……………………………………………………………………………………

………………………………………………………………………………

………………………………..

என்ன புள்ளிப்புள்ளியா இருக்கேனு பாக்குறீங்களா? துக்கம் தொண்டையை அடைச்சா எப்படிங்கய்யா பேசமுடியும். அதான் இந்த நீண்ட சைலன்சு. என்ன பண்றதுங்கய்யா? பாவிப்பயலுக துரோகிங்க, நம்ம சோத்த துன்னுப்புட்டு நம்ம கழுத்துலய கத்திய வெச்சுட்டாங்கள்ளேய்யா. என்னால சேதியக்கேட்டதும் தாங்கவே முடியலய்யா, நேத்து ராத்திரிதான் எனக்கு விசயம் தெரியும். ஒரு குறுந்தகவல் என்னோட நண்பர் எனக்கு அனுப்பியிருந்தாரு. அதுல கனி கைது, திகார் செயிலுக்கு அனுப்பப்பட்டார்னு போட்டிருந்தார். நான்கூட எங்க ஊருல வாடகைக்கு இருக்குற கனியாக்கும் நெனச்சேனுங்கய்யா, அந்தப்புள்ள ராசேந்திர மணி கம்பெனில்ல அது உண்டு அது வேலயுண்டுன்னு வேல பாத்துக்கிட்டு இருக்குமே, அதோட மாப்பிள்ளகூட தங்கமானவரே, அவருகூட நாம் கபடியெல்லாம் வேற ஆடியிருக்கிறோமே, பின்ன எதுக்கு அந்தப் பச்சப்புள்ளய போலிசு பிடிக்குது. அதுவும் எதுக்கு திகார் செயிலுக்கு பிடிச்சுட்டுப் போறாங்க, உசிலம்பட்டியே அந்தப்புள்ளக்கு பாரினு மாதிரி. அதுல அது பிகாரை கண்டுச்சா, திகாரை கண்டுச்சா, இருக்கங்குடி மாரியத்தா, இதக்கொஞ்சம் கேளாத்தானு மனசார சொல்லிப்புட்டு சரி நம்ம இன்ஸ்பெக்டர் அண்ணனுக்கு சொல்லி கையுல காலுல விழுந்தாவது அந்தப்புள்ளய விடச்சொல்லலாம்னு நினைச்சா, இன்னொரு குறுந்தகவல் வருது அதே நண்பன்ட இருந்து. எம்பி கனிமொழியும் சரத்குமாரும் கைதுனு.

karunanidhi_200என்னடா கொடுமை. நான் ரெடி நீங்க ரெடியானு கோடீஸ்வரன் புரோகிராம்ல நம்மளத்தான் கேட்குறானு நாங்கலாம் நினைச்சப்ப, இல்ல ராசா நான் கேட்டது உங்க சித்தியத்தான்னு, ராதிகாவ கட்டிக்கிட்டாரே சரத்குமாரு, அவரையும் நம்ம கனிமொழி அக்காவையும் ஏன் சேத்துப்புடிக்குது இந்த கூறுகெட்ட போலிசுனு நினைச்சு, ஆட்சி மாறுனா, காட்சி மாறும்னு நம்ம எதிரிங்க சொன்னது உண்மையாப்போச்சேனு நினைச்சுக்கிட்டு கண்ணீரைத் தொடச்சிக்கிட்டு நண்பர்களுக்கு போன் பண்ணி என்னடா நம்ம ஊரு கனி என்னக்கும் எம்பினாளா? (எங்க ஊரு பட்டப்பேருக்கு ரொம்ப பேமசு, ஒரு தாத்தாவுக்கு பேரு ‘இன்னொன்னு ராமசாமி’, எங்க மாமா ஒருத்தரு பேரு ‘பூத்தா முத்துராசு’னா பாத்துக்கங்க), எம்பி கனிமொழினு போட்டுருக்கேனு கேட்டேன். அதுக்கு அவங்க எல்லாரும் அட முட்டாப்பய மருமவனே அது நம்ம பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழிடான்னாய்யங்க. நான் அய்யோ அம்மானு ஆற்காடு வீராச்சாமி காலத்துல வராத கரண்டு வந்து என் பின்னாடி ஷாக்கடிச்ச மாதிரி அப்படியே ஷாக்காயிட்டேன். அப்பால கொஞ்சம் உசாருக்கு வந்து, அது எதுக்குடா நம்ம அக்காவை நாட்டாமையோட கைது பண்ணாய்ங்கனு கேட்டேன். அதுக்கு அவங்க சொன்னாய்ங்க. அட முட்டாப்பய மருமவனே, அது நம்ம சித்தப்பா சரத்குமார் இல்ல (சித்தி மாப்பிள்ள சித்தப்பா தானுங்களய்யா), இது வேற அது வேற அப்படின்னாய்ங்க. ஒரு மண்ணும் எனக்கு வெளங்கல. ஆனா ஒண்ணுமட்டும் எனக்கு புரிஞ்சு போட்டு - நம்மள பின்னாடி வசமா இந்த காங்கிரசுக்கார பயலுக குத்திப்போட்டானுங்கனு. பின்னாடினா முதுகுல இல்லங்கய்யா, அதுக்கும்கீழே. என்னய்யா பண்றது, நம்ம கத்திய வாங்கி நம்ம பின்னாடியே சொருகிட்டாங்களே.

