சிந்து குறியீடுகள் பற்றிய செய்திகளில் மிக அண்மையில் செய்தித்தாள்களில் அடிபட்ட செய்தி செம்பியன் கண்டியூரில் கண்டெடுக்கப்பட்ட கற்கோடாலி ஆகும். அதுவே தமிழ்நாட்டில் சிந்துக் குறியீடுகளுடன் கண்டெடுக்கப்பட்ட, மிக அரிதான ஆய்வுப்பொருள்களில் ஒன்று. அதைவிட அண்மையில் வேறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு முன்னர் கிடைத்த பொருள்களில் சிந்துக்குறியீடுகள் அவ்வளவு தெளிவாக இல்லை. எனவே இந்த கண்டுபிடிப்பு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஏப்ரல் மாதம் 27 ந்தேதி இந்து நாளிதழில் வந்த செய்தி கீழ்வருமாறு தெரிவிக்கிறது. செம்பியன் கண்டியூர் மற்றும் மேலப்பெரும்பள்ளம் ஆகிய இரண்டு ஊர்களிலும் நடந்த அகழ்வு ஆய்வின்போது சில மண்பாண்டத் துண்டுகள் கிடைத்தன. அவற்றில் பொறிக்கப்பட்ட வரைவுகள் அல்லது வடிவங்கள் சிந்துக்குறியீடுகளை ஒத்துக் காணப்படுகின்றன. அந்த மட்பாண்டத்துண்டுகளில் அம்புவடிவக் குறிகள் காணப்படுகின்றன என்று அய்ராவதம் மகாதேவன் அவர்கள் கருதுகிறார். இந்த அம்புக்குறிகள் அடுத்தடுத்து இரண்டாக ஜோடியாகக் காணப்படுகின்றன. இப்படி ஜோடியாக அவை காணப்படுவது சிந்து வெளியில் கிடைத்த குறியீடுகளை ஒத்து இருக்கிறது என்பது அவர் வாதம்.

01/5/2006 தேதியிட்ட இந்து நாளிதழ் செய்தியை முதலில் காண்போம். பிப்ரவரி 2006ல் திரு. வி. சண்முகநாதன் என்ற ஆசிரியர் (இவர் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள செம்பியன் கண்டியூர் என்ற ஊரில் வசிக்கிறார்) தன்னுடைய வீட்டின் கொல்லைப் பக்கத்தில் வாழையும், தென்னையும் பயிரிடுவதற்காக குழிவெட்டிய போது இரண்டு கற்கோடாலிகளைக் கண்டு எடுத்தார். இந்த ஆசிரியருக்கு ஏற்கனவே தொல்லியல் ஆய்வில் ஆர்வம் இருந்திருக்கிறது. எனவே அவர் தமது நண்பர் G.முத்துசாமி என்பவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்க அவரும் அங்கு விரைந்து வந்தார். இவர் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தரங்கம்பாடியில் உள்ள டச்சுக்காரர்களின் கோட்டை அருங்காட்சியகத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர். அவர் அந்த கற்கோடாலிகள் இரண்டையும் எடுத்து திரு.T.S.ஸ்ரீதர் என்ற உயர் அதிகாரியிடம் ஒப்படைத்தார். இவர் தமிழ்நாடு தொல்லியல் துறையில் சிறப்பு ஆணையராகப் பணிபுரிந்து கொண்டு இருந்தார். அவர் அதை தூய்மை செய்து பார்த்தபொழுது அதில் சில வரைவுகள் அல்லது பொறிப்புகள் இருப்பதைக் கண்டு கல்வெட்டு ஆய்வாளர்களிடம் அதைப் பார்க்கும்படி கட்டளையிட்டார்.

