பல்வேறு சமயங்கள் தோன்றி வளர்ந்தும் வந்து பரவியும் நிலைபெற்று விட்ட இந்தியத் துணைக் கண்டத்தில் சமயப் பூசல்களுக்கும் சமய நல்லிணக்கத்திற்கும்கூட ஒரு வரலாறு உண்டு. நீண்ட நிலப்பரப்பும் பெரிய மக்கள் தொகையும் நெடிய வரலாறும் உடைய ஒரு நாட்டில் சமயங்களின் வளர்ச்சியும் சரிவும் பிணக்கும் காலனிய ஆட்சியின் தொடக்கம் வரை தவிர்க்க இயலாத வரலாற்று நிகழ்வுகளாகச் சித்தரிக்கப்பட்டன.

காலனிய ஆட்சி தொடங்கிய நாள்தொட்டு 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்தியத் துணைக் கண்டத்தில் நிலவிய சமய அமைதியினை ‘மயான அமைதி’ என்றே கொள்ள வேண்டும். ஏனென்றால் காலனிய ஆட்சிக்கெதிராக எழுந்த தொடக்க காலக்குரல்கள் இங்கே சமயப் பின்னணியில்தான் எழுந்தன. அவற்றை எதிர்ப்புணர்வு என்பதனைவிடச் சமயங்களின் பொதுப் பண்பான ‘மற்றவற்றை வெறுத்தல்’ என்பதாகவே கணிக்க முடிகிறது. ‘வெறுப்பதற்கு ஏதும் இல்லாததால் இந்துக்கள் பிரிட்டிஷ்காரர்களை வெறுத்தார்கள்’ என்று நிராத் சௌத்திரி கணிப்பதனை நாம் அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. இந்த வெறுப்புணர்ச்சிக்குத் தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற தனித்த பண்பாட்டு வேர்களையுடைய நிலப்பகுதிகள் விதிவிலக்காக இருக்கலாம். ஆனாலும் இந்தியச் சமூகத்தின் பொதுப் பண்பாக இதனையே நாம் கொள்ள முடியும்.

periyar_414சமயங்கள், அவற்றுக்கு இடையிலான இணக்கங்கள் குறித்த பெரியாரியப் பார்வை 20-ஆம் நூற்றாண்டுச் சரக்கன்று. அதன் குறுவித்துக்களை வரலாற்றில் சில நூற்றாண்டுகள் பின்சென்று கூட நம்மால் காண முடியும். 13-ஆம் நூற்றாண்டில் பிறந்த தமிழ்ச் சித்த மரபானது வேதம், வேத மொழி, சாதி அமைப்பு, பார்ப்பனர், கோயில் ஆகிய கருத்தியல் நிறுவனங்களையும், உலகியல் நிறுவனங்களையும் மறுத்தது. ஆனால் கடவுளை மறுக்கவில்லை.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அச்சு ஊடகத்தின் வளர்ச்சியோடு பல புதிய போக்குகள் தமிழ்நாட்டில் எழுந்தன. ஒன்று, வேதத்தின் தலைமையினையும் புனிதத்தினையும் முதன்மைப்படுத்தி அதனையே இந்திய தேசியமாகக் காட்ட முயன்ற ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள். சர் வில்லியம் ஜோன்ஸ் போன்ற காலனியவாதிகள் ஆக்கித் தந்த ‘இந்து’ என்ற சொல் இவர்களுக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்தது. மற்றொன்று, ஆகமங்களை முன்னிறுத்தித் தமது மரபுவழிச் சமூக அதிகாரத்தினைப் பார்ப்பனர்களுக்கு எதிராகத் திருப்பிய சைவர்கள். மூன்றாவது, மரபுவழிச் சமூகத்தில் பறிபட்டவர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருந்த பெருவாரியான மக்கள் திரளின் எழுத்து வழியான எதிர்ப்புக் குரல்கள். இம் மூன்றாவது பிரிவினர் முதல் தலைமுறையாக எழுத்தறிவு பெற்றவர்கள். இவர்களில் கிறித்துவர்களும் இசுலாமியரும் அடங்குவர்.

