எனது நண்பரின் மகன் பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியுற்றிருக்கிறான். அவர் வீட்டுக்கு தற்செயலாகச் சென்ற நேரம் பரீட்சை முடிவுகள் வந்திருக்க, நான் தர்ம சங்கடத்தில் நெளிந்தேன். என்னை வைத்துக் கொண்டே தகப்பனும் மகனும் வாதத்தில் ஈடுபட்டதே நான் நெளிந்ததன் காரணம். ஒரு கட்டத்தில் தகப்பன் சொன்னார் "பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சியுறாமல் நீ என்ன செய்து பிழைப்பாய்..?"

அதற்கு சோகமற்ற தீர்க்கமான குரலில் அந்த மகமாணவன் சொன்னான் "என்னைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். நான் சாமியாரா போறேன்" சொன்னவன் நிற்காமல் சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகு நண்பர் மெல்ல இயல்பாகி வேறு விஷயங்கள் பேசத்துவங்க, ஒரு மணி நேரம் பேசிமுடித்த பின் மெல்ல சொன்னேன் "உங்கள் மகன் வந்தால் இனித் திட்டாதீர்கள்.. மெல்ல பேசி அறிவுரை சொல்லித் திருத்த முயலுங்கள் என்றேன்.

அந்த மாணவன் சொன்னதன் அர்த்தம் சமீப நாட்களாய் தான் எனக்குப் புரிகிறது. சாமியாராய்ப் போகிறேன் என்பது ஒன்றும் தவறான செயல் என்று நான் கருதவில்லை. ஆனால் அரசியல், சினிமா போன்ற வெகுஜனப் புகழ் துறைகளுக்கெல்லாம் அயராத முயற்சியும் தோல்வி கண்டு அஞ்சாத துணிவும் அதிக பட்ச உழைப்பும் தேவைப்படுகின்றன. ஆனால் சாமியார் ஆவதற்கு ஒரு கூட்டமும், கூட்டத்தைக் கூட்டுகிற தனிமனித ஆளுமையும் போதும் என்பதாலேயே என் நண்பரின் மகன் அதை ஒரு சிறந்த தொழிலாகத் தேர்வு செய்திருக்கிறான் என்பதும் இப்பொழுது தான் புரிகிறது.

மிகச்சமீப ராம்தேவ் பாபா வரை இந்தியா என்னும் ஒற்றை தேசத்தைக் கற்பழிக்க எத்தனை எத்தனை சாமியார்கள். நினைத்துப் பார்த்தாலே அதீத பயமொன்று முதுகுத் தண்டை சில்லிடச் செய்கிறது. இன்னமும் நூறு சதவிகிதக் கல்வியறிவை எம் மக்கள் எட்டிவிடுவதற்கான எல்லை எது எனக் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நம்பிக்கையற்ற நிலையில் மெத்தப் படித்த அறிவுஜீவிகளும் அதிகாரவர்க்கமும் அரசபதவியாளர்களும் மண்டியிட்டு வாய்பொத்தி குருவே சரணம் என்று காவிகளின் காலடியில் கிடப்பதையும் அவற்றை ஊடகங்களும் (சில)வால் பிடித்து சாமியார்களின் கடவுள்தன்மையை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருப்பதையும் இன்னும் எத்தனை எத்தனை காலங்களுக்குத் தான் எம் நாடு அனுமதித்துக் கொண்டிருக்கப் போகிறது..?

இந்தியத் துணைக்கண்டம் மதச்சார்பற்ற பெருநிலம். இங்கு தோன்றியதாகச் சொல்லப்படும் இந்து சமயம் தவிர பௌத்தம் சமணம் சீக்கியம் போன்ற மதத்தினர் காலங்காலமாக வாழ்ந்து வந்த சமஸ்தானங்களும், கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களை மற்றும் மார்க்கங்களை பின்பற்றுவோரும் காலம் காலமாக ஒன்றுபட்டே வாழ்ந்து வந்தது வரலாறு. இன்றைக்கு மதங்கள் போதிக்கின்ற எம்மதமும் சம்மதம் என்கிற தாத்பரியம் காற்றில் பறக்கவிடப்பட்டது. இறைவன் அல்லது கடவுள் இருக்கிறானா அல்லது இல்லையா என்னும் வாதத்திற்குள் செல்வதற்கில்லை இக்கட்டுரை. அதற்கு அடுத்தபடியாக மதங்கள் என்னும் கட்டுமானத்திற்குள் மனிதர்களின் ஆளுமை பற்றி உரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