அவர்கள் அதைப் பார்த்ததும் ஆனந்தக் கடலில் மூழ்கினர். ஏன்? அந்தக் கோடாலியில் நான்கு வடிவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவையாவும் சிந்துக்குறியீடுகளைப் போலவே இருந்ததுதான் இந்த மகிழ்ச்சிக்கு காரணம். கிடைத்தது இரண்டு கோடாலிகள் அதில் ஒன்றில் மட்டும் இந்தக் குறியீடுகள் உள்ளன. மற்றொன்றில் வடிவங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. பதிவுகள் உள்ள கோடாலியின் அளவு 65 cm  / 2.5 cm  / 3.6 cm  /4 cm . அதன் எடை 125கிராம். பிறகு அது சிந்துக் குறியீட்டு ஆய்வாளரான அய்ராவதம் மகாதேவனிடம் காண்பிக்கப்பட்டது. அவர் எண்வரிசைப்படி சிந்துக்குறியீடுகளை ஆவணப்படுத்தி வைத்திருப்பவர். இந்த எண்கள், வரிசை, எல்லாம் அவராக அமைத்துக் கொண்டது. ஆய்வு என்றாலே அப்படித்தானே. அது செல்க. அவர் அந்த கோடாலியில் உள்ள நான்கு பொறிப்புகளில் முதலாவது எண் 48 ஐயும், இரண்டாவது எண் 342, 3வது எண் 367, நான்காவது எண் 301ஐயும் ஒத்து இருக்கிறது என்று உணர்ந்தார். (மீண்டும் கூறுகிறோம் இந்த எண், வரிசை எல்லாம் ஆய்வாளருக்கு தக்கபடி மாறிவரும்). இந்த நான்கு வடிவங்களையும் வாசித்து பொருள் கூற முயல்கிறார் அய்ராவதி.

முதல் பொறிப்பு ஒரு மனிதன் காலை மடித்துக் கொண்டு அமர்ந்து இருப்பது போல உள்ளது. அதை அவர் முருகு என்று அழைக்கிறார். ஏன்? மனிதன் உடலை முறுக்கிக் கொண்டு அமர்ந்திருப்பது போல் உள்ளதால் 'முருகு' என்று அழைக்கிறார். இரண்டாவது பொறிப்பு தொப்பியுடன் கூடிய குவளை போன்ற தோற்றம் உடையது. அதை அவர் 'அன' என்று குறிக்கும் குறியீடு என்று அழைக்கிறார். எப்படி என்பது நமக்கு விளங்கவில்லை. எனவே முதல் இரண்டு குறியீடுகளையும் கூட்டி படித்தால் முருகு+அன்=முருகன் என்று வருகிறது. இது போன்ற முருகு+அன் என்று வரும்படியான குறியீடுகள் நூற்றுக்கணக்கான சிந்து குறியீடுகளில் காணப்படுகிறது. எனவே இது சிந்து வெளிக்குறியீடுதான் என்று உறுதி செய்கிறார். 3வது குறியீடு/நான்காவது குறியீடு என்ன என்பதைப் பற்றி அய்ராவதி ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. அதாவது நான்கு குறியீடுகளில் இரண்டை மட்டும் "படித்துவிட்டு" அல்லது விளக்கிவிட்டு மற்ற இரண்டையும் விட்டு விடுகிறார். ஏன்? அதைப் படிப்பதற்கு அல்லது விளக்குவதற்கு வழியில்லை. வகையில்லை.

அதாவது பாதியை மட்டும் படித்து விட்டு இது சிந்து குறியீடு என்ற முடிவிற்கு வந்து விடுகிறார். பாதிக் கிணறு தாண்டியவன் கதைப் போலத்தான் இந்த ஆய்வும். இதை தன்னுடைய சொந்த தனிக் கருத்து என்றும் இதற்கும் நான் முன்னர் ஆய்வுகளில் சொன்ன வாதத்திற்கும் தொடர்புபடுத்தி பார்க்கக்கூடாது என்றும் நிபந்தனை வேறு விதிக்கிறார். இந்த கற்கோடாலியை வைத்துக் கொண்டுதான் சிந்துக் குறியீடுகள் தமிழகத்தில் கிடைத்துவிட்டன. என்று சிலர் கூறுகிறார்கள். அது மட்டும் அல்ல. 'முருகன்' என்பதை படித்து உணர்ந்துவிட்டதால் அந்தக் குறியீட்டையும் சங்க இலக்கியங்களில் காணப்படும் சேயோன் என்று அழைக்கப்படும் கடவுள் வழிபாட்டுடன் தொடர்புபடுத்தி சிந்துக் குறியீடுகளின் மொழி தொல் திராவிட/தொல் தமிழ் மொழியே என்று ஆய்வினை எளிதாக முடித்துவிடுகிறார் அய்ராவதி. இது பற்றி வேறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள கருத்துகளைக் காண்பது பொருத்தமாக இருக்கும். அய்ராவதியின் நண்பரும் சிந்துக் குறியீடுகள் தொல் திராவிட எழுத்தே என்று முடிவு செய்தவருமாகிய அஸ்கோ அவர்கள் இந்த கருத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய வார்த்தைகளில் சொல்வதென்றால் அய்ராவதியின் இந்த கருத்து நிதர்சனத்தைவிட்டு (உண்மையைவிட்டு) வெகு தொலைவில் நிற்கிறது. அதாவது உண்மையல்ல என்பது அஸ்கோ அவர்களின் கருத்து ஆகும்.

