உள்ளே இருக்கிற முகம் ஒன்றுதான். மறைத்து நிற்கிற முகமூடி தான், வெவ்வேறாக பிம்பம் காட்டுகிறது. ஆர்எஸ்எஸ் அடிப்படைவாத முகத்தின் இருவேறு முகமூடி / பிம்பங்களே அத்வானி மற்றும் நரேந்திர மோடி. ரதத்தில் அமர்ந்து வந்து ரத்தவேட்டை நடத்திய போது, அத்வானியை, அயோத்தி ராமனாகவே ஆர்எஸ்எஸ் பார்த்தது; பரவசமடைந்தது. இந்துத்வா அடிப்படைவாத ஆயுதத்தை உயர்த்திப் பிடித்தே, அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் செல்வாக்கை, செல்லாக்காசு ஆக்க அத்வானி ஆடிய பரமபத ஆட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

வாஜ்பாயும் லேசுப்பட்டவர் அல்ல. 2002ம் ஆண்டின் ஏப்ரல் அல்லது மே மாதம் என்பதாக நினைவு. கோவா மாநில தலைநகர் பனாஜியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக்குழுக் கூட்டம் நடந்தது. ஆயுட்கால சுயம்சேவக்கும், அப்போதைய பிரதமருமான வாஜ்பாய் இந்தக் கூட்டத்தில் பேசுகையில், "முஸ்லீம்கள் எங்கெங்கு வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் மற்ற சமூகத்தினருடன் இணைந்து வாழ விரும்புவதில்லை. அமைதியான முறையில் தங்கள் பிரசாரங்களைச் செய்தவற்குப் பதில், பயங்கரவாதத்தின் மூலமாகவும், பயமுறுத்தல்கள் வாயிலாகவும் தங்கள் நம்பிக்கையைப் பரப்ப அவர்கள் முயல்கிறார்கள். உலகம் இந்த அபாயம் குறித்து இப்போது விழிப்படைந்து விட்டது..." என்று உணர்ச்சிகரமாகப் பேசி, கைத்தட்டல்களை அள்ளினார்.

அப்பேர்ப்பட்ட வாஜ்பாய் கூட, அத்வானியின் அதிரடி ஆட்டத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மதசார்பற்ற மகாத்மாவாக பரிவட்டம் கட்டப்படுகிற நிலைமை ஏற்பட்டது என்றால்... அத்வானியின் அடிப்படைவாத குணம் எவ்வளவு ஆழமானது, அபாயகரமானது என்பதை எளிதில் புரிந்து கொள்ளமுடியும். அத்வானியின் சமூக வாழ்க்கை சாதனைப் புத்தகத்தில் மறக்க முடியாத நாள்... 1992, டிசம்பர் 6. பாபர் மசூதியை இடித்துத் தகர்த்து, அதன் பின் விளை வாக, இந்தியா முழுவதும் பல ஆயிரம் மக்கள் ரத்தமும், சதையுமாக செத்து மடிந்து விழக் காரணமாக இருந்த நாள். காட்டுமிராண்டி கூட்டமொன்றுக்கு கேப்டனாக இருந்து வழிநடத்தி, நினைத்ததை சாதித்த விதத்தில், அத்வானியின் திறமை, மகேந்திர சிங் டோனியையும் மிஞ்சி விடும்.

இந்து மதத்தின் மிகத் தேர்ந்த மீட்பராக அத்வானி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. எல்லாவித மோடி மஸ்தான் வேலைகளும் செய்து ஒப்பாரும், மிக்காருமற்ற அவதாரமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஆயத்தமான அத்வானிக்கு, மோடி ரூபத்தில் வந்தது வெடி. அடுத்த பிரதமர் கனவில் இருந்தவரின் அடித்தளத்தையே தகர்க்கிற ஆர்எஸ்எஸ் பிரம்மாஸ்திரமாக களம் புகுந்தார் நரேந்திர மோடி. குஜராத்தில் அவர் ஆடிய வெறியாட்டம் பார்த்து, மனித உரிமைகளை காலில் மிதிக்கிற அமெரிக்காவே ஆடிப் போய்விட்டது. அடுத்த பிரதமர் இவர்தான் என்று அடையாளம் காட் டுகிறது ஆர்எஸ்எஸ். உள்குத்து வேலையில் இறங்கி எதுவும் எடுபடாமல், இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறார் அத்வானி. அவரது பிரதமர் கனவில், ஒரு லாரி மணல் போட்டு மூடிவிட்டார் மோடி.
 
