கவி கா.மு. ஷெரீப் திருவாரூர் மாவட்டத்திலுள்ள அபிவிருத்தீஸ்வரத்தில் காதர்ஷா, இபுராஹிம் பாத்தும்மாள் இணையருக்கு 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் படித்திருந்தபோதும் வறுமை காரணமாகக் கவி கா.மு. ஷெரீப் பள்ளி சென்று பயிலும் வாய்ப்பினைப் பெறவில்லை. தந்தையாரிடமும் மற்றோரிடமும் தாமாக முயன்று கேட்டுக் கல்வி கற்றுக் கவிதை புனையும் பெற்றியும் பெற்றார். அரசியலிலும் ஆன்மீகத்திலும் சமூகப் பிரக்ஞையிலும் சிறந்து விளங்கிய கவி கா.மு. ஷெரீப் கவிதை மட்டுமன்றி சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, சிற்றிலக்கியம், கடித இலக்கியம், திரையிசைப் பாடல்கள், காவியம், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று இலக்கியம், இதழியல் பணியான பத்திரிகைத் தலையங்கம், வானொலி உரை, இலக்கிய உரையாசிரியர், மிகச் சிறந்த சொற்பொழிவாளர் எனப் பல்வேறு தளங்களில் தமிழ் இலக்கியத்திற்குத் தமது பங்களிப்பினைச் செலுத்தியுள்ளார். அவருடைய இலக்கியப் படைப்புகளுள் குறிப்பிடத்தக்க அளவில் இஸ்லாமிய இலக்கியப் படைப்புகளும் படைத்து வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் இறையருள் வேட்டல் எனும் நூலும் ஒன்றாகும்.

ka mu sherif 267கவி கா.மு. ஷெரீப் பற்றி மு. கருணாநிதி, “அண்ணன் கவி கா.மு. ஷெரீப் அவர்கள் என்னுடைய சொந்த மாவட்டமான தஞ்சையில் பிறந்தவர். நல்ல கவிஞர், சிறந்த எழுத்தாளர், விடுதலைப் போராட்ட வீரர், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர். சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர். என்னுடன் நெருக்கமான நட்பு பூண்டவர்” எனக் குறிப்பிடுகிறார் (வாழ்த்துச் செய்தி, கவி கா.மு. ஷெரீப் நூற்றாண்டு விழா மலர், ப.2).

ஓவியப் பாவலர் மு. வலவன் தமது நெஞ்சத் திரையில் நினைவுக் கோடுகள் எனும் நூலில் கவிஞரைப் பற்றி, “காயல் பட்டணத்து சைகு அப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம் புலவர் குத்பு நாயகம், திருக்காரணப் புராணம், திருமணிமாலை, புதூகுஷ்ஷாம் என நான்கு காப்பியங்கள் நல்கியுள்ளார். மதுரை மீசல் வண்ணக் களஞ்சியப் புலவர், இராச நாயகம், குத்பு நாயகம், தீன் விளக்கம் என்று மூன்று காப்பியங்களை வழங்கியுள்ளார். நாகூர் குலாம் காதிறு நாவலர் எனும் புலவர் நாகூர்ப் புராணம், ஆரிபு நாயகம் என்னும் இரண்டு பெருங்காப்பியங்களையும் முகாசபாமாலை என்னும் சிறுகாப்பியத்தையும் இயற்றியவர் ஆவார். வாழையடி வாழையென இந்த மரபில் தோன்றித் தமிழ் இலக்கியத்திற்குத் தன் எண்ணற்ற படைப்புகள் மூலம் ஏற்றமளித்த பெருந்தகை நம் முதுபெரும் பாவலர் அமரர் கவி கா.மு. ஷெரீப் ஐயா ஆவார்கள்” என அறிமுகம் செய்கிறார் (ஓவியப் பாவலர் மு. வலவன், நெஞ்சத் திரையில் நினைவுக் கோடுகள், பக். 5-6).

