கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மும்பை மராத்திய மாநில பீமா கோரேகாவ் சரித்திரப் பின்னணியை முன்வைத்து இந்துத்துவ அரசியலின் வரலாற்றுத் திரிபுகளை நிகழ்கால அரசியலுடன் இணைத்துப் பார்க்க வேண்டி இருக்கிறது.

2018, ஜனவரி 01-இல் பீமா கோரேகாவ் வெற்றித் தூணின் 200 ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் இதை வெளிச்சமாக்குகின்றன. சாதியத்தைக் கடுமையாகத் தங்கள் ஆட்சியில் கடைப்பிடித்த பேஷ்வா அரசுக்கு எதிராக இச்சம்பவத்தை மகர்கள் கொண்டாடுகிறார்கள்.

beema gorikaanமராட்டிய மாநில ஒடுக்கப்பட்ட மக்களான மகர்கள் சத்ரபதி சிவாஜி காலத்திலிருந்தே படைவீரர்களாகவும் நகரக்காவலர்களாகவும் இருந்தவர்கள் என்பது வரலாறு. ஆனால் பேஷ்வா மன்னர்கள் மகர்களின் வீரத்தைக் கொண்டாட முன்வராதது மட்டுமல்ல, தங்கள் படையில் மகர்களைச் சேர்த்துக் கொள்வ தையும் தங்களுக்கு இழுக்கு என்று நினைத்தார்கள். ஆனால் அதே மகர்களின் போர்ப்படை ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையின் சார்பாகப் போரிட்டு பேஷ்வாக்களை அடிபணிய வைத்தது வரலாறு.

இந்த வரலாற்றின் இன்னொரு பக்கமாக விரிவது, பார்ப் பனியப் பேஷ்வாக்களை வெற்றி கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வீரமும் விவேகமும்தான். இதுவே இந்துத்துவ அரசியலுக்கு நெருடலாக இருக்கிறது.

பேஷ்வாக்களின் ஆட்சியில் பல்வேறு கொடுமைகளை அனு பவித்த மகர் இனத்திற்கு இந்த வெற்றி என்பது மிகவும் முக்கிய மான வரலாற்று நிகழ்வு என்பார் வரலாற்று ஆய்வாளர் சரத்தா கும்பஜ்கர் பீமா கோரேகாவ் வெற்றித் தூணில் பொறிக்கப் பட்டிருக்கும் 49 வீரர்களில் 22 பேர் மகர் இனத்தவர்கள். இந்த வரலாற்றை மறைக்காமல் பொறித்து வைத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள்.

01 ஜனவரி 1927 பீமா கோரேகாவ் 109-வது நிறைவு நாளில் அண்ணல் அம்பேத்கர் அப்பகுதிக்குச் சென்றார். அவருடைய வட்டமேசை மாநாட்டு உரையில் மகர்களின் படைவீரம் ஆங்கிலேயப் பேரரசுக்கு உதவியாகவும் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி இருப்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் 200-வது நினைவு நாளில் கலகம் வெடித்தது. தலித்துகள் கொதித்து எழுந்தார்கள். பேரணிகள் நடந்தன.

பெரு நகரம் மும்பை நிலைகுலைந்தது. ஏன்? இது 200 ஆண்டுகால பீமா கோரேகாவ் மகர்களின் வெற்றி சம்பந்தப்பட்டது மட்டு மல்ல. இதன் பின்னணியாக இருக்கும் இன்னொரு சரித்திரமும் மீண்டும் எழுச்சி யுடன் பேசப்பட வேண்டியதாகிறது.

இந்துத்துவ அரசியலைக் கொண்டாடும், முன்னிறுத்தும் மராட்டிய அரசியலுக்கு சத்ரபதி சிவாஜி தான் மூல புருஷனாக இருக்கிறார். மராத்தியர்கள் சிவாஜியையும் அவர் இசுலாமியப் பேரரசின் மன்னராக டில்லியில் இருந்து ஆட்சி செய்த ஒளரங்கசீப்புக்கு எதிராக நடத்திய கொரில்லாப் போர்கள் எல்லாம் வீரம் செறிந்த இந்து அரசனின் பெருமையாகக் கற்பிக்கப்படுகின்றன.

