பேராசிரியர் கா.சிவத்தம்பி மறைவு நிகழ்ந்த இந்தத் தருணத்தில், தமிழ்ச்சமூகம் அவருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது. எந்தெந்தப் பணிகளுக்காக நாம் அவருக்கு நன்றி பாராட்டி நினைவுகூரவேண்டும் என்பதை ஒரு வசதிக்காகத் தொகுத்துக் கொள்ளலாம்.

ka_sivathambi_330-      இந்தியா என்று இன்று அறியப்படும் நிலப்பரப்பில் சமசுகிருதம், தமிழ் ஆகிய இருமொழிகள் பழமை யானவை. காலனிய வருகையால், இந்தியாவில் கலை, இலக்கியம், இலக்கணம், புவிஇயல் ஆகிய பிற புதிதாகக் கண்டறியப்பட்டன. இவற்றை அடிப்படையாகக் கொண்ட தொல்வரலாறு எழுதப்பட்டது. சமசுகிருதமொழி மற்றும் பண்பாடு தொடர்பான விவரணங்கள் முதன்மைப் படுத்தப்பட்டன. 1784இல் கல்கத்தாவில் உருவான Ôஆசியவியல்கழகம்Õ இந்தியா என்ற நிலப்பரப்பை சமசுகிருதப் பின்புலத்தில்தான் அடையாளப்படுத்தியது. இந்தியச்சட்டம், இந்தியாவின் வழமைகள், இந்தியரின் அடை யாளம் இந்தியக் கலைகள் போன்ற பிற கட்ட மைப்புகளை சமசுகிருதப் பிரதி சார்ந்த மூலத்தி லிருந்தே கண்டுபிடித்தார்கள். தென்னிந்தியா என்னும் நிலப்பகுதி மேற்குறித்த அடையாளக் கட்டமைப்பிற்குள் வராது என்பதை காலனி யத்தின் செயல்பாடுகள் கணக்கில் கொள்ளவில்லை.

-      தொல்காப்பியம், சங்கஇலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய பிரதிகளின் கண்டுபிடிப்பு, பல் வேறு தென்னிந்தியத் தொல்பொருள் கண்டு பிடிப்புகள், சிந்து சமவெளிக் கண்டுபிடிப்புகள் மேற்கூறிய சமசுகிருத மேலாண்மை சார்ந்த கருத் துருவை மறுதலித்தன. இந்தச் சூழலில் பேராசிரியர் கா.சிவத்தம்பி தமது கலாநிதி பட்ட ஆய்விலும் அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதிய சில கட்டுரைகளிலும் புதிய ஒளிபாய்ச்சலை Ôபண்டைய தமிழ்ச் சமூக வரலாறுÕ எழுதியலில் ஏற்படுத்தினார். இதன்மூலம் இந்திய நிலப்பகுதி இரு தொன் மொழிகள், இருவேறு பண்பாடுகள், இருவேறு புவியியல் ஆகிய பிறவற்றைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தினார். இவ்விரு மொழிகளிடையில் ஏற்பட்ட உறவு என்பது சமதளத்தில் நிகழ்ந்தது என்பதையும் தெளிவுபடுத்தினார். இத்துறையில் ஆய்வு நிகழ்த்திய பலரின் கருதுகோள்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கருதுகோளைச் சங்க இலக்கியப் பிரதிகள் வழி கட்டமைத்துக் காட்டினார். இவ்வகையான பங்களிப்பு தமிழ்ச் சமூக வரலாறு எழுதியலில் முற்றிலும் புதிதானது, தர்க்கபூர்வமானது, இயங்கியல் மரபு சார்ந்தது.

