modi farmers1தலைநகர் டெல்லியை முற்றுகை இட்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம் புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்திருக்கின்றது. முதலாளித்துவ ஜனநாயகத்தில் கட்டமைக்கப் பட்டிருக்கும் நீதியின் புனித பிம்பத்தை முச்சந்தியில் வைத்து உடைத்தெரிந்து இருக்கின்றது.

ஒரு அரசு கட்டுமானத்தின் மீதான பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை தகர்வு என்பது மாறப்போகும் ஒரு சமூக அமைப்புக்கு கட்டியங் கூறுவதாகும்.

எப்படி சனாதன பழம் இந்தியாவின் மோன நிலையை பிரிட்டிஷ் ஆட்சி உடைத்ததோ அதே போல கடும் வறுமையிலும் வாழ்வா சாவா போராட்டத்திலும் சிக்கி அல்லலுற்றுக் கொண்டிருந்த விவசாயிகளின் பொறுமையை உடைத்து அவர்களை மோடி அரசு வீதிக்கு இழுத்து வந்திருக்கின்றது. அந்த வகையில் நாம் மோடி அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே தோண்டிக் கொள்ளும் என்பார் மார்க்ஸ். இன்று மோடி அரசு யாரின் நலனைப் பாதுகாப்பதற்காக, யாரின் வாழ்வை வளப்படுத்துவதற்காக கோடான கோடி விவசாயிகளை அடிமைகளாக மாற்றத் துடிக்கின்றதோ அதே விவசாயிகள் இன்று மோடியின் ஆட்சிக்கும் அவரால் முன்னிலைப் படுத்தப்படும் அதானி அம்பானி கும்பலுக்கும் சவக்குழி தோண்ட ஆரம்பித்து இருக்கின்றார்கள்.

அதன் ஒரு பகுதியாக அதானி அம்பானி போன்றோரின் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் இயக்கங்கள் கூட முன்னெடுக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக குடியரசு தின விழாவின் போது டிராக்டர் அணிவகுப்பு நடத்தி டெல்லி ஆதிக்கவாதிகளுக்கு கிலியை ஏற்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளார்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் உச்சநீதி மன்றத்திற்கு திடீரென ஞானம் பிறந்து பிறந்திருக்கின்றது. 30 நாட்களுக்கும் மேலாக கடும் குளிரையும் அரசு ஒடுக்குமுறையையும் பொருட்படுத்தாமல் போராடி பல விவசாயிகள் இறந்த போதும் அது ஏதோ சீனாவிலோ பாகிஸ்தானிலோ நடப்பது போன்று பாராமுகத்துடன் இருந்த நீதிமன்றம் இன்று டெல்லியில் அதுவும் குடியரசு தின நாளில் டிராக்டர் பரேடு நடத்தப்படும் என்ற விவசாயிகளின் முடிவால் ஜனநாயகத்தின் ஆன்மாவைக் காப்பாற்ற களம் இறங்கி உள்ளது.

இப்போதைய சூழ்நிலையில் ஆர்ப்பரித்து கொதிநிலையில் உள்ள விவசாயிகளின் கோபமானது நீதிபதிகளுக்கு பாபர் மசூதியில் நடத்தப்பட்ட கர சேவையை நினைவுபடுத்தினாலும் நினைவுபடுத்தி இருக்கலாம்.

மத வெறி கண்களை மறைக்க எப்படி ஒரு வரலாற்றுச் சின்னம் வெறும் செங்கலால் ஆனதாக மட்டுமே மாறி, காணாமல் ஆக்கப்பட்டு விடுகின்றதோ அதே போல ஆளும் வர்க்கம் ஜனநாயகத்தின் புனித சின்னங்களாக பராமரித்து வரும் அனைத்துமே இன்று விவசாயிகளின் பார்வைக்கு வெற்றுச் செங்கல் கட்டிடங்களாக மாறிப் போய் இருக்க வாய்ப்புள்ளதாக நினைத்தே நீதிபதிகள் மிரட்சியுடன் இருக்கின்றார்கள்.

அந்த மிரட்சியுடன்தான் விளைபொருள் வியாபார மற்றும் வர்த்தக மசோதா 2020, விவசாயிகள் விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் தொடர்பான ஒப்பந்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020 மற்றும் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கான மின்சார சட்டத் திருத்த மசோதா (2020) போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் யாரும் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவில்லை என்றாலும் தானாக முந்திக் கொண்டு மூன்று விவசாய மசோதாக்களை நிறுத்தி வைத்ததோடு விவசாயிகளுடன் பேச குழுவையும் அமைத்திருக்கின்றது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி 1995இல் இருந்து, இதுவரை இந்தியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக இந்தியாவில் 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

ஆனால் ஒரு போதும் நீதிபதிகளின் பார்வைக்கு இத்தனை லட்சம் விவசாயிகளின் தற்கொலை பற்றிய எந்தவித பிரக்ஞையும் தோன்றவில்லை. அதனால்தான் நீதிபதிகளுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை முதலைக் கண்ணீராக நினைத்து விவசாயிகள் பொருட்படுத்தவில்லை.

