கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மிக நீண்ட காலமாக பண்டிகைகள் பெண்களைச் சிறைப்படுத்தி வருவதை நான் பல்வேறு கட்டுரைகளில் எழுதியுள்ளேன். மத எதிர்ப்பு சரி என ஒப்புக் கொள்ளும் தோழர்கள் கூட பண்டிகை எதிர்ப்பில் போதுமான கவனம் செலுத்துவதில்லை என்பதே உண்மை.

மற்றொரு புறம் பண்டிகை எதிர்ப்பு என்பது பொது மக்களுக்கும் நமக்குமான உறவை எதிரெதிராக நிறுத்தி விடுவதாக முன் வைத்து பண்டிகைகள் கொண்டாட்டத்தில் நாம் சமரச போக்கையே கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்பவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். இதெல்லாம் பொம்பிளைங்க சமாச்சாரம், நான் அவர்கள் உரிமையில் தலையிடுவதில்லை என்று தனது பெண்ணுரிமை வீரத்தை பறைசாற்றிக் கொள்வோரும் உண்டு.

குழந்தைகளை இந்தப் படையின் முன்னணி வீரர்களாக நிறுத்தி அவர்களின் மகிழ்ச்சிக்காக என்று நயத்துடன் எடுத்து வைத்து பம்முவோர்களும் ஏராளமுண்டு.

பெரியாரின் போராட்டங்களில் கடவுள் எதிர்ப்பு குறிப்பாக இந்துக் கடவுளர்களின் எதிர்ப்பு முகாமையாக இடம் பெற்றிருப்பது கூர்ந்து நோக்கத்தக்கதாகும். உலகமெங்கும் மக்கள் விடுதலையடைய நாத்திகம் தேவைப்பட்ட போதிலும் இந்தச் சமுதாயத்தில் மக்கள் விடுதலையடைய கடவுள் மறுப்பு, மத எதிர்ப்பு என்பது பன்மடங்கு அதிகமாகத் தேவைப்படுகிறது என்பதே பெரியாரின் கணிப்பாகும்.diwali snacks preparationமதம் இன்று அய்ரோப்பியர்களின் வாழ்வில் வகிக்கும் பாத்திரமும் நமது மக்கள் வாழ்வில் வகிக்கும் பாத்திரமும் ஒன்றல்ல. அவர்கள் செல்லும் பாதையில் ஓர் ஓரத்தில் கடவுளையும் கோவிலையும் வைத்திருக்கிறார்கள். நம்மவர்களோ முதுகில் மூட்டையாக மதத்தையும் மதச் சடங்குகளையும் சுமந்து கொண்டே தான் நடக்கிறார்கள்.

இதில் இந்தப் பண்டிகைகளுக்கும், திருவிழாக்களுக்கும் பெரிய பங்கிருக்கிறது.

இவ்வளவு கல்வி வளர்ந்து விட்டச் சூழலில் இத்தனைப் பெண்கள், அதிலும் இளவயதுப் பெண்கள், இளைஞர்கள் இந்தக் கோவில் விழாக்களில் கொஞ்சம் கூட அறிவுக்கு பொருத்த மில்லாமல் நடைபாதைகளை அடைத்துக் கொண்டு எப்படி நிற்கிறார்கள்? நன்கு கவனித்தால் இவர்களில் பெரும்பா லோர் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள்தான். அந்த இளம் பெண்களும், ஆண்களும் பள்ளிகளில் சரியாகப் படிக்காத மாணவர்களாக இருக்கும் வாய்ப்பே மிக அதிகம்.

பெரும்பாலும் இந்தக் கோவில்கள், அவற்றைச் சார்ந்தும் சுற்றியும் வாழ்கின்ற பகுதிகளில்தான் மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெறுகிறவர்களாக இருப்பார்கள். யார் வேண்டுமானாலும் இதனை நேரடிக் கள ஆய்வு செய்து தரவு எடுத்து சரிபார்த்துக் கொள்ளட்டும்.

