பசுமைப்புரட்சிக்கு ஆதரவாக நம்நாட்டிலுள்ள சகல ஊடங்களும் பணிபுரிந்தது. இன்றும் இதுதான் நிலைமை. இதை அவ்வூடகங்கள் மிகுந்த தந்திரத்துடன் செய்கின்றன. பஞ்சப்பிரச்சாரத்தை சொல்லித்தான் அவர்கள் இப்புரட்சியை நியாயப்படுத்துகிறார்கள்.

இப்பஞ்சப் புள்ளி விவரங்களுடன் அதே ஆங்கில அரசின் இன்னொரு புள்ளிவிபரம் இது.

பருத்தி சாகுபடிக்கு ஏற்றாற்போல தமிழகத்தில் மட்டும் சில மாவட்டங்களில் ஏற்பட்ட மாற்றதைக் காட்டும் விபரம்.

மாவட்டத்தின் பெயர்                     1847 - 1848                   1888 - 1889
மதுரை                                                  48,747 ஏக்கர்               1,48,297 ஏக்கர்
திருநெல்வேலி                                 1,22,391 ஏக்கர்            3,78,072 ஏக்கர்
கோயம்முத்தூர்                                97,830 ஏக்கர்               2,50,635 ஏக்கர்

இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி பற்றியது.

1771 முதல் 1795 வரை            2 லட்சம் பவுண்ட்
1806 - 1810 வரை                        103 லட்சம் பவுண்ட்
1816 - 1820 வரை                        441 லட்சம் பவுண்ட்
1836 - 1840 வரை                        583 லட்சம் பவுண்ட்
1841 - 1846 வரை                        820 லட்சம் பவுண்ட்

தஞ்சைப்பகுதியில் 1798 - 1799 தொடங்கி 1813 முடிய வெள்ளையர்களின் முயற்சியில் 3554 ஏக்கர் அளவிற்கு மட்டுமே பருத்தி சாகுபடியானது. தஞ்சை மண் பருத்தி விவசாயத்திற்கு ஏற்றதல்ல என்பதால் சுமார் 6600 ஏக்கர் நிலத்திற்குமேல் உகந்தது அல்ல என தஞ்சை ஆட்சியர் தமது அதிகாரிகளுக்கு கூறியுள்ளார். பக்கம் 145. மேலது.

இவ்வூடங்கள் எதுவுமே ஆங்கிலேயர்களின் கட்டுப் பாட்டில்தான் நமது விவசாயம் நீண்டகாலம்  இருந்தது என்பதையும் விலை காரணமாக இங்குப் பணப்பயிரை அன்று விவசாயிகள் பயிரிடவில்லை. கட்டாயப் படுத்தப் பட்டதால்தான்  என்பதையும் சொல்வதில்லை. அமெரிக்க விடுதலைப் போருக்கு பின் - 1780 களில் இருந்து - பருத்திக்கு அவர்கள் இந்தியாவை தயார்ப்படுத்தினார்கள் என்பதே உண்மையான காரணம். தஞ்சை ஆட்சியர் தன்னால் 6600 ஏக்கருக்குமேல் பருத்திப் பயிரிட முடியவில்லை என்பதை 1813 எதற்காகச் சொல்லவேண்டும்.?

இப்பஞ்சப் பிரச்சாரத்திற்கு மேலும் ஒரு காரணம். இது குறித்து 1848 ஆம் வருடம் பிரிட்டீஷ் மக்கள் சபைக்கு விசாரணைக்குழு அளித்த தகவல்; 28 ராத்தல் தானியம் 6 ஷில்லிங்கிலிருந்து 8 ஷில்லிங் வரை காண்டேஷ் நகரத்தில் விற்ற காலத்தில், புனா வில் அதன் விலை 64 ஷில்லிங்கிலிருந்து 70 ஷில்லிங்காக இருந்தது. போக்குவரத்துச் சாலைகள் மோசமான நிலையில் இருந்ததால் அத்தானியங்களை புனாவிற்கு கொண்டுவர முடியாத நிலமையினால் புனாவிலுள்ள மக்கள் அந்நகர வீதிகளில் பஞ்சத்தால் மடிந்து கொண்டிருந்தார்கள்.

