தமிழினத்தின் குருதி குடித்துக் கும்மாளம் போடும் கொலைகாரன் இராசபட்சேயை சிறப்பு விருந்தினராக இந்தியா அழைப்பதை எதிர்த்துத் தீக்குளித்த சேலம் இளைஞர் விஜயராஜ் இறந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சத்தீயாகச் சுடுகிறது.

இன்று(18.09.2012) காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு, தோழர்களுடன் சென்று அவரை நேரில் பார்த்த போது நெஞ்சம் பதைத்தது. தன்நினைவு இழந்த நிலையில், தீக்காயங்களின் வலி பொறுக்கமுடியாமல், முனகிக் கொண்டிருந்தார். கட்டிளங்காளை என்பார்களே அப்படிப்பட்ட உடல் கட்டு. 26 அகவையுள்ள இளைஞர் விஜயராஜ். தமிழினம் காக்கத் தன்னையே எரித்துக் கொள்ளும் அளவிற்கு இனப்பற்று கொண்டவர்.

அப்படிப்பட்ட விஜயராஜ் உயிரோடிருந்து தான் பிறந்த இனத்திற்குப் பணியாற்ற வேண்டியவர். தன் பெற்றோர்க்கும் சகோதரர்களுக்கும் சகோதரிக்கும் கடமை ஆற்ற வேண்டியவர். அவர் இழப்பு தமிழினத்திற்கும் அவர் குடும்பத்திற்கும் பேரிழப்பு.

தமிழ் இளைஞர்கள், இன உணர்வாளர்கள் விஜயராஜ் மரணத்தில் உறுதியேற்க வேண்டும். “இனப் பகைவர்களோடு போராடுவோம். அப்போராட்டத்தில் மடிந்தால் மடிவோம். தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள மாட்டோம். இந்த வகையில் எதிரிகள் நம்மைப் பார்த்து கெக்கலிக் கொட்ட வாய்ப்பளிக்க மாட்டோம்” என்பதே அவ்வுறுதி மொழி.

வீரம் செறிந்த மரபில் வந்த நம் இன உணர்வாளகள், தங்களின் வீரத்தைத் தீக்கு இரையாக்கக்  கூடாது. வாழ்ந்து போராட வேண்டும்

தமிழ் இனத்தின் உரிமை காக்க, தன்னை ஈந்து கொண்ட தழல் ஈகி விஜயராஜூக்குத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது. அவர் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Pin It