மதத்தை செயல்படுத்துவதை அன்றி வேறெந்த பணியும் கொண்ட ஒருவர் உயர்த்தி பிடிக்கப்பட வாய்ப்பே இல்லை. ஆனால் இன்றைக்கு வாழும் கலை, யோகா, மூலிகைகள், மருத்துவம் என வேறொரு பாதையில் மதத்தை ஒத்துக் கொள்ளும் அப்பாவிகளை மனம் மயக்கி, அவர்களது எண்ணங்களை வசப்படுத்திக் கழுவி, உள்ளீடு செய்யப்பட்ட விஷயங்களுக்கேற்ப தாளமின்றி ஆடும் குரங்குப்பொம்மைகளாக மனிதர்களை மாற்றி, அவர்களது கல்வி, வாழ்நிலை என எந்த ஒரு உயர்ந்த விஷயத்தையும் மறக்கடித்து சாமியார்கள் ஆட்டுவிக்கின்றனர் என்பதற்குச் சமீப காலமாய் கணிப்பொறித் துறை உள்ளிட்ட பணம் கொழிக்கும் துறைகளில் பணிபுரிவோர் நிறையப்பேர் சாமியார்கள் நடத்தும் அமைப்புகளில் உறுப்பினராவதும் அதன் பின்னர் தான் தாம் ஈடுபட்டிருக்கும்  இயந்திரமயமான வாழ்க்கையில் ஒரு மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறிக்கொள்வதுமே சாட்சி.

மக்களுக்காக அரசியல் அமைப்பு உள்ளது. சட்டமன்றங்களும், பாராளுமன்றமும், உள்ளாட்சி முதல் உலக நீதிமன்றம் வரை உள்ளன. சட்டத்தை நடைமுறைப்படுத்த காவல்துறை, நீதித்துறை போன்றனவெல்லாம் உள்ளன. ஒரு முதல்வர் தூக்கி எறியப்பட்டு இன்னொரு முதல்வர் பதவியேற்கிறார். வரிசையில் நின்று ஓட்டுப்போடுவதில் நம்பிக்கை உள்ள மக்கள் ஜனநாயகத்தை மௌனமாகத் தேர்வு செய்கிறார்கள். உள்ளூர் பிரச்சினை தொடங்கி உலகப் பிரச்சினை வரை ஊடகங்கள் உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. சர்வபலம் மிக்க ஒரு நாடு இந்தியா. இதன் அமைப்பு எவ்வளவு சிறப்பு வாய்ந்தது..? இதில் ஒருவன் கிளம்பியிருக்கிறார் உண்ணாவிரதச் சக்கரவர்த்தி. காவல்துறை தேடி வந்தால் தனி விமானத்தில்  ஏறி ஓடிவிடுகிறான். யார் இவர்.? எதற்காக நாடகமாடுகிறார்.? எல்லாவற்றையும் துறந்தால் தானே துறவி எனப்பொருள்.. புகழ்தேடி இம்மாதிரி சில தனி மனிதர்களின் விளையாட்டுக்கு எம் மக்கள் பலியாவதா..? தடுத்து நிறுத்த வேண்டாமா..?

பொதுவாகப் பேசிக்கொண்டே போவதில் அர்த்தமில்லை.

சில விஷயங்கள்:

1.கடவுளுக்குச் சமமாக மற்ற மதங்களில் எந்த ஒரு மனிதப் பிறப்பையும் சமப்படுத்துவதை அம்மதங்கள் தடை செய்கின்றன. இந்து மதத்தில் தொட்டதற்கெல்லாம் சாமியார்கள் நேற்று மழைபெய்தால் உடனே உற்பத்தி ஆகின்றனர். அவர்களுக்கென்று ஒரு குடை. அவர்களுக்கென்று ஒரு கூட்டம். அவர்களுக்கென்று ஒரு முழக்கம். அவ்வளவு தான். உடனே அவர் கிருஷ்ணாவதாரம் அவர் ராமாவதாரம் என அவரே கடவுளாக பணி உயர்வு பெற்றுக்கொள்வதும் மந்தை போன்ற மனம் கழுவப்பட்ட அவரது சீடர்கள் அவரைக் கடவுளாக ஏற்றுக்கொண்டு அதுவரையிலான இந்துக் கடவுள்களின் மீதான வழிபாடுகளைக் கைவிடுவதும் தொடர்கிறது. அவரை எதிர்த்து யார் பேசினாலும் அவர்களை விரோதிகளாகவே பார்ப்பதும் நடக்கிறது.

