உழைக்கும்  வெகுமக்களைப் பிறவியில் தாழ்ந்தவர்களாக - இழிந்தவர்களாகக் கருதியதும் அப்படியே நடத்துவதும் இந்துத மதம் ஒன்றே.

பிறவியால் பிராமணன் உயர்ந்தவன்; சூத்திரன் தாழ்ந்தவன் என்பது இந்துமதம் மட்டுமே. சூத்திரர்களுக்குக் கீழே பஞ்சமர்கள் இருக்கிறார்கள் என்பதும் இந்து மதமே.

இந்த ஏற்பாடு இன்றும் இந்துச் சட்டத்தில் கெட்டியாக இருக்கிறது; இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் உறுதிப்பட இருக்கிறது.

இதைக் கண்டுங்காணாமல் இருப்பவர்கள் அதிகம் பேர்.

மெத்தப் படித்தவர்களும், அரசியல் தலைவர் களும், பெருஞ்செல்வந்தர்களும், பேராசிரியர்களும், வழக்குரைஞர்களும், மருத்துவர்களும், வணிகர்களும், தொழிற்சாலை அதிபர்களும் இதுபற்றிக் கவலைப்படுவ தில்லை என்பதுடன், இவற்றைப் படித்துப் பார்ப்பதும் இல்லை; கரிசனத்தோடு சிந்திப்பதும் இல்லை.

சித்தார்த்தர் என்கிற கவுதம புத்தர், (கி.மு.563-483) தொல் பழங்காலத்தில், கி.மு.500இல், அறிவுபூர்வ மாகப், பிறவியில் உயர்வு-தாழ்வு இருப்பதைக் கண்டித்தார். கி.பி.500 முதல் சித்தர்கள் கண்டித்தனர்.

புத்தர், திருவள்ளுவர், சித்தர்களுக்குப்பின் இதைப் பற்றித் தமிழகத்தில் முதலில் கவலைப்பட்டவர் வடலூர் இராமலிங்க அடிகள். அவர் 1865இல் கவலைப்பட்டார். உடனே அவர் பின்வருமாறு பாடினார்.

“வேதாகமங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாகமத்தின் விளைவறியீர்

சூதாகச் சொன்னவலால்

உண்மை வெளிதோன்ற உரைத்தலிலை

என்ன பயனோ இவை”

மேலும்,

“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்...

.......................”

என்றும் கூறி இடித்துரைத்தார்.

இவர் சூத்திரராகப் பிறந்தவர்; நடராசப் பெருமானைத் துதித்தவர். ஆனாலும் பிறவியில் கீழ்ச்சாதிக்காரர்.

அதனால்தான் மேலே கண்டவாறு பாடினார்.

தமிழகத்தில் தோன்றியவர்களுள் அடுத்து அத்திப் பாக்கம் அ. வேங்கடாசல நாயகர் 1872இல் பிறவி பேதத்தைக் கண்டித்தார்.

பண்டித  அயோத்திதாசர், கி.பி.1907இல் பிறவி பேதத்தைக் கண்டனம் செய்தார். பெரியார் ஈ.வெ.ரா. 21.12.1922இல் கண்டனம் செய்தார்.

இந்தியாவில் பிறந்த இவர்கள் தங்கள் தங்களை இழித்துப் பேசியதால் பிறவி சாதி இழிவைக் கண்டித்தனர்.

ஆனால் செருமனியில் பிறந்த காரல்மார்க்°, முதன் முதலாக 10.5.1853இல் பிறவி சாதி அமைப்பைக் கண்டனம் செய்து பின்வருமாறு எழுதினார்.

மானவ தர்மதர்ம சாத்திரத்தில் ஓ-ஆம் அத்தி யாயத்தில் 62-ஆம் சுலோகத்தில், “இந்தியாவில் உள்ள இழிசாதி மக்கள், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, ஒரு சாகப் போகிற புரோகிதனையோ அல்லது பசுமாட்டையோ காப்பாற்றுவதற்காக தத்தம் உயிரை விட்டால், மோட் சத்தை அடையலாம் என நம்பு கிறார்கள்” (compare with the proceeding utarance of Manava Dharma, Chapter X, Sec.62. “Desertion of life, without reward, for the sake of preserving a priest or a cow... may cause the beatitude of those base born tribes”)

என, 10.5.1853இல் எழுதினார்.

இந்தியாவில் அன்றும் இன்றும் உழைக்கும் மக்கள் கீழ்ச்சாதிக்காரர்களே. இதுபற்றி மார்க்சு “மூலதனம்” இரண்டாம் தொகுதியில் மேலேகண்ட இச்செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

இச்செய்தியைத் தமிழ்மக்களின்- இளைஞர்களின்-மாணவர்களின் பார்வைக்குக் கொண்டு வந்தது மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியே.

பெரியார் ஈ.வெ.ரா. தமிழகத்தில் 1927 முதல் பொது மேடைகளில் சமதர்மம் பற்றிப் பேசினார். சமதர்மம் என்பது உழைக்கும் வகுப்பு மக்களுக்கும் பெண்களுக்கும் முழு விடுதலை அளிப்பது என்பதை யும் அவர் அறிந்திருந்தார்.

