fishermen in srilanka prison

2011, நவம்பர் 28-ஆம் தேதி ராமநாதபுரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட் மற்றும் பிரசாந்த் ஆகிய ஐந்து பேரும் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, அப்போது சிங்களக் கடற்படை கைது செய்தது. ஆனால், போதைப்பொருள் கடத்தியதாகப் பொய்வழக்குப் புனைந்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த கொழும்பில் உள்ள உயர் நீதிமன்றம் தமிழக மீனவர்கள் ஐவருக்கும் மரண தண்டனை விதித்து கடந்த 30.10.2014 தேதி தீர்ப்பு அளித்து உள்ளது. மேலும் 3.11.2014ல் இலங்கையின் வடக்குப் பகுதி தமிழர் மூன்று பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புகளை மக்கள் சிவில் உரிமைக்கழகம் வன்மையாக கண்டிக்கின்றது .

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பெரும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடிக்கும் உரிமையினை இலங்கை அரசு மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை மற்றும் பொய் வழக்கு போடுவதன் மூலம் அழித்துவிட முனைப்புடன் உள்ளது. கடந்த காலத்தில் மட்டும் 578 தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுக்கொன்றுள்ளது. தமிழகத்தின் கடலோர காவல்நிலையங்களில் போடப்பட்ட இலங்கை கடற்படைக்கு எதிரான சில கொலை வழக்குகளும் மேல் விசாரணையின்றி கைவிடப்பட்டுள்ளது. மத்திய அரசும் பாராமுகம் மற்றும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு மீனவ மக்களின் மனித உரிமைகளுக்கு போதிய மதிப்பு தராமல் இருந்து வந்துள்ளது.

இந்தப் பின்னனியில் தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை வழங்கியுள்ள இலங்கை நீதிமன்றத்தின் செயல் அரசியல் உள்நோக்கம் கொண்டது, பாகுபாடானது. மேலும் நீதிசார் பண்புகளுக்கு எதிரானது. ராஜபக்சே அரசு இலங்கையில் தொடர்ந்து சுதந்திரமான நீதித்துறை செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு அதன் நடுநிலைத் தன்மையினை சிதைத்துள்ளதை சர்வதேச அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன‌. எனவே தமிழக மீனவர்கள் சர்வதேச தரம் மற்றும் சட்டப் பாதுகாப்பு வாய்ந்த ஒரு விசாரணைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வழிவகைகளை மத்திய அரசு செய்யவேண்டும். மேலும் இலங்கை நீதிமன்றத்தின் மரண‌ தண்டனை போன்ற தண்டனையிலிருந்து தனது குடிமக்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- ச.பாலமுருகன், மாநிலச் செயலாளர், மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL)