காந்திய மக்கள் இயக்கத்தின் 4 ஆம் ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம் மதுரையில் காந்தி பிறந்த நாளான அக்டோபர்-2 ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தை விளக்கி திராவிட கட்சிகளுக்கு இணையாக காந்திய மக்கள் இயக்கம் பிளக்ஸ் போர்டு வைத்து இருந்தது. திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே திராவிடக் கருத்தாக்கத்திற்கு எதிராக எழுதி வரும் புத்திசாலி தமிழருவி மணியனோடு, தந்தை பெரியாரின் பாசறையில் பயின்ற வைகோவும் முழங்குவார் என்ற முழக்கங்களோடு இருந்த போர்டுகள் ஒரு தினுசாகவே இருந்தது.

tamilaruvimanian_vaiko_640

மகாத்மா காந்தியை பெயரில் மட்டுமின்றி தனது இயக்கக் கொடியிலும், வலைதளத்திலும் பயன்படுத்தி வரும் தமிழருவி மணியன், நரேந்திர மோடி நாமாவளியைத் தொடர்ந்து பாடுவதால் என்னவோ பாஜக கலரில் சுவரொட்டிகளில் எக்குத்தப்பாக காட்சி தந்தது. காந்தி பிறந்த நாள் அன்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழருவி மணியன் தங்கு தடையின்றி பேசிய பேச்சு மாற்று அரசியலைப் பற்றித்தான். அந்த மாற்று என்னவென்றால் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற ஆர்எஸ்எஸ் என்ற நச்சுப் பாம்புவின் குட்டியான பாஜக மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது தான்.

நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்கட்டும் என்றார் மகாத்மா காந்தி. தமிழருவி மணியன் 1966 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் துவங்கி காற்றில் அலையும் காகிதம் போல, 40 ஆண்டு காலமாக காங்கிரஸ், பின் ஜனதா, அதன் பின் ஜனதாதளம், அதன் பின் தமாகா, மீண்டும் காங்கிரஸ் என தன் விரும்பிய மாற்றத்தை அவரிடம் இருந்தே துவக்கினார். இதன் பின் காந்திய அறிவியல் இயக்கமாகத் துவங்கி தற்போது 4 ஆம் ஆண்டு கொண்டாடும் காந்திய மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார். மாவீரன் நெப்போலியனின் “நான் மற்றவர்களைப் போல மனிதன் இல்லை" என்ற முழக்கத்தை தனது வலைதளத்தில் எழுதி வைத்ததில் இருந்து தமிழருவியை புரிந்து கொள்ள முடியும் அவர் ஒரு வித்தியாசமானவர் என்பதை.

ஊருக்கு நல்லது சொல்வேன் என்று இலக்கிய மேடைகளில் முழங்கிய தமிழருவி மணியன் அக்டோபர்-2 ம் தேதி மதுரையில் என்ன பேசினார்? அவரது இயக்கத்தின் கொள்கையான இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக, பரந்த இந்தியாவைப் பற்றி கனவு காணும் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்று பேசினார். காந்திய மக்கள் இயக்கம் எந்த அரசியல் கட்சியின் நலனுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இயங்காது என்று கூறிவிட்டு மோடிக்கு ஆள் பிடிக்கும் வேலையில் ஏன் தமிழருவி இறங்கினார்? மனித குலத்திற்கு அமைதியையும், நல்வழியையும் கொண்டு சேர்ப்பதே அனைத்து மதங்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது என்ற சமய நல்லிணக்கத்தை தனது இயக்கத்தின் கொள்கையாய் வரிந்து வைத்துள்ள வரிப்புலி, மதச்சார்ப்பற்ற கொள்கைக்கு வேட்டு வைக்கும் பாஜகவுக்கு எப்படி ஜால்ரா தட்டிப் பேசினார்?

இந்து மதத்தின் கேடுகெட்ட சாதியபடிநிலை, மனிதர்களை சாதிகளின் கூறுகளாகப் பிரித்துப்போட்டுள்ளது. வர்க்கத்தை வர்ணமாக பார்க்கும் இந்துத்துவா கொள்கைகளைத் தனது கொள்கையாகக் கொண்ட பாஜகவின் மோடி ஆதரிக்கும் தமிழருவி, அவரது இயக்கத்தின் கொள்கையான இரட்டைக்குவளை போன்ற தீண்டாமை அடையாளங்களை மோடிக்காக அடகு வைத்து விடுவாரா?

