திராவிட நாடு பேசியவர்களைத் தமிழ்த் தேசியத்தின் எதிரிகளாகவும், தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தவர்களாகவும் தமிழ்நாட்டின் அனைத்து இழிவுகளுக்கும், பிரச்சனைகளுக்கும் திராவிடம் பேசியதே காரணம் என்றும் அண்மைக்காலத்தில் மிக அதிகமாக வாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த வாதங்கள் தமிழ்ச் சமூகத்தில் புதியது அல்ல என்றாலும், தற்போது மிகவும் கூர்மை அடைந்திருப்பதும் கணினி பயன்பாட்டின் காரணமாக முகநூல்களில் வெளிவரும் அரைவேக்காட்டுத்தனமான எழுத்துகளும் சமூக அக்கறை கொண்டவர்களுக்கு கவலை அளிப்பதாகவே இருக்கிறது.

periyar_450ஈழத்தில் நிகழ்ந்த இந்த நூற்றாண்டின் தமிழினப் படுகொலைக்குப் பின், அதை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத இந்தியத் தமிழனின் கையறுநிலையில் விரக்தி அடைந்திருக்கும் இன்றைய இளம் தலைமுறை திராவிட எதிர்ப்பு அலையால் வெகு எளிதாக ஈர்க்கப்படுகிறார்கள். தமிழ் நாட்டில் தொடர்ந்து ஆட்சியில் இருந்த திராவிட அரசுகளின் அரசியல் கோட்பாடுகளும், டில்லிக்கு காவடித் தூக்கும் அடிமைப் போக்கும், ஓட்டு அரசியலுக்காக கொள்கை தளத்திலிருந்து முற்றிலும் விலகிப் போய்விட்ட இன்றைய திராவிட அரசியல் கட்சிகளும், அவர்களின் ஊழல் பட்டியல்களும் ... இப்படியாகத் தொடரும் அனைத்து குற்றச்சாட்டுகளும் திராவிடக் கொள்கை எதிர்ப்பில் போய் நிற்கின்ற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய திராவிட அரசியல் கட்சிகளாகட்டும், பெரியாரிய இய‌க்கங்களாகட்டும் நடைமுறையில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். ஆனால் அந்த விமர்சனகளுக்கு எல்லாம் பொறுப்பு தந்தை பெரியார் மட்டுமே என்ற கண்மூடித்தனமான குற்றச்சாட்டு மிகவும் ஆபத்தானது!

மேலும் திராவிடன், திராவிட நாடு, திராவிட மொழிகள் என்ற கருத்துருவாக்கங்கள் தமிழன், தமிழ்நாடு, தமிழ்மொழிக்கு எதிரானதாக அடையாளப்படுத்துவதன் மூலம் தமிழினத்தின் இன்றைய உண்மையான எதிரி யார்? என்பதை அடையாளம் காட்டுவதில் பெரும் தவறிழைத்துவிட்டதை தமிழினம் இன்னும் அறிந்து கொள்ளவில்லை.

ஈழப் படுகொலைக்குப் பின் கூர்மையடைந்திருக்க வேண்டிய 'இந்தியன்' என்ற தமிழனின் அடையாள எதிர்ப்பு 'திராவிடன்' என்ற இன அடையாள எதிர்ப்பைக் காட்டுவதில் விரயமாகிக் கொண்டிருக்கிறது. தமிழனின் கையறுநிலைக்குக் காரணம் திராவிடம் பேசியது தான் என்ற விமர்சனப் போக்கு ஊடகங்களாலும் வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்திய ஆளுமை இந்த திராவிட - தமிழ் எதிர்ப்புகளில் குளிர்காய்ந்துக் கொண்டு தன் பார்ப்பன மேலாண்மையை சரியாகவே தக்க வைத்துக் கொள்கின்றது என்பதை தமிழினத் தலைவர்கள் உணர்ந்த மாதிரி தெரியவில்லை.

தமிழனைத் திராவிடன் என்றழைப்பது சரியா தவறா, தமிழன் திராவிடனா? இந்த சொல்லாராய்ச்சிகள், கல்வெட்டு ஆராய்ச்சிகள் ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் எந்த ஒரு மலையாளியாவது, தெலுங்கனாவது, கன்னடக்காரனாவது தன்னைத் திராவிடன் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறானா? தமிழன் மட்டும் ஏன் திராவிடன் என்று அடையாளப்படுத்திக் கொண்டான்? அதனாலேயே தமிழன் தாழ்ந்தான் என்று வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மேம்போக்காக மிகச் சரியானவை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. காவிரி நதி நீர் தர மறுக்கும் கர்நாடகமும், முல்லைப் பெரியாறு நதிநீர் தர மறுக்கும் கேரளமும், நீர் ஆதாரத்திற்காக தமிழன் தொடர்ந்து இவர்களுடன் போராடிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளும் திராவிட எதிர்ப்பு நிலைக்கு இன்னும் வேகமூட்டி இருக்கின்றன. இவை அனைத்தும் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த சென்னை மாகாணத்தின் சரித்திர வரலாற்றை மறந்தவைகளாகவே இருக்கின்றன.

குறிப்பிடத்தக்க அளவில் தெலுங்கர்களும் மற்றும் கன்னடர்களும் வாழ்ந்த சென்னை மாகாணத்தில் பார்ப்பன‌ர்களின் எதிர்ப்பணியாக உருவாகிய அமைப்புக்குப் பெயர் வைப்பதில் ஆரம்பத்திலிருந்தே விவாதங்கள் நடந்திருக்கின்றன. பார்ப்பன‌ர் அல்லாதோர் சங்கமாக ஒன்றுகூடி, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்க எண்ணிய சென்னை மாகாணவாசிகளுக்கு திராவிடர் என்ற அடையாளம் மட்டுமே பொருத்தமாக இருந்தது. அதுவே அக்காலக்கட்டத்தின் தேவையாகவும் இருந்தது என்பதை திராவிடம் குறித்து குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள் எண்ணிப் பார்க்க மறந்து விடுகிறார்கள்.

"தொடக்கம் முதலே பார்ப்பனர் அல்லாதாருக்குத் தங்களை எப்படி அழைத்துக் கொள்வது என்பதில் குழப்பம் இருந்ததற்கு அன்றிருந்த சென்னை மாகாணத்தின் புவியியல் அமைப்பும் பார்ப்பனர் எதிர்ப்பு மனநிலையுமே காரணம். சென்னை மாகாணத்தில் பல மொழிகள் பேசும் மக்கள் உள்ள நிலையில் மொழி அடிப்படையில் திரள்வது சாத்தியம் ஆகாமல் போய்விட்டது. எனவே அனைத்து மக்களுக்கும் பொதுவான பெயர் தேவைப்பட்டது. அப்போது அவர்களுக்கு உதவியது 1856ல் கால்டுவெல் அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம் எனும் ஆய்வுநூல்" என்கிறார் எழுத்தாளர் கவுதம சக்திவேல். (தமிழ் தேசியத்தின் தந்தை பெரியார். பக் 4).

கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வெளிவந்த பின் தென்னிந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் பல்வேறு நிலைகளில் ஆராயப்பட வேண்டியவை. கால்டுவெல்லின் ஆய்வு முடிவுகள் தமிழின எழுச்சிக்கு பெரிதும் ஊக்கமளித்தது என்பது அதன் நேரடி தாக்கம். அதன் எதிர்மறை தாக்கமோ வேறு சில விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை இன்றுவரை சமூகவியலாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை.

திராவிட மொழிகள் தனித்தியங்க வல்லன, ஆரியரின் வடமொழிக் கலப்பின்றி வாழ்ந்த மொழி, வாழும் மொழி, வாழும் இனம் என்று திராவிட மொழிக் குடும்பத்தை அடையாளப்படுத்திய ஆய்வு, திராவிட மொழி இனத்தின் சிறப்புகள் அனைத்தையும் இன்றுவரை தக்க வைத்துக் கொண்டிருக்கும் இனமாக, மொழியாக தமிழை மட்டுமே அடையாளப்படுத்த முடிந்தது. அதாவது திராவிட மொழிகளின் சிறப்பை தனித்துவத்தை உறுதி செய்த கால்டுவெல், அவை அனைத்தையும் கொண்டிருந்த தமிழ் மொழியை முன்னிலைப் படுத்தினார். தமிழ்ச் சமூகமும் அவருடைய ஆய்வுகளை உரத்த குரலில் பதிவு செய்தார்கள். விளைவு...? ஒரு குடும்பத்தில் தனி ஒருவனின் சிறப்பும் தனித்துவமும் முன்னிலைப் படுத்தப்படும்போது அதே குடும்பத்தைச் சார்ந்த அடுத்தவன் தன்னை இரண்டாம் நிலையில் வைத்து எண்ணிப் பார்க்கும் உளவியல் சிக்கலுக்குத் தள்ளப்படுகிறான். கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிக்காரர்களுக்கும் தங்களைத் திராவிட மொழிக் குடும்பத்தினர் என்று சொல்லிக் கொள்வதில் ஏற்படும் பெருமையை விட தமிழ் மொழி, தமிழர்களுக்கு அடுத்த நிலையில் தங்களை வைத்துப் பார்க்கும் உண்மையே சுட்டது; சிறுமைப் படுத்தப்பட்டதாக எண்ணவைத்தது.

கால்டுவெல்லின் ஆய்வு முடிவுகளை எதிர்ப்பதோ அல்லது முரண்படுவதோ முடியாத நிலையில் வெட்டிக் கொண்டு விலகிச் செல்வது எளிதாகவும் அவர்களுக்கு உகந்ததாகவும் இருந்தது. கன்னட, தெலுங்கு, மலையாள எழுத்துலக‌மாகட்டும், சிந்தனையாளர்களாகட்டும் இந்த விலகிச் செல்லும் மனப்பான்மைக்கு வித்திட்டார்களே தவிர, தங்கள் மொழியும், கலாச்சாரமும் திராவிட இனத்தின் கூறுகள் என்பதை முன்னிறுத்த முயலவில்லை. அம்மொழி பேசிய பொதுமக்களின் கருத்தும் வெட்டிக்கொண்டு விலகிச் செல்வதில் மட்டுமே ஆர்வம் காட்டியதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வெறுப்பு மனப்பான்மை தான் இன்றுவரை திராவிட இனத்தை அழிக்கும் உட்பகை. திராவிட நாடு கொள்கை, இந்திய நாட்டுக்கு ஒரு தேசமாக இல்லாத இந்திய தேசத்திற்கு என்றைக்குமே அச்சம் ஊட்டிய ஒரு கருத்துருவாக்கம். எனவே இந்த உட்பகையை வளர்த்தெடுப்பதில் இந்திய நடுவண் அரசு மிகக் கவனமாக இருந்தது, இருக்கிறது.

இசுலாமியர்களை இந்துக்களின் எதிரிகளாகக் காட்டி எப்போதும் இந்துத்துவ இந்தியாவைக் காப்பாற்றுவதில் கவனமாக இருக்கும் இந்திய அரசு நிறுவனத்திற்கு தென்னிந்தியாவில் இசுலாமிய எதிர்ப்பு என்ற நெருப்பில் குளிர்காய முடியவில்லை. இசுலாமிய அரசர்களின் படை எடுப்புகளால் வட இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகளின் அளவுக்கு தென்னிந்தியா பாதிக்கப்படவில்லை என்பதையும் நினைவுகூர வேண்டும். திராவிட இனத்தார் ஒன்றுபடுவது என்பது, இந்தியா ஒரே நாடு என்ற இந்திய அரசின் கொள்கைக்கு ஆபத்தானது. மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், நிலப்பரப்பு வகையிலும் ஓரினம் ஒன்றுபடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். எப்போது வேண்டுமானாலும் அது நடக்கலாம் என்பதால் திராவிட நாடு கொள்கைக்கு எதிராக இருப்பதில் இந்திய நடுவண் அரசை ஆண்ட காங்கிரசும், பிஜேபியும் ஒருமித்தக் கருத்துக் கொண்டவர்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

1953ல் ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமானது. மாநில எல்லைகளை மறு சீரமைப்பு செய்ய அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு 1953 டிசம்பரில் நீதிபதி பாஷல் அலி தலைமையில் கமிட்டி ஒன்றை ஏற்படுத்தினார். திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தத்தம் மாநில எல்லைப் பரப்புகளுக்காக போராடினார்கள். அதாவது ஒருவருக்கு ஒருவர் வெளிப்படையாக எதிரணியில் நின்றார்கள். எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்திற்கும் அவர்கள் கேட்டதெல்லாம் கொடுக்கப்படவில்லை, தமிழ் மாநிலமும் பல இடங்களை இழந்ததும், சில இடங்களை தக்க வைத்துக் கொண்டதும் நடந்து முடிந்த வரலாறு. இந்த மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட நிலையில் ஒட்டு மொத்தமாக திராவிட நாடு என்ற கொள்கை கேள்விக்குறியானதை எவரும் மறுக்க முடியாதுதான்.

"இப்போது எது திராவிட நாடு?" என்ற கேள்வியை தந்தை பெரியார் முன் வைத்தார்கள். "எல்லாம் பிரிந்தப் பின் இப்போது எஞ்சி நிற்கும் இன்றைய சென்னை மாகாணம் தான் புதிய திராவிட நாடு" என்று தீர்க்கமாகச் சொன்னவர் தந்தை பெரியார்.

"இதற்கு முன் (அதாவது 1956க்கு முன்) இருந்த சென்னை மாகாணத்தை நான் திராவிடநாடு என்று சொன்னேன். அப்பொழுது மலையாளம், கன்னடம், ஆந்திரம் பிரிந்திருக்கவில்லை. வெள்ளையன் இந்த நாட்டைவிட்டுப் போய்விட்ட பிறகு வட நாட்டானும் இந்த நாட்டுப் பார்ப்பானும் சேர்ந்து கொண்டு இனிமேல் நமக்கு ஆபத்து என்று கருதி நான்கு பிரிவுகளாக வெட்டிவிட்டார்கள். இப்பொழுது நம்முடன் மலையாள, கன்னட நாடுகளின் சம்பந்தமில்லாமல் தனித்தமிழ் நாடாக ஆகிவிட்டோம். ஆகவே இதை இப்போது "தமிழ்நாடு" என்று சொல்லலாம்" (விடுதலை 29.08.56) என்றார் தந்தை பெரியார்.

திராவிட நாடு திராவிடருக்கே என்ற விடுதலை ஏட்டின் வாசகங்கள் மாறி தமிழ்நாடு தமிழருக்கே என்று அச்சானது. கடைசிவரை தமிழ்நாடு தமிழருக்கே என்ற கொள்கையில் எவ்விதமான மாற்றமோ சமரசமோ செய்து கொள்ளவில்லை தந்தை பெரியார்.

அப்படியானால் திராவிடர் கழகம் என்ற பெயரை மாற்றி தமிழர் கழகமாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கலாமே என்ற கேள்வி எழும். தமிழரசு கழகம் என்ற பெயரில் ஏற்கனவே மா.பொ.சி ஆரம்பித்திருந்தது ஒரு காரணம் என்றால் பிறிதொரு வலுவான காரணம், தமிழன் என்ற அடையாளம் தமிழ் நிலப்பரப்பில் வாழும் பார்ப்பனர்களையும் உள்ளடக்கியதாகவே இருக்க முடியும். பார்ப்பனர்களை விலக்கி வைப்பது என்பது பார்ப்பன இன விரோதப்போக்கால் அல்ல. பார்ப்பனர்களின் சாதியக் கோட்பாட்டால் தான்.

பெரியாருக்கு ஆரம்ப காலத்திலேயே இது குறித்த அனுபவம் ஏற்பட்டது. அதுவும் பெரியார் காங்கிரசை விட்டுப் பிரிவதற்கு பெரிதும் காரணமாக இருந்த சேரன்மகாதேவி குருகுலத்தில் நிலவிய தீண்டாமையை எதிர்த்த பெரியாரை கருத்தியல் ரீதியாக எதிர்க்க திராணியற்ற பார்ப்பன அறிவுஜீவிக் கூட்டம் அவரைத் தமிழர் அல்லர் என்று சொல்லி விலக்கி வைத்து இழிவுபடுத்த முன்வந்தது. சேரன்மகாதேவி பார்ப்பனக் கொடுமையை முதன்முதலில் வன்மையாகக் கண்டித்து எழுதிய டாக்டர் வரதராஜலு நாயுடு தம் 'தமிழ்நாடு' இதழில் 12/10/1924ல் எழுதிய கட்டுரைக்கு எதிராக காங்கிரசில் பிரச்சனையை உருவாக்கிய வ.வே.சு. அய்யர் "தமிழ்நாட்டு விசயத்தைப் பற்றி ஆந்திரத் தேசத்தாரான ஒரு நாயுடுவும் (டாக்டர் வரதராஜுலு நாயுடு) கன்னடத் தேசத்தாரான ஒரு நாயக்கரும் (ஈ.வெ.ரா) கிளர்ச்சி செய்வது நமக்கு வெட்கமாக இல்லையா? ஆதலால் அவர்களது கிளர்ச்சியை ஆதரிக்கக் கூடாது" என்று சொன்னாராம்.

எந்தப் பிரச்சனையை அய்யர் எப்படி திசை மாற்றி இருக்கிறார்? என்பதைப் புரிந்து கொண்டால் திராவிடன் என்ற அடையாளம் தொடர்ந்ததன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும். தமிழர் என்ற அடையாளத்திற்குள் பார்ப்பனர்கள் உள்நுழைய முனைந்ததால்தான், பெரியார் 'திராவிடர்' என்ற இன அடையாளத்தை உயர்த்திப் பிடித்தார்.

திராவிட நாடு பேசிய அமைப்புகளும் தலைவர்களும் தத்தம் கருத்துகளை தமிழ் மொழியில் மட்டுமே எழுதி வந்தார்கள். அவர்களின் எழுத்துகள் பிற திராவிட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற ஓர்மையும் அவர்களிடம் இல்லை. திராவிட மொழி இன மக்களை கலை இலக்கிய தளத்தில் ஒன்றிணைக்கும் முயற்சிகளும் நடந்ததாகவோ அதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. சென்னை மாகாணத்தில் வாழ்ந்த கன்னடர், தெலுங்கர், மலையாளிகளின் திராவிட அடையாளம், அதிகாரத்தை பார்ப்பனர்களிடமிருந்து தங்களுடையதாக்கிக் கொள்ளும் அரசியலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சமூக தளத்தில் இன ஒற்றுமைக்காக கொடுப்பதில் ஈடுபாடு காட்டவில்லை. திராவிடம் பேசிய தமிழர்களும் அம்முயற்சிகளைச் செய்யத் தவறி விட்டார்களோ என்ற அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பெரியார் திராவிடம் பேசியதால் தான் தமிழ்நாடு தன் நிலப்பரப்புகளை இழந்தது என்கிறார்கள் சிலர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அன்றைய சென்னை மாநிலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் காங்கிரசார். டில்லியில் நடுவண் அரசும் காங்கிரசுதான். ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டிய குற்றச்சாட்டுகளுக்கு திராவிட கட்சிகளோ, தந்தை பெரியாரோ எப்படி காரணமாக முடியும்? எங்காவது அவர்கள் எதிராக குரல் கொடுத்தோ, பேசியதோ இல்லை.

அடுத்து, தமிழ்த் தேசியம் பேசியவர்கள் சமூக நீதித் தளத்தில் எந்த இடத்தில் நின்றார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகள் சாதியம் குறித்து என்ன கருத்துகளை உதிர்த்தார்? ஒடுக்கப்பட்ட சகோதரர்களை குளித்து விட்டு தூய்மையுடன் கோவிலுக்கு வரச் சொன்னார்! குளத்திலும் கிணற்றிலும் தீண்டாமையை வைத்துக் கொண்டு குளித்துவிட்டு வரச்சொல்லும் தூயத்தமிழ்வாதிகளை என்ன சொல்வது?

தமிழரசு கழகம் ஆரம்பித்த மா.பொ.சி. அவர்கள் சமஸ்கிருத மேலாண்மையை ஏற்றுக் கொண்டவர் என்பதுடன் அவர் எப்போதும் தனித்தமிழ் நாடு கேட்டவரில்லை. தனித்தமிழ் நாடு கோரிக்கை தமிழரசு கழகத்தின் நோக்கமும் அல்ல என்பதை அவர் இந்து நாளேட்டிற்கு எழுதிய கடிதம் உறுதி செய்துள்ளது. அக்கடிதத்தில் மேலும் இம்மாதிரி பிளவு முயற்சிகளை எதிர்ப்பதற்காகவே தமிழரசு கழகம் தொடங்கப்பட்டது என்றும் சொல்லி இருக்கிறார்.

இன்னொருவர் சி.பா. ஆதித்தனார். தமிழ்ப் பேரரசு என்று பேசினார். ஆழிசூழ் தமிழ்ப் பேரரசு என்று கனவு கண்டார். அவரும் கடைசிவரை தன் கொள்கையில் மாறாமல் தமிழ்த் தேசியவாதியாக இல்லை. அரசியல் கட்சியில் இணைந்தார். ஆழிசூழ் கனவுகள் கடல் அலையில் சிதைந்த மண்குடிசைகளாகிப் போனது.

தமிழன் என்று தன் பத்திரிகைக்குப் பெயர் கொடுத்த சிந்தனையாளர் அயோத்திதாசர், சுயசாதி அபிமானத்தினால் ஒட்டுமொத்த தமிழர்களையோ, ஏன் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களையோ இணைக்க முடியாத யதார்த்த நிலையை எவராலும் மறுக்க முடியாது.

திராவிட அவதூறுகள் பற்றி பட்டியலிடுபவர்கள் தேவதாசிகள் ஒழிக்கப்பட்டதால் தாய்வழிச் சமூகம் சிதைக்கப்பட்டதாகவும், தமிழரின் நடனக்கலை அழிக்கப்பட்டதற்காகவும் வருத்தப்படுவது பெரியாரின் தமிழ்த் தேசியத்தை இவர்கள் எதிர்ப்பதன் நுண் அரசியலையும் சேர்த்தே புரிய வைத்துள்ளது.

தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் மொழியை மட்டுமோ அல்லது தமிழ் மண்ணை மட்டுமோ முன்னிலைப் படுத்திய தமிழ்த் தேசியம் அல்ல. தமிழ் மக்களை முதல் நிலையில் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியம். பெரியாரின் தமிழ்த் தேசியக் கோட்பாட்டில் சாதிய எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு இரண்டுமே இரு கண்கள். இந்தக் கோட்பாட்டில் தந்தை பெரியார் கடைசிவரை எவ்வித சமரசமும் செய்து கொள்ளவில்லை. பெரியாரை எதிர்ப்பவர்களுக்கு அவருடைய இந்த சமநீதிக் கோட்பாடு தான் ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்கிறது.

திராவிட மொழிகளின் தலையாய ஒருமைத் தன்மையானது தாழ்த்தப்பட்ட சாதிகளையும் உள்ளடக்கிய இன ரீதியான ஒருமைத் தன்மையையும் மெய்ப்பிக்கிறது என்ற கால்டுவெல்லின் சமூகவியல் ஆய்வின் முடிவு சாதியம் கெட்டிப்பட்டுப் போன தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்புடையதாக இல்லை. அதனால் தான் கால்டுவெல்லை மேடையில் முழங்கியவர்கள் முதல் பல்கலைக் கழகத்தில் கற்பித்த பேராசியர்கள் வரை கால்டுவெல்லின் ஒப்பிலக்கணத்தை மறுபதிப்பு செய்யும்போது "தென்னிந்தியாவைச் சார்ந்த பறையர்கள் திராவிடர்களா?" என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த கட்டுரையையும் அக்கட்டுரைக்கான தரவுகளையும் நீக்கிவிட்டு மறுபதிப்பு செய்து வந்தார்கள். ஓர் ஆய்வுக்கட்டுரையில் பறையர்களும் திராவிடர்கள் தான் என்ற உண்மையை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள், பெரியார் தமிழ்த்தேசியத்தின் சாதி எதிர்ப்பையும் பெண்ணடிமைத்தன எதிர்ப்பையும் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். பெரியாரை தமிழ்த் தேசியத்தின் எதிரியாக சித்தரிப்பவர்களின் அடிப்படை நோக்கத்தைப் புரிந்து கொள்வதும், புரிய வைப்பதும் சமூக அக்கறை கொண்டவர்களின் கடமையாக இருக்கிறது.