என்னம்மோ 2ஜி 2ஜி ங்கிறாய்ங்க. எழவு ஒண்ணும் விளங்கமாட்டேங்குது. நம்ம ஒடன்பிறப்பு ராசா என்னமோ அந்த 2ஜி அலைக்கற்றையை பெரிய பெரிய கம்பெனிக்கு சும்மா அள்ளிவிட்டதாகவும் அதனால அவருக்கு கமிசன் கிடைச்சதாகவும் எல்லாப்பயலும் அநியாயத்துக்கு சொல்லிக்கிட்டு இருக்கானுவ. ஆனா உண்மை என்னன்னு நமக்குந்தான்யா தெரியும். வாயில விரல வெச்சால கடிக்கத்தெரியாத கனிமொழி அக்காவுக்கும் இதுல ஏதோ பங்கு இருக்காம். அதிலயும் அவனுங்க என்ன சொல்றாங்க நாம கடனா வாங்கின 200 கோடி ரூபாயைப்போயி ஏதோ லஞ்சம் அப்படிங்கிறாங்கய்யா. லோன் கேட்டோம், அந்தக்கம்பெனி குடுத்துச்சு, அத வட்டியோட திரும்பிக் கட்டப்போறோம். இதுல இந்தப்பயலுகளுக்கு ஏன் வயிறு எரியுது, உனக்கு வேணும்னா நீயும் கேளு, குடுத்தா வாங்கிக்கோ, அதவிட்டுப்புட்டு அவனுக்கு ஏன்குடுத்த இவனுக்கு ஏன் குடுத்தனு சொல்லி அத அநியாயமா லஞ்சம்னு சொல்றது அந்த சாயிபாபா சாமிக்கே அடுக்காதுங்கய்யா (தயாளு அம்மாளை நமக்கு ரொம்பப் பிடிக்குமுங்கய்யா, அதனால நானும் சாயிபாபா பக்தனா ஆகிப் பூட்டேனுங்க).

இப்படித் தானுங்கய்யா நம்ம ஈழத்து தம்பி சோபாசக்திக்கும் பல பேங்குல கடன் தர்ராங்கய்யா, ஆனா உனக்குமட்டும் எப்படி தர்ரானுங்க, எங்களுக்கு ஏன் தரமாட்டேங்குறானுங்கோனு சொல்லி பல வேலை வெட்டி இல்லாத பயலுவ சிலுவை இழுக்கிறானுங்கய்யா. பொறாமை பிடிச்சவனுவோ, வங்கிக் கடன் தர்றதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணுங்கய்யா, அதெல்லாம் நம்ம கனிமொழி அக்காவுக்கும், சோபா சக்திக்கும் தானுங்கய்யா வாய்க்கும். இது தெரியாத வேலையத்த மூதிங்கோ சும்மா குரல் விட்டுக்கேனு இருக்குதங்கய்யா.

