விஸ்வரூபம் திரைப்படத்தைத் தடை செய்யக் கோரும் இஸ்லாமியர்களின் கோரிக்கையின் காரணத்தை முழுமையாக விளங்காத சிங்கள நண்பர் ஒருவர் தற்செயலாக அதுபற்றிக் கேட்டார். 'இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதால்' என்றேன். ‘சொல்றேன் என்று தப்பா நினைக்காதே.. இவர்கள் இப்போது நடந்து கொள்வது மட்டும் ஜனநாயகமா?' என்றார் நண்பர்.

இந்தக் கேள்வி யாரோ ஒரு சிங்களவரினுடையது மட்டுமல்ல; உலகம் முழுவதும் வாழுகின்ற இஸ்லாமியர் அல்லாத அனைவரினுடையதும்தான். சில இஸ்லாமியர்களினுடையதாயும் இருக்கலாம். விஸ்வரூபம் திரைப்படத்தின் உப்பு, காரம் தெரியாமலே இலங்கையில் தடை செய்தாயிற்று. தமிழகத்தில் அனைத்திந்திய ஜமாஅத் தடை செய்யக் கோரியதன் எதிரொலியாக இலங்கையிலும் அது செய்யப்பட்டது. தடையுத்தரவை நீக்குவதா வேண்டாமா என ஆலோசிப்பதற்காக உலமாக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்களுக்கு அத்திரைப்படம் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் காண்பிக்கப்பட்டிருந்தது. உலமாக்கள் புத்திஜீவிகளால் அந்தத் திரைப்படம் பார்க்க முடியுமாக இருந்தால் சாதாரண மக்களுக்குத் தடை செய்வதிலுள்ள நியாயமென்பது பிரத்தியேகமானது. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் மிக உறுதியாக இருக்கின்ற உலமாக்கள் திரைப்படம் பார்க்க முடியுமா என்பது மற்றொரு கேள்வி; விமர்சனத்திற்குரியது.

நாம் எத்தனையோ சினிமாக்களைப் பாத்திருக்கிறோம். மிகக் குரூரமானதும் நெஞ்சை நெருக்குவதுமான சமூகக் கொடுமைகளையும் பார்த்து ரசித்துவிட்டு எதுவுமே நடவாதது போல திரையரங்கிலிருந்து வெளியேறி விடுகின்றோம். ஏனைய சமயங்களைக் கேள்விக்குட்படுத்துகின்ற குறிப்பாக இந்து சமய வரலாற்றுப் பாரம்பரியக் கதைகளையும் பாத்திரங்களையும் விமர்சிக்கின்ற, பாரம்பரியங்களை உடைத்தெறிகின்ற சினிமாக்களும் வந்துதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் மிக ஆரோக்கியமான விமர்சனங்கள், கருத்தியல்களால் சமூகவியலாளர்களும் சமயத்தவர்களும் அவற்றை எதிர்கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆரோக்கியமான விவாதங்களுக்கும், கருத்தியல் வெளிக்கு முன்வரவும் தயாரில்லாதவர்கள். சினிமாவில் சித்தரிப்பதால் ஒன்றும் கிழிந்துவிடப் போவதில்லை என்று தம் வேலையைப் பார்க்கத் திராணியற்றவர்கள். ஒரு சினிமா வந்துதான் சமுதாய மாற்றம் வந்துவிடப் போகின்றது என்றால், சினிமா பார்த்துத்தான் சமூகம் சீரழிந்துவிடப் போகிறதென்றால் இதுவரை வெளிவந்த இலட்சக்கணக்கான சினிமாக்களால் உலகம் மகத்தான அளவில் சீரடைந்திருக்கவேண்டும். அல்லது சீரமைக்கவே ஒண்ணாதளவில் சின்னாபின்னமாகியிருக்க வேண்டும். பத்தில் ஒன்றாகச் சும்மா வரவிருந்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிக‌ள் உலகத் தரத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றனர். அர்த்தமற்ற எதிர்ப்பே, அப்படி என்னதான் அதில் இருக்கின்றதென்று பார்ப்பதற்கு தூண்டச் செய்துள்ளது. தடையிட்டால் என்ன எங்காவது இணையத்தில் டௌவ்ண்லோட் செய்யலாமா, எவ்வளவு கொடுத்தாவது பிளக்கில் வாங்கலாமா என்று எல்லாரையும் பைத்தியம் பிடிக்கச் செய்திருக்கின்றனர் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.

மேலைத்தேய நாடுகள் தங்களைத் தீவிரவாதிகளாகக் காண்பிக்கச் சதிகள் செய்வதாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சுயப் பிரச்சாரம் செய்து வருகின்ற சூழலில் சமீபத்தில் ரிஸானா றபீக் என்ற சிறுமிக்கு சவூதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை உலகத்தின் மனசாட்சிக்குப் பேரிடியாக அமைந்திருந்தது.

1999 ஆம் ஆண்டு துருக்கிய அரசு குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவரான அப்துல்லா ஒச்சலானுக்கு மரணதண்டனை விதித்தது. மரண தண்டனை, மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் நீண்ட காலமாக உலகெங்கிலும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர் அப்துல்லா ஒச்சலானுக்கு மரண தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னரே அது குறித்த விவாதங்கள் உலகெங்கிலும் முனைப்புப் பெற்றன. ஐரோப்பிய யூனியனின் நெருக்குதல் காரணமாக 2001ஆம் ஆண்டு துருக்கிய அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக மரண தண்டனையை முற்றிலும் கைவிட்டது. சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், குவைத், பர்மா போன்ற இஸ்லாமிய நாடுகளில் மரண தண்டனை மாற்ற முடியாத சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மிகப் பலமான மதஅடிப்படையே இச்சட்டங்கள் நடைமுறையில் இருப்பதற்கான காரணங்களாகின்றன.

மரண தண்டனைக்கு எதிரான இயக்கமும் மனித உரிமைகள் சார்ந்த அக்கறைகளும், குரல்களும் முக்கியத்துவம் பெற்றுள்ள சமகாலத்தில் ரிஸானா றபீக் சிறுமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பல தளங்களில் விவாதிக்கப்பட வேண்டியதும், மனித உரிமைகளுக்கான அறைகூவல்களுக்கு பலமான பின்னடைவு என்பதும் ஏற்க வேண்டியவையே.