1853 ஆகஸ்ட் 8 இல் நியூயார்க் டெய்லி டிரிபியூனில் மார்க்ஸ் எழுதிய கடிதம்.  இதே ஊடகங்கள் நமக்கு கிடைக்கும் மழை அளவுகளிலும் - காலங்காலமாக - தந்திரமான புள்ளிவிபரங்களையே தருகிறது. சராசரி மழைக்குப் பதில் 20 விழுக்காடு குறைந்தால் பஞ்சம் 20 விழுக்காடு கூடினால் வெள்ளம். - இதற்கு மாறாக -- மேலது புத்தகத்தில் - பக். 115 - உள்ள மழை குறித்த ஒரு புள்ளி விபரம்.

வருடம் அங்குலம்  மி.மீ 

1822  59.09    1500
1823  26.61    675
1824  33.61    853
1825  53.17    1350
1826  61.25    1555
1843  50.88     1292
1844  44.33     1125
1845  38.23     971
1846  81.00     2057
1847  80.47     2043 

சராசரி அளவில் அதிகம் 61.18 அங்குலம். 1846 மற்று 1847முறையே வடகிழக்கு பருவமழை மட்டும் 49.83,  57.15 அங்குலமாக இருந்தது. 1822 முதல் 1843 வரை இப்பருவத்தில் மட்டும் பெய்த சராசரி மழை 22.51 அங்குலம்.

.... கோயம்புத்தூர் பகுதியில் பெய்யும் மழையின் அளவு குறைவே. மார்ச் ஏப்ரல் மாதங்களில் கோடை  மழையாலும், ஜுன் - செப்டம்பர் மாதங்களில் தென் மேற்குப் பருவகாற்றாலும், அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவக் காற்றாலும் ஓராண்டிற்கு ஏறத்தாழ 45 நாட்களில் பெய்யும் சராசரி மழை 65  செ.மீ மட்டுமே.

.... நான் சிறுவனாக இருந்தபோது கொங்கு நாட்டில் பொருவாரியன பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம்  தரைமட்டத்தில் இருந்து 3 - 5 மீ. ஆழத்தில் இருந்தது.  ஐம்பதுகள் வரை பயிர்களுக்குக் கமலைக்  கிணறுகளில் மாடு பூட்டி நீரிறைத்தனர். .... ஆறு வாய்க்கால் பகுதிகளில் ஏற்றத்தால் நீரிறைத்தனர்.

.... எழுபதுகளில் கோவைக்கு அருகாமையில்  நிலத்தடி நீர்மட்டம் 30 -40 மீ. ஆழத்தில் இருந்தது.  இன்றைக்கு - 2007 - 80 - 100 மீ கிழே உள்ளது. .... 86 - 87 இல் அமைத்த குட்டைகளினால் அருகாமையிலுள்ள தோண்டு கிணறுகளில் 25 லிருந்து 50 விழுக்காடு நீர்ப் பெருக்கு ஏற்பட்டதாக ஓர் அறிக்கைக் கூறுகிறது.  ...... இராமநாதபுரம் மாவட்டத்தில் சில ஊர்களில் ஊருணியில் தூர்வாரும் வேலை காலங்காலமாக ஊராரால்  செய்யப்பட்டு வந்தது ஒரு காலம்.         சுகி. ஜயகரன். காலச்சுவடு 92.

வட தமிழ்நாட்டில் ஆர்ட்டீசியன் ஊற்றுகள்  பசுமைப் புரட்சிக்கு முன் இருந்தது- என்று சொன்னால் இன்று யாராவது இத்தகவலை நம்புவார்களா?. தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு சுமார் 1000 மி.மி. என்ற கதையைத்தான் இன்றைய ஊடங்களும் புள்ளி விபரங்களும் கூறுகின்றன. அப்படிக்கூறும் போது வரலாற்றுக் காலத்தில் இருந்தே இதுதான் நிலைமை என்பது போல கூறுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் ஆர்ட்டீசியன் ஊற்றுகளும், பாலாற்றில் நூற்றுக் கணக்கில் - கசம் - மேற்புறக் வாய்கால்களும் இருந்திருக்க முடியுமா?.

