இந்தப் பத்தியில், லி மாண்டே டிப்ளோமேடிக்கின் ஸ்பானிய மொழி இயக்குனர் இக்னாசியோ இரமோனெ, ஏப்ரல் 17ம் தேதி, காலம் சென்ற, கொலம்பிய நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்றவரான காப்ரியல் கார்சியா மார்க்வெஸினை அவர் கடைசியாக சந்தித்த மணித்துளிகளைப் பற்றி எழுதுகிறார்.
ஹவானாவில் இருந்ததாக எனக்குச் சொல்லப்பட்டாலும், அவர் நோயுற்று இருப்பதால் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. வழக்கமாக அவர் தங்குமிடம் எனக்குத் தெரியும்: நகர மையத்திலிருந்து வெகு தூரத்தில் ஒரு வளப்பார்ந்த கிராம வீட்டில். தொலைபேசியில் அழைத்தபோது மெர்சிடஸ், அவரது மனைவி எனது சந்தேகங்களைக் களைந்தார். நேசத்துடன் அவர் சொன்னது: “இல்லவே இல்லை, அது தொல்லைகளிலிருந்து தப்பிக்கவே. வந்து சேர், ‘கேபோ’ உன்னைப் பார்க்க மகிழ்ச்சியுறுவார்.”
அடுத்த நாள் காலை, ஈரப்பதமான சூட்டில், பனை மர-வரியிட்ட பாதையில் ஏறி வெப்பமண்டல வில்லாவின் கதவைத் தட்டினேன்.
அவர் நிணநீர் சுரப்பிகளின் புற்றுநோயால் வாடுவதும் சோர்வடையச் செய்யும் வேதியியற் சிகிச்சையும் மேற்கோண்டு வருவதையும் நான் அறிந்திருந்தேன். அவர்கள் சொன்னது அவரின் நலம் நொய்மை வாய்ந்ததென்று, பிறகு வாழ்வுக்கும் நண்பர்களுக்குமான ‘விடைபெறல் கடித’த்தினப் பற்றிய ஒரு பேச்சும் இருந்தது... இறந்து கொண்டிருக்கும் ஒருவரை சந்திக்கப் போகிறேனோ என்று அஞ்சினேன்.
மெர்சிடஸ் வந்து கதவைத் திறந்தார், பிறகு புன்னகையுடன் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி அவர் சொன்னது: “உள்ளே வா. கேபோ வந்து கொண்டிருக்கிறார்... டென்னிஸ் ஆட்டத்தை இப்போதுதான் முடித்துக் கொண்டிருக்கிறார்.”
கொஞ்ச நேரம் கழித்து, மங்கலான வசிப்பறையில் வெள்ளை சோபாவில் அமர்ந்தபடி, அவர் உள்ளே வருவதைப் பார்த்தேன், நிச்சயமான திடத்துடன், ஷவரில் ஈரமாகி இன்னும் நனைந்திருக்கும் அவரின் சுருண்ட முடியுடனும், அவரது அடர்த்தியான மீசையுடனும். மஞ்சள் குவாயாபெரா சட்டையும், அகன்ற வெள்ளை காற்சட்டையும் கித்தான் புதையடிகளும் அணிந்திருந்தார். விஸ்கான்டியின் திரைப்படங்களிலிருந்து நேரே வரும் கதாபாத்திரம் போல.
ஐஸ் காப்பியைக் குடித்தபடி, “கூண்டிலிருந்து விடுபட்ட பறவையைப் போல, என்னவானாலும், நான் தோன்றுவதைக் காட்டிலும் மிக்க இளமையாக” உணர்வதாகச் சொன்னார். மேலும், “வயதாகும் போது, உடலானது நாம் வாழ விரும்பும் காலம் நீடிப்பதற்குச் செய்யப்பட்டதல்ல என்று காண்கிறேன்.”
பிறகு பரிந்துரைக்கிறார், நாம் “ஆங்கிலேயர்கள் போல ஆக வேன்டும், உடல் நல பிரச்சனைகள் பற்றி பேசவே பேசாமல். அது பண்பாடல்ல.”