ரிஸானா றபீக்கிற்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை குறித்த கவலைகளை, அந்தச் செய்தி அளித்த ஏமாற்றங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலை சமீப காலங்களில் காணக்கூடியதாக இருந்தது. இஸ்லாமிய ஷரீஆ சரியா என்ற விவாதங்கள் எழுந்தன. இது மிக இயல்பானது, ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்புக்கு விவாதங்கள் கருத்தியல்கள் மிக இன்றியமையாததாகின்றது. இதன்போதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பொங்கி எழுந்தனர். றிஸானா றபீக்கிற்கு அளிக்கப்பட்ட தண்டனை சரியோ, பிழையோ யாரும் அது பற்றி மூச்சுவிடக்கூடாது, அது இஸ்லாமிய ஷரீஆ, அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களது வாதமாக இருந்தது. மேனியில் வடுக்கள் தெரியக்கூடிய ஈச்சம் பாயில்தான் முஹம்மது படுத்துறங்கினார்; ஒட்டகத்தில் பயணித்தார். ஷரீஆவை அப்படியே பிசகாமல் பின்பற்றுவதாக கூப்பாடு போடுகின்றவர்கள் ஈச்சம் பாயில் படுத்து ஒட்டகத்தில் பயணிக்கலாமே!

இஸ்லாத்திற்கு எதிரான கருத்தொன்று எழும்போது அதனை எதிர்கொள்ளத் தெரியாதவர்களாக, எதிர்கொள்வதற்கான பக்குவமற்றவர்களாகவே இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்களை நிரூபித்து வருகின்றனர். இலங்கையில் மட்டுமல்ல, ஆசிய நாடுகளில் வாழும் முஸ்லிம் இயக்கத்தவர்கள் எதிர்த்தலில் ஒரே பொதுக்குறியைக் கொண்டவர்கள்தான். தமிழகத்தில் நக்கீரன் இதழில் றிஸானாவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை மிகக் கொடுமையானது என்று எழுதியதற்காக மனுஷ்யபுத்திரனுக்கு மிருகபுத்திரன் பட்டமளித்து அங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தமிழக அரசியலில் முன்னிலையில் இருக்கும் கருணாநிதி, றிஸானாவின் மரணதண்டனையைக் கண்டித்தார் என்பதற்காக அவருக்கும் ஏச்சுப்பேச்சு. எதிர்கருத்தாளரை எப்படி எதிர்கொள்வதென்பதும், தனிமனிதனுக்கு இருக்கத்தக்க கருத்துச் சுதந்திரத்தையும், சமூகத்தில் தனிமனிதர்களுடைய வகிபாகத்தையும் இன்றைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மறுக்கின்றதையுமே இவை காட்டுகின்றன. ஈழத்திலும் இது தொடர்பான பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டேயிருக்கின்றன.

மிகத்தொன்மையான வரலாற்றைக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏதோ நேற்றுத் தோன்றிய மதம் என்பது போலும், தப்பபிப்பிராயங்கள் ஏற்படுத்தச் சதிகள் நடக்கின்றன என்பதாகவும் வரிந்து கொண்டு செயற்படுவது கேலிக்கூத்தாகி ஏனைய சமூகத்தவர்கள் முகம்சுளிக்கின்ற குரோதத்தை ஏற்படுத்துகின்ற நிலைக்கு வந்துள்ளது.

முரண்பாடுகளை இல்லாதொழிப்பதே ஜனநாயகத்தின் இலட்சியம். இஸ்லாம் என்பதே சமாதான வழி மார்க்கம். இஸ்லாத்தின் முன்மாதிரி முஹம்மது மன்னிப்பை நல்லிணக்கத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தியவர். இன்றைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நல்லிணக்கம் என்றால் எப்படி இருக்கும் என்று கேட்கின்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். ஏனைய சமூகங்களைப் பற்றிய எந்த அக்கறையும் அவர்களுக்கிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு மூடிய சமூகமாக, தொட்டாற்சிணுங்கி சமூகமாக, தொட்டதெற்கெல்லாம் கண்டனம், ஆர்பாட்டம், போஸ்டர் என கிளர்ந்தெழுகின்ற சமூகமாக நலிந்த சமூகமாக இஸ்லாமிய சமூகத்தை அடிப்படைவாதிகள் மாற்றி வருகின்றனர்.

பலநூறு பேரை கொத்து, கொத்தாக் கொன்று, கிராமங்கள் பலவற்றை அழித்து அட்டூழியம் புரிந்த 'சுமாமா' என்ற அராஜகனை முஹம்மது மன்னித்ததாக இஸ்லாமிய வரலாறு சொல்கிறது. சுமாமாவைத் துன்புறுத்தவோ குறைந்தபட்சம் திட்டவோ செய்யவில்லை என ஸஹீஹ_ல் புகாரி என்ற ஹதீஸ் கிரந்தம் கூறுகிறது. தன் இளைய தந்தையின் ஈரலைச் சப்பித் துப்பிய ஹிந்தாவையே மக்கா வெற்றியின்போது முஹம்மது மன்னித்தார் என்று இன்னொரு ஹதீஸ் கூறுகிறது. அக்கிரமங்களில் ஈடுபட்டவர்களை முஹம்மது மன்னித்தாரென்றால் றிஸானா றபீக் போன்ற அறியாச் சிறுமிகளை மன்னிக்க முடியாதா என்ன?

ரிஸானா 2005ஆம் ஆண்டு சவூதி அரேயியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற சிறுமி. நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்தாள் என்று 2007ஆம் ஆண்டு சவூதி அரேபிய அரசாங்கம் தீர்ப்பு வழங்கியது. 2013 ஜனவரி 09ஆந் திகதி சிறுமி றிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவூதி அரேபியாவினுடையது மதஅடிப்படைச் சட்டம் எனில் முஹம்மதின் முன்மாதிரியை கைவிட்டதை யாரும் விமர்சிக்கக்கூடாது என்கிறார்களா அடிப்படைவாதிகள்?

மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் றிஸானா றபீக் 5 ஆண்டுகள் சிறையில் இருந்தாள். அவளை விடுவிப்பதற்கு இஸ்லாமிய சமூகம் முயற்சி எடுத்ததா? மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்றுள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி இஸ்லாமிய சமூகம் ஆராய்ந்ததா? பொருளாதாரத்தை ஈட்ட பெண்கள் நாடு கடந்து செல்கின்றளவு இருக்கின்ற சமூகத்தேவை குறித்தும், அது தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எப்போதாவது அக்கறைப்பட்டுள்ளார்களா? பணிப்பெண்கள் என்ற பெயரில் அரபு நாடுகளில் பாலியல் அடிமைகளாகச் சிக்கிக் கிடக்கும் இலட்சக்கணக்கான முஸ்லிம் பெண்களை மீட்கவும், மறுவாழ்வளிக்கவும் அடிப்படைவாதிகளிடமுள்ள தீர்வுதான் என்ன? இஸ்லாமிய சமூகத்துக்குள்ளே புரையோடிக் கிடக்கின்ற சமூகக் கொடுமைகளுக்காக அக்கறைப்படாத அடிப்படைவாதிகள் யாராவது கருத்துக் கூறும்போது, எழுதும்போது, சினிமாவில் சித்தரிக்கும்போது மட்டும் இது இஸ்லாத்திற்கு எதிரானது என்று கச்சைகட்டிக் கொண்டு வந்துவிடுவது ஏன்?

