ஊழலுக்கு எதிரான அக்கறை

லோக்பால் மசோதாவுக்காகப் போராடுபவர்களின் சிறுபிள்ளைத்தனம்

பிரதாப் பட்நாயக்

தமிழில் : சொ.பிரபாகரன்

நமது அரசியலின் ஜனநாயக அடிப்படையையே அழித்தொழிக்கும் சினிசிஸத்தை (வெறுப்பு மனோபாவத்தை) வளர்தெடுக்கிடுறது ஊழல் என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது. ஊழல் அனைத்து மூலாதாரங்களையும் ஏழைகள் அணுக முடியாதபடி பறித்து விடுகிறது என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஆகவே தகுதிவாய்ந்த லோக்பால் மசோதா மூலம் ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லைதான். ஆனால் தற்போது ஊழலுக்கு எதிராக கிளம்பியுள்ள கூச்சலும் குழப்பமும் தவறான அடையாளத்தை உருவாக்கியுள்ளது என்ற கருத்து, தவிர்க்க முடியாதபடி உருவாகியுள்ளது: உண்மையில் ஊழலுக்கான காரணமென எதை நாம் அடையாளப்படுத்துகிறமோ, அது உண்மையிலேயே நமது வீட்டுக்குப் பதில் வேறு வீட்டுக்கதவைத் தட்டுவதற்கு ஒப்பாகும்.

anna_hazare_ramdev_253ஒரு குறிப்பிட்ட சொத்துடமை சமூகத்தில் நடக்கும் ஊழலுக்கும், ஒரு சொத்துடமை சமூகம் மாறும்போது, அதனுடன் சம்பந்தப்பட்ட ஊழலுக்கும் உள்ள வேறுபாட்டை உற்றுப் பார்க்க தெரிந்திருக்க வேண்டும். சில சரக்குகளை அதனுடைய மதிப்பை விட குறைவான விலைக்குச் சிலருக்குக் கொடுக்கும்போது ஊழல் நடக்கிறது. அப்படிச் செய்வதில் ஒன்றும் பெரிய தவறில்லைதான். சில குறிப்பிட்ட பொதுச்சேவைகள் அனைவருக்கும் இலவசமாகத் தரப்படுகிறது; உணவுப்பொருட்களைப் போன்ற சில முக்கிய சரக்குகளின் விலையை வேண்டுமென்றே வெகுவாகக் குறைத்து (அவைகளின் விற்பனை விலை சந்தை விற்பனை விலையை விட மிகக் குறைவாக இருக்கும்), ரேஷன் முறைப்படி விநியாகிக்கப்படுகிறது. இந்த மாதிரி நிகழும்போது, ஊழலுக்கான வாய்ப்புகள் எழுகின்றன. இலவசமாக ஒரு சிலருக்குக் கிடைக்கும் பொதுச்சேவையைப் பெறுவதற்கு, அப்படிப் பெற முடியாதவர்கள் இலஞ்சம் கொடுத்து பொதுநலத் துறை அதிகாரியிடம் இருந்து பெற முயலலாம்; அதுபோல ரேஷனில் உணவுப் பொருட்களைக் வழங்குபவர்கள், ஏதாவது 'கைக்கூலி' வாங்கிக் கொண்டு, தாங்கள் வழங்கும் பொருட்களின் வழிமுறைகளை மாற்றிக் கொடுத்து ஏமாற்றலாம்.