வரிந்து கட்டிக் கொண்டு பொய் புனைவதில் வடநாட்டு ஊடகங்களை அடித்துக் கொள்ள இன்றைய தேதிக்கு ஆள் கிடையாது. இளம்பெண்ணின் சேலையை ஏழெட்டு வில்லன்கள் உருவும் போது எங்கிருந்தோ தாவிக்குதித்து டைவ் அடித்து வந்து காப்பாற்றுகிற ஹீரோ போல, நரேந்திர மோடி இப்போது காட்சிப்படுத்தப்படுகிறார். இருக்கிற 28 மாநிலங்களிலும் குஜராத் தான் நம்பர் 1 என்கிறார்கள். எதில் நம்பர் 1? ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி செய்த காலத்தில் ஹைதராபாத்தும், அதன் புறநகர் பகுதிகளும் ஒரே ஜம்ப்பாக முப்பதாம் நூற்றாண்டுக்கே முன்னேறி விட்டதாக செய்திகள் பரவின. தார்ச்சாலைகளில் கூட தைரியமாக ஜம்போ விமானத்தை லேண்டிங் செய்யலாம். அப்படி ஒரு தரம் என்று கார் ஓட்டிக் கொண்டே பிஸினஸ் பிரபலங்கள் சந்திரபாபுவுக்கு சபாஷ் போட்டார்கள்.

ஐதராபாத்துக்கு சில நூறு கிலோ மீட்டர் அப்பால் நிலைமை வேறாக இருந்தது. அங்கு சாப்பிட கிடைக்காமல் எலிக்கறியை விவசாயப் பெருங்குடிகள் சமைத்த பரிதாபத்தையும், தற்கொலை செய்து கொண்ட சோகத்தையும் உண்மையான ஒரு சில ஊடகங்கள் பகிரங்கப்படுத்திய போது, சந்திரபாபுவின் கம்ப்யூட்டர் பிம்பம் கலைந்தது. அவரது விலாசத்தை, அவரது கட்சிக்காரர்களே தேடிப் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டிய பரிதாப நிலை இப்போது. எதிர்கால இந்தியாவாக வடிவமைக்கப்படுகிற மோடியின் கதையும், சந்திரபாபுவுக்கு ஒப்பானதே. குஜராத் மாநிலத்தில் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகள் குடிநீருக்கு திண்டாடுகின்றன. வேலைவாய்ப்பு துவங்கி, விவசாயம், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளிலும் அந்த மாநிலம் பின்தங்கி இரு ப்பதை பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள் கூட மறுக்கமாட்டார்கள்.

இஸ்லாமிய சகோதரர்கள் இனம் பார்த்து ஆயிரம், ஆயிரமாய் கொன்று குவிக்கப்பட்ட சோகம் ஆறுவதற்கு முன்பாக, "ஆமாம். இந்தக் கலவரத்தை நாங்கள் திட்டமிட்டுத்தான் நடத்தினோம்..." என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் குஜராத் மாநில விஸ்வ இந்து பரிஷத் தலைவர் கேசவராம் காசிராம் சாஸ்திரி. குஜராத் இனப்படுகொலையின் நாயகனாக புகழப்பட்ட மோடிதான், இப்போது இந்தியாவின் அடுத்த பிரதமராக அடையாளம் காட் டப்படுகிறார். பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமான ஆளாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கு அவர் நடத்துகிற நாடகங்கள் குமட்டலை தருகிறது. ஆயிரக்கணக்கான மக்களை வெள்ளம் அடித்துச் சென்ற உத்தரகாண்ட் மாநிலத்தில் இறங்கி, அங்கும் கூட அநாகரீக அரசியலை அவர் அரங்கேற்றியது உச்சக்கட்ட சோகம்.