-      தமிழ்இலக்கணம், இலக்கியம், சாத்திரங்கள் மற்றும் கலைசார் புலமைத் தளங்கள் அனைத்தும் பாட்டு, கவிதை மற்றும் செய்யுள் மரபில்தான் பதிவு செய்யப் பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் பெரும் மடை மாற்றம் இத்தன்மையில் நிகழ்கிறது. பேராசிரியர் தமது கடந்த முப்பது ஆண்டு ஆய்வு களில் இத்தன்மைகுறித்துப் பெரிதும் கவனம் செலுத்தினார். தொல்காப்பியம் மற்றும் சங்கப் பாடல்கள் தொடர்பான அவரது ஆய்வுகளை இப் பின்புலத்தில் புரிந்துகொள்ள வேண்டும். இவ் விதமான கவிதை இயல் ஆய்வு வழி பேராசிரியர் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட தமிழ்ச் சமூகம் தொடர்பான பல்வேறு விவரணங்களை முன் வைத்துள்ளார். தமிழ்ச்சமூகத்தில் சமயத்தின் இடத்தைப் புரிந்துகொள்வதற்கு இவ்வாய்வுகளே நம்முன் உள்ளன. தமிழ் மரபின் தத்துவ வரலாறு, விமர்சன வரலாறு, அழகியல் வரலாறு ஆகிய பிற துறைகள் குறித்த உரையாடல்களைத் தமிழ்க்கவிதை மரபின் ஊடாகக் கண்டறியும் பார்வையை அறிமுகப் படுத்தியுள்ளார் “தொல்காப்பியமும் கவிதையும்” (2007), “தமிழின் கவிதையியல்” (2007), “சங்க இலக்கியம்: கவிதையும் கருத்தும்” (2009), “தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்: இலக்கிய வரலாற்றாய்வு” (1983) ஆகிய அவரது நூல்களில் மேற்குறித்த கூறுகளைக் கண்டறிய முடியும்.

-      தமிழ்க்கவிதை இயல் என்பது இயற்கைப் பாடல்கள், சமயசாத்திரப் பாடல்கள், யாப்பின் பல்வேறு கூறுகளைக் காட்டும் தரவுகள் என்றே தமிழ் ஆய்வுலகம் விவரணப்படுத்தியுள்ளது. தமிழ் இலக்கணங்கள் குறித்தும் விளக்க விவரணப் பதிவுகளே ஆய்வுகளாகப் பெரிதும் நிகழ்ந் துள்ளன. இத்தன்மைகளுக்கு மாற்றாகத் தமிழ்க் கவிதைஇயலை, மேற்குறித்த வண்ணம் உரை யாடலுக்கு உட்படுத்தியுள்ளார். இத்துறையில் பேராசிரியரின் ஆய்வு குறித்த புரிதலைத் தமிழ்ச் சமூகம் இன்னும் உணரவில்லை. தமிழ்ச்சமூகம் பேராசிரியரின் இவ்வகையான ஆய்வுக்கு என்றென்றும் கடன்பட்டுள்ளது.

-      பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூகத்தில் பெரும் மறுமலர்ச்சி உருவானது. ஐரோப்பியப் பின் புலத்தில் செயல்பட்ட தொழிற்புரட்சி மற்றும் பிரெஞ்சு புரட்சி தொடர்பான கருத்துருவின் தாக்கம் தமிழ்ச்சூழலிலும் ஏற்பட்டது. இத்தன்மைகளைச் சார்ந்து அச்சுப்பண்பாடு என்பது நமக்கு உருவானது. மரபு சார் எழுத்துமுறை, வாசிப்பு முறை, அறிதல் முறை ஆகியவற்றில் தலைகீழ் மாற்றங்கள் உரு வாயின. தமிழ்ச்சூழலில் இம்மாற்றங்களின் தாக்கம் கடந்த இருநூறு ஆண்டுகளில் உருப் பெற்று வளர்ந்து வருகிறது. மரபுசார் ஊடகம், அச்சு ஊடகம், கேட்பு ஊடகம், காட்சி ஊடகம் ஆகியவற்றில் நவீன மின்ஊடகத் தாக்கத்தால் பெரும் மாற்றங்கள் உருப்பெற்றுள்ளன. இதனை ஊடகப்பண்பாடு என்று கூற இயலும். இத் தன்மைகளை பேராசிரியர் புனைகதை ஆய்வுகள், திரைப்பட ஆய்வுகள், சமூக இயக்கங்கள் (தனித் தமிழ்இயக்கம், திராவிடஇயக்கம்) குறித்த ஆய்வுகள் வழி நடைமுறைப்படுத்தியுள்ளார்.