சரி இப்படி இப்படி அக்காவை கைது பண்ணிப்போட்டானுவனு தெரிஞ்சதும் கடுமையான மனவருத்தம் அடைஞ்சு என்ன பண்ணலாம்னு யோசிச்சு பார்த்தேனுங்கய்யா, அப்பால சரி இதைக் கண்டிச்சு ஒரு உண்ணாவிரதம் இருக்கலாம்னு ஒரு யோசனை வந்துச்சுங்கய்யா, அதனால அப்பயிருந்தே அதாவது இரவு 9 மணிக்கு ஆரம்பிச்சு உண்ணாவிரதம் இருக்கலாம்னு முடிவு பண்ணி கடுமையா அதைக்கடைப்பிடிக்க ஆரம்பிச்சுட்டேனுங்கய்யா. உண்ணாவிரதம்னா அது கடுமையா இருக்கணும்னு கறாரா முடிவு பண்ணி அப்படியே ஆரம்பிச்சு இரவெல்லாம் கடுமையான உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிச்சேனுங்கய்யா. அந்த நேரம் பார்த்து நம்ம எழுத்தாள நண்பர்கள் வேற போன் போட்டாங்கய்யா, சரி அனுதாபம் தெரிவிக்கவா இருக்கும்னு நினைச்சு போனை எடுத்து உங்கள் குரல்ல வணக்கம்னு சொன்னா நம்ம தோழர் ஒருவர். பரவாயில்லை, இவரு சமூக அக்கறை உள்ளவர்தான்.

நம்ம அக்காவை கைது பண்ணதுக்காக துக்கம் தாங்காமா நமக்கும் போன் பண்ணிட்டாருனு கொஞ்சம் சந்தோசப்பட்டு போனை எடுத்தா, அவரு என்ன பண்றீங்கனு சிரிச்சு சிரிச்சு பேசறாரு, எனக்கு கோபம் தாங்க முடியல. என்ன மனுசய்யா இவரு? அக்கா கனிமொழியை கைது பண்ணிப்போட்டாங்க இந்த காங்கிரசு சர்க்காரு, நிலைமை இன்னொரு எமர்ஜென்சி கணக்கா இருக்குது. இதுபத்தி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமா இந்த மனுசன் எப்படித்தான் சிரிச்சு சிரிச்சு பேசறாரோருன்னு மனசு வெம்பிப்போய் பேசி முடிச்சுட்டு திரும்ப உண்ணாவிரதத்தை தொடர ஆரம்பிச்சேட்டேனுங்கய்யா. அப்பால அப்படியே அக்கா கனிமொழியும், அண்ணன் அஞ்சா நெஞ்சனும் இணைந்து இந்த தமிழகத்திற்கு செஞ்ச தொண்டை நினைச்சு உறுதியாக காலையிலே தமிழகம் தனிநாடு அடைஞ்சாலும் அடைஞ்சுரும், அந்த அளவுக்கு மக்கள் அக்காவோட கைதை எண்ணி இந்திய அரசு மீது கோபமாயிருக்காங்க, நம்மாள முடிஞ்சளவுக்கு நம்ம மாப்ள, மச்சான் எல்லாத்தையும் கூட்டிக்கிட்டுபோயி நம்ம விஏஓ ஆபிஸை தாக்கி நம்ம ஊரையும் விடுவிக்கப்பட்ட விடுதலைப்பகுதியா மாத்தி உங்கள அதுக்கு நிரந்தர விஏஓவாவது மாத்திரணும்னு யோசிச்சுக்கிட்டே அப்படியே கண்ணயர்ந்தேனுங்கய்யா.