2. கடந்த இருபது வருடங்களில் பணமோசடி, நில அபகரிப்பு, பெண்கள் மீது பாலியல் வன்முறை, சிறுவர் மீதான பாலியல் வன்முறை, கொலை என இந்தியா முழுவதும் எத்தனை எத்தனை வழக்குகள்..? எங்கிருந்து வந்தார்கள் இந்தச் சாமியார்கள்..? எப்படிச் சேர்ந்தது இத்தனை பணம்..? இன்றைக்கு ஊழலை ஒழிக்கப் புறப்படுகிறாரே இந்த ராம்தேவ்... இவரது ஆரம்பம் என்ன..? ஏது இவர்க்கு இத்தனை கூட்டம்..? எப்படி வந்தது இத்தனை கோடி...?இவர்கள் பின்னால் திரளுவதை விட இவர்களை எதிர்ப்பதற்கும்,கண்டுபிடித்துக் கொடுப்பதற்கும் இளைஞர் படை திரண்டிருக்க வேண்டாமா..?

3.அரசியல் ஒரு சாக்கடை என்கிறோம். பரவலான கருத்து. சிந்திக்கத் தானே ஒழிய சிரிக்க அல்ல. எந்த அரசியல்வாதியும் முளைத்து வருவதில்லை. அவன் படிப்படியாக கட்சிப்பணி களப்பணி என வியர்வை சிந்தித் தான் மேலே வருகிறான். ஒளிவட்டமொன்றை தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு வலம் வரும் சாமியார்களை வளர்த்து விட்டதும் வளர்த்துக் கொண்டிருப்பதும் அரசியல்வாதிகள் தானே..? இதைத் தடுக்க முதலில் ஒரு சட்டம் வேண்டாமா..?

4.நாத்திகம் என்பது வரையறைக்குட்பட்டது. ஆத்திகம் என்பது விசாரணைக்குட்பட்டதே. அவ்வாறு இருக்க, வாயில் இருந்து லிங்கம் எடுத்தவனும், வெறும் கையை சுழற்றி சாக்லேட் கொடுத்தவனும் நடிகையோடு சல்லாபித்தவனும், இனான்ய மொழி பேசியவனும், நிலமோசடியில் ஈடுபட்டவனும், தண்ணீரில் நடக்கிறேன் எனக் கிளம்பிச்சென்றவனும் பிடிபட்ட பிறகு பேசிச்சிரித்தோமே... நம்மில் யாருக்கும் இவர்களை பிடித்துக் கொடுப்பதில் அக்கறை இருந்ததா..?

5.குறைந்த பட்சம் சாமியார்களின் பின்னால் செல்லாதவனுக்கு தான் வேலை கொடுப்பேன் வீடு கொடுப்பேன் கடன் கொடுப்பேன் பெண் கொடுப்பேன் என நம்மில் உள்ள நல்லவர்கள் சுயமரியாதைக்காரர்கள் முன்வந்தால் மெல்லப் பூக்காதா மாற்றம்...? வெட்கித்தலை குனிய வேண்டியவர்களெல்லாரும் பெரும்பான்மை என்கிற பெயரால் நிகழ்த்திக் கொண்டிருக்கிற காட்டுமிராண்டித்தனங்களை நிகழ்ந்த பின் கண்டிக்கிறதை விடவும், நிகழாமல் தடுக்க முனைவதே சாலச்சிறந்ததாக இருக்க முடியும்.

6.பகுத்தறிவு ஒரு புறமும் நாத்திகம் மறுபுறமும் இருக்கட்டும்.. இந்த விஷவிதைகள் முதலில் களையப் படவேண்டும். அது தான் முக்கியம். ஆகவே கடவுள் மறுப்பை விடக் கையிலெடுத்து உடனடியாகக் கவனமுடன் வென்றெடுக்க வேண்டியது ஒன்று உண்டெனில் அது  சாமியார் மறுப்பாகத் தான் இருக்க முடியும்.

