"குடிமகனின் அனைத்து சுதந்திரத்தையும் உடைத்து இருட்டு அறைக்குள் தள்ளப்பட்ட குடிமகனின் மகள் நான்!” – பத்திரிக்கை பணியை செய்ததற்காக உத்திரபிரதேசத்தில் சிறைபடுத்தப்பட்டிருக்கும் பத்திரிக்கையாளர் சித்திக் கப்பானின் மகளான ஒன்பது வயது சிறுமி, தனது பள்ளியில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் பொழுது பேசிய வேதனையான வார்த்தைகள் இவை.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளரான சித்திக் கப்பான், உத்திர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரத்தில் ஒரு இளம்பெண்ணிற்கு நேர்ந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமையை ஒரு பத்திரிக்கையாளராக நேரில் சென்று செய்தி சேகரித்தார். நீதி கோரி சமூக வலைதளத்தில் #Justiceforhathrasvictim என்ற ஒரு பரப்புரையை மேற்கொண்டார். இது தான் இவர் செய்த பெருங்குற்றம் என அவரை உபா (UAPA) சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திருக்கிறது யோகி ஆதித்தியநாத் தலைமையிலான உத்திரபிரதேசத்தின் பாஜக அரசு.
ஹத்ராஸ் சம்பவம்:
உத்திர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 2020-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி நான்கு ஆதிக்கசாதி வெறியர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அந்தப் பெண்ணின் முதுகெலும்பை உடைத்து, கழுத்தை நெறித்து மிகவும் கொடூரமான முறையில் வன்புணர்வு செய்து குத்துயிரும் குலையுயிருமாக விட்டுச் சென்றன அந்த மிருகங்கள். அருகிலிருந்த புல்வெளிக்கு புல் அறுக்க சென்றிருந்த தனது மகளைக் காணாது தேடி வந்த தாயார் ரத்த வெள்ளத்தில் மகள் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியானார். குடும்பத்தினர் அந்தப் பெண்ணை அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் பேசுவதற்கு கூட இயலாத நிலையில் நாக்கினில் பல காயங்களுடன் இருந்த பெண்ணிடம், இரண்டு நாட்கள் கழித்து வந்த காவலர்கள் சரியான முறையில் விசாரிக்காமல் வெறும் தாக்குதல் என்று மட்டுமே வழக்கை பதிவு செய்தார்கள். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட தலித் அமைப்புகளும், தன்னார்வலர்களும், குடும்பத்தினருடன் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஐந்து நாட்கள் கழித்து காவலர்கள் அந்தப் பெண்ணிடம் மறுபடியும் வாக்குமூலம் பெற்று காணொளியாக பதிவு செய்தனர். தன்னை நான்கு பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவலர்களிடம் செப்டம்பர் 22-ம் தேதி வாக்குமூலம் கொடுத்தார். அதன் பிறகு அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமாகவே டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
நாடு முழுவதும் இச்செய்தி பரவி கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி இரண்டு வாரம் கழித்து செப்டம்பர் 29-ம் தேதி இறந்தார். அந்தப் பெண் இறந்ததற்கு அடுத்த நாள் அதிகாலை இரண்டு மணிக்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அந்தப் பகுதியை பெரும் படையுடன் வந்து சூழ்ந்து கொண்டனர். குடும்பத்தினரையும் அருகே நெருங்க விடாமல், இறப்பு சடங்கு கூட எதையும் செய்ய விடாமல் ஒரு குப்பையை எரிப்பது போல அந்த சடலத்தை எரித்து விட்டனர். காவல் துறையின் இந்த அத்துமீறிய செயல் பலத்த சர்ச்சைகளையும், கேள்விகளையும் அனைவரிடத்திலும் எழுப்பியது. அந்த சமயத்தில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் ஒருவராக சந்தீப் தாக்கூர் என்பவனின் தந்தை பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாகியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பெண் வன்புணர்வு செய்யப்பட்ட சாட்சியங்கள் இல்லை என மருத்துவப் பரிசோதனை அறிக்கை இருப்பதாக காவலர்கள் குற்றப்பத்திரிகளை தாக்கல் செய்தனர். மேலும் காவலர்கள் குற்றவாளிகளில் நால்வரில் ஒருவரான சந்தீப் மீது காதலில் இருந்ததாகவும், வேறொரு நபருடன் பழகியதால் வந்த விரக்தியால் சந்தீப் கழுத்தை நெறித்ததாகவும், இது ஆணவக் கொலையாக கூட இருக்கலாம் என குற்றப்பத்திரிக்கையில் எழுதியிருந்தனர். அந்தப் பெண் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பதற்கான தடயவியல் பரிசோதனை ஏழு நாட்களுக்குப் பிறகு தாமதமாதவே நடத்தப்பட்டது.