- புதிய மாதவி, மும்பை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

20 comments

20
குருநாதன் சிவராமன்
பெரியாரின் ‘திராவிட’ கருத்தியலை ஏற்றுக் கொள்ளும் அமைப்பினர், அவர் முன்வைத்த தனித்தமிழ்நாடு என்ற இலக்கை தங்களது வேலைத் திட்டமாக இன்னும் ஏன் அறிவித்துச் செயல்படவில்லை???
Periyasamy
திராவிட அரசியல் இல்லாத பிற தென் மாநிலங்களில், குறிப்பாக கர்நாடகத்திலும் கேரளத்திலும், இன உணர்வும் மாநில உணர்வும் கொடி கட்டி பறக்கின்றன. மலையாளிகளின் இன உணர்வையும் மாநில வெறியையும் பற்றி சொல்லவே தேவையில்லை. கர்நாடகத்தில் ஊருக்கு ஊர் கன்னடக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. கடந்த அரை நூற்றாண்டு கால திராவிட இயக்க அரசியல் மற்றும் திராவிட கட்சிகளின் ஆட்சி ஆகியவற்றால் தமிழகத்தில் தமிழ் உணர்வு வளரவில்லை. மாறாக சாதி வெறியும் (குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம்) கலவரங்களும் தான் வளர்ந்துள்ளன. இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான மக்களுக்கு தமிழர் என்னும் வார்த்தை வேடிக்கையான ஒரு வார்த்தையாகவே இருக்கிறது. மாநிலத்தின் முக்கிய நகரங்களில் மட்டும் அதுவும் ஏதோ ஒரு மூலையில் வெறும் இருநூறு முன்னூறு பேர்களோடு குசு விடுவது மாதிரி தான் தமிழ் அமைப்புக்கள் பொதுக்கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு மாநில உணர்வும் இன உணர்வும் அற்ற கழிசடை உயிர்களாக தமிழகத்து மக்கள் திராவிட அரசியலால் மாறிப்போய் விட்டார்கள். இந்த திராவிட அரசியல்வாதிகளால் ”பார்ப்பான், பார்ப்பான்” என தூற்றப்பட்ட தமிழக பார்ப்பனர்கள் அழிந்தா போய்விட்டார்கள்? உலகளவில் நோபெல் பரிசு வாங்கும் அளவுக்கு அவர்கள் உயர்ந்து இருக்கிறார்கள். அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருக்கும் பல கணிப்பொறி நிறுவனங்கள் தமிழக பார்ப்பனர்களால் நடத்தப்படுபவை. இந்த நிறுவனங்களின் மூலம் இவர்கள் மாளாத பொருள் குவித்து செல்வாக்குடன் மிக உன்னதமான இடத்தில் உள்ளார்கள். சென்னைக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பறக்கும் விமானங்களில் பார்ப்பனர்கள் தான் அதிகம் பயணம் செய்கிறார்கள். இந்தியாவில் மாநில அரசுகளை ஒப்பிடும் போது மத்திய அரசு சர்வ வல்லமையும் அதிகாரங்களையும் கொண்டது. மத்திய அரசு நிறுவனங்களில், அதுவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அதிகாரக்கண்ணிகளில், நிறைய தமிழக பார்ப்பனர்கள் வீற்றிருக்கிறார்கள். ஆகையால் தான் இவர்கள் நினைப்பது இந்த நாட்டில் நடக்கிறது. தமிழகத்திலே கூட தனியார் நிறுவனங்களில் குறிப்பாக பண்ணாட்டு நிறுவனங்களில், முக்கியமான அதிகாரம் மிகுந்த பொறுப்புகளில், பார்ப்பனர்கள் தான் இருக்கிறார்கள். தமிழ் நாடு வெளியுலகில் இருப்பவர்களால் அடையாளம் காணப்படும் போது புகழ் பெற்ற தமிழக பார்ப்பனர்களை கொண்டே அடையாளம் காணப்படுகிறது. திராவிடம் என்னும் போலி அரசியலால் தமிழக அரசியல் மற்றும் சமுதாய வாழ்விலிருந்து (மட்டும்) பார்ப்பனர்கள் ஓரம் கட்டப்பட்டு இருக்கலாம். ஆனால் இன்றைக்கும் தமிழகத்தில் அறிவுஜீவி வர்க்கம் என்றால் அவர்கள் தான். மேற்கத்திய நாடுகளை சேர்ந்த அறிஞர்கள் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் குறித்து அறிந்துகொள்ள வேண்டுமானால் கூட பார்ப்பன அறிஞர்களை தான் பெரும்பாலும் அணுகுகிறார்கள். திராவிட இயக்கத்தால் தமிழகத்தின் அறிவுஜீவி தளத்தில் இருந்து பார்ப்பனர்களை அகற்றவே முடியவில்லை. திராவிட இயக்கத்தால் தமிழர்கள் வளர்ந்தார்களா அல்லது பார்ப்பனர்கள் தேய்ந்தார்களா என்பது மிகப்பெரிய விவாதத்துக்குரிய விடயம். இப்போது தமிழகத்தில் இருக்கும் அறிவுஜீவிகள் பெரும்பாலும் பார்ப்பன அல்லது கம்யூனிச பின்புலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு சில அறிவுஜீவிகள் மலையாள பின்புலம் கொண்டவர்கள். தமிழ் பின்புலம் கொண்ட அறிவுஜீவிகள் தமிழ் நாட்டிலேயே மிகவும் குறைவு. இதற்கு காரணம் தமிழகம் கல்வித்துறையில் தேங்கிய குட்டையாக இருப்பது தான். இங்கு இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் திராவிட அரசியல்வாதிகளின் எடுபிடிகளும் கைத்தடிகளும் தான் நிறைந்திருக்கிறார்கள். அதனால் தான் இங்கு கல்வி சூழ்நிலை (பள்ளிக்கல்வி ஆனாலும் உயர்கல்வி ஆனாலும்) தரமற்றதாகவே இருக்கிறது. இந்த தரமற்ற கல்வி சூழ்நிலையின் காரணமாக இந்திய அளவிலும் உலகளவிலும் போட்டி போடக்கூடிய மாணவர்களும் அறிஞர்களும் தமிழகத்தில் உருவாகவே இல்லை. தேசிய அளவிலான IIT, IIM, AIIMS போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்ப் பின்புலம் கொண்ட மாணவர்கள் மிகவும் சொற்பம். IAS அதிகாரி போன்ற பதவிகளிலும் இதே நிலை தான். மத்திய அரசு நிறுவனங்களில் (அவை தமிழகத்தில் இருந்தாலும்) இதே லட்சணம் தான். இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார்களாம்!. மருத்துவ மற்றும் இஞ்சினியரிங் பட்டதாரிகள் வேண்டுமானால் வதவதவென்று கறிக்கோழிகளை போல் உருவாக்கப்பட்டு வெளியே வருகிறார்கள். இந்த இட ஒதுக்கீட்டு அரசியல் காரணமாக துறை சார்ந்த நுண்ணறிவு, அந்த துறையில் வேலை செய்ய தேவைப்படும் தகுதி ஆகியன பின் தள்ளப்பட்டு ””என் சாதியினர் இத்தனை சதவீதம் இருக்கிறார்கள். அதனால் இத்தனை சதவீதம் ஒதுக்கீடு செய்”” என்று வெட்கமே இல்லாமல் கேட்கும் நிலை தான் தமிழகத்தில் உள்ளது. உலக அளவில் பேர் சொல்லும்படியான ஒரு புத்திஜீவி கூட இந்த இடஒதுக்கீட்டு அரசியலால் உருவாகவில்லை.
திராவிட இயக்கத்தில் எல்லாம் பாமரத்தனம் (மேடை நாடகத்துக்கும் சினிமாவுக்கும் இடையே உள்ள அடிப்படை வித்தியாசம் தெரியாமல் கதை வசனம் எழுதியது மட்டுமல்லாமல் இன்றளவும் அதை நினைத்து புளகாங்கிதம் வேறு). வீதிக்கு நான்கு பிராந்திக்கடை. கூட்டத்துக்கு ஆள்சேர்க்க குவார்ட்டரும் பிரியாணியும். அனைத்தும் இலவச மயம். ஈ.வே. ராமசாமி தொடங்கிய திராவிட இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்ததோடு அதன் பின்னால் போன தமிழ் மக்கள் மிகவும் மோசம் போயிருக்கிறார்கள். காவிரி பிரச்சினை, ஒகெனக்கல் எல்லை தகராறு, முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, தமிழக மீனவர்கள் நாள் தோறும் தாக்கப்பட்டு சொத்துக்களுக்கும் உயிருக்கும் சேதம் உண்டாக்கப்படுவது, ஈழத்தமிழரின் பேரழிவு ஆகிய எல்லா பிரச்சினைகளும் இந்த திராவிட இயக்கத்தினரின் கொடுப்பினை. சுற்றியுள்ள மாநிலங்களும் நாடுகளும் தமிழர்களை எட்டி எட்டி உதைப்பதற்கும் ஏளனப்படுத்துவதற்கும் இந்த திராவிட இயக்கத்தினரின் அறுபது ஆண்டு கால அரசியலே காரணம். கடந்த ஆயிரம் ஆண்டுகளில் பார்ப்பனர்கள் செய்த தீமைகளை விட அதிக தீமைகளை இந்த திராவிடம் அறுபது ஆண்டுகளில் தமிழ் பேசும் மக்களுக்கு செய்திருக்கிறது.
இலங்கை அரசின் அரசிதழ் (Gazette) வழங்கும் தகவலின் படி 2008-ம் ஆண்டில் வன்னி பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகை நான்கு லட்சத்து இருபத்தொன்பதாயிரத்து ஐம்பத்தொன்பது. 2009-ல் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்ட வன்னி மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து முன்னூற்றி என்பது மட்டுமே. ஒட்டு மொத்தமாக ஒரு லட்சத்து நாற்பத்தாறாயிரம் தமிழர்கள் வெறும் நான்கு மாதம் பதினெட்டு நாட்களில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஒரு லட்சத்து நாற்பத்தாறாயிரம் மக்களில் ஒரு லட்சம் பேர் சாதாரண பொது மக்கள். இத்தனை அநியாயம் நடந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் எழுச்சி இல்லை. பல ஆயிரம் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாக மாண்டு கிடந்த போதிலும் தமிழ் நாட்டு மக்கள் தங்கள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தான் ஓட்டு போட்டார்கள். அந்த நேரத்தில் திராவிடம் தில்லியில் தன் குடும்பத்துக்கு மந்திரி பதவி கேட்டு பேரம் பேசிக்கொண்டு இருந்தது. இப்போது இத்தனை லட்சம் பேர் செத்தது கூட வெளியுலகுக்கு தெரியப்படுத்தாமல் மறைக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை வெளியுலகுக்கு தெரியப்படுத்தப்பட்டால் தான் அந்த மக்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது அரசியல் உரிமையை பெற்று கொடுக்க வழி ஏற்படும். ஆனால் இங்கே அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. டெசோ மாநாடு மாதிரியான பித்தலாட்டம் தான் நடந்து வருகிறது.
தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையுள்ள மாநிலம். இந்த மாநிலத்தில் பாயக்கூடிய பெரும்பாலான ஆறுகளின் தோற்றுவாய் சுற்றியுள்ள மாநிலங்களில் அமைந்து இருப்பது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகத்துக்கு வரவேண்டிய பல பகுதிகள் திராவிட கட்சிகளின் பாராமுகம் காரணமாக கைவிட்டு போனதால் தான் இந்த நிலை. இதை சாக்காக வைத்து அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டை தங்கள் பிடிக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செய்ய முயற்சிக்கின்றன. சுற்றியுள்ள மாநிலங்களின் அடாவடித்தனத்தால் தமிழகம் நீர் முற்றுகைக்குள் சிக்கி தவிக்கிறது. அண்டை மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் அவ்வப்போது தாக்கவும் படுகிறார்கள். இது இப்படி இருக்கையில் தமிழகத்தில் இருக்கும் குறைந்தபட்ச நீராதாரங்கள் எந்த லட்சணத்தில் பராமரிக்கப்படுகின்றன என்பது இன்னொரு கேள்வி. கர்நாடகம் நீர் மிகை மாநிலம் என்றாலும் அங்கிருக்கும் ஆறுகள், ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் ஆகியன அம்மாநில பொதுப்பணித்துறையால் மிகவும் நேர்த்தியாக பராமரிக்கப்படுகின்றன. ஆனால் இங்கே எல்லாம் ஊழல் மயம். தாமிரபரணி ஆறு தமிழகத்திலேயே உற்பத்தியாகி தமிழகத்திலேயே ஓடக்கூடிய ஆறு. இன்று அதன் கதியை பார்ப்பவர்கள் ரத்தக்கண்ணீர் வடிப்பார்கள். இருக்கக்கூடிய நீர்நிலைகளில் சாயப்பட்டறை உள்ளிட்ட தொழிற்சாலைகளின் கழிவுகள் குற்றவுணர்வே இல்லாமல் கலக்கப்பட்டு விளைநிலங்கள் மலடாக்கப்படுகின்றன. திராவிட அரசியல்வாதிகளின் புண்ணியத்தாலும் அரசு இயந்திரத்தின் அலட்சியத்தாலும் நீர்நிலைகள் தூர்க்கப்பட்டு ரியல் எஸ்டேட்கள் முளைக்கின்றன. கேரளாவிலும் ஓரளவுக்கு கர்நாடகத்திலும் ஆற்று மணலை அள்ளுவதற்கு தடை உண்டு. ஆனால் தமிழ்நாட்டின் ஆறுகளில் இருந்து கடுமையான முறையில் சுரண்டப்படும் மணல் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இங்கே இருக்கும் கல், மண் எல்லாவற்றுக்கும் இதே கதி தான். இன்னும் இருபது ஆண்டுகளுக்கு பிறகான தமிழகத்தின் நிலையையும் தமிழர்களின் கதியையும் நினைத்தால் குலை நடுக்கம் தான் ஏற்படும்.
செம்மொழி தமிழ் மாநாடு என்னும் கூத்தின் போது நடந்த அராஜகத்தையும் மோசடியையும் கண்டு வெம்பிய ஜப்பானிய தமிழறிஞர் பேராசிரியர் கரஷிமா அவர்கள் “Tamil Nadu is suffering from intellectual vacuum” என சொன்னார். அகில இந்தியாவிலேயே, உலக அளவில் மதிக்கப்படும் படித்தவர்களையும் அறிவுஜீவிகளையும் அதிகம் கொண்ட மாநிலங்கள் மேற்கு வங்காளமும் கேரளாவும். வறுமையும் பிற்போக்குத்தனமும் மலிந்த இந்தி பேசும் மக்களும் அறிவுஜீவிகளை அதிகம் கொண்டிருப்பதில் பின் தங்கியவர்கள் அல்லர். தத்தம் மாநிலங்களின் மீதும் மக்களின் மீதும் பற்றும் பாசமும் வைத்துள்ள இந்த புத்திஜீவிகள் வெளியிடும் கருத்து உலகளவில் எடுபடுவதில் வியப்பில்லை. இந்த முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம். இந்த விவகாரம் வெடித்த போது இந்திய மற்றும் சர்வதேசிய ஊடகங்களில் கேரளத்துக்கு ஆதரவான செய்திகளும் விமர்சனங்களுமே வெளிவந்தன. சென்னையில் இருந்து வெளியாகும் “த ஹிண்டு” மற்றும் “டைம்ஸ் ஆஃப் இண்டியா” ஆகிய நாளேடுகளில் கூட இதே நிலைமை தான். தமிழகத்தின் பக்கம் நியாயமும் தர்மமும் இருந்தாலும் அதன் தலைநகரத்தில் செயல்படும் ஆங்கில ஊடகங்களே அவற்றை கண்டு கொள்ளாததற்கு என்ன காரணம்?. அது மிக எளிமையானது. சென்னையில் செயல்படும் ஆங்கில ஊடகங்களில் கூட மலையாளிகள் தான் (பார்ப்பனர்களுக்கு அப்புறம்) செல்வாக்கு செலுத்துகிறார்கள். ஐம்பது ஆண்டுகால திராவிட இயக்கத்தின் சாதனைகளில் இதுவும் ஒன்று. அது மட்டுமல்ல. சென்னையில் “ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்” என்னும் இதழியல் கல்லூரி சசிகுமார் என்னும் கேரளத்தவரால் தொடங்கப்பட்டு “த ஹிண்டு” வகையாறாக்களால் பராமரிக்கபடுகிறது. சர்வதேச தரம் வாய்ந்த இந்த கல்லூரியில் மலையாளிகளும் பார்ப்பனர்களுமே படிக்கிறார்கள். (தமிழர்கள் ஏன் இந்த கல்லூரியில் படிக்கவில்லை என கேட்காதீர்கள், அது இன்னொரு திராவிட இயக்க சாதனை). இந்த கல்லூரியில் படித்து வெளிவருபவர்கள் உள்ளூர் ஊடகங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள் வரை பணிக்கு சேர்கிறார்கள். திராவிட இயக்கத்தினரின் இடஒதுக்கீட்டு அரசியல் தேசிய மற்றும் சர்வதேசிய அரங்குகள் மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றில் தமிழ்நாட்டுக்காகவும் தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கவும் வாதாடவும் தகுந்த புத்திஜீவிகளை உருவாக்கவேயில்லை. முல்லைப்பெரியாறு அணை விவகாரம் பற்றி ஜப்பானிய மொழி அல்லது சீன மொழி பத்திரிக்கைகளில் கூட கட்டுரை எழுதி ஆதரவு தேட கேரளத்தில் ஆட்கள் உண்டு. இங்கே தமிழ்நாட்டில் யார் இருக்கிறார்கள்?.
தமிழர்கள் எப்போதுமே “Labour Class People” ஆகவே இருகிறார்கள் (கூலிக்கார பசங்க!). அந்தக்காலத்தில் இங்கிருந்து இலங்கை, மலேசியா, மொரீசியஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கூலி வேலை செய்ய அடிமைகளாக போனார்கள். இப்போது தகவல் தொழில்நுட்ப துறை கூலிகளாக உள்ளார்கள். நிறைய பேர் படித்துள்ளார்கள். எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறார்கள். பலர் கார் வைத்திருக்கிறார்கள். சிலர் நேர்த்தியான வீடுகளை கட்டியுள்ளார்கள். அவ்வளவு தான். மும்பை தாராவி சேரியில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். மலேசியாவில் கோலாலம்பூர் விமானநிலையத்தில் பெரும்பாலான கக்கூசுகளை நடத்தி பராமரிப்பவர்கள் தமிழர்கள். இலங்கையில் தோட்ட வேலை செய்வது படிப்பறிவு இல்லாத மொடாக்குடி தமிழர்கள். தில்லியில் வீட்டு வேலை செய்வது தமிழ்ப்பெண்கள். எல்லாம் “Unskilled Labour”. மலையாளிகள் என்ன தான் வறுமையான பின்னணியில் இருந்து வந்தாலும் குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பாவது தேறி தட்டச்சு போன்ற எதையாவது கற்று வைத்திருப்பார்கள் (skilled labour). கேரளத்தில் ரயில்களிலும் மற்ற பொது இடங்களிலும் பிச்சை எடுப்பவர்கள், எஸ்டேட்களில் கூலி வேலை செய்பவர்கள், வீடு வீடாக போய் கக்கூசு கழுகுபவர்கள், அங்கு பொது இடங்களில் மலஜலம் கழிப்பவர்கள் யாவரும் தமிழர்களே.
அதிகாரத்திலோ அதிகாரத்துக்கு நெருக்கமாகவோ தமிழர்கள் எப்போதும் இருந்ததில்லை. இப்போதும் அப்படியே. “திராவிடம்” , “திராவிடர்”, “சமூக நீதி”, “இட ஒதுக்கீடு”, “பார்ப்பனர் சூழ்ச்சி”, “ஆரியர் ஆதிக்கம்”” ஆகிய வார்த்தை ஜாலங்களை வைத்து கடந்த அறுபது ஆண்டு காலமாக தமிழ் பேசும் மக்களை காட்டியும் கூட்டியும் கொடுத்து அவர்களின் வாழ்வு, வளம் ஆகியவற்றை ஒரு கும்பல் சூறையாடி வருகிறது. இன்னும் எத்தனை காலத்துக்கு தமிழ் மக்களின் தலையில் இந்த கும்பல் மிளகாய் அரைக்குமோ தெரியவில்லை.
புதிய காற்று
பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரில் பிரிட்டீஷ் ஏகாதியபத்தியத்தை ஆதரித்து சேவை செய்த ஒருவர் எப்படி , ஒரு தேசிய இனத்தின் தலைவராக இருக்கமுடியும் ? ஏகாதியபத்தியத்தின் சுரண்டலை ஆதரித்துக் கொண்டே ஒரு தேசத்திற்கும் , தேசிய இனத்திற்கும் விடுதலை என்று பேசுவது மோசடியல்லாமல் வேறென்ன ? அப்போது பிரிட்டன் , இப்போது அமெரிக்கா அவ்வளவுதான்.... அப்போது பெரியார் என்ன செய்தாரோ அதையேதான் இப்பொது கருணாநிதியும் செய்கிறார்....அந்த வகையில் கருணாநிதி பெரியாரின் தலைமகனே.......
Suresh Barathy
Dear Mr. Periyasami,
Greetings!
I am accepting your moreover points. It is a very good.
These points should discussed in wide range.
Diravidam is a good concept for certain issues. It is not a full solution for whole Tamil Community.
The bad evilness of "Brahminiam" also entered in to Diravidam in later stage once they got ruling power. EVR having many good qualities and he followed on it. Untouchability is very frutal evil appeared against Daliths in Darmapuri. What this Dravida parties role against "Vanniyars"? What is Dravida parties role in "Uthapuram" against upper community.

Dravidam concept is good but it is practiced very uncivilized manner in politically and socially.

- Suresh Barathy
naan dhiraavidanalla
தமிழரின் இன்றைய இழிகேடுகளுக்கு ,'திராவிடம்'என்னும் நச்சுப்பூண்டு தமிழகத்தில் பற்றிப் படர்ந்ததும் ஒரு பெரிய காரணம்.திராவிடக் கருத்தியலால் தமிழன் தன் அடையாளத்தை இழந்தான்;இன ஒர்மையை இழந்தான். கன்னடனுக்கு ஒரு கன்னடநாடும் ,தெலுங்கனுக்கு ஒரு தெலுங்குநாடும்,மலையாளிக்கு ஒரு மலையாளநாடும் இருக்கையில், தமிழகம் மட்டும் தமிழ்நாடாக இல்லை . அது திராவிடநாடாகக்கெட்டு , தெலுங்கரும் -கன்னடரும்-மலையாளிகளும் அடுத்தடுத்து வந்து ஆளவும் சுரண்டவும் வழிவகுத்துள்ளது. ----தமிழர் வரலாற்று பேரறிஞர் குணா.
puthiyamaadhavi
திரு பெரியசாமி அவர்களுக்கு,
நீங்கள் எழுதியிருக்கும் அனைத்து கருத்துகளுடனும் எனக்கும் உடன்பாடு தான். பெரியாருக்கு அடுத்தப்படி யார்? என்ற கேள்விக்கு பெரியாரே சொன்ன பதில் "என் எழுத்துக்கள்" என்பதுதான். ஆனால் தமிழகத்தின் சூழல் யார் யாரை எல்லோமோ திராவிட இயக்க தலைவர்களாக காட்டிக் கொண்டிருக்கிறது. இன்றைய திராவிட அரசியலில் அறிவுப்பஞ்சம் , இலக்கியப்பஞ்சம் எல்லாம் இருப்பதை அறிவேன். ஒரு பக்கம் திராவிட அரசியல் மேடைகளில் வெறும் அலங்கார வார்த்தைகளில் தமிழர்களை மயக்கிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் இவர்கள் யாரை எல்லாம் விமர்சித்தார்களோ அவர்கள் வெகு சாமார்த்தியமாக நவீன இலக்கியத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு அசைக்க முடியாத இலக்கிய வட்டத்தை உருவாக்கி விட்டார்கள்

கனிமொழிக்கு கூட இந்த நவீன இலக்கிய பிதாமகன்களின் நிழல் தேவைப்பட்டது தன்னைக் கவிஞராக காட்டிக்கொள்ள!

எனவே மீண்டும் என் கருத்தை வலியுறுத்துகிறேன். இன்றைய அரசியல் சீரழிவுக்கு பெரியாரைக் குற்றம் சொல்வது சரியல்ல.
puthiyamaadhavi
புதியகாற்று கவனத்திற்கு:

நீங்கள் வரலாற்றை வெறும் கல்லூரி பாடநூல்களில் மட்டுமே படித்திருப்பதாகவே உங்கள் பதிலிலிருந்து தெரிகிறது. இதோ உங்களுக்கு சில வரலாற்று உண்மைகளை நினைவுப்படுத்தினால் மட்டுமே போதும் என்று நினைக்கிறேன்.

>உண்மையில் காங்கிரசு கட்சிதான் வெள்ளையரால் ஆரம்பிக்கப்பட கட்சி.
வெள்ளையரின் தூண்டுதலே காரணம்.
ஆதாரம் லாலா லஜபதிராய் எழுதி இருக்கும் யுவபாரதம் நூல் 1927 ல் வெளிவந்தது. அதில்
"இந்திய தேசிய காங்கிரஸ் ஸ்தாபிக்கும் யோசனை முதன் முதலாக டப்ரின் பிரபுவின் உள்ளத்தில் உதயமாயிற்று. அவர் அதை ஹியூம் என்பவரிடம் தெரிவிக்க ஹியூம் அதை நிறைவேற்றி வைக்க ஒப்புக்கொண்டார் என்பதும் சரித்திர உண்மைகளாகும்"

>காங்கிரசு மாநாடு நடக்கும் போதெல்லாம் கவர்னர் விஜயம் செய்வதும் மரியாதை நிமித்தம் கவர்னர் மாளிகையில் காங்கிரசு காரர்களுக்கு விருந்து உபசாரம் நடந்தும் இருக்கின்றன

>உண்மையில் ஒரு காலக்கட்டத்தில் காங்கிரசும் நீதிக்கட்சியும் சுயாட்சி குறித்த கருத்தில் அதிக வேறுபாடுகள் கொண்டிருக்கவில்லை. சுயாட்சி என்றால் டொமினியன் அந்தஸ்தா? அல்லது பிரிட்டிஷ் அரசை அறவே துண்டித்துக் கொண்ட விடுதலையா என்பதைக் குறித்து காந்தி உட்பட காங்கிரசில் அனைவரும் தெளிவற்றவர்களாகவே இருந்தார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார் பண்டித நேரு.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசம் கொண்ட சுயாட்சி பெற்ற சுதந்திர இந்தியா என்பதே ஹோம்ரூல் சுயாட்சி இயக்கத்தின் நோக்கமாக இருந்தது.

உங்கள் குற்றச்சாட்டு அர்த்தமில்லாதது. மேலும் பெரியாரையும் கருணாநிதியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் உங்களைப் போன்றவர்களால தான் இன்றும் திராவிட அரசியல் பெயரில் சில குடும்பங்கள் தமிழகத்தைப் பட்டா போட்டு விற்றுக்கொண்டிருக்கின்றன.
ssk
ஓரளவு முன்னேறி உள்ளோம், முன்னேறி வாழ இன்னும் எவ்வளவோ உள்ளது
வருடம் முழுதும் உழைத்து வரும் மக்களிடம் கடவுளை காட்டி உழைக்காமல் மணி அடித்து விட்டு, கொள்ளை அடிப்பது எப்படி சரி ?.
சாதியை ஏற்படுத்தி மக்களை பிரித்து வைத்தததை எப்படி சரி என்பது, தங்கள் மட்டும் படிக்கச் வேண்டும் மற்றவர் படிக்கச் கூடாது என்பது எப்படி சரி ?
இங்கு வாழ்ந்து கொண்டே தமிழர் நலனுக்கு எதிராகவே செயல்படுவது எப்படி சரி.? இது போல் மற்ற இடங்களில் முடியுமா
காரணம் ஒன்று தான் ...அது தமிழ். அதன் வளர்ச்சி ஒரு கூட்டத்தால் பொருத்து கொள்ள முடியாது அது என்றும் சாகாது. அதன் பெருமை கண்டு பொறுக்க முடியாமல் தமிழரை இழிவு செய்து , வஞ்சித்து மன நிம்மதி அடைகின்றனர். மற்ற ஒன்று மாற்றனையும் ஏற்கும் தமிழரின் பரந்த மனம்
ஆயிரம் ஆண்டுகளாக அடிமை பட்டு கிடந்த இனம் இன்று கல்வி பெற்று நலம் பெறுவது ஏன் பொறுக்க முடியவில்லை

எல்லா நாடுகளிலும் கீழ் நிலை தொழிலாளர் உண்டு. பல இன மக்கள் அப்படி செய்கிறார்கள் யாரும் இழிவு பார்ப்பதில்லை ஒரு கூட்டம் தவிர.
பிரித்தாளும் சூழ்ச்சி, தன் இன மக்களுக்கே வேலை போன்ற காரணத்தால் பல வேலை இடங்களில் ஒரு கூட்டம் அதிகாரம் செய்து வருகிறது.
. ஊடகம் அனைத்தும் அவனை பிரித்து அறிவை மழுங்க செய்கின்றன. ஊடகம் பெரும்பான்மை அந்த கூட்டம் கையில். இன உணர்வை இழிவு செய்தே பழக்கி விட்டனர்
தான் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் தமிழர் பலர் இந்த கூட்டம் செய்வதை புகழ்ந்து, அதன் காலில் விழுந்து கிடக்கின்றனர். தம்மால் தம இன மக்கள் வாழ்வு கீழே போவதை இவர்கள் புரியும் போது மாறி விடுவார்கள் .