7.எல்லாவற்றுக்கும் மேலாக, இணை வைப்பதை தடை செய்கிறது இஸ்லாம். ஆகவே அந்த மார்க்கத்தில் சாமியார்கள் போன்ற எந்தத் தனி மனித செல்வாக்குக்கும் இடமே இல்லை. கிறித்துவத்தில் பங்குத் தந்தைகளும் மதகுருமார்களும் போப்பாண்டவர் முதலானவர்களும் கூட உண்டென்றாலும் அம்மதத்தில்கூட இறைவனுக்கு இணையாக ஒருவர் எந்த இடத்திலும் வரச்சாத்தியமே இல்லை. இறந்த பிறகு சிலர் புனிதர் பட்டம் பெறலாம் என்றாலும் கூட தனி மனிதத் துதி அங்கே குறைவே.

8.இந்தியாவில் பெரும்பான்மையாக வசிக்கிற மக்கள் இந்துக்கள். இந்த மக்கள்தான் சாமியார்களிடம் ஏமாந்து தவிக்கிறார்கள். நானும் இறைவன் என்று கூறிக் கொள்ளும் சாமியார்களை கண்காணிப்புக்குள்ளாக வேண்டும். அவர்களது தந்திர நடவடிக்கைகளை, கோடி கோடியாக பணம் குவிப்பதை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்.. அல்லாது போனால் மக்கள் நிம்மதி தேடி அகதிகளாகக் கிளம்பும் நிலை வந்துவிடும்.

9.அடக்கடவுளே.. முதலில் சாமியார்களிடமிருந்து நீ உன்னைக் காப்பாற்றிக் கொள். மனிதர்கள் எங்களை நாங்கள் காப்பாற்றிக் கொள்ளுகிறோம்.

