“முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்க வந்தனர்.
நான் பேசவில்லை: ஏனெனில் நான் யூதனில்லை.
பின்னர் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளைப் பிடிக்க வந்தனர்.
நான் பேசவில்லை: ஏனெனில் நான் கம்யூனிஸ்ட்டில்லை.
பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைப் பிடிக்க வந்தனர். அப்போதும்
நான் பேசவில்லை: ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியுமில்லை.
பின்னர் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்.
அப்போது எனக்காகப் பேச யாருமே இல்லை”

என்கிற புகழ்பெற்ற வரிகளின் இறுதி நிலையைத்தான் இன்று இலங்கை இசுலாமியர்கள் அடைந்துள்ளனர்.

sri lanka aluthgama

1987-காத்தான்குடியில் உள்ள மசூதி விடுதலைப் புலிகளால் தாக்குதலுக்கு உள்ளாகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் பேசும் இசுலாமியர்கள் வெளியேற்றம் செய்யப்படுகின்றனர். இசுலாமியர்கள் விடுதலைப் போருக்கு எதிராக செயல்பட்டனர் என்கிற காரணம் முன்வைக்கப்பட்டது இச்சம்பவங்களுக்கு. இதிலிருந்து தொடங்குகிறது மார்க்கத்தால் இசுலாத்தினை ஏற்ற தமிழ் இனத்தாரின் புலிகளின் எதிர்ப்பு நிலைகள். பல தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும் தமிழினப் பற்றால் புலிகளுக்கும், அதன் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், ஆதரவும், உதவிகளும் செய்து வந்திட்டிருந்த பழனிபாபா அவர்கள், இலங்கையிலேயே சென்று புலிகளுக்கு எதிராக கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துவிட்டு வந்தார்.

இதுதான் காரணம் இசுலாமியர்கள், புலிகளை வெறுப்பதற்கு. இதனாலேயே 2009-ம் ஆண்டில் சிங்கள இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் நிகழ்ந்த போரின் போது, அதாவது ‘இறுதி ஈழப் போர்’ எனக் குறிப்பிடப்படும், தமிழ் இனத்தார் ஒன்றரை இலட்சம் பேர் கொன்றொழிக்கப்பட்ட சம்பவத்தின் போது இதே தமிழ் பேசும் இலங்கை வாழ் இசுலாமியர்கள், சிங்கள இராஜபக்சே அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இதன் நீட்சியாக இராஜபக்சேவுக்கு எதிரான எந்த ஒன்றையும் அங்குள்ள இசுலாமியர்கள் எதிர்த்தும், சிங்கள அரசுக்கு ஆதரவு அளித்தும், புலிகளின் மீது கொண்ட கோபத்தால் மொத்த தமிழ் சமூகத்திற்கும் எதிராகச் செயல்பட்டனர்.

விளைவு, இன்று இதே சிங்கள அரசினால் இயக்கப்படும், பொதுபலசேனா எனும் தீவிரவாத, பேரினவாத அமைப்பு இசுலாமியர்களின் மசூதிகளை இடித்தும், கடைகளை அடித்து உடைத்தும், வீடுகளை கொளுத்தியும், பலரைக் காயமுற வைத்தும், 3-பேரை கொன்றும் தீர்த்துள்ளது. இது சிங்களத்தின் இன அழிப்பின் நீட்சிதானே ஒழிய வேறொன்றுமில்லை.

“ஒரு சாரர் மீது இருக்கும் வெறுப்பு, உங்களை நீதி செலுத்துவதினின்றும் தடுத்துவிட வேண்டாம்”

எனும் திருக்குரானின் வசனங்களைப் படித்திட்ட இசுலாமியர்கள், அதனை மறந்திட்டதினாலே இந்த விளைவுகள். என்னதான் புலிகள் தவறு செய்திருந்தாலும், அது புலிகளின் தவறாக மட்டுமே பார்க்க வேண்டும். இதனை மறந்துவிட்டு இசுலாமியர்கள், ஒட்டுமொத்த இசுலாம் இல்லா தமிழர்களை கொன்றொழிக்க துணையாக இருந்துள்ளதானது, இவர்கள் தங்களின் புனித நூலின் வசனங்களை அவமதித்த செயலாகத்தான் தோன்றுகிறது.

