Aanaaroonaதேர்தல் அலைகள் எழத் தொடங்கி விட்டன.

கனவுகள், கணக்குகள், திட்டங்கள், தீர்மானங்கள், `போர்முறை’களுடன் அரசியல் கட்சிகள் சிலிர்த்துக் கொள்கின்றன. இம்மாதிரியான `சிறுபிள்ளைத் தனமான’(!) நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி நிற்பது போல் பாவனை செய்யும் ஆதிக்க சக்திகள் கட்சிகளை விடவும் வேகம் காட்டுகின்றன. சில ஏடுகள் தேர்தல் கணிப்புகளை வெளியிடத் தொடங்கி விட்டன.

தி.மு.க. கூட்டணிக்கு இத்தனை இடங்கள், அதிமுக - மக்கள் கூட்டணி(?)க்கு இத்தனை இடங்கள் என்பதுடன் அந்தக் கருத்துக் கணிப்பு நிற்கவில்லை.

நடிகர் விஜயகாந்துக்கு எத்தனை விழுக்காடு ஆதரவு என்று புள்ளி விவரங்களை யும் அள்ளி விடுகின்றன.

விஜயகாந்த் இன்னும் தனது கட்சிப் பெயரைக்கூட அறிவிக்கவில்லை. ஆனால், அவரை எப்படியாவது அரசியலுக்குக் கொண்டு வந்து விடவேண்டும் என்கிற அக்கறை இந்தக் கருத்துக் கணிப்புகளில் தொற்றிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு இழுத்து அவருக்கு முடிசூட்ட ஆசைப் பட்ட ஆதிக்க சக்திகள் அது முடியாமற் போனதால் இப்போது விஜயகாந்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கின்றன.

நடிகர் எம்.ஜி. இராமச்சந்திரன் அன்றைய மத்திய அரசின் உதவி யுடன் அரசியல் கட்சி தொடங்கி ஆட்சியில் அமர்ந்த கதை பல நடிகர்களுக்கு நாடாளும் ஆசையை வளர்த்து விட்டது. நடிகர்கள் நாடாளக் கூடாதா? ஏன் கூடாது? நடிகர்கள் தீண்டக் கூடாதவர்களும் அல்ல; அரசியல் ஆளுமை அவர்களுக்கு அப்பாற்பட்டதும் அல்ல.

MGRSivajiRajiniBagyaraj

ஆனால், ஓர் அரசியல் கட்சி தொடங்கும் அளவுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம் என்று அவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

திரைப்படங்களால் கிடைத்த புகழும் பணமும் மாத்திரமே ஓர் அரசியல் கட்சி தொடங்குவதற்கான மூலதனமாகிவிட முடியாது.

``சரி. வேறென்ன தகுதி வேண்டும்?’’

கட்சி தொடங்கும் நடிகர்கள் திருப்பிக் கேட்டால், இன்று மௌனமே பதிலாக இருக்கிறது. ``தேர்தல் பிரச்சாரங்களுக்கு மட்டும் நடிகர்கள் வேண்டும்; ஆனால், அந்த நடிகர்கள் கட்சி தொடங்கக் கூடாது என்பது என்ன நியாயம்?’’ - நடிகர்கள் ஆத்திரப்படலாம்.

``அமெரிக்காவிலேயே நடிகர் ரீகன் ஆட்சிக்கு வர வில்லையா?’’ - ஆதாரம் காட்டலாம். அமெரிக்காவில் அரசியல் என்பது இலட்சியங்களையோ, தத்துவங்களையோ முற்போக்கான நடவடிக்கைகளையோ சார்ந்தது அல்ல. அங்குள்ள குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் தத்துவ முரண்பாடோ, கருத்து மோதலோ கிடையாது. அந்தக் கட்சிகளின் திட்டம் என்பது வெறும் நிர்வாகம் சம்பந்தப்பட்டதே. உலக நாடுகளைக் கொள்ளையடிப்பது என்பதே இருகட்சிகளுக்குமான இலட்சியம், கொள்ளை. அதை எவ்வாறு செய்வது என்பதில்தான் அங்கே அரசியல் போட்டி.

Vijaykanthஇங்கே மாத்திரம் என்ன நடக்கிறதாம்? கொள்கை - இலட்சியம் - தியாகம் என்கிற பின்னணியில்தான் அரசியல் கட்சிகள் இயங்குகின்றனவா? என்று கேட்கலாம். பெரும்பாலான கட்சிகள் வெறும் பதவிப் போட்டியாகவே அரசியலைக் கருதுகின்றன என்பதும் உண்மை தான்.