இந்திய தேசியத்தின் தோற்றம் என்பது 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசியல் இயக்கமாகத் தோன்றவில்லை. மாறாக அது சமய, சமூகச் சீர்திருத்த இயக்கமாகவே தோன்றியது. கருத்தியலை வளர்த்தெடுக்கும் அச்சு ஊடகங்கள் (நாளிதழ், வார இதழ்கள்) எழுத்தறிவு பெற்ற மேல் சாதிக்காரர்களின் கைவசப்பட்ட காரணத்தால் உருவான நிலைமை இது. இந்திய தேசிய இயக்கத்தைத் தூய அரசியல் இயக்கமாகத் தோன்ற விடாமல் ‘சமய மறு உருவாக்க’ இயக்கமாக மாற்றிக் காட்டியதில் கர்னல் ஆல்காட், பிளாவட்ஸ்கி அம்மையார், அன்னிபெசன்ட் போன்ற ஐரோப்பிய அமெரிக்கர்களுக்கும் பங்குண்டு. வடமொழி வேதத்தை விவாதத்துக்கு அப்பாற்பட்ட வழிகாட்டியாக இவர்கள் முன்வைத்தபோது, பாரம்பரியச் சமூக அதிகாரத்தைக் கையிலே வைத்திருந்த மேல் சாதியாருக்கு அது வசதியாகப் போயிற்று. அதன் விளைவாக இந்திய தேசியக் கட்டுமானத்தில் ‘இந்து’ என்னும் சமய ஏகாதிபத்திய உணர்வு உள்ளார்ந்த பண்பாக மாறிவிட்டது. பின்வந்த ஒரு நூற்றாண்டுக் காலத்தில் ஏன், இன்று வரை இந்தியச் சமூக வரலாற்றிலும் சமய வரலாற்றிலும் இந்தச் சொல் உருவாக்கிய சுவடுகளை எளிதில் மறந்துவிட முடியாது.

திலகர் யுகம் முடிந்து காந்தியுகம் பிறப்பதற்கு முன்னால் கிறித்தவர், இசுலாமியர், பார்சி, சீக்கியர் அல்லாத பெருந்திரளான மக்கள் திரளைக் குறிக்கும் சமயப் பெயராக ‘இந்து’ என்ற சொல் ஆக்கப்பட்டுவிட்டது. வேதத்தின் உயர்வு, பார்ப்பனரின் சடங்கியல் தலைமை, வடமொழியின் புனிதம், வருணாசிரமம் ஆகியவற்றைக் குறிக்கும். இந்தச் சொல்லுக்கு ‘ஆரிய’ என்ற சொல்லும் நெருக்கமானதாக ஆக்கப்பட்டது. இவற்றுக்கு நேரெதிரான கலகக்குரல் ஒன்று 1916 டிசம்பரில் சென்னையிலிருந்து எழுந்தது. (Non-Brahmin Manifesto) ‘பிராமணரல்லாதார் அறிக்கை’ என்ற பெயரில் வெளியிடப் பெற்ற அந்த அறிக்கை, மரபு வழியான சமய அதிகாரத்துக்கு எதிராக எழுந்த ஒரு சவாலாகும். இந்த அறிக்கை வெளியாவதற்கு முந்திய 40 வருடங்களாகத் தமிழ்நாட்டில் அச்சு ஊடகம் என்பது, வெகு மக்களிடமிருந்து அன்னியப்பட்ட பார்ப்பனிய, சைவ, கிறித்தவர்களின் சமயச் சண்டையினையே தாங்கிப் பிடித்து வந்தது. தமிழ்நாட்டில் பிரம்மவாதி, பிரம்ம வித்யா, ஆரிய ஜன பரிபாலினி, தத்துவ விவேசினி, சித்தாந்த தீபிகா, போர்ச்சத்தம் ஆகிய இதழ்களும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த இந்து சாதனம், சத்திய வேத பாதுகாவலன், ஞானசித்தி ஆகியவையும் இவ்வகையான போக்கிற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

