‘புகழுக்காக புலி வேஷம் போடும் சமுதாயக் காவலர்கள்' என்ற தலைப்பிட்டு, டிஎன் டிஜே என்ற அமைப்பு நடத்தும் பத்திரிகையில் விமர்சனம் என்ற பெயரில் காழ்ப்புணர்ச்சியையும், வெறித்தனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை குறித்து தமிழகத்தில் நடந்த கண்டனக் கூட்டங்களில் ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம்.பாக்கரும், தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ்வும் கலந்து கொண்டனர். இதனை கொச்சைப்படுத்தி எழுதியுள்ளனர்.

இலங்கை கிழக்கு மாகாணம் காத்தான்குடி பள்ளிவாசலில் 1990ம் ஆண்டு ஆகஸ்டு 4 அன்று முஸ்லிம்கள் தொழுது கொண்டிருந்த நிலையில் 147 பேரை புலிகள் சுட்டுக் கொன்றனர் என்பது உண்மை. இதனை விடுதலைப் புலிகளும் ஒப்புக் கொண்டு 2003ம் ஆண்டு கிளிநொச்சியில் புலிகளுக்கும் - இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமுக்கும் இடையில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது - முஸ்லிம்கள் படுகொலைச் சம்பவம் ஒரு வரலாற்றுப் பிழை; இனி அப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழாது என நடந்து விட்ட அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்திருந்தார் பிரபாகரன்.

அதேபோல பிரபாகரன் வன்னிக்காட்டிலிருந்து வெளியே வந்து சர்வதேச பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதும் மேற்கண்ட படுகொலைச் சம்பவம் வரலாற்றுத் தவறு, அது ஒரு துன்பியல் சம்பவம் என்று பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருந்தார்.

இவை வரலாற்றுப் பதிவுகள்! ஆயினும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட புலிகளின் தாக்குதல்களை எந்த முஸ்லிமும் மறக்க முடியாது. புலிகளுக்கு ஆதரவளிக்கவும் முடியாது என்பதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தீர்க்கமாக இருக்கிறது.

அதே சமயம் புலிகள் செய்த தவறுக்காக அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள் - அநியாயங்களுக்கு எதிராக முஸ்லிம்கள் குரல் கொடுப்பது தவறு என்று சொல்ல டிஎன்டிஜேவினருக்கோ, வேறு அமைப்புக்கோ தகுதி கிடையாது. அதனை ஏற்கவும் முடியாது.

அப்பாவித் தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசின் அடக்குமுறைகளை எதிர்ப்பவர்களை அல்லது அதற்கெதிராக குரலெழுப்புபவர்களை புலிகளின் ஆதரவாளர்கள் என்பதும், முஸ்லிம் புலிகள் என்பதும், முஸ்லிம்களைக் கொன்றவர்கள் புலிகள் என்று மீண்டும், மீண்டும் அதனை நினைவூட்டி தமிழ் மக்களுக்கும் - முஸ்லிம்களுக்குமிடையில் பகைமையை வளர்ப்பது அல்லது இரு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்று நினைப்பதும் கேவலமான சிந்தனையின் குரூர வெளிப்பாடாகும். இதனால்தான் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை பள்ளிவாசலில் வைத்து கொன்று குவித்த மாபாதகர்கள் புலிகள் என்று துணிந்து பச்சைப் பொய்யை அவர்களால் எழுத முடிகிறது.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை எந்தெந்த ஊரில், எந்தெந்த பள்ளிவாசல்களில் புலிகள் கொன்றார்கள் என்பதை அவர்கள் ஆதாரங்களுடன் பட்டியலிட வேண்டும்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்து இல்லை. அதனால்தான் இந்திய தவ்ஹீத் ஜமா அத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர் கலந்து கொள்ளும் - தமிழ் அமைப்புகள் நடத்தும் கூட்டங்களில் அவர்களுக்கு மத்தியில் நேருக்கு நேராக, "புலிகள் முஸ்லிம்கள் மீது நிகழ்த்திய தாக்குதல்கள் மறக்க முடியாது. அந்தக் காயங்கள், லேசில் ஆறாதது. அது மன்னிக்க முடியாத குற்றம். அதே சமயம் புலிகளின் தவறுக்காக தமிழர்கள் மீது நடத்தப்படும் அக்கிரமங்களை கண்டிக்காமல் இருக்க முடியாது...'' என்று அவர்களது களத்திலே நின்று முழங்கி வருகிறார்.