மேற்சொன்ன ஊழல்கள் மத்தியத்துவப்பட்ட சமூகத்தில் வழக்கமாக நடப்பவை. மத்தியத்துவப்பட்ட சமூகத்தில் முதலீட்டு வாய்ப்புகள் லைசன்ஸ் முறைப்படி கட்டுப்படுத்தப்படுகிறது; அதுபோல மானியப்படுத்தப்பட்ட நிதியும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவே என்னதான் 'தாராளமயம்' ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்தாலும், அந்த சமூக விலையைக் கொடுத்து, தாராளமயத்தை நடைமுறைப்படுத்துவதுதான் மத்தியத்துவப்பட்டட சமூகத்தின் ஊழலைக் குறைக்க முடியும் என்ற கருத்து ஏற்பட்டு விட்டது. ஆனால் விளங்காத புதிராக 'தாராளமய'த்தின் மூலம், ஊழல் முன் எப்போதுமில்லாதபடி பல மடங்குப் பெருகிப் போனது. இதற்குக் காரணம் 'தாராளமயம்' என்பது போதுமான அளவுக்கு 'தனியார்மய'மாக்குதலுடன் சம்மந்தப்பட்டு இருந்தது என்பதுதான். இது ஒருவகையான சொத்துடமை சமூக மாற்றத்திற்கு வழிவகை செய்தது. ஒரு வாதத்திற்காக 'தாராளமயம்', பழைய சொத்துடமை சமூகத்தில் இருந்த பழைய மாதிரியான ஊழல்களை உண்மையிலேயே குறைத்தது என்று வைத்துக் கொண்டாலும், தற்போது 'தனியார்மயம்' சொத்துடமை சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் மூலம், புதுவகையான ஊழல்களுக்கான வாய்ப்புகள் பல்கிப் பெருகியுள்ளன.

தனியார்மயத்தில் கூட, சரியான விலையில் தனியார்மயப்படுத்துதல் நடந்தால், ஊழலுக்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை. அது போல அரசின் சொத்துகள் நியாயமாக ஏலம் விடப்பட்டு அதிகமாக விலை கேட்பவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் கூட, அந்த மாதிரி வழிமுறைகளில் யார் எந்தவித ஆட்சேபங்களைத் தெரிவித்த போதிலும், யாரும் எந்த பெரும் ஊழலும் நடந்து விட முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் மூன்றாம் உலகில் நடந்த அனைத்து தனியார்மயமாக்குதலும் நவீன தாராளமயத்துடன் இயைந்து அனைத்தும் தூக்கிப்போடப்படும் குறைந்த விலையில் விற்கப்பட்டது. இது கண்டிப்பாக நியாயமான ஏல விற்பனையில் கிட்டுவதைக் காட்டிலும், மிகவும் சொற்பமான விலையாகும். உண்மையில் பிரெட்டன் வுட்ஸ் அமைப்புகள் மூன்றாம் உலக நாடுகளுடன் சேர்ந்து கொண்டு, நவீன தாராளமயத்தைத் துவங்கி வைத்து, பொதுச் சொத்துகளைத் தூக்கி எறியும் சொற்ப விலைக்குதான் விற்க முடியும் என்று வேண்டமென்றே மாயையை ஏற்படுத்தி ஏமாற்றி தனியார்களுக்கு விற்றது. நமது நாட்டிலும் கூட, இந்த மாதிரி சொற்ப விலைக்குத் தனியாருக்கு விற்று தாரை வார்த்த உதாரணங்கள் ஏராளமாக உண்டு. பாரத் அலுமினியம் கம்பெனியில் இருந்து, மும்பை சென்டாயூர் ஒட்டல் வரை பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். (சென்டாயூர் ஓட்டலை விற்ற குறுகிய காலத்திலேயே, அதை விட பெரும் தொகைக்கு அது மறுபடியும் விற்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.)