அப்புறம் காலையிலே எந்திருச்சா பசி பசி கப கபனு கண்ணக்கட்டுது. என்னடா நம்ம கொள்கைக்கு வந்து உபத்திரவம் இதுனு நினைச்சுகிட்டே பழைய முரசொலியை எடுத்து படிக்க ஆரம்பிச்சேனுங்கய்யா, அப்போதான் நீங்க இலங்கை அரசையும், இந்திய அரசையும் உண்ணாவிரதத்தால மிரட்டி அடிபணிய வெச்சு வெறும் அஞ்சு மணிநேரத்திலேயே போரை நிறுத்தி உண்ணாவிரதத்தையும் முடிச்சது நினைவுக்கு வந்ததுங்கய்யா. சரி எம்மாம் நேரந்தான் நம்மளும் இப்படியே வெறும் வயித்தோடயே படுத்துருக்கது அப்படினு யோசிச்சு சரி எப்படியும் பத்து மணிநேரத்துக்கு மேல ஆகிப்போச்சு, அஞ்சு மணிநேரத்துல உண்ணாவிரதத்தால போரை நிறுத்துன நீங்க அக்காவையும் பத்து மணிநேரத்துல வெளியில கொண்டு வந்துருப்பீங்கனு நினைச்சுக்கிட்டு (நல்ல நினைப்புதானங்கய்யா நல்ல செயலைக்கொண்டு வரும்), அப்படியே இல்லேனாலும், அண்ணன் அஞ்சாநெஞ்சரு பீகார் ஜெகன்னாதாபாத்துல மாவோயிஸ்ட்ல்லாம் சிறையுடைப்பு நடத்துனமாதிரி திகார் செயில உடைச்சாவது அக்காவ கொண்டு வந்துருப்பாருனு மனசை தேத்திக்கிட்டு, ஆனாலும் இந்த உண்ணாவிரதத்தை நம்மாளா முடிச்சுரக்கூடாதுனு மனசுக்குள்ளய சொல்லிக்கிட்டு, நண்பர்களுக்கு கனியக்கா விடுதலைனு ஒரு குறுந்தகவலை அனுப்பிச்சுப்புட்டு சோகத்துல ஒரு ரெண்டு எண்ணம் மட்டும் குறைச்சுக்கிட்டு இருவது இட்டிலியை மட்டும் சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடிச்சேனுங்கய்யா. எனக்கு எல்லாமே நீங்கதானுங்கய்யா, அண்ணன் ஸ்டாலின் சொன்னமாதிரி உங்கள முன்மாதிரி பின்மாதிரி எடுத்துக்கிட்டு நானும் என் உண்ணாவிரதத்தை நடத்துனேனுங்கய்யா. நீங்ககூட எப்படியும் வருங்காலத்துல இலங்கை அரசு அத்தனை தமிழனும் செத்தபிறகு போரை நிறுத்தத்தான்போகுது முன்னாடி தெரிஞ்சுகிட்டு போர்நிறுத்தம்னு சொல்லி உண்ணாவிரதத்தை நிறுத்தினாங்களேய்யா, அதே டெக்னிக்தான் நம்மோடதும். கழுதை விட்டையில முன்விட்டைன்னா என்ன, பின்விட்டைன்னா என்ன?

ஆனாப்பாருங்கய்யா, உங்கள பின்பற்றுதலுல ஒரே ஒரு பிரச்சனை தானுங்கய்யா. அது என்னன்னா, போனவாரம் எனக்கு பொண்ணு பாக்க எங்க வீட்டில இருந்து போயிருந்தாமுங்கய்யா. அந்த வீட்டுல மொத்தம் மூணு பொண்ணுங்க. நடுவுல இருக்குற பொண்ண டீத்தண்ணியோட வரச்சொன்னாங்க. நானும் பொண்ண பாத்துப்புட்டு வாயில வழியிற எச்சில தொடச்சுப்போட்டு ரொம்ப பிடிச்சுருக்கு சொல்லிட்டு அப்படியே மத்த ரெண்டு பொண்ணையும் டீத்தண்ணி கொண்டு வரச்சொல்லுங்கனு சொன்னேன். அதுக்கு அவங்க மாப்ள கிண்டல் பண்ணாதீங்க அப்படின்னாங்க. நான் சொன்னேன், கிண்டலுமில்ல சுண்டலுமில்ல, நான் எங்க தலவரு கலைஞரு மாதிரி வாழ்க்கையில இருக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். அதனால மூணு பொண்ணயும் நானே கட்டிக்கிறேனு சொன்னேனுங்கய்யா, அதுக்கு என்னைய எல்லாப்பயலுவலும் முறைச்சு முறைச்சு பாத்தானுங்கய்யா. எங்கம்மா என்னய 'ஏலே கூறுகெட்ட பயலே நீ கெட்ட கேட்டுக்கு ஏழு பொண்டாட்டி கேட்குதா'னு கேட்டாங்கய்யா.