Comments

9 comments

9
Andrews
மிகவும் சிறப்பான கட்டுரை. நமது மக்களுக்கு என்ன தான் சொன்னாலும் மதத்தையும், இனத்தையும் விட்டு கொடுக்க மாட்டர்கள். நான் கூட ஒரு வெள்ளை உடை உடுத்தி பாதிரியார் ஆகி விடலாம்னு யோசிக்கிறேன். ஒரு கல்வி நிறுவனம் ஆரம்பிச்சுடலாம். கொட்டோ கொட்டுன்னு கொட்டும்..! சிறந்த கட்டுரை ஆத்மார்த்தி..! வாழ்த்துக்கள்
இராமியா
கட்டுரை ஆசிரியர், மற்ற மதங்கள் கடவுளுக்கு இணையாக மற்றவர்களளை ஒப்புக் கொள்வதில்லை என்றும் இந்து மதத்தில் தான் கடவுளுக்கு நிகராக மனிதர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். இந்து மதத்தில் இறைவனோ தொண்டருள்ளத்து ஒடுக்கம் என்று கூறி தொண்டர்களை இறைவனை விட அதிக உயரத்தில் மிக மிக முன்னெச்சரிக்கையாகவே வைத்து இருக்கிறார்கள். மற்ற மதத்தினருடன் அவர்களுடைய மதங்களின் குறைபாடுகள் பற்றி விவாதித்தால் சினங்கொள்வர்கள். இந்து மதத்தினரின் போக்கே வேறாக இருக்கும். இந்து மதத்தின் குறைபாடுகள் பற்றி ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடம் பேசினால் அவர்கள் சினங்கொள்வார்கள்; ஆனால் பார்ப்பனர்களிடம் பேசினால் அவர்கள் சினங்கொள்ளவே மாட்டார்கள். விவாதம் செய்பவர் தர்க்க முறையில் வலுவாக இல்லாவிட்டால் அளவிற்கு மீறிய விவரங்களை அளித்து, குழப்பி விடுவார்கள். அப்படி இல்லாமல் அவர் தர்க்க முறையில் தெளிவாக இருந்தால் விவாதம் செய்யாமல் நழுவிச் சென்று விடுவார்கள்; அப்புறம் அவர்களை வேறு இடங்களில் பழி வாங்குவார்கள். ஏனெனில் பார்ப்பனர்களுக்கு, தாங்கள் செய்வது கலப்படமற்ற அயேபாக்கியத்தனம் என்பது தெளிவாகத் தெரியும். மற்றவர்களின் விஷயம் அப்படி இல்லை.
இராமியா என்னும் நண்பருக்கு..
இந்தக் கட்டுரை எழுதத் திட்டமிட்டபோதே சில விஷயங்கள் சிலந்திப்பின்னல்கள் போலுள்ளதை உணர்ந்தே எழுதினேன்.
நல்லது.முதலில் "மற்ற மதங்களைக் குறை சொல்வது இந்து மதத்தைக் குறை சொல்வது" இதை வன்மையாக மறுக்கிறேன்.
இது மதங்களுக்கிடையிலான நிறைகுறை பற்றிய அலசல் அல்ல..ஒரு அம்சம்..இறைவனுக்கு நிகராக மனிதவழிபாடு. இது இஸ்லாத்தில்
இல்லவே இல்லை.கிறித்தவத்திலும் பெரும்பாலும் இல்லை.இது தான் கட்டுரைப் பொருள்.தவிர்த்து பார்ப்பனீயம்-பிறரிடம் தர்க்கம் செய்வது
பார்ப்பனரிடம் தர்க்கம் செய்வது..கடவுள் மறுப்பு..மதங்களுக்கிடையிலான ஒப்பீடு....இது எதைப் பற்றியும் இந்தக் கட்டுரை பேசவில்லை.
இது முழுக்க முழுக்க சாமியார்களின் ஆதிக்கம்...சாமியார்களைப் புறம் தள்ளவேண்டிய கட்டாயம்...முளைத்துக் கொண்டே இருக்கும் சாமியார்கள் பற்றி மட்டும் தான்.அன்பரே...நமக்கிருக்கும் ஓரே ப்ரச்சினை இது தான்..எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் பேசிக்கொண்டே இருப்பது....பார்ப்பனீயம் பற்றி பின்னர் எழுதுகிறேன்..அதில் பேசலாம் நீங்கள் இப்போது கூறியவற்றை
bala
அஹம் பிரம்மாஸ்மி (நான் கடவுள்) என்ற இந்து மத தத்துவம் பல ஆயிரம் வருடங்களாக, பல ஆன்மீகவாதிகளாலும், தத்துவவாதிகளாலும் அலசி ஆராயப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட தத்துவமாகும். ரமணர் முதல் ராமகிருஷ்ண பரமஹம்சர் வரை விவேகானந்தர் உட்பட பலர் ஏற்றுக் கொண்ட விஷயம். இதில் எனக்கு உவப்பில்லை என்றால் அதை மட்டுமே கூறுவதற்கு தங்களுக்கு உரிமையுண்டு. அதைவிட்டுவிட்டு மற்ற மதங்களுடன் ஒப்பிட்டுபார்த்து அது சரியில்லை. இது சரியில்லை என்று சொல்வது அநாகரிகம். போலி சாமியார்கள் இருக்கிறார்கள் என்பதால் அவர்கள் சார்ந்த சமயமே போலியாகிவிடாது. அதேபோல் போலி சாமியார்கள் பின்பற்றும் சமய, தத்துவங்களும் போலியாகிவிடாது. எழுதும் போது பார்த்து எழுதுங்கள். எல்லாவற்றையும் கரைத்து குடித்துவிட்டது போல் எழுத வேண்டாம்.
சிறுபான்மையினருக்காக போராடுபவர்கள் எல்லாம் இந்து மதத்தை மானாவாரியாக திட்டுவதை ஒரு வழக்கமாக எடுத்துக்கொண்டு விடுகிறார்கள். என்ன திட்டுகிறோம் எதைத் திட்டுகிறோம் என்று கூட கவனிப்பதில்லை. இந்துமத போலி சாமியார்களை திட்டும் போது அதன்அடிப்படை கோட்பாடுகளையும் திட்ட ஆரம்பித்து விடுகிறீர்கள். அதைப்பற்றிய முழு விவரங்களையும் எந்த வித கோபமும் இல்லாமல் நடுநிலைமை மனநிலையுடன் தெரிந்து கொண்டு பின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உடனே நீ என்ன ஆர்.எஸ்.எஸ். காரனா, நீ என்ன பார்ப்பனனா என்று ஏசத் துவங்க வேண்டாம். நடுநிலைமை மீறிச்செல்லும் மததுவேஷத்தை சுட்டிக் காட்டும் போது புரிந்து கொள்ளும் பக்குவம் எழுத்தாளர்களுக்கு இருக்கும் என்பதாலேயே கூறுகிறேன். பல ஆயிர வருட தாத்பரியம் கொண்ட கருத்துக்கள் மற்றும் தத்துவங்​களை ஒரு நிமிடத்தில் போகிற போக்கில் சரியில்லை என்று கூறிவிடுவது அவ்வளவு மெச்சூர்டான விஷயம் அல்ல.
இந்திரா அலங்காரம்
கட்டுரை நல்லா இருக்கு ஆத்மார்த்தி. இன்று மிக அவசியமானதும் கூட. ஓரு மதத்தின் அடிப்படைக் கருத்துகள் தான் அந்த மதம் சார்ந்த நன்மை தீமைக்குக் காரணம் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளது தான் இக்கட்டுரையின் முக்கியமான விசயம்.
BHUPATHI
Rightly Said. Products are proofs of the processes. Proof of Pudding is in its eating. When you judge by the products of Hinduism, you get nauseated. Religion which is devoid of humanism is devilish. Devils are running this country and the dead are eating scriptures.
ஜாஃபர்
கடவுளே எல்லாமாக இருக்கிறார் என்ற அத்வைதக் கொள்கையின் அடிப்படையில் ஆரம்பித்ததே இந்த ‘நான் கடவுள்’ விளையாட்டு.