இப்படி முகத்திற்கு நேராக தவறைச் சுட்டிக் காட்டும் திராணி டிஎன்டிஜே தலைவர்கள் மட்டுமல்ல; எந்த இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர்களும் சந்தித்திராத ஒன்று! சந்திக்கத் துணியாத ஒன்று!

கடந்த 17-05-2011 அன்று சென்னை காசிமேட்டில் நடந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கண்டனக் கூட்டம் கூட - நினைவேந்தல் நிகழ்ச்சியாக நடைபெற இருந்த வேளையில், அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் - நினைவேந்தல் நிகழ்ச்சி எங்கள் இஸ்லாமியக் கொள்கைக்கு எதிரானது. நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று எஸ்.எம்.பாக்கர் மறுத்தபோது, பாக்கரின் பங்களிப்பு வேண்டும் என்று நினைத்த அவர்கள் கண்டனக் கூட்டம் என்று மாற்றியமைத்தனர்.

அதேபோல போஸ்ட்டர் வாசகங்கள் கூட நமது கொள்கைக்கு மாறாக இருக்குமானால் அது நமது கவனத்திற்கு வரும்போது அதையும் சுட்டிக் காட்ட நாம் தயாராகவே இருக்கிறோம். இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அவர்களும் நம் உணர்வுக்கு மதிப்பளித்து மாற்றங்களைச் செய்ய தயாராகவே இருக்கின்றனர்; செய்தும் இருக்கின்றனர்.

யதார்த்தத்தை சொல்ல வேண்டுமானால் எஸ்.எம்.பாக்கர் கலந்து கொள்ளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சி தொகுப்பாளர் ‘வணக்கம்' என்று சொல்லும்போது, "வணக்கம் என்பது இறைவனுக்குரியது; உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்'' என்று கொள்கை உறுதியோடு முகமன் கூறும் வழக்கமுடையவர் என்பதை தமிழக முஸ்லிம்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

அதே சமயம், டிஎன்டிஜே தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் என்பவர் தேர்தல் நேரத்தில் கலைஞர் டி.வி. நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோது அந்நிகழ்ச்சி தொகுப்பாளர் சண்முக சுந்தரம் இவரைப் பார்த்து, ‘வணக்கம்' என்று சொன்னபோது பதிலுக்கு கை கூப்பி ‘வணக்கம் சார்' என்று சொன்னதை தமிழகம் கண்டது.

இது மட்டுமல்ல விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய - அவர்களுடைய திண்டுக்கல் மாவட்ட நிர்வாகியாக இருந்து மரணமடைந்த முருகன் என்பவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு விட்டு இஸ்லாமியக் கொள்கையில் சமரசமானவர் டிஎன்டிஜேவின் தலைவர் பீ. ஜைனுல் ஆபிதீன். ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.

உண்மை நிலவரம் என்னவென்றால் இன்று இலங்கையில் புலிகள் இயக்கம் இல்லை. ஆனால் புலிகளை முன்னிலைப்படுத்தி அப்பாவித் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்கள் மீது கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. இவற்றை தட்டிக் கேட்பவர்கள் ‘புலிகள்' என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

தமிழர்களுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுத்து விடக் கூடாது என்கிற சிங்கள அரசின் சதிதான் இந்தப் 'புலி' முத்திரை. ஆக, சிங்கள அரசின் ஏஜெண்டாக செயல்படும் டிஎன்டிஜேவினரைப் போன்றவர்கள்தான் தமிழ் மக்களுக்கு எதிராக களமாடி வருகின்றனர்.

இவர்களுக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்கிற அறிவு கூட இல்லாமல்தான் விமர்சனம் எழுதப் புறப்பட்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் தமிழர்களை புலிகள்தான் சுட்டுக் கொன்றார்களாம். முள்ளிவாய்க்காலின் கடைசி நேர போரின்போது தமிழர்களை வெளியேற விடாமல் துப்பாக்கி முனையில் மிரட்டி சுட்டுக் கொன்றார்களாம் புலிகள். இது சிங்கள அரசு சொன்ன கதை. அதைத்தான் இவர்கள் பிரதிபலிக்கிறார்கள். ஏஜெண்ட் வேலையை சரியாகவே செய்கிறார்கள்.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் அமைத்த நிபுணர் குழு இலங்கையில் ஆய்வு நடத்திவிட்டு, முள்ளிவாய்க்கால் - ரெட்டைவாய்க்கால் பகுதிகளில் யுத்தம் செய்ய தடை செய்யப்பட்ட - யுத்தத்திற்கு அப்பாற்பட்ட பாதுகாப்பு பகுதியான அபயமான இடத்தில் திரட்டப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை சிங்கள இராணுவம் கொன்று குவித்தது என அறிக்கை தந்தது. ஆனால் சென்னை அரண்மனைக்காரன் தெருவிலிருந்து கொண்டு புலிகள் கொன்றதாக அறிக்கை தருகிறார்கள் இவர்கள்!