லைசன்ஸ் ரேஷன் முறை நடைமுறையில் இருந்தபோது, பொதுச் சொத்தைக் குறைந்த விலையில் விற்கும்போது அது சலுகை பெற்ற சிலருக்கு வழங்கப்படும்; அந்தச் சலுகைகளுக்காக அவர்கள் லஞ்சம் தர தயாராக இருந்தார்கள். ஆனால் இப்போது பொங்கி எழுந்துள்ள ஊழல், தனியார்மயத்தின் விளைவால் எழுந்தவை. அதாவது சமூகம் தாராளமயத்தின் மூலம் ஏற்பட்ட தனியார்மயத்தின் விளைவாய் ஏற்பட்டது. (தாராளமய யுகத்தில் பணம் பண்ணுதல் என்ற கலாச்சாரம், சமூக அந்தஸ்தைப் பெற்றுள்ளது)

தனியார்மயமே ஊழலால்தான் ஊக்கம் கொடுக்கப்பட்டு செயற்படுத்தப்படுகிறது என்று சிலர் வாதிடலாம். அதாவது லஞ்சம் வாங்குவதிலுள்ள தீராத பசியே, பொதுத்துறை அலுவலகர்களை அரசு சொத்தைத் தனியார்மயப்படுத்தத் தூண்டுகிறது என்பதுதான் அவ்வாதம். இதை அப்படியே சரி என்று ஏற்றுக் கொள்ள முடியாது; உண்மையில் தனியார்மயப்படுத்தலுக்கான வலியுறுத்தல் சர்வதேசநிதியில் இருந்து வருகிறது. (சமீபத்தில் நடந்த கிரேக்க சிக்கனத் திட்டம் அதை உறுதி செய்கிறது) லஞ்சம் பொதுத்துறை அலுவலகர்களுக்குத் தூண்டிலாய் போடப்பட்டு, அவர்கள் வழிக்குக் கொண்டு வரப்படுகிறார்கள். இதுபோல இந்த உண்மைகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து கிடந்தாலும், இதிலிருந்து இரண்டு முடிவுகளை மட்டும் திட்டவட்டமாக எடுக்கலாம்: மக்களை மோசமாக பாதிப்பது என்பது தனியார்மயத்துடன் சம்பந்தப்பட்ட ஊழல் கிடையாது, ஆனால் தனியார்மயமே பாதிக்கிறது. இரண்டாவதாக இந்த தனியார்மயத்தை தடுத்து நிறுத்தாவிட்டால், எந்த லோக்பால மசோதா வந்தாலும், மக்களுக்குப் பெரிதாக எதுவும் உதவிட முடியாது. அரசின் கருவூலம் உறிஞ்சப்படுவதை, தனியார் மயத்தை நிறுத்தாமல் தடுக்கமுடியாது.

உதாரணத்திற்கு 2ஜி அலைக்கற்றை ஊழலை எடுத்துக் கொள்ளுங்கள். அரசு ஏலம் விடும் வழிமுறையைத் தேர்ந்தெடுக்காததால், கருவூலத்திற்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் வெவ்வேறு மாதிரி கணக்கிடப்பட்டுள்ளன: நாம் அடிக்கடி குறிப்பிடும் எண்ணான 1,76,000 கோடி ரூபாய் என்பதை ஒரு விவாதத்திற்காக எடுத்துக் கொள்வோம். அப்படி என்றால் இந்தத் தொகைதான் மக்கள் இழந்த தொகையைப் பிரதிபலிக்கிறது: மக்களின் நலனுக்காகச் செலவழிக்கபட்டிருக்க வேண்டிய பணம், தனியார் சட்டைப்பைக்குள் சென்று விட்டது.

