உலகத்தில் அரசர்கள் தலைமையில் இயங்கும் பல பாராளுமன்றக் குடியரசுகள் உண்டு. அவற்றில் அரசியல் சாசனத்தின்படி முடியாட்சி முறைக்கு அங்கீகாரம் உண்டு; ஆயினும் அரசர்கள் வெறும் அலங்காரப் பொம்மைகளாகவே உள்ளனர். ஆனால் மூன்றாம் உலக நாடுகள் என்றழைக்கப்படுகின்ற வற்றில் அரசியல்வாதிகள் வரன்முறையற்ற அதி காரத்தை அனுபவிக்கின்றனர். அந்நாடுகளின் அரசியல் சாசனத்தின்படியும், அதனையும் மீறியும், அசட்டை செய்தும் இவ்வதிகாரத்தை அரசியல் வாதிகள் அனுபவிகின்றனர். அந்ரே குந்ரே இந்த அரசியல்வாதிகளை உதிரி (லும்பன்) முதலாளிகள் என்று அழைக்கிறார்; இவர்கள் தோன்றியதற்கும், நிலைத்தியங்குவதற்கும் உரிய சமூகப் பின்புலத்தை நன்கு ஆய்வு செய்துள்ளார்.

மூன்றாம் உலக நாடுகளிலேயே இந்தியாவில் தான் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் நடப்பில் இருக்கும் அரசுமுறை மீதான மக்கள் நம்பிக்கையை அழிக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள். அந்த வகையில் திராவிட முன்னேற்ற கழகம் இந்தியாவிற்கு ஒரு முன்மாதிரி ஆகிவிட்டது. மிகப் பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து வெளிவர முடியாமல் திண்டாடும் அக்கட்சி அமைச்சர்கள் இப்போது நில அபகரிப்பு வழக்குகளில் அகப்பட்டுக் கொண்டு முழிக்கின்றனர். இத்தகைய ஒரு நிலை ஏற்படும் என்று அக்கட்சியின் தலைவர் முன்பே உணர்ந்திருக்க வேண்டும்; தன் அமைச்சர்கள் அத்துமீறி கொள்ளை யிடுவதைக் கண்டித்திருக்க வேண்டும்; அறிவுரை கூறியிருக்க வேண்டும். அவருடைய குடும்பத்தினரே மிகப் பெரிய நில அபகரிப்புகளைச் செய்ய, அமைச் சர்கள் தமிழ்ச் சினிமாவில் வரும் ரௌடிகளைவிட மோசமாக நடந்துகொண்டனர். ஒவ்வொரு பகுதி யிலும் குறுநில மன்னர்கள் போல் செயல்பட்டனர்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம் வீரபாண்டி ஆறுமுகம். அவர் சேலத்தில் பொய்ப் பத்திரம் தயாரித்து அரசு நிலத்தை விற்றது முதற்கொண்டு, அங்கமாள் காலனியில் வசித்த மூப்பத்தி மூன்று குடும்பங்களை ஒரே இரவில் வெளியேற்றிவிட்டு அந்த இடத்தை ஆக்கிரமித்தது வரை பல அட்ட காசங்களைச் செய்தார். தட்டிக் கேட்பார் ஒருவரும் இல்லை. கடந்த ஆட்சியில் அங்கமாள் காலனி மக்களை அந்த இடத்திலேயே குடியமர்த்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கூட நடைமுறைப் படுத்தப்படவில்லை. அக்காலத்தில் அங்கமாள் காலனி மக்கள் மிகுந்த உளஉரத்துடன் போராடியும் பயனொன்றும் கிட்டவில்லை.

இப்போது வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது அடுக்கடுக்கான புகார்கள் கிளம்பியுள்ளன. கைது செய்ய ஆணை பிறந்தது; தனிப்படை அமைக்கப் பட்டது. வீரபாண்டி ஆறுமுகம் பல முன் ஜாமின் மனுகளைப் போட வேண்டியதாயிற்று. அவர் சாதாரண விசாரணைக்குக்கூட காவல் நிலையத் திற்குச் செல்லத் தயாரில்லை. தலைவரிடம் சென்று முறையிட்டார். ‘நம் கட்சியில் வழக்கறிஞர்களே இல்லையா’ என்று வருத்தப்பட்டார். முன் ஜாமீன் மனுக்களைப் போட தி.மு.க. தனியாக வழக்கறிஞர் குழுவை அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். வேந்தரே பெருங்கஷ்டத்தில் மூழ்கியிருக்றிhர். அவருக்குக் குடும்பத்தினரைப் பற்றி கவலைப் படவே நேரம் போதவில்லை. திராவிட முன்னேற்றத் தலைமை அடிக்கடி சோழர் வரலாற்றை நினைவு கூர்ந்து, தம்மை ஒப்பிட்டுக் கொண்டு பெருமிதம் கொள்ளும். சோழர் வரலாற்றில் ஒரு முக்கியமான அம்சம் அப்பேரரசு வீழ்ச்சியடைய அப்பேரரசு சார்ந்த குறுநில மன்னர்களே காரணம் என்பதை ஏனோ மறந்துவிட்டனர்.

வீரபாண்டி ஆறுமுகம் ஒரு முக்கியமான நபர்; சேலத்தின் ‘சிங்கம்’. தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் உள்ளூர்ப் பகுதியில் பெரும் தனிப் படையை வைத்துக்கொண்டு அதிகாரம் செலுத்தும் நபர். இத்தனிப் படைக்குப் பெயர் தொண்டர் படை. புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கத் திற்கும், வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் இடையில் உயர்நீதிமன்றம் இப்போது ‘இரண்டு தரப்பு நலன் களைக் கருத்தில் கொண்டு’ அமைதியை நிலை நாட்டியது. வீரபாண்டி ஆறுமுகத்திற்கு வழக்கமான நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன். ஆனால் காவல் நிலையத்தில் சரணடைந்து மூன்று நாள் விசாரணைக்கு உட்பட வேண்டும். நூற்றுக்கணக்கான மொபட் வண்டிகளில் தொண்டர் படை அணிவகுக்கக் காவல் நிலையத்தில் வீரபாண்டி ஆறுமுகம் சரணடைந்தார். அப்புறம் காவல்துறையினர் விசாரித்தனர். இதில் 10 நிமிடத்திற்கொரு முறை இடைவேளை; இராஜ மரியாதை. நிலம் இழந்த மக்கள் இன்னும் நிலத்தை பெறவில்லை. இப்படி நடந்துகொண்டிருக்கும் வேடிக்கை நிகழ்வுகள் மேலும் அவர்கள் மனத்தைப் புண்படுத்துகின்றன. இப்போது சொல்லுங்கள் மக்கள் ஜனநாயகம் - நீதிமன்றம் - குறுநிலமன்னர்கள் பற்றி என்ன நினைப்பார்கள்...?

Pin It