நான் சொன்னேன், 'நான் எங்க தலவரு கலைஞர் மாதிரி இருக்கணும்னு ஆசைப்படுறேன். அதனால கட்டுனா மூணையும் கட்டுவே'னு சொன்னதானுங்கய்யா தாமசம், அத்தன பயலுவலும் அடிக்க பாய்ஞ்சாட்டுனாயுங்கய்யா. அதிலயும் ஒருத்தன் அருவாளோட வந்தானேங்க பாருங்க நான் அப்படி செத்துப்பொழைச்சேனுங்கய்யா, அப்பாலதான் தெரிஞ்சுச்சு அந்த மொதப்பொம்பளப் புள்ளைக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சு, அவளோட புருசன்தான் இந்தக் கோவக்காரப்பயனு. அப்புறம் எம்மாப்ளயும் தம்பியும் சேந்து இவரு கொஞ்சம் லூசுனு சொல்லி என்னக் காப்பாத்தி கூட்டிக்கிட்டு வந்துட்டானுங்கய்யா. என்னய்யா கொடுமையா இருக்கு, நீங்க மூணு பொண்டாட்டி கட்டுனா தலவரு, நான் கட்டுனா லூசு. அதான் அடுத்த தடைவ உங்கவீட்டுலய ரெண்டாவது, மூணாவது சம்சாரத்தை பாத்துப்புடலாம்னு எங்க அம்மாகிட்டு சொன்னதுக்கு, அவங்கபோயி பூசாரிய கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க. நான் பூசாரிகிட்ட சொன்னேன். எங்க தலைவரு ஏழ பணக்காரன் வித்தியாசம் பாக்க மாட்டாரு நல்லவருனு சொன்னேனுங்கய்யா. அந்தப் பூசாரிப்பய 'எந்த வீட்டு முனி நீ'யுனு என்ன சாட்டையாலயே வெளுத்துப்புட்டானுங்கய்யா.

சரிங்கய்யா, அது கிடக்கட்டும். அன்னைக்கு இங்கிலீசு பேப்பருல (நானும் இங்கிலீசு கொஞ்சம் கத்துக்கிட்டேனுங்கய்யா, நாளைக்க எம்பி ஆகணும்னா நம்ம தயாநிதி அண்ணன்மாதிரி இங்கிலீசு பேசணும்லயா) கனியக்கா அழுதததா போட்டிருந்தானுங்க. முதல்ல நான் நம்பல. அப்பால தமிழ்பேப்பருலயும் போட்டிருந்தானுங்க. எனக்கு ஒரே குழப்பம். என்னாடா, நம்ம தலவரு வீட்டுப்புள்ள செயிலுக்கு போறத நினைச்சு அழுவலாமா அப்படின்னு. ஏன்னா நானே பல மேடையில உங்களப் பத்தி நாகூர் அனிபா மாதிரி கட்டைக்குரல்ல பாளையங்கோட்ட செயிலுள்ள பாம்பு பல்ல நடுவுலனு பாட்டுப்பாடியிருக்கேன். அப்படிப்பட்ட தலவருக்கு பொறந்த புள்ள அழுவலாமானு எனக்கு ஒரே வருத்தம். ஒரு தடவ என்னக்கூட வாய்க்கா தகராறுலே போலீசு பிடிச்சுட்டுப்போச்சு, ஆனா நான் அழுவலயே, ஏன்னா நமக்கு சிறைக்கூடம் ஒரு பள்ளிக்கூடம் மாதிரினு உங்கள நினைச்சுக்கிட்டு, பிரேமானந்தா மாதிரி வா ராசா போலாம்னு போலீசை நானே கூட்டிக்கிட்டு ஜீப்புல ஏறி உக்காந்துட்டுக்கேனுங்கன்னா பாத்துக்குங்களேன். அதனாலதான் எனக்கு மொதல்ல கனியக்கா மேல வருத்தம்னா வருத்தம். அப்பாலதான் உண்மை சுர்ருன்னு எனக்கு புடிபட்டுச்சு, கனியக்கா செயிலுக்குப்போறதுக்கு அழுவல. ஆனா இப்படி செயில்ல டிவிப்பொட்டி, மெத்தை, காத்தாடி எல்லாம் கொடுக்கானுங்களேனு இதெல்லாம் நாம ஏத்துக்கலாமா நமக்கு தூக்குமேடை கூட பஞ்சு மெத்தை நினைச்சு அழுதுருக்கு. அய்யா, அதனால சட்டுப்புட்டுனு ஒரு கடுதாசி எழுதி பாளையங்கோட்ட செயிலுள்ள பாம்பு பல்லி நடுவுல அக்காவையும் போடச்சொல்லுங்க. நாளைக்கு நாகூர் அனிபா அக்காமேலயும் ஒரு பாட்டு எழுத வசதியா இருக்கும்லய்யா. நமக்கு வரலாறு முக்கியம்.