உலகின் தலைசிறந்த ராணுவங்களில் ஒன்று (!?) என தம்பட்டம் அடிக்கப்படுகிற இந்திய ராணுவம், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கையில், ஐந்து விமானம், 25 பேருந்து, 800 இனோவா கார்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களுடன் களத்தில் இறங்கி, ஓரிரு நாட் களுக்குள் 15 ஆயிரம் குஜராத்திகளை தனியாளாக அவர் காப்பாற்றிக் கரை சேர்த்தார் மோடி என்று கடந்தவாரம் நாடு முழுக்க ஒரு செய்தி கதி கலக்கியது. உண்மையில், கேதார்நாத் சோகத்தை விடவும் மோசமானது இது. பிணங்களின் மீது ஏறி நின்று அரசியல் செய்வதில் இருக்கிற முன்னனுபவம் மோடிக்கு இதை சாத்தியமாக்கி இருக்கிறது. ‘மக்களை காப்பாற்ற வந்திறங்கிய ராம்போ’ என்று வட இந்திய ஊடகங்கள் அடிக்கிற ஜால்ரா சத்தம் நாடு முழுவதும் நாராசமாக எதிரொலிக்கிறது.

நடக்கிறவற்றைப் பார்க்கையில், நாட்டின் எதிர்காலம் குறித்த கவலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனதை கவ்விப் பிடித்து குடைகிறது. அம்பானி வகையாறாக்களுக்காக மட்டுமே ஆட்சி செய்கிற மன்மோகன் கோஷ்டி ஒருபுறம். அதை ஒதுக்கித் தள்ளலாம் என்று பார்த்தால், மதத்தின் பெயரால் மக்களை கூறு போடுகிற கூட்டம் மறுபுறம். பெரும்பாலான இந்திய இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவு மோடிக்கு இருப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு கட்டியம் கூறுகிறது. காங்கிரஸ் கூடாரம் அடிக்கிற குளறுபடி கூத்துக்களால் மனம் வெறுத்த இளைஞர்களுக்கு, அவதார புருஷனாக மோடி தெரிகிறார். மக்களைச் சொல்லி தப்பில்லை. ஈழ விவகாரத்தில் காங்கிரசின் தொடர் துரோகங்கள், பாரதிய ஜனதா மீது பார்வையைத் திரும்ப வைக்கிற அதே உளவியல் காரணம்தான்.

மன்மோகன், சிதம்பரம், சோனியா, ராகுல்... இவர்கள் எல்லாருமாக சேர்ந்து, மோடியை நல்லவராக்கி இருக்கிறார்கள். இதுதான் இந்தியாவின் தலையெழுத்து. மரண வியாபாரி என வர்ணிக்கப்படுகிற ஒரு ஆசாமி, அடுத்த பிரதமருக்கு தகுதியான ஆளாக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார். காங்கிரசின் கையாலாகாத தனத்தால், மோடி நல்லவர்... நிர்வாகத் திறன் கொண்டவர், பிரச்னைகளை தீர்ப்பதில் அசகாயசூரர் என்றெல்லாம் ஆர்எஸ்எஸ் கூட்டத்தால் முன்னிறுத்தப்படுகிறார்.