இத்தகைய முரண்பாடான சூழ்நிலையினிடையே முஸ்லிம்கள் தீவிரவாதிகளைப் போன்று செயற்படுகின்றார்கள் என்று மேலைத்தேய நாடுகள் என்ன உள்நாட்டுக்குள்ளேயே குரல்கள் எழுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லையே.

பல்லின சமூகத்திற்குள் வாழுகிறோம் என்பதையே பல தருணங்களில் மறந்துவிடுவதும், இன்றைய செயற்பாடுகள் எதிர்கால சந்ததிகளை எவ்வளவு தூரம் பாதிக்கக்கூடும் என்பது குறித்ததுமான விரிவான நோக்குகளும் சிந்தனைகளும் இல்லாமலேயே இன்றைய இஸ்லாமிய அடிப்படைவாதிக‌ள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் மேலும், மேலும் பாதிக்கப்படுவது இஸ்லாமிய சமூகம் என்பதே கவலைக்குரிய விடயமாகும்.

- ஸர்மிளா ஸெய்யித்

Comments

21 comments

21
Chandar
Very sensible and timely article.
imran
இறுதியில், விஸ்பரூபம் தடுக்கப்பட்டதே எங்களை பயங்கரவாதிகளாக்கி விட்டது.

சாட்சிகளோடும் தகுந்த ஆதாரங்களோடும் நிரூபிக்கப்பட்டு அரசால் வழங்கப்பட்டால் அது மரணதண்டனை. இல்லையேல், படுகொலை.

தெரிந்தவர்கள் பதில் தாருங்கள்:
அந்தத்தாய் வீட்டில் குழந்தையை விட்டு சென்றபோது அது உயிருடன் இருந்ததற்கான சான்றுகள் இருக்கிறதா? இந்த பெண்தான் கொலை செய்தாள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? மருத்துவ அறிக்கை சமர்ப்பித்த மருத்துவர்கள் விசாரிக்கப்பட்டார்களா? இந்த விடயத்தை மேலும் எங்காவது நீதி விசாரணைக்கு உட்படுத்த முடியுமா?
சிவக்குமார்
அருமை. இஸ்லாமியராக இருந்தும் , மதக்கருத்துக்களிலேயே நொண்டியடிக்காமல் மனிதத்திற்காக மதங்கடந்து சிந்திக்கும் உங்களைப் போன்றவர்கள் மதிப்பு மிக்கவர்கள். உங்களுக்கு நாங்கள் துணையிருப்போம். கீற்று இது போன்றவர்களின் கருத்தைத் தொடர்ந்து வெளியிட்டு ஊக்கப்படுத்த வேண்டும்.
basheer
விசுவரூபம் ஒரு விளக்கம் - கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி ***

திரு கமல்ஹாசன் மீது முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட எந்த வெறுப்பும் கிடையாது. அவரது திரைப்படத்தை அநியாயமாக தடுப்பதற்கு முஸ்லிம்களிடம் எந்த வஞ்சமும் இல்லை.

சமீப ஆண்டுகளில் ஒரு தரப்பாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக தொடர்ந்து ஊடகங்கள் சித்தரிப்பதால் பொதுவான முஸ்லிம்களின் வாழ்க்கை பெரும் சங்கட்த்திற்கு உள்ளாகியிருக்கிறது.

எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தரப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஆனால் ஊடகங்கள் ஒரு தரப்பாகவே காட்சிகளையும் செய்திகளையும் வெளியிடுகின்றன. அத்தோடு தங்களது கற்பனைக்கு தோன்றியதை உண்மை போல சித்தரிக்கின்றன,

இதனால் பொது இடங்களில் கோடிக்கணகான முஸ்லிம்கள் அவமதிக்கப்படுகிற நிராகரிக்கப்படுகிற சூழல் அதிகரித்து வருகிறது. சாதாரண முஸ்லிம்கள் கல்விக் கூடம் தொடங்கி அரசு அலுவலம் வரை ஒரு வகை தீண்டாமைக்கு ஆளாகிவருகிறார்கள். முஸ்லிம் சமுதாயம் இதனால் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகிறது.

கமல் ஹாசனது திரைப்படம் முஸ்லிம்களை ஒரு தரப்பாக மேலும் அதிகமாக புண்படுத்தியிருப்பதாக சொல்வதை திரு கமல் ஹாசன் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு கலைப்படைப்பு சம்பந்தப்பட்டது அல்ல. ஒரு சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் மரியாதை சம்பந்தப்பட்டது.

அவருடை வருமானம் அவருக்கு முக்கியம் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் மூலம் ஒரு பெரும் சமுகத்தின் வாழ்வாதாரத்தை பாதிக்கப்படுவது எந்த வகைய்லும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தப்படத்தில் தாலிபான்களின் தலைவர் முல்லா உமர் கோவை போன்ற நகரங்களில் தங்கியிருந்த்தாக காட்டப்படுகிறது. பெரும் சோகத்திற்கு பிறகு சன்னம் சன்னமாக அமைதி நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிற கோவை போன்ற நகரங்களில் அவநம்பிக்கையையும் மத நல்லிணக்கத்தையும் பாதித்து விடக்கூடியது.

கட்ட பொம்மன் என்றால் சிவாஜி கணேசனை நினைவு கூறுகிற அளவுக்கு நம்முடைய தமிழகத்து மக்கள் சினிமாவோடு ஒன்றிப்போனவர்கள். இத்தகைய மக்களிடையே கமல் ஹாசன் போன்ற மூத்த கலைஞர்கள் ஒரு சமூகத்திற்கு எதிரான வன்ம்மான கருத்துக்களை திணிப்பது நாட்டிலுள்ள முஸ்லிம்களின் நிலையை மேலும் சிரமப்படுத்தி விடும். ஏராளமான அப்பாவி பொதுமக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.

ஒரு தரப்பாக இந்த கொடுமையிலிருந்து அடுத்த தலைமுறையையாவது பாதுகாக்க வேண்டிய கடமை இன்றைய முஸ்லிம்களுக்கு இருக்கிறது. இதை கமல்ஹாசனும் கலைத்துறையினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இனிமேல் இத்தகைய கொடூரம் தொடராமல் தடுப்பதற்காக முஸ்லிம் சமுதாயம் நடத்துகிற போராட்டம் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்வதற்கான போராட்டம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
thiru
பொருலாதாரத்தை வலுப் படுத்த இச்லாமிய சமூகம் எந்த முயர்சியையும் மேர்கொள்ளவில்லை எனும் வாதத்தில் அர்தங்கள் பல பொதிந்துள்ளதை மருக்கவியலாது !
TAMIL THAMBI
இது ஒரு இஸ்லாமிய இணைய தளத்தில் உள்ளது பாருங்கள் இவர்களின் வெறியை ....

