கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

‘இந்து' என்ற வார்த்தைக்கு இசுலாமியர் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சாராதவர் என்று பொருள். பார்ப்பனர்கள், சாதி இந்துக்கள் (சைவ பிள்ளை, சைவ முதலியார், காசுக்கடை செட்டியார்), இடைநிலை சமூகங்கள் (வன்னியர், கவுண்டர், முக்குலத்தோர் உட்பட பிற்படுத்தப்பட்டோர் சூத்திரசாதிகள்) மற்றும் இந்துத்துவ பண்பாட்டோடு எதிர் அரசியல் கண்ட தாழ்த்தப்பட்டோர்கள் இவர்கள் அனைவருமே ‘இந்து' என்றுதான் அழைக்கப்படுகிறார்கள். இது மட்டுமில்லாமல் பவுத்தம், சீக்கியம் மற்றும் ஜைன மதங்கள் உட்பட இந்து மதத்தின் பிரிவுகளாகத்தான் இந்திய அரசியலமைப்பு சுட்டுகிறது. ஆகவே, ‘இந்து’ என்கிற வார்த்தைக்கோ அல்லது அந்த மதத்திற்கோ, தனித்த இறைக் கொள்கையோ, சமயநம்பிக்கையோ, பண்பாடோ கிடையாது.

எதிர் அரசியல் சிந்தனை கொண்டவர்களையும், முரண் கருத்தியல் சிந்தனைகளையும் தன்னகத்தே சேர்த்துக் கொண்டதன் மூலம் தன்னுடைய அரசியல் இருத்தலை தக்கவைத்து கொண்டிருக்கிறது. இந்து மதத்தின் இந்த ‘பன்முகத்தன்மை கொண்ட பாசிசத்தை’ தான் செயமோகன் போன்ற எழுத்தாளர்கள் புனிதம் என்று பிதற்றுகிறார்கள்.

இந்து மதத்திற்கான வரையறையை மேலோட்டமாக பார்க்கும்போது, பரந்துபட்ட அளவில் சனநாயகத்தன்மையுடன் இருப்பது போல் தெரியும். ஆனால், அதன் அடிநாதமாகிய ‘சாதி’யை உற்று நோக்கும்போதுதான் இந்து மதத்தின் வக்கிரங்களும், வன்மங்களும் நன்கு புலப்படும். ஏனென்றால், இந்தியாவில் பல மதங்கள் இருக்கின்றன என்கிற வாதமே மிகப்பெரிய மோசடி. பல்லாயிரக்கணக்கான சாதிகள் மட்டுமே இந்தியாவில் இருக்கின்றன. ஒவ்வொரு சாதியும் மனிதனை சமூகத்திலிருந்தும், பொதுச் சிந்தனையிலிருந்தும் தனித்தே பிரித்து வைக்கும் வேலையை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் கீழ்க்காணும் பிரிவுகளாக மதங்கள் இருக்கின்றன.

1) பார்ப்பனியத்தை (சாதிய அமைப்பை) அப்படியே உள்வாங்கிக் கொண்ட கிறிஸ்த்துவம்

2) பார்ப்பனியத்தால் வீழ்த்தப்பட்ட பவுத்தம்

3) பார்ப்பனியக் கூறுகளுடன் சாதிப் படிநிலை கொண்ட சனாதன (இந்து) மதம்

4) பார்ப்பனியத்திற்கு எதிரான நடவடிக்கைகளும், வழிபாட்டு முறைகளும் கொண்ட இசுலாம்.

மேற்கூறிய செய்திகளிலிருந்து இந்தியாவில் ‘இசுலாம்’ என்கிற ஒரு மதம் மட்டுமே இருக்கிறது என்கிற செய்தி நமக்குப் புலனாகிறது. இந்து, கிறிஸ்த்துவம் என்று பெயர்கள் வேறுபட்டாலும், அதன் உள்கட்டமைப்பு சாதியக் கூறுகளாகவே இருக்கிறது. இந்தப் புரிதலோடு நாம் இக்கட்டுரையின் கருப்பொருளுக்கு செல்வோம்.

இந்து மத இழிவிலிருந்து விடுபட நினைத்து கிறித்துவ மதத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கிறதா? அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பிரிவில் இருப்பது சரியா? அல்லது இந்து தலித் மக்களைப் போலவே அவர்களுக்கும் (SC) பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டு உரிமையை வழங்க வேண்டுமா? என்கிற கேள்விக்கான விடையை நோக்கி நாம் இக்கட்டுரைக்குள் பயணிப்போம்.

