவரராவ் அய்தராபாத்திலும், சுதா பரத்வாஜ் ஃபரிதாபாத்திலும், வெர்னான் கோன்சால் வேஸ் மும்பை யிலும், அருண் பெரைரா சத்தீஸ்கரிலும், கவுதம் நவ்லகா தில்லியிலும் 28.8.2018 அன்று மகாராட்டிராவின் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். எந்தக் குற்றத்திற் காகக் கைது செய்யப்படுகிறார்கள் என்கிற விவரம்கூட அவர் களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இவர்களில் வெர்னான் கோன்சால் வேஸ், அருண் பெரைரா, வரவர ராவ் ஆகியோர் உடனடியாகப் புனேவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கவுதம் நெவ்லகா, சுதா பரத்வாஜ் ஆகிய இருவரையும் புனேவுக்குக் கொண்டு செல்ல, சம்பந்தப்பட்ட உயர்நீதி மன்றங்கள் அனுமதி அளிக்க மறுத்ததால் அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

Thirumurgan ghandhi 350கைது செய்யப்பட்ட அய்வரைப் பற்றிய சிறு குறிப்பு :

1. வரவரராவ்-புகழ்பெற்ற தெலுங்குக் கவிஞர். ‘விராசம்’ என்கிற பெயரிலான புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தை நிறுவியவர். பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடி வருபவர். பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் 11 ஆண்டுகள் சிறையில் இருந்த போதிலும், ஒரு வழக்கிலும் தண்டிக்கப்படவில்லை.

2. வெர்னான் கோன்சால்வேஸ் - எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் தொழிற்சங்கத் தலைவர். முன்பு கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர்.

3.சுதா பரத்வாஜ் - தொழிற்சங்கவாதி, வழக்குரைஞர், தில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் வருகைதரு பேராசிரியர். மக்கள் உரிமை சங்கத்தின் தேசியச் செயலாளர்.

4. அருண் பெரைரா-வழக்குரைஞர், மனித உரிமை செயற் பாட்டாளர், 2007இல் தேசத் துரோகக் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டு 2012இல் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டவர்.

5. கவுதம் நவ்லகா - மனித உரிமைப் போராளி, சன நாயக உரிமைக்கான மக்கள் கழகத்தின் உறுப்பினர், எழுத்தாளர். இவர்கள் அய்வரும் சட்ட விரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் புகழ்பெற்ற குடிகளாகக் கருதப்படும் ரோமிலாதாப்பர், தேவகி ஜெயின், பிரபாத் பட்நாயக், சதீஷ் பாண்டே, மஜன தருவாலா ஆகியோர் 30.8.2018 அன்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு 30.8.18 அன்றே விசாரித்தனர். புனேவுக்கு அழைத்து வரப்பட்ட மூவர் உட்பட, அய்வரையும் செப்டம்பர் 6 அன்று அடுத்த விசாரணை நடக்கும் வரையில் அவரவர் வீட்டுக் காவலில் வைக்க ஆணையிட்டனர். வழக்கு விசாரணையின்போது, நீதிபதி சந்தரசூட், “சனநாயகத்தில் எதிர்க்கருத்து என்பது ஒரு பாதுகாப்புச் சுவர் போன்றது; அதை ஒடுக்க முயன்றால் சனநாயகமே சிதையும்” என்று கூறினார்.

புனே அருகில் உள்ள கோரேகானில் 1818 சனவரி 1 அன்று பேஷ்வாக்களின் பெரும் படையைக்க் கிழக்கிந்திய கம்பெனியின் சிறிய படை போரில் தோற்கடித்தது. சித்பவன் பார்ப்பனர்களான பேஷ்வாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. கிழக்கிந்தியப் படையில் தீரமுடன் போரிட்டு மாண்ட மராட்டி யத்தின் தீண்டப்படாதவர்களான மகர்களின் வீரத்தைப் போற்றும் வகையில் கோரேகானில் வெற்றித்தூண் ஆங்கி லேய ஆட்சியால் எழுப்பப்பட்டது.

1927 சனவரி 1 அன்று அம்பேத்கர் இந்த வெற்றித் தூண் முன் நின்று வீரவணக்கம் செலுத்தினார். 2005 முதல் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 1 அன்று தலித் துகள் பெரும் எண்ணிக்கையில் இந்த வெற்றித் தூண் உள்ள இடத் தில் திரண்டு போரில் மாண்ட தலித்துகளுக்கு வீர வணக்கம் செலுத்தி வருகின்றனர். 2018 சனவரி 1 என்பது 200ஆவது ஆண்டு என்பதால் பல இலட்சம் தலித்துகள் கோரேகானுக்கு வந்தனர்.

இந்தியா சுதந்தரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்குப் பின்னும் உண்மையான ஆட்சி அதிகாரம் பார்ப்பனர்களிடம் இருக்கிறது. அதேபோல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரம் புனேவின் சித்பவன் பார்ப்பனர்களிடம் உள்ளது. எனவே சித்பவன் பார்ப்பனனான இரண்டாம் பாஜிராவின் ஆட்சி 1818 வீழ்த்தப்பட்டதன் 200ஆம் ஆண்டை, ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. இந்தியாவை ஆளும்போது வெற்றி விழாவாக நடத்த அனுமதிப்பதா என்று சங்பரிவாரங்கள் குமுறின. எனவே 2018 சனவரி 1 அன்று கோரேகானுக்கு வந்த தலித்துகளைப் பல இடங்களில் கடுமையாகத் தாக்கினர். இதற்கு எதிர் வினையாக சனவரி 2 அன்று தலித்துகள் மகாராட்டிரம் முழுவதும் கிளர்ச்சி செய்தனர். பல இடங்களில் வன்முறையாக இது மாறியது. சனவரி 3 அன்று மராட்டியம் முழுவதும் முழு கடையடைப்பும் வேலை நிறுத்தமும் நடத்தப்பட்டன.

