1980 களில் பிரதமர் இந்திரா காந்தி அணு நீர்முழ்கி கப்பல் ஒன்றை உருவாக்க விரும்பி. ரஷ்யா நாட்டின் உதவியை நாடினார். அதற்கு அவர்கள் முன்வந்தாலும் 8 அணு உலைகளை வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.
1984 ஆம் ஆண்டு இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்குப்பின் பிரதமர் பதவி ஏற்ற ராஜீவ்காந்தி 1988 ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் 8 அணு உலைகளை வாங்குவதற்கு ரஷ்ய நாட்டோடு ஒப்பந்தம் செய்தார்.
இந்த அணு உலைகளை அமைத்திட மத்திய அரசு முதலில் கர்நாடக மாநிலத்தை தேர்ந்தெடுத்தது அங்கு ஏற்பட்ட எதிர்ப்பில் அத்திட்டத்தை கேரள மாநிலத்திற்கு மாற்றினர். அங்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தால் தமிழகத்திற்கு மாற்றினர். இங்கும் பல எதிர்ப்பு போராட்டங்கள் பல நடைபெற்றன.
* 1987 ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலையை எதிர்த்து திருச்செந்தூரில் மீனவர்கள் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதேபோல் திருநெல்வேலி, இடிந்தகரையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 4
* 1988 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது.
* 1989 ஆம் ஆண்டு நாகர்கோயிலில் அணுஉலையை எதிர்த்து ஊர்வலம் நடைபெற்றது.
* 1989 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 20 ஆம் நாள் தூத்துக்குடியில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஜார்ஜ் பெர்னான்டஸ் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு அணு உலைக்கு எதிராக குரல் எழுப்பினர்.
* 1989 ஆம் ஆண்டு மே திங்கள் முதல் நாள் (மே தினம்) தேசிய மீனவர் கூட்டமைப்பின் சார்பில் கன்னியாகுமரியில் அணு உலைக்கு எதிராக மாபெரும் பேரணி நடைபெற்றது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். அவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.
ஆனால், மத்திய அரசு தமிழர்களின் எதிர்ப்பை மதிக்காமல் திட்டப் பணியை தொடங்கியது. தமிழர்களின் உயிர் அவர்களுக்கு கிள்ளுக் கீரையாக நினைப்பதே இதற்குக் காரணம். தமிழகத்தின் சார்பில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் தங்கள் பதவி பறி போய்விடும் என்பதால் எதிர்க்கத் துணிவின்றி தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றனர்.
அணுஉலைகளின் ஆபத்துக்கள் பற்றி பல அறிஞர்கள் பல கட்டுரைகளை எழுதினர். தமிழகத்தில் விடுதலை, தினமணி, போன்ற இதழ்களும், ப்ரண்ட்லைன், ஆங்கில இதழும் பல கட்டுரைகளை வெளியிட்டன. இவையின்றி தனி நூல்களும் அணு உலைகளின் ஆபத்தை விளக்கி வெளிவந்துள்ளன. தோழர் ஆ. முத்துக்கிருஷ்ணன் ""கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்' என்ற நூலை டிசம்பர் 2011 இல் வெளியிட்டார். இந்த நூல் பல செய்திகளை நமக்கு தருகின்றன.
2011 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 11 ஆம் நாள் ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமி எனும் ஆழிப்பேரலையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டு கதிர்வீச்சை வெளியேற்றியது 20 கி.மீ. தூரத்தில் வாழ்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உடமைகளை விட்டு வெளியேறினர்.
புகுஷிமாவிலிருந்து 50 கி.மீ. தொலைவில் இருந்த நெல் வயல்கள் மாசுபட்டன. அரசு அங்கு விளையும் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தடைவிதித்தது. அதோடு டோக்கியோ நகரத்தில் குழாய்களில் வரும் நீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என அரசு அறிவுறுத்தியது. இதனால் மக்கள் உணவு தயாரிக்க நீர் இன்றி அவதிப்பட்டனர்.
இந்த விபத்தில் 30 கி.மீ. சுற்றளவிற்கு மனிதர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த 9 மாதங்கள் ஆகியும் இன்னும் கதிரியக்கத்தை வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து வெடிக்கிறது.