-      புதிதாக உருவான இத்தன்மைகளை, மரபுசார்ந்த பார்வைகளில் அணுகும் கல்விமுறை நடை முறையில் செயல்படுகிறது. புதிதாக உருவான வற்றுக்கான புதியதன்மைகள் குறித்த புரிதலைத் தமிழ்க்கல்வி உலகம் உள்வாங்கியதாகக் கூற முடியாது. பேராசிரியர் தமது புனைகதை தொடர் பான விமர்சனங்கள், கலைகள் குறித்த விமர்சனங்கள், காட்சிவழி ஊடகங்கள் குறித்த பதிவுகள் ஆகிய வற்றில் புதிய அணுகுமுறையை நடைமுறைப் படுத்தியுள்ளார். தமிழ் ஆய்வுலகம், இப்புதிய பார்வையைத் தமிழ்ச்சூழலில் கொண்டுவந்த மைக்காக அவருக்கு என்றென்றும் கடமைப் பட்டுள்ளது.

-      ஈழத்தமிழனாக வாழ்ந்த வரலாறு அவருக்கு ஒருபக்கம் வலிமையையும் இன்னொரு பக்கம் துன்பத்தையும் கொடுத்தது. கடந்த முப்பதாண்டுகளில் ஈழப்போராட்டம் முனைப்புடன் செயல்பட்டது. 1950களில் தொடங்கிய போராட்டம் 1980களில் வேறுதன்மைகளை உள்வாங்கியது. இவ்விரு தருணங்களிலும் வாழ்ந்த பேராசிரியர் சுயநிர்ணய உரிமைக்காக ஈழத்தமிழர்கள் நிகழ்த்திய போராட்டம் குறித்தும் விரிவாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். மிகுதியான எழுத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளன. இவரது இச்செயல்பாடுகள் குறித்த புரிதல் இன்னும் உருவாகவில்லை. பேராசிரியர் ஒதுங்கிவிட வில்லை. களத்தில் இருந்தார்.

-      ஈழத்தின் கலை, இலக்கிய வரலாறு தொடர்பான பேராசிரியரின் பதிவுகள் விரிவானவை. ஈழத் தமிழ்ச்சமூகம் தொடர்பான ஆய்வுகளும் மிக விரிவானவை. ஈழத் தொடர்பான ஆய்வுகளும் மிகவிரிவானவை. ஈழத்தமிழனாக இருந்து உலகத் தமிழராக அவர் செயல்பட்டார். தமிழகத்தின் இலக்கிய வரலாறு தொடர்பான வரன்முறையான முயற்சிகளில் அவர் அக்கறை காட்டியதை விட ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் அக்கறை காட்டியுள்ளார். “ஈழத்தில் தமிழ் இலக்கியம்” (1978), “ஈழத்தின் தமிழிலக்கியச் சுடர்கள்” (2010) ஆகிய நூல்கள் மற்றும் யாழ்ப்பாணம் சமூகம் குறித்த அவரது ஆய்வுகள் ஆகியவை முக்கியமானவை. பேராசிரியரின் இச்செயல்களைத் தமிழ்ச்சமூகம் என்றும் நினைவில் கொள்ளும்.

பண்டைத் தமிழ்ச்சமூக வரலாறு, தமிழ்க்கவிதை வரலாறு, தமிழ் ஊடக வரலாறு, ஈழத்தின் கலை மற்றும் இலக்கிய வரலாறு ஆகியவை தொடர்பான ஆய்வுகளில் பேராசிரியரின் வகிபாகம் தொடர்பான குறிப்புகளை மேலே தொகுத்துக் கண்டோம். இவற்றைத் தமிழாசிரியனாக இருந்து நடைமுறைப்படுத்திய வரலாறு குறித்த பதிவு களை அவர் தொடர்பான மீள் நினைவாகப் பதிவு செய்யும் தேவையுண்டு.