அதுபோக இன்னொரு விசயமுங்கய்யா. எங்களுக்கு ஒரு சிறந்த தலவரா நீங்க இருக்கறதோட அல்லாம ஒரு சிறந்த குடும்பத்தலவராயும் இருந்து மனைவியையும், துணைவியையும் வச்சிக்கிற பாங்கு இருக்க, அத சொன்னா ஒரு வருச முரசொலி பத்தாதுங்கய்யா. இந்த அழகிரி அண்ணனும், கனியக்காவும் அரசாங்க வேல வெட்டி இல்லாம இருக்கறத பாத்துப்புட்டு (வட்டிக்கு விட்டாலும், கவிஞரா இருந்தாலும் என்னய்யா மரியாதை, சக்காரு வேலைன்னா தனி மரியாதை தானுங்கய்யா) அவங்க ரெண்டுபேருக்கும் ஒரு அரசாங்க வேலையை வாங்கிக்கொடுக்க நீங்க பட்டபாடு இன்னைக்கு நினைச்சாலும் எனக்கு புல்லரிக்கதுங்கய்யா. பேரறிஞர் அண்ணாவே சொல்லியிருக்காரு. சிறந்த குடும்பம்தான் சிறந்த சமூகத்தை உருவாக்கும்னு. ஒரு நல்ல சமூகத்த உருவாக்கணும்கிற ஒரு நல்ல எண்ணத்துல ஒரு நல்ல குடும்பத்த உருவாக்க நீங்க பட்டபாடு இந்த நாசமாப்போன தமிழ்நாட்டு மக்களுக்கு எப்படிய்யா விளங்கப்போகுது. கலைஞரு குடும்பத்த பாக்குறாருன்னு குடும்ப ஏகாதிபத்தியம்னு எல்லாப்பயலும் இந்த உண்மை தெரியாம குதிக்கிறானுங்கய்யா. அதுலயும் ஈழத்துல நம்ம பிரபாகரன் அண்ணனைப் பாருங்க. குடும்பத்த சரியா கவனிக்காம விட்டதாலதான் சமுதாயம் போச்சு. அவரும் உங்களமாதிரி புள்ளங்கள மந்திரி ஆக்கியிருந்தா இந்த நேரம் ஈழம் கிடைச்சுருக்கும். அவரும் குடும்பத்தோட 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை'னு பாட்டுப்பாடியிருக்கலாம். என்னய்யா பண்றது, ஒண்ணு சுயபுத்தி வேணும் அல்லது சொற்புத்தி வேணும் அல்லது உங்களமாதிரி பெரிய மனுசனுங்கள பாத்து கத்துக்கணும். அப்படிச்செய்யாட்டி இப்படித்தான் புள்ளங்களையும் சண்டையிலே பறிகொடுக்க வேண்டியிருக்கும்.. .

உங்க வாழ்க்கை அத்தனை பேருக்கும் ஒரு கடைபிடிக்கவேண்டிய வரலாறுங்கய்யா. நான் மட்டும் அய்நா சபையோட பொதுச்செயலாளரா இருந்தா நான் உங்க வாழ்க்கைய புத்தகமா எழுதி அத எல்லா மொழியிலயும் மொழி பேக்கச்சொல்லுவேனுங்கய்யா. அதயும் சரோசாதேவி புத்தகம் மாதிரி மலிவுவிலையில எல்லாருக்கும் கிடைக்கறதுக்கும் ஏற்பாடு பண்ணுவேனுங்க.