இன்னொரு வகையில் சொல்லப்போனால் இசுலாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ அரசை நிறுவிய முதல் அரசனாக சத்ரபதி சிவாஜியை மராட்டிய அரசியல் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்தக் கொண்டாட்டத்தின் அரசியலுக்கு எதிராக இருக்கும் அனைத்து வரலாற்று ஆவணங்களையும் துடைத்து எடுப்பதில் இந்துத்துவ அரசியல் தன் அதிகாரத்தை முன்நிறுத்தி சரித்திரத்தை மாற்றி எழுத முனைகிறது.

இந்துத்துவ அரசியலுக்கு எதிரான சரித்திரம் என்ன?

அந்த நிகழ்வு ஏன் தங்கள் அரசியலுக்கு வேட்டு வைக்கும் என்று நினைக்கிறார்கள்? இதன் சரித்திரம் 300 ஆண்டுகளுக்கு முன்னதாக இருப்பதும் இந்துத்துவ அரசியலின் மராத்தாக்களுக்கு அந்த நிகழ்வு எந்த வகையிலும் பெருமை சேர்க்கவில்லை என்பதும் தான் காரணம்.

பீமா கோரேகாவ் ஊருக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் வாடு புட்ருக் பீமா கோரேகாவ் வரும் தலித்துகள் அனைவரும் வாடு புட்ருக்கில் இருக்கும் இருவர் சமாதிக்கும் செல்கிறார்கள். சிவாஜி மகாராஜாவின் மகன் சம்பாஜி மகாராஜாவின் சமாதி. அத்துடன் சம்பாஜி மகாராஜாவுக்கு இறுதிச் சடங்கைச் செய்த வீரமிக்க கோவிந்த் கோபால் கெய்க்வாட் சமாதி. சிவாஜியின் வீரம் போற்றப்பட்ட அளவுக்குச் சிவாஜியின் மகனாக சம்பாஜியின் வீரமும் வீரமரணமும் போற்றப்படவில்லை.

சம்பாஜி இசுலாமிய அரசால் தோற்கடிக் கப்பட்டவர்.

வரலாறு எப்போதுமே வெற்றி பெற்றவர்களை மட்டுமே கொண்டாடும் என்பது புதிதல்ல.

1689-இல் அவுரங்கசீப் படையால் தோற்கடிக்கப்பட்ட சம்பாஜி மகராஜாவின் உடலை அவர்கள் வெட்டி துண்டுகளாக்கி நதியில் வீசினார்கள். அந்த உடல் துண்டுகளை யார் எடுக்கிறார்கள் பார்ப்போம்? யார் இந்த உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வார்கள், அதையும் பார்த்து விடுவோம் என்று அதி காரத்தின் முகம் கொக்கரித்த போது அதை எதிர்க்கும் துணிச்சல் ஒரு மகர் வீரனுக்கு மட்டுமே இருந்தது. அவர்தான் புட்ருக் பகுதியில் வாழ்ந்த கோவிந்த் கோபால் கெய்க்வாட்.

கோவிந்த் கெய்க்வாட் குத்துச்சண்டை வீரர். குத்துச்சண்டைப் பயில்வான் என்று அறியப்பட்டவர். அவர் மட்டும் பேரரசனின் ஆணையை அதிகாரத்தை மீறும் துணிச்சலுடன் நதியில் வலையுடன் இறங்கி துண்டுகளாக வீசப்பட்ட தங்கள் அரசனின் உடல் பாகங்களைச் சேகரித்து ஒன்றாக்கித் தைத்து அந்த உடலுக்கு இறுதிச்சடங்கும் செய்தார். அவரை அவுரங்கசீப் படை பலிவாங்கியது என்பதும் வரலாறு. கோவிந்த் கெய்க்வாட்டின் வீரத்தைப் பாராட்டும் வகையிலும் அவருடைய சமாதி மன்னர் சம்போஜியின் சமாதி அருகில் தன் அடையாளத்தைத் தன் வரலாற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. இதுதான் இந்துத்துவ அரசியலுக்கும் இந்துத்துவ அரசியலை முன் வைக்கும் மராத்தாக்களுக்கும் பெரும் தலை வலியாக மாறுகிறது.

இந்து ராஷ்டிரத்தை நிறுவ எண்ணிய சத்ரபதி சிவாஜியின் மகனைக் கொன்றது இசுலாமிய அரசு என்ற வரலாற்றின் ஒரு பக்கத்தை தங்கள் அரசியல் லாபமாக்க முனைகிறார்கள். அதாவது சரபோஜி என்ற இந்துவைக் கொன்ற இசுலாமியர் என்பதாக மடைமாற்றம் செய்ய நினைக்கிறார்கள். ஆனால் சரபோஜிக்கு இறுதிச்சடங்கு செய்தவர் ஒரு மகர் இனத்தைச் சார்ந்தவர் என்ற உண்மையும் அந்த வரலாறும் இவர்களுக்கு எதிராகவே இருக்கிறது என்பதால் தங்கள் அரசியல் இலாபத்திற்கு கோவிந்த் கெய்க்வாட்டின் சமாதியைச் சிதைக்கிறார்கள்.

