ஆராய்ச்சி மணி ஒலித்ததும்
அரண்மனைக் கதவுகள் திறக்கப்பட்டன.
அழகிய ஆபரணங்களுடன்
முறுக்கும் மிடுக்குமாக
சிம்மாசனத்தே வீற்றிருந்து
மக்களின் மனுக்களை
செவியேற்றுக் கொண்டிருந்தான் அரசன்.

கைகளில் நிழற்படங்களை ஏந்திய அந்த பெண்கள்
அழுதுகொண்டிருந்தார்கள்
ஒரு பெண் காணாமல்போனவனின் மனைவி எனவும்,
மற்றையவள் காணாமல்போனவனின் தாய் எனவும்
அறிமுகப்படுத்தினர்

முதலாமவள் மூன்றாவதாய் பிறந்தவளுக்கு
லேபல் தேடிக்கொண்டிருந்தாள்
கணவன் காணாமல்போகையில்
அவள் கரிப்பிணியாய் இருந்தாளாம்
பழிகூறி புறந்தள்ளுவோருக்கு
பதில்கூறி பத்தினியெனப் பறைசாற்ற
அவன் வேண்டும் என்றாள்
வாய்தர்க்கம், வம்புகளில் நாட்டமற்றவர் என் கணவர்
வயலில் நாற்று நட்டு நாளும் கஞ்சளந்தார்
நாதியற்று நடுவழியே நிற்கிறோம்
நியாயமாய் தீர்ப்பளியும் அரசே எமக்கென்றாள்

இரண்டாமவளோ மனம் இருப்பிழந்த துயரிலிருந்தாள்
சுண்ணாம்பு நிற வான் கொண்டுபோன மகன்
இருக்கிறானா இல்லையா அவனுக்கு ஆனதென்ன
பதில் வேணுமென்றாள்
படித்தவன், பல்கலை நுழையக் காத்திருக்கையில்
விசாரணையென்று அழைத்தனர்
இன்னுமா முடியலை விசாரணையென
குமுறினாள்

மீசையை முறுக்கிக் கொண்டே
சஞ்சலம் சிறிதுமில்லாது
அனைத்தையும் செவிசாய்த்தான் அரசன்
இதனிடையே உத்தரவுக்கு காத்திருந்து பொறுமையிழந்த
பெரும் திரளானதொரு கூட்டம் அரண்மனையினுள் நுழைந்தது
எங்கள் வயல் நிலங்கள்
அடையாளம் அறியாதோரால்
ஆதாரமின்றி உரிமைகோரப்படுகிறதென
சில குரல்களும்,
எங்கள் வாழிடங்கள் அத்துமீறி ஆக்கிரமிக்கப்படுகிறதென
சில குரல்களும் ஆக்ரோஷித்தன

விசித்திரமான வழக்குகளால்
அரசவையில் பெரும் குழப்பம் உண்டாயிற்று
சினத்தில் சிவந்திருந்தது அரசனின் திருவதனம்
அவன் நிறைவேற்றப்போகும் தீர்ப்பை
பேராவலுடன் எதிர்பார்த்திருந்தது அவை
“இவர்கள் அனைவரையும் பிடித்து
பாதாள சிறையில் அடையுங்கள்
இவர்கள் குழப்பவாதிகள்
புரளிகளாலும், கட்டுக்கதைகளாலும்
நம் தீவின் அமைதியைக் கெடுக்க முயற்சிப்பவர்கள்
இவர்கள் அந்நிய சக்திகளின் கையாட்கள்
இவர்களின் தந்திரோபாயத்தை நாமறிவோம்;
தாமதிக்கவேண்டாம்… இழுத்துச் செல்லுங்கள்”

ராஜாதி ராஜன்… மன்னாதி மன்னன்
நீடூழி வாழ்க… நீண்ட காலம் அரசாழ்க…
சபையோர் எழுந்துநின்று வாழ்த்த
தீர்ப்பளித்த திருப்தியுடன்
வாழ்த்தியோரை ஆசிர்வதித்து
அகமகிழ்ந்தான் அரசன்…!!

Comments

2 comments

2
சோமா
நடைமுறை அரசியலை நாசுக்காக அல்லது இவ்வளவு வெளிப்படையாக ஒரு கதையில் சொல்லிவிட்டீர்கள். ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விசயம். எங்கே சிந்தித்தால் கூட உள்ளே தள்ளி விடுவார்களோ என்கிற பயம் இருக்கத்தான் செய்கிறது. நல்ல கருத்துச் சொல்லி..கவிதை வழி கதையில். நன்று.
பரிதி.முத்துராசன்
இது ஒரு வித்தியாசமான எடுத்துரைப்பு நல்ல கவிதை

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.