காத்தான்குடி சம்பவத்தை மீண்டும் மீண்டும் கிளறி விட்டு, புலிகள் முஸ்லிம்களைக் கொன்றவர்கள் என்ற கற்பிதத்தைத் தொடர்ந்து செய்து வரும் இவர்கள்தான் கோவையில் 19 முஸ்லிம்களின் படுகொலைக்கு காரணமான கலைஞர் கருணாநிதியின் செயலை மறந்து விடுங்கள் என்று தமிழக முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறி - திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தத் துடித்துக் கொண்டிருந்தவர்கள்.

காத்தான்குடி முஸ்லிம்களைக் கொன்ற புலிகள் எதிரிகள் என்றால்... அவர்கள் அச்சம்பவத்திற்காக வருந்தி தவறை ஒப்புக் கொண்ட பின்பும் அவர்கள் மாபாதகர்கள் என்றால்... கோவை முஸ்லிம்கள் 19 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான கருணாநிதி - அச்சம்பவம் நடந்த பின்பும் கோவைக்கு வந்து குறைந்தபட்சம் பார்வையிடக் கூட வராத கருணாநிதி மானசீக நண்பராம்! இவர்களின் வாதப்படியே பார்த்தாலும் 19 முஸ்லிம்களின் படுகொலைக்கு காரணமான திமுகவிற்கு எதிராக வாக்களியுங்கள் என்றல்லவா பிரச்சாரம் செய்திருக்க வேண்டும்? நாம் தமிழர் சீமானுக்கு இருந்த இன உணர்வு கூட இவர்களுக்கு இல்லையே!

'தமிழர்களின் படுகொலைகளுக்கு காரணமான காங்கிரஸை தோற்கடியுங்கள்' என்று தமிழகம் முழுவதும் அவர் பிரச்சாரம் செய்து வந்தார். அதில் கடுகளவாவது இவர்களுக்கு இன உணர்வு இருந்ததா?

அப்பாவித் தமிழர்களின் இனப்படுகொலைகளுக்காக நியாயம் கேட்கும் எஸ்.எம். பாக்கரையும், பேரா. ஜவாஹிருல்லாஹ்வையும் முஸ்லிம் புலிகள் என்று வர்ணிக்கும் இவர்கள், இலங்கையில் தமிழ் தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு - தமிழ் - முஸ்லிம் இணக்கத்திற்கான முன்னெடுப்புகளை செய்து வரும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை முஸ்லிம் புலிகள் என்று சொல்வதில்லையே ஏன்?

அந்தக் கூட்டணியை இலங்கை முஸ்லிம்களே ஏற்றுக் கொண்டிருப்பது - அவர்கள் கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து - இரு சமூகமும் ஒன்றாக இணைந்து சமூக - அரசியல் தளங்களில் இயங்குவதற்கு இசைந்துள்ளார்கள் என்பதைத்தானே காட்டுகிறது!

ஆக அவர்களே மறந்து போயிருக்கும் அவர்களின் காயங்களைக் கீறி நக்கிப் பார்ப்பது கேவலமான செயலல்லவா?

‘ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமல் இருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்' (5:08) என்று திருமறைக் குர் ஆன் கூறுகிறது. அந்தத் திருமறைக்குர் ஆனை கைகளில் ஏந்திக் கொண்டு, தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளை நியாயப்படுத்துவதும் இவர்கள் தங்களை இஸ்லாமியர்கள் என்று அழைத்துக் கொள்வது வெட்கக் கேடு!