வரலாற்றைத் திரிப்பது, வரலாற்றை மாற்றி எழுதுவது, வரலாற்றைத் துடைத்து அழிப்பது இதெல்லாம் இந்துத்துவ அரசியலுக்குக் கைவந்தக் கலைதானே! சிந்துவெளி நாகரிகத்திலிருந்து அவர்கள் செய்து வருவதுதானே! சத்ரபதி சிவாஜியின் வாரிசுக்கு ஒரு மகர் இனத்தவன் இறுதிச் சடங்கு செய்தானா? அப்படியானால் அப்போது மராத்தாக்களின் வீரம் எங்கிருந்தது?

இக்கேள்விகள் எழுவதைத் தடுக்க வேண்டுமென்றால் வரலாற்றின் இப்பக்கத்தை மாற்ற வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். சம்போஜி மகாராஜாவுக்கு இறுதிச்சடங்கு செய்தவர்கள் மராத்தா இனத்தைச் சார்ந்த சிவாலே தேஷ்முக் என்று சொல்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் கோவிந்த் கெய்க்வாட்டின் சமாதி இப்போதுதான் கட்டப்பட்டது என்று சொல்கிறார்கள். கோவிந்த கெய்க்வாட் சமாதி இருக்கும் இடத்தின் பட்டா பஞ்சாயத்தில் இல்லை என்று அலறுகிறார்கள். கெய்க்வாட்டின் சமாதியில் எழுதப்பட்டிருந்த போர்டைச் சிதைக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாகக் கெய்க்வாட் சமாதிக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் அனைவரையும் தேசவிரோதியாகச் சித்தரிக்கிறார்கள். காவிக்கொடியுடன் கூட்டத்தில் புகுந்து கலகம் செய்தவர்களைச் சமூகத்தின் பாதுகாவலர்களாகவும் தங்கள் உரிமைகளை நியாயமான குரலில் வெளிப் படுத்தியவர்களைத் தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கும் அண்மைகால அரசியல் போக்கு நம்ப முடியாத கதைகளை ஆவணங்களாக்குகிறது.

இந்தியப் பிரதமர் மோடியை ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது போல கொலை செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்று கூட சொல்லத் தயங்கவில்லை!

பீமா கோரெகாவ் வழக்கு விசாரணை கமிஷனிடம் தலித்துகள் சில ஆவணங்களை முன்வைக்கிறார்கள். அதன் மூலம் இன்னும் சில வரலாற்றுச் செய்திகள் வெளிவருகின்றன.

*பீமா கோரேகாவுக்கு வந்த பீமா சேனையும் குடியரசுக் கட்சியின் ராம்தாஸ் அத்வாலேயும் சம்பாஜி மகாராஜா சமாதிக் கும் சென்றார்கள்.

தலித்துகள் வந்ததால் ராஜாவின் சமாதி தீட்டுப்பட்டுவிட்டதாகக் கூறி சமாதியில் பசு மூத்திரம் தெளித்து தீட்டுக் கழித்திருக் கிறார்கள்.

கோவிந்த் கோபால் நாசிக் கோட்டைக்குக் கவர்னராக சரபோஜி மன்னரால் நியமிக்கப் பட்டிருந்தார். அவுரங்கசீப் படை பலமுறை முயன்றும் அக்கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை.

கோவிந்த் ஒரு மகர் இனத்தவர் என்பதால் தான் இந்தச் சரித்திரம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

சம்பாஜி மன்னர் 1867-இல் கோவா ஸ்டீபன் கோட்டையைக் கைப்பற்றினார் கோவிந்த் கோபாலையே அக்கோட்டைக்கும் கவர்னராக நியமித்தார்.

சரபோஜி அவுரங்கசீப் படையினரால் தோற்கடிக்கப்பட்டார். அவர் என்னவானார் என்பது தெரியாத நிலையில் அவரைத் தேடும் பணிக்கு மகாராணி யசுபாய் இரு வரை நியமிக்கிறார். அந்த இருவருமே மகர் இனத்தவர்கள். ஒருவர் கோவிந்த் கோபால். இன்னொருவர் ராயப்பன் மகர்.

