ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் அவற்றின் வர்க்க நலன் மறைந்திருக்கிறதென்பது மார்க்சியம். இன்று நம் காதுகளைப் புண்ணாக்கிக் கொண்டிருக்கிற திராவிட எதிர்ப்பு சாதிய & தமிழ்த்தேசிய (தமிழ் சாதிகளின் கூட்டு) அரசியலுக்குப் பின்னாலும் அவற்றுக்கேயான வர்க்க நலன்கள் உண்டல்லவா? அவை என்னவென்று அறியாது நாம் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும்போது நம்மை திகைக்க வைக்கிறார் தாதுமணல் மாஃபியா வைகுந்தராஜன்.

m natarajanஇவர் நாம் தமிழர் கட்சியின் பின்னாலிருந்து தரிசனம் தந்த ஒளியில்தான் பல்வேறு தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கு தர்மகர்த்தாவாக இருக்கும் அரசியல் மாஃபியாவான மா.நடராசன் நினைவுக்கு வருகிறார். நாம் தலைசுற்றி நிற்கிற நேரத்தில் தமிழ்த்தேச மக்கள் கட்சியின் "தமிழ்த்தேச விடுதலை அறம்" இதழில் (ஆகஸ்ட் 2014) ஈழத்தை சேர்ந்த சேரமான் என்பவர் முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். "தூசி தட்டப்பட்ட உளவு அணிகள்" என்ற அக்கட்டுரை தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் ஈழ வணிக அரசியல் இயக்கங்களுக்குப் பின்னால் இந்திய - இலங்கை உளவுப்படைகளின் கூட்டு சதியிருப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்திய ரா மற்றும் ஐ.பி - இலங்கையின் எஸ்.ஐ.எஸ் மற்றும் எம்.சி.ஐ ஆகிய உளவு நிறுவனங்கள் இணைந்து ஈழ விடுதலை அரசியலை காயடித்து முடக்குகிற வேலைகளை முன்னெடுப்பதாக கட்டுரை கூறுகிறது. இந்திய - இலங்கை உளவு அமைப்புகளின் செயல்பாட்டிற்கு பரந்தன் ராசன் (எ) ஞானப்பிரகாசம் ஞானசேகரன், முஸ்தபா மற்றும் சில முன்னாள் போராளிகள், ஊடகவியலாளர் போர்வையில் திரியும் சில என்.ஜி.ஓ-க்கள் பொறுப்பேற்று செயல்படுவதாக கட்டுரை எச்சரிக்கிறது. இவர்கள் இந்தியாவில் சென்னை மற்றும் பெங்களூரிலும், இலண்டனிலும் தளம் அமைத்து செயல்படுவதாக கட்டுரை அபாய மணியடிக்கிறது.

உங்களுக்கு மா.நடராசனின் காவல்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றுடனான உறவுகள் மறக்காமல் இருந்தால் சரிதான். இந்த நேரத்தில் இன்னொரு செய்தியும் முக்கியமானதாகிறது. பெரியார் & திராவிட எதிர்ப்பை கோட்பாட்டு ரீதியாக செய்து வரும் தோழர் பெ.மணியரசன் குழுவினர் தமிழ்த்தேசப் பொதுவுடமை கட்சி என்ற தமது அமைப்பின் பேரிலிருந்த பொதுவுடமை, கட்சி என்ற இரண்டு குறியீட்டு சொற்களையும் தூக்கிவிட்டனர். மட்டுமல்லாது சமூகத்தில் அரசியல் குழப்பம் விளைவித்து அரசையும், சுரண்டலையும் பாதுகாக்கிற தொண்டு நிறுவனங்களையும் 'குடிமைச் சமூக அமைப்புகளுக்கு' என்ற பேரில் தமிழ்த்தேசியம் அமைக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ-க்களின்) மக்கள் விரோதப் போக்கு குறித்து ஆதாரத்துடன் கூடிய பல தகவல்கள் நிரூபிக்கப்பட்ட பின்னும் தோழர் மணியரசன் குழுவினரின் இம்முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்த்தேச மக்கள் கட்சி இதழ் கூறும் " இந்திய - இலங்கை உளவு அமைப்புகளின் செயல்பாட்டிற்கு பரந்தன் ராசன் (எ) ஞானப்பிரகாசம் ஞானசேகரன், முஸ்தபா மற்றும் சில முன்னாள் போராளிகள், ஊடகவியலாளர் போர்வையில் திரியும் என்.ஜி.ஓ-க்கள் - தொண்டு நிறுவனங்கள் - " அபாயம் தோழர் மணியரசன் குழுவினருக்கு தெரியாமல் இருக்க முடியாது. யாருக்கானது மூன்றாவது வகை தமிழ்த்தேசியம்?