இந்த வழக்கு பின்னர் சிபிஐ-இடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் விசாரணையில், மருத்துவ பரிசோதனை பற்றி ஆராய அமைக்கப்பட்ட மருத்துவக் குழு, ஒரு பெண் வன்புணர்வுக்கு செய்யப்பட்டாரா என்பதற்கு எடுக்கப்படும் தடயவியல் மாதிரிகள் ஒரு வாரத்திற்குள் எடுக்கப்படவில்லை என்றால் வன்புணர்வு செய்யப்பட்ட அறிகுறிகளை கண்டறிய முடியாது என சிபிஐ-இடம் தெரிவித்தது. சிபிஐ மேற்கொண்ட தொடர் விசாரணையில் அந்தப் பெண் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது உறுதியானது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் சிபிஐ இந்த ஆய்வறிக்கையை டிசம்பர் 18-ம் தேதி தாக்கல் செய்தது.
சித்திக் கப்பான் மீதான வழக்குகள்:
ஹத்ராஸ் வழக்கில் சிபிஐ விசாரணையில் கண்டறிந்த உண்மையைத் தான் செய்தியாளரான சித்திக் கப்பான் #justiceforhathrasvictim என்று இணைய பரப்புரை செய்தார். இந்த பரப்புரை பரவலாக மாநிலம் கடந்து இந்த செய்தியை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்தது. ஹத்ராசிற்கு சென்று மேலும் செய்தி சேகரிக்க சென்ற போது தான் உத்திரப்பிரதேச காவல்துறை அவரை மாநிலத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியது. சித்திக் கப்பானுடன் சென்ற அதிக்குர் ரகுமான், மசூத் அகமது, முகமது ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சித்திக் கப்பான் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் இணைந்து சதித்திட்டம் செய்ய வந்ததாக உ.பி அரசு குற்றம் சுமத்தியது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFl) அமைப்புடன் எந்தத் தொடர்பும் இல்லை என சித்திக் கப்பான் மறுத்தார். மற்றவர்களுடன் இருப்பது போலவே ஒரு பத்திரிக்கையாளருக்குரிய தொடர்பு மட்டுமே இருந்ததாகவும் அவர் கூறினார். உத்திரப் பிரதேச காவல்துறை சித்திக் கப்பான் கூறிய எதையும் கேட்காமல் அடாவடித்தனமாக கைது செய்தது.
காவல்துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, சித்திக் கப்பான் மீது பிரிவுகள் 124A (தேசத்துரோகம்), 153A (பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295A (மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஹத்ராஸ் வழக்கினை விசாரிக்க அமைக்கப்பட்ட உத்திரப் பிரதேசத்தின் சிறப்பு அதிரடிப் படை சித்திக் கப்பானின் மடிக்கணிணியில் இருந்த ஒரு சட்ட நகலை எடுத்து அதனை வழக்கிற்கு ஒரு சான்றாக சேர்த்துள்ளனர். அந்த சட்ட நகலானது Indus Scroll என்கிற இந்துத்துவ சார்பு கொண்ட இணைய பத்திரிக்கையாளரான சிறிதத்தன் என்பவர் மீது சித்திக் கப்பான் தொடுத்த வழக்கு நகல். 2019-ம் ஆண்டு டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் நடந்த பிரச்சனையை கொண்டு சித்திக் கப்பானும், அவரது நண்பர்களும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்கிற அமைப்பின் நிதி உதவியுடன் கேரளாவில் கலவரத்தை தூண்டும் வகையிலான பொய் செய்திகளை வெளியிடுகின்றனர் என்கிற கட்டுரையை புனைந்ததற்காக, அந்த பத்திரிக்கை மீது அவதூறு வழக்காக சித்திக் கப்பான் தொடுத்த வழக்கின் சட்ட நகலே அது.
டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் நடந்த பிரச்சனை என்பது 2019-ம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல்கலைக்கழகத்திற்குள் போராடிய மூன்று மாணவர்களை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். காவலர்களின் தடியடியால் 125 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என மறுத்தனர். ஆனால் உடலில் குண்டுகள் இருந்ததாக மருத்துவமனை கூறியது. இந்த செய்தியை வைத்து தான் கேரளாவில் இந்து விரோத மனநிலையில் கலவரத்தை தூண்ட சித்திக் கப்பானும், அவரது நண்பர்களும் திட்டமிடுகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். நபரான சிறிதத்தன் விசாரணை அதிகாரிகளிடம் கூறுகிறார். வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற குழுக்களில் சமூகப் பதட்டத்தை உருவாக்கும் அளவிற்கு பொய் செய்திகளை பரப்புகின்றனர் எனவும் எழுத்துப்பூர்வமாக சிறப்பு அதிரடிப் படையிடம் அளிக்கிறார். ஆனால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லையென்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் சித்திக் கப்பான். இருப்பினும் இதனையெல்லாம் ஆதாரங்களாக எடுத்தும், இந்தியாவில் மோடி அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டமான குடியுரிமை திருத்தச் சட்டம், தப்லீக் ஜமாத் உள்ளிட்ட பிரச்சனைகளை மையமாக வைத்து சித்திக் கப்பான் எழுதிய கட்டுரைகளை ஆதாரங்களாக கொண்டும் சிறப்பு அதிரடிப் படை 5000 பக்க அளவிற்காக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
சித்திக் கப்பானுக்கு பிணை மறுப்பு:
இந்நிலையில் பிணைக்காக முயற்சித்த சித்திக் கப்பானின் பிணை மனுக்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டன. தற்போது, ஆகஸ்ட் முதல் வாரத்தில் சித்திக் கப்பானின் பிணை மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. ஒரு பத்திரிக்கையாளராகவே சித்திக் கப்பான் செய்தி சேகரிக்க சென்றதாக அவரின் வழக்கறிஞர் கூறினார். இதற்கு முன்பு அவருக்கு எந்த குற்றவியல் வழக்குகளும் இல்லை என்பதாலும் உபா சட்டத்தின் விதிகள் பொருந்தாது என அவர் வாதிட்டார். ஆனால் நீதிமன்றம் சித்திக் கப்பானின் குற்றப்பத்திரிக்கை ஆவணங்களை ஆய்வு செய்ததில் சித்திக் கப்பான் தனது மறைமுக நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று பிணையை மறுத்தது. சித்திக் கப்பானுடன் கைது செய்யப்பட்டவர்களும் தவறான வழியில் நிதி சேகரித்துக் கொண்டு கலவரத்தில் ஈடுபட ஹத்ராசிற்கு சென்றனர் என்று அவர்களுக்கும் பிணையை நிராகரித்தது. நீதிமன்றம் முழுக்க முழுக்க காவல்துறையின் ஆவணங்களை மேற்கோள் காட்டியே தீர்ப்பளித்தது.
