கனிமொழியின் பிணை மனுவை சி.பி.ஜ நீதிமன்றம் மீண்டும் நிரகரித்துள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 437ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவில் தான் பெண் என்பதாலும் மாநிலங்களவை உறுப்பினர் என்பதாலும் பிணை வழங்கவேண்டும் என்று கோரியிருந்தார் அந்த பிணை மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. கலைஞர் மிகவும் உடைந்துபோனார். ஆனாலும் காங்கிரசுடன் கூட்டணி நீடிக்கும் என்று அறிவித்தார். கலைஞர் நிலைமை வடிவேல் படத்தில் "எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் இவன் ரெம்ப நல்லவன்னு சொல்லராங்க” என்ற நிலையில் போய்க் கொண்டு இருக்கிறது. சரி விசயத்துக்கு வருவோம்.

கனிமொழிக்கு சட்டப்படி பிணை வழங்கவேண்டும். அது அவருக்கு இந்திய அரசியல் சட்டம் (வெங்காயம்) இன்னும் இருக்கும் சட்டங்கள் எல்லாம் வழங்கியுள்ள உரிமைகள். அது அவருக்கும் பொருந்தும். அவரது பிணை மனு தள்ளுபடியால் வருந்திக்கொண்டு இருக்கும் கனிமொழியின் தந்தையோடு நாமும் சேர்ந்து வருந்துவோம்.

கலைஞரின் செல்ல மகள் இவர் பிறந்த ராசிதான் அவர் ஆட்சிக் கட்டிலில் ஏறக் காரணமாக இருந்தது என்ற பகுத்தறிவுக்கே சவால் விடும் அளவிற்கு பாசமாக வளர்ந்த கனிமொழி, ஊழல் வழக்கில் இந்திய வல்லாதிக்கத்தின் மையமாம் டெல்லியில் திகார் சிறையில் இருந்து வருகிறார்.

கனிமொழி சிறையிலிருப்பது பற்றி குறிப்பிடும்போது நேற்று பூத்த ரோசாவான என் மகள் உடம்பில் வெயிலால் கொப்பளங்கள் வந்து வாடுகிறாள் என்று வருந்துகிறார். நாமும் ஒரு தந்தையாக இருந்து வருந்துவோம்.

(கொத்துக் குண்டுகளாலும், ரசாயனக் குண்டுகளாலும் உடம்பு முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டு துடிதுடிக்க செத்த எம் ஈழ மக்கள் பற்றி உங்களுக்கு நினைவு வந்தால் நான் பொறுப்பல்ல!)

ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?

10 ஆண்டுகளாக மக்களுக்கு வாரி வாரி வழங்கினோமே (தன் மக்களுக்கும்தான்) ('யாரப்பா அது! உங்கப்பன் வூட்டு பணமா'னு கேட்கிறது) அவர் அறிவிக்காத இலவசங்களே இல்லை! ஒரு திருமணம் செய்தால் இன்னொரு திருமணம் என்ற இலவசம் தவிர!!

ஏன் மக்கள் என்னை முழுமையாக தூக்கி எரிந்தார்கள் என்று காரணம் தேடும் இளைஞரே...

தமிழினத்தின் தானைத் தலைவன் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக்கொண்டு மக்கள் வரிப்பணத்தில் செம்மொழி மாநாடு என்ற கனிமொழி மாநாடு நடத்தி, காசு கொடுத்து பதவி கொடுத்து தனது துதிபாடி கவிஞர்களை எல்லாம் கூட்டி வந்து, கவிதை என்ற பெயரில் உங்களுக்கு முதுகு சொரிந்த கூத்தை அரங்கேற்றி, தமிழனுக்கும் தமிழுக்கும் எதுவும் செய்யாததால் தான் இப்படி நடந்திருக்குமோ?

டெல்லியில் காங்கிரசு வல்லாதிக்கத்தை எதிர்த்து, தமிழ் மக்களுக்காய் நீங்கள் வீரச் சமர் புரிந்து கொண்டிருப்பதாக நாங்களெல்லாம் எண்ணியிருக்க நீங்களோ டெல்லிக்காரனிடம் மந்திரி பதவிகளுக்காய் மடிப்பிச்சை ஏந்தியிருக்க, பின்பு கோபமாய் நீங்கள் திரும்பியதைப் பார்த்து நாங்கள் புல்லரித்து போய் பார்த்துக் கொண்டிருக்க, பிறகு தான் தெரிந்தது பதவி பேரம் படியாததால் நீங்கள் திரும்பினீர்கள் என்று. உங்கள் கோபத்தை பதவிக்காக காட்டியதில் சிறு அளவேனும் இனத்திற்காய் காட்டியிருந்தால் காங்கிரசுகாரன் இன்று உங்களை இப்படி பழிவாங்கியிருப்பானா? அதனால் தான் இப்படி எல்லாம் நடக்கிறதோ??