ஒரு கனத்த இளங்காற்று மாபெரும் ஜன்னல்களின் திரைச்சீலைகளை உயர்த்த வசிப்பறை ஒரு பறக்கும் கப்பலைப் போல ஆக தொடங்கியது. ‘கதை சொல்வதற்காக வாழ்வது’ என்ற அவரின் சுயசரிதையின் முதற் தொகுதியினை நான் எந்த அளவிற்கு விரும்பினேன் என்பதை சொன்னேன். நான் சொன்னது “இது உங்களின் ஆகச் சிறந்த புதினம்.”
புன்னைகைத்து பின் அடர் சட்டமிட்ட கண்ணாடியை சரி செய்தார். “ஒரு சிறிய கற்பனையின்றி எனது பெற்றோரின் மிகச் சிறந்த காதற் கதையினை மறுகட்டமைக்க சாத்தியமே இல்லை. அல்லது குழந்தையாக இருக்கும் போது எனது ஞாபகங்கள்...கற்பனை மட்டும் தான் கண்ணுக்குப் புலனாகாதவற்றை அறியும் திறவுகோல். காஃப்கா அல்லது ஃபாக்னரை நினைத்துப் பார், அல்லது இன்னும் எளிமையாக செர்வாண்டஸ்.”
பின்னணியில் அந்தோனின் த்வோரக்கின் புதிய உலக சிம்ஃபொனி நிறைத்துக் கொண்டிருந்தது அறையினை, சூழலை ஒரே நேரத்தில் குதூகலத்துடனும் நாடகீயமாகவும் ஆக்கியபடி.
சுமார் 40 வருடங்களுக்கு முன்பு, 1979ல், பாரீசில் காப்ரியல் கார்சியா மார்க்வெஸினை எனது நண்பன் ரேமோன் காவோவுடன் சந்தித்திருக்கிறேன். உலக ஊடகங்களில் வடக்கு-தெற்கு சமநிலையின்மை குறித்த ஒரு அறிக்கை தயாரிக்க நோபல் பரிசு பெற்றவரான ழான் மாக்பிரைட் தலைமை வகிக்கும் ஒரு ஆயத்தின் அங்கமாக, கேபோ, என பாசத்துடன் அறியப்பட்டவர், யுனெஸ்கோவினால் லி மாண்டெ டிப்ளொமேட்டிகின் நிறுவனர் ஹ¨பெர்ட் பூவெ-மெரியுடன் அழைக்கப்பட்டிருந்தார்.
அதற்கு முன்பே அவர், ஜெனரல் அகஸ்டோ பினோச்செ (1973-1990) சிலெயில் அதிகாரத்தில் உள்ள காலம், சுயமாக விதித்துக் கொண்ட ஒரு தடையின் பாகமாக நாவல்கள் எழுதுவதை நிறுத்தியிருந்தார். இன்னும் நோபல் பரிசு பெற்று விடவில்லை என்றாலும் ஏற்கனவே மிகப் பிரபலம் அடைந்திருந்தார். ஒரு நூற்றாண்டு தனிமையின் வெற்றி அவரை செர்வாந்தேக்கு பிறகு மிகப் பரவலாக வாசிக்கப்படும் ஸ்பானிய மொழி எழுத்தாளராக ஆக்கிவிட்டிருந்தது.
அவரது குறைந்த உயரத்தைக் கண்டு வியப்புற்றதையும் அவரது ஆழமான பார்வை மற்றும் தீவிரமான வெளிப்படை தன்மையையும் கண்டு தாக்குற்றதை நினைவுகூர்கிறேன். துறவியைப் போல வாழ்ந்த அவர், சிறையறை போன்றதாக இருந்த அவரது அறையை விட்டு யுனெஸ்கோவிற்குப் போவதற்காக மட்டுமே வெளியே வருவார்.