1990களில் எங்கள் அமைப்பான மகளிர் விடுதலை மன்றம் நாகர்கோவில் வடசேரி குன்னுவிளையில் மாலை நேர வகுப்புகள் நடத்தி வந்தது. அவர்களுக்கு பொதுவான சமுதாய இடமொன்று இருந்தது. அதில் எங்களுக்கு இடம் கொடுத்தார்கள். மின் வசதியெல்லாம் செய்து கொடுத்தார்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் பணிபுரிந்த அறிவியலாளர் சென்று பாடம் எடுத்து வந்தார்கள். வாரத்தில் நாலு நாள் ஏதாவதொரு கெண்டாட்டம், பாட்டும் கூத்தும் காதைப் பிளக்கும். ஒரு நாள் அந்த இளைஞர்களை அழைத்து உட்கார வைத்து நீண்ட நேரம் பேசினோம்.

நீங்கள் கொண்டாட்டங்களைக் குறைத்துக் கொள்ளாமல் உங்கள் பிள்ளைகளை எங்களால் படிக்க வைக்க முடியாது என்றோம். அந்த உண்மையை அவர்கள் உணர்ந்தார்கள். அதன்பின் கொண்டாட்டங்கள் குறைந்தன. கிட்டத்தட்ட தேர்ச்சி பெறும் மாணவர்களே இல்லை என்று இருந்த பகுதியில் பெரும்பாலான மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்கவும் சில மாணவர்களை நல்ல மதிப்பெண் எடுக்க வைக்கவும் எங்க ளால் முடிந்தது.

இந்தக் கோவில்கள்தான் இன்று மத அடிப்படையிலான கட்சிகளுக்கு ஆட்களை தயார் செய்து கொடுக்கும் இடங்களாக இருக்கின்றன என்பதை நாம் கூடுதலாகக் கவனிக்க வேண்டும். ஆனால் இந்தக் கோவில்களின் பணி என்ன, அதில் நடக்கும் ஊழல் என்ன என்பதையெல்லாம் எடுத்துப் பேசுகிற அந்தந்தப் பகுதி சார்ந்த பொதுநலத் தொண்டர்கள் இன்று எந்தக் கட்சியிலும் இல்லை.

இந்தக் கோவில்களிலிருந்து ஒரு வகையில் இவற்றோடு மறைமுகமாக இணைக்கப்பட்டுள்ள வீடுகளின் பூஜையறை அல்லது சாமி மாடங்களுக்கு வருவோம். கண்ணுக்கு தெரியாத நூல்கள் இவற்றை இணைக்கின்றன; இயக்குகின்றன. இங்கு பெண்கள் விளக்கேற்று வதிலிருந்து, விரதமிருப்பது வரை ஒருமுழுமையான மதவாழ்வுக்குப் பண்படுத்தப்பட்டிருக் கிறார்கள்.

வெளிநாட்டவரோடு ஒப்பிட்டு மதம் நம் மக்கள் வாழ்வில் வகிக்கும் பாத்திரத்தின் வேறுபாட்டையும் மிகைத் தன்மையையும் சுட்டினோமில்லையா, அதுபோல் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் வாழ்வின் மதத்தின் பிடி கூடுதலான இறுக்கங்கள் கொண்டதாக இருக்கிறது. பண்டிகைகள் என்பவை பெண்களின் நேரத்தை ஆக்கிரமித்துவிட்ட அடிமை விலங்குகள். ஆனால் அதைப் பாதுகாப்பாக கீழே போடாமல் சுமந்திருப்பதே அவர்களுக்களிக்கப்பட்டிருக்கும் இன்பம், கடமை, வாழ்வின் அர்த்தம் என்றே பெண்கள் நினைக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்களை வீட்டுச் சிறையிலடைத்துவிட்ட ஆண் தலைமைக்கான வரலாறு அந்தப் பெண்ணை வீட்டை விட்டு வெளியேறாமல் நிரந்தரமாக தனது அடிமை நிலையை பூஜித்தே வாழ வைப்பதற்கான ஏற்பாடுகள்தான் இந்தப் பண்டிகைகள். இவையெல்லாம் ஏதோ கடந்த காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளல்ல. நிகழ்காலத்திலும் பெண்ணை வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க செய்யும் தடுப்பு அரண்கள் தான் இந்தப் பண்டிகைகள்.