- ஃபைஸல்

Comments

5 comments

5
kennedy
appadiyanaal mumbail muslimkal nadathiya thokkuthalai muslim oruvan kuda kandikkathathu yan ? puligalai eathirkum india thas hith jama athai searntha oruvan pathil sollada ,
viyasan
http://www.youtube.com/watch?v=o6VqpcqK8s0

"ஓதிப்படிச்சு ஊர்புகழ வாழ்ந்தாலும் ஏழைக்குச் செய்த தீங்கை அல்லா எள்ளளவும் பொறுக்க மாட்டான்"
(ஈழத்து இஸ்லாமிய தமிழ் நாட்டார் பாடல்)

இந்த வீடியோவில் இருப்பவர் தானே பீ.ஜைனுல் ஆபிதீன். இவரைப் போன்ற தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தம்மைத் தமிழர்கள் என்று கூறிக் கொண்டே, இலாப நோக்கங்களுக்காக, சிங்களவர்களுக்குச் சார்பாக ஈழத்தமிழர்களுக்கெதிராகப் பொய்ப்பிரச்சாரம் பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். இப்படியான முஸ்லீம்களால் தான், இலங்கை முஸ்லீம்களுக்குத் "தொப்பிபிரட்டிகள்" என்று பெயர் வந்தது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது தம்மைத் தமிழ்ப்பற்றுள்ளவர்களாகக் காட்டிக் கொள்ளும் இவர்கள், கொழும்பில் சிங்களவர்களின் மத்தியில் வாழும் போது, அவர்களுக்காதரவாகத் தமிழர்களின் எதிரிகளாக மாறி விடுவார்கள். தமிழ்நாட்டிலும் இப்படியான தமிழ் பேசும் முஸ்லீம்கள் வாழ்கிறார்கள் என்பதை இந்த வீடியோவை பார்க்கும் வரை நான் நம்பவில்லை. அரபு நாடுகளில், ஏன் ஆபிரிக்காவில் ஒரு கறுப்பு முஸ்லீமுக்கு காயப்பட்டால் கூட அழும் தமிழ் நாட்டு முஸ்லீம்கள், பலத்தீன பயங்கரவாதத்தையும் நியாயப்படுத்தும், ஏன் ஒசாமாவைக் கூடத் தோழர் என அழைக்கும் தமிழ்நாட்டு முஸ்லீம்கள், தமிழைப் பேசி, தாமும் தமிழர்கள் என்று பீற்றிக் கொண்டே ஈழத்தமிழர்களில் முதுகில் குத்துவது தான் கொடுமை. இலங்கை முஸ்லீம்கள் சிங்கள அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற்காக ஈழத்தமிழ்ச் சகோதரர்களின் முதுகில் குத்தியது மட்டுமல்ல, சிங்களவர்களுடன் சேர்ந்து, கிழக்கில் எத்தனையோ ஈழத்தமிழர்களின் படுகொலைகளிலும் கற்பழிப்புகளிலும் பங்கு பற்றியுமுள்ளனர். இலங்கை அரசு முஸ்லிம்களை ஈழத்தமிழர்களுக்கெதிரான பிரச்சாரங்களுக்கும், பாகிஸ்தான், சவூதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து இராணுவ உதவிகளைப் பெறுவதற்கும் பயன்படுத்தியதால், இலங்கை முஸ்லீம்கள் ஈழத்தமிழர்களுக்குச் செய்த துரோகங்களும், கொலைகளும் வெளிவரவில்லை. பிரச்சார யுத்தத்தில் அவர்கள் வெற்றி பெற்று அனுதாபங்களையும், ஆதாயங்களையும் ஈழத்தமிழர்களில் செலவில், இரத்தத்தில் பெற்றது மட்டுமல்ல, ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தை நலிவுறச் செய்து, தோல்வியடைய உதவியது மட்டுமல்ல, இன்றும் சிங்களவர்களின் சார்பாக, நலிந்து, நாதியற்று, சொந்த வீட்டைக் கூட சிங்களவர்களிடம் இழந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கெதிராக தமிழ் முஸ்லிம்கள் பொய்ப்பிரச்சாரத்தைத் தொடர்வது தான் கொடுமையிலும், கொடுமை.
ezhilamudhan
singala agent yenbathaivida "SINGALA KAIKKOOLI" YENBADHE PORUNDHUM...
Ragunathan
அதிருக்கட்டும் அசோகன்... மேற்கு வங்கத்தில் 17,000 தலித் மக்களை 'வர்க்கப்புரட்சி' புகழ் சிபிஎம் கட்சி கொன்று குவித்ததாக ஏராளமான ஆதாரங்கள் வந்துள்ளதே.. அதைப் பற்றி கொஞ்சம் கதைக்கலாமா?
அசோகன் முத்துசாமி
லட்சக்கணக்கான தமிழர்களை புலிகள் தங்களைக் காப்பார்றிக் கொள்ள மனித்க் கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்பதையும் ஐநா அறிக்கை சொல்லியிருக்கிறதே?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.