உலக மக்கள் தொகையில் சீனாவிற்கு (19.4%) அடுத்தபடியாக இந்தியா (17.5%) உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வளர்ச்சியில் தற்போது 11வது இடத்தில் உள்ளது. முக்கியமாக வாங்கும் சக்தி மதிப்பின் ((Purchasing Power Parity) அடிப்படையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது. நாடு பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டாலும் மக்கள் அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவோடு வாழ்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. முக்கியமாக இந்தியா உணவுப் பாதுகாப்பில் பின் தங்கிய நிலையில் உள்ளது. சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute, 2013) வெளியிட்ட ஆய்வின்படி, உலக அளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டோர் தரப்பட்டியலில் இந்தியா அச்சுறுத்தலான (alarming) நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
உலகில் வாழும் ஊட்டச்சத்துக் குறைபாடுடைய மக்கள் தொகையில் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு (National Family Health Survey-3 2005-06) உறுதிபடுத்துகிறது. இத்தகவலின்படி 56% பெண்கள் ரத்த சோகை நோயாலும், 30% குழந்தைகள் பிறக்கும் போது குறைந்த எடையுடனும் (2½ கிலோவுக்குக் குறைவாக), 47% குழந்தைகள் உடலுக்குத் தேவையான சத்து குறைபாடுகள் இருப்பதாகவும் கூறியுள்ளது. இந்த அடிப்படையில், மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிராமப்புற மக்கள், அதிலும் பெண்கள், குழந்தைகள், நலிவடைந்த சமூகத்தைச் சார்ந்த மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய பொருளாதார சூழ்நிலையில், மக்கள் தங்களின் வருவாயில் பெரும் பகுதியை உணவுக்காக செலவிடக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உணவுப் பொருட்கள் நாட்டின் முக்கியமான வணிகப்பொருட்களாக மாறிக்கொண்டுவருகிறது.
இதுவரை நாட்டில் எத்தனையோ வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல்பாட்டில் இருந்தும் உணவுப் பாதுகாப்பின்மை நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியது.
உணவுப் பாதுகாப்பு
ஒரு நாட்டின் வேளாண் உற்பத்தி, காலநிலை, வணிகம், வருமானம், உணவுத்தரம், சுகாதாரமான தண்ணீர், சுற்றுப்புறச்சூழல், அரசின் நிர்வாகம், அரசியல் நிலைப்புத் தன்மை, சமூக கட்டமைப்பு போன்ற பல காரணிகள் உணவுப் பாதுகாப்பை தீர்மானிக்கின்றன.
உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி 1996-ம் ஆண்டு ரோம் நகரில் ஐ.நா.வின் சார்பில் “உலக உணவு உச்சி மாநாடு” நடைபெற்றது. “பட்டினி அல்லது பஞ்சம் என்ற அச்சுறுத்தலில் மக்கள் வாழவேண்டிய அவசியம் இருக்காது” என்பதுதான் உணவுப் பாதுகாப்பின் சுருக்கமான வரையறை. ஐக்கிய நாடுகள் சபை இதை “எல்லோருக்கும், எல்லா நேரங்களிலும், போதுமான, சத்தான, விரும்பும் வகையில், சமூக-பொருளாதார நிலைக்கு ஏற்ப பாதுகாப்பான முறையில், அவர்களின் உடல் இயக்கத்திற்க்கும் ஆரோக்கியத்தோடு வாழ்க்கை நடத்த தேவையான உணவை அளிப்பதுதான்” என்று விளக்கம் தந்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு என்பது நான்கு முக்கியமான அம்சங்களை கொண்டதாகும்.
1. உணவு இருப்பு: இது நாட்டின் வேளாண்மை உற்பத்தி, உணவு தானிய இருப்பு, இறக்குமதி சம்பந்தப்பட்டவை.
2. உணவை அணுகும் திறன்: இது மக்களின் வாங்கும் சக்தி, வேலைவாய்ப்பு சம்பந்தமானதாகும்.
3. உணவை உடல் ஏற்கும் திறன்: இது தூய்மையான குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதார வசதி சார்ந்ததாகும்.
4. நிலைப்பு தன்மை: மேற்சொன்ன மூன்று அம்சங்களும் எல்லா காலங்களிலும், சூழ்நிலையிலும் நீடித்த நிலையாக இருத்தல் வேண்டும்.
ஒரு புறம் உணவு தானிய இருப்பு தேவைக்கு அதிகமாக இருந்தாலும், அவை அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. அப்படி பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் வறுமை ஓரளவிற்கு கட்டுபாட்டிற்க்குள் வந்திருப்பதோடு, பட்டினியில்லாத ஒரு நாடாகவும் இந்தியா விளங்கியிருக்க முடியும்;.
உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை என்ற நிலையிலிருந்து, அவற்றைப் பெறுவது மக்களின் உரிமை என்ற நிலை உருவாகி உள்ளது. உணவு என்பது மனிதனுக்கு கருணையாக அணுகாமல் அது மனிதர்களுக்கான அடிப்படை உரிமையாகக் கருதுவது அவசியம். இதனையே இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 21ல் உள்ள “வாழ்வதற்கான உரிமை” என்பது உயிருடன் வாழ்வதற்கு மட்டுமல்ல, சுய மரியாதையுடன் வாழ்வது என்பதும் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடை, உறைவிடம் இவைகளுடன் வாழ்வதும் என்பதுதான் என்று உறுதி படுத்துகிறது. இதற்கு 2001-ம் ஆண்டு உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு “உணவுக்கான உரிமையை” உறுதி செய்துள்ளது. இந்த வழக்கின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க 8 வகையான உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை உறுதி செய்கிறது. அவை, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத்திட்டம், அந்தியோதயா அன்னயோஜனா திட்டம், அன்னபூரணா திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மதிய உணவுத் திட்டம், தேசிய குடும்ப நலத்திட்டம், தேசிய கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை உள்ளடக்கியதாகும். தற்போது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. மக்களின் நலன் கருதி பல நல்ல திட்டங்களைத் தீட்டினாலும் அது சேர வேண்டிய மக்களுக்கு முழுமையாக சென்றடைவது இல்லை. இந்த சூழ்நிலையில், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய உணவுப் பாதுகாப்புச் சட்டம் எந்த அளவுக்குத் தீர்வாக அமையும் என்ற கேள்வி எழுகிறது.
உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா 2013
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2011 (தேசிய ஆலோசனைக் குழு மத்தியில் விவாதிக்கப்பட்டு டிசம்பர் 20,2011 அன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த ஆண்டின் துவக்கத்தில் உணவுப் பாதுகாப்புச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகளிடையே ஒத்த கருத்து ஏற்படாததன் காரணமாக இந்தச் சட்டம் நிறைவேறுவதில் சிக்கல் நீடித்தது. இந்த உணவு பாதுகாப்பு சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அவசரச் சட்டமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் அனைத்து கட்சிகளின் குரல் வாக்கொடுப்பின் மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை வழங்குவதற்க்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ் உணவு தானியம் என்பது மனிதனின் அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒரு நபருக்கு ஐந்து கிலோ வீதம் உள்ள சுமார் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்களை மானிய விலையில் கொடுக்க இது வழி வகை செய்கிறது.
இச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
நாட்டில் உள்ள மொத்த மக்களில், 63.5 சதவீதத்தினர் மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறுவர்.
ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
இவர்களில், கிராமப் புறங்களில் 75 சதவீத மக்களும், நகர்ப்புறங்களில் 50 சதவீத மக்களும் பயணடைவர்.
6 மாத குழந்தை முதல் அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதி படைத்தவர்கள். இவர்களில் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு கிலோ ரூ.3 விலையில் 5 கிலோ அரிசியும், ரூ. 2 விலையில் 5 கிலோ கோதுமையும், ரூ.1 விலையில் 5 கிலோ கம்பு அல்லது தானியங்கள் வழங்கப்படவிருக்கிறது.
வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்ற காலங்களில், அரசு சார்பில் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்க முடியவில்லை எனில், அதற்குரிய தொகை பணமாக வழங்கப்படும்.
கர்ப்பிணிகள் மற்றும் பிரசவகால பெண்களுக்கு ரூ 6 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் அல்லது ரூ 6 ஆயிரம் பணம் ரொக்கமாக வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது.
குடும்பத்தில் மூத்த பெண்மணியின் பெயரில் ரேசன் கார்டு வழங்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் பயணடைவோர் முன்னுரிமை பிரிவினர், பொதுப் பிரிவினர் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு இரண்டு அடிப்படை கேள்விகளை முன்வைக்க வேண்டியுள்ளது. ஒன்று, நம் நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதா? இரண்டாவது, உரிய நபர்களுக்கு, அதாவது வறியவர்களில் வறியவர்களுக்கு அந்தியோதயா அன்ன யோஜனா திட்டக் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்விகளுக்கு பதில் காண வேண்டியுள்ளது.