புலிகள் தவறு செய்திருந்த போதிலுமே கூட, ஏனைய தமிழர்களுக்கு இவர்கள் செய்துள்ளது அநீதியென்று பார்க்கப்படும் அதேவேளை, புலிகள் தங்களின் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டும், வெளியேற்றம் செய்யப்பட்ட இசுலாமியர்களை மீள் குடியேற்றம் அழைப்பு விடுத்த பின்னரும் இவர்கள் புலிகளை மன்னிக்காது செயல்பட்டுள்ளனர் என்பது எவ்வளவு பெரிய குரோத மனப்பாங்கு?

ஆம், புலிகள் தங்களின் தவறுகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டுவிட்டனர். இதெல்லாம் அச்சம்பவம் நிகழ்ந்திட்ட சில காலத்திற்குள்ளாகவே நிகழ்ந்தவைகள். ஒருவர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கோரும்போது அவர்களிடம் சமாதானம் செய்வது இசுலாமிய மரபா இல்லை செய்தது செய்ததுதான் என எதிர்ப்பது இசுலாமிய மரபா? என்பதனை உண்மை இசுலாமியர்கள் சிந்திக்க வேண்டும்.

புலிகள் செய்த தவறை அந்த தருணத்தில் மட்டுமே கண்டித்திட்ட பழனிபாபா அவர்கள், மீண்டும் அவர்கள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு சமரசம் ஆகிவிட்ட பின்னர், அவர் தொடர்ந்து தனது புலி ஆதரவினை செய்துதான் வந்துள்ளார். அதேசமயம் புலிகளின் தவறை வைத்து அவர் தமிழர்களை எடைபோடவுமில்லை. தொடர்ந்து அவர் தமிழினத் தலைவர்களோடும், சமூகத்தோடும் நல்லிணக்கத்தோடே செயல்பட்டார். என்னதான் புலிகள் ஒருமுறை தன் சொந்த சமூகத்தின் மீதே தாக்குதல் தொடுத்திருந்த போதும் கூட, இராசீவ் காந்தியின் படுகொலையில் புலிகளுக்கு தொடர்பில்லை எனவும், இதிலுள்ள காங்கிரசாரின் பின்னணிகளையும் தெளிவாக சுதாரித்துப் பேசினார் பழனிபாபா. இதுதான் இசுலாமிய மரபு. பல தமிழ்த் தேசிய தலைவர்களும் புலிகளுக்கான ஆதரவை மறைத்துக் கொண்டு பதுங்கிய போதும் கூட, புலிகள் தவறாக குற்றம் சாட்டப்படுவதினை எதிர்த்து, புலிகளுக்கு ஆதரவுக் குரல் எழுப்பினார் பழனிபாபா. அதுவும் தடா போன்ற கடும் சட்டங்கள் புலி ஆதரவாளர்களின் மீது போடப்பட்டிருந்து கொண்ட கால கட்டம் அது. இப்பொழுது சிந்தியுங்கள் பழனிபாபாவின் செயல்கள் எவ்வளவு முக்கியமானதாக இருந்துள்ளது என்பதனை. இதுதான் இசுலாத்தின் வழிச் செயல்கள்.

ஆனால் இவைகளை எல்லாம் கிஞ்சிற்றும் சிந்திக்காது, இசுலாத்தின் மாண்புகளை காலில் போட்டு மிதித்து செயல்பட்டதின் விளைவு, இதனினும் மனிதத்தினை காலில் போட்டு மிதித்ததின் விளைவு இன்று இலங்கை வாழ் இசுலாமியர்கள் சந்தித்துள்ளனர்.

மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு இடத்தில் இப்படி குறிப்பிட்டார், “சிங்களர்களின் நோக்கம் மொத்த தமிழின அழிப்புதான். இன்று எங்களை அழிக்கின்றனர். நாளை அது அப்படியே இசுலாமியர்களை நோக்கிப் பாயும். ஆகையால் நாம் தமிழ் பேசும் இனமாய் ஒன்றிணைய வேண்டும்’ என்றார்.

இதுதான் கண்கூடு இப்பொழுது. இந்த சிங்களத்தாரின் பூர்வக் குடிகளென நாம் பின்னோக்கினால் அது ஆர்ய இன வழித்தோன்றல்களாக உள்ளன. இவர்கள் இந்தியாவில் பார்ப்பனர்களாகவும், இலங்கையில் சிங்களர்களாகவும், உலக அரங்கில் யூதர்களாகவும் இருக்கின்றனர். இந்த இன நேசம்தான் இலங்கை, இந்தியா (பார்ப்பனர்கள்), இஸ்ரேல் ஆகியவைகளின் கூட்டியல்புகளாகும். இவர்களின் கரங்கள் இவர்களைத் தவிர ஏனைய இனத்தாரை அழித்து ஆள்வதுதான். இதற்காக இவர்கள் அதிகமாக கை கொள்ளும் ஆயுதம் ‘பிரித்தாள்வது’

இந்த பிரித்தாள்வதின் ஆயுதத்தினால்தான் நாம் இன்று தாக்கப்பட்டுக் கொண்டுள்ளோம். அது இந்தியாவானாலும் சரி, இலங்கை ஆனாலும் சரி, உலக அளவிலானாலும் சரி.

இப்பொழுது பிரபாகரன் அவர்களின் வார்த்தைக்கு வருகிறேன், ‘தமிழ் இனத்தாராய் ஒன்றிணைய’ வேண்டும் என்றார். இன்று நமக்கு இதுதான் தேவை. புலிகள் செய்தவற்றிற்கு மன்னிப்பும், மீள்குடியேற்றத்திற்கு அழைப்பும் கேட்டு விட்டனர். ஆனால் இதுவரை சிங்களர்களால் வெளியேற்றப்பட்ட இசுலாமியர்களை மீள்குடியேற்றம் செய்யாதிருக்கும் இராஜபக்சே அரசினை நாம் என்ன செய்யப் போகிறோம்? இதுமட்டுமா தொடர்ந்து மசூதிகள் இடிக்கப்படுவதும், புர்கா அணியத் தடைவிதிப்பதும், ஹலால் அங்கீகாரத்திற்கு தடை விதிப்பதும் என நீளும் இவர்களின் விரோதச் செயல்களுக்கு நாம் என்ன எதிர்வினையாற்றியுள்ளோம்? இனி என்ன ஆற்றப் போகிறோம்?

இனியும் நாம் புரிதலின்றி பிரிந்து நின்றால், பேரினவாதத்தின் கைகளினால் நமது குரல்வளைகள் தொடர்ந்து நெறிக்கப்படும். ஆகையால் இசுலாமியர்கள் நாம் ஒன்றை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும், நாம் மார்க்கத்தினால், இறைவழிபாட்டால்தான் மாறுபட்டவர்களே தவிர இனத்தாலும், மொழியாலும் தமிழ் பேசுபவர்கள் என்கிற உண்மையினை உணர்ந்து. தமிழ் மக்கள் நமது தொப்புள் கொடி உறவுகள் என்பதனையும் நினைவில் கொண்டு வந்து, இணைந்து செயலாற்ற வேண்டும். நமது தவறுகளை நாம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

இசுலாமியர்கள்தான் தவறு செய்துவிட்டார்களெனில், இதனையே காரணமாய் வைத்து தமிழர்கள் சிலர் இவ்விடயத்தில் இசுலாமியர்களுக்கு எதிராக வைக்கும் கூற்றுகள், “இராஜபக்சேவினை ஆதரித்தீர்களே, உங்களுக்கு இது தேவைதான்” என்றபடி உள்ளது. செய்தீர்கள் அனுபவிக்கிறீர்கள் என்றும் சொல்கிறார்கள் சிலர். என்ன தமிழர்களே இதுதான் தமிழ் கூறும் நல்லுலகா? நீதமா?