படம் எடுக்கத் துப்பில்லாமல் தொடந்து இஸ்லாத்தை இழிவுபடுத்தும் திரைப் படத் துறையினரே ! ஊருக்கு இளைத்தவன் இஸ்லாமியன் என நினைக்கும் உங்கள் போக்கினை மாற்றா விட்டால உங்களைத் தாக்கி அழிக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள் நிச்சயம் உருவாகி வருவார்கள்! எங்களின் இணையில்லா இஸ்லாமியத் தளபதி காலித் பின் வலீத் [ரலி] சொன்னது போன்று

நீங்கள் மதுவை நேசிப்பது போல்,
மங்கையை நேசிப்பது போல்,
மாட மாளிகைகளை நேசிப்பது போல்
மரணத்தை நேசிக்கின்ற
ஒரு மாபெரும் படையோடு மோதுகின்றீர்கள்!
என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
விக்னேஷ் சேரல்
நல்ல கருத்துகள் ஸர்மிளா ஸெய்யித், அருமை.........!
மகேந்திரன்
மனிதனை மனிதனாக பார்க்கும் சுய சிந்தனை வரும் வரை இந்த மாதிரியான இருட்டுத்தனமான சிந்தனைகள் மேலோங்கியே நிற்கும். இதை தவிற மாற்று சிந்தனைக்கு வேலையே இல்லை. முதலில் மனிதனும், உயிரினம்தான் பிறந்தது என்பதை உணர்ந்தாலே போதும் வேறு காரணங்களே தேவையில்லை. அதை தவிர்த்து கடவுளும் மூட நம்பிக்கைகளும் அதை சார்ந்த சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் மனிதனை அதிலிருந்து மீட்டெடுப்பதெற்கான வாய்ப்பே இல்லாமல் செய்கிறது. இதை இதை இந்த இந்த அளவில் தான் எடுத்துகொள்ளவேண்டும் என்ற அறிவு இல்லாமல் முட்டால் தனமான கடவுளை காரணகர்த்தாவாக்கி பகுத்தறிய அடிப்படை சிந்தனை அற்ற மூடர்களாக சாதி மத பித்து பிடித்து மூடர்களாக செயல்படுகிறர்கள். ஆகையால் இவர்களுக்கெல்லாம் காரணமும் கருத்தும் சொல்லவே முடியாது. எனவே முதலில் சொன்னது போல மனிதனை மனிதனாக பார்க்கும் சுய சிந்தனை வர அவர்கள் வழியிலே சென்று புதிய சாதி மத இன பேதமில்லாத (சிரிப்புக்காக)கடவுளையும் பகுத்தறிவுள்ள வாழ்க்கை நெறிகளையும் உருவாக்க வேண்டும். இல்லையென்றால் இம்மாதிரியான செயல் நீடித்து மனிதன் வாழ வழியில்லாமல் போகும். ஆக எல்லோர் மனதிலும் மனிதநேயத்துடன் கூடிய பகுத்தறிவு வளர செய்வதை தவிர வேறு மாற்று கருத்தே கிடையாது என்பது எல்லோரும் ஏற்றுகொள்ளவேண்டிய யெதார்த்தமான உண்மை..
viyasan
//இது ஒரு கலைப்படைப்பு சம்பந்தப்பட்டது அல்ல. ஒரு சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் மரியாதை சம்பந்தப்பட்டது.//