என் நண்பன் ஒருத்தன் சொன்னான் 'இட்ட சாபம் முட்டும்'னு பாவலேறு பெருஞ்சித்திரனாரு ஒருத்தரு அறம் பாடினாராம். பாடுன கொஞ்ச நாள்லய நம்ம முன்னாள் பாரதப்பிரதமர் குண்டு வெடிச்சு செத்துப்போயிட்டாருன்னு கிண்டல் பண்ணுனாம். அதுமாதிரி நம்ம கட்சியும் ஈழ சாபத்துனலதான் தோத்துப்போச்சாம், அக்காவும் களி திங்கப்போயிருச்சுன்ன கெக்கலிச்சான். நான் சொன்னேன். டேய் மொதல்ல எங்களுக்கு கடவுள் மேல நம்பிக்கை கிடையாது. அதுபோக இட்டசாபமெல்லாம் முட்டாது, அது என்ன முட்டறதுக்க மாடா? எங்க கனியக்கா கைது ஒரு அனைத்திந்திய சதி, அதுவும் பார்ப்பனிய எதிப்பு நெருப்பில் நீராடிய எம் கட்சியை ஒழிக்க இந்திய பார்ப்பனிய சதி அப்படின்னேன். அவன் 'பாருடா கிறுக்குப்பய உளர்றாரு'ன்னான். நான் சொன்னேன், 'தம்பி எங்க தலைவரும் அதத்தான் சொன்னாரு, அதுபோக என்னால அத நிரூபிக்க முடியும்'னேன். அவன் எப்படின்னான். 

kanimozhi_300_copyநான் சொன்னேன், கம்யூனிஸ்ட் கட்சிக்காரனுவெல்லாம் எப்படி கூப்பிடுவாங்கன்னா, தோழர் தோழர்னு கூப்பிடுவாங்க, திமுககாரங்கெல்லாம் உடன்பிறப்பே, தம்பினு கூப்பிடுவாங்க, அதிமுககாரங்க ரத்தத்தின் ரத்தமேனு கூப்பிடுவாங்க, ஆனா அய்யர்களுகெல்லாம், அதான் ஆர் எஸ் எஸ், இந்து முன்னணியெல்லாம் எப்படி கூப்பிடுவாங்கனு சொல்லுப் பாப்போம்னு நான் அவன்கிட்ட கேட்டேன். அதுக்கு அவன் ஜி ஜினு கூப்பிடுவாங்கனு சொன்னான். நான் அதுக்கு சொன்னேன். அந்த ஜிதான்டா இந்த 2ஜி. இப்பப்புரியுதா இது ஒரு பாப்பானுவ சதினு. வேணும்னா நம்ம வீரமணி அய்யாகிட்ட இது பாப்பனுவ சதிதான்னு சர்டிபிகேட் வாங்கித்தரவானு கேட்டேனுங்கய்யா. அவன் அப்படி வாயைப் பிளந்துகிட்டே, மாப்ளே, உங்காளு ராசீவ் மாதிரி சட்டுப்புட்டுனு மண்டையைப் போடமாட்டாரு, இன்னும் பல வருசம் வாழ்வாருன்னான். நான் இப்பமாவது எங்க தலைவரு மகிமை புரிஞ்சு நடந்துக்கோனு சொல்லிட்டு சந்தோசமா சிரிச்சேன். அதுக்கு அவன் சொன்னான் இப்போச் செத்தா தியாகி ஆயிருவார்னுனான்.

அய்யா அது கிடக்கட்டும் விடுங்க, கட்சிய முன்னேத்த சில வழி நான் வச்சிருக்கேனுங்கய்யா, ஒண்ணு ஒண்ணு சொல்றேனுங்கய்யா, மனசுல ஏத்திக்கிட்டு அப்படியே செயல்படுத்துங்கய்யா.