நாட்டின் வறுமையை வரையறை செய்வதில் பொருளாதார வல்லுநர்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு, கிராமப்புறங்களில் வாழும் நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.28 எனவும், நகர்புறங்களில் வாழும் நபருக்கு ரூ.34 எனவும், அதற்கு குறைவாக வருவாய் ஈட்டுவோர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர் என மதிப்பீடு செய்துள்ளது. இன்றைய பணவீக்கத்தின் படி பார்த்தால் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கான வருவாய் நிர்ணயம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. தற்போது பணவீக்கத்தை விட உணவுப் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து வருகிறது. அரசின் கணக்கீட்டின்படி பார்த்தால், நாட்டில் பெரும்பான்மையோர் வறுமைக்கோட்டிற்கு மேல் வருகின்றனர். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைத் தேர்வு செய்வதில் சரியான அளவுகோல் பின்பற்றபட வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இந்த மாநிலத்தில்தான் வறுமைக்கோட்டிற்கு கீழ், வறுமை கோட்டிற்கு மேல் என்ற பாகுபாடின்றி அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டம் தமிழ்நாடு, இமாச்சல பிரதேசத்தில் மட்டும் இருந்தது. தற்போது ஒரு சில மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் இலவச அரிசி, அம்மா உணவகம், கிலோ 20 ரூபாய் அரிசித் திட்டம் போன்றவை உணவுப்பாதுகாப்பை உறுதி செய்தாலும் அனைத்து மக்களின் நீண்டகால உணவுத்தேவையை பூர்த்தி செய்யுமா என்ற கேள்வி எழுகிறது. ஒருபுறம் இலவச அரிசி, மறுபுறம் வெளிச் சந்தையில் கிலோ அரிசி ரூ.40 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் முக்கிய நோக்கமே அத்யாவசியப் பொருட்களை மானிய விலையில் வழங்குவதுடன், வெளிச் சந்தை விலையை கட்டுப்படுத்துவதுதான். ஆனால் தற்போது ரேசன் கடைகளில் உள்ள விலைகளுக்கும் வெளிச்சந்தை விலைகளுக்குமிடையேயான வேறுபாடு மிக அதிகமாக உள்ளது. இதில் அடிப்படை சீர்திருத்தங்களை கொண்டுவருவது அரசின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.
இத்திட்டத்திற்குண்டான செலவு ரூ.1,25,000கோடி என்பது உலகத்திலேயே அதிகப்படியான செலவு கொண்ட திட்டமாகும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகும். இந்த திட்டத்தை நிறைவேற்ற தேவைப்படும் நிதி ஆதாரங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நபருக்கு ஐந்து கிலோ உணவு தானியம் என்பது மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு போதுமானதாக இருக்காது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைப்பது, ஒரு மாதத்திற்கு, ஒரு நபருக்கு அதாவது வயது வந்தோருக்கு உணவு தானியம் 14 கிலோவும், குழந்தைகளுக்கு 7 கிலோவும் தேவைப்படுகிறது. ஆனால் இந்த மசோதா சட்டப்படி ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு 5 கிலோ மட்டும் கிடைக்கும். இது வெறும் 166 கிராம் தானிய அளவு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு கிடைப்பதாகும். இது தவிர பருப்பு வகைகள், எண்ணைய் வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் அசைவ உணவுகள் மனிதனின் உணவு தேவையை பூர்த்தி செய்கின்றன.
மனிதனின் அடிப்படை உரிமைகளில் சுத்தமான, சுகாதரமான குடிநீர் ஒன்று. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 45 விழுக்காடு குழந்தைகள் உடல் வளர்ச்சி குன்றி பிறப்பதாகவும், 6 லட்சம் குழந்தைகள் (வயது 5க்கு கீழ்) இறப்பதாகவும், இதற்க்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படுவது மோசமான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பற்ற குடிநீர் என ஆய்வறிக்கைகள் கூறுகிறது.
உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உலகச்சந்தையில் அதிக விலை கிடைப்பதாக செய்வதால் உற்பத்தி செய்யும் உள்நாட்டு உணவுப் பொருட்களை உள்ளுர் மக்களே நுகர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலை மாற ஏழைகளும் பயனடையும் வகையில் உள்நாட்டுச்சந்தை சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
தற்போது இந்திய மக்களின் சராசரி உணவின் அளவு குறைந்து கொண்டு வருகிறது. கிராமப்புறத்தில் 1993-94ல் 2153 கலோரியும் 60.2 கிராம் புரதசத்தும் கிடைத்தது. இது 2004-05ல் 2047 கலோரியும், 57 கிராம் புரதச் சத்துமாக குறைந்துவிட்டது. இந்தியாவில் 30 சதவீத குடும்பங்கள் 1700 கலோரிக்கும் குறைவாகவே உண்கின்றனர். இது சர்வதேச குறைந்தபட்ச அளவான 2100 கலோரி என்பதை விட குறைவானது. வளர்ச்சியடைந்த மாநிலமாக கூறப்படும் தமிழகத்தில் கிராமப்புறங்களில் 1842 கலோரியும், கர்நாடகத்தில் 1845 கலோரியும், குஜராத்தில் 1923 கலோரியும் கிடைக்கிறது.