2009ல் ஈழதேசம் முழுவதும் எங்கள் உறவுகள் கழுகுக்கும் நாய்களுக்கும் இரையாகிக் கொண்டு இருக்கும்போது, சிங்கள வெறியர்களோடு உங்கள் இத்தாலி காங்கிரசின் பழிதீர்க்கும் வெறியால், எங்கள் ஈழ உறவுகளை அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும்போது, ஈழத்தில் போரை நிறுத்தக்கோரி தமிழகமே எழுச்சி கொண்டபோது வழக்கம் போல் உங்கள் தந்திர வேலைகளைக் காட்டினீர்கள். முதலில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்றீர்கள்! பின்பு மத்திய அரசைப் புரிந்து கொண்டேன் என்றீர்கள்!

உலகக் கமொடியாக கின்னஸில் இடம்பிடித்த காலை உணவுக்குப் பிறகு மதிய உணவு நேரம் வரை மட்டுமே நீடித்த உண்ணாவிரத நாடகம்!. சட்டமன்ற வெற்றுத்தீர்மானங்கள்! பின்பு புறமுதுகு காட்டி மருத்துவமனையில் படுத்துக்கொண்டும், உங்கள் உண்ணாவிரத நாடகத்தால் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்ற அறிவிப்பை நம்பி பதுங்கு குழியில் இருந்து வெளியில் வந்த மிச்ச பேரும் மடிந்தார்களே! நீங்களும், மீசை இல்லாத தமிழன் சிதம்பரமும் போட்ட நாடகத்தில் எங்கள் உறவுகள் படுகொலை செய்யப்பட்டார்களே? அது காரணமாக இருக்குமோ!

எங்கள் செந்தமிழ் நாட்டில் இவனைபோல் அறிவிற்சிறந்த ஒரு மாவீரன் இனி எப்போழுது கிடைப்பானோ என்று எங்களை ஏங்க வைக்கும் முத்துக்குமார் துடிதுடித்து உயிரிழக்கும்போது கூட உங்களையும், ஈழ மக்களுக்காக போராடாத இனத் துரோகிகளையும் தோலுரித்துக் காட்டிவிட்டு செத்துப்போனானே அதனால் இருக்குமோ?

10 ஆண்டுகளாய் ஆட்சியில் இருந்தும், 20 வருடங்களாய் தூக்குமர நிழலில் இருந்துவரும் மூன்று தமிழ்ப் பிள்ளைகளின் தூக்குக் கயிற்றை அறுத்து எரிய எதுவும் செய்யாமல், தன் மகனின் அடியாட்கள் என்ற ஒரே தகுதிக்காக தண்டனை குறைப்பு செய்து, அவர்களுக்கு மட்டும் சலுகை காட்டி விடுதலை செய்த நீங்கள், 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை முடித்த இஸ்லாமிய சிறைவாசிகள் காலக் கிரகத்தில் அடைக்கப்பட்டு, அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நின்று ஆதரவு இல்லாமல் அழுகிறதே? சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் அதில் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மட்டும் பாரபட்சம் காட்டிய உங்கள் துரோகத்தினால் இப்படி நடந்திருக்குமோ..?

உங்கள் துரோகத்தால் வீழ்ந்த ஈழத்தில் உங்கள் மகள் வயதுடைய எங்கள் இசைபிரியாக்கள் மண்ணிழந்து, மானமிழந்து, துடிதுடித்து சாகும்போது, உங்கள் துரோகத்திற்கு எதிராக அறம் பாடியிருந்தாலும் பாடியிருப்பார்கள்...

