உயர் கல்விப் படிப்பு என்பது எட்டாக்கனியாய் இருந்த ஏழை மாணவர்களுக்கு, நல்ல வாய்ப்பாக வங்கிகள் கல்விக்கடன் அளிக்கத் துவங்கின. அப்படி வங்கிகளில் கல்விக்கடன் பெறுவதுமே ஒரு காலத்தில் குதிரைக்கொம்பாக இருந்தது. கல்விக்கடன் பெறவேண்டுமெனில் பெற்றோர் பெயரில் சொத்து இருக்கவேண்டும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டும் என ஏகப்பட்ட கெடுபிடிகள். இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து மாணவர்களுக்கு எந்தவித நிபந்தனையுமன்றி கல்விக்கடன் வழங்கவேண்டும் என உத்தரவிட்டது மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு.
கல்வி பயின்றும் வேலையில்லா சூழலில், படித்து முடிப்பதற்குள்ளாகவே கடன் வட்டி குட்டியைப் போட்டு அதுவே பெறுந்தொகையாகிப்போனதில், வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த முடியாமல் மாணவர்களும் பெற்றோரும் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டது. அதை புரிந்து கொண்ட மத்திய அரசு மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து ஆறுமாத காலம் வரை கல்விக்கடனுக்கான வட்டியை செலுத்த தேவையில்லை என முடிவெடுத்தது. கடந்த 2009-10-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வாசித்த அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, "2009 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கல்விக் கடன் பெறும் மாணவர்களுக்கு அவர்கள் படிப்பை முடித்து 6 மாத காலங்கள் வரைக்கும் செலுத்த வேண்டிய வட்டியை மத்திய அரசே செலுத்தும்" என அறிவித்தார்.
மத்திய அரசு, வட்டி மானியம் அறிவித்திருந்தும், சில வங்கிகளில் வட்டியை கட்ட சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் ஒரு மாதம் வட்டி செலுத்தாவிட்டால் கூட, அந்த வட்டி தொகையை அசலுடன் சேர்த்து கூட்டு வட்டி போடுவதாகவும் பொதுமக்களிடையே புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த 2010 செப்டம்பர் செங்கல்பட்டில் நடைபெற்ற கல்விக் கடன் மேளாவில், மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்கி பேசிய ப.சிதம்பரம், நமது நாட்டில் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வசதியில்லாமல் பள்ளி படிப்புடன் நிறுத்திக் கொள்ளும் நிலை இருந்தது. இவர்களை கருத்தில் கொண்டே கல்வி கடன் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
2009-10ஆம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு பிறகு கல்விக் கடன் பெற்ற மாணவர்கள், படிக்கும் காலத்தில் வட்டி செலுத்த தேவையில்லை. இது தொடர்பான உத்தரவுகள் அனைத்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.
எந்த வங்கியேனும் 2009-10ஆம் கல்வியாண்டு மற்றும் அதற்கு பிறகு வாங்கிய கடனுக்கு மாணவர்களிடம் வட்டி கேட்டால் அவர்கள் அருகில் உள்ள கனரா வங்கியை தொடர்பு கொள்ளலாம். அவர்கள்தான் இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வங்கிகளுக்கு தேவையான விளக்கத்தை கனரா வங்கியைச் சேர்ந்த அதிகாரிகள் அளிப்பர்.என்று பேசினார். இதே கருத்தை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கல்விக்கடன் மேளா நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து வலியுறுத்தினார்.
இந்த செயல்பாட்டின் மூலம் 2013 டிசம்பர் 31-ம் வரை இந்தியாவில் 25,70,254 பேரிடம் 57,700 கோடி ரூபாய் கல்விக் கடன் நிலுவையில் இருப்பதாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டின்போது தெரிவித்த அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம், 2009 மார்ச் 31-க்கு முன்பும் கல்விக் கடன் பெற்ற 9 லட்சம் பேர் செலுத்த வேண்டிய வட்டியான சுமார் ரூ.2,600 கோடியையும் மத்திய அரசே செலுத்தும்" என அறிவித்தார்.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் வங்கிகள், மாணவர்கள் கல்விக் கடன் வாங்கிய நாளிலிருந்தே வட்டியும் செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்ப ஆரம்பித்திருக்கின்றன. 2009-க்கு முன்பும் பின்பும் கல்விக் கடன் பெற்ற யாருக்கும் வட்டி தள்ளுபடி செய்யப்படவில்லை. பல இடங்களில் மாணவர்களுக்கு வங்கி கடன் புத்தகமும் வழங்கப்படுவதில்லை. இதனால் இதுவரை தங்கள் கடன் பற்றிய விபரத்தைகூட அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத நிலையில், தங்கள் கல்விக்கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவே இதுவரை கருதியிருந்தவர்களுக்கு வட்டி தொடர்பான வங்கிகளின் நோட்டீஸ் பேரச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வங்கி அதிகாரி ஒருவரிடம் இது பற்றி விசாரித்தால் வட்டி இல்லை என்று உங்களுக்கு யார் சொன்னது என்று நம்மையே திருப்பி கேட்கிறார். வேறொரு அதிகாரியோ வட்டி தள்ளுபடி தொடர்பாக மத்திய அரசு தருவதாக ஒப்புக்கொண்ட குறைந்த பட்ச தொகையைக்கூட இதுவரை வழங்கவில்லை. அந்த தொகையை கடன் வாங்கியவர்களிடமிருந்து தானே வசூலிக்க முடியும் என்கிறார்.
வட்டித்தொகையை செலுத்த முடியாத மாணவர்கள் வங்கிகளில் தொடர்ந்து தங்கள் கல்விக்கடனை பெற இயலாத நிலையில் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே கடந்தகால மத்திய அரசு அறிவித்ததற்கு ஏற்ப மாணவர்கள் பயிலும் காலம் வரை வட்டியில்லா கல்விக்கடனை எந்தவித சிரமத்திற்கும் ஆட்படாமல் பெற்று கல்வியைத் தொடர தற்போதைய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மாணவர்கள் மத்தியில் இதுவே பெறும் பிரச்சனையாக உருவெடுத்து தேவையற்ற நிகழ்வுகள் நடைபெறும் முன்பே மத்திய அரசு முந்திக் கொண்டு இந்த விஷயத்தில் அவசரம் காட்டுவது அவசியம்!