போராட்டங்கள் அனைத்தும் அரசியல் அதிகாரத்தை அடைவதற்கானதே. இதை உணராத போராட்டங்கள் எவ்வளவு வீரியத்துடன் (உண்மையில் சாரத்தை இழந்துவிட்ட இத்தகையப் போராட்டங்கள் வீரியமானதேயில்லை) நடந்தாலும் முழு வெற்றியை அல்ல தற்காலிகத் தீர்வைக் கூட அடைய முடியாது. இந்த உண்மையை நமது அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

tuticorin church 600

அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் மீனவர் சமுதாயம் தங்களது ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தி வழி காட்டியது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மீனவ மக்கள் பெண்கள், குழந்தைகள், பெரியவர், ஆண்கள் என அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குரலில் அணு உலையை எதிர்த்து உலகை திரும்பிப் பார்க்க வைத்தனர்.

இந்தப் போராட்டத்தின் நியாயத்தை இன்னொரு வழியில் எடுத்து செல்லத்தான் போராட்டக்குழுவிலிருந்து மூன்று பேர் தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால் மூன்று பேரும் மிகக் குறைந்த வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தனர். இவர்களின் தோல்வி தனிநபர் தோல்விகளல்ல. அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் தோல்விகளாகும். இருக்கின்ற அணு உலைகளை மூடும் போராட்டத்தின் தோல்வி மட்டுமல்லாது, இனி நிறுவ இருக்கின்ற 3, 4 அணு உலைகளை நிறுவுவதற்கு ஒப்புக் கொண்டதைப் போன்ற தோல்வியுமாகும்.

இந்த வெளிப்படையான உண்மை நமக்கு முன் சில கேள்விகளை எழுப்புகிறது.

இந்தப் போராட்டத்தில் மீனவர் சமுதாயத்தை வழிநடத்தியது யார்?

போராட்டக்குழுவா? அல்லது கிருத்துவ திருச்சபைகளா?

போராட்டக்குழுவாக இருந்தால் போராட்டத்தில் உறுதியாக நின்ற மீனவர்களின் வாக்குகளை ஏன் பெற முடியாமல் போயிற்று?

கிருத்துவ திருச்சபைகள் என்றால் போராட்டக்குழுவை தோற்கடித்ததில் சபைகளுக்கு என்ன லாபம்?

திருச்சபைகளும் – மீனவர் சமுதாயமும்

பொதுவாகவே மீனவர் சமுதாயம் நிலவுகிற அரசு மற்றும் அதன் அதிகாரம் குறித்து அதிகமாக கவலைப்படாதவர்கள். மீனவர்களின் வாழ்வை கடலும் கடல் சார்ந்த இயற்கையுமே தீர்மானிப்பதால் அவர்களின் வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றாத அரசு குறித்து அலட்டிக் கொள்வதேயில்லை. முதலாளித்துவ வளர்ச்சியில்தான் மீனவர் சமுதாயத்தின் மீது அரசின் தலையீடு உண்மையில் உருவாகத் தொடங்குகிறது.

சந்தைக்கான போக்குவரத்தில் கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்பும் அரசுக்கு முக்கியத்துவமாகி விடுவதோடு நாட்டின் அனைத்து மக்களையும் தனது பொருள் உற்பத்தி நடவடிக்கையில் (உற்பத்தி செய்ய – விற்க – வாங்க) ஈடுப்படுத்தவும் மீனவர் மீது அரசின் தலையீடு அவசியமாகி விடுகிறது.

மீனவர் சமுதாயத்திற்கும் முதலாளித்துவ கல்வி மற்றும் சமூக நடவடிக்கைகள் காரணமாக பொது அரசியலுக்குள் நுழைவது அவசியமாகி விடுகிறது.