சித்திக் கப்பான் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, கப்பான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, "எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பயங்கரவாத அமைப்பு அல்ல. 2020 அக்டோபரில் இருந்து சிறையில் இருக்கிறேன். எனது வங்கிக் கணக்கில் கொஞ்சம் பணமே வைப்புத் தொகையாக உள்ளதே தவிர, எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. நான் ஒரு மூத்த பத்திரிகையாளர். நான் இருந்த முந்தைய அமைப்பு தான் PFl உடன் சில தொடர்புகளைக் கொண்டிருக்கிறது" என சித்திக் கப்பான் சார்பான வாக்குமூலத்தை அளித்தார். இதற்கு உத்தரப்பிரதேச அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதுடன், விசாரணையை செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. பிணை மனு இப்பொழுதும் நிராகரிக்கப்பட்டது.
ஆதிக்க சாதிவெறி கொண்ட மிருகங்களால் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணிற்காக, அந்தப் பெண்ணிற்கான நீதியைப் புதைக்க அவசரமாக எரியூட்டிய அரச அதிகார மட்டங்கள் செய்த கொடூரத்தை வெளிக் கொண்டு வருவதற்காக, ஊடக அறம் கொண்டு செய்திகளைச் சேகரித்து, நீதிக்காக இணைய தளம் வழியாக மக்களின் பரப்புரை செய்து யோகியின் பாஜக அரசை அம்பலப்படுத்தினார் சித்திக் கப்பான். இந்த காரணத்திற்காகவே தடை செய்யப்படாத ஒரு அமைப்புடன் தொடர்புபடுத்தி, மதக் கலவரம் தூண்டுபவராக, இந்து விரோத மனநிலை கொண்டவராக சித்தரித்து இரண்டு வருடங்களாக பிணை கூட வழங்காமல் நீரிழிவு நோயாளியான சித்திக் கப்பானை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது யோகி அரசு.
அரசு எந்திரத்தை எந்த கேள்வியும் கேட்காமல், அரசின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கும் பத்திரிக்கை சுதந்திரத்தைத் தான் அனுமதிப்போம். நேர்மையின் வழி நின்று கேள்வி எழுப்பினால் அடக்குமுறை செய்து சிறையில் அடைப்போம் என்று மறைமுகமாக சொல்கிறது யோகி அரசு. ஒன்றியத்தை ஆட்சி செய்யும் மோடியும், உத்திர பிரதேசத்தை ஆளும் யோகியும் கருத்துரிமையை கானல் நீராக்க போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்கின்றனர். அதனால் மக்களுக்கானவர்களாக செயல்படும் ஊடகவியலாளர்களும், சமூக, அரசியல் போராளிகளும் ஒடுக்கப்படுகின்றனர். இதில் ஒருவர் தான் சித்திக் கப்பான். இவர் இஸ்லாமியர் என்ற காரணமும் இன்னும் வதைப்பதற்கு வாய்ப்பாக யோகி அரசுக்கு அமைந்தது.
"எங்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதிக்கக்கூடிய எதற்கும் எதிராக போராட்டம் நடத்த எங்களுக்கு முழு உரிமை உள்ளது" - சித்திக் கப்பானின் ஒன்பது வயது மகள் ஆற்றிய உரையில் இருக்கும் இந்த வலுவான உணர்வில் தான் ஜனநாயகம் காக்கப்படும் வழியும் இருக்கிறது. சித்திக் கப்பானைக் குற்றவாளியாக்க புனையப்படும் பொய்களை எதிர்த்து ஜனநாயக ஆற்றல்களின் குரல் மட்டும் இன்னும் ஓயாமல் ஒலிக்கிறது.
- மே பதினேழு இயக்கம்