பாஜகவின் ஞானகுருவான சங்கரச்சாரியின் சொல்லில் சொல்வதென்றால், “வீட்டை விட்டு வெளியே போகும் பொம்பளைங்க கெட்டவங்க“ என்ற இந்துத்துவாவின் கருத்தாடலை ஆண்- பெண் சமத்துவம் பேசும் தமிழருவி, இனி மேடை மேடையாய் எப்படி பேசுவார்? தமிழ் நீச பாஷை, சமஸ்கிருதமோ சிறந்த பாஷை எனக்கூறி பாஜக மத்திய ஆட்சியில் இருந்த போது அதனை செம்மொழியாக அறிவித்த கொள்கைவாதிகளை தற்போது தாங்கிப் பிடித்திருக்கும் தமிழருவி, தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை பேச முடியுமா?

தமிழகத்தில் மாற்று அரசியல் அணி அமைவதற்கு பாஜக, தேமுதிக, மதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் முதலில் நெருங்கி வரவேண்டும் என்று ஜோசியக்காரன் குருவும், கேதுவும் கொஞ்சம் நெருங்கனும் என்பது போல பேச துவங்கியுள்ள தமிழருவி, 15 விழுக்காடு வாக்காளர்கள் தமிழகத்தில் மோடியை பிரதமராக்க விரும்புகின்றனர் என்று கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளார். சன் தொலைக்காட்சியும், ஏ.சி. நீல்சன் குழுவையும் கொண்டு ஏதாவது கருத்துக்கணிப்பை தமிழருவி மணியன் நடத்தினாரா என்று தெரியவில்லை!

modi_rss_230மோடி இந்தியாவின் பிரதமர், வைகோ தமிழகத்தின் முதல்வராக்காமல் ஓயமாட்டேன் என சண்டமாருதம் செய்யும் தமிழருவி மணியன், மதிமுகவும், தேமுதிகவும் ஒரே அணியில் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் விஜயகாந்த், முதலமைச்சராக ஆகமாட்டேன் என்று பாலில் அடித்து தமிழருவி மணியனிடம் சத்தியம் செய்து கொடுத்தாரா என்று தெரியவில்லை. இரண்டு பேரிடமும் பேசிவிட்டேன் என்று பேசும் தமிழருவி, என்ன பேசினார் என்று தெரிவிக்கத் தயாராக இருக்கிறாரா?

மாற்று அணியை உருவாக்க கம்யூனிஸ்டுகளை அணுகினேன். ஆனால், அவர்கள் அதற்கு ஆதரவு தரவில்லை என்று பேசிய தமிழருவி, ஆறு சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு கம்யூனிஸ்டுகள் மாற்று அரசியலை உருவாக்க முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். நரம்பில்லாத நாக்கு எதையும் பேசும் என்பதற்கு இதைவிட வேறு சான்று சொல்ல முடியுமா? தேசிய அளவில் ஒரு மாற்றை உருவாக்க தமிழருவி மணியன் என்ன ராஜதந்திரியா? காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது தான் தன்னுடைய ஒரே வேலை என்று மதுரை மேடையில் முழங்கிய தமிழருவி மணியன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் விடுதியில் தான் வசதியாகத் தங்கியிருந்தார் என்பதை பகிரங்கமாக சொல்லத் தயாரா?

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், இந்திய அரசியலும் பல தியாகங்களைச் செய்த கம்யூனிஸ்டுகள் மத்தியில் ஆட்சியை உருவாக்கிய வரலாற்றை மறந்து விட்டு, வானுலகத்தில் இருந்து குதித்து வந்த தேவமகனைப் போல, தமிழருவி மணியன் சொன்னவுடன், இந்தியாவில் மோடியை பிரதமராக்கி விட்டு தான் மக்கள் அடுத்த வேலை பார்க்கப்போவார்கள் என்பது போல பேசுகிறார். யாருக்கும் புரோக்கர் வேலை செய்யவில்லை என்று கூறும் தமிழருவி, தமிழகம் வந்த பாஜக தேசியத்தலைவர் ராஜநாத்சிங்கை பார்த்து பேசிவிட்டு தனது மோடிபுராண ஊர்வலத்தை ஆரம்பித்ததற்கு என்ன பெயர்?

