சில தினங்களுக்கு முன்பாக பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் அரசுக்கு ஒரு பரிந்துரையை வெளியிட்டிருந்தது.  அதில் அரசுத் துறை வேலைவாய்ப்புகள் அருகி வருகின்ற சூழலில் தனியார் துறைப் பெரு நிறுவனங்களிலும், பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் அறக்கட்டளைகளிலும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடுக்கு வகை செய்ய வேண்டும் என்று அது கோருகின்றது.  இச் செய்தியை வெளிட்டிருந்த தமிழ் இந்து நாளிதழ் அச் செய்தியிலேயே இதனால் தனியார் துறைகளில் தகுதி திறமை பாதிக்கப் பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுவதாக தெரிவித்திருந்தது.  ஒரு செய்தியை வாசகர்கள் எந்த மனநிலையுடன் வாசிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டுதான் செய்தியை அவர்கள் ஏற்றுகிறார்கள்.  சரி இனி அவர்களின் அச்சம் குறித்து பரிசீலிப்போம்.

நாம் ஏன் ஆதரிக்கிறோம்???

அரசுத் துறையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு என்னென்னவெல்லாம் நியாயங்களோ அதே நியாயங்கள்தான் தனியார் துறையில் வழங்கப் படுவதற்கும் இருக்கின்றன.  ஒரு மக்கள் நாயக அரசமைப்பில் இயங்குகின்ற நாட்டில் அந்நாட்டின் அதிகாரம் பொருளாதாரம் இவை சார்ந்த வாய்ப்புகள் எல்லாம் அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் பகிரப்பட வேண்டும் என்பதுதான் இட ஒதுக்கீட்டின் அடிப்படை.  இட ஒதுக்கீடு சலுகையல்ல.  அது நிர்வாக நெறிமுறையாகும்.  ஆனால் இந்த உண்மையை நமது மக்களின் பொதுப்புத்திக்கு சென்று சேர விடாமல் இந்த சமுதாயம் அறிவுக் கண்ணை கட்டி வைத்திருக்கிறது.  அதனைச் சலுகை என்று புரிந்து கொள்வதால்தான் பல்வேறு தவறான கண்ணோட்டங்கள் நிலவுகின்றன. 

இன்றைய தினம் அரசு வசமிருந்த பல்வேறு பொறுப்புகள் அவுட் சோர்சிங் என்ற பெயரிலும் காண்டிராக்டுக்கு விடுதல் என்ற பெயரிலும் தனியார் வசம் விடப்பட்டு வருகின்றன.  அவ்வாறு அரசின் பொறுப்புகள் மடைமாற்றம் செய்யப் படுகின்ற போது அந்த பொறுப்பினை நிறைவேற்றுவதற்கான ஊழியர் நியமனம் என்பது அரசு வேலைவாய்ப்பிலிருந்து பிரிக்கப் பட்டு தனியார் நிறுவனங்கள் வசம் சென்று விடுகிறது.  எனவே ஓர் இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை ஒப்பிடும்போது அரசு வேலை வாய்ப்புகள் இன்றைய தினம் வெகுவாக குறைக்கப் பட்டு விட்டன.  அதாவது உண்மையில் அந்த வேலைவாய்ப்புகள் இப்போது தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளாக மாறி விட்டன.  ஆனால் அரசு வசம் அந்த வேலைவாய்ப்புகள் இருந்திருக்கும் பட்சத்தில் அந்த வேலைகளைப் பெற்றிருக்கும் வாய்ப்பு பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப் பட்டோருக்கும் கிடைத்திருக்கும்.  ஆனால் தனியார் அதே பணியிடங்களை நிரப்பும் போது அவர்கள் இந்த இட ஒதுக்கீடு முறையை பின் பற்ற வேண்டிய சட்ட நிர்ப்பந்தம் இல்லாத காரணத்தினால் தங்களுக்கு வேண்டியவர்களை வைத்து அந்த இடங்களை நிரப்பிக் கொள்கிறார்கள்.  இவ்வாறாக பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் கிடைத்திருக்கக் கூடிய வேலைவாய்ப்புகள் மறைமுகமாகக் குறைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