எங்கள் தேசத்து வீரப் புலவன் என் பாட்டன் பெருஞ்சித்திரனார் அப்படித்தான் ஒருநாள் இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் எங்கள் ஈழத் தெருக்களில் சமாதனம் பேசவந்தவன் எங்கள் தமிழர்களின் இரத்தம் குடித்ததையும் எங்கள் வீர தமிழச்சிகளின் மானம் அறுத்ததையும் கண்டு மனம் வெதும்பி அறம்பாடினான். அதன்படி 1991 மே 21 சம்பவம் ஈழ மக்களுக்கு எதிரான இந்திய கொடுமைக்கு ரத்த சாட்சியாய் ஆனது..

இனி...

மடிந்த எங்கள் ஈழமக்கள் 1,50,000 பேர்கள் கடைசி நேர மரணப் போராட்டத்தில் பாடிய அறத்தால் இன்னும் எத்தனை துரோகங்கள் வீழுமோ..!

- உமர்கயான் சே.
இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம்.

Comments

3 comments

3
Edgar Solomon Raja
இந்த ஊரே கூடி காரி துப்பி செருப்பாலே அடிச்சாலும் கடைசி வரைக்கும் கூட்டணியை விட்டு விலகமாட்டோம். எந்நிலையிலும் கூட்டணி தர்மத்தை திமுக காப்பாற்றும் என்கிறார் கருணாநிதி. எம் மக்கள் இட்ட சாபம் இன்னும் முட்டி முட்டி கொல்லவேண்டும் இந்த துரோகிகளை...
muttaal
கனிமொழிக்கு பிணை கிடைக்காததற்கு அவர் தந்தை கருணாநிதி ஈழத்தமிழருக்கு செய்ததாக நீங்கள் கூறும் துரோகம் காரணமென்றால், நீங்களெல்லாம் கடவுளாக வணங்கும் பிரபாகரன் குடும்பத்தோடு கொல்லப்பட்டதற்கு என்ன காரணம். ஊரில் இறந்தவர்க்கெல்லாம் மாமனிதர் பட்டம் அளித்தவரின் மரணத்துக்கு ஒரு இரங்கல் கூட தெரிவீக்காமால் போன சூழலுக்கு யாரிட்ட சாபம் காரணம். பிரபாகரனோடு அவரது குடும்பமே பூண்டில்லாமல் அழிந்து போனதே, உரிய இறுதிக்கிரியைகள் கூட இல்லாமல் அனாதை பிணமாக அவரும் அவரது குடும்பமும் புதையுண்ட இடம் கூட அடையாளம் தெரியாமல் போனதற்கு யார் சாபம் காரணம். ஒரு வேளை பெற்றவர்களிடமிருந்து பிள்ளைகளை பலவந்தமாக பிடித்துக்கொண்டு போய் போரில் கொல்லவிட்ட பிரபாகரனுக்கு எதிராக பிள்ளைகளை பறிகொடுத்த தாயின் சாபம் காரணமாக இருக்குமோ
உமர்கயான்.சே
பிரபாகரனை யாரும் கடவுளாக வணங்கவில்லை. உலகத்திற்கு தமிழர்களின் வீரத்தை இந்த நூற்றாண்டில் உலகத்திற்கு எடுத்துகாட்டியவர்கள் ஈழமக்கள்,பிரபாகரனும் அவரின் புலிபடையும் அந்த மாவீரர்களை இங்கு இருக்கும் ”சோற்றுதுருத்தி” களோடு ஒப்பிடுவது மிக கேவலமானது. இந்திய அரசே பிரபாகரன் இறந்துவிட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கா நிலையில் அவருக்கு இருதிகாரியம் நடக்கவில்லை என்று அங்கலாயிக்கும் நீங்கள் யார் என்று தமிழர்கள் புரிந்துகொள்வார்கள். பிரபாகரன் தன் இன விடுதலைகாய் தன் பிள்ளைகளை களத்தில் சாக கொடுத்தார்.இங்கு இருக்கும் தமிழ் ஈன தலைவரோ தன் பிள்ளைகளுக்கு பதவி பிச்சை கேட்டு பல்லிளித்துகொண்டு இருந்தார். ”மாவீரர்கள் இறந்தும் வாழ்கிறார்கள்” தமிழினத்தலைவர்களாக வேசம் கொண்டவர்களோ உயிருடன் இருந்தும் பினமாக. ஒருநாள் இவர்களின் கல்லறையை தோண்டியும் விசாரிக்கப்படுவார்கள் தமிழர்களுக்கு செய்த துரோகங்களுக்காய். அதுவரை இட்ட சாபங்கள் முட்டிகொண்டே இருக்கும்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.