இவ்வாறு மீனவர் சமுதாயத்தின் மீது அரசின் தலையீடும், மீனவர் சமுதாயம் பொது அரசியல் அரங்கிற்குள் நுழைகிற தேவையும் நமது நாட்டில் வெள்ளையர் வருகையால் (அவர்கள்தானே முதலாளித்துவத்தைத் திணித்தார்கள்) விழைந்தது. ஆனால் மீனவர் சமுதாயத்தின் மீது நேரடியாக வெள்ளை அரசின் அதிகாரம் நிறுவப்படாமல் அவர்களின் கிருத்துவ மெஷினரிகளின் அதிகாரமே நிறுவப்பட்டது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மீனவ மக்கள் கிருத்துவ மெஷினரிகளின் கீழ்தான் இந்த அரசின் அதிகாரத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். அரசு கிருத்துவ மெஷினரிகளான திருச்சபைகள் மூலம்தான் அம்மக்களை வழிநடத்தியது; இப்போதும் நடத்தி வருகிறது.

ஒருவகையான சுய பொருளாதார வாழ்க்கைமுறையைக் கொண்ட மீனவ மக்களுக்கு அரசின் நேரடியான அதிகாரத்தின் கீழ் வாழ்வதைவிட சுயசார்பு கொண்டதைப் போல் தோற்றமளிக்கிற திருச்சபைகளின் கட்டுப்பாட்டில் வாழ்வது பெரிய சிக்கலை உருவாக்கிவிடவில்லை.

இயற்கையோடு இணைந்த நிலையான பொருளாதார வாய்ப்புகள் இருப்பதால் மீனவர்கள் இதுவரை பெரிய அரசியல் நெருக்கடிகள் எதையும் எதிர்கொள்ளவில்லை. அவர்களுக்கு நேர்ந்த வழிபாடு சம்பந்தமான அனைத்து நெருக்கடிகளையும் திருச்சபைகளே முன்னின்று அரசிடம் பேசித் தீர்த்து வைத்துள்ளன. திருச்சபைகளால் முறைப்படுத்தப்பட்டு அமைப்பாக்கப்பட்டிருக்கும் இம்மக்கள் இன்றுவரை திருச்சபைகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கிறார்கள்.

அணு உலை எதிர்ப்புப் போராட்டமும் – திருச்சபைகளும்

திருச்சபைகளை மீறி அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நடக்கவில்லை. மீனவ மக்கள் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக திருச்சபைகளோடு முரண்பட்டதாகவோ, மோதியதாகவோ எந்த ஆதாரமும் கிடையாது. அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் திருச்சபைகள் முழுமூச்சாகப் பங்கேற்றன. போராட்டக்குழுவில் பங்குத் தந்தைகள் இருக்கிறார்கள். பங்குத் தந்தைகளின் விடுதலை இறையியல் அரசியல் மேடைகளில் அனல் பரப்பின. ஆக திருச்சபைகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீனவ மக்கள் துளியும் விலகாதப் போராட்டமே அது. ஒன்றின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பவர்கள்தான் அதை வழிநடத்தவும் முடியும். எனவே போராட்டத்தை திருச்சபைகளே வழிநடத்தின.

திருச்சபைகளும் – தேர்தல் தோல்வியும்

பணத்துக்காக ஓட்டுப் போடுகிறவர்களல்ல மீனவர்கள். கடலன்னை அள்ளித் தருகிற அளவில்லாச் செல்வத்திற்கு சொந்தக்காரர்களான அம்மக்கள் அற்பக்காசுக்கு ஆசைப்படுகிறவர்களில்லை. அதேபோல திருச்சபைகளின் சொல்லை மீறி வாக்களிக்கிறவர்களில்லை. அவ்வளவு கட்டுப்பாடானவர்கள்.

ஆக மீனவர்கள் போராட்டக்குழுவினருக்கு ஓட்டுப் போடாமல் மற்றவர்களுக்கு போட்டார்கள் என்றால் திருச்சபைகளை ஏமாற்றி விட்டார்களா? திருச்சபைகளின் வழிகாட்டல் இல்லாமல் அவர்கள் எந்த முடிவையும் எடுப்பதில்லை.. பெண்கள், குழந்தைகள், பெரியவர், ஆண்கள் என குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் உணர்வுப்பூர்வமாக பங்கேற்ற மக்களிடம் ஓட்டை மாற்றிப் போடுவதற்கான வலிமையான வற்புறுத்தல்கள் இருந்துள்ளது. இப்பகுதி மீனவர்களிடம் திருச்சபைகளைத் தாண்டி யாரும் வற்புத்திவிட முடியாது. எனவே போராட்டக்குழுவினரின் தோல்விக்குப் பின்னால் திருச்சபைகளின் வழிகாட்டல் இருக்கிறது.