பிராமணரல்லாதார் அறிக்கைக்குக் கிடைத்த முதல் வெற்றி அச்சு ஊடகத்தின் வழி, படித்த பெருமக்கள் நடத்தி வந்த மோதல்களையும், காட்டி வந்த பிற சமய வெறுப்புணர்வையும் நிறுத்தி வைத்ததுதான். வைதீக சமயத்தவர் என்ற பெயரால் அறியப் பெற்ற அத்வைதிகள், சைவர், வைணவர் ஆகியோரைப் ‘பிராமணரல்லாதார்’ என்ற சொல்லாட்சி அதிர்ச்சியமையச் செய்தது. வடமொழி வேதத்தின் புனிதத்தை முழுமையாகவும் ஓரளவாகவும் ஏற்றுக் கொண்ட இவர்கள் தமக்கான பொது எதிரியாக இச்சொல்லாட்சியைக் கண்டனர். எனவே அவர்களுடைய பிற சமய மறுப்பு, வெறுப்பு ஆகியவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

பிராமணரல்லாதார் அறிக்கையை இந்து நாளிதழ், ‘தற்கொலை முயற்சி’ என்று வருணித்தது. வேதப் பொற்காலத்தை முன் வைத்த அன்னிபெசண்டும் வேதப் பெருமையில் நம்பிக்கையுடைய மகாகவி பாரதியாரும் கூட இந்தச் சொல்லாட்சியை எதிர்த்தனர். ‘பிராமணரல்லாதார் என்று ஒரு ஜாதியே கிடையாது’ என்பதே அவர்கள் முன் வைத்த மறுப்பின் முதற் பகுதியாகும். பெரியார் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இதனையே நாம் பெரியாரியத்தின் தொடக்கமாகக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ‘பிராமணல்லாதார்’ என்ற சொல் உணர்த்தும் பொருளையே பெரியார் பல சமயங்களுக்கும் உறவான ஒரு சொல்லாக்கிப் பொருள் விளக்கம் செய்தார் (1925).

“தென்னாட்டில் பொதுவாக இக்கூட்டத்தாரை (பிராமணரை) நீக்கிய பொது ஜனங்களுக்கு பிராமணல்லாதார் என்ற பெயர் வழங்கப்படுகிறது. முக்கியமாக இதில் கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் முதலிய இந்துக்களல்லாதாரும் பிராமணரல்லாதவர்களே. இந்துக்களுக்குள்ளும் பிராமணர் நீங்கிய மற்றவர்கள் பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்ட பல ஜாதிப் பெயர்கள் சொல்லிக் கொள்ளப்பட்டாலும் அவர்களும் பிராமணரல்லாதவர்களே. அல்லாமலும் தீண்டாதாரென்று கூறி தொடக்கூடாதவர்கள், பார்க்கக் கூடாதவர்கள் என்று தள்ளி வைத்திருக்கும் ஒரு பெரும் கூட்டத்தாரும் பிராமணரல்லாதவர்களே” (தமிழர் மாநாடு / குடி அரசு 8.11.1925)

வேறு சொற்களில் கூறுவதானால் ‘இந்து’ என்ற சொல் உணர்த்தும் பொருளுக்கு எதிராகப் பெரியார் ‘பார்ப்பனரல்லாதார்’ என்ற கருத்தியலை முன் வைத்தார். இந்து என்ற கருத்தாக்கம் முதலில் ஐரோப்பிய அறிவாளிகளாலும பின்னர் காலனிய ஆட்சியாளர்களாலும் முன் வைக்கப்பட்டதாகும். தேசிய இயக்கத்தின் ஊடாக இந்த (சொல்) கருத்தாக்கத்தின் வழியாகப் பார்ப்பனர்கள் தங்கள் சமூக ஆதிக்கத்தையும் புதிய அரசியல் அதிகாரத்தையும் தமதாக்கிக் கொள்ள முனைகின்றார்கள் என்பது அவரது குற்றச்சாட்டாகும். பெரியாருக்கு முன் 1912-இல் அயோத்திதாசப் பண்டிதரும் காங்கிரசைப் ‘பார்ப்பனக் காங்கிரஸ்’ என்று வருணித்தார். பின்னாளில் அந்தக் கருத்தையே எதிரொலித்துப் பெரியாரும் காங்கிரசிலிருந்து விலகினார்.