தேசிய கோரிக்கைகளில் இரண்டு வகை நமக்குத் தெரியும். 1- சந்தை மற்றும் லாப நோக்கைக் கொண்ட முதலாளித்துவ தேசிய கோரிக்கை. 2- தேசிய உற்பத்தி, அதற்கான தேசிய அரசு மூலம் சர்வதேசியத்தை இலக்காகக் கொண்ட உழைக்கும் மக்களின் சனநாயக தேசிய கோரிக்கை.

சந்தை மற்றும் லாப நோக்குடைய தமிழக முதலாளிகளான பொள்ளாச்சி மகாலிங்கம் குழுமம், முத்தையா செட்டியார் குழுமம், முருகப்பா குழுமம், மாறன் குழுமம் முதல் டி.வி.எஸ் குழுமம், ஜி.கே நாயுடு குழுமம் என (தமிழ் சாதி, தமிழ் சாதியல்லாத) அனைவரும் இந்திய தேசியத்தின் பிரதிநிதிகள்தான். ஆதலால்தான் இவர்கள் தரகுமுதலாளிகள் எனப்படுகின்றனர்.

இவர்கள் இந்தியா என்கிற பரந்த சந்தையில் இணக்கமாக லாபமடைய தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற கட்சிகளையும்; சிறிய அளவில் ஊடல் கொண்டு காரியமாற்ற ம.தி.மு.க போன்ற கட்சிகளையும் ஏற்கனவே கொண்டுள்ளனர். இவர்களுக்கு இப்போது இந்தியாவோடு முரண்படுகிற தமிழ்த்தேசிய அமைப்புகள் தேவையில்லை.

ஆக திராவிட எதிர்ப்பு _ சாதிய & இனவாத தமிழ்த்தேசியம் இத்தரகுமுதலாளிகளின் கோரிக்கையல்ல.

அடுத்து சனநாயகத்திற்கான தேசிய கோரிக்கை கொண்ட மக்கள் பிரிவினர். தொழிலாளர், உழவர், தலித்துகள், பெண்கள், மத சிறுபான்மையினர், சிறு உற்பத்தியாளர், சில்லறை வணிகர், மீனவர், பழங்குடியினர், அறிவுத்துறையினர்... ஆகியோருக்கான தேசிய கோரிக்கை. இவர்களின் தமிழ்த்தேசியம் அடிப்படையில் மேற்கூறிய மக்கள் பிரிவினர்களின் ஒற்றுமையை முன்நிபந்தனையாகக் கொண்டது.

சாதிய & இனவாத தமிழ்த்தேசியம் என்பது இந்துத்துவ தமிழ்த்தேசியமாகும். இந்துத்துவ மராத்திய தேசம் போன்றதாகும். இது மத சிறுபான்மையோருக்கு மட்டுமல்ல தலித்துகளுக்கும், பெண்களுக்கும், பழங்குடிகளுக்கும் முதன்மையாக குழி பறிப்பதாகும். சனநாயகத்திற்கான அனைத்து மக்களுக்கும் எதிரானதாகும். மக்களைப் பிளவுப்படுத்துவதாகும்.