இந்தியாவில், பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ‘சிரியோன் கிறிஸ்த்தவர்கள்’ வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பிறகு, போர்த்துகீசிய படையெடுப்பு, பிரிட்டிஷ் படையெடுப்பு என தொடர்ச்சியாக கிறித்துவ மதம் இங்கு பரப்பபட்டது. இயேசுநாதர் இறந்த ஒரு சில ஆண்டுகள் கழித்து, புனித தோமையர் என்னும் மதபோதகர் சென்னைக்கு வந்ததாகவும், அவருடைய கிறித்துவ மதப் பிரச்சாரத்தால், கோபமுற்ற பார்ப்பனர்கள் அவரைக் கொன்றதாகவும் ஒரு வரலாறு கூறப்படுகிறது.

எது எப்படியிருந்தாலும் இன்று கிறிஸ்த்தவத்தின் அடையாளம் சாதியப் படிநிலைகளை முழுமையாக உள்ளிழுத்துக் கொண்ட வடிவமாகவே இருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் கிறிஸ்த்துவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்ட மருத்துவ சேவையின் மூலம் இம்மதம் அடித்தட்டு மக்களுக்கு அறிமுகமானது. பதினெட்டாம் நூற்றாண்டில் சனாதன மதத்தால் கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்கியதன் மூலம் அம்மக்களால் கவரப்பட்டது. ஆரம்பகாலத்தில், கிறிஸ்த்துவ பாதிரிமார்கள் தங்களது உயிருக்குப் பயந்து உயர்சாதி அடையாளங்களுடன் மதப்பிரச்சாரத்தை செய்து வந்தார்கள். மீட்ஐயர், றில்ங்பேஐயர் போன்று பல பிரெஞ்சு பாதிரியார்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் பார்ப்பன அடையாளத்தை வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். அதன்பின் மெல்ல மெல்ல அடித்தட்டு மக்கள் தங்களின் மீட்பு மதமாக கிறிஸ்த்துவத்தை ஏற்கத் தொடங்கினர்.

திருவாங்கூர் சமஸ்தானஸ்தானத்தில் காணத்தகாத சமூகமாக இருந்த நாடார்களும், தீண்டாதப்படாத மக்களாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களும் அதிக எண்ணிக்கையில் கிறிஸ்த்துவ மதத்தில் சேர்ந்தனர். அக்கால கட்டத்தில், கல்வி பெறுவதற்கு, பெரும் வாய்ப்பினை கிறிஸ்த்துவ மதம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. பின்னாட்களில் வெள்ளாளர், உடையார், வன்னியர், ரெட்டியார் போன்ற இடைநிலை சாதிகளும், சாதி இந்துக்களும் கிறிஸ்த்துவ மதத்தில் இணைந்தனர். அதுவரை, அடித்தட்டு மக்களுக்கான மதமாக இருந்த கிறித்துவம் அதன் பின்னால், சாதிய அமைப்பை உள்வாங்கி கொண்ட இன்னொரு இந்து மதமாகி விட்டது. கிறித்துவம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும், அம்மக்களின் பழமையான மதப் பழக்கவழக்கங்களையும், கலாச்சாரங்களையும் உட்கிரகித்துக் கொண்டே மதப்பிரச்சாரம் செய்யும். மதமாற்றத்தை எளிதாக்குவதற்கு கிறித்துவம் தென்றுதொட்டு மேற்கொண்டு வரும் வழிமுறை அது.

அந்த வழக்கப்படி, இந்து மதத்திலுள்ள சாதிய அமைப்பில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே கிறித்துவம் மதமாற்றம் செய்தது. அதன் விளைவாக இடைநிலை சாதி உணர்வு பெற்றவர்களும், சாதி இந்துக்களும் கிறித்துவத்திற்குள் நுழைய ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியாக தீண்டாமையும் கிறித்துவ மதத்திற்குள் நுழைய ஆரம்பித்தது.