பாயிண்ட் நம்பர். 1. இந்தக்காலத்துல எல்லாரும் நம்ம கட்சியில குடும்ப ஆதிக்கம் வந்திருச்சுனு பேசியே ஓட்டுப்போட மாட்டேங்கிறாங்க. அதுவும் முக்கியமா என்ன சொல்றாங்கன்னா, கட்சிவேலையே பாக்காமா உங்க குடும்ப உறுப்பினர் அப்படிங்கிறதானால பதவிக்கு வந்ததா சொல்றானுவ. அதுபோக நாமளும் எத்தனைநாள்தான் சும்மா நீங்க செயிலுக்குப் போனதையும் தளபதி ஸ்டாலின் மிசாவில இருந்ததையும் வச்சு காலந்தள்ளுறது? அதனாலதான இந்த 2 ஜி வாய்ப்பை பயன்படுத்தி நம்ம குடும்ப உறுப்பினர் அத்தனைபேரையும் திகாருக்குள்ள தள்ளீருவோம். அப்பால உடன்பிறப்பே உளுந்தம்பருப்பே பார்த்தாயா, நம் கழக குடும்ப உறுப்பினர் அத்தனைபேரும் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்கள்ன்னு நீங்க முரசொலில எழுதிப்போடலாம். அதனால உங்கள்ல்ல ஆரம்பிச்சு தயாநிதி அழகிரிக்கு பொறக்கப்போற புள்ள வரைக்கும் செயிலுக்கு அனுப்பிச்சிருங்கய்யா (நம்மள வாலன்டிரா அனுப்பிறது நல்லது, போறபோக்குல அத்தனை பேரையும் சிபிஅய்காரனே புடிச்சுட்டு போயிருவான் போலயிருக்கு).

2. நம்ம சுப்பிரமணியசாமிய எப்படியாவது சோப்பு போட்டு கட்சியில சேத்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்திட்டீங்கன்னா, அவரு 2ஜிக்கு காரணம் ஒசாமா பின்லேடனும் முல்லா முகமது ஓமரும்தான்னு ஒரு அறிக்கை கொடுத்துருவாரு. அதுபோக இந்த காங்கிரசுகாரனுவ புளுபிலிம் நாளஞ்சை நம்ம தயாநிதி மாறனைச் சொல்லி எடுத்து நித்தியானந்தா மேட்டர்மாதிரி வெளியிடச்சொல்லுங்க. தமிழ்நாடே புல்லருச்சுபோயி 2ஜி விசயத்தையே மறந்திரும்.

3.அக்காவை சொல்லி திகார்க்குள்ளே நம்ம கட்சி சிறையில் இருப்போர் சங்கம் ஒண்ணை ஆரம்பிக்க சொல்லுங்க. அதில பப்பு யாதவ், கல்மாடி மாதிரியான அக்மார்க் அப்பாவிகளையும் சேத்துக்க சொல்லுங்க. அதுபோக சன்டிவியில சித்திமாதிரி அக்கான்னு ஒரு சீரியல் எடுத்து சிறையில அக்கா படுற கஷ்டத்தை எல்லாம் விலாவரியா போடச்சொல்லுங்க. அக்கா வேஷத்துல குஷ்புவ போட்டா நம்ம கட்சி முத்திரை நாடகத்துக்கு வந்திரும் இல்லங்களா, அதனால ரஞ்சிதாவ நடிக்கச்சொல்லுங்க. நாடகம் நல்லபடியா ரீச் ஆகும்.

அய்யா, மேல சொன்னதெல்லாம் செஞ்சு பாப்போம். ஒண்ணும் முடியாட்டி கட்சியை கலைச்சுட்டு விஜய டி.ராசேந்தர் கட்சியில சேந்துருலாங்கய்யா. அதுபோக 2ஜி விசயத்துல தயாளு அம்மாள சாட்சியா போட்டுருக்கதனால வீராச்சாமி படத்து சிடிய இதுதாண்டா சாட்சினு சொல்லி சிபிஅய்கிட்ட கொடுக்கச்சொல்லுங்க. அப்புறம் பாருங்க. அவனுங்க சிபிஅய்யை கலைச்சுட்டு நம்ம கட்சி இளைஞர் அணியில சேந்துருவானுங்க.

இப்படிக்கு

உங்கள் உடன்பிறப்பு

திமுகவின் உண்மைத்தொண்டன்

பின்குறிப்பு - அய்யா கோபத்துல உண்ணாவிரதம் கிண்ணாவிரதம்னு எதுவும் கிளம்பிராதீங்க. ஏன்னா வடிவேலுக்கு மார்க்கெட் போயிரும்.

Pin It