ஆகவே, சாதிய & இனவாத தமிழ்த்தேசியம் என்பது தேசிய உற்பத்தி, அதற்கான தேசிய அரசு மூலம் சர்வதேசியத்தை இலக்காகக் கொண்ட உழைக்கும் மக்களின் சனநாயக தேசிய கோரிக்கையும் அல்ல.

இரண்டுப் பிரிவினர்களான இவர்களின் நலன்களோடு இணையாத மூன்றாவது வகை சாதிய & இனவாத தமிழ்த்தேசியம் யாருடைய நலன்களை பிரதிபலிக்கிறது?

இப்போது வர்க்கப் பிரச்சினை எதுவும் இல்லை என்றும்; தமிழர் - தமிழரல்லாதார் பிரச்சினைதான் உள்ளதென்றும் இவர்கள் கூறுகிறார்கள்.

தலித் - தலித் அல்லாதோர் அரசியலின் மூலம் தலித் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் குற்றம் செய்தால் தட்டி கேட்க முடியாத சூழல் உருவாகியது அல்லவா? அதுபோல் இவர்களின் தமிழர் - தமிழரல்லாதோர் அரசியல் என்பது தமிழக ஆளும்வர்க்கங்களுக்கு பாதுகாப்பளிக்கிறது.

நாம் ஏற்கனவே சொன்னது போல் தமிழ்நாட்டின் ஆளும்வர்க்கங்களான தரகு அல்லது பெருமுதலாளிகளும், அதிகாரிகளும் ஏற்கனவே தங்களுக்கான அரசியல் இயக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். முற்போக்கு பேசி மக்களை திசைதிருப்ப ம.தி.மு.க இருக்கிறது. தமிழருவி மணியன் போன்றோர் இருக்கின்றனர். ஆகவே மூன்றாவது வகை தமிழ்த்தேசியர்களின் ஆதரவு இவர்களுக்கு நிரந்தரமாக தேவையில்லை. ஈழ ஆதரவு போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருந்த நிலைபோல் சிக்கலான காலங்களில் மட்டுமே பயன்படுத்திக்கொள்வார்.

ஆனால் எந்த ஒரு இயக்கங்களும் தேவையான காலத்தில் மட்டும் உயிர்த்தெழுந்து கொண்டிருக்க முடியாதே! அது நிரந்தரமாக வாழ்வதற்கான பின்புலம் வேண்டுமே! நீடித்து நிற்பதற்கு வழியில்லாமல் நிலைகுலைந்து நிற்கும் இவ்வியக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளத்தான் வைகுந்தராஜன், மா.நடராசன் போன்ற மாஃபியாக்களின் கைகள் நீள்கிறது போலும். எண்ணெய் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த நாடுகளில் மாஃபியா போராளி குழுக்கள் உருவாகியிருப்பது நம் நினைவுக்கு வந்தால் நல்லது. ஆக மூன்றாவது வகை தமிழ்த்தேசியம் அபாயகர பாதைக்கு தள்ளப்படலாம்.

