இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக போரை நடத்தி இலட்சக்கணக்கானோரை கொன்றொழித்தது சிங்கள அரசு. இது உலக வரலாற்றில் மாபெரும் அவலமாகும். இதனை உலக நாடுகள் பலவும் கண்டித்த போதிலும் - “இது தமிழர்களுக்கு எதிரான போர் அல்ல; நாட்டை பிரிவினை கோரும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானது” என்று சொல்லியே, உலக நாடுகளின் வாய்களை மூடினார் இராசபக்சே. சில நாடுகள் கொடுத்த உதவியால் அவர் எண்ணத்தின்படி போரை நடத்தி முடித்தார்.

இந்தப் போரினால் பாதிக்கப்பட்டு - கொத்து குண்டுகளில் இருந்து தப்பித்து - இடம்பெயர்ந்த 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பு வலய முகாம்கள் - இடைத்தங்கல் முகாம்கள் என்று கூறி பல்வேறு முகாம்களில் குடும்ப அங்கத்தினரை பிரித்து அடைத்துள்ளனர். இந்த முகாம்களில் தமிழர்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து தராமல் வாட்டி வதைப்பதாகவும், அங்கு குறுகிய பரப்பில் பல இலட்சம் பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் பலர் நோய்வாய்பட்டு தவித்து வருவதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகியவண்ணம் உள்ளன. அத்துடன், முகாம்களில் தங்கியுள்ள பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதும், இளைஞர்கள் கடத்தப்படுவதும், சுட்டு கொல்லப்படுவதும் அரங்கேறி வருகின்றன. இதனை அறிந்த உலகநாடுகள் அனைத்தும் கண்டித்த போதிலும், இந்திய அரசு மட்டும் உரத்த குரலில் கண்டனமோ, கடிந்துகொள்ளவோ இல்லை என்பது பெறும் ஏமாற்றமாகவே இருந்தது.

தமிழினம் அவலத்தில் துடிப்பதைக் கண்டு இந்திய அரசில் உயர் பதவியில் உள்ளவர்கள் சட்டைசெய்யாமல் இருப்பது ஆச்சரியமானதல்ல. அதே சமயத்தில், ஈழத் தமிழர்கள் நம்பிக் கொண்டிருக்கும் தமிழகத்தில் - ஆட்சி அதிகாரத்தில் கோலோட்சி கொண்டிருக்கும் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி வெறும் அறிக்கைகளை வெளியிட்டபடியும், மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதியபடியும் இருக்கிறார். இதனை சுட்டிக்காட்டிய எதிர்கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர் அல்லலுற்றுவரும் நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசும், மத்திய அரசும் எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், இலங்கையில் வதை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. - காங்கிரசு கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10-ஆம் தேதி பிற்பகலில் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர். ஈழத் தமிழர் விசயத்தில் அக்கறையுடன் தொடர்ந்து வினா எழுப்பி வந்த தமிழக எதிர்கட்சிகளையும், தமிழின உணர்வாளர்களையும், நடுநிலையான மனிதநேய அமைப்பினரையும் ஒதுக்கிவிட்டு, ஆளும் தி.மு.க. - காங்கிரசு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் மட்டுமே இலங்கை தமிழர்களின் வாழ்நிலையை அறிந்துகொள்ள சென்றிருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக அனைவரும் சந்தேகப்பட்டனர்.

கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்ற தமிழக எம்.பிக்கள் குழு நேரடியாக சென்று வதை முகாம்களில் உள்ள தமிழ் மக்களை சந்திக்கவில்லை. மாறாக, சுற்றுலா சென்றது போல், யாழ் பல்கலைக் கழகத்தையும், அதில் உள்ள நூலகத்தையும் பார்வையிட்டு, அங்குள்ளவர்களிடம் கலந்துரையாடினர். மருத்துவமனையில் படுத்திருக்கும் நோயாளியைப் பார்க்க ஊருக்கு செல்பவர்கள் நேராக மருத்துவமனைக்கு செல்வதுதானே முறை? பிறகு இலங்கை ஆட்சியாளர்கள் அழைத்துச் சென்ற முகாம்களுக்கு மட்டும் சென்று நிலைமைகளைப் பார்த்து, அங்கு தங்கியிருப்பவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர். வெளிநாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களோ அல்லது குழுவினரோ அகதி முகாம்களை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பினால், இலங்கை அரசு அழைத்துச் சென்று காண்பிக்கும் முகாம்கள், வவுனியா மாவட்டத்தில் மானிக் பான் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்கள். இந்த முகாம்களுக்குத்தான் தமிழக எம்.பிக்கள் குழுவினர் சென்று பார்த்து திரும்பியிருக்கிறார்கள்.