திருச்சபைகளின் அரசியல்

திருச்சபைகள் என்பது தேவனின் துதிப்பாடி பக்தர்கள் தருவதைக் கொண்டு உயிர்வாழ்கிற மடங்களல்ல. அவைகள் பல்வேறு கல்வி நிறுவனங்களையும், வணிக வளாகங்களையும், தேவாலய இடங்கள் மற்றும் விளைநிலங்களையும் கொண்ட பலகோடி மதிப்புடைய சொத்துக்களுக்கு அதிபதிகளாகும். இந்த சொத்துக்களின் பொருட்டு அவைகள் அரசோடு சமரசம் செய்துக் கொள்ள வேண்டுமே தவிர அரசை வீழ்த்துகிற வேலைகளில் ஈடுபடவே முடியாது.

எல்லா சொத்துடைய வர்க்கங்களைப்போல் திருச்சபைகளும் ஒரு பிரச்சினையில் ஆளும்வர்க்கங்களுக்கு இடையில் பிளவு இருக்குமானால் தனக்கு சாதகமான பக்கம் சாய்ந்து கொள்ளலாம். அப்படியில்லாமல் ஆளும்வர்க்கம் ஒன்றாய் நின்று நிறைவேற்றுகிற செயல்களை எதிர்க்க முடியாது. அப்படி எதிர்க்கத் துணிந்தால் திருச்சபைகள் தங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க முடியாது.

இவ்வளவு நீண்ட காலமாக ஆளும்வர்க்கத்தில் ஒரு அங்கமாக நீடித்துக் கொண்டிருக்கும் திருச்சபைகளுக்கு இது தெரியாதா? தெரிந்தும் எப்படி இவ்வளவு பெரியப் போராட்டத்தில் இறங்கின?

தெரிந்ததுதான். அதனால்தான் அவைகள் போராட்டத்தில் இறங்காமலிருந்தன.

ஆம். உதயகுமார் உள்ளிட்டோர் வந்து சொல்லும்வரை மக்கள் அணு உலையின் ஆபத்தை உணராமலிருந்ததில் நியாயம் இருக்கிறது. ஆனால் உயர்கல்வியாளர்களையும், பல ஆய்வாளர்களையும், உலக ஞானம் உடையோர்களையும், உலகத் தொடர்புகளையும் கொண்ட திருச்சபைகள் அணு உலையின் ஆபத்தை உணராமலா இருந்தன? அதேபோல அணு உலைப் பிரச்சினையில் அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் முடிவுகள் குறித்தும் உணராமலா இருந்தன?

இவை மட்டுமல்ல, மீனவர் வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் சேது சமுத்திரத் திட்டம், கடற்கரை வளர்ச்சித் திட்டங்கள், கடற்கரை மேலாண்மை சட்டங்கள், கடற்கரைப் பண்ணைவிடுதிகள், இறால் பண்ணைகள், பெரும் மீன்பிடிக் கப்பல்கள், சிங்கள கடற்படைத் தாக்குதல்கள் என எல்லாம் தெரியும். எல்லாம் தெரிந்து அவைகள் அரசுக்கு எதிராக சிறு துரும்பைக் கூட நகர்த்தவில்லை. நகர்த்தினால் அவைகளின் சொத்துக்களைப் பாதுகாக்க முடியாது.

திருச்சபைகளுக்கு மீனவ மக்களின் நலன்களைவிட தமது சொத்துக்களின் நலங்களே முதன்மையானது. அதனால் அரசோடு சமரசம் செய்கிற அரசியலை மேற்கொள்ளுமே தவிர அரசுக்கு எதிரான அரசியலை ஒருபோதும் நடத்தாது.

மீனவர்களுக்கு முன்னால்...