சரி.  இனி தனியார் துறையில் எவ்வாறு இடங்கள் நிரப்ப்ப் படுகின்றன என்று பார்ப்போம்.  ஒரு நிறுவனம் அல்லது கம்பெனியின்  அடிப்படைத் தேவைகள் மூலதனம்/கடன் எந்திரங்கள் மனிதர்கள் அல்லது மனித உழைப்பு சக்தி.  ஆங்கிலத்தில் விமீஸீ, விஷீஸீமீஹ் ணீஸீபீ னீணீநீலீவீஸீமீs என்று சொல்வார்கள்.  இதில் ஒரு கம்பெனி எவ்வாறு நிதியைத் திரட்ட வேண்டும் என்பதில் அரசின் தலையீடு கட்டுப்பாடு அனைத்தும் உண்டு.  இதற்கெனத் தனி நெறியாள்கை ஆணையங்கள் இருக்கின்றன.  ஒரு கம்பெனி வாங்கும் சொத்துக்களை ஒரு கம்பெனி எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கும் விதிமுறைகள் இருக்கின்றன.  ஒவ்வொரு ஆண்டும் தணிக்கையாளர் மற்றும் கம்பெனி செகரட்டரி ஆகியோர் நிதி சார்ந்தும் அதன் சொத்துகள் சார்ந்தும் ஒரு கம்பெனி சட்ட விதிகளுக்கு இயைந்துதான் செயல்படுகிறது என்று அறிக்கை தர வேண்டும்.  ஆனால் மனிதவளத்தை ஒரு கம்பெனி எவ்வாறு பெற வேண்டும் எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றிய எந்த வழிகாட்டுதலையோ விதியையோ ஒரு கம்பெனி பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் எதுவுமில்லை.  ஒரே ஒரு விசயம் பி எப் மற்றும் இஎஸ்அய் வசதிகள் ஊழியர்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறதா என்பதைப் பற்றி மட்டுமே ஆண்டறிக்கைகள் பேசுகின்றன. 

தொழிலாளர் நலச் சட்டங்கள் மிக மிகப் பலவீனமாக இருக்கின்றன.  இந்நிலையில் ஒரு நிறுவனம் எவ்வாறு வேலைக்கு ஆளெடுக்க வேண்டும் என்ற நெறிமுறைகள் எதுவுமில்லை.  வேலை வாய்ப்பகத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று ஒரு அரசாணை இருப்பதாக அவ்வப் போது சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் யாரும் அமுல் படுத்துவதில்லை. இந்த இடத்தில் வாசகர்களுக்கு சத்யம் நிறுவன ஊழலை நினைவுபடுத்த வேண்டும்.  அதில் முக்கியமான குற்றச் சாட்டே, இல்லாத ஊழீயர்களை இருப்பதாகப் பதிவு செய்து முதலாளியே அனைவரது சம்பளத்தையும் கபளீகரம் செய்ததுதான்.  அவ்வாறு செய்ய முடிந்ததற்குக் காரணம் ஊழியர் நியமனம் தொடர்பாக எந்தக் கட்டுப்பாடும் கம்பெனிகளுக்கு இல்லாததுதான்.  இதைத்தான் தகுதி திறமை என்று இவர்கள் சொல்கிறார்கள். ஏனோ இந்த இரண்டு வார்த்தைகளும் இந்திய மொழி வரலாற்றில் கெட்ட வார்த்தைகளாகவே ஆகிப் போய் விட்டன.

உண்மையில் திறமை மிகுந்தவர்கள் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களே.  காரணம் அவர்கள் அலுவலகங்களின் கட்டமைப்பு சிறப்பாக இருக்கும்.  இரண்டாவது அவர்கள் பயிற்சி பெறும் முறை அறிவியல் பூர்வமானது.  வேலைகளில் நல்ல பயிற்சி அவர்களுக்குத் தரப்படுகிறது.  ஆனால் அவர்கள் வேலை பார்க்க விரும்புவதில்லை என்பதுதான் நமக்கு நேரிடும் சோகம்.  அது அவர்களின் திறமைக் குறைவன்று.  அரசாங்கத்தின் திறமைக் குறைவு.  இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து அரசுத் துறை தோல்வி பெறுவதற்கான காரணங்களில் ஒன்று அது இட ஒதுக்கீடு முறையில் வேலை கொடுப்பது என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை இந்த நாட்டில் பாட நுல்களிலேயே (வணிகவியல் மற்றும் பொருளாதார பாடங்களில்) மறைமுகமாக வைத்திருக்கிறார்கள்.