அவரது வேறொரு ஈர்ப்பாக இருந்த, பத்திரிக்கை துறையைப் பொருத்த வரை அப்போதுதான் நிகராகுவாவில் மனாகுவாவில் உள்ள தேசிய மாளிகையை சான்டினிஸ்டா கமாண்டோ தாக்கி பிடித்து வைத்ததை பற்றிய செய்திக்கட்டுரையை பிரசுரத்திருந்தார், அது பின்பு சர்வாதிகாரி அனஸ்டாசியோ சோமோசாவின் வீழ்ச்சியை முடுக்கி விட்டது. அந்த நடவடிக்கையில் அவரே பங்கு கொண்டார் என்று தோன்றும்படிக்கு அளப்பரும் தகவல்களைக் கொண்டு நிறைத்திருந்தார். எப்படி அது சாத்தியமானது என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன்.
அவன் சொன்னார்: “தாக்குதல் நடவடிக்கையின் போது நான் போகோட்டாவில் இருந்தேன். பனாமா குடியரசுத் தலைவர் ஒமார் டோரிஜோசை அழைத்துப் பேசினேன். அவரது நாட்டில் சற்றைக்கு முன்பே அடைக்கலம் தேடியிருந்த கமாண்டோ இன்னும் ஊடகங்களோடு உரையாடி இருக்கவில்லை. அவர்களது மொழி திரிக்கப்படும் என்பதால், பையன்களோடு பத்திரிக்கைகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும் படி அவரோடு வேண்டிக் கொண்டேன். அவர் பதில் அளித்தது: ‘வந்து சேர். அவர்கள் உன்னுடன் மட்டுமே பேசுவார்கள்’. நான் அங்கு போய் கமாண்டோவின் தலைவர்களான - ஈடன் பாஸ்டோரா, டோரா மரியா மற்றும் ஹ¨கோ டோரஸ் -ம் நானும் ஒரு இராணுவ படையறையில் எங்களைப் பூட்டிக் கொண்டோம்.
வினாடிக்கு வினாடி, திட்டம் தீட்டும் நிலையிலிருந்து கடைசி முடிவு வரை நாங்கள் மறுகட்டமைப்பு செய்தோம். அந்த இரவை அங்கு கழித்தோம். அயர்வுற்று, பாஸ்டோரோவும் டோரஸ§ம் உறங்கிப் போனார்கள். டொரா மரியாவும் நானும் விடியல் வரை தொடர்ந்தோம். அறிக்கையை எழுதுவதற்கு விடுதிக்குத் திரும்பினேன். பிறகு, அவர்களிடம் சென்று வாசித்துக் காட்டினேன். ஒரு சில கலைச் சொற்களை திருத்தினார்கள், ஆயுதங்களின் பெயர்கள், குழுக்களின் கட்டமைப்பு, இன்ன பிற. தாக்குதல் நடந்த ஒரு வாரத்திற்குள்ளாக அந்த அறிக்கை பிரசுரிக்கப் பட்டது. சான்டினிஸ்டாக்களின் தரப்பு நியாயத்தை உலகின் கவனத்திற்கு கொண்டுவந்தது அது.”
அதன் பிறகு கேபோவை பல தடவைகள் சந்தித்தேன் - பாரீசில், ஹவானாவில், மெக்சிகோவில். ஹ¨கோ சாவேஸ் குறித்த கருத்து வேறுபாடு வளர்ந்து வந்த்து எங்களிடையில். வெனிசூலாவின் தளபதியினை அவர் நம்பவில்லை. நான், வேறோர் கோணத்தில், லத்தீன் அமெரிக்காவை ஒரு புதிய வரலாற்று சகாப்தத்திற்கு இட்டுக் கொண்டு செல்லப் போகக் போகுபவராக நினைத்தேன் அவரை. இதனைத் தவிர்த்து, எங்களது உரையாடல்கள் எப்போதும் தீவிரமானதாக (கூடுதலாக?) இருந்தது: உலகின் எதிர்காலம், லத்தீன் அமெரிக்காவின் எதிர்காலம், கூபா...