இவரது இவ்வகையான செயல்பாடுகள் இலங்கை, தமிழ்நாடு என்ற இருதளத்தில் நிகழ்ந்தன. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் நடந்தன. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறையில் அவரது செயல்பாடு களை உடன் இருந்து உள்வாங்கும் பேறு பெற்றவன் என்ற வகையில் அவருக்கான நினைவஞ்சலியாக அதனைப் பதிவு செய்யும் கடமை எனக்கிருப்பதாகக் கருதுகிறேன். தமிழ் இலக்கியத்துறையில் அவரது செயல்கள் வழி உருவான தாக்கங்களைப் புரிந்துகொள்ளப் பின்வரும் வகையில் தொகுத்துக்கொள்கிறேன்.

-      1987 அக்டோபர் முதல் 1988 ஏப்ரல் வரை தமிழ் இலக்கியத்துறையின் வருகை தரு பேராசிரியராகச் செயல்பட்டமை

-      1999 - 2000 தமிழ் இலக்கியத்துறையின் கலைத் திட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட பாடத்திட்ட மாற்றத்திற்கு அலுவல் சாராப் பேராசிரியராகச் செயல்பட்டமை

-      2003 இல் தமிழ் இலக்கியத்துறையில் “தமிழ்க் கவிதையியல் - ஒரு தேடல்” என்னும் பொருளில் நிகழ்த்திய தொடர் ஆய்வுரை

-      12.12.2005 முதல் 14.12.2005 முடிய “இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வு: பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் வகிபாகமும் திசை வழிகளும்” என்னும் பன்னாட்டுக் கருத்தரங்கை, தமிழ் இலக்கியத்துறை நடத்தியது. இதற்கு நண்பர் க.குமரன் அவர்களும் பேராசிரியர் செல்வாக்கனகநாயகம் அவர்களும் உதவினர்.

-      29.02.2008 முதல் 16.05.2008 முடிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன அன்றைய இயக்குநர் முனைவர்.ம.இராசேந்திரன் அவர்களது முன்னெடுப்பில், எங்கள் வளாகத்தில் பேராசிரியர் நிகழ்த்திய சங்க இலக்கியம் தொடர்பான பன்னி ரண்டு தொடர்சொற்பொழிவுகள்; அதில் அவை தமிழ் இலக்கியத்துறைக்குக் கிடைத்த வாய்ப்பு.

1987-88, 1999-2000, 2003, 2005, 2008 ஆகிய ஆண்டுகளில் ஐந்து தருணங்களில் பேராசிரியரோடு வாழ்ந்த அநுபவமே தமிழ் இலக்கியத்துறையின் செயல் பாடாக வடிவம் பெற்றது என்பதைத் தமிழ்உலகிற்கு அறிவிக்கவேண்டிய தருணமாக இதைக் கருதுகிறேன். உடனிருந்த இந்தத் தருணங்களைவிடப் பல்வேறு அலுவல் சார்ந்தும் சாராமலும் எங்கள் துறை மாணவர் களோடு பேராசிரியர் கொண்டிருந்த உறவின் பரிமாணம் வேறுபட்டது. அவற்றை ஆவணபூர்வமாகப் பதிவு செய்யத் தரவுகள் இல்லை. உயிர்ப்புநிலையாக வாழ்ந்த அநுபவங்கள் அவை. Ôஆத்மார்த்தÕ என்ற சொல்லுக்குப் பேராசிரியர் பயன்படுத்தும் சொல் உயிர்ப்புநிலை. பேராசிரியருக்கும் எங்கள் துறைக்கும் இருந்த உறவு என்றும் உயிர்ப்புநிலையது. மேற்குறித்த நிகழ்வுகள் வழி நாங்கள் பெற்றுக்கொண்டதை நன்றியறிதலாகப் பதிவு செய்யும் கடமை எனக்குண்டு.

1987-88 வருகைதரு பேராசிரியராக இருந்தபோது, அச்சு ஊடகங்கள் தொடர்பான களப்பணி ஒன்றை மேற் கொண்டோம். ஓராண்டு அவர் வருகைதரு பேராசிரி யராகச் செயல்படும் வாய்ப்பை பேரா.ந.சஞ்சீவி உருவாக்கியிருந்தார். இருந்தாலும் ஆறுமாதங்கள் மட்டுமே பேராசிரியர் எங்களோடு இருந்தார். எங்கள் துறையின் அனைத்து மாணவர்களும் அச்சுஊடகம் சார்ந்த களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பல்வேறு நிலைகளில் மாணவர்கள் மேற்கொண்ட களப்பணிகள் பலதரப்பு சார்ந்தவை. வெகுசன வாசிப்பு முறைமைகள், வெகுசன ஊடகச் செயல்பாடுகள், காட்சி ஊடகத்திற்கும் அச்சு ஊடகத்திற்குமான உறவுகள் எனப் பலநிலைகளில் வினாப் படிவங்களைக் கொண்டு மாணவர்கள் களப்பணி செய்தனர்.

