பனி கொட்டும் குளிர் காலைப் பொழுது, ஒரு பச்சிளம் குழந்தையின் அழு குரல் இதயத்தில் முட்டியது. தூக்கம் பிடிக்காமல் குடிசையிலிருந்து வெளியே வந்தாள் மாரி. குழந்தையின் அழுகுரல் எங்கிருந்து வருகிறது? - சுற்றிலும் பார்த்தாள் மாரி. எதிரிலிருந்த குப்பைத் தொட் டியை எட்டிப் பார்த்தாள். பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை எறும்புகள் மொய்த்துக் கடிக்க, வலியிலும் குளிரிலும் துடித்துக் கதறிக் கொண்டிருந்தது. பதறிப்போன மாரி குழந்தையை எடுத்தாள். எறும்புக்கடி, குளிர், அதனுடன் காய்ச்சலும் சேர்ந்து குழந்தையை வதைப்பதை உணர்ந்தாள். அள்ளி அணைத்துக் கொண்டு குடிசைக்குத் திரும்பினாள். உடனடியாகக் குழந்தைக்குப் பால்தர வேண்டுமே என்கிற பதைப்புடன் குடி மயக்கத்தில் கிடந்த கணவனை உலுக்கிக் குழந்தையின் கதையைச் சொல்லிப் பால் வாங்குவதற்கு ஏதாவது காசு இருக்கிறதா? என்று கேட்டாள்.

"நான் குடிப்பதற்கே காசு இல்லை. உனக்கென்னடி ஊதாரித்தனம்?’’ என்று திட்டிவிட்டுப் படுத்துக் கொண்டான். இரண்டொரு நாள் எப்படியோ சமாளித்தாள் மாரி. குழந்தைக்கு `சின்னி’ என்று பெயரிட்டாள்.

வயதான காலத்திலும், கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து குடிகாரக் கணவனையும் இந்த அனாதைக் குழந்தை சின்னியையும் எப்படிக் காப்பாற்றுவது? என்கிற கவலை அவளை அழுத்தியது.

அவளைப் பரிவுடன் பார்க்க அந்தக் குடிசையில் இருந்த ஒரே உயிர், அவள் வளர்த்த நாய் `பாணி’தான்.

ஒருநாள் வேலையிலிருந்து குடிசைக்குத் திரும்பிய மாரி நம்ப முடியாத ஆச்சரியத்தைக் கண்டாள். நான்கு குட்டிகளை ஈன்றிருந்த `பாணி’ குழந்தை சின்னியின் வாய்க்குள் தனது காம்புகளில் ஒன்றைப் புகுத்திப் பாலூட்டிக் கொண்டி ருந்தது.

மானுடத் தாய் போலவே தனது முன்னங்கால் (கை) ஒன்றை குழந்தைமீது வாஞ் சையுடன் போட்டு அணைத் துக் கொண்டிருந்தது. சின்னி ஆனந்தமாகப் பால் குடித்துக் கொண்டிருந்தான். `சின்னி’க்கு ஒரு தாய் கிடைத்து விட்ட மகிழ்ச்சி யில், கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள் மாரி.

அன்னை `பாணி’க்கும் குழந்தை `சின்னி’க்கும் நாளுக்கு நாள் பந்தமும் பாசமும் செழித்து வளர்ந்தன. தனது நான்கு குட்டிகளை விடவும் இந்தப் பிள்ளை மீது `பாணி’க்குத் தணியாத அன்பு.

அந்தக் குட்டிகளெல்லாம் வளர்ந்து எங்கெங்கோ ஓடி விட்டன. பாணியும் சின்னியும் மட்டும் பிரிக்க முடியாத தாய் சேயாக... அந்தப் பகுதி மக்களே பக்தியுடன் பார்த் துச் செல்லும் விதத்தில் அன்புக்கும் பாசத்துக்கும் காவியமாய்த் திகழ்ந்தார்கள்.

மூன்று ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனாலும், `சின்னி’ தன் `தாயிடமே’ பால் குடித்துக் கொண்டிருக்கிறான்.

அவன்மீது அன்பு கொண்ட சில குழந்தைகள் சின்னியைத் தங்களுடன் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்கள். கூடவே அவள் தாய் `பாணி’யும் செல்கிறாள். பள்ளி முடியும் வரையிலும் பள்ளியின் வராந்தாவில் ஓர் ஓரமாகப் படுத்துக் கிடந்து விட்டு, பள்ளி விட்டதும் சின்னியை அழைத்துக் கொண்டு மாரியின் குடிசைக்கு வந்து விடுகிறாள் `பாணி.’

child and his mother 'dog'

இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த போது, மாரி இறந்து விட்டாள். மாரியின் கணவன் அன்றே `பாணி’யையும் `சின்னி’யையும் தன் குடிசையிலிருந்து விரட்டி விட்டான்.


மாரியின் தங்கை சகாயம் இப்போது பாணிக்கும் சின்னிக்கும் தன் குடிசையில் புகலிடம் தந்திருக்கிறாள்.

இந்த உணர்ச்சிமிகு காவியம் பெங்களூர் தர்சனி பாளையம் பகுதியிலுள்ள குடிசைப்பகுதி மக்களையும் தாண்டி பத்திரிகைகளாலும்கூட விவரிக்கப்படும் போதுகூட ஒரே ஒரு மனிதன் மட்டும் அந்தக் குழந்தையிடம் எந்தப் பரிவும் காட்டாது முகம் திருப்பிச் செல்கிறான்.

அவன் அதே தெருவில் தான் இருக்கிறான். அவன் தான் சின்னியின் இறந்து போன தாயை மோகத்தில் அணைத்து, கோபத்தில் உதைத்துக் கொடுமைப் படுத்திய கணவன். அவனுக்குப் பிறந்த குழந்தையைத் தான் `பாணி’ பாசத்துடன் வளர்த்து வருகிறாள். "மற்ற எல்லா மிருகங்களையும் விடப் பசுவைத் தான் கோமாதா என்கிறோம். நாய்ப் பாலைக் குடிக்க முடியுமா?’’ என்று `கிரிமினல்’ சங்கராச்சாரி கேட்டது இப்போது நினைவுக்கு வருகிறது.

நாய்ப்பால் குடித்து வளர்ந்தவன்தான் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் தந்தை, அவன் பெயர் ரோமுலஸ். அவன் பெயரால்தான் ரோமாபுரி நிர்மாணிக்கப்பட்டது.

சங்கராச்சாரி குடிப்பது திருட்டுப்பால். எந்தப் பசுவும் மனிதர்களுக்காகச் சுரப்ப தில்லை. ஆனால், `பாணி’யோ தாயினும் சாலப் பரிந்தூட்டுகிறது.

சங்கராச்சாரி கூட்டம் சின்னியை அவதார புருஷனாக்காமல் இருந்தால் போதும். 

- ஆனாரூனா

(தமிழ்ச் சான்றோர் பேரவை செய்திமடல் - ஆகஸ்ட் இதழிலிருந்து)

Pin It