வேளாங்கண்ணி திருவிழா, லூர்து அன்னை தேர் விழா, மாதா கோயில் திருவிழா, குழுந்தை ஏசு கோயில் என கிறித்துவ மதத்தின் அனைத்து விழாக்களும் இந்து மத விழாக்களுடன் ஒத்த தன்மையுடன் இருப்பதைக் காண முடியும். மேலும், கிறித்துவ விழாக்களின் நடைமுறை கடலோர மீனவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையதாக இருப்பதை நாம் உணர முடியும். ஆனால், இன்று, இந்து மதத்திலிருக்கும் தாழ்த்தப்பட்டோர்கள் எந்த அளவிற்கு ஆதிக்க சாதியுணர்வால் அடக்கப்படுகிறார்களோ, அந்த நடைமுறையில் துளி அளவும் குறையாமல் கிறித்துவ மதத்திலும் பாதிப்புக்குள்ளாகின்றனர். கிறித்துவ கிராமங்களில் இரட்டைச்சுடுகாடு, வழிபாட்டுத் தலத்தில் தீண்டாமை என சாதியக் கொடுமைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இத்தகைய சூழலில், நமது அரசியலமைப்பு சட்டமும் தலித் கிறித்துவ மக்களை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. நமது, அரசியலமைப்பின்படி சாதிய மனநிலை கொண்ட (வெள்ளாளர், உடையார் உட்பட இடைநிலை சமூகங்கள்) கிறிஸ்த்துவ சமூகங்களும், தாழ்த்தப்பட்ட கிறித்துவர்களும் பிற்படுத்தப்பட்டோர் (BC) என்கிற ஒரே நேர்கோட்டில் வருகின்றனர். பெயர், வாழ்விடம், வழிபாட்டு முறை என ஒவ்வொன்றிலும் வேறுபட்டு இருக்கும் சாதி கிறிஸ்தவர்களும் (Caste Christians) தலித் கிறித்தவர்களும் (Dalit christians) இடஒதுக்கீடு பெறுவதில் சமமாக பாவிக்கப்படுவது மிகப்பெரிய சமூக அநீதி.

1950ம் ஆண்டு வெளியிடப்பட்ட குடியரசுத் தலைவரின் அரசியல் சட்ட ஆணை எண்.19 இந்து அல்லாத ஏனைய தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு ஆணை பொருந்தாது என அறிவித்தது. பின்னர், 1956ல் திருத்தி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சீக்கியர்களுக்கும், 1990ல் திருத்தி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தபௌத்தர்களுக்கும் இடஒதுக்கீடு உரிமை வழங்கப்பட்டது. அதேபோல் கிறித்துவ மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இந்து மதத்திலுள்ள தலித் மக்களைப் போன்ற இடஒதுக்கீடு உரிமையை அளிக்க நடுவண் அரசு ஆவணம் செய்ய வேண்டும். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் தலித் கிறித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகி விடுமோ என்று இந்துத்துவ சக்திகள் அச்சம் கொள்கின்றன.

தலித் கிறித்தவ மக்களின் உரிமைக்காக இதுவரை கிறித்துவ வன்னியரோ, நாடாரோ, இடைநிலை சமூகத்தை சேர்ந்த திருச்சபைகளோ, பாதிரியாரோ போராட்டம் நடத்தவில்லை. ஏனென்றால் கிறித்தவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதைவிட தங்கள் சாதிய ஆதிக்கம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்பதே அவர்களது நோக்கம். எனவே, கிறித்தவம் இந்தியாவில் தனி மதமாக இல்லை. சாதிய மனநிலை கொண்ட இன்னொரு இந்து மதம் என்பது நிருபணமாகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி சமீபகாலமாக தாழ்த்தப்பட்ட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சூலை 28, 2011 அன்று இக்கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. சிறுபான்மை மற்றும் தலித் அமைப்புகளின் செயல்பாடுகளை மறைத்து வரும் ஊடகங்கள் இந்நிகழ்வையும் வழமைபோல் வெளிக்கொணரவில்லை. ஆகவே, இந்தியாவில் கிறித்துவம் இந்து கருத்தியலுக்கு மாற்று மதமல்ல என்கிற நடைமுறை உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இயேசுநாதரை கும்பிடும் இந்துக்களாக மாற்றப்பட்ட தலித் மக்களுக்கு, அய்யனாரையும், இசக்கியம்மனையும் கும்பிடும் இந்து தலித்துக்களை போலவே, பட்டியல் சாதியினருக்கான (SC) இடஒதுக்கீடு உரிமையினை வழங்க வேண்டும்.

- ஜீவசகாப்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)