பார்ப்பனர்களின் பிறப்புவழிப்பட்ட மேன்மையினை உணர்த்தும் வருணாசிரமக் கொள்கை, இந்து என்று கற்பிக்கப்படும் மதத்தின் உயிர்நாடி என்பதைக் கொண்டு அதை முற்றாக நிராகரித்த பெரியார், ஏனைய சிறுபான்மைச் சமயங்களை மனித சமத்துவத்தைக் கொள்கையளவிலாவது ஏற்றுக் கொள்கின்றன என்பதால் அவற்றோடு ஓரளவு சமரசம் செய்து கொள்ள முன் வந்தார் என்றே தோன்றுகிறது.

‘இன்று நம் நாட்டில் பெரும் ஒழுக்கக்கேடு நிலவி வருகிறது. இனியும் வளரும் போல் தெரிகிறதேயொழிய குறைகிற வழி காணப்படவில்லை. இதன் காரணம் நமது மதம் என்னும் இந்து (ஆரிய) மதந்தான்’ என்று குற்றம் சாட்டுகிற பெரியார்,

‘ஒரு முஸ்லிமிடமோ ஒரு கிறிஸ்தவனிடமோ இருக்கிற ‘மன இரக்கம்’ மனிதனை மனிதனாக மதிக்கும் தன்மை, இன அன்பு, உதவி – இந்து என்பவனிடம் இல்லை’ என்று ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

கிறிஸ்துவ மத நிறுவனங்கள் பெரியாரை அவரது சமகாலத்தில் ஒப்புக் கொள்ளவில்லை. கிறித்துவ மதத்திற்குள் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். 1933-இல் திருச்சியிலிருந்து வெளி வந்த ‘சர்வவியாபி’ என்னும் கத்தோலிக்கக் கிறித்துவ இதழ் பெரியாரைத் தாக்கி எழுதியது. ஆனால் அதே காலத்தில் ஆதி திராவிட கிறித்தவர்கள் நடத்திய மாநாடுகளுக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். இசுலாமிய மாநாடுகளிலும் குறிப்பாக மிலாதுநபி (முகமது நபியின் பிறந்த நாள்) விழாக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கின்றார்.

பெரியாரின் நாத்திக உணர்வு கடவுட்கோட்பாட்டைவிடக் கடுமையான விமரிசனங்களை ‘இந்து’ என்று அறியப்பட்ட மதத்தின் மீதே வைக்கின்றது. கடந்த 80 ஆண்டுக்கால அரசியல் வரலாற்றினைக் கூர்ந்து நோக்குபவர்களுக்குப் பெரியாரின் ‘தீர்க்க தரிசனம்’ புரியக் கூடியதாக அமையும். பண்டித மதன்மோகன் மாளவியாவும் பி.எஸ். மூஞ்சேயும் இருந்த தேசிய இயக்கத்தில்தான் காந்தியடிகளும் இருந்தார். பெரியார் மாநிலத் தலைவராக இருந்த காங்கிரசில்தான் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை எதிர்த்த சத்திய மூர்த்தியும் இருந்தார். தேசிய இயக்கத்தின் உள் கட்டுமானத்தில் ‘இந்துத்துவம்’ ஒரு முக்கியப் பங்கினைத் தொடர்ந்து ஆற்றி வந்திருக்கிறது என்பதே இதன் பொருளாகும்.

ஒரு நாட்டின் இதிகாசம் (Legend) என்பது அந்த நாட்டின் தொல்குடியான மக்களிடம் பிறப்பதாகும். அந்த நாட்டின் சமூக வரலாற்றோடும் பண்பாட்டோடும் அது தொடர்புடையது. ஆனால் அதனை ஒரு குறிப்பிட்ட சமயத்துக்கான நூலாகச் சுருக்கிப் பார்ப்பது ஆபத்தான போக்காகும். அதனைவிட ஆபத்தானது ஒரு குறிப்பிட்ட சமயத்தின் மீட்டுருவாக்கத்துக்காக அதனைப் பயன்படுத்துவதாகும்.