சிந்து குறியீடுகள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள மற்றும் ஒரு ஆய்வாளர் மிஷேல் டேனினோ பிரான்சில் பிறந்த இவர் 1977முதல் இந்தியாவில் வசிக்கும் அவர் தொன்மை ஆய்விலும், சுற்றுப்புறச்சூழலிலும் ஆர்வம் கொண்டவர். 15/16 பிப்ரவரி 2007ல் தமிழக அரசின் தொல்லியல் துறை மற்றும் சென்னைப் பழ்கலைக் கழகத்தின் பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் நடத்தப்பட்ட சிந்து நாகரீகம் மற்றும் தமிழ்மொழி என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கலந்தாய்வில் (SYMPOSIUM) ஒரு ஆய்வறிக்கையை அளித்துள்ளார். அதில் உள்ள கருத்தின்படி,

கற்கோடாலியின் (உசுடு என்றும் இதனை அழைப்பர்) காலம் சரியாக உறுதி செய்யப்படவில்லை. மேலும் கற்கோடாலியின் காலமும் அதில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகளும் ஒரே காலத்தில் செய்யப்பட்டவையா அல்லது கற்கோடாலி செய்யப்பட்ட பிறகு அதில் மெருகேற்றி பின்னர் (அதாவது போலியாக) அந்த எழுத்துக்களை பதிவு செய்துள்ளனரா? என்ற அதிர்ச்சியூட்டும் கேள்வியைக் கேட்டுள்ளார். அய்ராவதி அவர்களும் அந்த கற்கோடாலியின் தொன்மையைப் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதை நோக்கும்போது இந்தக் கேள்வி பொருள் பதிந்த கேள்வியாகவே தோன்றுகிறது. கரிம நாள்காட்டி மூலம் உசுடுவின் காலத்தை எளிதில் கணித்து விட இயலும் அவர் கூறியதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். (இது சொல்வனம் இணையதளத்திள் இருந்து எடுக்கப்பட்டது).

செம்பியன் கண்டியூர் தொல்பொருள்:-

செம்பியன் கண்டியூரில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் சிந்து அச்சுரு (script) மற்றும் தமிழ் சலாச்சாரத்திற்கும் இடையேயான உறவை காட்டுவதாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. இந்த புரிதல் உடனடியாக மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் இடையேயான குழப்பத்தை தோற்றப்படுத்துவதோடு ஒரு அச்சுரு மற்றும் ஒரு மொழி பல கலாச்சாரங்களுக்கான பொது ஊடகமாக இருக்க இயலும் எனும் நிதர்சனத்தை மறுதலிக்கிறது. உதாரணமாக சீன அச்சுரு கன்பூஷிய மற்றும் பௌத்தத்தின ஊடகமாக இருக்கிறது. ஆகவே, இங்கு நம்முன் இருக்கும் கேள்விகள் இரண்டு:

"கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் கொண்டிருப்பது சிந்து அச்சுருதானா?"

"தொல்பொருள் காணப்படுவது சிந்து அச்சுருவாக இருந்தால் எந்த அடிப்படையில் இந்த அச்சுரு தமிழ் மொழி மற்றும் அதன் கலாச்சாரத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது?"