கொள்கையற்ற கட்சிகள் இருக்கின்றன என்பதால் கொள்கையே தேவையில்லை என்று மக்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.

பொது வாழ்க்கையில் புழுதி படாமல், ஒப்பனை கலையாமல், இழப்பு எதுவும் இல்லாமல், திரைப்படக் கவர்ச்சியையும், பாமர மக்களின் அப்பாவித் தனத்தையும், சந்தர்ப்பவாதிகளின் ஆதாய ஆதரவையும் வைத்து அரசியல் கட்சி தொடங்குவது எளிதுதான் என்றாலும், அது சமூக நலனுக்கு ஆபத்தானது.

இம்மாதிரியான, சிம்மாசனக் கனவுள்ள நடிகர்கள் ஆட்சிக்கு வந்தாலும் ஆதிக்க சக்திகளுக்கும், பழமைவாதிகளுக்கும், பிற்போக்காளர்களுக்கும் எடுபிடிகளாகவே இருப்பார்கள்.

இவர்கள்தான் ஆதிக்க சக்திகளுக்குத் தேவை.

இப்போது விஜயகாந்த் கிடைத்திருக்கிறார்.

ஆதிக்க சக்திகளின் நோக்கம், இந்த `ஆயுதத்தை’க் கொண்டு திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாதா? என்பதுதான்.

``இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குத் திராவிட இயக்கத்தின் தேவை இருக்கும்’’ என்று அறிஞர் அண்ணா கணித்திருந்தார்.

Periyarஇந்த ஐம்பது ஆண்டுகளுக்குள் திராவிட இயக்கம் எந்தெந்த இலட்சியங்களை முன்வைத்து அரசியல் களத்தில் இறங்கியதோ அந்த இலட்சியங்களை அது நிறைவு செய்திருக்கும் என்பது அண்ணாவின் மதிப்பீடு.

தேவைதான் கண்டுபிடிப்பின் தாய் என்பார்கள். திராவிட இனத்தின் தவிர்க்க முடியாத சமூக - அரசியல் - பொருளாதாரத் தேவைதான் திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்தது. அது தனது இலட்சியப் பயணத்தில் வீர நடைபோட்டுப் பல வெற்றி மாலைகளைச் சூடியது.

பாராண்ட மன்னர்களையே வீழ்த்திய பகைவர்கள் இந்த ஈரோட்டுப் பூகம்பத்தால் அஞ்சி நடுங்கினார்கள்.

சேரிகளுக்கும் சூரியன் உதித்தது.

கோரிக்கை வைக்கும் இடத்திலிருந்து ஆணை இடும் இடத்திற்குச் செல்ல வேண்டும். தேர்தலில் நின்று, வாக்குகளை வென்று அரசதிகாரத்தைக் கைப்பற்ற வேண் டும் என்று அண்ணாவின் கட்சி தீர்மானம் செய்த போது கழகத் தோழர்களின் இதயமெல்லாம் விம்மிப் புடைத்தன. அது பதவி சுகம் கிடைக்கும் என்கிற பரவசத்தால் அல்ல.
சூத்திரர்கள் - அடிமைகள் என்று எள்ளப்பட்ட ஓர் இனம் `சூத்திர தாரி’களையும் சூழ்ச்சிக் காரர்களையும் வீழ்த்தும் நேரம் நெருங்கி விட்டது. அடிமைகளாய் நாங்கள் நடந்த தெருக்களில் இராணுவ வீரர்களாய் நடக்கப் போகிறோம் என்கிற செயலூக்கத்தின் துடிப்பு அது.

ஆனால், 1967 பொதுத் தேர்தலில் வெற்றிச் செய்திகள் வந்து கொண்டிருந்த போது தோழர்கள் எல்லாம் கொண்டாடினார்கள்; அண்ணாவோ உற்சாகம் கொள்ளவில்லை. தேர்தல் வெற்றிக்காக இலட்சியங்களை இழக்கிறோமோ என்கிற பதைப்பு அண்ணாவுக்கு ஏற்பட்டது. (கலைஞர் அதை முரசொலியிலும் பதிவு செய்திருக் கிறார்.)