அதை நிரூபிப்பது போலத்தான் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயத்துறை அமைச்சரை சந்தித்து விவசாய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த பூபேந்திர சிங் மான், மேலும் விவசாய சட்டங்களுக்கு ஆதரவான அனில் கன்வாத், அஷோக் குலாத்தி, விவசாய சட்டங்களை ஆதரித்து கட்டுரைகளை எழுதும் பிரமோத் ஜோஷி போன்றோரைக் கொண்ட குழுவை அமைத்திருக்கின்றது.

கொலைகாரர்களையே அனுப்பி கொல்லப்படுபவர்களிடம் எப்படிக் கொல்வது என பேச்சுவார்த்தை நடத்தச் சொல்வதை போன்றதுதான் உச்சநீதிமன்றத்தின் இந்த செயல். அதனால்தான் விவசாயிகள் நீதிமன்றத்தின் கோபத்தை ஒரு பொருட்டாக கூட கருதாமல் கடந்து சென்றுகொண்டு இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு நிச்சயம் தெரியும் இது மோடி அரசும் அதன் பாதுகாவலனான உச்சநீதி மன்றமும் சேர்ந்து செய்யும் கூட்டுச்சதி என்று. ஆனால் மோடி அரசும் நீதி மன்றமும் இன்னமும் விவசாயிகள் சிந்தித்துப் பார்க்க திராணியற்ற கூட்டமாகத்தான் இருப்பார்கள், அதனால் அவர்களை ஏய்த்து விடலாம் என நினைத்துக் கொண்டு இருக்கின்றது.

ஆனால் மூன்று விவசாய சட்டங்களையும், மின்சார சட்டத் திருத்த மசோதா (2020) போன்றவற்றையும் முழுவமாக ரத்து செய்யும்வரை ஒரு அடி கூட நகரமாட்டோம் என செவிட்டில் அடித்தார்போல விவசாயிகள் சொல்லிவிட்டார்கள்.

வீட்டில் இருந்து போராட்டக் களத்திற்கு செல்லும் போதே அவர்கள் ஒன்று சட்டத்தை ரத்து செய்ய வைப்போம், இல்லை என்றால் மரணத்தை தழுவுவோம் என சபதமேற்றுதான் போராட்டக் களத்திற்கு வந்திருக்கின்றார்கள்.

30 நாட்களுக்கும் மேலான போராட்ட களத்தில் பல உயிரிழப்புகளையும், அடக்குமுறைகளையும் சந்தித்த போதும் குன்றாத மன உறுதியுடன் அதுதான் அவர்களை போராட வைத்துக் கொண்டு இருக்கின்றது.

அவர்களைப் பொருத்தவரை இந்தப் போராட்டம் தங்களுக்கானது மட்டுமல்ல தன்னுடைய சந்ததிகளையும் கார்ப்ரேட் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கும் போராட்டமாகும்.

தற்போது 8 கட்ட பேச்சுவார்த்தை முடிந்து 9ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராகிக் கொண்டு இருக்கின்றது. இந்த 8 கட்ட பேச்சுவார்த்தையிலும் விவசாயிகள் தெளிவாக ஒன்றை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். அது மோடி அரசுடன் பேசுவது சுவற்றைப் பார்த்து பேசுவது போன்றது என்று.

நாடி நரம்பெல்லாம் கார்ப்ரேட்களின் அடிமைத்தனம் ஊறிக் கிடக்கும் ஒரு அரசிடம் இன்னும் எத்தனை சுற்று பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதனால் எந்த ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை.

பாசிஸ்ட்கள் ஒருபோதும் அடுத்தவனின் ரத்தத்தைப் பார்த்து பதை பதைப்பதில்லை. பாசிஸ்ட்களை பயமுறுத்த ஒரே வழி பாசிஸ்ட்களின் ரத்தத்தை அவர்களுக்கே காட்டுவதுதான். அதைத் தெளிவாக உணர்ந்ததால்தான் விவசாயிகள் தீர்மானகரமான முடிவோடு டெல்லியை முற்றுகை இட்டிருக்கின்றார்கள்.

இந்த முற்றுகை இந்தியாவைப் பிடித்த இருண்ட ஆட்சியை விரட்டும்வரை நீடிக்க வேண்டும் என்பதுதான் பெரும்பான்மை இந்தியர்களின் விருப்பமாக உள்ளது.

- செ.கார்கி

Pin It