முஸ்லீம்க‌ளில் ப‌ல‌ர் கிளிப்பிள்ளை மாதிரி இதையே ஒப்புவிக்கிறார்க‌ள் ஆனால் அதை விள‌க்குவார் தானில்லை. ஆப்கானிய‌ த‌லிபான்க‌ளின் அட்டூழிய‌ங்க‌ளையும் இஸ்லாமிய‌ தீவிர‌வாதிக‌ளைப் ப‌ற்றியும் ப‌ட‌மெடுப்ப‌து த‌மிழ்நாட்டு இஸ்லாமிய‌ ச‌மூகத்தின் வாழ்வாதார‌ம் ம‌ற்றும் ம‌ரியாதை என்ப‌வ‌ற்றுடன் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தென்றால் இஸ்லாமிய‌ர்க‌ள் எல்லாம் தீவிர‌வாதிக‌ள் அல்ல‌து அத‌ன் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் என்றல்லவா க‌ருத்தாகும். உதார‌ணமாக‌, ச‌ங் ப‌ரிவார் அல்ல‌து சிவ‌சேனாவின் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தைப் ப‌ற்றி யாராவ‌து பேசினால் அல்ல‌து ப‌ட‌மெடுத்தால் அது ஒட்டு மொத்த‌ இந்துக்க‌ளின் ம‌ன‌தைப் புண்ப‌டுத்தும் செய‌ல், அதனால் என‌து ம‌ரியாதை கெடுகிற‌து, என்னுடைய‌ வாழ்வாதார‌ம் பாதிக்க‌ப்படுகிற‌து என‌ ஒரு இந்து வாதாடினால் அவ‌ன் சிவ‌சேனாவை ஆத‌ரிக்கிறான், அவ‌ர்க‌ளைப் ப‌ற்றித் தாழ்வாக‌க் காட்டுவ‌தை, அவ‌ர்க‌ள் செய்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ச் செய‌ல்க‌ளைத் திரைப்ப‌ட‌மாக‌ வெளியிடுவ‌தை அவ‌ன் விரும்ப‌வில்லை என்ப‌து தானே க‌ருத்தாகும். அத‌ற்கு மாறாக‌ அவ‌னும் அந்த‌ப்பட‌த்தை ஆத‌ரித்து, அவ‌ர்க‌ளைத் த‌னிமைப்ப‌டுத்தி, உண்மையான‌ இந்துக்க‌ள் சிவ‌சேனா போன்ற‌ தீவிர‌வாத‌ இந்து இய‌க்க‌ங்க‌ளுக்கு ஆத‌ர‌வளிக்க‌வில்லை, அவ‌ர்க‌ளிட‌மிருந்து எட்ட‌விருக்க‌வே விரும்புகிறோம் என்ப‌தைக் காட்ட‌வேண்டுமே த‌விர‌ அவ‌ர்க‌ளின் குறைக‌ளைக் காட்டும் திரைப்ப‌ட‌த்தைத் த‌டைசெய்ய‌ப் போராடினால், இந்துக்க‌ளனைவ‌ரும் இந்து தீவிர‌வாத‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு ஆத‌ர‌வு என்று தான் பொருளாகும். இன்று த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள் அதைத் தான் செய்கிறார்க‌ள், அவ‌ர்க‌ளின் ம‌த‌விசுவாச‌ம் அவ‌ர்க‌ளின் க‌ண்களை ம‌றைக்கிற‌து, எந்த‌ தீவிர‌வாதியாக‌ இருந்தாலும், அவ‌ன் எத்த‌னை அப்பாவிப் ப‌ண‌ய‌க்கைதிக‌ளின் க‌ழுத்தை அறுத்தாலும் அவ‌ன் முஸ்லீமாக‌ இருப்ப‌தால் அவ‌னை ஆத‌ரிக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளின் அட்டூழிய‌ங்க‌ளை அவ‌ர்க‌ளைக் குற்ற‌வாளிக‌ளாக‌க் காட்டும் வெறும் பொழுதுபோக்கு திரைப்ப‌ட‌ங்க‌ள் கூட‌ எங்க‌ளின் ம‌ரியாதை ச‌ம்ப‌ந்தப்ப‌ட்ட‌து, எங்க‌ளின் ம‌ன‌தைப் புண்ப‌டுத்துகிற‌து என்கிறார்க‌ள். த‌மிழ்நாட்டு முஸ்லீம்கள் இஸ்லாமிய‌ தீவிர‌வாதிக‌ளை எதிர்ப்ப‌தாலும், அவ‌ர்க‌ளிடமிருந்து நாங்க‌ள் வில‌கி நிற்க‌வே விரும்புகிறோம் என்ப‌தை செயலில் காட்டுவ‌தாலும் தான் அவ‌ர்க‌ளின் ச‌மூக‌ வாழ்வாதார‌த்தையும், ம‌ரியாதையையும் காப்பாற்ற‌லாமே த‌விர‌, இஸ்லாமிய‌ தீவிர‌வாதிக‌ளைப்ப‌ற்றிய‌ ப‌ட‌ங்க‌ளைக் கூட‌க் காட்ட‌க் கூடாதென‌ த‌டைசெய்வ‌தால் அல்ல‌. இப்ப‌டியான‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ளால் த‌மிழ்நாட்டு முஸ்லீம்க‌ள் ம‌த்தியில் ஜிகாதிக‌ளுக்கும், த‌லிபான்க‌ளுக்கும் ஆத‌ர‌வுண்டு என்று தான் ஏனைய‌ ம‌க்க‌ளுக்குப் புல‌ப்ப‌டுகிற‌து. க‌ம‌ல‌காச‌னின் ஒரு திரைப்ப‌ட‌த்தை அடாவ‌டித்த‌ன‌த்தால் த‌மிழ்நாட்டில் ம‌ட்டும் த‌டைசெய்ய‌ முடியும் ஆனால் ம‌ற்ற‌ நாடுக‌ளிலிருந்து வெளிவ‌ரும் ப‌ட‌ங்க‌ளிலும், ப‌த்திரிகைக‌ளிலும், ச‌ஞ்சிகைக‌ளிலும் இஸ்லாமிய‌ தீவிர‌வாத‌த்தைப் ப‌ற்றி வெளிவ‌ரும் செய்திக‌ளை த‌மிழ்நாட்டு இஸ்லாமிய‌ இய‌க்க‌ங்க‌ளால் த‌டைசெய்ய‌ முடியாதென்ப‌து அவ‌ர்க‌ளுக்கும் தெரியும். அத‌னால் க‌ம‌ல‌காச‌னுக்கும், விஸ்வரூபத்துக்கும், அமெரிக்காவுக்கும் ஏதோ தொட‌ர்பிருப்ப‌தாக‌ சில‌ இஸ்லாமிய‌ த‌மிழ்நாட்டுப்புத்திசாலிக‌ள் நினைத்துக் கொண்ட‌தால் தான் இந்த‌ப்ப‌டத்தை எதிர்க்கிறார்க‌ள் த‌விர‌ த‌மிழ்நாட்டில் ஒரு ப‌ட‌த்தைத் த‌டைசெய்வ‌தால், உல‌க‌ம‌க்க‌ள் அனைவ‌ரிட‌மும் இஸ்லாமிய‌ தீவிரவாதிக‌ளையும் த‌லிபான்க‌ளையும் ப‌ற்றிய‌ ந‌ல்ல‌ அபிப்பிராய‌த்தை வ‌ள‌ர்க்க‌லாம் என்று நினைக்கும‌ளவுக்கு அவ‌ர்க‌ள் முட்டாள்கள‌ல்ல‌, இது அமெரிக்காவுக்கு எதிரான ஒரு போராட்ட‌மேய‌ல்லாம‌ல் உண்மையில் க‌ம‌ல‌காச‌னின் வெறும் திறில்ல‌ர் திரைப்ப‌ட‌த்துக்கெதிரான‌ போராட்ட‌மல்ல.

இன்று இஸ்லாமிய‌ தீவிர‌வாதிகளைப் ப‌ற்றிய‌ ப‌ட‌ங்க‌ளைத் த‌டைசெய்ய‌க் கோருகிற‌வ‌ர்க‌ள் நாளைக்கு இஸ்லாமிய‌ தீவிர‌வாதிக‌ள் எங்காவ‌து தாக்குத‌லை நட‌த்தினால் கூட‌ த‌மிழ்நாட்டுப் ப‌த்திரிகைக‌ளில் வெளியிடக் கூடாதென்பார்க‌ள், அதிலும் வெற்றி க‌ண்டால் த‌மிழ்நாட்டில் எந்த‌ த‌மிழ‌னும் இஸ்லாமிய‌த் தீவிர‌வாதிக‌ளைப் ப‌ற்றிப் பேச‌க் கூடாதென்பார்க‌ள். வ‌ஹாபியிச‌மும், அர‌பும‌ய‌மாக்க‌லும் தமிழ்நாட்டைப் ப‌டாத‌பாடு ப‌டுத்த‌ப் போகிற‌து என்ப‌து ம‌ட்டும் தெளிவாகிற‌து.
ஃபாரூக்
‘சொல்றேன் என்று தப்பா நினைக்காதே.. இவர்கள் இப்போது நடந்து கொள்வது மட்டும் ஜனநாயகமா?

கட்டுரையின் துவக்கமே சொல்கிறது இது தடுமாற்றத்தின் அடிப்படையில் சரியான் புரிந்துணர்வு இல்லாமல் எழுதப்பட்ட கட்டுரை என்பது.