அவர் மனுநீதி குறித்து எப்போது கவலைப்பட்டார்? 1922இல் கவலைப்பட்டார். எதற்காக? எதனால்?

1922இல் நாடார்கள் தீண்டப்படாதவர்களாக நடத்தப் பட்டார்கள். இதுபற்றி அருப்புக்கோட்டை நாடார் வாலிபர் கள் 31.10.1922இல் ஈ.வெ.ரா.விடம் முறையிட்டார் கள். “காங்கிரசுக் கட்சி அத்தீண்டாமையை ஒழிக்கப் பாடுபடுமா?” என்று அவர்கள் கேட்டனர். “நான் பாடு படுவேன்” என, 31.10.1922இல் ஈ.வெ.ரா. வாக்குக் கொடுத்தார்.

அவ்வாக்கை நிறைவேற்ற வேண்டி, 21.12.1922 இல் கோவையை அடுத்த திருப்பூரில் வாசுதேவ அய்யர் தலைமையில் நடந்த மாநாட்டில், மேற்படி தீண்டாமை ஒழிப்புத் தீர்மானத்தை ஈ.வெ.ரா. முன் மொழிந்தார்.

மாநாட்டுத் தலைவர் வாசுதேவ அய்யர், “இது, மதச்சம்பந்தப்பட்ட தீர்மானம். காங்கிரசு அரசியல் கட்சி - இதை அனுமதிக்க முடியாது” எனக் கூறித் தள்ளுபடி செய்துவிட்டார். அங்கிருந்த சி. இராசகோபாலாச்சாரியார், எ°. சீனிவாச அய்யர் ஆகியோரும் அத்தீர்மானத்தை எதிர்த்தனர். ஈ.வெ.ரா. தீர்மானம் தோற்றுப் போயிற்று.

அதனால் சினங்கொண்ட ஈ.வெ.ரா. 21.12.1922 இரவு அங்கேயே நடந்த காங்கிர° கூட்டத்தில், “நால் வருணத்தையும் தீண்டாமையையும் காப்பாற்றும் இராமாயணத்தையும் மனுநீதியையும் எரிக்க வேண்டும்” என்று முதன்முதலாக அடித்துக் கூறினார்.

தீண்டாமையும் நால்வருணமும் உழைக்கும் வெகுமக்களைக் கூறுபோடுகின்றன; ஒன்று சேராமல் தடுக்கின்றன; சமுதாய விடுதலை வரத் தடைகளாக உள்ளன.

சமுதாய விடுதலை, அரசியல் விடுதலை, பொரு ளாதார, பண்பாட்டு விடுதலை இவை ஒருசேர வந்தால்தான் மானிட விடுதலை-மானிட சமத்து வம் வந்து சேரும். இவற்றுள் ஒன்று குறைந் தாலும் மானிட சமத்துவம் வராது.

இந்திய சமுதாயத்துக்கு - இந்த மண்ணுக்கு ஏற்ற தீர்வு இது; வேலைத் திட்டம் அல்லது வியூகம் இது. இதை எவர் -எக்கட்சி புறந்தள்ளி னாலும் அது குறைபாடே; தவறே.

இத்துடன் மட்டுமா?

மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பல்துறை அறிஞர்; பௌத்தம் ஆய்ந்தவர்; மார்க்சியம் கற்றவர்; வேதங்களை, °மிருதிகளை வடமொழியில் கற்றவர்.

மகத் குளத்தில் உள்ள குடிநீரை எந்த மனிதனும் அள்ளிக் குடித்துத் தாகம் தணிக்கலாம். தீண்டப்படா தோரும் அள்ளிக் குடிக்கலாம். குடத்தில் முகந்து போக லாம் என்கிற உரிமையை அவ்வூர் நகராட்சி வழங்கி யிருந்தது.

அந்த நிலையிலும் நூற்றுக்கணக்கான மக்களுடன் படிக்கட்டில் நின்று நீரை அள்ளிக் குடித்ததைப் பொறுக் காமல் சாதி இந்துக்கள் கலகம் விளைவித்தனர்.

அதைக் கண்டனம் செய்யும் வகையில் அம் பேத்கர் அங்கேயே மனுநீதியை எரித்தார்.

இவையெல்லாம் 20ஆம் நூற்றாண்டில் நடந்தவை.

இவற்றை நிலைநாட்டும் இந்திய அரசமைப்புச் சட்டமும், இந்துச் சட்டமும் பாதுகாக்கப்படுகிற வரையில் - தமிழ்மொழி எப்படித் தழைக்கும்? இவையும் இராமாயணமும் பாரதமும் பள்ளிப் பாடங்களிலும், ஊர் விழாவிலும், வீடுகளிலும் படிக்கப்படும் வரையில் சூத்திரப் பட்டம் எப்படி ஒழியும்? தமிழ்த் தேசியம் எப்படி மலரும்? திராவிட இன உணர்வு எப்படி ஓங்கும்?

இவை பற்றி ஒவ்வொரு மார்க்சியத் தோழரும், பெரியாரிய, அம்பேத்கரியத் தோழரும் மனங்கொண்டு சிந்தியுங்கள் எனப் பணிவன்புடன் வேண்டுகிறேன்.

Pin It