இந்நிலை நமது கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஏற்பட்டால் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, நாகர்கோயில், கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்தில் வாழும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
1986 ஆம் ஆண்டு சோவியத் நாட்டில் செர்நோபில் அணுஉலை வெடித்து சிதறியதால் அதனைச் சுற்றியுள்ள 30 கி.மீ. தூரத்தில் வாழ்ந்த 4 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
செர்நோபிலிருந்து 2700 கி.மீ. தொலைவில் இருக்கும் இங்கிலாந்தில் 382 பெரிய பண்ணைகளும் அங்கு வளர்க்கப்பட்ட 2,26,500 ஆடுகளும் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டன. ஆங்கிலேயே அரசு அந்த ஆடுகளை உடனடியாக கொன்று புதைக்க உத்தரவிட்டது.
இந்த விபத்தால் 1986 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை சோவியத் நாட்டில் 9,85,000 பேர் புற்று நோயால் இறந்துள்ளனர் என அந்த அரசு அறிக்கை ஒன்றில் உறுதிபடுத்தியுள்ளது.
செர்நோபி பகுதியைச் சுற்றி 1000 கிமீ. சுற்றளவில் வாழும் மக்கள் கடந்த 25 ஆண்டுகள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அங்கு வாழும் குழந்தைகளின் ஆயுட்காலம் நீடிக்க வேண்டும் என்றால் அவர்கள் குறைந்தது 3 மாதத்திற்கு நல்ல காற்றை சுவாசிக்க பக்கத்து நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இவைகள் எல்லாம் அறிந்த பின்னும், கூடங்குளம் அணு மின் திட்டத்தை தொடங்கியே தீருவோம் என மத்திய காங்கிரசு அரசு ஒத்தக்காலில் நின்று கொண்டு பொய் பிரச்சாரம் செய்கிறது. அமைச்சர் நாராயணசாமி, விஞ்ஞானி அப்துல்கலாம் போன்றவர்கள் கூடங்குளம் அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை என திரும்பித் திரும்பிச் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.
இதுபோன்ற அணுமின் நிலையத்தால் நமக்கு கிடைக்கும் மின்சாரம் வெறும் 2.62 விழுக்காடே மீதம் உள்ள 97.38 விழுக்காடு மின்சாரம் நிலக்கரி, நீர், சூரிய ஒளி மற்றும் காற்றாலை மூலம் கிடைக்கிறது. எனவே, இந்த அணுமின் நிலையம் மூலம் கிடைக்கும் 2.62 விழுக்காடு மின்சாரம் இல்லை என்றால் நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. மின்கசிவுகளை சரிசெய்தாலே மிக எளிதாக இதனை சரிசெய்துவிடமுடியும்.
மேலும் இந்தியாவில் சராசரி மனிதர்களின் மின்சார பயன்பாட்டு அளவு வருடத்திற்கு 704 கிலோவாட் என்பது அரசின் புள்ளிவிவரம் இதில் 70 விழுக்காடு மக்கள் வெறும் 50 கிலோவாட்அளவே மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். 30 விழுக்காடு மக்கள் மின்சாரத்தை பயன்படுத்துவதே இல்லை. அப்படி என்றால் பேராபத்தை விளைவிக்கும் அணுஉலைகளை இந்திய அரசு யாருக்காக உருவாக்குகிறது?
ரூபாய் 11 ஆயிரம் கோடி செலவு செய்து தொடங்கப்பட்ட திட்டத்தை எப்படி கைவிடுவது என்று கேட்கிறார்கள். இந்தியாவில் கைவிடப்பட்ட திட்டங்கள் ஒன்றா இரண்டா? ஏராளமான திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. குறிப்பாக சேது சமூத்திர திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் மதிப்பீடு தொகை ரூபாய் 4 ஆயிரத்து 600 கோடி இந்த திட்டத்தை ஏன் கைவிட்டீர்கள்? இராமர் மனம் புண்படும் என்பதற்காகவா? செத்துப்போன இராமருக்கு கவலைப்படுகிற நீங்கள். உயிரோடிருக்கிற 7.5 கோடி இராவணர்களைப் பற்றி கவலைப்படவேண்டாமா?
அணுஉலை பாதுகாப்பானது என்று திருப்பித் திருப்பி சொல்கிறீர்கள். அது உண்மை என்றால் தில்லி பாராளமன்ற வளாகத்திலோ அல்லது குடியரசு மாளிகை தோட்டத்திலோ அமைக்கலாமே, யார் உங்களை தடுக்கப் போகிறார்கள்? தமிழர்களின் உயிரை துச்சமாகக் கருதும் உங்களுக்கு காலம் பதில் சொல்லும்.