இருவருமே மன்னர் சரபோஜியைத் தேடி அலைகிறார்கள். ராயப்பன் அவுரங்கசீப் படையால் கொலை செய்யப்படுகிறார். கோவிந்த் சனக், பஷ்பாய் பகுதியில் தேடி அலையும் போது சரபோஜி மன்னருக்கு நிகழ்ந்த கொடுமை தெரிய வருகிறது.

சரபோஜிக்கு இறுதிச்சடங்கு செய்யத் துணிபவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அவுரங்கசீப் அதிகாரம் அச்சுறுத்துகிறது. அந்த அச்சுறுத்தலால் எவரும் முன்வர வில்லை. ஆனால் கோவிந்த் கோபால் தானே முன்வந்து சரபோஜி மன்னரின் உடல் பாகங் களை ஆற்றில் தேடி எடுத்து ஒட்டி தைத்து இறுதிச்சடங்கும் செய்கிறார். இச்செய்தியை அவர் மகாராணிக்கும் தெரிவிக்கிறார்.

கோவிந்த் கோபாலின் இச்செயலால் ஆத்திரமடைந்த அவுரங்கசீப் படை கோவிந்த் கோபாலைக் கொலை செய்கிறது.

அத்துடன் 50 முதல் 70 மகர்களையும் சேர்த்துக் கொன்று குவிக்கிறது.

கோவிந்த் கோபாலின் சமாதிக்கு அருகில் கொலை செய்யப்பட்ட மகர்களின் சிலை களும் தங்கள் கதைகளைச் சொல்லிக் கொண் டிருக்கின்றன. டிசம்பர் 2017-இல் முதன் முதலில் கோவிந்த கெய்க்வாட் சமாதியி லிருந்த அறிவிப்பு பலகை சிதைக்கப்பட்டது. அப்போது காவல்துறையை அணுகி இப்பிரச் சனைக்குத் தீர்வு காணவே தலித்துகள் விரும்பினார்கள். ஆனால் காவல்துறைக்கு இது பிரச்சனையாகவே தெரியவில்லை.

மீண்டும் டிசம்பர் 29, 2017-ல் சமாதியில் புதிதாக வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையை அகற்றிச் சிதைக்கிறார்கள். அந்த நாள் பீமா கோரெகாவ் 200 ஆண்டு நினைவு நாளை ஒட்டி நடைபெற்ற சம்பவம். தலித்துகள் கொத்தெழுந்ததும் அதன் பின் நடந்தப் போராட்டங்களும் செய்திகளானதை நாம் அறிவோம்.

ஆண்டுக்கு 365 நாட்கள் இருக்கும் போது டிசம்பர் 06-ஐ பாபர் மசூதி இடிப்புக்கு தேர்ந்தெடுத்த இந்துத்துவ அரசியலின் நோக்கம் எல்லோரும் அறிந்தது தானே. ஆனால் 2019 டிசம்பர் 06 பத்திரிகையைப் புரட்டினால் முதல் பக்கத்தில் (தினத்தந்தி) பாபர் மசூதி இடிப்பு நாள் பழனி கோவி லுக்குப் பாதுகாப்பு என்று படத்துடன் செய்தி வருகிறது.

டிசம்பர் 06 அறிவாயுதம் ஏந்திய இந்தியத் தலைவர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் என்பது செய்தியாகக் கூட இடம் பெறாமல் பணம் வாங்கிக் கொண்டு வெளியிடப்படும் விளம்பரமாக 3-ஆவது பக்கத்தில் இடம் பெறுகிறது.

இப்படித்தான் வரலாற்றின் உண்மைகளும் சிறிது சிறிதாகப் பின்னோக்கிச் சென்று... காலப்போக்கில் மங்கலாகி... பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதாய் மாறிவிடுகிறது. இந்திய அறிவுசார்ந்த சமூகமும் இதற்கெல்லாம் சாட்சியாக இருப்பதுதான் பேரவலம்.

குறிப்புகள்: புனே மிரர், இந்தியா டுடே

பின் குறிப்பு: இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது வந்திருக்கும் பத்திரிகை செய்தி. மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேக்குக் கட்சியின் கடிதம். பீமா கோரேகாவ் சம்பவத்தில் பா.ச.க. அரசு என்ன செய்தார்கள் என்பதை நாம் அறிவோம் என்பதால் இந்த வழக்கில் சிறைப் பிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.