சமய நல்லிணக்க உணர்வாளரான கவிஞரைப் பற்றி அபிராமி நிலையத்தார், “எல்லாச் சமயங்களையும் சமயத் தத்துவங்களையும் நுணுகி ஆய்ந்தவர். காழ்ப்பற்றவர். இலக்கியம் என்றால் அது எச்சமயம் சார்ந்ததாயினும் படிப்பவர். அஃதொப்ப சங்க இலக்கியங்கள் முதல் இன்றளவும் உள்ள இலக்கிய வகை அனைத்தையும் ஊன்றிப் படிப்பவர். அவை பற்றி எடுத்துரைக்கவும் வல்லவர்” எனக் குறிப்பிடுகின்றனர் (அபிராமி நிலையத்தார், பதிப்புரை, கண்ணகியின் கனவு, ப.7).

“மனிதரெலாம் ஓர் குலமாகும் நாளே மகிழ்ச்சிக்குரிய நாள்” (கவி கா.மு. ஷெரீப், கவி கா.மு. ஷெரீப் கவிதைகள், ப.X) எனும் எண்ணமுள்ள கவி கா.மு. ஷெரீப், “உயிர் உள்ள வரை எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்” என்று ஆசைப்பட்டார் (மேலது,ப.X). “முதலிலும் இடையிலும் முடிவிலும் தமிழன். இந்தியக் குடிமகன். உலக மானிடரில் ஒருவன் இறை ஏற்பில் இஸ்லாமிய வழியினன்” (மேலது, ப.X)எனத் தம்மைப் பற்றிக் குறிப்பிடும் கவிஞர் 1978ஆம் ஆண்டு இறையருள் வேட்டல் எனும் நூலைப் படைத்துள்ளார். “இத்தொகுதியில் அடங்கியுள்ள ஆழிய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் மனவழுக்கைப் போக்கி மதிநலத்தைத் துலக்கும் மாண்புடையவையாகும்” என்று எம். அப்துல் வஹாப் இத்தொகுப்புப் பற்றி குறிப்பிடுகிறார் (கவி கா.மு. ஷெரீப், இறையருள் வேட்டல், முன்னுரை, ப.3).

இந்நூலில் எல்லோர் பாவங்களையும் தன் பாவங்களாகக் கருதி இறைவனிடம் கவிஞர் வேண்டும் போக்கும் எல்லோரிடமும் இருக்கும் பாவக்கறைகளை அகற்றி நற்பண்பினை வேண்டும் போக்கும் காணப்படுகிறது. நூறு பாடல்களைக் கொண்ட இந்நூல் பாடல் முழுவதும் அடிதோறும் இறுதிச் சீர் அல்லாஹ் என முடிந்துள்ளது.

“கலைமாமணி அவர்களின் “இறையருள் வேட்டல்” எனும் இனிய நூலைப் படிக்கும் பேறு பெற்றேன். பாடல்கள் பாகாக, தேனாக, பழச்சாறாகத் தித்தித்தன. இவரின் இசை நலங்கனிந்த பாடல்களால் தமிழ்த் திரையுலகம் வளம் பெற்றது. இவரது தேசியப் பாடல்கள் சுதந்திரக் கனலை மூண்டெழச் செய்தன. தற்போது இவரது புதிய படைப்புகள் இஸ்லாமிய இலக்கியச் சோலையை வளப்படுத்துகின்றன. ‘நபியே எங்கள் நாயகமே’ பக்தி மணங் கமழச் செய்யும் பாமாலையாகும். இறையருள் வேட்டல் இஸ்லாமியத் தமிழுக்கும் இலக்கியத் துறைக்கும் வளமும் நலமும் தரும் பக்தி இலக்கியமாகும். எளிமையும் தெளிவும் இலக்கியத்திற்கு இனிமையும் பொலிவும் தருவன. உணர்ச்சியும் கற்பனையும் கவிதைக் கலைக்கு உயிர் நாடிகளாகும். இப்பண்புகள் அனைத்தும் பொருந்திச் சொற்சுவையும் பொருட்சுவையும் மிகுந்து அணி நலமும் சுவை நலமும் சிறந்து விளங்குகின்றன” என்று சி. நயினார் முகம்மது பாராட்டுகிறார் (கவி கா.மு. ஷெரீப், சி. நயினார் முகம்மது, ஆய்வுரை, ப.7). ‘இறையருள் வேட்டல்’,

“நலமே யளிப்பவா நல்லவை செய்பவா

நானிலங் காக்கு மல்லாஹ்!