அணு உலைகள் மட்டுமல்ல மீனவர் வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் சேது சமுத்திரத் திட்டம், கடற்கரை வளர்ச்சித் திட்டங்கள், கடற்கரை மேலாண்மை சட்டங்கள், கடற்கரைப் பண்ணைவிடுதிகள், இறால் பண்ணைகள், பெரும் மீன்பிடிக் கப்பல்கள், சிங்கள கடற்படைத் தாக்குதல்கள் என மீனவர் சமுதாயம் இப்போது பெரும் அரசியல் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கான தொடக்கமாகவே அணு உலை எதிர்ப்புப் போராட்டம் இருந்தது. அந்தப் போராட்டம் ஏற்கனவே பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும்போது தேர்தலில் கையாண்ட முறைகள் இன்னும் நெருக்கடிகளையே ஏற்படுத்தும்.

மீனவர் சமுதாயம் மக்களின் நலனைவிட தமது சொத்துக்களின் நலந்தான் பெரிதென மாறிவிட்ட திருச்சபைகளின் பிடியில் இருந்து முதலில் மீள வேண்டும். அடுத்து நாடு முழுவதும் ஒரு புரட்சிக்கான சூழல் இல்லாத நிலையில் நமதுப் போராட்டத்தை வெற்றியை நோக்கி இட்டுச்செல்ல அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். தேர்தலும் நமக்கு நல்ல வாய்ப்பேயாகும்.

நாம் தேர்தலைப் பயன்படுத்த வேண்டுமென்றால் இப்போது இருக்கிற தேர்தல் முறைக்குள்ளே சில மாற்றங்களை உருவாக்க வேண்டும். ஒன்று இப்போது நடக்கிற 10 பேர் போட்டியிட்டு அதில் ஒருவர் வெற்றி பெறுகிற முறைக்கு மாறாக விகிதாச்சார பிரதிநிதித்துவம் பெறுகிற முறையில் தேர்தலை மாற்ற வேண்டும். ஓட்டுக்கு ஏற்றபடி கட்சிகளுக்கு பிரதிநிதிகள் கிடைப்பதென்பது கண்டிப்பாக மீனவர் கட்சிக்கும் பிரதிநிதிகளைக் கிடைக்க செய்யும். ஆனால் இதற்கு நாடு முழுக்க குரல் எழுப்பப்பட வேண்டும். நமது கோரிக்கைகளில் நாம் பின்தங்கியிருக்கும்போது மற்ற பலருக்கான கோரிக்கையை நாம் முன்னெடுக்க முடியாது. மற்றவர்கள் முன்னெடுத்தால் நாம் இணைந்து கொள்ள முடியும்.

இன்னொன்று மீனவர்களுக்கான தனித்தொகுதிகளை கோருவது. சமூகத்தின் ஒரு பிரிவினரான நமக்கு நம்மைப் பற்றித் தீர்மானிக்கிற சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நம்முடைய பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை. ஆகவே மீனவர் தொகுதி! மீனவர் பிரதிநிதி! என்ற கோரிக்கையை முன்னெடுப்பதாகும். இது சாத்தியமானது. நமக்கான தொகுதி உருவாக்கம் என்பது நம்மை ஒட்டி வாழ்வோரின் தொகுதியை மறு ஒழுங்குக்கு உட்படுத்துவதால் நமது நியாயத்தை மற்றவர்களையும் பேச வைக்கக் கூடியதாகும். அது நமது எல்லாப் போராட்டங்களுக்கும் ஆதரவைத் திரட்டுவதற்கான அரசியல் வெளியை உடனடியாக உருவாக்குவதாகும்.

- திருப்பூர் குணா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

13 comments

13
manoj
உதயகுமார் குறித்து திருப்பூர் குணா பேச மறுப்பது ஏன்?
உதயகுமாரின் காலச்சுவடி பேட்டியிலிருந்து..

"குழந்தைகளை வகுப்பறைகளிலிருந்து கடத்திச் செல்வது போன்ற மனித உரிமை மீறல்கள் குறித்து நான் யுனெஸ்கோவுக்கு, ஐநாவுக்கு, அம்னஸ்டி இண்டர் நேஷனல் போன்றவற்றிற்கு எழுதுவேன். நம் கண் முன்னால் இப்படி மனித உரிமை மீறல்கள் நடக்கும்போது கண்டிப்பாக இந்த அரசாங்கத்தை நாம் அம்பலப்படுத்த வேண்டும் என முடிவெடுத்துச் செயல்பட்டேன். நான் வெளிநாட்டினன் என்பதால் என் கடிதங்களைச் சோதனைக்கு உட்படுத்தமாட்டார்கள். எனவே என்னால் எழுத முடிந்தது. கத்தோலிக்க சிஸ்டர்கள் வருவார்கள். அவர்கள் வழியாகத் தகவல்களை அனுப்புவேன். "

அவர்கள் பொதுவுடைமைச் சமுதாயக் கல்வியைக் கொடுத்துவந்தார்கள். அதற்கென ஆசிரியர்களை நியமித்து மாணவர்களை மூளைச்சலவை செய்துவந்தனர்.
manoj
/ஆம். கம்யூனிச ஆட்சி நடந்த எத்தியோப்பியாவில் யுனெஸ்கோ கிளப் மூலமாக எப்படிச் சமாதானக் கல்வியைப் பரப்பலாம் என்பது குறித்துக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன்./

/ஆனால் கல்வி கற்கக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு கிடைத்தபோது, போகலாம் என முடிவுசெய்து அதற்கு ஒத்துக்கொண்டேன்./
manoj
ஆயூதத்தின் தேவை குறித்து உபதேசம் செய்யும் நீங்கள், அகிம்சை குறித்து அமெரிக்காவில் கல்வி பயின்று அதை இடிந்தகரையில் ஒத்திகை பார்த்தவரை குறித்து ஒன்றும் பேச மாட்டேன் என்கிறீர்களே ஏன்?

இவரின் ஒட்டி உறவாடுகிறீர்களே எப்படி?
உதயகுமார் பேட்டி : http://www.kalachuvadu.com/issue-155/page14.asp
manoj
உதயகுமார் பொன்மொழிகள்

/காந்தியைப் போன்ற பெண்ணியவாதியோ தலித் விடுதலைத் தலைவரோ இல்லை என்பது என்னுடைய நிலை. அம்பேத்கர் இருந்தார் என்பது உண்மைதான். ஆனால் அவரது அணுகுமுறையும் காந்தியின் அணுகுமுறையும் வித்தியாசமாக இருந்தன. காந்தி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டார். ‘நீ பிராமணனின் கோயிலுக்குப் போய் மல்லுகட்டுவதைவிட நீயே ஒரு கோயிலைக் கட்டு’ என்றார். அது கொஞ்சம் வித்தியாசமான அணுகுமுறை. அதைக் கொஞ்சம் தைரியத்துடன் படைப்புத் திறனுடன்தான் வெளிப்படுத்தியிருக்க முடியும்./
http://www.kalachuvadu.com/issue-155/page14.asp
manoj
/ மனித மனங்களில்தான் நாம் சமாதான அரண்களைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பது யுனெஸ்கோவின் தத்துவம். எனவேதான் யுனெஸ்கோ கிளப் ஆரம்பிக்கலாம் எனத் தோன்றியது. எனவே பள்ளியில் அதை ஆரம்பித்தேன். அதனால் அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது. யுனெஸ்கோ தலைமையகத்திலிருந்து அதை மற்ற பள்ளிகளிலும் தொடங்கச் சொன்னார்கள். /

திருப்பூர் குணா ஏதோ ஒரு கட்டுரையில் யூனெஸ்கோவின் கம்யூனிச எதிர்ப்பு பற்றி எழுதியிருந்ததாக நினைவு.

திருச்சபையை விமர்சிக்கும் குணா , திருச்சபையின் முக்கிய கூட்டாளியை விமர்சிக்க தயங்குவது ஏன்?
நாங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்து விடவில்லை தோழர். உடனடியாக செய்ய வேண்டியது என நாங்கள் கருதுகிறவற்றுக்கு எங்களின் சக்திக்கு உட்பட்டு செயல்படுகிறோம். உங்களைப் போன்றோர் உடனிருந்தால் இன்னும் பலதை செய்யலாம்.
manoj
உதயகுமாருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய உடன் இருக்க வேண்டுமா?