1. பசுமைப் புரட்சியும் நமது மண் வளமும்.

60களுக்கு முன்பு விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தொழு உரம், மக்கிய களத்துமேட்டு குப்பை, குளத்து வண்டல், அருகாமையில் கிடைக்கும் தழை - ஆவாரை, கொளிஞ்சி  மரங்களின் கொளை முதலியவைகளை இட்டு நிலத்தை  வளப்படுத்தினர். கரிசல் காடுகளில் மாற்று மண் என்று செம் மண்ணையும் அடித்துள்ளனர். ஆற்றுப் பாசன நிலங்களில் இருபோக நஞ்சையும் மிதி உளுந்தும் பயிரிட்டனர். எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிலம் வளமாகவும் உயிரோட் டமாகவும் இருந்தது. இப்படிப்பட்ட நிலத்தில் தான் தொழு உரம் கொஞ்சம் கூடிவிட்டால் நெற்பயிர் மதமதவென வளர்ந்து விடும். அப்படிப்பட பயிர் மழை அல்லது பனியில் சரிந்து விடும் அபாயம் உண்டு. அப்படிப்பட்ட வேளைகளில் அப்பயிரை தளைந்து விடுவார்கள் - குருத்துக்கு மேலே உள்ள தழையை அறுத்து விடுவது. இப்படிப்பட்ட வளமான நமது நிலங்களில்தான் இப்புரட்சி அரங்கேறியது.

ஆற்றுப் பாசன நிலப் பகுதிகளில் சித்திரை மாதத்திலும், குளத்துப் பாசனப் பகுதிகளில் ஆடி மாதத்திலும் விவசாய வேலைகள் தொடங்கி விடும். வண்டல், குப்பை அடிப்பது, வரப்புத் தரித்தல், வாய்க்கால் துடைத்தல், தோட்டி, நீர்ப்பாச்சி, காவல் முதலியோரின் நியமனங்கள் முதலியன நடக்கும். எல்லோர் வீடுகளிலும் விதை வித்துக்கள் உண்டு. அந்த அந்த கிராமத்திற்கு தேவையான உழவு மாடுகள், வண்டிகள், அவர்கள் வசம் இருந்தது. நீர் வரத்தும், மழையும்தான் அவர்கள் எதிர்பார்ப்பது. சகல இடங்களிலும் அன்று பதில் ஆள் பதில் ஏர் முறையும் வழக்கில் இருந்தது. இன்னும் சில ஊர்களில் ஆளுக்கு ஒரு மாடு - கூட்டு ஏர்முறையும் - இருந்தது. பெரிய விவசாயிகள், தங்கள் கால் நடைகள் அளவிற்கு ஏற்றபடி மேச்சல் நிலங்களும் வைத்திருந்தார்கள்.

இன்று தரிசாக காணக்கிடக்கும் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் அன்று பயிர் பச்சைகள் விளைந்த நிலங்களே. தரிசாக நிலத்தைப் போட்டால் அன்று அந்நிலவுடையான் கையாலாகாதவன் எனக் கருதப்படுவான். ஒட்டு மொத்த இடங்களும் பயிர் ஏற்றப்பட்டபின் கால் நடைகள் மேச்சலுக்கு என்று ஒவ்வொரு பகுதிகும் - 15\20 கி.மீ. தூரத்தில் - ஒரு இடமிருந்தது. அங்குள்ளவர்கள் அக்கால்நடைகளைப் பார்த்துக் கொள்வார்கள். கால்நடை களுக்கு இவ்வளவு என்று பணம் அல்லது நெல்லைக் கொடுத்துவிட்டு - அறுவடை முடிந்தபின் -கால்நடைகளைக் கொண்டுசெல்லும் மரபு இருந்தது. பெரும்பாலான நஞ்சை வயல்களில் கொளுஞ்சி வளர்ந்து இருக்கும். 1910 களில் வெளிவந்த கிரிஷிகன் என்ற பத்திரிகையில் தக்கைப்பூண்டுக்குப் பதில் கொளுஞ்சி விதை வேண்டும் என்று கேட்டு ஒருவர் எழுதியிருந்தார். தக்கைப்பூண்டு வருடா வருடம் உழுது, விதைத்து, நீர்பாச்ச வேண்டும். கொளுஞ்சி ஒரு முறை விதைத்தால் போதும். பல ஆண்டுகளுக்குப் பலன் தரும். கொளுஞ்சி அருமை தெரியாத விவசாயிகள் மட்டுமே தக்கைப் பூண்டைப் பயிரிட்டனர். இச் சூழலையே படிப்படியாக நாசம் செய்த பசுமைப் புரட்சியை இம்மண்ணில் அரங்கேற்றினார்கள்.

பசுமைப் புரட்சியில் அறிமுகமான 2 அடி உயர நெற்பயிர் காரணமாக மாடுகள் தொலைந்து போவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள் ஆனது. அதன் பிறகு டிராக்டரை இத்தீருவாச நிலங்களில் உழுவதற்கு இறங்கிய ஆரம்ப வருடங்களில் பல இடங்களில் நிலத்தில் புதைந்து சிரமப்பட, அரும்பாடுபட்டு கயிருகள் கட்டி இழுத்து கரையேற்றினார்கள். இதே நிலங்களில் அடுத்த இரண்டு வருடங்களில் மிக எளிதாக அதே டிராக்டர்கள் உழுத காட்சியை பலரும் இன்று நினைவு கூர்ந்தனர். ஆனால் அவ்விவசாயிகள் அன்று அதற்குறிய காரணத்தை அறியமுடியாத கார ணத்தால்தான் மேலும் மேலும் இப்புதைச் சேற்றில் சிக்கி நாசமானார்கள். தங்களின் நிலவளத் தரத்தை வெளிப்படுத்த சில வயலை எருமைகளால்தான் உழ முடியும் என்றும் சொன்னார்கள். நாற்று நடும், களை பறிக்கும் பெண்களும் அவ்வயல்களில் - முழங் கால் வரை புதைவதால் - வேலை செய்ய சிரமப்படுவார்கள்.

*பாலுக்கும், கோமாதா என்று பார்க்கப் படுவதாலும் பசுக்களின் முக்கியத் துவம் பசுமைப் புரட்சியாளர்களால்  கணக்கில்எடுத்துக் கொள்ளப் பட்டது. 50க்கு 50 என்ற ஐரோப்பியப் பசுக்களை இதற்காகவே -சந்தேகம் வரக் கூடாது என்பதற்காகவும், கால அவகாசம் வேண்டும் என்பதினாலும் - புரட்சிக்கு முன்னாலேயே இறக்குமதி செய்து அதை வாங்குவதற்கு கடன் வசதிகளும் செய்து கொடுத்தார்கள். இப்பசுக்கள் வைக்கோல் தின்னாது என்பது கூடுதல் வசதி. இங்கும் இத்துறைச் சார்ந்த அதிகாரி இப்பசுக்களை இறக்குமதி செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் அதையும் மீறித்தான் இப்பசுக்கள் இறக்குமதியானது.

நம்நாட்டு - ராஜஸ்தான் - பசுக்களின் பால்  வளம் காரணமாக அவைகளை வெளிநாட்டினர் வாங்கிய காலத்தில்தான் நம்மீது ஐரோப்பிய பசுக்களைத் திணித்தபோது, அதை தடுக்க முடியாமல் வேலையே வேண்டாம் என்றபின் - அதிகாரி திரு. வேணுகோபால்  வெளியேறிய பின்புதான் - இம்முயற்சி முழுமை அடைந்தது. முற்றம் தெளிப்பதற்கு ஐரோப்பிய கோமாதாக்கள் சாணி போட்டதால் நமக்கும் எந்த வருத்தமும் ஏற்படவில்லை. அழிவின் விளிம்பில் என்ற தொடரில் திருமதி மேனகா காந்திக்கும் காணாமல் போன நமது கோமாதாக்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்று எண்ணவுமில்லை. திப்பு சுல்தான் மிகப்பெரிய அளவில் கால்நடைகள் குறித்து செய்திருந்த ஆய்வுகளும் அதனடிப்படையில் தேர்வு செய்து பேணிய கால்தடைகள் குறித்தும் மறந்தும் யாரும் மூச்சுகூட விடுவதில்லை.

Pin It