பலமே தருபவா பாவந் துடைப்பவா

பாங்குள என்ற னல்லாற்

நிலமே தொழுதிட நீள்புவி யாள்பவா

நித்திய னான அல்லாஹ்            

உளமே வைத்துனை நாளும் வணங்கிடும்

உயர்வெனக் கீந்தி டல்லாஹ்!”                 (பா.1)

எனத் தொடங்குகிறது. இப்பாடலில் எல்லோர்க்கும் நல்லதையே செய்து நானிலம் காக்கும் இறைவன் எல்லோர் பாவங்களையும் துடைத்து என்றும் நிலைத்திருப்பவன். ஆகவே, அவன் உளம் வைத்து அவனை வணங்கிடும் உயர்வினைத் தனக்குத் தர வேண்டுகிறார்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளான கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் எனும் ஐந்தனுள் ‘அல்லாஹ்’ என்னும் ஏக இறைவனை அடிதோறும் அழைக்கிறார்.

“நபியே நெஞ்சுடன் நானுனைத் தொழுதிட

நயந்தெனக் கருள்வா யல்லாஹ்!”           (பா.2)

“சங்கை யோடுனை யென்றுந் தொழுதிடுஞ்

சால்பெனக் கீந்தி டல்லாஹ்!”                  (பா.6)

“உந்தனை நான்தினம் போற்றித் தொழுதற்

குதவுவா யென்ற னல்லாஹ்!”   (பா.7)

எனும் அடிகளில் இரண்டாவது கடமையினை நிறைவேற்றும் அருளை வேண்டி நிற்கிறார். இங்ஙனம் தொழுகையை வேண்டும் கவிஞர் ஒரே பாடலில் ஐம்பெருங் கடமைகளையும் சுட்டுகிறார்.

“ஐந்தில் தோய்ந்திலேன் ஆறை யறிந்திலேன்

அதிகமாய்ப் பேசு கின்றேன்

ஐந்தை யடக்கு மாற்றலைப் பெற்றிலேன்

அகில மென்றனைப் புகழ

 சிந்தை யிலெண்ணுவேன் சிறுமையே செய்குவேன்

தினமிது வென்றன் தொழிலாம்

நைந்துநா னழிந்திடா துன்னை வணங்கிடும்

நற்பே றளித்தி டல்லாஹ்!”                       (பா.36)

எனும் இப்பாடலிலுள்ள ‘ஐந்து’ எனும் சொல் கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ்ஜு ஆகிய ஐம்பெருங் கடமைகளையும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையும் ஐந்தெழுத்துகளைக் கொண்ட ‘அல்லாஹ்’ எனும் திருநாமத்தையும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களையும் குறிப்பிடுகின்றது. ‘ஆறு’ எனும் சொல் இறை நம்பிக்கையைக் குறிக்கும் ஈமானின் பர்ளுகள் (கட்டாயம் பின்பற்ற வேண்டியவை) ஆறையும் மூலம், தொப்புள், மேல் வயிறு, நெஞ்சு, மிடறு, புருவ நடு ஆகிய ஆறு ஆதாரங்களையும் ஆறு தத்துவங்களையும் நன்னெறியையும் குறிப்பிடுகின்றது. ஐந்து, ஆறு ஆகிய இரு எண்களிலும் எண்ணற்ற பொருட்களைப் புதைத்துக் கவிஞர் இப்பாடலில் நயம்பட எடுத்துரைக்கிறார்.