பேராசிரியரும் நானும் பல்வேறு அச்சுஊடக நிறுவனங்களுக்குக் களஆய்வு செய்யச் சென்றோம். அப்படி ஒருமுறை தினத்தந்தி அலுவலகத்திற்குச் சென்று அந்தப் பத்திரிகையின் ஆசிரியரோடு பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது பேராசிரியர் பத்திரிகை ஆசிரியரிடம் தாங்கள் தலையங்கம் எழுதுவதே இல்லையே ஏன்? என்று கேட்டார். அதற்கு அந்த ஆசிரியர், அப்படி என்ன உலகத்தில் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்துவிட்டன தலையங்கம் எழுதும் அளவிற்கு? என்று பதில் சொன்னார். மேலும் Ôநாங்கள் ஒரே ஒரு முறை மட்டும் தலையங்கம் எழுதினோம்; அது இந்திராகாந்தி கொலைசெய்யப் பட்ட போதுÕ என்று கூறினார். வெகுசன இதழியலின் கருத்து நிலையைப் புரிந்துகொள்ள இந்நிகழ்வு மிகச் சுவையான அநுபவமாக அமைந்தது.

இதன்மூலம் அச்சு ஊடகம் செயல்படும் இதழியல் துறை, புனைகதை உருவாக்கம், நூலகச் செயல்பாடுகள் எனப் பலதளங்களில் பல்வேறு தரவுகள் கிடைத்தன. தமிழ்ச்சமூகத்தின் நவீன வாசிப்பு குறித்த அறிக்கையை இக்களப்பணி சார்ந்து நானும் பேராசிரியரும் உருவாக்கி னோம். அது எங்கள் துறையின் இதழில் பலகாலம் கழித்து வெளிவந்தது. இரண்டுமுறை பிரதிகள் காணாமல் போயிற்று. பல்கலைக்கழக அதிகாரச் செயல்பாட்டிற்கும் ஆய்விற்குமான உறவைப் புரிந்துகொள்ள எங்களது ஆய்வறிக்கை வெளியீட்டின் காலக்கழிப்பு உணர்த்தியது. அத்தரவுகள் இப்போது காணாமல் போய்விட்டன. மீண்டும் கிடைத்தால் இப்போதுள்ள அநுபவத்தோடு புதிதாக எழுதலாம் போல் தோன்றுகிறது. இத்திட்டப் பணியை வடிவமைத்து வழிநடத்திய பேராசிரியர் மூலம் நாங்கள் பெற்ற பேற்றை வசதிக்காகக் கீழ் வரும் வகையில் தொகுத்துக்கொள்வோம்.

-      தமிழ்க்கல்வியில் ஊடகம், குறிப்பாக அச்சு ஊடகம் பெறுமிடத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. அன்று அதனைப் பாடத்திட்டத்தில் இணைக்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. பின்னர் வாய்ப்பு கிடைத்தபோது பாடத்திட்டத்தில் முறையாகச் சேர்த்தோம். இன்று தமிழ் இலக்கியத்துறை மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களின் சொல் லாடலில் அச்சு ஊடகம், அச்சுப் பண்பாடு, வாசிப்பு முறை, வாசிப்புப் பண்பாடு, நூலகப் பண்பாடு எனப் பல்வேறு சொற்கள் இடம் பெறுவதைக் காணமுடியும். இதற்கான அடிப்படைகள் பேராசிரியரிடம் பெற்றுக் கொண்டதை, நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தாகக் கருதுகிறேன். தமிழ்க்கல்வியின் பரிமாணத்தை அகலச்செய்ய பேராசிரியரின் பங்களிப்பு எவ்வகையில் இருந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம். (இத்தன்மை குறித்துக் குறுநூல் ஒன்று எழுதலாம். வாய்ப்பு நேரும் போது செய்வோம்)

-      எங்கள் துறையின் ஆய்வியல் நிறைஞர் ஆய்வுகள், பட்டய ஆய்வுகள், முனைவர் பட்ட ஆய்வுகள், ஆகியவற்றில் பேராசிரியர் உருவாக்கிய அச்சு ஊடகம் சார்ந்த பிரக்ஞை தொழிற்பட்டிருப் பதைக் காணலாம்.