‘இந்து’ ஏன்ற சொல் சமய ஆதிக்கச் சொல்லாக மட்டுமன்றி இன்று அரசியல் ஆதிக்கத்தையும் குறிக்கும் சொல்லாக வளர்ந்திருக்கின்றது. இதற்கு முதற்காரணமாக ‘இந்து’ என்ற சொல்லுக்குள் புதைந்திருக்கும் ஆதிக்க உணர்வினை இனம் பிரித்துக் காணலாம்.

வேதத்தை மட்டுமே கடவுளாகக் கொண்ட ஸ்மார்த்தார்கள், ஆகமங்களையும் கோயில் வழிபாட்டையும் முன்னிறுத்தும் சைவ வைணவர்கள், இந்த இரண்டு நெறிகளுக்குள்ளும் அடங்காத தொல்பழஞ் சமயக் கூறுகளையுடைய பெருவாரியான மக்கள் திரள் இவர்கள் அவைரையும் ‘இந்துக்கள்’ என்ற கட்டுக்குள் அடக்க முயலுவதையே நாம் சமய ஆதிக்க உணர்வு என்கிறோம். இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் ‘இந்து’ என்ற மேலைச் சொல்லாடலுக்கு நேரிடையான வரைவிலக்கணம் எதனையும் தரவில்லை என்பது இந்துத்துவவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது.

1950-இல் தமிழ்நாட்டு அரசு தன் மீது தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் பெரியார் அளித்த வாக்குமூலத்தில் ‘இந்து சமயத்தவர்’ என்பதனைப் பெரியார் பின்வருமாறு விளக்குகிறார்:

“கடந்த பல நூற்றாண்டுகளாகவே இந்து சமுதாயம் பிராமணர், பிராமணரல்லாதார், தீண்டப்படாதார் என மூன்று பிரிவினர்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. நான் கடைசியாக எடுத்துக்காட்டியுள்ள தீண்டப்படாத பிரிவினர், இந்து மதத்திற்குப் புறம்பானவர்கள். அவர்களுக்குக் கல்வி, சொத்து, சமுதாய அந்தஸ்து முதலியவைகள் கிடையா. அவர்கள் அடிமைகள்” (தீர்ப்பு நாள் 30.09.1950 குடியரசு 02.10.1950 115-வது பிறந்தநாள் மலர்.)

இந்தக் குரல் இந்திய மக்கள் தொகையில் 70% உள்ள கிறித்தவரோ இசுலாமியரோ அல்லாத ஒடுக்கப்பட்ட மக்களுடைய குரலாகவும் இன்று எதிரொலிக்கப்படுகின்றது. இந்து சமய வரம்புக்குள் இந்த மக்கள் திரள் வந்துவிடாதபடியே, காலமும் வெளியும் இந்து சமயவாதிகளாலும் அரசர்களாலும் பங்கீடு செய்யப்பட்டிருந்தன என்பதே வரலாறு காட்டும் உண்மையாகும்.

இவர்கள் அல்லாத மற்ற இரண்டு பிரிவினர்களுக்கு இடையேயும் இன்று சமய அடையாளம் (Religious Identity) குறித்த முரண்பாடுகள் தலைதூக்கித் தொடங்கியுள்ளன.

பெரியார் குறிப்பிடும் பிராமணரல்லாதாரில் சைவர்களும் வைணவர்களும் இன்று ‘இந்து’ என்ற சொல்லை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். இந்த இரண்டு சமயங்களும் பெருங்கோயில்களைத் தம்மிடத்தில் வைத்துள்ள பிரிவினர் ஆவார்கள். இக்கோயில்களின் வழிபாட்டு முறைகள் அவரவர்களுக்கு உரிய ஆகமங்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. கோயில்களுக்கு உள்ளாக ‘இந்து’ என்ற சொல் செல்லுபடியாகாது என்பது இவர்கள் வாதமாகும். மிக அண்மையில் (ஐந்து ஆண்டுகளுக்கு முன்) திருநெல்வேலியில் காஞ்சி சங்கராச்சாரி சிவன் கோவில் திருப்பணியைத் தொடங்கி வைப்பதற்கு எதிராக சைவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். காஞ்சி சங்கராச்சாரியார் இவ்வழக்கில் பின்வாங்கிவிட்டார்.