“தகுதி யெனஒன்று நன்றே; பகுதியால்

பாற்பட் டொழுகப் பொறின்” (குறள்)

“நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்

பண்பாற்றா ராதல் கடை” (குறள்)

பகைமையிலும் நடுநிலைமையையும், மனிதநேயத்தையும் பேண வேண்டும் எனக் கூறிடும் வள்ளுவனின், குறள்களை மறந்து செயல்படுகிறீர்களே? இதுதான் உங்களின் இனப் பற்றா? தமிழ் மரபா? என்பதனைச் சிந்திக்க வேண்டுகிறேன்.

அதேசயம், நான் மேலே குறிப்பிட்டுள்ளபடி பழனிபாபா போன்றோரின் தமிழினப் பற்றுகளையும், அவர்களின் புலிகளுடனான தொடர்புகளையும், அப்துல் ரவூஃப் போன்றோரின் ஈழத்திற்கான உயிர்த் தியாகங்களையும், புலிகளின் படைப்பிரிவில் ‘ஜீனைத்’ என முஸ்லீம் பெயரில் தனி படைப்பிரிவே வைக்கப்பட்டிருந்ததினையும் சற்று திருப்பிப் பார்க்க வேண்டுகிறேன்.

இதெல்லாம் 2009-களுக்கு முந்தையவைகள் என்றால், இதற்குப் பிறகு தமிழகத்தில் நிகழ்ந்த பலவிதமான ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் போன்ற இசுலாமிய அமைப்புகளையும், தமிழர்களுக்கான பிரச்சனைகளை எல்லோரும் சென்னையினுள்ளே சுருக்கி வைத்திருந்த போது, அதனை டெல்லி மாநகரத்தில் ஒலிக்கச் செய்த எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இசுலாமியர்களின் இந்த அணுகுமுறைகளால்தான், மே-17, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் போன்ற பொதுச் சமூக, தமிழ் அமைப்புவாதிகள் இலங்கை இசுலாமியர்களுக்கு ஆதரவாக குரலெழுப்பி கண்டனக் கூட்டங்களை நிகழ்த்தியுள்ளனர். இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இசுலாமிய அமைப்புகளோடு, தமிழ்த் தேசிய, தலித் அமைப்புகளும், கட்சிகளும் பங்கெடுத்துள்ளனர் எனும் நிகழ்கால நிலைகளை தமிழ் பேசும் உறவுகள் அறிந்து கொள்ள வேண்டும்.

இசுலாமியர்கள் தாக்கப்பட்டதினை எதிர்த்து அனைத்து இசுலாமிய அமைப்பினரும் ஒன்றன் பின் ஒன்றாக இலங்கை தூதரகத்தை நோக்கி படையெடுத்ததும், அனைத்து அரபு நாட்டு இலங்கைக்கான தூதுவர்களும் இலங்கை அரசிடம் நெருக்கடிகளை ஏற்ப்படுத்துவதும், ஐ.நா தனது கண்டனத்தை இலங்கைக்கு தெரிவிப்பதும் போன்ற சர்வதேச நெருக்கடிகளை நாம், மொத்தத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக ஏற்ப்படுத்தியிருக்க வேண்டும், இல்லை இனிமேலாவது ஏற்படுத்த வேண்டும்.

1987 புலிகளின் தவறு, 2009 இசுலாமியத் தமிழர்களின் தவறு என இருதரப்பிலும் நிகழ்ந்துள்ள தவறுகளின் பின்னணி பிரித்தாளும் சூழ்ச்சி என்பதனை உணர்ந்து, அனைவரும் தமிழ் பேசும் இனத்தார் என்கிற பொதுக் குறீயீட்டில் ஒன்றிணைய வேண்டும். இதுதான் இனி நாம் செய்ய வேண்டியது. இவைகளைத் துரிதப்படுத்துவோம், வெற்றி பெறுவோம், பாசிசத்திற்கு எதிராக, சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக!

- ஷஹான் நூர், கீரனூர்.

Pin It