"இந்தக் காட்டில் இருக்கிற மிருகங்களிலேயே மிகவும் சாதுவானது... அதோ போகிறதே, அந்தச் சிங்கம்தான்!" என்ற சொற்றொடருக்கும், "இந்தியாவை காப்பாற்ற வருகிற அவதார புருஷன்..." என்கிற மோடி மீதான விவரிப்புகளுக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

12 comments

12
c.k.jayachandran
நல்ல கட்டுரை. பாராட்டுக்கள்.காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியும் ' ப ஜ க ' மூன்றாவது முறை ஆட்சியை பிடிக்க முடியாமல் போவதும் இந்தியா காணப்போகிறது. ' இந்தியாவின் எதிர்காலம் குறித்து யோசித்தால் நம் நிம்மதி பறிபோகும் என்பது மட்டும் உறுதி என்று தெரிகிறது என்று கிடக்காமல் அடுத்தது எப்படி மாநில கட்சிகளையும் ,இடது சாரிகளையும் கொண்ட ஒரு அரசு ஆட்சிக்கு வர எல்லோரும் நம்பிக்கையுடன் , தீர்மான மாக உழைக்க வேண்டும்.
அ.தமிழ்ச்செல்வன்
சரியான பார்வை... மிக அருமையாக கருத்துக்கங். மன்மோகன் , மோடிக்கு மாற்றாக யாரை தேர்வு செய்யலாம். என்பதை குறிப்பிட்டுயிருக்கலாம்.
சித்திரவீதிக்காரன்
இந்தியாவின் எதிர்காலம் குறித்து யோசித்தால் நம் நிம்மதி பறிபோகும் என்பது மட்டும் உறுதி என்று தெரிகிறது.
R.Sivakumar
மோடி வகையறாக்களும், இராகுல் வகையறாக்களும் சேர்ந்து பாஜக மற்றும் காங்கிரசு கட்சிகளுக்கு மாற்றாக வேறு ஒன்றில்லை என்பதுபோல் சித்திரம் காட்டி வருகின்றன. மிதவாத இந்துத்துவாக் கட்சியான காங்கிரசும், மிகத் தீவிர இந்துத்துவாக் கட்சியான பாஜகவும் இந்திய அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். இவர்களோடு மார்க்சிஸ்டுப் பச்சோந்திகளையும் ஒழித்துவிட்டு, புதியதொரு அரசியல் மறுமலர்ச்சிக்கு மாநிலக் கட்சிகள் வித்திடுவதே காலத்தின் தேவை. காங்கிரசு, பாஜக அல்லாத மாற்று அணி உருவான காலத்தில் வி.பி.சிங் என்ற தலைவர் உருவாகத் தலைப்பட்டது மகத்தான வரலாறு. அப்படியொரு காலம் உருவாக வேண்டும். ஆனால் இந்தியப் பெருமுதலாளிகளான அம்பானிகளும், டாட்டாக்களும், மிட்டல்களும் இருக்கும்வரை அது போன்ற நிலை உருவாகச் சாத்தியமில்லை. குப்பையில் நல்ல குப்பையையும், கொள்ளியில் நல்ல கொள்ளியையும் தேர்ந்தெடுக்கிற நம் மக்களாட்சித் தத்துவம் உண்மையிலேயே உலகம் போற்றும் உன்னதம்தான். வாழ்க காந்தி மகான்!
dhandapani
மோடி பற்றி திரு.கிருஷ்ணகுமாரின் கருத்த் புறம் சரி என்றாலும், சென்ற சட்டசபை தேர்த்லில் இங்கு நடந்தது தான் நாடு முழுவதும் நடக்க போகிறது. காங்கிரஸ் அதிருப்தியில் மக்கள். பா.ஜ.,வுக்கு ஓட்டு அளிக்க போகிறாகள். கட்டுரை சூப்பர். வாழ்த்துகள்.
seyed muhammed
மோடியும்,அத்வானியும் முகமூடிகள் நிஜம் ஹிந்துத்துவ ஆர் எஸ் எஸ் ஸின் முகம் என்ற வரிகள்...பாராட்டுக்கள்;