காமராசரின் காலடியில் பாடம் படித்தவன் என்று கூறிய தமிழருவி, காமராசரை கொல்ல முயன்ற இந்துத்துவாக் கூட்டத்தை ஆதரித்து என்ன பேசினார் தெரியுமா? “இந்திரா காந்தியிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற இந்துமதவாதிகளுடன் காமராசர் கூட்டணி அமைத்தார். அவர் என்ன மதவாதியா?" எனக்கேள்வி எழுப்பிய தமிழருவி, மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தை ஒப்புத்து விட்டு காந்தியை உயர்சாதியினரும் ஏற்கவில்லை. தலித்துகளும் ஏற்கவில்லை என்று ஒரே போடாக போட்டார். அவர் பெயரில் இயக்கத்தை வைத்துக்கொண்டு கோட்சேக்கு ஆதரவாக எப்படி பேச முடிந்தது தமிழருவி மணியனால்?

கடைசியாக பேசிய அவரின் பேச்சுகள் தான் ஆபத்தின் உச்சமாக இருந்தது. "பாஜக, மாற்று அரசியலை முன்வைத்து பிரச்சாரம் செய்வதுடன், காங்கிரஸ் ஊழல்களை வெளிப்படுத்த வேண்டும். சிறுபான்மை உணர்வை எப்படி காயப்படுத்தக்கூடாதோ, அதே போல இந்துத்துவா உணர்வையும் காயப்படுத்தக்கூடாது. என்னை வகுப்புவாதி என்றோ, மதவாதி என்றோ சொன்னால் எனக்கு கவலையில்லை. ஆயிரம் பழிகளை சுமக்க தயாராக இருக்கிறேன்“ என்று வியாக்கியானம் பேசினார்.

ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும், இஸ்லாமிய மக்களையும் கொன்றுகுவித்த நரமோடியின் நவீனதூதர் ஆயிரம் பழிகளை என்ன, இலட்சம் பழிகளையும் சுமக்கத் தயாராகத் தான் இருப்பார். இத்தோடு விட்டாரா என்றால் இல்லை.“மோடி மீது இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகமாகியுள்ளது. படித்த நடுத்தர வர்க்கத்திற்கு கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின் நடந்த கலவரம் தெரியாது" என்று தமிழருவி மணியன் பேசியுள்ளார்.

படித்த இளைஞர்களை இவரை விட யாரும் இவ்வளவு கேவலப்படுத்த முடியாது. உலகமே கிராமமாய் சுருங்கியுள்ள நிலையில், அடுத்த நாட்டில் நடைபெறுவதை அடுத்த நொடியில் கையில் உள்ள ஐபோனில் பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞர்களை எதுவும் தெரியாதவர்களாக நினைக்கும் தமிழருவி மணியன், மறதியை வைத்து அரசியல் நடத்தலாம் என நினைக்கிறார்.

தமிழருவி மணியனுக்கு என்ன அரசியல் நேர்மை இருக்கிறது? பாஜகவின் மோடிக்காக பிரச்சாரத்தை துவக்கியுள்ள தமிழருவி கொள்கையற்றவர் என்பற்கு, அவரின் எழுத்தே சான்றாக இருக்கிறது. “முதல்வர் ஜெயலலிதாவின் நட்புக்கு முதலிடமளித்து மோடி ஒரு மூன்று தொகுதிகளுக்காக பாஜகவை போயஸ் தோட்டத்தில் அடகுவைக்கப் போகலாம். விஜய்காந்த் ஏதோவொரு கணக்குப் போட்டு திமுக - காங்கிரஸ் வலையில் விழலாம். ஒன்றும் சரிப்பட்டு வராத நிலையில் வைகோ தனிவழி நடக்கலாம். அவர்கள் முடிவில் தலையிட நான் யார்? பாழ்பட்ட அரசியலில் எதுவும் நடக்கலாம்".

அரசியல் திசைவழியறியாமல் நடுத்தெருவில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருக்கும் தமிழருவி மணியன் தமிழகத்தில் சுப்பிரமணியசாமியின் இடத்தைப் பிடிக்காமல் விடமாட்டார் போலிருக்கிறது!

- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

6 comments

6
சி.நல்லான்
தமிழகத்தில் அறிவுஜீவிகள் எனச்சொல்லிக் கொண்டு திரியும் மேல்தட்டு வர்க்கத்திற்கு உரைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது கட்டுரை. தமிழருவி மணியனிடம் விழுந்து விழுந்து பேட்டியும், கட்டுரையும் எழுதி வாங்கி மோடி பிராண்ட்டை சந்தைப்படுத்தி வரும் பத்திரிகைகளும் இந்த கட்டுரையைப் படிக்க வேண்டும். பொய்யான ஒரு நபரைக் கொண்டு அறிவுரைகள் போதிக்கப்பட்டு வருவதை சகிக்க முடியவில்லை. - சி. நல்லான், தஞ்சை
manoharan
Has Vaiko has forgotten his rally at Ranchi when Rajapakshe was given red carpet welcome by BJP Chief Minister and Sushma Swaraj?Does he know that BJP never accept that it was a genocide by Rajapakshe in 2009?
justin
காங்கிரசும் பாஜகவும் பன்னாட்டு&உள் நாட்டு முதலாளிகளுக்காகவே நாட்டை ஆளத்துடிப்பவர்கள் என்பதை இந்த காந்தியவாதி மறந்துவிட்டாரா?
ஜோ.தமிழ்ச்செல்வன்
ப. கவிதா குமார், காங்கிரசு கட்சியின் ஊதுகுழல் என நினைக்கிறேன். நன்றாகவே, மறைமுகமாக காங்கிரசுக்கு வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஊதியிருக்கிறார். ஒரு கட்டுரையில் நடுநிலை இருக்க வேண்டும். மோடி, மோசமானவர் என்றால் எதில் மோசமானவர் என வர்ணிக்க வேண்டும். “பா.ஜ.க-வின் ஞானகுருவான சங்கரச்சாரியின் சொல்லில் சொல்வதென்றால், வீட்டை விட்டு வெளியே போகும் பொம்பளைங்க கெட்டவங்க என்ற இந்துத்துவாவின் கருத்தாடலை ஆண்- பெண் சமத்துவம் பேசும் தமிழருவி, இனி மேடை மேடையாய் எப்படி பேசுவார்?” பெண் - ஆணுக்கு அடிமை, ஆண் - கிறிஸ்துவுக்கு அடைமை, கிறிஸ்து - பிதாவுக்கு அடிமை என அடிமை என அடிமை நிலையை ஆதரிக்கும் கிறிஸ்தவம் பேசலாமா? ஒரு ஆண், 4 பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற இஸ்லாமை பேசலாமா? இதில் இந்து மதம் மட்டுமே தவறாக இருக்கிறது என குற்றம் சாட்டி, மோடி மோசமானவர் என வர்ணிப்பது அழகாக இல்லை. மோடி, ஆண் பெண் சமத்துவ உரிமைக்கு எதிராக பேசியிருக்கிறார் என்று ப. கவிதா குமார் எழுதினால் பாராட்டலாம். ஏன் உங்கள் கணவர் தனது பெயரை ‘குமார் கவிதா’ என போட்டுக் கொள்வாரா? சமத்துவம் முதலில் நமது வீட்டில் இருக்கணும். அப்புறம்தான் அடுத்தவர் கண்ணில் இருக்கும் குற்றத்தைப் பார்க்கணும். மதம், ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட ஒன்று. அதனை திருத்த முடியாது. அதனை உங்கள் வாழ்க்கையில் திருத்தலாம். அதனைத்தான் மோடி செய்கிறார் என்பதுதான் இஸ்லாமியராகிய எனது வாதம்.
manavan
முதலில் ஒரு படைப்பு என்ரால் நடுனிலைமை இருக்க வேன்டும். எப்பொலுதுமே கீற்ரு வின் படைபுகலில் பாஜக வுக்கு எதிரகவும் காங்கிரசுக்கு ஆதரவகவும் நிரைய கட்டுரைகல் வருகின்ரன. எவர் செய்தாலும் தவரு தவருதான். நாத்திகன் என்ரு சொல்லிகொன்டு இசுலாம் பன்டிகைகு வாழ்த்து சொல்வதும் இந்துக்கலை சாடுவதும் கருனா வுக்கு வேன்டுமானல் சரி என படலாம். முதலில் கீற்ரு இனயதலம் ஒன்ரை தெரிந்து கொல்ல வேன்டும். நீங்கல் செய்தியை மட்டும் சொல்லுங்கல் நாங்கல் அதை ஆராய்நது கொல்கிரோம். வுங்கல் இனையம் மட்டும் இல்லை. மனதில் பட்டதை எல்லாம் எலுதினால் அதை குப்பையில் தான் பொட வேன்டும். நடுனிலைமையோடு இருந்தால் தான் மீன்டும் வாசகர்கல் வருவார்கல். இதுவரை வுல்ல கட்டுரையை யெல்லாம் நீங்கலே திருப்பி பாருங்கல் வுங்கலுக்கே புரியும்....................
சாணக்கியன்
தமிழனுக்குத் தேவை காசு ---- காசை விட்டெறிந்தால், மஞ்சள் துண்டை போர்த்திக்கொண்டு டெல்லிக்கும் காவடி தூக்குவான், சிங்களனுக்கும் மஞ்சள் அரைப்பான். வைகோவும், மணியனும் விதிவிலக்கல்ல.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.