2018 சனவரி 1 அன்று தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியது. ‘சிங் பிரதிஷ்தன்’ தலைவர் சம்பாஜி பிடே மற்றும் ‘இந்து ஏக்த மஞ்ச்’ தலைவர் மிலிந்த எக்போடே ஆகிய தீவிர இந்துத்துவவாதிகள் என்று தலித்துகள் காவல் நிலையத்தில் சனவரி 2 அன்று புகார் அளித்தனர். இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் பா.ச.க.-சிவசேனா கட்சிகளின் ஆட்சியில் இருக்கும் மகாராட்டிர அரசு 31.12.2017 அன்று கோரேகானில் தலித்துகள் நடத்திய ‘போர் முழக்கம்’ (Elgar

Parishad)  எனும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் வன்முறை யைத் தூண்டும் வகையில் பேசிய பேச்சுகளே சனவரி 1 அன்று நடந்த கலவரத்துக்குக் காரணம் என்று கூறுகிறது. ஏனெனில் அப்பொதுக்கூட்டத்தில், “புதிய பேஷ்வாக்களான பா.ச.க. ஆட்சியை ஒழிப்போம்” என்று பேசியதை வன்முறைக்கு வித்திட்டதாக மகாராட்டிர பா.ச.க அரசு இட்டுக் கட்டுகிறது.

2006ஆம் ஆண்டு மகாராட்டிரத்தில் கயர்லாஞ்சில் போட்மாங்கே குடும்பத்தினர் ஆதிக்கச் சாதியினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட பிறகு, தலித்துகள் ‘கபீர்கலா மஞ்ச்’ என்கிற அமைப்பின் பெயரால் இந்துத்துவத்துக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இந்தக் ‘கபீர்கலா மஞ்ச்’ அமைப்புதான் 31.12.2017 அன்று கோரேகானில் பொதுக்கூட்டம் நடத்தப்படு வதற்கு உறுதுணையாக இருந்தது. ஆனால் இதை முன்னின்று நடத்தியவர்கள் உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி. கவாந்த் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஜி. கோல்சே பாட்டீல் ஆவர்.

ஆயினும் மகாராட்டிர பா.ச.க. ஆட்சி தலித்துகளுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கும் ஒரு பாடம் புகட்ட முடிவு செய்தது. கோரேகான் மாநாட்டுக்கும், 200ஆவது வெற்றி விழா நிகழ்வுக்கும் உதவியவர்கள் என்ற வகையில், மனித உரிமைப் போராளிகளான சுதிர் தவாலே, சுரேந்திர காட்லிங், கல்லூரிப் பேராசிரியர்களான சோமாசென், மகேஷ் ரவுட், ரோணா வில்சன் ஆகியோர் சூன் 7 அன்று கைது செய்யப்பட்டனர்.

இவர்களின் வீடுகளைக் சோதனையிட்டதில் கிடைத்த ஆவணத்தின்படி, மாவோயிஸ்டுகள் பணம் கொடுத்து கோரே கான் மாநாடு நடந்தது என்றும், நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ச.க. தலைவர்களை, இராசிவ் காந்தியைக் கொன்றது போல் கொல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது. இத்திட்டத்தில் தொடர்பு உள்ளவர்கள் என்கிற வகையில் 28.8.2018 அன்று இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப் பிட்டுள்ள மனித உரிமைப் போராளிகள் கைது செய்யப்பட்டனர் என்றும் காவல் துறை கூறுகிறது.

இது  மகாராட்டிர அரசும் அதன் காவல்துறையும் எடுக்கும் கைது நடவடிக்கைகள் என்கிற போதிலும் நரேந்திர மோடி யின் ஆட்சியே இவற்றைத் திட்டமிட்டுச் செயல்படுத்துகிறது.

பா.ச.க.வின் பினாமி ஆட்சியாக இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் தில்லியின் எசமானர்களின் ஆணை யைத் தலைமேல் ஏற்று, தமிழ்நாட்டில் மக்களின் உரிமை களுக்காகப் போராடுவோர் மீது கொடிய ஒடுக்குமுறைகளை ஏவி வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, மக்கள் நடத்திய நூறாவது நாள் போராட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு 13 பேரைக் கொன்றது. நூற்றுக்கும் மேற்பட்டவர் படுகாய மடைந்தனர். இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை நூற்றுக்கணக்கில் கைது செய்தது. மக்கள் அதிகாரம் அமைப் பைச் சேர்ந்த ஆறு பேரைக் குண்டர் சட்டத்தில் போட்டது. இதையடுத்து சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைக்கு எதிராகப் போராடுபவர்களை ஒடுக்கி வருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கூட்டத்தில் பேசியதற்காக, திருமுருகன் காந்தியைக் கைது செய்தது. நீதிமன்றம் அவரை விடுதலை செய்ததும், 2017இல் பெரியார் சிலைக்கு அவர் அனுமதி யின்றி மாலை போட்டதற்காக சட்ட விரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

ஒடுக்கப்பட்டோர், பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர் ஆகியோரின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் ஆதரவாகப் பேசுவோரும், அரசின் கொள்கைகள், செயல்பாடுகளை விமர்சனம் செய்வோரும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரிகள், தேசத்துரோகிகள், நகர்ப்புற நக்சலைட்டுகள் என்று அரசு களால் முத்திரைக் குத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் மோடியின் ஆட்சியில் அதிகரித்து வருகின்றன.

இந்திய அரசின், தமிழக அரசின் மக்கள் உரிமை களைப் பறிக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதன் மூலம் சனநாயகத்தைக் காப்போம்.

Pin It