இதில் அமைச்சர் எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பணமும் அடக்கம். மீதமுள்ள தொகை எந்த குறிப்பிட்ட நபர்களின் சட்டைப்பைக்குள் சென்றது என்பதை இனிதான் கண்டு பிடிக்க வேண்டும். ஆனால் இந்த லஞ்சத்தொகை என்பது மக்களுக்கு எந்தவிதத்திலும் கூடுதல் சுமையாகக் கருத முடியாது என்பது உண்மைதான். ஆனால் எந்த லஞ்சமும் வாங்கப்படவில்லை என்றால், முதலில் வருபவர்களுக்கு முதலில் சேவை வழங்கும் முறையை மிகவும் கெடுபிடியாகவும் மனசுத்தியுடனும் அமுல் செய்து, ஏலம் விடும் முறையை முழுவதுமாய் காற்றில் பறக்க விட்டு, என்ன விலைக்குப் போக வேண்டுமோ அதைவிட 1,76,000 கோடி குறைந்த விலைக்கு விற்றிருப்பார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? சுருக்கமாகச் சொன்னால், தனியார்மயமாக்குதலுடன் சம்பந்தப்பட்ட ஊழல் என்பது மக்களிடம் இருந்த எவ்வளவு களவாடப்பட்டது என்பதை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறதே தவிர, அதிலே செலவாணியான இலஞ்சத்தை வைத்துத் தீர்மானிக்கப்படவில்லை. இதிலிருந்து தனியார்மயத்துடன் சேர்ந்த போகிற ஊழலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் என்பதைக் காட்டிலும், தனியார்மயத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதே சரியான முடிவாக இருக்கும்.

தூக்கி எறியக்கூடிய சொற்ப விலையில் தனியார் மயம் நடந்து கொண்டிருக்கிற வரையில், ஊழலே வெளிப்படையாகத் தெரியா விட்டாலும், மக்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். எந்த வலுவான லோக்பால் மசோதா ஏற்றப்பட்டாலும், இது எதையும் கட்டுப்படுத்தப் போவதில்லை. ஊழல் தடுப்புச் சட்டம் 1988-யை அடிப்படையாகக் கொண்டு வரைவு செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதாவின்படி, ஊழல் என்பதற்கான வரையறை கீழ்கண்டவாறு: ஒரு பொதுநல அலுவர் ஒரு சேவையைச் செய்து கொடுப்பதற்குத் தனது சட்டப்பூர்வமான சம்பளத்திற்கு மேல் பெறும் 'இலஞ்சம்தான்' (இந்த இலஞ்சம் கண்டிப்பாக பணமாகதான் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை) ஊழலாகும்.

இந்த நவீன தாராள‌மய யுகத்தில், மூன்றாம் உலகில் தூக்கி எறியக்கூடிய குறைந்த விலைக்கு தனியார்மயப்படுத்தல் நடக்கும்போது, இந்த மாதிரி இலஞ்சம் வழங்குதல் நடக்காதபோது இந்த ஊழல் லோக்பால் மசோதாவின் எல்லைக்குள் வரவே வராது. உண்மையில் அப்போது தனியார்மயபடுத்தலினால்தான் மக்களுக்கு நஷ்டம் ஏற்படுவதே ஒரு ஊழல்தான், அதற்குள் இந்த லோக்பால் மசோதா தலையிட்டு, மக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை தடுக்கவே முடியாது.

இந்த 2 ஜீ அலைக்கற்றை ஊழலை எடுத்துக் கொள்வோம். ஏதாவது சில பொது அலுவலர் அதில் ஏதோ ஒரு வகையில் இலஞ்சம் வாங்கி இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டால்தான், லோக்பால் அதற்குள் தனது கொடுக்கை நீட்ட முடியும். இல்லையெனில் அரசின் கருவூலத்திற்கு அல்லது மக்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் என்பது அப்படியே நஷ்டமாகத்தான் இருக்கும். யாரும் எதுவம் செய்ய முடியாது. ஆனால் தற்போது ஆடிட்டர் ஜெனரலாவது, ஏதோ சில கண்டனங்களை முன் மொழிந்துள்ளார். இருப்பினும் அவரது கண்டனங்கள் எந்தவகையிலும், இந்த கொள்கைகளை மாற்றப் போவதில்லை. அரசு மட்டும் அவரது கண்டனங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்தக் கொள்கைகளை மாற்றி இருந்திருந்தால், இவ்வளவு காலத்திற்கு இந்த நவீன தாராள‌வாத ராட்சிசயம் மூச்சு விட்டுக் கொண்டு, உயிர் வாழ்ந்திருக்காது.