பாடத்திட்டம், ஆய்வு, நடைமுறை வாழ்க்கைப் புரிதல் ஆகியவை தம்முள் ஒன்றுக்குள் ஒன்று இணைந்து செயல்படுவதைப் பேராசிரியர் மூலம் நாங்கள் கற்றுக் கொண்டோம். அவரது வருகைதரு பேராசிரியர் பணிக் காலம் எங்களது நற்பேறு காலம் என்பதை மீள்நினைவு கூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் நிர்வாகப்பொறுப்பு 1999இல் எனக்குக் கொடுக்கப்பட்டது. அந்தச் சூழலில்தான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் “விருப்பம்சார் புள்ளிப் பாடத் திட்டம்” (Credit based choice system - CBCS) அறிமுகப் படுத்தப்பட்டது. அந்தச் சூழலில் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் சிலநாள்கள் மட்டும் தங்கியிருந்த பேராசிரியரிடம் கலைத்திட்டம் குறித்த விரிவான உரையாடலை மேற்கொண்டேன். தமிழ் சார்ந்த கலைத்திட்டம் எவ்வகையில் அமைய வேண்டு மென்பதை விரிவாக விவாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. (பார்க்க; தமிழ் கற்பித்தல்: 2007) இவ்வுரையாடல்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ் இலக்கியத்துறையின் முதுகலைப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. அதில் மேற்கொண்ட அடிப்படைகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

-      சங்ககாலம் முதல் நவீனகாலம் வரை பாடங் களைத் தெரிவுசெய்யும்போது தொடர்ச்சியான வரலாற்றுப் போக்கை அடிப்படையாகக் கொள்ளுதல்.

-      பிரதிகளை முதன்மைப்படுத்தாமல், பல்வேறு பிரதிகளின் உருவாக்கப் பின் புலத்தை அறிமுகப் படுத்துவது.

-      ஊடகம் தொடர்பான பாடங்களுக்கு உரிய முதன்மை கொடுப்பது

-      சமகாலப் பார்வையையும் தமிழ்ப்படிப்பும் ஒன்றுக்குள் ஒன்றாய் இணைவது.

ஆகிய பல்வேறு அடிப்படைகளைக்கொண்டு கலைத் திட்டத்தைப் புரிந்துகொண்டோம். அந்த அடிப் படையில் பாடத்திட்டத்தை உருவாக்கினோம். (சென்னைப் பல்கலைக்கழக இணைய தளத்தில் எங்கள் பாடத்திட்டத்தைப் பார்க்கலாம்.) பேராசிரியர் ந.சஞ்சீவி தமிழ் இலக்கியத்துறையின் தமிழ்க்கல்வியை, தமிழர் பண்பாட்டுக் கல்வியாகவே வடிவமைக்க விரும்பினார். அவரது பல்வேறு நடவடிக்கைகள் அதனை உறுதிப்படுத்தும். அவரது கனவு, பேராசிரியர் கா.சிவத்தம்பி வழிகாட்டுதலோடு எங்களால் ஓரளவு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அவ்விரு பேராசிரியர் களையும் நாங்கள் இத்தருணத்தில் நினைத்துக் கொள் கிறோம்.