தமிழ்நாட்டில் குவியும் பொருளாதாரமும் - அவற்றோடு இணைந்த மாஃபியாக்களும்

அண்மையில் முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய ஒரு கடிதம் முக்கியமானது. இரண்டாக பிரிந்துள்ள ஆந்திர மாநிலங்களின் வளர்ச்சிக்கு நிதியளித்து சலுகை வழங்கவிருக்கும் மத்திய அரசை கண்டித்த அக்கடிதத்தின் சாரம் "இந்தியாவின் பொருளாதார நலனைக் கணக்கில் கொண்டு தமிழ்நாடு 20 ஆண்டுகளாக (உலகமயமாக்கலுக்காக 1990-க்குப் பிறகு என்பதை சொல்கிறார்) பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. தொழில் வளர்ச்சிக்காகவும், அந்நிய மூலதன வரவுக்காகவும் உள்கட்டுமான பணிகளை பெருமளவு நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் பெருகியுள்ளன. இந்நிலையில் நீங்கள் அருகாமையிலுள்ள ஆந்திர மாநிலங்களுக்கு சலுகைகள் வழங்குவதன் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் அம்மாநிலங்களுக்கு போகும். கூடவே இங்கிருக்கிற தொழிற்சாலைகளும் அம்மாநிலங்களுக்கு இடம்பெயரும். ஏற்கனவே சில தொழிற்சாலைகள் கர்நாடகத்திற்கும் வேறு மாநிலங்களுக்கும் இடம்பெயர்ந்துள்ளன. ஆகவே முன்னேற்பாடுகளோடு இருக்கும் தமிழ்நாட்டுக்கு சலுகைகள் வழங்காமல் புதிய மாநிலங்களுக்கு சலுகைகள் வழங்குவது ஞாயமல்ல" என்பதுதான்.

முதலமைச்சர் சொல்வதிலிருந்து தமிழ்நாடு வேட்டை காடாக்கப்பட்டுள்ளது. கருப்பு பணம், வெள்ளைப் பணம் கொட்டுகிறது. உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகள் நேரடியாக அரசுடன் பேரம் பேசி கொள்ளையடிக்கிறார்கள். ஆனால் இவர்களின் தொழிற்சாலைகளுக்கான நிலம், அவற்றின் கட்டுமானத்திற்கான மண், கல் (குவாரிகள்) மற்றும் நீராதாரங்களை ஆக்கிரமித்துத் தருவதன் மூலம் இன்னொரு வகை முதலாளிகள் உருவாகியுள்ளார்கள். அவர்கள்தான் வைகுந்தராஜன் போன்ற மாஃபியாக்கள். தாதுமணல் மற்றும் மீன்பிடித் தொழில்களில் கூட இத்தகைய மாஃபியாக்களே செல்வாக்கு செலுத்துகின்றனர்.

கூடவே அளவில்லா கறுப்புப் பணம் கொட்டுகிற திரைத்துறையிலும் (உங்களுக்கு கத்தி திரைப்படத்தின் சிக்கல் நினைவுக்கு வர வேண்டும்) மாஃபியாக்களின் பங்கு முக்கியமானது. ஆக தமிழ்நாட்டின் பொருளாதார நிலைமைகளில் மாஃபியாக்கள் தவிர்க்க முடியாதவர்களாகி விட்டனர். இவர்கள் இப்போது முளைத்தவர்களல்ல. இவர்களை மூன்றாவது வகை தமிழ்த்தேசியர்கள் வளர்த்து விடவுமில்லை. ஆனால் இவர்கள் தங்களின் தேவையின் பொருட்டு முற்போக்கு இயக்கங்களுக்குள் ஊடுருவுகிறார்கள். இவர்களின் ஊடுருவலுக்கு இந்தியா மற்றும் இலங்கையின் உளவு நிறுவனங்கள் துணை செய்யலாம். இந்த அபாயத்திலிருந்து பெரியார் & திராவிட எதிர்ப்பு - சாதிய & இனவாத தமிழ்த்தேசியம் மீள வேண்டுமென தந்தைப் பெரியாரின் பிறந்தநாளில் வாழ்த்துவோம்!

- திருப்பூர் குணா

Comments

1 comment

1
vijai.k
your title and vices are vellala thamizhthesiyam(thiravidar thesiyam) will represent only present fudals and present uppercastist. this will not given any solutions for tamil thesiyam or communisam but can crate bramin and presently vanniyar,kallar, thevar. thalith capital ,fudal,aristocrats developed moffias like other moffiyas but nobady ready to dicus about apration political carector of such type. it will crate only communal extrimist, which will not prograsive and not good to people,which shows political slavenes. you have to change for change the socity, otherwise people will suffer lot due to your miss guidance.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.