இருந்த போதும், ஒரு தடவை நான் கண்ணீர் வரும் வரை சிரித்ததை நினைவுகூர்கிறேன். கொலம்பியாவின் வளப்பார்ந்த காலனித்துவ நகவரமான கார்தஜீனா தெ இண்டியாசிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தேன்; உயரமான மதில்களுக்குப் பின்புறமிருந்த அவரின் வீட்டை கண்ணுற்ற நான் அது குறித்து அவரிடன் சொன்னேன். அவர் என்னைக் கேட்டார்: “உனக்குத் தெரியுமா அந்த வீடு எப்படி எனக்கும் கிடைத்ததென்று.” தெரியவில்லை. அவர் சொன்னார் “நான் மிக இளமையாக இருந்த காலம் தொட்டு கார்தஜீனாவில் வாழ விரும்பினேன்.” பிறகு எனக்கு பணவசதி கிடைத்ததும், அங்கு ஒரு வீட்டை தேட தொடங்கினேன். ஆனால் எப்பொழுதுமே மிக விலையுயர்ந்ததாக இருந்தது அது. ஒரு வழக்குரைஞர் நண்பர் விளக்கிக் கூறினார்: ‘நீங்கள் ஒரு கோடீஸ்வரன் என்று நினைத்து அவர்கள் எப்போதுமே விலையை உயர்த்திக் கூறுகிறார்கள். உங்களுக்காக ஒன்றை என்னை தேட விடுங்கள்.’ ஒரு சில மாதங்கள் கழித்து, ஒரு பழைய அச்சுக்கூடமாக அந்த சமயத்தில் கிட்டத்தட்ட இடிபாடுகளில் இருந்த, இந்த வீட்டை அவர் கண்டுபிடித்தார். கண் பார்வையற்றவராக இருந்த உரிமையாளருடன் அவர் பேசி, அவர்கள் ஒரு விலையை முடிவு செய்தார்கள்.
ஆனால் வயதான மனிதர் ஒரு நிபந்தனை விதித்தார்: அவருக்கு வாங்குபவரை சந்திக்க வேண்டும். எனது நண்பர் வந்து சொன்னது: ‘நமக்கு அவரைப் பார்க்க போகவேன்டும், ஆனால் நீங்கள் பேசவே கூடாது. அதில்லை என்றால், அவர் உங்களது குரலை அறிந்துகொள்ளும் போது, அவர் விலையை மும்மடங்கு உயர்த்துவார்... அவர் குருடர், நீங்கள் ஊமை.’ பிரித்தரிய முடியாத உறுமல்களாக பதிலளித்தேன்... ஆனால் ஒரு கணத்தில், தௌ¤வாகவும் சப்தமாகவும் ‘ஆமாம்’ என்று சொல்லி தவறிழைத்தேன். ‘ஆ’ என்ற வயதான மனிதர், ‘எனக்கு அந்த குரலைத் தெரியும்! நீங்கள் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்!’ நான் யாரென்று அவர் அறிந்து கொண்டார்.
உடனே அவர் சொன்னது ‘நாம் விலையை மீண்டும் பரிசீலிக்கப் போகிறோம். எல்லாமே வித்தியாசமாகும் இப்போது.’ எனது நண்பர் பேரம் பேச முயல்கிறார். ஆனால் கண்பார்வையற்ற ஆசாமி மீண்டும் சொல்வது ‘இல்லை, அதே விலையாக இருக்கவே முடியாது அது. வழியே இல்லை.’ ‘சரி, எவ்வளவுதான் பிறகு.’ நாங்கள் கேட்கிறோம் அவரை, கசப்புடன். ஒரு நிமிடம் சிந்தித்த்தும் வயதானவர் சொல்கிறார் ‘பாதி’. எங்களுக்கு ஒரு விஷயமும் புரியவில்லை... அதனால் அவர் விளக்குகிறார்: ‘உங்களுக்குத் தெரியும் எனக்கு ஒரு அச்சகம் உள்ளதென்று. இது வரைக்கும் எப்படி காலத்தை ஓட்டினேன் என்று நினைக்கிறீர்கள்? கார்சியா மார்க்வெஸின் நாவல்களின் கள்ளப் பதிப்புகளை அச்சிட்டு!”