தீபாவளிக்கு ஒரு நாள் விடுப்பு ஆண்களுக்கு போதும். பெண்களுக்கு? பலகாரம் செய்ய இரண்டு நாள்; அதைப் பரிமாற பண்டிகை நாள்; பிறகு நோய்க்கு இரண்டு நாள் சில சமயங்களில் ஒரு வாரம் இந்தப் பெண்களால் எப்படி ஒரு தொழிலைக் கற்றுக் கொண்டு முன்னேற முடியும்? உருப்படுமா இந்தப் பெண்கள் வாழ்க்கை?

விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, வரலட்சுமி நோன்பு, கோகுலாஷ்டமி, மகா சிவராத்திரி, இராமநவமி, கார்த்திகை, கௌரி பூஜை, கந்த சஷ்டி விரதம், நாகராஜா பூஜை, வைகுண்ட ஏகாதசி, பிரதோஸம், மகா சங்கராந்தி இந்தப் பட்டியல் இன்னும் நீளும். இவையெல்லாம் போதாது என்று உறவினர்கள் வீட்டு பூப்புனித நீராட்டு விழாக்கள், கல்யாணங்கள், கருமாதிகள் இவையும் முக்கியமாக இந்துக் குடும்பங்களில் ஒருவித பண்டிகைக் கொண்டாட்டங்கள்தான். கல்வி வளர வளர இதெல்லாம் கொஞ்சம் குறையாதா என்று பார்த்தால் கூடிக் கொண்டு போகிறது. இவை அனைத்திலும் பங்கு பெறும் ஒரு பெண் இந்தச் சமுதாயத்தின் உருப்படியான எந்த காரியத்திற்கும் உதவும் தகுதியற்றவளாகவே வாழ முடியும்.

இந்த சடங்குகள் மற்றும் அது சார்ந்த விதிமுறைகளைக் கடைப்பிடித்தொழுக வேண்டியவள் பெண் என்றால் அவளுக்கு வீட்டை விட்டு வெளியேற ஏது நேரம்? மேலும் அவர்களைப் பொறுத்தவரை ஆண்கள் வெளியில் சென்று பொருளீட்டிக் கொண்டு வந்தால் இத்தனை பண்டிகைகளையும் கொண்டாடி வாழ்வதை விட்டு விட்டு பேருந்தில் இடிபட்டு உதை பட்டு வேலைக்கு போய் அவ்வளவு துன்பங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது? படித்த பெண்கள் கூட கூச்சமில்லாமல் வீட்டிலிருப்பதைப் பெருமை யுடன் ஏற்றுக்கொள்ள இதுவே காரணம்.

இந்தப் பண்டிகைகளை எதிர்க்கத் துணியாத எவரொருவரும் முற்போக்குவாதி என அடையாளப்படுத்த முடியாதவர் என்பதே நமது துணிவான முடிவாகும். ஆனால் இன்று இங்கு மிகப்பெரிய குழப்பத்திலிருப்பது முற்போக்கு முகங்களே யாகும். முற்போக்காக இருக்க வேண்டும் என்கின்ற இலக்கோடு தயாரிக்கப்பட்ட ஒரு தொலைக்காட்சித் தொடரில் பள்ளிப் பருவத்தில் பருவமைடைந்துவிடும் ஒரு பெண்ணுக்கு ஆண்களை எதிர்த்துக் கொண்டு பெண்கள் தனித்து நின்று அத்தனை ஆடம்பரங்களோடும் சடங்குகளோடும் நடத் தப்படும் சடங்கு நிகழ்ச்சி பெண்ணுரிமை என்று காட்டப்படுகிறது.