தற்போதுள்ள சூழ்நிலையில், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தரக்கூடிய தரமான உணவுப் பொருள்கள் எல்லோருக்கும், எல்லா நேரங்களிலும் கிடைப்பதில்லை. தரமான உணவு என்பது உணவிலுள்ள சத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டதாகும். வைட்டமின்கள், மினரல்கள், கார்போஹைட்ரேட்டுகள் அடங்கிய சரிவிகித உணவில் சத்துமிக்க உணவு எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்கள் நடப்பில் இருந்தாலும்கூட நுண்ணூட்ட சத்துக்குறைவும், நுண்ணூட்ட சத்தின்மையும் இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. இரும்பு, அயோடின், துத்தநாகம், வைட்டமின் “ஏ” வைட்டமின் பி-12 ஆகிய நுண்ணூட்ட சத்துக்கள் இல்லாததால் ஏற்படும் மறைமுகப் பசியானது (Hidden Hunger) இந்திய மக்கள் தொகையில் 40% பேரை பாதிக்கிறது என்று வேளாண் அறிஞர் எம். எஸ். சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பயிர் சாகுபடி நிலங்கள் தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. அதாவது 1979ம் ஆண்டும் 163.4 மில்லியன் ஹெக்டேர் நிலம் சாகுபடி செய்யப்பட்டது. 2009ம் ஆண்டில் 158 மில்லியன் ஹெக்டேராக குறைந்துள்ளது. தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியாகும். உணவு தானிய உற்பத்தி 218.2 மில்லியன் டன்னாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் உணவு உற்பத்தி செய்யும் நிலத்தின் அளவு குறைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் எதிர்காலத்தில் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை பன்மடங்கு பெருக்குவதுடன் காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரழிவு காலங்களில் உணவு நெருக்கடியை சமாளிக்க நீண்ட காலத் திட்டங்களை வகுப்பது காலத்தின் கட்டாயமாகும். விவசாயத் துறையில் உணவுப் பயிர்களை விட பணப்பயிர்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. உணவுப்பயிர்களை உற்பத்தி செய்யும் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் விளை பொருட்களுக்கான சந்தை வசதியை விரிவுபடுத்த வேண்டும்.
மனிதனின் வாழ்வாதாரங்களான கால்நடை வளர்ப்பதை ஊக்குவித்தல், வேலைவாய்ப்பை பெருக்குதல், கிராமப் புறங்களில் சிறு தானியங்களான கம்பு, சோளம், ராகி போன்ற தானியங்களை சேமித்து வைப்பதற்கான சமுதாய தானிய சேமிப்பு கிடங்குகளை வங்கிகளை மகளிர் சுய உதவிக் குழுக்களின பங்களிப்போடு உருவாக்குவதல் போன்றவை உள்ளுர் உணவுத் தேவையை உறுதி செய்ய வகை செய்யும். வேளாண் உற்பத்தியை பெருக்காமல், மனிதனின் வாங்கும் சக்தியை உயர்த்தாமல், விலையில்லா சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்யாமல், மானிய விலையில் தரப்படும் அரிசி, கோதுமை மட்டும் உணவு பாதுகாப்பை உறுதி செய்யாது.
“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு” - குறள்
மிக்க பசியும், தீராத நோயும், வெளியிலிருந்து வந்து தாக்கி அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் இனிதாக நடைபெறுவதே நல்ல நாடாகும் என்று இக்குறள் கூறுறது. இது ஒரு நாட்டிற்கு மட்டும் அல்ல. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும்.
நாட்டில் பல உணவுப் பாதுகாப்பு திட்டங்களும், சட்டங்களும் கொண்டு வந்தாலும், அவற்றை செயல்படுத்துவதில் அரசியல் ஆதாயம் இல்லாமல், இதன் பயன் இலக்கு மக்களை அடைய வேண்டும். உணவு பாதுகாப்பின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமை, அதற்கான சூழ்நிலையை உருவாக்குவது அரசின் தலையாய கடமையாகும்.
- இல.சுருளிவேல் (