’நான் மருத்துவர்’ என்று கூறுபவனைப் பார்த்து “இதோ.. இந்த வியாதியை குணப்படுத்து” என்று சொல்லி, அவன் சொல்வது உண்மையா என்று கண்டுபிடித்துவிடலாம். ‘நான் இன்ஜினியர்’ என்று கூறுபவனைப் பார்த்து “இதோ.. இந்த வீட்டைக் கட்டிக்கொடு” என்று சொல்லி, அவன் சொல்வது உண்மையா என்று கண்டுபிடித்துவிடலாம். இதே பாணியில் ‘இவர்களை’ அளந்து பார்க்க நாம் தயாராக இருக்கிறோமா? குட்டி லிங்கம் எடுப்பதும், விபூதியைக் கொட்டுவதும் போதுமா, இவர்கள் கடவுளாகிவிட? கடவுளைப் பற்றி எவ்வளவு தவறாகப் புரிந்து வைத்துள்ளோம்.

மனிதனால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாத பல ஆச்சரியங்களை நிகழ்த்தியவர்கள் இந்த மண்ணில் உண்டு. ஆனால் அவர்கள் யாரும் தங்களை ‘கடவுள்’ என்று சொல்லிக்கொண்டதில்லை.. காரணம் அவர்கள் எல்லாம் கடவுளை உண்மையாகக் ‘கண்டவர்கள்’. கடவுளின் பரிமாணத்தை அறிந்தவனால் தன்னைக் கடவுள் என்று சொல்ல முடியாது... ஆம்.. ‘கண்டவர் விண்டிலர்’. கடவுளைப் பார்க்காதவனே இப்படிப் பேசமுடியும்.. ஆம்.. ‘விண்டவர் கண்டிலர்’
அமீர் அப்பாஸ்
ஆத்மார்த்தி எழுத்துக்களில் உண்மை ஒளி வீசுகிறது. தான் சார்ந்து இருக்கிற மதத்தை.. அதில் மோசம் போகிற அப்பாவிகளைக் குறித்த சமூக அக்கறை பாராட்டுக்குரியது. வ.ரா தொடங்கி சமீபத்தில் மறைந்த.. சின்னக் குத்தூசி வரை தொடரும்...அக்ரஹாரத்து அதிசய மனிதர்கள் பட்டியலில் ஆத்மார்த்தியை சேர்க்கலாம்.
பிரபு
சிறந்த கட்டுரை தோழரே..இந்த திடீர் சாமியார்களை ஆதரிக்க ஒரு கூட்டம் எப்போதுமே தயாராகவே இருக்கிறது,ஊடகங்கள் இவர்களை தேச பற்றாளர்கள் போல காட்டுகின்றன.ஜாலியன்வாலாபாக் அளவிற்கு ஒப்பிடுகிறார்கள் பண்டார கூட்டத்தை அடித்து விரட்டியதை..சாதரண மக்கள் போராட்டத்தை தடுக்கும் பாசிச அரசு சாமியாருடன் பேச அமைச்சர்களை அனுப்புகிறது...இந்த நாடகங்கள் மக்களின் போராட்ட குணத்தை வலுவிழக்க செய்யும் என்பதே கசப்பான உண்மை.....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.