சடங்கு என்பதே பெண்ணுக்கு எதிரான விலங்கு என்கின்ற சிந்தனையிலிருந்து நாம் எவ்வளவு தொலைவிலிருக்கிறோம்?

புரட்சிகரப் பெண்கள்

பண்டிகைகள் பெண்ணடிமைத்தனத்தில் வகிக்கும் அடிப்படையான நுட்பமான பாத்திரத்தை புரிந்துகொண்டு அதனை மறுத்துத் தனது பயணத்தைத் தொடங்கும் பெண்தான் இங்கு புரட்சிகரமான பெண் என்கின்ற பாத்திரத்தை வகிக்க இயலும். எனவேதான் தலைவர் பெரியார் கீழ்க்காணும் கட்டளைகளைப் பெண்களுக்கு வைத்தார்

“பெண்களே பூ பொட்டு வைக்காதீர்கள்

கோவிலுக்கு போகாதீர்கள்

இந்துப் பண்டிகைகளைக் கொண்டாடதீர்கள்”

எந்த மதத்தையும் ஏற்றுக் கொள்ளாதே என்பதுடன் மத எதிர்ப்பாளராய் மட்டுமே ஒரு பகுத்தறிவாளர் சுயமரியாதைக்காரர் வாழ வேண்டும் என்பதே பெரியார் கொள்கை. அவ்வாறிருக்க ஏன் இந்து மதப் பண்டிகைகளைக் குறிப்பிட்டு பெரியார் எழுத வேண்டும்?

இதன் பொருள் கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள், பக்ரீத் கொண்டாடுங்கள் என்பதல்ல. பெரியார் தொண்டர்கள் எந்த மதப் பண்டிகைக்கும் வாழ்த்துகூட சொல்ல மாட்டார்கள். ஆனால் இந்து மதப் பண்டிகைகள் மனித உடம்பின் நரம்பு மண்டலங்கள் போல் வாழ்க்கை முழுவதிலும் வியாபித்து செயற்படுகின்றன. மற்ற மதப் பண்டிகைகள் அவர்களை ஒரு மதமாக ஒருங்கிணைக்க மட்டுமே பெரிதும் பயன்படுகின்றன.

இந்து மதப் பண்டிகைகளோ ஆண்களையும் பெண்களை யும் பிரிக்கப் பயன்படுகின்றன. பெண்கள் இருக்கும்அத்தனை விரதங்களும் தசராபண்டிகை விரதம் உட்பட சகோதரர்கள் கணவர்கள் என்று ஆண்கள் நலமுடன் வாழப் பெண்கள் இருக்கும் விரதங்கள்தான். இதுபோல் மனைவியை விடுங்கள் தன் தாய் நலத்துக்கான ஒரு விரதம் கூட ஆணுக்கு இந்த மதம் ஏற்படுத்தவில்லையே அது ஏன்?

இப்படி அனைத்து வகைகளிலும் நமது முன்னேற்றத்தைத் தடுக்கின்ற நம்மை தாழ்வுபடுத்துகிற பண்டிகைகளை, புதுத்துணி கிடைக்கிறது விருந்து கிடைக்கிறது; இதில் எங் களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதாகக் கருதும் பெண்களின் வாழ்க்கைத் தரம் தாழ்ந்தது என்பதைப் பெண்கள் என்று உணர்வார்கள்? பெண்களே நீங்கள் பண்டிகைகளில் மகிழ்ச்சியைத் தேடாதீர்கள். அது ஒரு பொய்யானது. பெரியார் சொன்ன சுய மரியாதையைத் தேடுங்கள். அதுவே தீர்வு.

ஓவியா