பொது சொத்தை, தூக்கி எறியப்படும் குறைந்த விலைக்கு வாங்குவதுதான், மார்க்ஸ் கூறும் 'புராதான மூலதன சேர்மானத்திற்கான' சிறந்த உதாரணமாக அமைந்திருக்கக் கூடும். தனியார்மயத்துடன் சம்பந்தப்பட்ட ஊழல் என்பது அளவில் குறைவானதுதான். புராதான மூலதனத்திற்காக ஒருவரிடம் இலஞ்சம் வாங்கும் ஒரு பொது அதிகாரியின் இலாபம் என்பது, ஏற்பட்டுள்ள புராதான மூலதன சேர்மானத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகவும் சொற்பமானது. பொது அதிகாரி பெற்ற இலஞ்சம் என்பது, மக்கள் கருவூலத்திற்கு இதனால் ஏற்பட்ட நஷ்டத்துடன் ஒப்பிட்டால், அது கருவூல நஷ்டத்திற்குப் போடப்பட்ட வரி போல் சொற்பமாகதான் இருக்கும். ஆகவே இந்த மாதிரி பொது அதிகாரி பெறும் இலஞ்சத்தை ஒழிப்பதால் மட்டுமே, மக்களது நிலையை மேம்படுத்தி விட முடியாது. இந்த இலஞ்சத்தை ஒழிப்பதால், புராதான மூலதன சேர்மானத்தை ஓரளவுக்கு மட்டுப்படுத்தலாம் என்ற அளவில் மட்டுமே அது முக்கியத்துவம் பெறுகிறது. உண்மையிலேயே தேவையானது எதுவென்றால், தனியார்மயம் மூலம் ஏற்படுத்தப்படும் புராதான மூலதன சேர்மானம் ஒழிக்கப்பட வேண்டும்.

வெறுமனே ஊழலை மட்டுமே மையப்படுத்திப் பார்த்தல் என்பது, தவறான அடையாளப்படுத்தலுக்கு மட்டுமே கொண்டுச் செல்லும். நவீன தாராளமய இராட்சிசயத்துடன் தவிர்க்கவே முடியாத அம்சமாக, இணைக்கப்பட்டுள்ள இந்த தனியார்மயத்தின் வழிமுறைகள், "புராதான மூலதன சேர்மானத்திற்கான" ஒரு வடிவத்தைதான் ஏற்படுத்தி தருகிறது. 1988ம் வருடத்திய சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள அனைத்து ஊழல்களையும் களைந்தாலும், இந்தப் புராதான மூலதன சேர்மானம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். ஆகவே ஊழலுக்கு எதிராக அக்கறையுடன் போராடுபவர்கள், பொதுசொத்தை தனியார் மயப்படுத்துவதை நிறுத்தக் கோர வேண்டும்; அல்லது அப்படியே தனியார் மயப்படுத்துவது தவிர்க்க முடியாதது என்றால், ஏல முறையைத் தவிர மற்ற முறையைக் கையாளாமல் இருக்க வேண்டும்; இப்படிப் போராடினால்தான், வலுவான லோக்பால் மசோதாவை ஏற்படுத்துவதுடன், மக்களின் நலனில் அக்கறையுடன் போராடுபவர்கள் என்று அவர்கள் கோருவதற்கு கொஞ்சமாவது அர்த்தம் இருக்கும்.

ஊழல் குறித்து இவ்வளவு சத்தமாகப் பேசி விட்டு, "புராதான சேர்மானத்துடன்" பின்னிப் பிணைந்துள்ள தனியார்மயமாதல் குறித்து செவிட்டு அமைதியுடன் இருப்பது, ஊழல் எதிர்ப்பு அறப்போராளிகள் நவீன தாராளவாத்தை எதிர்கொள்ளுவதற்குப் பதிலாக, அறிவுஜீவித சிறுபிள்ளைத்தனத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

Pin It