“ஆகம வழி நடத்தப்படும் கோயில்களை ‘இந்து’ என்ற போர்வையில் ஸ்மார்த்தரான (ஸ்மிருதிகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, ஆகமங்களைப் புறந்தள்ளிவிட்டு, தனியொரு கடவுளின் இருப்பினை ஏற்றுக் கொள்ளாத, பரமார்த்திகத்தில் மறைமுக நாத்திகவாதியான) சங்கராச்சாரியாரிடம் பறிகொடுக்க மாட்டோம்” என்பதே அவர்களின் எதிர்ப்புக்குக் காரணமாகும்.

இந்திய அரசியல்வாதிகள் இன்று சங்கர மடங்களுக்குத் தரும் முன்னுரிமையினை நூற்றுக்கணக்கான சமய நெறிகளுக்கான மடங்களுக்கும் கோயில்களுக்கும் தர முன்வருவதில்லை. எனவே ‘நிழல் வடிவில்’ சங்கர வேதாந்தம் எனப்படும் ஸ்மார்த்தப் பார்ப்பனச் சித்தாந்தமே ‘இந்து’ என்ற சொல்லுக்கு முழு உரிமை கொண்டாடுகிறது.

மதத்தின் பெயரால் ஏற்படும் பதற்றங்கள், இரத்தக் களரிகள் பிறவகை வன்முறைகள் அனைத்திலும் ‘இந்து’ என்ற கருத்தியலே மையமாகத் திகழுகின்றது. எனவே பெரியாரியப் பார்வையில் ‘இந்து’ என்னும் சொல்லுக்கு அரசியல் சட்டம் நேரிடையான வரைவிலக்கணத்தைத் தர வேண்டும். அந்தச் சொல் பல்வேறு சமயங்களையும் நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை முறைப்படுத்திச் சட்டமாக்க வேண்டும்.

‘நாஸ்திகம்’, ‘ஆஸ்திகம்’ என்னும் சொற்களுக்கு சங்கரவேதாந்தம் தரும் பொருளை எந்த சமயவாதியும் ஏற்றுக் கொள்ள முடியாது “ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டே கூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும். ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம்.... வைதீக வழக்கை ஆட்சேபிப்பது தான் நாஸ்திகம் என்பதே ஞான சம்பந்தன் கொள்கையாகவும் இருந்திருக்கிறது. ஈசுவர பக்தி இல்லாமலிப்பதுங்கூட அல்ல”. (தெய்வத்தின் நூல், தொகுதி2, பக்.407-408). மேற்குறிப்பிட்ட சிக்கல்களைத் தெளிவுபடுத்த இந்த வாக்குமூலம் போதிய சான்றாகும். இந்த வாக்குமூலம் காஞ்சி (மறைந்த) சங்கராச்சாரியுடையதாகும்.

வேதத்தை முன்னிறுத்துகிற போதே மனித சமத்துவத்தை நிராகரிக்கக்கூடிய மனுதர்மம், வருணாசிரமம், பிறப்புவழியான பார்ப்பன மேலாண்மை ஆகியன அதன் உள்ளாக அடங்கிவிடுகின்றன. எனவே ‘இந்து’ என்ற சொல்லுக்கான அரசியல் சட்டப் புதிய வரைவிலக்கணம் இதனை மையங் கொண்டே அமைய வேண்டும். அதுவரை சமய நல்லிணக்கம் (Religious Harmony) என்பது இந்தியாவில் சமயச் சிந்தனையாளர்களின் கனவாகவே இருக்க முடியும்.

- தொ.பரமசிவன்

(நன்றி: தெய்வம் என்பதோர், யாதுமாதி பதிப்பகம், திருநெல்வேலி)

Pin It