``இலட்சியம் என்பது மானம் காக்கும் வேட்டி போன்றது. பதவி என்பது கூடுதல் அலங்காரமான துண்டைப் போன்றது’’ என்று அண்ணா பலமுறை சொன்னதுண்டு. இன்றைக்கு `அங்கவஸ்திரத்தின்’ (துண்டின்) அழகு போதாதா; வேட்டி எதற்கு என்கிற மனோபாவம் பெரிதும் வளர்ந்து விட்டதைப் பார்க்க அந்தோ, அண்ணா இல்லாமற் போனது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று!

திராவிட இயக்கத்தின் தேவையாக அண்ணா கணித்த 50 ஆண்டுகள் இதோ முடியப் போகின்றன.

அண்ணா எதிர்பார்த்தவாறு திராவிட இயக்கம் தனது இலக்கை அடைந்து விட்டதா? தந்தை பெரியார் தமது இறுதி நேரத்தில் ``ஐயோ என் மக்களை, இன்னும் `சூத்திரர் களாக’வே - `இழிந்தவர்களாக’வே - விட்டுச் செல்கிறேனே என்று மனங்கசந்து, உருகினாரே அதுதான் எஞ்சி நிற்கிறது!

நாம் நம்பிக்கை குலைந்தவர்கள் அல்லர். `பெஸிமிஸ்டுகள்’ அல்லர். ஆனால், உண்மைகளை ஏற்கத் தயங்குகிறவர்களும் அல்லர்.

திராவிட இயக்கம் தனது இலக்கைத் தவற விட்டுவிட்டு எங்கோ செல்கிறது என்பதை ஒப்புக் கொண்டே தீர வேண்டும். விதை மரமாகும்; மரமும் ஒருநாள் மறைந்து போகும் - என்பதுபோல், திராவிட இயக்கமும் தனது அந்திப் பொழுதை நெருங்கிவிட்டதா?

இந்த இயக்கத்திலே இன்று `நாத்திகர்கள்’ எத்தனை பேர்?
பகுத்தறிவாளர்கள் எத்தனை பேர்?
சோஷலிசத்தின் ஆதரவாளர்கள் எத்தனை பேர்?
இலட்சியங்களுக்காகப் போராடும் உறுதி மிக்கோர் எத்தனை பேர்?
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று எண்ணுவோர் எத்தனை பேர்?
``சேரர் வாழ்ந்த சிறப்பிடம் எங்கே?
வீரர் பாண்டியர் அரசேன் கவிழ்ந்தது?
சோழர் உலவிய சோர்விலா நாட்டில்
கோழைக் கொள்கை குவிந்தது எவ்விதம்?...’’

- வெடித்தன வினாக்கள், கலைஞர் நெஞ்சில் 1945 இல். அது பெருநெருப்பாய் மூண்டு `நாட்டு வெறிபிடித்த காளையரை’ உருவாக்கியது. எல்லாம் இன்றென்ன ஆயின? கலைஞர் இருக்கும்போது என்ன பயம்? - கேட்கலாம். அதில் நியாயம் இருக்கலாம். ஆனால், இதுவே பொறுப்பற்றுப் பதுங்கி மறையும் பம்மாத்து இல்லையா?

இது தலைவர் மீதுள்ள நம்பிக்கையையும் மதிப்பையும் காட்டுவதாகத் தோன்றலாம். ஆனால், உண்மை அதுதானா?

கலைஞர் தான் ஏறுகிற ஒவ்வொரு மேடையிலும், எழுதுகிற ஒவ்வொரு பக்கத்திலும் தமிழினம் வாழ்ந்த கதையைச் சொல்லி, வீழ்ந்த விவரத்தைச் சொல்லி, இந்த இயக்கத்தின் தவிர்க்க முடியாத் தேவையைச் சொல்லி, பகுத்தறிவை, இனஉணர்வை, சோஷலிசக் கருத்துக்களை, மத - மூட நம்பிக்கைகளால் ஏற்படும் தீமைகளை, எடுத்தெடுத்துச் சொல்லி எழுதி எழுதி வருகிறாரே, எத்தனை பேர் அவருடைய தவிப்பை நெஞ்சில் வாங்கிக் கொண்டார்கள்?