பிறர் மனை நயத்தலைக் கவிஞர் இழித்துரைக்கிறார். “பிறர் மனை நயந்து திரிபவனின் பிழை பொறுக்க மாட்டான் இறைவன்” (கவி கா.மு. ஷெரீப், இறையருள் வேட்டல், பா.15) என்பதையுணர்த்தும் கவிஞர், ‘இறைவன் பொய் கூறித் திரிபவனை வெறுப்பான்’ (மேலது, பா.15), ‘சூதும் கள்ளும் உடையவனைக் கண்டு இறைவன் வெகுள்வான்’ (மேலது, பா.15), ‘ஈகை இல்லாதவன் ஈடேற மாட்டான்’ (மேலது, பா.16), ‘ஆணவத்தை அகற்ற வேண்டும்’ (மேலது, பா.34), ‘ஆசையை அகற்ற வேண்டும்’ (மேலது, பா.37), ‘வியாபாரத்தில் கொள்ளை இலாபம் கூடாது’ (மேலது, பா.38) எனப் பல்வேறு அரிய கருத்து மணிகளையும் வெளியிடுகிறார். ஒரு பாடலில் உலக நிலையாமையையும் படம்பிடித்துக் காட்டுகிறார்;

“மாளிகை பலப்பல கட்டினேன் காலமும்

வாழ்ந்திடும் நினைப்பி னல்லாஹ்

நாழிகைப் பொழுதையும் வீணாக் கிடாமலே

நான்பொருள் சேர்த்தே னல்லாஹ்

ஆளுநல் லாசையால் போதிய பதவிபெற்

றாட்சியுஞ் செய்தே னல்லாஹ்

சூழு மிவையெலாஞ் சொர்க்கம் சேர்க்குமோ

சொல்லுவா யெந்த னல்லாஹ்!”                            (பா.45)

இப்பாடலில் உலக வாழ்க்கையைப் பெரிதாக எண்ணி வாழும் மூடரைக் கண்டிக்கிறார். ‘இன்றைக்கு இருப்பவர் நாளை இல்லை’ எனும் நிலையை உணர்ந்து வாழ அறிவுறுத்துகிறார். அத்தகைய நிலையை இறைவன் தமக்கு அருள வேண்டுகிறார். நூறாவது பாடலில் கவிஞர் இறைவனிடம்,

“எழுத்தும் பேச்சும் நினைப்பும் உன்வழி

இயங்கிட வைத்தி டல்லாஹ்

வழுத்தி யுன்னை நாளும் வணங்கிடும்

மனமெனக் கருள்வா யல்லாஹ்

இழுத்துப் பிடித்தும் அடங்கா மனத்தின்

இடக்கை யடக்கி டல்லாஹ்!’

பழுத்த பழமாய்ப் பக்குவ மடைந்துனைப்

பற்றிட வைத்தி டல்லாஹ்!”                                    (பா.100)

என்று இறைஞ்சி நூலை நிறைவு செய்கிறார். நூல் நெடுகிலும் இஸ்லாமியருக்குமானவும் இஸ்லாமியரல்லாத பொதுவான அனைத்து மார்க்க மக்களுக்கானவுமான அரிய கருத்து மணிகளைச் சந்த நயத்துடன் சிந்தையள்ளுமாறு கவிஞர் எடுத்து மொழிகிறார்.

சமுதாய மேம்பாட்டிற்கு அல்லும் பகலும் அயராது உழைத்து வாழும் கவி கா.மு. ஷெரீபின் இறையருள் வேட்டல் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த அரிய மணியாரமாகும்.