தமிழ் மக்களுக்கு அனைவருக்கும் , கல்வி ஒன்றே கரை சேர்க்கும் என்பது புரியும் போது நிலை மாறும். தமிழன் அறிவால் உழைப்பால் சிறந்தவன் ஒற்றுமை என்பதும், பொது நன்மை என்பதும் இங்குள்ள மக்களுக்கு புரியும் போது நிலைமைகள் மாறும். சிந்திக்க ஆரம்பித்து விட்டால் நிச்சயம் நிலைமைகள் மாறும். நம்மில் ஒருவன் மேலே இருந்தால் பரவாயில்லை . நம் இனம் வாழ வேண்டும் என்ற எண்ணம் வரும் போது நிச்சயம் நிலைமைகள் மேம்படும். மேலே வந்தவன் நம் இனமானால் அவன் தவறு செய்தாலும் நம்மால் அவனை மாற்ற முடியும்.

அறுபது ஆண்டு காலம் அடைந்த வெற்றிகள் பல. எவ்வளோவோ சொல்ல முடியும்.. நீங்கள் கூறிய பல விசயங்களில் (இலங்கை , பெரியார் அணை ,....) நம்முடைய ஒற்றுமை இன்மையே நம் தோல்விக்கு காரணம். ஒரு அணைத்து கட்சி கூட்டம் நடந்தால் பொது நன்மை கருதி பெரிய கட்சிகள் ஏற்க வேண்டும். நடப்பது இல்லை (அரசியல் தலைமை நோக்கங்கள் அப்படி ). நம் ஒற்றுமை இன்மை வெளிச்சமாக தெரிகிறது..அதனால் நாம் மிதி படுகிறோம். என்று நம் ஒற்றுமை பெரிதாக தெரிகிறதோ அன்று முதல் தமிழருக்கு வெற்றியே.
ஷாலி
“மலையாள,கன்னட,தெலுங்கர்கள்,மற்றும் பார்ப்பனர்கள் அனைவரும் நாலும் தெரிந்த நாடாளப் பிறந்தவர்கள்.தமிழன் மட்டுமே மற்றவர்கள் பேண்ட மலத்தை அள்ள மட்டுமே தெரிந்தவன். எனவேதான் ஒவ்வொரு நாட்டிலும் கக்கூசை கழுவுகிறான்.பிற மாநிலங்களில் பிச்சை எடுக்கிறான்.இதற்குக்காரணம் அறுபதாண்டு கழக ஆட்சி.” இதுதான் திரு.பெரியசாமி அவர்களின் திராவிட எதிர்ப்பின் காழ்ப்பு,கட்டபஞ்சாயத்து தீர்ப்பு.இவருக்கு பெரியார் என்ற சொல்லே வேப்பங்காயாக கசப்பதால் ஈ வே ராமசாமி என்று எழுதி இன்பம் காண்கிறார். இவர் காணும் இன்பமே இவரது தமிழ்ப் பாசத்தை அம்பலப்படுத்திவிட்டது. ஆம்!...இங்கு ஆடுகள் நனைகிறது என்று ஓநாய்கள் அழுகின்றன.

இவரது பின்னூட்டத்தை முன்னூட்டமாக படித்து விட்டு மீண்டும் புதிய மாதவி யின் கட்டுரையை படித்துப்பார்த்தால் பளிச்சென்று தெரியும் பார்ப்பன தமிழ்த்தேசிய சாமிகளின் நுண்ணரசியல்.
சாதியற்ற தமிழன்
குருநாதன் சிவராமன், பெரியசாமி,புதிய காற்று, வகையறாக்கல் இப்படி வசைபாடி..வன்மம் பேசி காலம் கலிக்காமல் தமிழ்த்தேசிய புரட்சியை நடத்துவதற்கு வழிகட்டுஙகல்
Guest
தமிழ் தேசியத்தில் சாதி ஒளிந்து கொள்ளும். தமிழ் சாதி அரசியலில் சாதிய அகமணமுறை ஒளிந்துகொள்ளும். தமிழ் தேசியம் பேச சமூக நீதி அரசியல் தூக்கி எறியப்படலாம்.. ..தேவதாசி முறையை ஆதரிப்பது..என்னே ஒரு பிற்போக்கு தனம்..
சந்தர்பவாதமாக இன தூய்மைவாதம் பேசுவது.. ராஜபக்சேவுக்கு எதிராக வெட்கமின்றி பேசுவது என இவர்களின் இனவெறி அரசியலில் தேசியமும் இல்லை ஜனநாயகமும் இல்லை..
தேசியம் என்ற பெயரில் சற்றே பெரிய சாதிய அரசியலும் பார்பனிய அடிவருடி தனமும்.. சாரத்தில் இந்திய அடிவருடி தனுமும் தான் இவர்களின் அரசியல். முதலில் தேசிய ஜனநாயகம் குறித்து படிங்க ... புள்ள குட்டிகள படிக்க வையுங்க.
தமிழ் தேசிய ஜனநாயக அரசியல் வழியே தமிழ்மக்களின் எதிர் காலமாக இருக்க வேண்டும்.. இருக்கும். அது சாதி ஒழிப்பு .. சமூக நீதி.. தேசிய தன்னுரிமை.. தேசிய சிறுபான்மையின் உரிமையை மதித்தல்..மதசார்பின்மை என்ற ஜனநாயக அம்சங்களை கொண்டிருக்கும்..
இதற்கு பெரியார் தான் தமிழ் முன்னோடி ..
sinnappayan
இன்று தமிழ்தேசியம் பேசுபவர்களுக்கும், கால்டுவெல்லின் நூலை ஒரு பகுதியை தவிர்த்து வெளியிட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.தமிழ்தேசியவாதிகள் பெரியார்,பெரியாரியத்தில் சில குறைகளைக் சுட்டிக்காட்டுகிறார்கள்.அதற்கு காரணம் திராவிடம் பேசியவர்கள் செய்யத்தவறியவை, செய்யக்கூடாத்தை செய்ததேயன்றி வேறு காரணமில்லை.மொழிவாரி மாநில பிரிவினையில் தமிழகம் சில பகுதிகளை இழந்ததையும், அதை அன்று காமராசர் பெரிது படுத்தாதையும்,பெரியார் எதுவும் செய்யாததையும் சுட்டிக்காட்டுகிறார்கள். புதியமாதவியால் இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது.ஏனெனில் அவர் பெரியாரை, பெரியார் இயக்கத்தை விமர்சிப்பதா, குறை கூறுவதா, அதுவே தவறு என்று சிந்திக்கும் பகுத்தறிவாதி :-).
'அன்றைய சென்னை மாநிலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் காங்கிரசார். டில்லியில் நடுவண் அரசும் காங்கிரசுதான். ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டிய குற்றச்சாட்டுகளுக்கு திராவிட கட்சிகளோ, தந்தை பெரியாரோ எப்படி காரணமாக முடியும்?' எ

பெரியார்தானே அன்று அந்த ஆட்சிக்கு ஆதரவு தந்தவர் என்பதை மறந்துவிட முடியுமா.
இன்று பெரியாரிய இயக்கங்கள் தமிழ்தேசியர்களின் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் வேறு வழியின்றி இப்படியெல்லாம் எழுதுகிறார்கள். எது எப்படியோ பெரியாரிய இயக்கங்கள்,பெரியாரித்தின் போதாமைகள்,குறைகள் இந்த விவாதங்களில் வெளிப்படுகின்றன. அந்தவகையில் தமிழ்தேசியர்களின் கேள்விகளை மதிக்கத்தான் வேண்டும். பெரியாரிய இயக்கங்கள் மாநாடு போடுவார்கள், பழைய இதழ்களை மீள் பதிப்பு செய்வார்கள், அங்கும் இங்கும் கூட்டம் போடுவார்கள். அதற்கு அப்பால் பெரிய தொலைநோக்கு திட்டமோ, செயல்திறனோ அவர்களுக்கு இல்லை. வெளிப்படையாக இதுவே எம் செயல்திட்டம், குறிக்கோள் என்று கூட அறிவிக்காமல் அவர்களும் இயக்கம் நடத்துகிறார்கள். சாதி ஒழிப்பு என்றால் அதற்கு என்ன திட்டம் என்று என்றாவது ஒரு ஆவணம் வெளியிட்டிருக்கிறார்களா இல்லை பெண் உரிமை குறித்து என்ன செய்யப் போகிறோம் என்று எழுதியிருக்கிறார்களா.
எதுவும் கிடையாது.கேட்டால் ஐயா வழிதான் எங்கள் வழி என்று துவங்கி அந்தகாலத்தில் என்று ப்ழம்பெருமை பாடுவார்கள்.இவர்களிடம் கேள்வி கேட்டால் தக்க பதில் வராது.ஏனெனில் சட்டியில் சரக்கு இல்லாத போது அகப்பயில் எதைக் எடுத்துக் கொடுப்பது. அந்த இடியாப்ப சிக்கலை எதிர்கொள்ள புதியமாதாவி எழுதுவது போல் நூற்றுக்கணக்காய் கட்டுரைகள் எழுதிக்கொண்டும்,பேசிக்கொண்டும் இருக்கலாம்.அதனால் என்ன பயன.
puthiyamaadhavi
dear sinnappayan,