இந்த கேள்விகளை ஆராயப் புகும்முன், நான் ஆய்வுமுறையில் உள்ள ஒரு சில சிக்கல்களை எழுப்பவேண்டும். ஒன்று, தமிழகத்திலும் பிற இடங்களிலும் தொல்பொருட்களில் போலியாக எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நிகழ்வுகள் வெகு பிரசித்தம். ஆகையால் தேர்ந்த கனிபொருளறிஞர்களை (mineralogists) கொண்டு நுண்ணிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, "இவ்வெழுத்துக்கள் பொறிக்கப்பட்டது தொல்பொருள் பட்டை தீட்டுப்படும் முன்பா அல்லது பின்பா?" மேலும், பட்டை தீட்டப்பட்ட பின் பொறிக்கப்பட்டதெனில்," தோராயமாக எத்தனை வருடங்களுக்கு பிறகு பொறிக்கப்பட்டது?" என்பதை அறியவேண்டும்.

இரண்டாவது, இக்கண்டுபிடிப்பில் இருக்கும் தொல்லியல் அடிப்படையின் வெறுமை; இருந்தும் சிந்து அச்சுருவில் வித்தகரான ஐ.மகாதேவன் இத்தொல்லியல் பொருளுக்கான பொருத்தமான காலத்தை "2000 BCE முதல் 1500 BCE வரை" என கணித்துள்ளார்.நாம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். தென்னிந்தியாவில் பொதுவாக கற்காலத்தை (neolithic) சேர்ந்த பல்வேறு தொல்பொருட்கள் பிந்திய megalithic நிலங்களில், சில சமயங்களில் மேலோட்டமான அகழ்வாய் ஆராய்ச்சிகளில் கூட கண்டெடுக்கப்படுகின்றன. ஆகையால், தற்போது (ஐ.மகாதேவனால்) கணிக்கப்பட்டுள்ள காலத்திற்கு எந்த அடிப்படையும் இருக்க சாத்தியமில்லை. ஹரப்பன் நகர் சார்ந்த காலகட்டத்தின் அழிவை தொடர்ந்து, வட-மேற்கிலிருந்து தெற்கு நோக்கி நிகழ்ந்ததாக சொல்லப்படும் கற்பனையான பயணம் நிகழ்ந்த காலத்துடன் எப்போது முழுவதுமாக பொருந்தப்போகிறதோ அப்போது இந்த காலத்தை ஒருவரால் நியாயப்படுத்த முடியும். நாம் அறிந்தவரை, பொது யுகத்திற்கு முந்தைய (BCE) 2500-ஆம் ஆண்டு முதல் 500-வது ஆண்டுக்கு உள்ளதாக இந்த தொல்பொருள் மெருகூட்டப்பட்டிருக்கலாம் என்பதே.

இருப்பினும், கல்வெட்டின் மொழியின் இயல்பு குறித்த ஆய்வுகளின் தவறான அணுகுமுறை இங்கு முக்கியமாக பேசப்படவேண்டிய ஒன்று. தொல்பொருளில் சில குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளதாக எடுத்துக்கொண்டாலும், அவை எவ்வகையிலும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கவில்லை. (உண்மையில், முதலில் மூன்று குறியீடுகள் இருப்பதாக தெரிவித்த ஐ.மகாதேவன், பின் நான்கு குறியீடுகள் இருப்பதாக அறிவித்தார்). எந்த வகையிலும் அக்குறியீடுகள் சிந்து குறியீடுகளுடன் அடையாளப்படுத்தப்படவில்லை. மேலும், தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பல பானைகளிலும், கற் சித்திரங்களிலும் உள்ள ஓவியங்களின், சிந்து-வின் தொல்பொருட்களில் காணக்கிடைக்கும் ஓவியங்களுடனான (graffiti) ஒற்றுமை பல காலமாக பேசப்பட்டு வந்திருக்கின்றன. சிந்து எழுத்துரு தென்னிந்தியாவில் புழக்கத்தில் இருந்தமைக்கான சான்றாக இவை முன்னிருத்தப்பட்டிருக்கின்றன. இருந்தபோதும், சிந்து எழுத்துருவை ஒத்த அந்த குறியீடுகள் இத்தகைய கூற்றுகளை நிரூபிப்பதாக இல்லை. சிந்து எழுத்துரு பல்வேறு நகரங்களின் எழுத்துருக்களுடன்-காட்டாக முன்-எலாமெய்ட் (proto-Elamite), பழைய செமிதிக் (Old semitic), ஈஸ்டா தீவுகளின் எழுத்துரு, எடரூஸ்கன் எழுத்துரு (Etruscan script) ஒப்பிடப்படுவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Pin It