ஊர்வலங்கள், போராட்டங்கள், உண்ணா விரதங்கள், முற்றுகைப் போராட்டங்கள், வேலை நிறுத்தப் போராட்டங்கள், இது போல இன்னும் பல ஜனநாயகம் கொடுத்த உரிமை என்கின்ற அடிப்படை கூடத் தெரியாத ஒருவரால அவசர கதியில் அள்ளித் தெளிக்கப்பட்ட கட்டுரை இது.

போராடுவதுற்கு உண்டான உரிமை ஒருவனுக்கு மறுக்கப்படும்போது. அவன் தீவிரவாதி ஆவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

ஜனநாயக அடிப்படையில் எதிர்ப்பை தெரிவப்பதை கற்றுக்கொடுக்காததால் தான் ஒரு பாஷா உருவானார்.

போராடுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் முஸ்லீம்கள் அதைச் செய்தால் மட்டும் பயங்கரவாதமாக அல்லது அடிப்படைவாதமாகப் பார்க்கப்படுகிறது

எந்த அடிப்படையும் இல்லாம் சிந்திக்கலாம் என்று சொல்ல வருகிறாரா கட்டுரையாளர்.?

எல்லாவற்றுக்கும் எதோ ஒரு அடிப்படை இருக்கிறது. நாத்திகர்கள் கடவுள் மறுப்பை அடிப்படையாக வைத்திருக்கிறார்கள்.

பொதுவுடைமையை அடிப்படையாக வைத்து கம்யுனிஸ்டுகள் செயலாற்றுகிறார்கள்.

அடிப்படை இல்லாதவர் எவரும் இல்லை.

ஆனால் முஸ்லீம்கள் மட்டும் அவர்களது மார்க்கத்தின் அடிப்படையில் செயலாற்றக்கூடாது. அப்படி செயலாற்றினால் அவர்கள் அடிப்படை வாதிகள்.

ஆப்கானிஸ்தானின் உண்மையான வரலாறு தெரிந்தவர்கள் யாரும் கமலஹாசனை ஆதரிக்க மாட்டார்கள்.

முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதைப் போல கமலஹாசன் விஸ்வரூபத்தை எடுத்திருக்கிறார்.

ஆங்கிலத்தில் ராம்போ என்றொரு படம் வந்தது. அப்போது தலிபான்களின் முன்னோடிகள் சுதந்திரப் போராட்ட தியாகிகளாக சித்தரிக்கப்பட்டனர். ஆனால் அமெரிக்காவை எதிர்த்து போராடினால் தீவிரவாதிகள். இது என்ன நியாயம்.

பொய்மையை உண்மையாய் காட்டாதே என்று எதிர்த்தால் அது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாம்?

"கொலையில் கொடியோரை வெந்து ஒருத்தல் பைங்கூழ் கலைக் கட்டதனோடு நேர்" என்று வள்ளுவர் மரணதண்டனையைச் வழியுருத்திச் சொன்னால் அவர் அறிவாளி.

கன்றைக் கொன்ற மகனை தேர் ஏற்றி மரணதண்டனைட்டுக் கொன்றால் அவன் மனு நீதிச் சோழன்.

அதேயே முஸ்லீம்கள் சொன்னால் பிற்போக்குவாதிகள்.

முற்ப்போக்குவாதிகள் என்று பறைசாற்றிக் கொள்வோர்கள் தங்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்ற அடிப்படையில் அடிப்படை வாதிகளாக சிந்திக்கிறார்கள்.

"வேடிக்கை பார்ப்பவர்களுக்கு வேதாந்தம் மட்டும் தான் பேசத்தெரியும், வேதனையின் வலி தெரியாது."
அப்து
// மேனியில் வடுக்கள் தெரியக்கூடிய ஈச்சம்பாயில்தான் முஹம்மது(ஸல்) அவர்கள் படுத்துறைங்கினார்.ஒட்டகத்தில் பயணித்தார்.ஷரி ஆவை அப்படியே பிசகாமல் பின்பற்றுவதாக கூப்பாடு போடுகிறவர்கள் ஈச்சம்பாயில் படுத்து ஒட்டகத்தில் பயணிக்கலாமே! //
கட்டுரை சகோதரி என்ன சொல்ல வருகிறார்? ஈச்சம் பாய் படுக்கை,ஒட்டகப் பயணமும் கட்டாயம் என்று அல்லாஹ்வும்,அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லவில்லையே? மார்க்கம் கட்டாயப்படுத்தாத ஒன்றை பின்பற்ற சொல்லும் சகோதரிக்கு ஷரியா சரியா தெரியவில்லையே! மார்க்கத்தை விளங்கி பின்பற்றியபிறகு பிறருக்கு அழைப்பு கொடுங்கள்.அரைகுறையாக விளங்கி எழுதும்போது இம்மையில் அதிக மதிப்பெண் பெறலாம்.மறுமை வாழ்வுக்கு இவ்மதிப்பெண் பயன்படாது. மேலும் அல்லாஹ்வின் தூதரின் பெயரை குறிப்பிடும்பொழுது,”உங்களில் பிறரை அழைப்பதுபோல் அழைக்கவேண்டாம்.”என்ற அல் குர்ஆன் வசனங்களை கவனத்தில் வையுங்கள்.
Hakkim
ஸஹுல் ஹமேட்
எல்லா புகழும் இறைவனுக்கே!
எப்படியோ விஸ்வரூபம் ஒரு முடிவுக்கு வந்து விட்டது.அனைத்து தரப்பு மக்களுக்கம் வாழ்த்துக்கள்.(எதிர்த்தவர்கள்,விமர்சித்தவர்கள்,ஆதரவளித்தவர்கள்,அமைதி காத்தவர்கள் )கமல் அவர்களுக்கு பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.
படம் வெளிவந்து வெற்றி பெறட்டும்.விஸவரூபம் சம்பந்தமாக முஸலிம்களின் ஜனநாயக ரீதியாக சட்டரீதியான நடவடிக்கைக்கும் வெற்றி கிடைத்திரிக்கிறது.திரைத்துறையினர் இனிமேலாவது சமூகப் பொறுப்புடனும்,மக்களை நல்வழி படுத்தும் வகையில் படம் எடுக்க வேண்டுமாறு அன்பு வேண்டுகோள். இனி நம் தேசத்தின் முக்கியமான பிரச்சனைகளின் பக்கம் கவனம் செலுத்துவோம்.
குறிப்பாக விவசாயத்தை நினைத்தேலே மிக கவலையாக இருக்கிறது. விவசாய பிரச்சனைக்கு முழு தீர்வும்,வழிகாட்டலும் அளிக்கும் வகையில் ஒரு நல்ல திரைப்படம் தயாரித்தால் மிக பயனுள்ளதாக அமையும்.
*மின்சார பற்றக்குறை
*பூரண மது ஒழிப்பு
*திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சனை
*பெண்கள் பாதுகாப்பு
*ஒழுக்க கல்வி வழங்குதல்
இன்னும் ஏராளம் ஏராளம் உண்டு.இவைகளுக்கும் திரைபடம் மூலம் தீர்வு வழங்கலாமே?சினிமாவை வணிக நோக்கத்தை தாண்டி தேசப்பற்றும் தேசமுற்றேத்திற்க்கும் சினிமாவை பயன்படுத்தலாம்.மொத்தத்தில் சினிமா என்ற கலையின் மூலம் மனித சமூகத்தை நல்வழி படுத்த முடியும்.அதை நோக்கி நாம் பயணிப்போமாக!
sha
//ரிஸானா 2005ஆம் ஆண்டு சவூதி அரேயியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற சிறுமி. நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்தாள் என்று 2007ஆம் ஆண்டு சவூதி அரேபிய அரசாங்கம் தீர்ப்பு வழங்கியது. 2013 ஜனவரி 09ஆந் திகதி சிறுமி றிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவூதி அரேபியாவினுடையது மதாடிப்படைச் சட்டம் எனில் முஹம்மதின் முன்மாதிரியை கைவிட்டதை யாரும் விமர்சிக்கக்கூடாது என்கிறார்களா அடிப்படைவாதிகள்?//