பெரியாரியக்கங்களுக்கு சாதி ஒழிப்பு , பெண்ணுரிமை குறித்து எவ்விதமான கருத்தோ திட்டமோ இல்லை என்று ஒரு வாதத்திற்காக நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம்.
சரி இப்போதாவது சொல்லுங்கள் தமிழ்த் தேசியத்தில் சாதி ஒழிப்பு, பெண்ணுரிமைக்கான திட்டங்கள் ஆவணங்கள் செயல்பாடுகள் என்று ஏதாவது இருக்கிறதா? இருந்தால் தெரியப்படுத்தவும்.

ஏனேனில் சூத்திரனாக பஞ்சமராக இருப்பவனுக்கு இந்திய தேசத்தில் இருந்தால் என்ன? தமிழ்த் தேசத்தில் இருந்தால் தான் என்ன குடிமுழுகிப்போய்விடும்?
Arun
மொழி வாரி மானிலங்கல் பிரிக்கப்பட்ட போது சித்துர், திருப்பதி, நெல்லுர்,இடுக்கி பகுதிகல் இழந்ததர்கு பெரியார் எஙகாவது க்பொராட்டம் நடத்தினாரா?
இந்த 60 வருடத்தில் பெரியாரின் மது ஒழிப்பு, சாதி ஒழிப்பு நடந்து விட்டதா?
எனது கெல்விக்கு பசப்பாமல் பதில் கூரவும்...
பதில் மட்டுமே எனக்கு தேவை...முடிந்தால் கூருங்கல்.....
சாதியற்றதமிழன்
புதியமாதவியின் கட்டுரைக்கு கருத்தியலால் பதில் கூறுங்கள். நடப்பு சமூக சூழ்நிலையில் நவம்பர் 1 1956 க்கு பிறகு தமிழகத்தில் வாழும் அனைத்து பிரிவு மக்கலையும் ஒருங்கினைத்து புதிய சிந்தனையொடு செயல்படுவதற்கு முனையாமல் கொபம் ஆவேசம் உனர்ச்சிவயப்படுவதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை
bhushana
மிக நுட்பமான பார்வை.

பெரியாரின் பெண்ணியம் என்பது மனித உரிமையை சார்ந்தும் சொல்லப் பட்டது . அதிகார பகிர்வை வலியுறுத்தியது,
சாதி மறுப்பை மைய்யப் படுத்தியது. ................................................

பெரியார் பிறந்ததும் வளர்ந்ததும் படித்ததும் இன்று நாம் சொல்லும் அரசியல் இந்தியாவில் அல்ல... பிரிடிஷ் இந்திய என்று சொல்லலாமா?
அப்போதும் மறுக்கப்பட்ட மனிதர்களின் கதறல்கள் இருந்தது. அவர்களின் மறு வாழ்வு தான் பெரியாரின் மிக ப் பெரியவேதனையாக இருந்திருக்குமே தவிர இந்தியா என்ற நாட்டின் ஒற்றுமையோ விடுதலையோ அல்ல. சுதந்திரப் போராட்டம் நம் சமூகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு சாதிய வாதிகளால் நசுக்கப் பட்டவர்களுக்கு தேவைப் பட்டது. திராவிடன் எனற சொல் மிக கூர்மையான அரசியல் சொல்லாக பெரியார் பயன் படுத்தினார். தமிழன் என்ற சொல்லில் அவர் செய்து வந்து போராட்டஙகளை அடக்க முடியாது என்பதும் ஒரு காரணம். தமிழர் என்ற சொல்லில் சாதி மறுப்பை எடுத்து செல்ல இயலவில்லை.. சாதியை சார்ந்த மூட ஆசாரஙகளை ஒழிக்கும் சிந்தனைகளை தொடுக்க முடியவில்லை. கடவுள் மறுப்பை சொல்ல முடியவில்லை. பெண்ணீய சிந்தனைகளை ஊட்ட முடியவில்லை. இதற்கெல்லாம் திராவிடன் என்ற அரசியல் சொல் நிறைவாக இருந்தது.

வாழ்த்துக்கள் மாதவி .
kulothungan
ᆰபெரியசாமி போன்றோர் பெரியார் பற்றி எடுத்த வாந்தியை கீற்றின் பல பின்னூட்டங்களில் எடுத்துவிட்டு அடுத்த வாதத்தை முன் வைத்தால் பதில் சொல்லாமல் ஓடி விடுவது வழக்கம்.. (பார்க்க..எங்கே போகிறது நாம் தமிழர் கட்சி? கட்டுரைக்கான பின்னூட்டம்).. இங்கு பல பேரின் விமர்சனங்கள் பெரியாரின் களம் பற்றியும் போராடி பெற்ற உரிமைகளைப் பற்றியும் அவரின் வரலாற்றை முழுமையாக தெரிந்துகொள்ளாமாலே முன்னெடுக்கப்படுகின்றன. முதலில் அதை முழுமையாக தெரிந்துகொண்டு எந்த இடத்தில் அவர் தவறினார் என்று குறிப்பிட்டு விமர்சனம் நடுநிலையான போக்கு அவர்களிடம் இல்லை. அவர் காலகட்டத்துக்கான போராட்டங்களை அவர் முன்னெடுத்து அதில் அவர் வெற்றியும் பெற்றார். அவர் இறந்து 40 வருடம் கழித்து அவர் ஏமாற்றிவிட்டார், துரோகம் இழைத்துவிட்டார் என்று கூறுவது வரலாற்றை மறைத்து அவர் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டுவதை தவிர வேறு இல்லை. அவர் எவன் சொத்தையும் ஏமாற்றி பிடுங்கவில்லை. மூன்று தலைமுறைக்கான வசதிவாய்ப்புகள் அவரிடம் இருந்தது. தமிழனைக்காட்டி கொடுத்து பதவிகளைப்பெறும் கருணாவின் சூழ்ச்சி அவரிடம் இல்லை. வகித்திருந்த பதவிகளை தூக்கி எறிந்தவர். பெரியார் விமர்சனத்து அப்பாற்பட்டவர் அல்ல.. ஆனால் விமர்சனம் நடுநிலையானதாக இருக்கவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.. பெரியார் இறந்த வருடத்தில் பிறந்தவன் கூட இன்று பெரிய தமிழ்த்தேசியத் தலைவராய் மலர்ந்திருக்கலாம் என்பது என் எண்ணம்.. அப்படி என்றால் தமிழ்தேசியத்தலைவர்கள் எல்லோரும் 40 வயதிற்கு உட்பட்டவர்களா என்பது என் போன்ற அறிவீலியான பாமரனின்
viyasan
கீற்றிலேயே துணிச்ச‌லுட‌ன் உண்மையைப் பேச‌த் துணிந்த‌ சின்னைப்பைய‌ன் அவ‌ர்க‌ளைப் பாராட்டாம‌லிருக்க‌ முடிய‌வில்லை.
viyasan
முஸ்லீம் அமைச்ச‌ர்க‌ளின் உத‌வியுட‌ன் த‌மிழ‌ர்க‌ள் மீது காணி அப‌க‌ரிப்பு யுத்த‌ம் ந‌ட‌த்தும் இல‌ங்கை முஸ்லீம்க‌ள். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் கேட்பார‌ற்ற‌ நிலை.

த‌மிழ்நாட்டிலும் த‌மிழர்க‌ள் வ‌காபியிச‌ இஸ்லாத்தையும், அர‌பும‌ய‌மாக்க‌லையும் ஆத‌ரித்து ம‌தாடிப்ப‌டையில் த‌மிழ்பேசும் முஸ்லீம்க‌ளுக்கோ அல்ல‌து எந்த‌ ம‌த‌க்குழுவுக்கும் ச‌லுகைக‌ளை அளித்து ஓவ்வொரு த‌மிழ்நாட்டுகிராம‌ங்க‌ளிலும் ந‌க‌ர‌ங்க‌ளிலும் சாரியா சேரிக‌ளை (Sharia Ghetto)அனும‌தித்தால் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் நிலை தான் த‌மிழ்நாட்டுத் த‌மிழ‌ர்க‌ளுக்கும் ஏற்ப‌டும்.

மேலதிக‌ விவ‌ர‌ங்களுக்கு:
www.viyaasan.blogspot.ca/
kalanchiyam
http://www.youtube.com/watch?v=oLYb2gZowKU

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.