திராவிட இயக்கம் என்றால் அறிவியக்கம்.
திராவிட இயக்கம் என்றால் மனிதாபிமானம் மிகுந்த போர்க்குணம்.
திராவிட இயக்கம் என்றால் இலட்சிய இளைஞர்களின் பாசறை என்று அறிமுகமான இந்த இயக்கத்தின் இன்றைய நிலைமை என்ன?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழக ஆட்சி இரண்டு முறை கவிழ்க்கப்பட்டது. ஆயிரக் கணக்கானோர் சிறைப்பட்டார்கள். சிறைக் கொடுமைகளால் சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் கொல்லப்பட்டார்கள். ஆற்காடு வீராசாமி, முரசொலி மாறன், ஸ்டாலின் போன்றவர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார்கள்.

என்ன நடக்கிறது நாட்டில் என்று எழுதவும் உரிமை இல்லை.

இந்த அராஜகத்தை எதிர்த்து கலைஞர் மாத்திரமே தன்னந்தனியே வீதிக்கு வந்து போராடினாரே தவிர, இயக்கத்தில் என்ன எழுச்சி ஏற்பட்டது.

தடை என்றால், அணையுடைத்த வெள்ளம் போல் படைதிரண்ட காலம் எல்லாம் வெறும் கனவா? பழங்கதையா?

கேரளத்தில் ஈ.எம்.எஸ். ஆட்சி கலைக்கப்பட்ட போது நாடே பற்றி எறிந்தது. கிளர்ச்சி இல்லாத நாளே இல்லை.

மேற்கு வங்கத்தில் ஆட்சி கலைக்கப்பட்டபோது, இனி கைவைத்துப்பார் என்பது போல் மார்க்சிஸ்ட் கட்சி வலிமை பெற்றது. வாக்கு பலத்தால் மாத்திரமல்ல போர்க்குணத்தாலும்.

ஆந்திரத்தில் என்.டி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்ட போது, டெல்லியையே கலக்கியது தெலுங்கு தேசம். கலைக்கப்பட்ட ஆட்சி மீண்டும் அப்படியே தரப்பட்டது அந்தக் கட்சி நடத்திய போராட்டங்களால்.

Karunanidhi and Annadurai

தமிழகத்தில்?

ஆதிக்க இந்தி எதிர்ப்புப் போராட்டமும், விலைவாசி உயர்வுக்கெதிரான போராட்டமும், முட்டாள்கள் - நான்சென்ஸ் - என்று நேரு பழித்த போது, எழுந்த ஆவேச எழுச்சியும், பகுத்தறிவுப் பிரச்சாரத்தில், ஆதிக்க சக்திகளுக்கெதிரான அணி வகுப்பில் காட்டிய போர்க் குணமும் அர்ப்பணிப்புணர்வும், பட்டு திர்ந்து விட்டனவா?

கொடுமைகளுக்கெல்லாம் சிகரமாய் ஒரு நள்ளிரவில் நேர்மையும் நாகரிகமும் தலைகுனியும் விதத்தில் கலைஞர் கைது செய்யப்பட்டு இழிவு செய்யப்பட்டார். அது கலைஞர் என்கிற ஒரு தனி நபருக்கு நேர்ந்த அவமானம் அல்ல. தமிழினத்தின் மான உணர்ச்சி மீது விழுந்த அடி; வரலாற்றில் பதிந்த களங்கம்.

காலித்தனத்தைத் தடுக்க வந்த முரசொலிமாறனும் டி.ஆர்.பாலுவும் கைது செய்யப்பட்டார்கள். அன்று இழுத்தெறியப்பட்ட போதுதான் மாறனின் இறுதி முடிவு செய்யப்பட்டது. சரியாகச் சொல்வதானால் முரசொலி மாறன் படுகொலை செய்யப்பட்டார். தாக்கப்பட்ட மாறனும் டி.ஆர்.பாலுவும் அப்போது மத்திய அமைச்சர்கள். மத்திய அமைச்சர்களுக்கே இந்தக் கதை.

இதைவிடக் கேவலம் உண்டா?

இவ்வளவு நடந்தும், சோகத்திலும், கண்ணீரிலும் உறைந்து தமிழன் செயலற்று நின்றானே தவிர, மான உணர்ச்சியால் விம்மி எழவில்லை.

சுயமரியாதை இயக்கமாய் முகிழ்த்து புரட்சிகரமான கருத்துக்களால் சுடர்ந்து, விடியலைப் பறித் தெடுக்க வீறு கொண்டெழுந்த ஓர் இயக்கம், சோதனைக் காலத்தில் மானங்கெடச் சுருண்டு கிடந்ததை எந்தத் திரையாலும் மறைத்து விட முடியாது. எத்தனை கவிதைகளாலும் துடைத்துவிட முடியாது!