2003இல் தமிழ்க்கவிதையின் வரலாறு குறித்த அவரது தொடர்பொழிவுகள் உணர்வுதளத்தில் பெரும் தாக்கத்தை எம்முள் ஏற்படுத்தியது. சொற்பொழிவுகளில் சிலப்பதிகாரப் பாடல்களைப் பாடும்போது அவர் கண் களில் தாரைதாரையாகக் கண்ணீர் வந்த உணர்வுத்தள உயிர்ப்புநிலையை நாங்கள் உணர்ந்தோம். தமிழ்க் கவிதைக்குள் இப்படியும் பயணிக்க முடியுமா? நாம் எவ்வளவு வறட்டு மனநிலையுடன் வாழ்கிறோம் என்ற குற்றவுணர்வை உருவாக்கியது அவரது பொழிவு. அவற்றை நாங்கள் பதிவு செய்தோம். பதிவிலிருந்து முனைவர் மு.வையாபுரி (தற்போது தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர்) எழுதிக் கொடுத்தார். அதனை அச்சு செய்து அவரிடம் வழங்கி னோம். நண்பர் க.குமரன் உதவியோடு அதனைத் “தமிழின் கவிதையியல்” என்னும் நூலாக உருவாக்கி வெளியிட்டார் பேராசிரியர். இந்நிகழ்வு குறித்து அறிய அந்நூலின் முன்னுரையில் பேராசிரியரின் பதிவை வாசிக்க வேண்டுகிறேன்.

இந்த நிகழ்வு யாப்பு மரபிலிருந்து, கவிதையை அணுகும் போக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, தமிழ் அழகியல் என்னும் துறையை உணர வழிகண்டது. இது எவ்வகையில் நிகழ்ந்தது என்பது தொடர்பான சமூக வரலாறு குறித்து அறிந்து கொண்டோம். தமிழ்க்கலை வரலாறு என்பதைத் தமிழ்க்கவிதை வரலாற்றில் எப்படி அறியலாம் என்ற புரிதல் உருவானது. இவ்வகையில் தமிழின் மிகப்பெரும் மரபான தமிழ்க்கவிதைச் செல்நெறியைப் பேராசிரியர் காட்சியாக எங்களுக்குக் காட்டினார். அவரது உடல்நலம் மிகவும் சீர்கெட்டிருந்த சூழலில் இதனை நாங்கள் ஏற்பாடு செய்தோம். பொழிவின்போது அவர் பெறும் உற்சாகமும் அதன்பின் உடல்வாதையால் அவர் பெறும் துன்பமும் எம்முன் பெரும் தாக்கமாக வடிவம் பெற்றுவிட்டது. அவரது உயிர்ப்புச் சக்தி என்பதன் வலுவைப் புரிந்துகொண்டோம். அவரது உயிர்ப்புச் சக்தி தொடர்பாக விரிவான தரவுகளோடு பதிவு செய்யவேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. அது என்னுள் பெரும் தாக்கம் பெற்றிருப்பதாக உணருகிறேன். நினைவடுக்குகளில் அவரது மறைவை மனது ஏற்றுக் கொள்ளவில்லை.

பேராசிரியர் எமக்களித்த உயிர்ப்புநிலை வாழ் விற்காக, அவரைப் போற்றும் கடமையை எங்கள் துறை வழி பன்னாட்டுக்கருத்தரங்கை நடத்தியதன் மூலம் நிறைவேற்றிக் கொண்டோம். அறிஞர் ஐராவதம் மகா தேவன், பேராசிரியர்கள் வா.செ.குழந்தைசாமி, சண்பக லட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு பேராசிரியரின் எழுபத்தைந்து ஆண்டு நிறைவைப் பெருமிதமாகப் பதிவு செய்தனர். பேராசிரியர் கி.நாச்சிமுத்து, தொ.பரமசிவன், எ.சுப்பராயலு, ராஜ்கௌதமன், கி.அரங்கன், ஆ.தனஞ் செயன், மு.இராமசாமி, செ.ரவீந்திரன், தமிழவன், ந.முத்துமோகன், பெ.மாதையன், இராம.சுந்தரம், எம்.எஸ்.எஸ்.பாண்டியன், செல்வாகனகநாயகம் ஆகியோர் பேராசிரியரின் ஆய்வுலகம் குறித்த கட்டுரை களை வழங்கினர். அ.மங்கை, வ.கீதா, பொ.வேலுச்சாமி, அ.மார்க்ஸ், மே.து.ராசுகுமார் கி.பி.அரவிந்தன் கே.எஸ்.சுப்பிரமணியன், இன்குலாப், சி.மகேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டு பேராசிரியர் குறித்துப் பேசினர்.