சிறுமி என்றால் எத்தனை வயது வரை சிறுமி? 2005 ல் சிறுமி என்றால் 2013ல் அவள் யார்?. இனி 2022 லும் சிறுமி என்று தான் சொல்வீர்கள் போலும். 2005 ல் ரிஸான சவூதி சென்றிருந்த பொழுது அவளுக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். 2005ல் 21 என்றால் 2013ல் 29 வயது. 29 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை சிறுமியாக பார்ப்பது தான் முற்போக்கு தனமோ?
S.Ibrahim
சகோதரி ஷர்மிளா ,அமெரிக்காவின் அடிமை ஊடகங்கள் நடத்தும் நாடகத்தை நம்பி கதை எழுதியுள்ளீர்கள்.கருத்து சுதந்திரம் பேசும் அமெரிக்க இராக் போரில் நடந்த அமெரிக்க ராணுவத்தின் மனிதநேயமற்ற செயல்கள் அனைத்தையும் வெளிப்படுத்தியதற்காக அல்ஜசீராவின் பெண் நிருபர் உட்ப பல நிருபர்களை கொன்றதோடு அந்த ஜசீராவின் அலுவலகத்தையும் குண்டு போட்டு தகர்க்க செய்து அல்ஜசீராவை அடக்கி வாசிக்க வைத்த திறமை க்கு என்ன பெயர் வைக்கலாம் பத்திரிக்கா தர்மமா? கருத்து சுதந்திரமா? இல்லை கருத்தை அடக்கும் தந்திரமா?
ஜெகதீஸ்வரன்
இஸ்லாமிய அமைப்பின் இந்த தடையுத்தரவு வேண்டல், அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது வளர்ந்துவரும் கருத்து சுகந்திரத்திற்கு ஊறுவிளைவிக்கும் என்பதை பலர் வலியுறுத்துகின்றார்கள். ஆனால் இதற்குப் பின் இவற்றை முன் உதாரணமாகக் கொண்டு இன்று இஸ்லாமிய அமைப்புகள் போட்டுக் கொடுத்த பாதையில் இந்து அமைப்புகளும் நிச்சயம் பயணிக்கும்.

ஆதிபகவான் படத்திற்கான தடையுத்தரவு கோரிக்கை இப்போதே வைக்கப்பட்டிருக்கிறது. இந்து அமைப்புகள் மட்டுமல்ல, சாதி அமைப்புகளும் நிறைய முறை படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. ஆனால் இதுபோன்று திரையிட தடை வாங்கியமை இதுவே முதல் முறை. உண்மையில் இது இஸ்லாமிய அமைப்புகளின் வெற்றி. தங்களை இஸ்லாமியர்களின் பிரதிநிதிகளாக முன்நிறுத்துகின்றவர்களின் வெற்றி. அரசு மட்டுமல்ல, அனைவரும் அவர்களை அவ்வாறே காண்கிறார்கள்.

ஆனால் இந்த அமைப்புகள் உலகம் முழுவதும் விரவியிருந்தும், குறைந்த பட்சம் இந்தியா முழுவதும் இருந்தாலும், தமிழகம் புதுவை மட்டுமே தடையுத்தரவு பெற்றிருப்பது அமைப்புகளின் வீரியமிகு செயல்பாடுகளுக்கு தமிழகம் முன்னோடியாக இருப்பதையே காட்டுகிறது. இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே இஸ்லாமியர்கள் அல்லாதோர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக பார்க்கமாட்டார்கள். படத்தினை தடை வாங்கியதற்கு அவர்களின் ஒற்றுமை பலர் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மற்றதெல்லாம் திசை திருப்பும் முயற்சியே. சாதாரண இந்துகள் இஸ்லாமியர்கள் அனைவரையும் வெறுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். இதை சாமானியமாக மாற்ற இயலாது என்ற உண்மையை கட்டுரையாளர்கள் உணர வேண்டும்.
siky saudi
risana pennin opputhal vedio saudi channalil veliyanathu..
melum kulanthai kondrathai postmat report uruthi seithirukirathu..
melum passportin unmai padi aval vayathu 30-5 enil 25 aahirathu..
saudin ilavarasarin recommend andha kulanthayin thaayal niraharikkapatathu..
ippadaiyo ethanayo unmaihal puthainthirukka..

ilangayil indiavilum irunthu kondu oru letterai vaithukondu
anaithu makkalum pulambuvathu islathai kurai solvathu muttalthanam..

delhi paaliyal vivaharathil orusera sollapatta maranathandanai..
athvaniyal kooda yetrukollapatta islamia thandanaihalai..

ippoluthu kulanthai visayathil karunai illathavarhalaal sollapaduvathu vethanai..

ithil islaamiya padaipaalihalin aadharavu endra peetral veru..
melum than poi kolhaihalai nilaithu nirpavarhal