கவிஞர் வானம்பாடி இந்நூல் குறித்து, “இறைவனின் அருள் வேண்டி எல்லா வரிகளுமே குரல் எழுப்புகின்றன; அந்தக் குரல் - எளிய குரல் - இனிய குரல் - இதயத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் குரல்! இவற்றைப் பூரணமாக இயல்பாக உணர்ந்து கொள்ள முடிகிறது! எழுத்துக்கள் இமயத்தின் அடிவாரத்தைப் போன்று எப்படிப் பிடிக்க எளிமையாகவும் கருத்துக்கள் அதன் உச்சியைப் போன்று கம்பீரமாகவும் நின்று இதயத்தைக் கசிந்துருகச் செய்கின்றன!” (மேலது., அறிமுகவுரை, ப. 13) என்பதுடன், “எல்லாம் வல்ல இறைவனை எண்ணியும் பார்க்க நேரமில்லாது, ஆறாவது அறிவைத் தங்களது அலங்கோல வாழ்வுக்கே உரியதாக்கி, மனித மனங்களின் ஆசா பாசங்கள், உலகச் சந்தையின் மாய்மாலங்களில் அரங்கேறி நடனமிடுவதைத்தான் நாம் வெகுவாகக் கண்டு வருகிறோம்; இந்த எண்ணிக்கையில், நம்மிலும் பலர் இருக்கத்தான் செய்கிறோம்! இத்தகைய மானுடர் செய்யும் எந்தவொரு இழிந்த செயலையும் தம்மீதே ஏற்றிக் கொண்டு பாடுவது, வாழையடி வாழையென வந்துதிக்கும் தகைமையாளர்களின் பண்பாக இருந்து வருகிறது! அந்த மாபெரும் மரபினைப் பின்பற்றி அண்ணன் ஷெரீப் அவர்களும் இதயம் கசிந்துருகி, இறையருள் வேண்டிப் பாடியுள்ளார்கள்.

சர்வ சமய இலக்கியங்களைச் சலிப்பின்றி ஆய்ந்த உள்ளம்! மரபினைப் போற்றும் அவர்களது மகத்தான பாடல்களில், தேவாரப் பாடல் முறை தேனாக ஓடி வருகிறது! திருவாசகத்தின் அருள் வாசகங்கள் தித்திக்கத் தேடி வருகின்றன! பாடல்களைக் குரலெடுத்துப் படிக்கும்போது சந்தங்கள் சொந்தங் கொண்டாடுகின்றன!

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரிசையில் ‘இறையருள் வேட்டல்’ எல்லா வகையிலும் தனிச் சிறப்புக்குரியது என்று சொன்னால், அது மிகையாகாது. அது மட்டுமல்ல; வடலூர் வள்ளல் வழங்கிய தமிழே கவிதைத் துறையில் எளிமையின் தொடக்கம்! அதனையுளங் கொண்டு உருவான இந்நூல், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வானில் முளைத்த விடிவெள்ளி என்றும் சொல்லலாம்!” என்றும் எடுத்துரைக்கிறார் (மேலது., அறிமுகவுரை, பக். 13-14).

அந்த வகையில் கவி கா.மு. ஷெரீபின் இறையருள் வேட்டல் என்னும் நூல் இஸ்லாமியக் கருத்து விளக்கமாகவும் பொதுவான அனைத்துச் சமய மக்களுக்கு நற்பண்புகள் பலவற்றை எடுத்துரைக்கும் நற்பெட்டகமாகவும் திகழ்கிறது.

துணைநூற்பட்டியல் :

1.           கவி கா.மு. ஷெரீப், 1985. கண்ணகியின் கனவு, சென்னை : அபிராமி நிலையம்.

2.           கவி கா.மு. ஷெரீப், 1990. கவி கா.மு. ஷெரீப் கவிதைகள், சென்னை : கலாம் பதிப்பகம்.

3.           கவி கா.மு. ஷெரீப், 1978. இறையருள் வேட்டல், சென்னை : சீதக்காதி நூல் வெளியீட்டகம்.

4.           வலவன் மு. 1998. நெஞ்சத்திரையில் நினைவுக்கோடுகள், சென்னை : முத்தையன் பதிப்பகம்.

5.           2014, கவி கா.மு. ஷெரீப் நூற்றாண்டு மலர், சென்னை : முஸ்தபா தமிழ் அறக்கட்டளை.

- முனைவர் உ. அலிபாபா, பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி

& ப.முத்துபாண்டியன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி