அரசுப் பள்ளிகளில் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த சிறப்புக் கட்டணம் இனிமேல் வசூலிக்க வேண்டியதில்லை. இது தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பு.

இதுவரை வசூலிக்கப்பட்ட சிறப்புக் கட்டணம் எவ்வளவு? அந்தக் கட்டணத்தை ரத்து செய்யும்போது மாற்று ஏற்பாடு எதுவும் செய்யப்பட்டுள்ளதா? அரசுப் பள்ளிகளின் அன்றாட செயல்பாட்டில் அரசின் அறிவிப்பு ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

தமிழ்நாட்டில் நீங்கள் எங்கே பயணம் செய்தாலும் ஐந்து கிலோமீட்டருக்குள் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி அல்லது அரசு மேல்நிலைப்பள்ளியை நிச்சயம் பார்க்க முடியும். இந்தப் பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளுக்கு ஆண்டுக்கட்டணம் 22 ரூபாய். 9,10 வகுப்புகளுக்கு ஆண்டுக்கட்டணம் 47 ரூபாய். வெகு சில பள்ளிகளில் மட்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்கிற பெயரில் 25 ரூபாய் வசூலிக்கப்படும். எல்லா தொகைகளுக்கும் முறையான ரசீது உண்டு. வரவு, செலவு பதிவுகள் உண்டு. தவறு செய்யும் தலைமை ஆசிரியருக்கு தண்டனையும் உண்டு.

6,7,8 வகுப்புகளில் 300 மாணவர்களும், 8,10 வகுப்புகளில் 200 மாணவர்களும் பயில்வதாக ஒரு உயர்நிலைப்பள்ளியை கற்பனை செய்து கொள்வோம். அந்தப் பள்ளியில் எத்தனை ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்? 300x22 + 200x47 ஆக ஆண்டு ஒன்றுக்கு அந்தப் பள்ளியின் மொத்த இருப்புத் தொகை 16,000 ரூபாய். இந்த 16,000 ரூபாயைக் கொண்டு 500 மாணவர்கள் கொண்ட அந்த பள்ளியை தலைமை ஆசிரியர் நிர்வாகம் செய்யவேண்டும்.

ஆசிரியர்களுக்குரிய சம்பளத்தை அரசு கொடுத்து விடுகிறது. அதுபோலவே, மதிய உணவையும் அரசே பார்த்துக் கொள்கிறது. மாணவர்களுக்குரிய பாடநூல்கள், இலவச சீருடைகள், ஆதிதிராவிட மாணவர்களுக்கான இலவச நோட்டுப் புத்தகங்கள், இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள் ஆகிய அனைத்து இலவச திட்டங்களும் அரசின் செலவுதான்.

நாம் மேலே பார்த்த 16,000 ரூபாய் பள்ளி நிர்வாகத்திற்கு போதுமானதா? இந்த ரூபாயைக் கொண்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஓர் ஆண்டிற்கு செலவு செய்ய இயலுமா? இது, நம்முன் உள்ள கேள்வி.

ஒரே மாணவனிடம் இந்த 16,000 ரூபாயை கல்விக் கட்டணமாக ரசீது இல்லாமல் பெற்றுக்கொண்டு இயங்கும் பள்ளிகளும் தமிழ்நாட்டில் இருக்கின்றன என்று சிலர் முணுமுணுக்கலாம். ஒரு பள்ளியை இயக்க ஆண்டு ஒன்றிற்கு 16,000 ரூபாய் போதாதா? என்றும் சிலர் கேட்கலாம்.

தமிழக அரசு இந்த 16,000 ரூபாய் கல்விக் கட்டணத்தை மாணவர்களிடமிருந்து வசூல் செய்யவேண்டாம் என்று உத்தரவு போட்டுவிட்டது. மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது வெறும் 22 ரூபாய்க்கும், 47 ரூபாய்க்கும் தடுமாறும் பெற்றோர்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இந்த அறிவிப்பு நிச்சயம் ஒரு நிவாரணம்தான். ஆனால் பள்ளிக்கு....?

500 மாணவர்கள் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் ஆண்டு பட்ஜெட் ஏறத்தாழ இப்படி அமையும்...

விளையாட்டுக் கருவிகள் வாங்கவும், விளையாட்டு விழா நடத்தவும்........................................5000 ரூபாய்

நூலகப் புத்தகங்கள் வாங்க.......................................................................................................................... 250 ரூபாய்

இலக்கிய மன்றம் அமைத்து மாணவர்களின் பேச்சாற்றல் எழுத்தாற்றலை வெளிப்படுத்த ..250 ரூபாய்

அருகில் உள்ள இடங்களுக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல................................ 250 ரூபாய்

மாணவர்களுக்கு அறிவியல் கருவிகள் வாங்க....................................................................................500 ரூபாய்

இருக்கை வசதிகள் ஏற்படுத்தவும், இருக்கைகளை பழுது பார்க்கவும்..........................................2500 ரூபாய்

மாணவர்களுக்கு கைத்தொழில் பயிற்சியளிக்க.................................................................................... 500 ரூபாய்

இவ்வாறாக மொத்த தொகையும் மாணவர்கள் கல்விச் செலவு சம்பந்தப்பட்டவையாகவே அமையும். மாணவர்களுக்கு தேர்வு நடத்தவும், பள்ளிக்கு செலவாகும் மின்கட்டணம் செலுத்தவும் இதே தொகை தான் பயன்பட்டு வருகிறது. கடந்த பல வருடங்களாக பள்ளியின் மின் இணைப்பு வணிக ரீதியிலானது என்று அறிவித்து யூனிட் ஒன்றுக்கு 6 ரூபாய் வீதம் மின்வாரியம் வசூலித்து வருகிறது. அரசுப்பள்ளியை வணிக நிறுவனம் என்று மின்வாரியமே முத்திரை குத்துவது தமிழ்நாட்டின் முதல் அதிசயம் இல்லையா!

ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், பள்ளியின் அன்றாட செலவுகளுக்காகவும் செய்யப்படும் செலவுகளை இனி அரசே ஏற்கப் போகிறது என்பதுதான் அரசு அறிவிப்பின் பொருள். அப்படியானால் அரசு, பள்ளிக்குத் தேவையான நிதியை எப்போது கொடுக்கும்? ஆண்டு ஆரம்பத்திலா? இடையிலா? அல்லது இறுதியிலா? ஆண்டின் ஆரம்பத்தில் கொடுக்கவில்லை. இடையிலோ இறுதியிலோ கொடுப்பதால் பயனில்லை.

500 மாணவர்கள் கொண்ட பள்ளியை வெறும் 16,000 ரூபாயைக் கொண்டு நடத்திச் செல்லும் தலைமை ஆசிரியர் பெற்றோர்களின் பார்வையில் ஒரு பரிதாபத்திற்குரியவராகத்தானே காட்சியளிப்பார்! தலைமை ஆசிரியரையே பரிதாபமாகப் பார்க்கும் பெற்றோர்கள், பள்ளிக்கூடத்தை துரும்பாகத்தானே பார்ப்பார்கள்!

இந்தச் சூழலில் பிரம்மாண்ட கட்டிடத்தில் இயங்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டுமே பெற்றோரின் கண்களுக்கு பள்ளிக்கூடங்களாகத் தெரிவதில் என்ன வியப்பு இருக்கிறது? 

- மு.குருமூர்த்தி

Pin It