மோடி,இந்தியாவின் தலைமை அமைச்சரானால் கவலைப் படப்போவது சிரமப்படப் போவது சாமான்யர்கள் அல்ல;பாவப்பட்ட சமுகம் இன்றும் அல்லல் பட்டு கொண்டுதானிருக்கின்றன;ஆக கவலை சாமான்யர்களுக்கில்லை.கவலை எல்லாம் வளமான இந்தியா என மக்களை ஏய்க்கும் கார்ப்பெரேட் முதலாளிகளுக்கு!!!
சொறி நோய் பாதிப்புக்குள்ளாகி சீல் வடியும் உடல் நமைச்சல் சொறிய கேட்கும்;ஆனால் சொறியக் கூடாது.அது போல பலரை பலி கொண்டு அரியணை ஏறிய மோடியால் பலி கொடுக்காமல் வாழ முடியாது;விளம்பர மோகத்தில் மூழ்கி கிடக்கும் மோடியால் அரிதாரமில்லாமல் அரியணைக்கு வர முடியாது.....அது போது தொடங்கும் நாடகம் இன்று மோடியையும் மோடிக்கு பக்க பலமாய் பல்லக்கு தூக்கி நிற்கும் பலரையும் எதிர் எதிர் அணியில் காட்சி பிம்பமாக்கி மோத வைக்கும்.அது தான் இந்தியாவின் உண்மையான விடுதலை போராட்டத்திற்கான நாளையே குறிக்கும்.ஆதலால் மோடியின் வருகை பிரமாண்ட எழுச்சி வரலாற்று பக்கங்களில் பதிவாகியுள்ள உலகம் இன்று மறந்து விட்ட அயோக்கியர்களின் மற்றுமொரு பகுதி தான்.
sivakumar
மோடி பற்றி பேச அருகதை இல்லாதவர்கள் தங்கள் வாயை முடிக்கொண்டு போவது நல்லது
இவ்ளவு காலம் ஆட்டம் போட்ட இஸ்லாமியர்களுக்கு பயம் வந்தால் இப்படி தான் உளறுவார்கள்
திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் ஒரு ஹிந்துவாக இருந்து இப்படி பேசுவது நல்லதல்ல
மும்பை தீவிரவாத தாக்குதல்,கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு இன்னும் பல சொளிகொண்டே போகலாம் இப்படி பற்ற தாக்குதல்களை தவிர்க்க ஹிந்து மதவாதி என தங்கள் குறும் மோடி வந்தால் தான் இவர்களை அடக்க முடியும்
ஒரு ஹிந்துவாக இருந்துகொண்டு இப்படி பற்ற கட்டுரைகளை எழுத வேண்டாம் என்று மிக்க பனி உடன் கேட்டுகொள்கிறோம்
seyed muhammed
மோடியைப் பற்றி பேச பயமில்லை........தன்னைப் பூட்டும் சிறைச் சாலைகள் இன்னும் இந்தியாவில் கட்டப்படவில்லை என பேசிய அதே மோடி.......குரலை மாற்றிப் பேசுகிறார்.வருமோ என வருங்காலம் குறித்து அஞ்சுகிறார்.
மோடியின் மேனாமினுக்கி தந்திரம் அம்பலமாகி உத்தர்கண்ட் 15000 பேர் மீட்பில் பா ஜா க வே தடை போட்ட போது அரிதாரம் கலைந்ததாக கவலைப் படுகிறார்;அத்தோடு சேர்ந்து உக்கிரமாக்கி கொண்டிருக்கும் இஷ்ரத் விஷயம் மோடியின் கனவையும் தூக்கத்தையும் பலி கொண்டதாக கருதி முகம் சுருங்கி அலைகிறார்;
முஸ்லிம்கள் மோடியை பார்த்து பயந்தார்களா?என்று....எப்பொழுது?அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் காலிப்பையல்களையும்,காவல் துறையையும் ஏவி கொலை செய்த ஒரு கோழை......தன் சுய லாபத்திற்காக பிறரை கொன்று பிணத்தின் மீது நின்று வீரம் பேசும் கையாலாகத பிறவி இவனைப் பார்த்து முஸ்லிம்கள் பயந்தார்களா?வேடிக்கை;