PJ alitha arikoovalukku inangi vivathathukku sendru unmai vilangungal..
Tamilan
ஆப்கானிஸ்தான் வரலாறு பற்றி பேசுகிறார்கள் இங்க.. அமெரிக்காவும் இந்த விவகாரங்களில் வில்லன் தான் ஒத்துகோரம்,. ஆனால் தலிபான்கள் புனிதர்கள் அல்ல.. தலிபான் என்ற இயக்கம் 1996 பின் தான் தோன்றியது. இவர்கள் பெண்களை நடத்திய விதம் பற்றி உலகம் அறியும்.இவர்கள் மதத்தின் பேரியில் கொன்ற ஷியா இஸ்லாமிய மக்கள் பல ஆயிரகனகனனோர். ஹசர இன மக்களை கூண்டோடு அழிக்க நினைத்தனர். இப்படி மனித உரிமை கழகம் சொன்ன புகார்கள் ஏராளம். இப்படி உள்ள இயக்கத்தை சொன்னால் அமெரிக்காவின் வருடி என்று சொல்லுகிறார்கள். இங்க வுள்ள அடிப்படைவாதிகள் சீக்கரமே “லஷ்கர் எ தொய்ப போன்ற இயக்கங்கள் எதனை நோக்கி போராடுகிறார்கள் என்று தெரியுமா?” என்று கேட்டாலும் கேப்பார்கள்!! இதனால் மதவெறி புடித்த இந்துவும் மோடி போன்றவர்கள் குஜராதில் செய்தது என்ன தப்பு என்ற நிலையும் வரும்.. இதற்கு வழி போட்ட ப்ஜ் மற்றும் இதர வர்கள் வாழ்க!!
viyasan
///சிறுமி என்றால் எத்தனை வயது வரை சிறுமி? 2005 ல் சிறுமி என்றால் 2013ல் அவள் யார்?. இனி 2022 லும் சிறுமி என்று தான் சொல்வீர்கள் போலும். 2005 ல் ரிஸான சவூதி சென்றிருந்த பொழுது அவளுக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். 2005ல் 21 என்றால் 2013ல் 29 வயது. 29 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை சிறுமியாக பார்ப்பது தான் முற்போக்கு தனமோ?///
இந்த‌ப்ப‌திலை எழுதிய‌வ‌ர் போன்ற‌ சாரியாவாதிக‌ள் த‌மிழ்நாட்டிலும் இருக்கிறார்க‌ள் என்ப‌தை நினைக்க‌வே பய‌மாக‌ இருக்கிற‌து. ரிசானா ச‌வூதிக்கு வ‌யிற்றுப்பிழைப்புக்காக‌ச் சென்ற‌ போது அவ‌ளுக்குப் 17 வ‌யதும் நிர‌ம்ப‌வில்லை, தொழில் முக‌வ‌ர் அவ‌ள‌து பிற‌ந்த‌ வ‌ருட‌த்தை மாற்றி க‌ள‌வாக‌க் க‌ட‌வுச்சீட்டு எடுத்துத் தான் அனுப்பிவைத்தார் என்ப‌து நிரூபிக்க‌ப்ப‌ட்டு, ச‌வூதி அர‌சுக்கும் ஆதார‌பூர்வ‌மாக‌ நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ச்ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌ போது ரிசானாவுக்கு 17 வ‌ய‌தும் ஆக‌வில்லை. குற்ற‌ம் ந‌ட‌ந்த‌ போது 17 வ‌ய‌தான‌வ‌ர்க‌ளைக் கைது செய்து 7 வருட‌ங்க‌ள் சிறையில் வைத்திருந்த‌ பின்ன‌ர் பெரியவ‌ர்க‌ளுக்கு அளிக்கும் குரூர‌ த‌ண்ட‌னையை அளிக்க்கும் தார்மீக‌ம் எந்த‌ ஜ‌ன‌நாய‌க‌ நாட்டிலும் கிடையாது. அது ச‌ர்வ‌தேச‌ சட்டமுறைமைக‌ளுக்கும் ம‌னிதவுரிமைச் ச‌ட்ட‌ங்க‌ளுக்கும் எதிரான‌து. ப‌ல‌ இஸ்லாமிய‌நாடுக‌ளில் கூட‌ இந்த‌ச் ச‌ட்ட‌ம் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌தில்லை. ஆனால் த‌மிழ்நாட்டில் தாமும் த‌மிழர்க‌ள் என‌க் கூறிக்கொள்ளும் முஸ்லீம்க‌ள், உல‌கில் பழமையான‌, நாக‌ரீக‌மடைந்த‌ இன‌ங்க‌ளில் ஒன்றாகிய‌ த‌மிழின‌த்தில் பிற‌ந்த‌வ‌ர்க‌ள், இன்று வ‌ஹாபியிச‌த்தாலும், அர‌புமயமாக்கலாலும் உந்த‌ப்ப‌ட்டு, அரேபியக் காட்ட‌ர‌பிக‌ளின் க‌லாச்சார‌த்துக்கும், வாழ்க்கை முறைக்குமேற்ப அவ‌ர்க‌ளால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ கைக‌ளையும், கால்க‌ளையும், ஏன் க‌ழுத்தையும் அறுக்கும் ச‌ட்ட‌ங்க‌ளை, அதுவும் 21ம் நூற்றாண்டில் த‌மிழ்நாட்டில் நியாய‌ப்ப‌டுத்துவதைப் பார்க்கும்போது த‌மிழ்நாட்டில் இத‌ன் விளைவுக‌ள் எப்ப‌டியிருக்கும் என்ப‌தை நினைக்க‌ப் ப‌ய‌மாக‌ இருக்கிற‌து.

http://www.viyaasan.blogspot.com
ragu
மியன்மரில் புத்த மதம் தான் பெரும்பான்மை சமூகம்....
raghava raj,t.v.
யாருக்காவது இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று சொல்ல விருப்பமிருந்தாலும் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.சவூதி அரேபியாவில் இளம்பெண் ரிசானாவுக்கு மரணதண்டனை விதித்து கொலை செய்த நிகழ்வு எல்லா விஷயங்களையும் தெளிவாக சொல்லிவிடுகின்றதே!
aslam
எப்பேற்பட்ட அன்பு முஹம்மது (ஸல்) அவர்கள் மீது , அடிகொரு தடவை அவர்களது பெயர் போடும் போது (ஸல்) என்ற வாசகத்தை சேர்க்க தவறிவிட்டீர்களே சகோதரி இதில் இருந்து விளங்குதே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பும் ,இஸ்லாத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள பற்றும் , புஹாரி கிரந்தத்தை ஆதரம் காட்டினீர்களே , நம் சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் எதாவாது கட்டளை பிறப்பித்தால் செவிமடுத்தோம் ,கட்டுப்பட்டோம் என்று கூறுவதை நீங்கள் அறியவில்லை போலும்,அல்லா உங்களை மன்னித்து உங்களுக்கு நேரான வழியை காட்ட அல்லாஹ்விடம் டுஅ செய்கிறேன், அன்பு சகோதரர்களே நீங்களும் இந்த சகோதரியின் நேர்வழிக்காக அல்லாஹ்விடம் டுஅ செய்யவும் .

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.