திராவிட இயக்கத்தில் இன்று அறிவொளியும் மங்கி வருகிறது. போர்க்குணமும் தீய்ந்து விட்டது.

இந்தத் தாழ்ச்சியும் தகர்வும் நேர்ந்தது எப்படி?

திராவிட இயக்கத்தின் இலட்சிய முழக்கங்களும், பற்றுறுதிவாய்ந்த தொண்டர்களும், சிறைக் கொடுமைகளுக்கு அஞ்சாத தீரர்களும், அவர்களால் மூண்டெழுந்த அரசியல் எழுச்சியும் தமிழக மெங்கும் பற்றிப் பரவியிருந்த நேரத்தில், தேர்தல் களத்தில் எந்த வாய்ப்பையும் தவற விடக் கூடாது என்று முன்னணி நடிகரான எம்.ஜி.ஆரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினார் அண்ணா.

``தம்பீ, தேர்தல் நிதியாக நீதரும் இலட்சம் ரூபாய் பெரிதல்ல. உன் முகத்தை மக்களுக்குக் காட்டு அது இலட்சக்கணக்கான வாக்குகளை அள்ளித்தரும்’’ என்கிற அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு முக்கியத்துவம் அளித்தார் அண்ணா. அங்கிருந்துதான் திராவிட இயக்கத்துக்கு எதிரான காய் நகர்த்தப்பட்டது.

நடிகர்கள் - கவிஞர்கள் போன்ற `உணர்வைத் தொடும்’ பணியிலுள்ளோரை அரசியலுக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தார் ஐயா.

ஏனெனில் நமது மக்கள் பாமரர்கள். ஆழமான சிந்தனைக்குப் பழக்கமில்லாதவர்கள். எளிதில் உணர்ச்சி வயப்படுகிறவர்கள். இந்த மக்களுக்கு முன் நடிகர்களை நிறுத்துவது விஞ்ஞானத்தின் இடத்தில் கவர்ச்சியை வைப்பதாகும் என்பதில் எச்சரிக்கையாக இருந்தார் பெரியார்.

அண்ணாவோ நடிகர்களிடம் பரிவுடன் நடந்து கொண்டார். நடிகர்களுக்குப் போராட்டங்களிலிருந்து விலக்களித்தார்.

போராடாமல், புழுதி படாமல், புகழும் பீடமும் கிடைக்கும்போது ஆசை யாரை விடும்? எம்.ஜி.ஆருக்கு வந்த ஆசை பாக்கியராஜ், ராஜேந்தர், ராமராஜன், ரஜினி என்று பரவி இப்போது விஜயகாந்துக்கு வந்திருக்கிறது.

அண்ணாவும், கலைஞரும் எழுத்தாளர்கள் - படைப் பாளிகள் என்பதால், வெறும் பொழுது போக்குச் சாதனமாக இருந்த திரைப் படங்களைக் கருத்துக்களின் அரங்கேற்ற மேடையாக்கினார்கள். அதிலே நடிகர்களுக்கும் பங்குண்டு.

ஆனால், நமது மக்களோ நடிகர்கள்தான் கதையின், பாடல்களின் கருத்துகளுக்கே சொந்தக்காரர்கள் என்பதாய் நினைத்தார்கள்.

``நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்’’ என்று நடிகர் பாடினால், அண்ணாவும் கலைஞரும் பாராட்டிய நடிகர் சும்மாவா பாடுவார். அவரை ஆணையிடும் இடத்தில் ஏன் வைக்கக் கூடாது என்று மயங்கினார்கள். சீர்திருத்தக் கருத்துக் களைப் `பரப்பிய’ நடிகர் பிறகு மெல்ல மெல்லத் தனது கருத்துக்களைத் திரைப் படங்களில் திணித்தார்.

மதக் கருத்துக்களை முன் மொழிந்தார். பகுத்தறி வியக்கம் திகைத்து விழித்தது. ஆனாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

Karunanidhiநடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருப்பதி சென்று வழிபட்டு வந்தபோது, திருப்பதி கணேசா திரும்பிப்பார் என்று கொதித்த கட்சியில் இன்று விபூதி, குங்குமப் பொட்டுக்களுடன் எந்தக் கூச்சமும் இல்லாமல் திரியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மத நம்பிக்கைகளிலிருந்து விடுபடாமல், தமிழனின் வாழ்க்கையில் விடுதலை வந்துவிடாது என்று இன்று கலைஞரும், பேராசிரியரும் மாத்திரமே கவலைப் படுகிறவர்களாக இருக்கிறார்கள்.