கோவை - மும்பை குண்டு வெடிப்புகளில் குற்றவாளிகள் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்;ஆனால் குஜராத்திலும் இன்னும் பிற பகுதிகளிலும் மோடியாலும் மோடியை போன்ற ஹிந்து தீவிரவாதிகளாலும் அரங்கேற்றப்பட்ட மதக்கலவரங்கள் அதானால் ஏற்ப்பட்ட மனித உயிரிழப்பு பொருளழிப்பு சமுக வளம் அழிப்பு என இந்தியாவின் வளர்ச்சி தடை ப்ட்டு கிடக்கின்றதே....இதை செய்த குற்றவாளிகளை ஏன் தண்டிக்கவில்லை?
எந்த முகத்தோடு வெளி நாடு செல்வேன் என வருந்தினாரே.....வாஜ்பேயி அவர் வருத்தம் போக்க வேண்டாமா?
மோடியால் முஸ்லிம்களின் எழுந்து நிற்கும் மயிரைக் கூட அடக்க முடியாது.முஸ்லிம்கள் எதிர் பார்த்து காத்திருப்பது எல்லாம்...மோடி தன் தவறுக்காக தன்னைப் படைத்த இறைவனிடமும் முஸ்லிம்களிடமும் மன்னிப்பு கோரா வேண்டும் அல்லது மோடிக்காக கட்டப்பட்ட எல்லா சிறைக் கதவுகளும் திறந்து கொள்ளும்.....அன்று மோடிக்காக பரிந்து பேச யாரும் இருக்க மாட்டார்கள்.இது உலகைப் படைத்த இறைவனின் வழிமுறை.
vidya...
அர்த்தமற்ற கட்டுரை. மோடி என்பவர் காலத்தின் கட்டாயம். இந்தியாவின் தவிர்க்க முடியாத சக்தி. அவரது தலைமைக்காக இந்துக்கள், இந்தியர்கள் காத்திருக்கிறார்கள். திருமங்கல் கிருஸ்ணகுமாருக்கு இந்து மதம் பிடிக்காவிட்டால், வெளியேறி விடவேண்டும். உள்ளே இருந்து கொண்டு சேறை வாரி இறைக்கக்கூடாது. மோடி, அத்வனி, வாஜ்பய் எல்லோருமே மிக உயர்ந்தவர்கள். அவர்களுக்குள் எந்த பேதமும் பிரித்து பார்க்கவீல்லை. சிறுபான்மையினருக்கு குரல் கொடுப்பதாக நினைத்து உண்மையை மறைக்கப் பார்க்கவேண்டாம். மோடியையும், இந்தியாவின் வளர்ச்சியும் தவிர்க்கமுடியாதது.
இளஞ்செழியன்
மோடியோ, இராகுலோ இல்லை வேறு எவர் வந்தாலும் ...

தமிழர்களுக்கான முல்லை பெரியாறு அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்தப் போவது இல்லை, தமிழக மீனவர்களை இலங்கையிடம் இருந்து காப்பாற்றப் போவதும் இல்லை...

முகமூடிகள் இங்கு பல... எந்த முகமூடியை எப்பொது மாட்ட வேண்டும் என்று இந்தியாவை ஆளவருபவர்களுக்கு நன்கு தெரியும். நல்லதொரு கருத்தான கட்டுரை...
சு.ரகுநாத்
எதிர்கால பாரதத்தின் மேல் பயம் கொள்ளச் செய்துவிட்டது அண்ணா உங்கள் கட்டுரை. சிங்கத்திடம் இருந்து தப்பித்து மரம் ஏற பாம்பினை பிடித்தது போலாகிவிட்டது.
கோபிநாத்.சு, மதுரை.
காங்கிரஸ் என்ற துரோகியை விட பாஜக என்ற எதிரி மேல் என்னும் மனநிலை உள்ள மக்களிடையில் உங்கள் கட்டுரை எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.