“படைப்பாளிகளுக்கு இவ்வகையான அரங்குகள் நடைபெறுவதை நான் கண்டிருக்கிறேன். முதன் முறையாக ஓர் ஆய்வாளனுக்கு நடக்கும் கருத்தரங்கு” என பேரா.வா.செ.குழந்தைசாமி குறிப்பிட்டார். இவ்வகையில் பேராசிரியரைப் புரிந்துகொள்ள மூன்று நாள் கருத்தரங்கு எங்களுக்கு உதவியது.

2008 ஆம் ஆண்டு உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேராசிரியர் நிகழ்த்திய பன்னிரண்டு பொழிவுகளுக்கும் பின்புலமாக எம்துறை மாணவர்கள் செயல்பட்டார்கள். அவரோடு சேர்ந்து சங்க இலக்கியத்தை எங்கள் மாணவர்கள் வாசித்தார்கள். எங்கள்துறை ஆய்வாளர் வெ.பிரகாஷ், பேராசிரியரோடு இணைந்து செயல்பட்டதின் மூலம் ஏற்பட்ட மாற்றங்களை நானறிவேன். பேராசிரியரால் எப்படி இப்படியான தாக்கங்களை ஏற்படுத்தமுடிகிறது? என்பது எனக்கு வியப்பளிக்கும் தனிமனித உறவு சார்ந்த அணுகலோடு கூடிய புலமைத் தளச் செயல்பாடுகள் தான் இத்தன்மைக்கு அடிப்படையாக அமைகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். அவரின் பாசம், அன்பு, அரவணைப்பு எங்களுக்கு எங்கும் கிடைக்கா தவை. உயிர்ப்புநிலையாக அவரிடம் ஏற்பட்ட பிணைப்பு எங்களது நினைவு அடுக்குகளில் படிந்து கிடக்கிறது. எங்களுக்குள், எங்களோடு பேராசிரியர் என்றும் வாழ்வார். தமிழ் இலக்கியத்துறை அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. அவரது மறைவு அவரது சொற்களில் சொன்னால் ஆள்நிலைப்பட்ட பெரும் இழப்பு. அவரது உடல் வாதைக் காலங்களில் தேவாரப்பாடல்களை இசைத்துக் கொண்டிருப்பார். எங்கள் உள வாதைக்கு அவரது நினைவுகள் மருந்து.

இந்த அஞ்சலிக் குறிப்பின் முடிவில் ஒரு செய்தியை நினைவுகூர்வது அவசியம் பேராசிரியரின் புலமைப் பரப்பில் அதிக ஈடுபாடுகொண்டு, அவரது உடல் சுகவீனப்பட்டபோதும் அவரிடமிருந்து எழுதிவாங்கி வெளியிடும் பணிக்குப் பின்புலமாக இருந்தவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் நண்பர் தெ.மதுசூதனன். ஒரு குறிப்பிட்ட காலம்வரை அவர் அதைச் செய்தார். கடந்த பத்தாண்டுகளில் அவரது ஆக்கங்களை வெளிக் கொண்டு வருவதில் பெரிதும் தொடர்ந்து முனைப்பாகச் செயல்பட்டவர் நண்பர் க.குமரன். இவரால் தான் பேராசிரியரின் பல ஆக்கங்கள் வெளிவந்தன. இனியும் பேராசிரியரின் பல ஆக்கங்கள் தொடர்ந்து வெளிவர குமரன் செயல்படுவார். இவர்கள் இருவருக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

இதுவரை தொகுக்கப்படாமல் இருக்கும் பேராசிரியரின் ஆய்வுக் கட்டுரைகளைப் பல தொகுதி களாகத் தொகுத்து NCBH நிறுவனத்தின் மூலம் வெளிக் கொண்டுவர வேண்டும். தொடர்ந்து பேராசிரியர் நூல்களை வெளியிடும் NCBH நிறுவனம் இதனை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இப்பணி பேராசிரியருக்குச் செய்யும் சிறந்த அஞ்சலியாகும்,

Pin It