தமிழக எம்.பிக்குழுவின் வருகை தொடர்பாக இலங்கையில் இருந்து வெளிவரும் வீரகேசரி, உதயன், வலம்புரி ஆகிய தமிழ் நாளேடுகள், “இலங்கைக்கு தமிழக எம்.பிக்கள் குழுவின் வருகை அர்த்தமற்றது; அபத்தமானது; வெறும் பம்மாத்து” என்றெல்லாம் வர்ணித்து செய்திகளை வெளியிட்டன. அதேபோல், தமிழகக் குழுவின் மலையக வருகை ஏமாற்றத்தையே தந்துள்ளது என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். ஆக, இந்திய எம்.பிக்கள் இலங்கைக்கு வந்திருந்து உண்மைகளை அறியாமல் இருந்தது அங்குள்ள தமிழர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.


அதோடு, இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமின்றி உலகத்திலுள்ள தமிழர்களுக்கு அதிர்ச்சியளிப்பதான நிகழ்வுகளும் நடந்தேறின. அதாவது, கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி நாளேட்டுக்கு இந்திய நாடாளுமன்றக் குழுவில் சென்ற காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், அளித்த நேர்காணலில், “சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டே இலங்கையில் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன” என்று கூறியிருக்கிறார். தமிழர்களை வதைக்கும் வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஊடகங்களும் கண்டித்து வந்த நிலையில் வதை முகாம்களுக்கு சுதர்சன நாச்சியப்பன் புதிய கண்டுபிடிப்பொன்றை வெளியிட்டு, இராசபக்சேவுக்கே வழிகாட்டியுள்ளார். அதேசமயத்தில், தமிழக நாடாளுமன்றக் குழுவில் சென்ற இன்னொரு காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.எம்.ஆரூண் செய்தியாளர்களிடம், “இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதனைப் போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை” எனக் கூறியிருக்கிறார்.

அதோடு மட்டுமின்றி, இலங்கையின் நிலைமை தொடர்பாக பல்வேறு கருத்துக்களுடன் வருகைதந்த நாங்கள் வடக்கின் உண்மை நிலைமையைப் பார்த்த பின் ஆரோக்கியமான எண்ணங்களுடன் நாடு திரும்புகின்றோம் என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அதிபர் இராசபக்சேவிடம் தெரிவித்ததாக அதிபர் ஊடகப் பிரிவின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பிக்களையும் முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திக்க இராசபக்சே அரசு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக எம்.பிக்கள் குழுவை மட்டும் சில முகாம்களுக்குள் அனுமதித்து சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது ஏன்? என்ற கேள்வி அரசியல் சார்பற்ற சாதாரணமானவர்களுக்கும் எழும். அதன் உள்நோக்கத்தை என்னவென்று கணிப்பது?, தமிழக எம்.பிக்கள் குழுவில் இடம் பெற்ற சிலர் அங்கு தெரிவித்த கருத்துக்களுக்கும், எம்.பிக்கள் குழு சென்னைக்குத் திரும்பிய பிறகு முதலமைச்சர் கருணாநிதி வெளிப்படுத்திய கருத்துக்களுக்கும் வேறுபாடு இருக்கவில்லை.

இதுவரை ஊடகங்கள் வெளிப்படுத்திவந்த முகாம்களின் உண்மை நிலைமையை வெளிப்படுத்தாமல் இராசபக்சே சொன்னவற்றையே கருணாநிதி சொல்லியிருப்பது ஒட்டுமொத்த தமிழினமே அவமானப்படும்படியான துரோகச் செயலாகவே இருக்கிறது. இந்திய - தமிழக அரசின் ஆய்வுக் குழுவாக செல்லாமல், இராசபக்சேவின் அழைப்பின் பேரில் எம்.பி.க்கள் குழு சென்றதாகத்தானே கருணாநிதி சொன்னார். கலைஞரின் கதை, வசனத்தில் உருவான எம்.பிக்கள் குழு பயணம் இராசபக்சேவுக்கு மிகப்பெரிய ஆறுதலை தந்திருக்கிறது. காரணம் இராசபக்சேவும் கருணாநிதியும் என்ன நோக்கத்திற்காக பயணத்தை திட்டமிட்டார்களோ, அத்திட்டத்தின்படியே எல்லாமும் நடந்தேறியுள்ளது. உலகத் தமிழர்களே... இனியுமா நம்புகிறீர்கள் கலைஞர் உள்ளிட்ட தமிழகத் தலைவர்களை..?

- முருக சிவகுமார்

Pin It