இல்லை உதயகுமாரை மீனவ பிரதிநிதியாக்கி அவரது தோல்வி மீனவர்களின் தோல்வி என்று அழ வேண்டுமாது?

என்ஜி,ஒ வின் தோல்வி மகிழ்ச்சிக்குரியது. தேர்தலில் அவரை ஆதரித்தவர்கள் கம்யூனிச விரோதிகள்
என்.ஜி.ஓ- க்களின் தோல்வி கம்யூனிஸ்டுகளால் நேர்ந்தால் மகிழ்ச்சியானதுதான். ஆனால் என்.ஜி.ஓ- க்களின் எசமார்கள் வெற்றிப் பெற்றதில் எப்படி மகிழ்ச்சியடைய முடியும்?. நாங்கள் மீனவர் பிரதிநிதித்துவம் குறித்துப் பேசுவது மீனவர் சமுதாயத்திடம். அவர்களின் போராட்டத்திற்கு நாம் பொறுப்பெடுக்க முடியாத பலவீனத்தில் உதயகுமாரை அங்கீகரித்ததைப் போல அரசியல் பிரதிநிதித்துவத்திற்கும் அங்கீகரித்தால் என்ன செய்வதாம்? நாமெல்லாம் புரட்சி செய்கிறப் பலத்தோடு இருந்து எந்த மக்களும் நம்மைப் புறக்கணிக்கவில்லை. புரட்சி எவ்வளவு முக்கியமோ அதேபோல் புரட்சிக்கு முன் இடைநிலைத் தீர்வுகளும் முக்கியம்.
manoj
உதயகுமாரை விமர்சிக்க மாட்டேன் என்று நேரடியாகவே சொல்லியிருக்கலாம்.

உலகம் போற்று உத்தமதலைவர் உதயகுமாருக்கு உங்களைப்போல அலகு குத்தி காவடி எடுக்க நான் தயாராக இல்லை.

உங்களின் சில கட்டுரைகளை படித்துவிட்டு நீங்கள் கம்யூனிஸ்டாக இருப்பீர்களோ என்று தவறாக எண்ணிவிட்டேன்..
தோழர் மனோஜ் உங்களது நோக்கம் என்னை தாக்குவதுதானா, மகிழ்ச்சி. நான் ஏதோ மீனவர் சமூகம் மற்றும் அணு உலை சிக்கலை உங்களோடு விவாதிப்பதான் மூலம் ஏதாவது நல்லது நடக்கும் என நம்பிதான் பதிலிட்டேன். நான் கம்யூனிஸ்டா இல்லையா என்கிற சான்றை வழங்குவதற்கான அதிகாரம் உங்களுக்குதன் உள்ளது.
manoj
உங்களை தாக்குவதால் எனக்கு என்ன கிடைக்கப்போகிறது . முன்னர் ஃபோர்டு பவுண்டேசன் பற்றியும் , யூனெஸ்கோ பற்றியும், வெறும் அரசியல் போராட்டம் செய்தால் வேலைக்கு ஆகாது என்பது பற்றியும் நீங்கள் எழுதியிருந்தீர்கள். நீங்கள் எதிரியாக கூறிய நிறுவனங்கள், கருத்துக்களின் பிரதிநிதியான உதயகுமார் பற்றி உங்கள் கருத்தை தெரிந்துகொள்ள் தான் மறுமொழியிட்டேன். தெரிந்துகொண்டேன். நன்றி

சொல்லுக்கும் செயலுக்கும் நல்ல பொருத்தம்(!)
எதிரிகள் பரவியிருக்கிறார்கள். நாம் சிதறியிருக்கிறோம். எல்லாவற்றையும் எழுத்தில் நிறைவேற்ற முடியாத எங்கள் பலவீனத்தை மன்னிக்கவும்.
மீ.த.பாண்டியன்
மீனவர் தொகுதி, மீனவர் பிரதிநிதி நோக்கி மீனவர் சமூகத்துடன் இணைந்து பயணப்பட வேண்டும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.