அந்த உரத்த நகைப்பொலி எனது நினைவில் அதிர்வுறும் போது, ஹாவானாவில் உள்ள வீட்டில், மேலும் வயதான, ஆனாலும் இன்னும் கூர்மதியுடன் எப்போதும் போலவே இருக்கும் கேபோவுடன், எனது உரையாடலைத் தொடர்ந்தேன். ஃபிடல் காஸ்ட்ரோவுடனான எனது நேர்காணல்களின் புத்தகம் பற்றி பேசினேன். ‘எனக்கு உண்மையாகவே பொறாமையாக இருக்கிறது,’ அவர் சொன்னார், சிரித்தபடி, ‘அவருடன் 100 மணிக்கூறுகளை செலவிட அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது உனக்கு’.
'“உங்களின் நினைவுக்குறிப்பின் இரண்டாம் பாகத்தை வாசிக்க பொறுமையற்று இருப்பவன் நான் தான், ‘பதிலளித்தேன்’. ‘கடைசியாக நீங்கள் நீண்டகாலமாக அறிந்திருக்கும் ஃபிடலுடனான தங்களின் சந்திப்புகளைப் பற்றி பேசப் போகிறீர்கள். நீங்களும் அவரும் ஹிஸ்பானிய உலகில் பேராற்றல் மிக்க இருவர். பிரான்சில் இதனை ஒப்பிட்டால், விக்டர் ஹியூகோ நெப்போலியனை சந்திப்பது போன்றது இது...’ அடர்ந்த புருவங்களை விரித்து உரத்த குரலில் முழங்கி சிரிக்கிறார். ‘உனக்கு கற்பனை வளம் மிக அதிகம்... ஆனல் நான் உனக்கு ஏமாற்றமளிக்கவே போகிறேன்: இரண்டாம் பாகம் என்பது இருக்கப் போவதில்லை... எனக்குத் தெரியும் மிக அதிகமானவர்கள், நண்பர்களும் எதிராளிகளும் ஃபிடலின் மீதான ‘எனது வரலாற்று தீர்ப்பிற்கு’ காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அபத்தம். அவரைக் குறித்து என்ன எழுத வேண்டியிருந்ததோ அதை ஏற்கனவே எழுதி விட்டேன். ஃபிடல் எனது நண்பர் அது போலவே எப்போதும் இருப்பார். கல்லறை வரைக்கும்.
வானம் கறுத்து, வசிப்பறை, நண்பகலாக இருந்த போதும், மங்கியது. உரையாடல் தணிந்து ஈர்ப்பற்றதானது. கேபோ வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார், நான் வியக்கிறேன்: “ஃபிடலுடலான நட்பின் உடந்தையில் பகிர்ந்து கொண்ட மிகப்பல இரகசிய விஷயங்களை அவர் எழுதாமலே விடப்படும் சாத்தியம் உள்ளதா? அவர்கள் இரண்டு பேரும் இவ்வுலகில் இல்லாமல் போகும் போது, இறந்த பின்னால் பிரசுரிப்பதற்காக வேண்டி விட்டு வைத்திருக்கிறாரா?”
வெளியே, வெப்பமண்டல புயலின் சக்தியுடன் வானிலிருந்து அடைமழை கொட்டுகிறது. இசை நின்று அமைதியானது. ஒண்செடிகளின் நறுமணம் அறையை ஆக்கிரமிக்கிறது. கேபோவினை மேலோட்டமாகப் பார்த்தேன். வயாதான கொலம்பிய சிறுத்தைப் புலியின் களைத்த தோற்றம் கொண்டிருக்கிறார். அவர் அங்கு அமர்ந்திருக்கிறார், மௌனமாகவும் தியானத்திலிருப்பது போன்றும், அவரது எல்லா தனிமைகளின் மாற்றமில்லாத தோழனான முடிவற்ற மழையை உறுத்துப் பார்த்தபடி. வேகமாக நழுவினேன் நான். அவரை கடைசி தடவையாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று அறியாமல்.
ஆங்கிலத்தில்: ஸ்தெபானி வைல்ட்ஸ்
தமிழில்: இரா. சுகந்தசக்திவேல்
நன்றி: http://upsidedownworld.org/main/colombia-archives-61/4988-gabriel-garcia-marquez-the-last-visit