தனியார் நிறுவனங்கள் கல்லுரிகளுக்கு போய்த் திறமையானவர்களை அள்ளிக் கொண்டு வந்து விடுவதாகவும் அந்த ஒரு செய்தியின் அடிப்படையில் தனியார் துறையின் வேலைவாய்ப்புகள் அனைத்துமே தகுதி திறமை அடிப்படையில்தான் வழங்கப் படுகின்றன என்றும் பரப்பப் பட்டிருக்கிறது.  இதில் ஒரு பகுதி உண்மை இருக்கிறதே யொழிய முழு உண்மையில்லை. துவக்க நிலை பணி நியமனங்கள் இப்படி நடைபெறலாம்.  ஆனால் முக்கியமான நியமனங்கள் தங்களுக்கு வேண்டியவர்களை எடுப்பதாகவே அமைகின்றன. 

திறமை இருக்கிறதா இல்லையா என்பது இல்லை ரெபரென்ஸ் இருக்கிறதா அதாவது பெரிய மனிதர்கள் பரிந்துரை இருக்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம்.  இந்த சமூகத்தின் பெரிய மனிதர்கள் யார் அவர்கள் யாரை பரிந்துரைப்பார்கள் என்பது எல்லோருக்கும் வெளிச்சம்.

சரி. அடுத்து ஒரு கேள்வி. தனியார் பணம் போட்டு நடத்துவதில்  எல்லோரையிம் வேலைக்கு எடுக்க சொல்லி எப்படிக் கேட்க முடியும்??  ரொம்ப நியாயம் போல் தோன்றும் நியாயமே இல்லாத கேள்வி இது.  பிற்படுத்தப் பட்டோர் நல கமிஸன் சிறிய நிறுவனங்களை அதன் பரிந்துரை வரம்புக்குள் கொண்டு வரவில்லை.  பெரிய நிறுவனங்கள் என்றுதான் சொல்லியிருக்கிறது.  பெரிய நிறுவனங்களுக்கான வரையறைக்குள் நாம் இப்போது போக வேண்ட்டாம்.  ஆனால் வாசகர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.  தனியார் நிறுவனங்கள் 100 சதவீதம் தனியார் பணத்தில் இயங்குகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம்.  வங்கிகள் அரசு இவற்றின் துணையோடுதான் தனியார் நிறுவனங்கள் இயங்குகின்றன.  எனவே சமூக நீதியைக் காப்பதில் அரசுக்கு என்ன கடப்பாடு இருக்கிறதோ அதே கடப்பாடு தனியார் நிறுவனங்களுக்கும் உண்டு.

அடுத்து இது நடைமுறை சாத்தியமில்லை என்கிறார்கள்.  உங்களை யாரும் புதிய பாதையெல்லாம் போடச் சொல்லவில்லை.  ஏற்கனவே ஒரு நுற்றாண்டுகாலமாக போராடிப் போட்டு வைத்திருக்கும் சாலையில் இராஜ நடை நடந்துதான் போகச் சொல்கிறோம்.  அரசு நிறுவனங்கள் பொதுத் துறை வங்கிகள் இரயில்வே துறை போன்ற திறமையாக இயங்கிக் காட்டிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் இவையெல்லாம் எப்படி வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்களோ அது போல் உங்களை எடுக்க சொன்னால் இதில் நீங்கள் புதிதாக யோசித்து செய்ய என்ன இருக்கிறது??  ஒரு பணியிட நிரப்பு வாரியத்தை கூட்டாகவோ இல்லை தனித்தனியாகவோ வைத்துக் கொள்வதில் என்ன சிரமம்.-

தனியார் துறை ஈட்டும் நிகர வருமானத்தில் 2 சதவீதம் சமூக நலனுக்காக செலவிட வேண்டும் என்று அரசு கோருகிறது.  அதில் இருக்கும் நியாயத்தை விட பன்மடங்கு நியாயம் தனியார் துறையில் அனைத்துச் சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்பதில் இருக்கிறது.  அந்தந்த வேலைக்குப் படித்தவர்களைத்தான் எடுக்கச் சொல்கிறோம்.  படிக்காதவர்களையல்ல.  இடஒதுக்கீடு முறையினால் இரயில்வே துறையின் திறன் அதிகரித்திருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்த்து.  அது தனியார் துறைக்கும் நடக்கும் என்பதுடன் தனியார் துறை வளர்ச்சி உண்மையிலேயே நாட்டு மக்களின் வளர்ச்சியாக பரிணாமம் பெறும் என்பதும் நடக்கும்.  இந்த கோரிக்கை வெற்றி பெறப் பாடுபடுவோம்.   

Pin It