கட்சியால் வளர்ந்த எம்.ஜி.ஆர். கடைசியில் கட்சியை அழிப்பதற்கே கங்கணம் கட்டிக் கொண்டு நின்றார்.

எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசத்திலிருந்து தி.மு.க. கற்றுக் கொண்ட பாடம் தான் என்ன? பத்திரிகை, மேடை, திரை என்று ஊடகங்கள் அனைத்தையும் கருத்துப் பிரச்சாரத்துக்குப் பயன் படுத்தினார் கலைஞர்.

இந்த இலட்சியப் போராட்டத்தில் அதற்காக அவர் எவ்வளவோ இழந்தார். ஆனால், கலைஞரின் வெற்றி என்பது அந்த இழப்பால், உழைப்பால், படைப்புகளால்தான் உறுதி செய்யப்பட்டன.

அவரால் வளர்ந்த சிலர் இன்று பத்திரிகை நடத்துகிறார்கள்.

தொலைக்காட்சி நடத்துகிறார்கள். ஆனால், கலைஞருக்கும் பகுத்தறிவுக்கும் எதிராக பத்திரிகை என்றாலும் தொலைக்காட்சி என்றாலும் அவற்றில் முழுக்க முழுக்க வர்த்தக ரீதியிலான கலாச்சாரச் சீரழிவுகள் அரங்கேற்றப்படுகின்றன.

அறிவாலயத்தின் கீழ்த் தளத்தில் தமிழ் செம்மொழியாக அறிவிக்க கலைஞர் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்காகத் தமிழறிஞர்களும் தமிழுணர்வாளர்களும், கலைஞருக்கு மாலை சூட்டி மகிழும் அதே நேரம் மேல் தளத்திலிருந்து `பெஸ்ட்டு கண்ணா பெஸ்ட்டு’ என்று கும்மாள மிடுகிறார்கள்.

இது கலைஞரைப் புண் படுத்தாதா? கலைஞரின் போராட்டங்களையும் தியாகங்களையும் இழிவு செய்வதாகாதா?

இருபத்தி நாலு மணி நேரமும் - இரவும் பகலும் - கவர்ச்சி, கவர்ச்சி, சினிமா, சினிமா என்று நடிகர்களை யும் நடிகைகளையும் மக்களின் விழிகளிலும் மனத்திலும் திணித்தால், அவர்கள் முரசொலியை எப்படிப் படிப்பார்கள்.

பத்து லட்சம் பிரதிகள் விற்கின்றன; பலகோடி மக்கள் பார்க்கிறார்கள் என்று வர்த்தக முதலாளி பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

கலைஞரால் இந்த அவலத்தைச் சகிக்க முடியுமா? தான் வளர்த்த இன உணர்வையும், இலட்சியச் சுடரையும், முற்போக்குக் கருத்துக் களையும் முறி யடிக்கும் முயற்சி தனது நிழலிலேயே வளர்வதை எண்ணி அந்தப் பேராளன் எவ்வளவு வேதனைப் படுவார்!

இந்தச் சூழ்நிலையைத் தான் ஆதிக்க சக்திகள் பயன்படுத்துகின்றன.

வர்த்தக வெற்றிக்குக் கருத்துக்கள் தேவை இல்லை; கவர்ச்சி போதும் என்ற நிலை இருக்கலாம்.

ஆக்கங்கெட்ட திரைப் படங்களையும் ஆசைவயப் பட்ட நடிகர்களையுமே பிராதானப் படுத்தும் போக்கு நீடித்தால், திராவிட இயக்கம் தனது சிலுவையைத் தானே சுமக்கும் பரிதாபம் நேரிடும்.

புரட்சிகரமான இயக்கத்தைக் கவர்ச்சியான கேளிக்கைகளால் காவு கொள்ளப் படும். இன்னும் 50 ஆண்டுகள் என்று அண்ணா நிர்ணயித்த காலவரையறை முடியப் போகிறது. திராவிட இயக்கத்தின் தேவை தீர்ந்து விட்டதா?

- ஆனாரூனா

(தமிழ்ச் சான்றோர் பேரவை செய்திமடல் - ஆகஸ்ட் இதழிலிருந்து)

Pin It